Friday, January 22, 2016

நான் பிறந்தது நாஞ்சில் நாட்டின் நாகர்கோவிலையடுத்த பார்வதிபுரம் கிராமமாக இருந்தாலும்,  என் பிள்ளைப்  பிராயம் திருவனந்தபுரத்தில் கழிந்தது. பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னதைப்போல, நானும் ‘கொடுமலையாளக் குடியிருப்புடையேன்‘. அப்பாவுக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் [கொட்டாரம்] ‘காரியஸ்தர்‘ வேலை. என் தாத்தாவுக்கும் இதே வேலை தானாம். ராஜாங்க உத்தியோகம்! தாத்தா காலத்தில் ஸ்ரீ மூலம் திருநாள் மகாராஜா ஆண்டபோது, தினமும்  வீட்டுக்கு மதிய இரவு உணவு ‘பகர்ச்சை‘ என்ற பேரில் கொட்டாரத்திலிருந்து வருமாம்! ஸ்ரீ சித்திரைத்திருநாள் பால ராமவர்மா திருவிதாங்கூரின் கடைசி மஹாராஜாவாகவும்,   பிறகு திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துக்கு ‘ராஜப்பிரமுக்‘ [ஆளுநர்] ஆகவும் பதவி வகித்தார். அவருக்கு திவானாக ஸர். C.P. ராமஸ்வாமி அய்யர் இருந்தார். அவர்கள் காலத்தில் கல்வி, சுகாதாரம், மக்கள் வசதியில்       திருவிதாங்கூர் மற்ற சமஸ்தானங்களை விட மிகவும் முன்னணியிலிருந்தது. திருவனந்தபுரத்தில் 1940-களிலேயேதெருக்குழாய்கள், மின்சார வசதி போன்றவை வந்து விட்டன. காலையில் ‘குளித்து குறியிட்டு‘ பெண்குழந்தைகள் வரிசையாக பள்ளிக்குச் செல்லும் காட்சி மனதை வருடும். கேரளாவில் இன்றிருக்கும் படிப்பறிவுக்கு அப்போதே அடிக்கல் இட்டுவிட்டார்கள். மார்த்தாண்டவர்மா காலத்திலிருந்து,  வஞ்சிநாடு பத்மநாபனுக்கு அற்பணிக்கப்பட்டு, அரசர்கள் ‘பத்மநாப தாசன்‘ என்று கடவுள் பெயரிலேயே ஆட்சி செய்து வந்தார்கள். C.P. காலத்தில் தான், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரை திருவனந்தபுரத்திற்கு வரவழைத்து, ஸ்வாதி திருநாள் மியூசிக் அகாடெமி ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப்பிறகு, செம்மங்குடி சீனிவாசய்யர் அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் மகன் கோபாலசாமி தமிழ் ஆரம்பப் பள்ளியில் என்னுடன் படித்தான். போனவுடன் தினமும் நாட்டுவாழ்த்து ‘வஞ்சி பூமி பாதே சீரம், ஸஞ்சி தாபம் ஜெயிக்கேணம்‘  பாடவேண்டும்.
1940-களிலிருந்தே, திருவிதாங்கூர் சமஸ்தான அரசுப்பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு மதிய வேளைகளில்  வயிறு நிறைய ‘கஞ்சியும் சம்மந்தியும்‘ (தேங்காய்த்துவையல்) இலவசம்.   இதற்காகவே, Vanchi Poor Fund என்ற அமைப்பை அரசே ஆரம்பித்து, மைய சமையல் கூடத்தில் சுடச்சுட கஞ்சி தயாரித்து, தினமும் பள்ளிகளுக்கு    வினியோகித்தார்கள். (சம்பா அரிசிக்கஞ்சி,  தேங்காய் சம்மந்தி வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனால் ஆசிரியர்களுக்குப்பயந்து ஒருநாள்கூட நான் சாப்பிட்டதில்லை!) இன்றைய ‘மூன்று முட்டை‘  சத்துணவுத் திட்டத்தின்  தாத்தா இது! ஆம், சித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் C.P.யும் தான் இதற்கு காரண கர்த்தாக்கள்!  திருவிதாங்கூர் தமிழ்ப்பகுதிகளான கன்யாகுமரி,  தேவிகுளம்,  பீருமேடு,  செங்கோட்டை இவற்றை தமிழ்நாட்டுடன் இணைக்க, திரு. நேசமணி தலைமையில் பட்டம் தாணுபிள்ளை அரசுக்கெதிராக போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் மாணவனாக நானும் கலந்து கொண்டு ஒருநாள் முழுதும் சிறையிலிருந்திருக்கிறேன்! அப்போது நாகர்கோவிலுக்கு அடிக்கடி வரும் காமராஜர், இந்தத்திட்டத்தின் நன்மைகளை மனதில் கொண்டு, ‘வயத்துக்கில்லேன்னா, எவன் பள்ளிக்கூடம் வருவான்னேன்?‘ என்று அவர் முதலமைச்சரான போது ஆரம்பித்தது  தான் மதிய உணவுத்திட்டம்! இந்தியாவிலேயே பள்ளிகளில் இலவச மதிய உணவுத்திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது திருவிதாங்கூர் தான்!
நாற்பதுகளில் நம் சுதந்திரத்துக்குமுன்னால் திருவிதாங்கூரில் நடைபெற்ற ஆட்சியை,  வஞ்சிநாட்டின் பொற்காலமென்பார்கள். அதற்கு, ஸ்ரீசித்திரைத் திருநாள் மகாராஜாவும், திவான்ஸர் C.P. ராமஸ்வாமி அய்யருமே காரணம். கல்வி, சுகாதாரம், மின்சாரவசதி தவிர கலையுலகிலும், திருவிதாங்கூர் முன்னணியிலிருந்தது. ராஜா ரவிவர்மா ஆர்ட் காலரி,  ஸ்வாதி திருநாள் சங்கீதப்பள்ளி, திருவனந்தபுரம் ரேடியோ போன்றவை தொடங்கப்பட்டன.   தலைநகரின் மின்சாரத்தேவைக்காக பள்ளிவாசல் மின்சாரத்திட்டம், திருவனந்தபுரத்திலிருந்து கன்யாகுமரி வரை 50 கிலோமீட்டருக்குமேல் நீளமுள்ள சிமென்ட்  பாதை — சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் போட்டிருப்பதைப்போல — இன்றும் பழுதில்லாமலிருக்கிறது! மூன்று போக நெல் விவசாயத்துக்காக, பேச்சிப் பாறை அணை கட்டப்பட்டு, நாஞ்சில்நாடு திருவிதாங்கூரின்  ‘நெற்களஞ்சியம்‘ என்று பெயர்பெற்றது. உரத்திற்காக F.A.C.T., மற்றும் மணவாளக் குறிச்சி, குண்டறையில் தொழிற்சாலைகள். கொட்டாரத்தில், நவராத்திரி இசைவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். அப்போது முன்னணியிலிருந்த எல்லா சங்கீத வித்வான்களுமே திருவிதாங்கூரின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். அரியக்குடியிலிருந்து ஆலத்தூர் வரை, மைசூர் செளடைய்யாவிலிருந்து த்வாரம் வரை,  பாலக்காடு மணி யிலிருந்து பழனி வரை, திருவாவடுதுறையிலிருந்து திருவீழிமழலை வரை, நாச்சியார் கோவிலிலிருந்து நீடா மங்கலம் வரை, எல்லோருமே திருவிதாங்கூர் ஆஸ்தான வித்வான்கள். ஸ்வாதிதிருநாள் கீர்த்தனங்கள் மட்டுமே பாடப்படும். ஒவ்வொருநாளும் ஒரு முக்கிய  ராகத்தை எடுத்து அதில் ராகம் தானம் பல்லவி பாடுவார்கள். நிகழ்ச்சிகள் நடக்கும் ‘நவராத்திரி மண்டபம்‘ ஒவ்வொருநாளும் ஒவ்வொரு   விதமாக அலங்கரிக்கப் பட்டிருக்கும். அதற்காகவேஒன்பதுநாளும் அங்கே ஆஜராகிவிடுவேன்.   நிகழ்ச்சிகளை  அரசின் கீழிருந்த Trivandrum Broadcasting Corporation நேரடி அஞ்சல் செய்யும். இதெல்லாம் நடந்தது நாற்பதுகளில் என்று எண்ணிப்பார்க்கும்போது, பிரமிப்பு வருகிறது! இதையடுத்து எல்லா வித்வான்களும் கரமனை P.K. சுப்பையா பிள்ளை — உலகயுத்தத்தின்போது மண்ணெண்ணெய்க் கடை வைத்து (கறுப்பு) பணம் கூரையைப் பிய்த்து  கொட்டிய தனவந்தர். கறுப்பு Buick-8 கார் வைத்திருந்தவர் — வீட்டில் நடக்கும் இசைவிழாவிலும் கலந்து கொள்வார்கள். எனக்கு கர்நாடக இசையில் சிறுவயதிலிருந்து இந்த அளவு ஆர்வம் ஏற்பட்டதற்கு  இவையெல்லாம் முக்கியக்காரணங்கள்.
திருவிதாங்கூரில் ‘மருமக்கத்தாயம்‘ நடப்பிலிருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஒரு ராஜாவுக்குப்பிறகு அவர் மருமகனுக்குத்தான் பட்டமே தவிர, அவர் மகனுக்கல்ல. அதனால் ராஜாவின் அக்காதங்கைகளுக்கு மரியாதை அதிகம். அடுத்த ராஜாவின் தாய் அவர்களல்லவா? ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜா ‘அந்தப்புர’ ஆசைகள் இல்லாதவர். கல்யாணமாகாதவர். 
 ‘பத்மநாபதாசனாக‘ பக்தியிலும், இசையிலும், மக்கள்நலனிலும் வாழ்நாளைக் கழித்தவர். தினமும் தவறாது காலை ஆறுமணிக்குகெளடியார் அரண்மனையிலிருந்து பத்மநாபஸ்வாமி கோவிலுக்கு தரிசனத்துக்காக காரில் வருவார். அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் TVSலாரியைப் பார்த்து தங்கள் கடிகாரங்களைத்திருத்திக் கொள்வது என்னைப்போன்ற ‘பெரிசு‘களுக்கு தெரிந்திருக்கும். அதே போல், கிழக்கே கோட்டையில் அவர் கார் வருவதைப் பார்த்து, ‘என் கடிகாரம் அஞ்சு நிமிஷம் ஸ்லோ‘ என்று சொல்பவர்கள் இருந்தார்கள். வழியில் வரிசையாக மக்கள் கூட்டம் அவர் பவனி வருவதைப்பார்க்கக் காத்திருக்கும். அவரது வண்டியோட்டி பிரேக் போட்டு அறியாதவர். அவர் ராஜப்பிரமுக் பதவியையும் துறந்து, சாதாரணப்பிரஜையான நாள் காலையில் வழக்கம்போல் கோவிலுக்குப்போகும்போது, கிழக்கே கோட்டையில் டூட்டியிலிருந்த டிராபிக் போலீஸ்காரர் ‘இப்போதான் அவர்  மகாராஜா இல்லையே, கொஞ்சம் நிறுத்தித்தான் பார்ப்போமே‘ என்று ‘மலையாளித்தண்டுடன்‘ அரசர் காரை நிறுத்தி, பேருந்துக்கு வழி விட்டதாகவும்,  ராஜவிசுவாசம் மிக்க கூடியிருந்த மக்கள் போலீஸ்காரரை நையப் புடைத்து,  இருநாட்களுக்கப்புறம் அவர் மருத்துவமனையில் இறந்து போனதாகவும் சொல்வார்கள்!
அந்த மகாராஜாவால் திவானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஸர். C.P. ராமஸ்வாமி அய்யர். சிறந்த நிர்வாகி. இன்றைய முப்பதுபேர் கொண்ட மந்திரிசபை செய்யமுடியாததை, தனி ஆளாக நிர்வகித்தவர். அவர் அருமைபெருமைகளை என் தந்தைவாயிலாக சொல்லக் கேட்டிருக்கிறேன். சுதந்திரத்துக்குமுன்னால் மத்தியில் இடைக்கால சர்க்கார் இருந்த சமயம், திருவிதாங்கூருக்கான ரேஷன் அரிசித்தேவையை, சர்தார் பட்டேலிடம் தெரிவித்தபோது, கேட்டதில் பாதியைத் தான் தரமுடியுமென்றாராம். உடனே CP எழுந்து, ‘நான் என் மக்களைப் பட்டினி போடமுடியாது. சமஸ்தானத்திலிருக்கும் ஏலத்தோட்டங்களையும், ரப்பர் தோட்டங்களையும் அழித்து, மரச்சீனி பயிரிடுவதைத்தவிர எனக்கு வேறுவழியில்லை. இது பயமுறுத்தல் அல்ல. வருகிறேன்’ என்று புறப்பட்டு   விட்டாராம். அடுத்தநாள், அவர் கேட்டதற்கு மேலேயே அரிசி சாங்ஷன் ஆனதாம்! அளந்துதான் சிரிப்பார். He was a ‘no nonsense’ man. அதனாலேயே அவருக்கு இடது வலதுசாரி அரசியல் கட்சிகளிடையே விரோதிகளிருந்தனர். அவருக்கும் ‘அம்மைராணி”க்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக வதந்தி பரவியது. கொலைமுயற்சி காரணமாக, இரவோடு இரவாக சென்னை திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அவர் வாழ்நாளில்  திருவனந்தபுரம் போனதே யில்லை. கேரளம் ஒரு சிறந்த நிர்வாகியை இழந்தது. போதாததற்கு அவர் ஒரு ‘சாம்பார் குடியனாக‘ இருந்தார். [தமிழகத்தில் பார்ப்பான் என்பதற்கான கேரள இணைச்சொல் அது]. அந்த சாபம் அவருக்கு ஒரு தொந்தரவாக இருந்தது. தம்பானூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே, Sachivottama Sir C.P. Ramaswami Aiyar Sashtiyaptapoorthi Memorial Hall இருக்கிறது. அதன்முன்னால், தலைப்பாகையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் Sir C.P.யின் வெள்ளைப் பளிங்குச் சிலை இருந்தது. சிறுவயதில், அதைத்தாண்டிப்போகும்போது, ‘அவர் என்னைப்பார்த்து சிரிப்பாரா?‘ என்று இருநிமிடம்  நின்று பார்த்துவிட்டு போவேன். ஒரு நாளும் அவர் சிரித்ததில்லை! அவருக்கு எதிராக நடந்த கிளர்ச்சிக்கு மறுநாள், தேர்ந்த சிற்பி செதுக்கிய அந்த மார்பிள் சிலை, தரையில் கோல மாவாக மாறியிருந்தது!
சுதந்திரத்துக்குப்பிறகும், திருவிதாங்கூர் தனி சமஸ்தானமாக இருக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கு பரவலான  எதிர்ப்பு இருந்தாலும், அவர் ஒரு சிறந்த நிர்வாகி யென்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை.   திருவனந்தபுரத்தைவிட்டுப் போவதற்கு முன்னால், அவர் மகாராஜாவுக்கு எழுதிய கடைசிக் கடிதம் அவர் எப்படிப்பட்டவரென்பதை உணர்த்திவிடும்: ‘It is impossible for me to function here as one of several Ministers……By temperament and training, I am unfit for compromises; being autocratic and over-decisive,  I don’t fit into the present environment’!
ஆங்கிலேயருக்கு எப்படி ஆங்கிலம் பேசவேண்டுமென்று கற்றுக்கொடுத்தவர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரிகள் என்று சொல்வார்கள். அவர் ஆங்கிலம் பேசி  நான் கேட்டதில்லை. அவரை  ‘The Man with a Silver Tongue‘ என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் அவருக்கு இணையான புலமையும், சொல் வன்மையும்  Sir C.P.க்கும்இருந்தது. அறுபதுகளில் நான் தில்லியில் இருந்தபோது, India International Centre-ல், ‘Indian Philosophy‘ என்ற தலைப்பில் 15 நாட்கள் அவரது ஆங்கிலச்சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தினமும் உட்கார   இடமில்லாமல் கூட்டம் அலைமோதும். நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட பல தலைவர்கள் தினமும் வருவார்கள். (நேருவின் காங்கிரஸ் கொள்கைகளுக்கும், C.P.யின் autocratic மனப்பாங்குக்கும் இடையே மோதல் எப்போதும் இருந்தது. அந்த கருத்து மோதல் திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் முற்றிப்போய், நேரு, பட்டேல் இவர்களின் பலநாள் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார் C.P! ஆனாலும் நேருவுக்கு இவரது ஆங்கிலப்புலமையில் அத்தனை மோகம்)  ஆங்கில மொழியில் ஸர்.சி.பி.க்கிருந்த ஆளுமை எவரையும் பிரமிக்க வைக்கும். அது வெறும் பேச்சுக் கச்சேரியாக இருக்காது. நமக்குப்பிடித்த இசைக்கலைஞரின் நிறைவான பாட்டுக்கச்சேரி கேட்ட திருப்தியிருக்கும். நல்ல ஆங்கிலம் கற்றுக்கொள்ள நினைக்கும் இளைஞர்கள் அவரது சொற்பொழிவுத்தொகுப்புகளை  அவசியம் உருப்போட வேண்டும். அவரது மகன் திரு. C.R. பட்டாபி ராமன் ஜவஹர்லால் நேரு மந்திரிசபையில் உபமந்திரியாக இருந்தார். பரமசாது! அதிர்ந்து பேசாதவர்.
திருவனந்தபுரம் நகருக்கே ஸ்ரீபத்மநாபஸ்வாமி கோவில் திலகமாகவிருந்தது. தமிழ்நாட்டு கோபுர அமைப்பு, கோவிலைச்சுற்றிய பிராகாரம் முதலியன இந்தக்கோவிலில் முற்றுப்பெறுகிறது. கேரளத்தில் திருவனந்தபுரத்துக்கு வடக்கே உள்ள கோவில்களில் தமிழ்நாட்டுக்கோபுரம் இருக்காது. அனந்த பத்மநாப சுவாமி பாம்புப் படுக்கையில் படுத்தவாறு காட்சியளிக்கிறார். கர்ப்பக்கிரகத்துக்கு மூன்று வாசல்கள். இடது  வாசலில் தலையும், நடுவாசலில் வயிற்றுப் பகுதியும், வலதுவாசலில் கால் பகுதியும் தெரியும். முன்னே ஒரே கல்லிலான ‘ஒற்றக்கல் மண்டபம்‘. கருங்கல் தரையில் சாந்துக்குப்பதிலாக ஈயத்தால் இணைத்திருப்பார்கள். தரையில் நடக்கும்போது, பாலின் பிசுபிசுப்பு காலில் தெரியும். கடவுள் பாற்கடலில் பள்ளி  கொண்டிருப்பதாக ஐதீகம்! உள்ளே நடக்கும்போது, இதை   நம்பத்தோன்றும்! கோவிலில் நாம் பார்க்கும் நீளமான பாரி நாயனத்துக்கு அனுமதியில்லை. ஷெனாய் போலிருக்கும் சிறிய திமிரி நாயனத்தில் ஸ்வாதி திருநாள் கீர்த்தனைகள் மட்டுமே வாசிப்பார்கள்.
பத்மநாபசுவாமி கோவில் பக்கத்தில் பத்மதீர்த்தக் குளம். அப்போது அங்கே யானைக்கால் நோய் அதிகமாக இருந்தது. வழியில் பார்க்கும்  பத்துப்பேரில் நான்கு பேராவது கால் வீங்கிக் காட்சியளிப்பார்கள். இன்னொரு   விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன்! பல வயதான ஆண்களுக்கு விரை வீக்கம் காரணமாக, அவர்கள் ஒரு சில்லறை நாணயப்பையை இரு கால்களுக்கு நடுவில் ஒளித்து வைத்திருப்பதைப்போலிருக்கும். வீக்கம் உடுத்திருக்கும் வேட்டிக்கு மேலேயே தெரியும். சிலருக்கு பத்து ரூபாய்க்கான  சில்லறை,  இன்னும் சிலருக்கு ஐம்பது ரூபாய்ச்சில்லறை நிரம்பிய ‘பெரியபை‘ இருக்கும். ஒரு சின்ன அறுவைசிகிச்சை செய்துகொள்ள அஞ்சுவார்கள்! அந்த பயத்தினால், தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த  ‘பாவச்சுமை‘யை சுமந்துகொண்டு அலைவார்கள். ஒரு பழமொழியே உண்டு. ‘பத்மதீர்த்தத்தில் குளிச்சால், ஸ்ரீபத்மநாபன் கடாக்ஷிச்சு வெச்சு எழுதான் மேச வேண்டா‘. (இதற்கு பொருள் விளங்காவிட்டால் என்னிடம் தனியாகக்கேளுங்கள்!) இடுப்புக்குகீழே வீக்கம் அதிகமாக இருக்கும்!  யானைக்கால் வியாதியிலும் பலவிதங்கள் உண்டு. ஒரு காலோ, இருகால்களோ வீங்கி எண்ணெய் தடவியதுபோல் பளபளப்பாக இருக்கும். இரண்டாவது வகை கால்களில் சிறிய பெரிய சேப்பங்கிழங்குகளை அப்பிக்கொண்டது போலிருக்கும். அதை ‘மந்து கால்‘  என்பார்கள். இது கேரளத்துக்கே உரிய வியாதி! இந்தத் தலைமுறையில் அறவே ஒழிந்துவிட்டது.
இந்தியாவிலேயே மலையாளிகள் உடல் சுத்தத்துக்கு முதலிடம் கொடுத்தவர்கள்.  ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு‘ என்பது அவர்களுக்கு   மிகவும் பொருந்தும். தினமும் இருவேளை குளித்தாகவேண்டும். அதனால் எல்லா  நதிக்கரையிலும், குளங்களருகிலும் எண்ணெய் சோப்பு பெட்டிக்கடை நிச்சயமாக இருக்கும். வெறும்தலையை   நனைக்கமாட்டார்கள். எட்டுகாசு [சுமார் 5 பைசா]கொடுத்து, ஒரு துடம் [இரு தேக்கரண்டி] தேங்காயெண்ணெயை உள்ளங்கையில் வாங்கித்தலையில் தேய்த்துக்கொண்டு, ஒரு லைப்பாய் சோப்பை 32 துண்டங்களாக்கியதில் ஒரு சிறுதுண்டு, அதேபோல் நீலம் சோப்பில் 32/1 துண்டு வாங்குவார்கள். உடுத்த வேட்டி பனியனை நீலம் சோப் போட்டு துவைத்து அங்கேயே காயவைத்து குளித்துவிட்டு வந்ததும் அதே பெட்டிக் கடையில்  சிறிது சந்தனமோ விபூதியோ எடுத்து இட்டுக்கொண்டு பக்கத்திலிருக்கும் கோவிலுக்குப் போகாமலிருக்க மாட்டார்கள். சாயங்கால வேளைகளில் இவர்கள் விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான ஈர சோப்புத் துண்டுகளை படிக்கட்டுகளில் பொறிக்கியெடுத்து மறுபடியும் ஒரே கட்டியாக மாற்றி அதை உபயோகிப்பவர்களும் அப்போது இருந்தார்கள்! இந்தியத் தலைநகரங்களிலேயே திருவனந்தபுரம் சேரிகளில்லாத நகரமாகத் திகழ்ந்தது. மலையாளிகளுக்கு Personal Hygeine முக்கியம்!
ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலைச்சுற்றி கோட்டை. நான்கு திக்குகளிலும் வாசல் உண்டு. அதில் கிழக்கே கோட்டை பிரசித்தம். அதன்  பக்கத்தில் பழவங்காடி பிள்ளையார் கோவில். அவர் நல்லவர்களும், கெட்டவர்களும் வேண்டுவதைத் தரும் கடவுள். எப்போதும் சிதர்த்தேங்காய் உடைபட்டுக்கொண்டிருக்கும். இந்தத்தேங்காயை வருடாந்திர ஏலத்தில் கொள்முதல் செய்து பணக்காரர்களானவர் பலர். கிழக்கே கோட்டையிலிருந்து தொடங்குகிறது சாலைக்கடை பஜார். நீல. பத்மநாபன் நாவல்களிலும், ஆ. மாதவன் சிறுகதைகளிலும், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் உண்டு, உறங்கி வாழ்ந்த களன். அதனால் உங்களுக்கும் பரிச்சயமானதாக இருக்கலாம். அவருடைய கடையும் இங்குதானிருக்கிறது. நீல. பத்மநாபனின் வீடும் சாலைக்கடையின் அருகில் தான். என் காலத்தில், தமிழ் பேசுபவர்கள் நிறைய இருந்தார்கள். சாலைக் கடைக்குப்  பின்னாலிருக்கும் செந்திட்டைக் கிராமத்தில் தான் என் பூர்வீக வீடு இருந்தது. [சமீபத்தில்   விற்றுவிட்டேன்]. பல தமிழர்கள், நான்கு சினிமா தியேட்டர்களுக்கும், மெரிலான்ட் ஸ்டுடியோவுக்கும் அதிபர் சுப்பிரமணிய பிள்ளை, சீமாட்டி ஸ்டோர்ஸ் ரெட்டியார், மண்ணெண்ணெய்க் கடை P.K. சுப்பையாபிள்ளை போன்றோர் முன்னணியில் இருந்தார்கள்.
வருடாவருடம் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஆறாட்டு, முறை ஜபம் நடைபெறும். பனிரெண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ‘லட்ச தீபம்‘. [கும்பகோணத்தில் மாமாங்கம் போல]. முறை ஜபத்துக்கு, நூற்றுக்கணக்கான நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு, பத்மதீர்த்தத்தில் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஜபிப்பார்கள். ஒன்றுக்கும் உதவாதவனைக்   குறித்து, அங்கு ஒரு சொலவடை உண்டு. “மொண்ணைத்தடியனெ எந்தினு கொள்ளாம்? முறை ஜபத்தினு தூணினு கொள்ளாம்’!ஆறாட்டுக்கு  நாட்டையே ஆண்டுவரும் உற்சவமூர்த்தியை பல்லக்கில் அலங்கரித்து, யானை, குதிரை காலாட்படையுடன் பத்மநாபதாசனான மகாராஜா, கையில் வாளுடன் மார்பில் பச்சைக்கல் அட்டிகை பளபளக்க, மணல்  விரித்த தார் ரோட்டில் வெறுங்காலுடன் பத்து மைல் நடந்து சங்குமுகம் கடலில் நீராட்ட அழைத்துச் செல்வார்.. இந்த உற்சவத்தில் கலந்துகொள்ள சுசீந்திரம் கோவிலிலிருந்து  ‘குண்டணி‘ அம்மனும், குமார கோவிலிலிருந்து முருகப்பெருமாளும் பல்லக்கில் 50 கி.மீ. பயணம் செய்து திருவனந்தபுரம் வருவார்கள். வழியில் எதிர்ப்படும் பழையாறு, குழித் துறையாறு, நெய்யாறு, கரமனையாறு, கிள்ளியாறு இவற்றைக்கடப்பதற்கு அவர்களுக்கு தனி பேட்டா அலவன்ஸ் கொடுக்கவேண்டும்! குண்டணி அம்மன் முருகப்பெருமானுக்கு முன்னதாக ஓடிச்சென்று, முருகன் ஒரு குறத்தியை மணந்து கொண்டதால், அவருக்குத் தீட்டு, அவரைச்சேர்க்கக்கூடாது என்று கோள் சொல்லுவாள். அதையறிந்த முருகன் கோபித்துக்கொண்டு, உற்சவத்தில் பங்கு பெறாமல், ஆரிய சாலைக் கோவிலுக்குத் திரும்பிவிடுவார். இப்போதும் நாஞ்சில் நாட்டில், கோள்மூட்டிவிடும் பெண்களை, ‘குண்டணி அம்மன்‘ என்று பரிகசிப்பார்கள்! இதெல்லாம் என் தாய் சிவகாமி அறுபது வருடங்களுக்கு முன்னால் எனக்குச்சொன்ன கதைகள்! என் ஞாபகசக்தியை நானே வியந்து கொள்கிறேன்!
முறை ஜபம் நடக்கும் பத்துநாட்களும், கோவில் ஊட்டுப்புரையில் ஆயிரக்கணக்கானவர்கள் சாப்பிடுவார்கள். உலகயுத்தத்திற்குமுன்னால் அரிசித்தட்டுப்பாடு இல்லாத காலத்தில் ஊட்டுப்புரையில் தினமும் ‘ஸத்தி‘ உண்டு. அநாதையாக யார் வீட்டுத்திண்ணையிலோ தூங்கி, ஊட்டுப்புரையில் சாப்பிட்டு, தெருவிளக்கில் படித்து, நீதிபதிகளானவர்களில் முத்துஸ்வாமி, பூதலிங்கம் போன்றோர் ஏராளம். நாம் வசிக்கும் அறையின் கொள்ளளவு கொண்ட  பெரிய வெண்கல உருளி களில் தான் சாம்பார், ரசம் வைப்பார்கள். இதற்குப் புளி கரைக்க, இரண்டு மூட்டை  புளியை அப்படியே உருளியில் சாய்த்து, யானைக்கால், பித்தவெடிப்பு இல்லாத சமையல்காரர்களை, கால் கழுவிவிட்டு, ஏணி வழியாக பிரும்மாண்ட உருளிக்குள் இறங்கச்செய்து, காலால் புளியை மிதிக்கச்செய்வார்களாம்.   சிறு வயதில் இதைக்கேள்விப்பட்ட நான் என் அப்பாவிடம் கேட்ட குழந்தைத்தனமான கேள்வி: ‘அந்த சமயத்திலே அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா, என்னப்பா செய்வாங்க?‘. என் தந்தையின் பதில்: ‘அது எனக்கு தெரியாததனாலே தாண்டா நான் ஊட்டுப்புரையிலே சாப்பிடறதேயில்லே!‘  நிஜமாகவே கையால் புளிகரைத்து மாளாது! ‘மாடு கட்டிப்போரடித்தால் மாளாது செந்நெல்லென்று யானை கட்டிப்போரடிக்கும் அழகான தென்மதுரை‘ என்பதைப் போல! இன்றும் பத்மநாபசுவாமிகோவில் ஊட்டுப்புரையில் இந்த பிரும்மாண்ட உருளிகளைப்பார்க்கலாம்.
அரசரின் பிறந்தநாளுக்கு, கோவிலில் ‘ஸத்தி‘ சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் பிரஜைகளுக்கு நான்கு கோட்டை வாசல்களிலும் பளபளக்கும் ஒரு வெள்ளிப்பணம் [அசல் 99% Purityயான வெள்ளி – இன்றைய நிக்கல் அல்ல!]   கொடுப்பார்கள். அதற்கு ‘ஸர்வாணி‘ என்று பெயர்.  நம்பூதிரிகளுக்கு மட்டும் இரண்டு பணம். எனக்கு பத்து வயதிருக்கும்போது, என் நண்பனின் வற்புறுத்தலில், அவனுடன் நம்பூதிரியைப்போல் திலகமிட்டு, மனதில் பயத்துடன், அவர்களுக்கான தனி க்யூவில் நின்று இரண்டு பணம் வாங்கியதும், அதையறிந்த என் தந்தையிடம் உதைவாங்கி, அந்த எக்ஸ்ட்ரா ஒரு பணத்தை செந்திட்டை பகவதியம்மன் கோவில் உண்டியலில் போட்டதும்  ஞாபகத்துக்கு வருகிறது!
இம்மாதிரி விஷயங்களில் என் தந்தை மிகவும் கண்டிப்பானவர். அரண்மனை உத்தியோகம் என்பதால், பலரும் ‘என் தோட்டத்தில் காய்த்தது‘ என்று எதையாவது கொண்டுவருவார்கள். மாம்பழக்காலங்களில், இரு கூடைகள்  நிறைய வைக்கோல் சுற்றிய ‘வெள்ளாயணி’  மாம்பழம், பெரிய ‘வரிக்கன் சக்கை‘ [பலாப்பழம்] யோடு யாராவது வந்தால், மரியாதைக்காக ஒரு மாம்பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்களை திட்டி திருப்பியனுப்பிவிடுவார். அப்போது ஒன்றும் பேசாத அம்மா, அடுத்தநாள் தெருவில் வரும் மாம்பழக்காரனிடம் அதே வெள்ளாயணி மாம்பழம் வாங்கும் போது, ‘ஏம்மா, அப்பா ஏன் நேத்திக்கு அதை திருப்பியனுப்பினார்? என்று கேட்டால், ‘அவர்கிட்டயே போய்க் கேளு’ என்று மட்டும் சொல்வாள். என் பள்ளிநாட்களில் நான் ஒரு முழு பென்சிலை உபயோகித்தது SSLC-க்குப் போனபிறகுதான் என்று சொன்னால் இந்தத்தலைமுறைக்கு நம்புவது கடினமாகத்தானிருக்கும். அப்பாவின் பூட்டாத அலமாரியில் ஒரு டஜன் ‘பெருமாள் செட்டி‘ பென்சில் இருக்கும். எல்லாமே பாதியாகத் துண்டிக்கப்பட்ட  24 அரைப்பென்சில்களாக வைத்திருப்பார். ஒரு பாதியை எடுத்து அடிப்பகுதியில் சிறிது காகிதம் சுற்றி, பழைய மைப்பேனாவின் கழுத்துப் பகுதியில்     பொருத்தித்தான் எழுதவேண்டும். அது தீர்ந்து புதுப்பென்சில் கேட்டால், பழைய ‘எலிப் புழுக்கை‘ பென்சிலை கவனமாக கையில் வாங்கி,  ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு, ‘இன்னும் ஒருவாரம்  ஓட்டலாம். அடுத்த வாரம்  புதிசு தரேன்‘  என்று சொல்லுவார்! புதிசு என்ன புதிசு? அதே ‘அரைப்புதிசு’ தான்! இப்போது அது கஞ்சத் தனமல்ல, சிக்கனம் என்பது புரிகிறது! (இதே சிக்கனத்தை நான் கடைப்பிடிக்கும்போது, என் குழந்தைகளிடம் கஞ்சன் என்று பெயர் வாங்கியிருக்கிறேன்!) அதேபோல பள்ளிக்கூட விடுமுறைக்கு முன்னால் என்வகுப்பு மாணவர்களுடன் ஆசிரியர்கள் உட்கார்ந்திருக்கும் குரூப் போட்டோ என்வீட்டில் இருக்காது. ஏனென்றால் அதற்கு இரண்டரை ரூபாய் கொடுக்க வேண்டும்.  ‘அதெல்லாம் எதுக்குடா? அந்த போட்டோவிலே  நீ எங்கே   நிக்கறேன்னு நீ வந்து காட்டினாத் தான் தெரியும்!‘ என்று சொல்லிவிட்டு போய் விடுவார்! 
SLB பள்ளியில் SSLCமுடித்தபோது, அந்த குரூப் போட்டோவுக்காக நாள் முழுவதும் அழுது, அம்மாவின் strong recommendation பேரில்,  ‘சரி சரி! அலமாரிலேருந்து எடுத்துக்கொ’ என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். அப்பாவின் சம்மதம் பெற்று பூட்டாத அலமாரியைத்திறந்து சில்லறைப் பையிலிருந்து இரண்டரை ரூபாய்எடுத்துக்கொண்டது நினைவுக்கு வருகிறது. அப்போதும் ‘அய்யனார்‘ கடலைமிட்டாய்க்காக இன்னும் நாலணாகூடுதலாக எடுக்கத் தோன்றவில்லை. என் தந்தைக்கு பொய்யும் திருட்டும் அறவே ஆகாது! நானும் இன்றுவரை என் வீட்டு அலமாரிகளைப் பூட்டியதில்லை. இதுவரை திருட்டுக் கொடுத்ததும் இல்லை! நான் SSLC பாஸான பிறகு தான், மணிமேடைக்கடையில்எட்டரை ரூபாய்க்கு மோட்டார் டயர் அடி [sole] போட்ட முதல் செருப்பை வாங்கிக் கொடுத்தார். ‘இது லேசிலே தேயாது‘ என்ற அறிவுரையுடன்!)
அப்போது திருவிதாங்கூரில் வசித்துவந்த என் தலைமுறையைச்சேர்ந்தவர்கள் தான் மூன்றுவித நாணய முறைகளைப் பார்த்திருக்கமுடியும். சுதந்திரத்துக்கு முன்னால், திருவிதாங்கூர் ரூபாய்,  பணம், சக்கரம் காசு. பிறகு, பிரிட்டீஷ் ரூபாய், அணா, பைசா. 1958-ல் தசாம்ச (Decimal) முறை வந்தபிறகு, இந்திய ரூபாய், நயாபைசா. கடைசியில் ரூபாய், [நயா இல்லாத, வெறும்] பைசா! திருவிதாங்கூர் ரூபாய்க்கு 28 சக்கரம். பிரிட்டீஷ் ரூபாய்க்கு இருபத்தெட்டரை சக்கரம். திருவிதாங்கூர் ரூபாய்க்கு 4 பணம், ஒரு பணத்துக்கு 7 சக்கரம். ஒரு சக்கரத்துக்கு 16 காசு. பிரிட்டீஷ் ரூபாய்க்கு 16 அணா. ஒரு அணாவுக்கு 12 பைசா! என்ன, தலை சுற்றுகிறதா? பள்ளிக் கூடத்தில் [ஏன், இப்போதும்] கணக்கு எனக்கு வேப்பங்காயாக கசந்த   காரணத்தை உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும். இல்லையென்றால், யமலோகத்தில் என்னை எண்ணெய்க்கொப்பரையில் தள்ளிவிடும் அபாயம் உண்டாம்! 
நான்காவது வகுப்புக்கணக்குப் பரீட்சையில் இரு கேள்விகள் நிச்சயம். கேள்வி 1: 2357 ரூ. 3 பணம், 18 சக்கரம், 14 காசு. இதை பிரிட்டீஷ் ரூபாய், அணா பைசாவாக மாற்றுக. கேள்வி 2: ஒரு ஆட்டுக்கு 23 ரூ.   22 சக்கரம், 9 காசென்றால், 273 ஆடுகளின் விலையை ரூபாய் அணா பைசாவில் கணக்கிடுக. என்ன, தூக்கம் வருகிறதா?  கால்குலேட்டர் என்ற ஒரு வஸ்துவைப் பற்றி   கேள்விப்படாத 1945-ம் வருடம்எட்டே வயதான நான் என்ன பாடு பட்டிருப்பேன்? யோசித்துப்பாருங்கள்! இந்த வேண்டாத ‘வையாவிரி‘ திருவிதாங்கூரில் மட்டும் என் தலைமுறை வரை தொடர்ந்தது! மதராஸ் மாகாணத்தில் படித்தவர்களுக்கு இந்தத் தலைவலியிலிருந்து விடுதலை!
திருவனந்தபுரத்தையடுத்த கொல்லம் அன்றும் இன்றும் முந்திரிப்பருப்பு உற்பத்திக்கு பிரபலமானது.  ஆங்கிலேயர்கள் வந்தபுதிதில், இது என்னவென்று தெரியாததால், வழியில் முந்திரிப்பருப்பை கூறுபோட்டு விற்றுக்கொண்டிருந்தவளிடம், What is this? என்று கேட்டார்களாம். அவள் விலையைத்தான் கேட்கிறார்களென்று நினைத்து, ‘காசினெட்டு‘ [ஒரு காசுக்கு எட்டு] என்று பதிலளித்தாளாம். அன்றிலிருந்து,  மலையாள ‘அண்டிப்பருப்பு‘  Cashew Nut [காசினெட்டு] ஆக மாறியது என்பார்கள்! இதேபோல சிறுவயதில், அப்பாவைப்பார்க்கவரும் அவரது நண்பர்களிடம், ‘மாமா! மர வண்டி மத்தளம்னா என்ன?’ என்று கேட்டு, நானே பதிலாக, ‘Tree-மரம், Van-வண்டி, Drum-மத்தளம் – Trivandum –மர வண்டி மத்தளம்’ என்று ‘புத்திசாலித்தனமாக‘ சொல்லி பல முறை அசடு வழிந்திருக்கிறேன்!
அந்தக்காலத்தில் திருவனந்தபுரத்தில் சாலைப்பள்ளிக்கூடத்தில் மட்டும்தான் தமிழ் பயிற்று மொழியாக இருந்தது.  சினிமா போஸ்டர், நோட்டீசில் கதாஸாரம் (கதைச்சுருக்கம்) படித்து மலையாளமும் கற்றுக்கொண்டேன். பிரபல வீணைவித்வான் திருவனந்தபுரம் ஆர். வெங்கட்ராமன் நாலாவது வகுப்பிலிருந்து என்னுடன் படித்தார். இன்னொரு பிரிவில் நீல. பத்மநாபனும் இருந்தார். பள்ளிக்கூடத்தைத்தொட்டவாறு, தெளிந்த நீரோடு கிள்ளியாறு ஓடியது. ஆற்றுப்படித் துறையில் எப்போதும் குளிக்க வருபவர்கள் கூட்டமிருக்கும். சமீபத்தில் நான் பார்த்த போது, அதை ‘கூவமாக‘ மாற்றியிருந்தார்கள்!   படித்துறையில் நின்று, செத்துவிட்ட கிள்ளியாறை நினைத்து இருசொட்டு கண்ணீர் வடித்தேன். அதனால், அந்தக் காலத்தில், பச்சையப்பர் சென்னையில் கூவம் ஆற்றில் தினமும் குளித்து வருவாரென்று படித்ததை என்னால் சுலபமாக நம்பமுடிந்தது!
1945-ல் பாளையத்திலிருந்த திருவனந்தபுரம் ரேடியோ ‘வானவில்‘ என்று ஒரு சிறுவர் நிகழ்ச்சியைத் தமிழில் ஆரம்பித்தது. ஞாயிறு தோறும் காலை 9.30லிருந்து  10 மணிவரை. திரு கிருஷ்ணமாச்சாரியும், மணியும் நடத்திவந்தார்கள். அவர்களுக்கு நான் தான் முக்கிய சீடன்.  பாட்டுப்பாட, நடிக்க என் பள்ளிநண்பர்களை கூட்டிச்செல்வேன். ஒவ்வொரு வாரமும் நான் எழுதிய பத்துநிமிட ‘நாடகம்‘ நிச்சயம் இடம்பெறும்! வீட்டுக்கு  Van வந்து அழைத்துச்செல்லும். எனக்குப்பெருமையாக இருக்கும். ஆரியசாலைத்தியேட்டரில் தமிழ் நாடகங்கள்   போட,  வருடம் ஒருமுறை திருவனந்தபுரம் வரும் ஸ்ரீ மதுரை தேவி பால விநோத சங்கீத சபாவின் தலைவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை, மத்தியானவேளைகளில் அப்பாவைப்பார்க்க வீட்டுக்கு வருவார். மாடியில் இருவரும் நாடகத்தைப்பற்றி பேசிக்கொண்டேயிருப்பார்கள். சங்கரதாஸ் சுவாமிகள், எஸ்.ஜி. கிட்டப்பா, யதார்த்தம்     பொன்னுசாமிப்பிள்ளை, F.G. நடேசய்யர் போன்ற பெயர்களை அப்போதுதான் கேட்டேன். அப்பா உரத்த குரலில், ஏற்ற இறக்கத்துடன் Hamlet நாடகத்தைப் படித்துக்காட்டுவார். ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாத பிள்ளையவர்கள் அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்! அவர்களுக்கு சாப்பாடு, காபி டிபன் மாடிக்கு எடுத்துச்செல்வேன். ஒருநாள், ‘பிள்ளைவாள், இவனை பள்ளிக்கூட லீவில் உங்ககூட அனுப்பறேன். கொஞ்சம் Discipline வரட்டும்.’ என்று சொல்லி, தொடர்ந்து மூன்று நான்கு வருடம் இருமாத பள்ளி விடுமுறையில் தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு, மூன்று செட் கதர் ஜிப்பா பைஜாமா, காந்திக்குல்லாய் தைத்து, [நவாப் ஒரு தீவிர காந்திபக்தர்] அவர் ‘டேரா‘ போட்டிருக்கும் ஊருக்கு அனுப்பிவிடுவார் என் தந்தை. என் நாடகவாழ்க்கையின் ஆரம்பப்பாடம் அங்கே தான் தொடங்கியது. திரு. ‘நவாப்‘ ராஜ மாணிக்கம்பிள்ளை தான் என் ஆசான்.   ஞானசெளந்தரி, கிருஷ்ண லீலா,  தசாவதாரம், நல்லதங்காள், பக்த ஐயப்பன், சம்பூர்ண ராமாயணம் போன்ற நாடகங்களில் சிறுசிறு வேடங்கள் தான். ஓரிரு வசனங்கள் தானிருக்கும். இருமாதங்களில் ஓடி விடுவேனென்பது அவருக்குத்தெரியும். நல்ல தங்காளில் கிணற்றில் குதிக்கும் மூன்றாவது மகன்! கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணனின் நண்பன்! நாடகம் தொடங்குவதற்கு முன்னால் தினமும் கொட்டகை முழுவதும் சாம்பிராணிப் புகை போடுவார்கள். அந்த வாசனை எனக்குப்பிடிக்கும். மற்ற நடிகர்களுடன் [நடிகைகள் கிடையாது] சேர்ந்து கடவுள்வாழ்த்து ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்‘ பாடுவேன். அப்போது அது பாரதி இயற்றியதென்பது தெரியாது. நடிப்பு கற்றுக்கொண்டேனோ இல்லையோ, அப்பா சொன்ன Discipline கொஞ்சம் வந்தது. சிறுவயதில் என்னை நானே சமாளித்துக்கொள்ளும் திறமையும் வந்தது. ஆசனங்களும் யோகாவும் அங்கேதான் கற்றுக் கொண்டேன்.
மார்த்தாண்டவர்மா காலத்திலிருந்து, திருவிதாங்கூர் சமஸ்தானம் கன்யாகுமரியிலிருந்து, மேலப்பறவூர் வரை பரந்திருந்தது. மற்ற சமஸ்தான அரசர்களைப் போல் மது மாது என்று நேரத்தை வீணாக்காமல், இசை, பக்தி, மக்கள்நலன் இவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தனர். செல் போன் இல்லாத அந்தக் காலத்தில், சுசீந்திரம் தேரோட்டத்தன்று, தேர் நிலைக்கு நின்றதை, 50 கி.மீ.தொலைவில், திருவனந்தபுரத்திலிருக்கும் மன்னருக்குத் தெரிவிக்க, ஒவ்வொரு பர்லாங் தூரத்திலும் துப்பாக்கியுடன்  சிப்பாய்களை நிற்கவைத்து, Relay Race போல ஒவ்வொரு துப்பாக்கியாக வெடிக்கச்செய்து, மன்னருக்கு செய்தியறிவிக்கப் பட்டது. இதைக் கேட்ட பின்னரே, அவர் தன் உண்ணாநோன்பை முடித்துக்கொள்வாராம்.
நான் எட்டாவதிலிருந்து, SSLC வரைப்படித்த நாகர்கோவில் சேது லட்சுமிபாய் [S.L.B.] உயர்நிலைப் பள்ளி சாதாரணப்பள்ளிகளைப்போலல்லாது, ஒரு குன்றின்மேல் பிரும்மாண்டமாக நிற்கும். அதை இன்று பார்க்கும்போது, சென்னை மாநிலக்கல்லூரி, சென்ட்ரல் ஸ்டேஷன் போன்ற மிகப் பெரிய கட்டட அமைப்பு பிரமிக்கவைக்கிறது.   தில்லிக்கு வந்தபிறகும், லீவில் நாகர் கோவிலுக்குப் போகும்போது, கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமியோடு நான் படித்த பள்ளிக் கூடத்தை சுற்றிவந்து பழைய நினைவுகளை அசை  போட்டிருக்கிறேன். (அங்கிருந்து மூவரும் வடசேரிக்கு நடந்தே போய், கனகமூலம் சந்தையின் எதிரேயிருந்த  ‘குண்டுப்போற்றி‘ ஹோட்டலில் ரசவடை சாப்பிட்டதும் நினைவுக்கு வருகிறது! இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஐம்பதுகளின் தொடக்கத்தில் எழுத்தாளர் கந்தாடையார் நாராயணசுவாமி சுப்ரமண்யம் நாகர்கோவில் வந்திருந்தபோது, அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது நம்பியும் சுந்தர ராமசாமி யும் தான். அப்போது அவர்தான் எனக்கு மாமனாராக  வருவார் என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது!) நேருஜி நாகர்கோவில் வரும் போது, எனது பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் தான் பொதுக்கூட்டம் நடைபெறும். அதற்கென்றே ஒரு பெரிய மேடையை அமைத்தார்கள். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் ‘காந்திமகான் கதை‘ வில்லுப் பாட்டையும் அங்கேதான் கேட்டேன். அந்த பிரும்மாண்டமான பள்ளிக்கூடம் திருவிதாங்கூர் மன்னர் கட்டியது. அவர்கள் சின்னம் ஒரு வட்டத்துக்குள் சங்கு. இருபுறமும் தும்பிக்கைகளை உயர்த்தியபடி இரு யானைகள். மக்களாட்சியில் கேரளம் உருவானபோது, அரசியல் தலைவர்கள் ‘பெரியமனது‘ பண்ணி அந்தச்சின்னத்தையே கேரளாவின் தேசீயச்சின்னமாக ஏற்றுக் கொண்டார்கள்!
இந்தக்கட்டுரை ஒரே ராத்திரியில் என் ஞாபகத்திலேயே உருவானது. அங்கேயே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மூத்தவர்கள், இதில் சிலபல தவறுகளைக் காணமுடியும். ஆனாலும் இது என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் இளவயது  திருவிதாங்கூரின் அழியாச்சித்திரம்! இப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்!
பாரதி மணி (Bharati Mani)

0 comments:

Post a Comment