Tuesday, January 19, 2016

றுபதுகளில் நான் புதிசாக வாங்கிய பிலிப்ஸ் ஸ்டீரியோ ஸ்பூல் டேப்ரிகார்டர். பலவருஷங்கள் எந்தத்தொல்லையுமில்லாமல் உழைத்தது!
தில்லியில் நடக்கும் தமிழர் திருமணங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து பெரிய நாதஸ்வர பார்ட்டிகளை வரவழைக்கமுடியாது. Central Secretariat மத்திய அரசு ஊழியர்கள். அவர்களால் தில்லியில் உத்தரஸ்வாமிமலை கோவிலில் மட்டும் வாசித்துக்கொண்டிருந்த ஒரு திருச்சேறைக்காரரைக்கூட அழைக்க வசதி இருக்காது. யாரு வாசித்தாலும், காருகுறிச்சி மாதிரி ஆகுமா?
டேப்ரிகார்டர் வாங்கிய புதிதில், கரோல்பாக் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்கு நானே ஒரு சின்ன Amplifier, two Speakers தயார் செய்துகொண்டு மண்டபம் முழுக்க கேட்க வசதி செய்தேன். பிறகேன்ன? தில்லியில் என்னை ஒரு புரோகிதனாகவே நினைத்து சாவு வீடுகளில் சுடுகாட்டுக்குப்போகவும், கல்யாணவீடுகளில் நாதஸ்வரக்காரனாக தாலிகட்டு்ம்போது நாச்சியார்கோவில் ராகவபிள்ளையின் “கெட்டிமேளம்” வாசிக்கவும் போகலானேன். என்னிடம் ஆல் இந்தியா ரேடியோவிலிருந்து தேனீயாக சேகரித்த 16 மணிநேர காருகுறிச்சியாரின் கச்சேரிகள் — ஊஞ்சல் பாட்டுகள். “வாராயோ!,,,என் தோழி வாராயோ!” உட்பட — இருந்தன!
என்னைத்தெரியாதவர்களிடமும் கல்யாண போட்டோக்கள் எடுத்து விரைவில் திருமண ஆல்பம் தயாரித்துக்கொடுக்கும் போட்டோகிராபர்கள் எச். கிருஷ்ணஸ்வாமி, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் என்னைப்பற்றி சொல்லி, பெண்ணின் தந்தை அழைப்பிதழோடு வீட்டுக்கு வந்துவிடுவார்!
இதனால் நான் போகும் திருமணவீடுகளில் எனக்கு அதிகப்படி வரவேற்பு….மரியாதை! சமையல்காரர் தனி உபசரிப்பு எல்லாமும் இருக்கும்! இந்த சந்தோஷங்களெல்லாம் பிறகு ‘திரைகடலோடியும் திரவியம் தேடு!’ முயற்சியில் காணாமல் போயின!
டேப்ரிகார்டருடன் போன ஒரு கல்யாணத்தில் எடுத்த போட்டோ இது. என் முகத்தைப் பாருங்கள்!…..நானே காருகுறிச்சியாக மாறின பெருமிதம் தெரியும்!
இப்போது ஒரு நண்பர் போன் பண்ணி, “மணி சார்! …..நீங்க தான் கல்யாண மாப்பிள்ளையா?” என்று கேட்கிறார். இல்லை….இல்லை! தில்லி குளிருக்கான வேஷமிது!
கோட்டு சூட் போட்டாலும் அப்போதே என் சேவை தமிழக அரசு உபயம் போல “விலையில்லா இலவசம்!” என்பதை இந்தநேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!
தற்போதைய வர்த்தக உலகம் அப்போது அவர்களுக்கு பிடிபடவில்லை. அவர்கள் கச்சேரியை ரிக்கார்ட் செய்வது அவர்களுக்குச்செய்யும் மரியாதையாகவே எடுத்துக்கொண்டனர்! இப்போதுமாதிரி வக்கீல் நோட்டீசெல்லாம் கிடையாது!
அப்போது ஸ்டீரியோ எஃபெக்ட் எப்படியிருக்கும் என்பதைத்தெரிந்துகொள்ள உமையாள்புரம் சிவராமனும், டி.வி. கோபாலகிருஷ்ணனும் ஆசைப்பட்டதால் என் வீட்டில் இதே ஸ்டீரியோ ரிகார்டரில் அவர்கள் தனியாவர்த்தனத்தை ரிக்கார்ட் செய்தேன். ஒரு ஸ்பீக்கரிலிருந்து வலந்தலை சப்தமும் விலகியிருந்த இன்னொரு ஸ்பீக்கரிலிருந்த இன்னொரு ஸ்பீக்கரிலிருந்து தொப்பி ஒலியும் வருவதைக்கண்டு பிரமிப்படைந்தார்கள்! அது தான் அவர்களின் முதல் ஸ்டீரியோ ரிக்கார்டிங். என்னிடம் இருக்கிறது!
பி.கு:- அப்போதெல்லாம் கல்யாணவீடுகளில் பிளாஸ்டிக் நாற்காலிகள் ஆக்ரமிப்பு இல்லை. இதுபோல் மரத்தாலான மடக்கு நாற்காலிகள் தான்! பின்பக்கம் சிவப்பு எழுத்துக்களால் ஆங்கிலத்தில் A.T.H. 217 என்று எழுதியிருக்கும்.
இதுவே Arora Tent House என்பதன் சுருக்கம்!

0 comments:

Post a Comment