Saturday, January 23, 2016

இன்று CNN-IBN-ல் ஒரு செய்திமடல் பார்த்தேன். தில்லியில் ‘லாவாரிஸ் பாபா‘ [லாவாரிஸ் = அநாதை] என்ற ஒரு முஸ்லீம் பெரியவரைப்பற்றியது. இவர் தனது சைக்கிள் ரிக் ஷாவுடன், தில்லி  வில்லிங்டன் [ஜெயப்பிரகாஷ்  நாராயண்] மருத்துவமனை வெளியே காத்திருப்பாராம்.  எல்லா பெரிய மருத்துவமனைகளிலும், உற்றார் உறவினரில்லாத அநாதைப்பிணங்களை, கண்பார்வையற்ற தன் மனைவியின் உதவியோடு, அவரவர் மதச்சம்பிரதாயப்படி, அடக்கம் செய்வாராம். தில்லிக்காவல்துறை இவருக்கு தலா ரூ.200அளிக்கிறதாம். பூவிழுந்த கண்களுடன், ‘நான் எல்லா மனிதர்களையும் நேசிக்கிறேன். என்னிடம் வரும் பிணங்கள் அநாதைகளல்ல. அவர்களுக்கு நான் இருக்கிறேன். அவரவர் முறைப்படி அந்திமச் சடங்குகளைச்செய்கிறேன். இந்த உலகத்திலிருந்து யாரும் அநாதைகளாகப்போகக்கூடாது’ என்கிறார் இந்த  நல்ல மனிதர்!
போனவாரம், சென்னையில் என் ஆசான், ஐம்பது வருட தில்லி நண்பர், எங்கள் தட்சிண பாரத நாடக சபா டைரக்டர் ராமநாதனின் மாப்பிள்ளை இறந்துபோனதாகச்செய்தி அறிந்து, அவர் வீட்டுக்குப்போயிருந்தேன். எண்பத்தைந்து வயதான அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தில்லியில் இருந்தபோது, அவர் தந்தை, தாய்,மனைவி, பிறகு ஒரே மகன் இறந்த நேரங்களில், மார்ச்சுவரி யிலிருந்து சடலத்தை வாங்குவதிலிருந்து, நிகம்போத் காட் சுடுகாடு வரை கூடவிருந்து உதவி செய்தவனுக்கு,இங்கே கண்ணம்மாபேட்டை வரை  போவதற்கான மனநிலை  இருக்கவில்லை.  ‘நமக்கு வயதாகி விட்டது, வெயிலில் நிற்கமுடியாது, மற்றவர்கள் இருக்கிறார்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற அரைமன நொண்டிச்சமாதானத்தோடு, வீடு திரும்பிவிட்டேன்.
ஆனால் வீட்டுக்கு வந்தும் இந்தக் குற்றவுணர்ச்சி குறையவில்லை. வயது ஆகஆக நான் மாறிக்கொண்டுவருகிறேனா? தில்லியில் இது நிச்சயம் நிகழ்ந்திருக்காது. அங்கிருந்தவரை சுமார் இருநூறு தடவைகளாவது நிகம்போத் சுடுகாட்டுக்குப்போயிருப்பேன். சாவு சொல்லிக் கொண்டு வருவதில்லை. வீட்டிலிருக்கும் மற்றவர்களுக்கு தனக்கு நெருக்கமானவர் சாவைப்பார்ப்பது முதல் அநுபவமாகத்தான் இருக்கமுடியும். அதிலும் கணவன் மனைவியாக வேலை நிமித்தம் தில்லிக்குவந்து தனிக்குடித்தனமாக வாழ்ந்துவருபவர்களுக்கு இந்தச்சோகம் அணுகினால் உடைந்துபோய் இருப்பார்கள். இன்னும் வேர்பிடிக்காத, மொழி தெரியாத புதிய ஊரில், விபத்திலோ நோயிலோ தன் ஒரே துணையான கணவனைப்பறிகொடுத்த அந்தப்பெண்மணியின் நிலையை சற்று நினைத்துப்பாருங்கள். அந்தசமயத்தில் செய்தியறிந்து, அப்போ திருந்த என் ஓட்டை ஸ்கூட்டரில் அங்கேபோய் சொந்தஊரில் யார்யாருக்கு தொலைபேசியில் தகவல் சொல்லவேண்டுமென்பதைத் தெரிந்துகொண்டு, இந்த சோகச்செய்தியை பக்குவமாக தெரிவிப்பது எளிதல்ல. கைபேசிகளும், STDயும் வராத காலத்தில், Trunk Call புக் பண்ணி, அவர்கள் குக்கிராமத்தில் தொலைபேசி இருக்கும் ஒரே வீட் டுக்கு தகவல் சொல்லி உறவினர்களைக்கூப்பிடவேண்டும். அவரவர் மத சம்பிரதாயப்படி, இறந்தவரை புதுத்துணியால் போர்த்துவது, தலை தெற்குப்பக்கம் வைத்து,   தலைமாட்டில் தெற்கேபார்த்து விளக்கேற்றுவது, உள்ளூரில் இருக்கும் அவர்களது நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் சொல்வது, இறந்தவரின் Death Certificate கேட்டுவாங்கி, அதற்கு நாலைந்து  நகல் எடுத்து, ஒரிஜினலை பத்திரமாக வைத்திருப்பது, மந்திர் மார்க்கில் இருக்கும் தில்லி கார்ப்பொரேஷன் creamatorium_may_02-smallஆபீசுக்குப்போய் ரூ.50 கட்டி நிகம்போத் போக அமரர் ஊர்திக்குப்பதிவு செய்வது, அவர்களுக்கு சடங்குகளில் நம்பிக்கையிருந்தால், அதற்கான புரோகிதரை வரவழைப்பது, அவர் வருமுன்பே, யூஸப் ஸராயிலிருக்கும் ஒரே கடையில், பாடை,காடாத்துணி, பானைகள், கயிறு, வரட்டி நெய் போன்றவை வாங்கித் தயாராக வைப்பது, நெருங்கியவர்கள் சென்னையிலிருந்து விமானத்தில் வருவதாக இருந்தால் அவர்களுக்கு வண்டி அனுப்புவது என்று நான் ஒரு தடவை கூட சாகாமல், செத்தவர்களுக்கு என்னாலான மரியாதையை தொடர்ந்து செய்திருக்கிறேன். இறந்தவர்களுக்கு பசி இருக்காது. துக்கத்திலிருக்கும் மற்றவர்களுக்கு அந்த ‘இடும்பைகூர்’ வயிறு இருக்கிறதே! அவர்களுக்கு தேவையான காபி, டிபனுக்கு பக்கத்திலுள்ள தெரிந்தவர் வீட்டில் சொல்லி ஏற்பாடு செய்யவேண்டும். அந்தக்காலத்தில், தில்லியில் எங்கே தமிழர் வீட்டுச்சாவு நிகழ்ந்தாலும், உடனே ‘மணியைக்கூப்பிடு, அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்’என்று         சொல்லுமளவுக்கு ஏறக்குறைய நான் ஒரு ‘சவண்டிப்பிராமணன்’ ஆகியிருந்தேன்! பாடை கட்டுவதில் எனக்கு இணையேயில்லை. கயிறு எங்கெங்கே இறுகவேண்டும் எப்படி முடிச்சுப்போடவேண்டுமென்பது தெரியாவிட்டால், அமரர் ஊர்தியில் போகும்போதே கயிறு தளர்ந்து, சடலம் ஆட ஆரம்பித்துவிடும்!
என் வேலை இத்துடன் முடிவதில்லை. நம்பிக்கையான இருவரை முன்கூட்டியே சுடுகாட்டுக்கு Death Certificate நகல், பணத்துடன் அனுப்ப வேண்டும். வாழும்போது மனிதனை வாட்டும் க்யூவரிசை அவன் இறந்தபிறகும் விடுவதில்லை! நிகம்போத் சுடுகாட்டில் போனவுடன் இறப்பு  பதிவேட்டில் பதிவு செய்ய க்யூ, விறகு வாங்க பணம் கட்டி,முண்டுமுடிச்சு இல்லாத நின்று எரிகிற விறகை, விறகுக்குவியலில் நாமே மேலே ஏறி பொறுக்கியெடுத்து எடைபோட்டு தள்ளுவண்டியிலேற்றுவதற்கு க்யூ, சடலத்தை எரிப்பதற்கான இடத்தை பதிவு செய்வதில் க்யூ, இப்படி க்யூ வரிசை இறந்த பிறகும் தொடரும்!
தில்லி போன புதிதில், ஒரு தடவை என் நண்பரின் சடலத்துடன், இறப்பு பதிவேட்டில் பதிவு செய்ய க்யூவில் நின்றிருந்தேன். என் முறை வந்ததும், தூங்கிவழிந்துகொண்டிருந்த வயதான சிப்பந்தி, ‘க்யா நாம் ஹை? என்றார். என் பெயரைச்சொன்னேன். ‘பாப் கா நாம்?’ என் தந்தையின் பெயரைச்சொன்னேன். ‘உமர்?’. என் வயதைச்  சொன்னேன். ப[த்]தா?என் விலாசத்தை பின் கோடு சகிதம் ஒப்பித்தேன். அவரது அடுத்த கேள்வி: ‘உன் பெயரென்ன?’ என் பெயரைத்தானே சொன்னேன் என்று சற்று உரக்கக்கூறினேன். ‘முட்டாள்,நான் செத்தவரின் பெயரைத்தான் கேட்டேன்.  நீ என்ன அட்வான்ஸ் புக்கிங் பண்ணறியா? பேட்டா! உனக்கு இங்கே வர இன்னும் நிறைய நாளிருக்கு. என் வயதும் உனக்குச்சேரட்டும்!’ என்று ஆசீர்வத்தித்தார்!  ஆக என் பெயர் நிகம்போத் காட்டில் ஏற்கனவே பதிவாயிருக்கிறது!
முதலில் தெரிந்தவர்களுக்காக என்று ஆரம்பித்து, பிறகு தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ, சாவுச்செய்தி கேட்டால், பாக்கெட்டில் ஐநூறு ரூபாயை போட்டுக்கொண்டு போய்விடுவேன் (அப்போது என் ஒருமாத சம்பளம்) சாவுவீட்டிலிருக்கும் இறுக்கமான சூழ்நிலையில் அவர்களிடம் பணத்துக்காக தொந்தரவு செய்யக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன். அவர்களாக நினைவு வைத்திருந்து, பிறகு நிர்ப்பந்தமாக திருப்பித்தந்தால், முடிந்தவரை மறுத்துப்பார்ப்பேன். நான் வழக்கமாக கோவிலுக்குப்போவதில்லை. நானே தான் கடவுள் [அஹம் ப்ரும்மாஸ்மி] என்று அசட்டுத்தனமாக நினைத்துக்கொண்டிருந்த காலம். உண்மையாக இதை இறைவனுக்குச்செய்யும் கைங்கரியமாக நினைத்து செய்துவந்தேன்.  மாரடைப்பால் இறந்த நண்பர் ஒருவரது பதிமூன்றாம்நாள் சுபஸ்வீகாரத்தன்று, அவரது மனைவி என்னைத்தனியாக கூப்பிட்டு, ‘அவர் இறந்த அன்று என்  கையில் பணம் இல்லை. திங்கட்கிழமை பாங்குக்குப் போய் பணம் எடுக்கலாமென்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை திடீர்னு போயுட்டார். கடவுள் போல நீங்க இருந்தீங்க’ என்று கண்ணீர் மல்கச்சொன்னது நினைவுக்கு வருகிறது. நானும் சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.
நான் தில்லியிலிருந்த ஐம்பது வருடங்களில் பலதடவைகள் நிகம்போத் போயிருந்தாலும், என் சொந்தத் துக்கத்துக்காக போனது இரண்டே தடவைகள் தான். என் மாமனார் க.நா.சு. 1988 டிசம்பரில் நடக்கும் சாகித்ய அகாதெமி வருடாந்திர விருது விழாவில் கலந்துகொள்ள இரு மாதங்களுக்கு  முன்பே தில்லி வந்திருந்தார். மகள், பேத்திகளுடன் சில மாதங்கள் தங்கிவிட்டு சென்னை திரும்புவதாகத் திட்டம். அப்போது மூன்று வருடங்களாக சென்னையில் தங்கியிருந்தார். அவர் கடைசியாக கலந்துகொண்ட கூட்டம் ka_na_suதில்லி பாரதி மார்க்கில் இருக்கும் பாரதி சிலையடியில் அவரது பிறந்தநாள் விழா. அன்றுதான் ஷோரூமிலிருந்து டெலிவரி எடுத்த புது மாருதிக்காரில் அழைத்துச் சென்றேன்.’புது புத்தகம் மாதிரி புதுக்காரும் வாசனையா இருக்கு’ என்று போகும் வழியில் சொன்னார்.  அன்று பாரதிவிழாவில் அவர் தமிழில் சரளமாகப்பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு ஆங்கிலத்தைப்போல தமிழில் சரளமாக, கோர்வையாகப் பேச வராது. ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் பேசுவதுபோலிருக்கும். ஆனால் அன்று தங்குதடையில்லாமல், அழகான தமிழில் இருமணி நேரம் பேசினார். அதற்கு அவரது மூன்றுவருட சென்னைவாசம் தான் காரணம் என்று அனுமானித்தேன். [நானே சென்னை வந்து  சில வருடங்களில் தைரியமாக தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டேனே!] சென்னை திரும்புமுன் என் குழந்தைகளுடன் ஓரிரு மணிநேரம் அவரைப் பேசச்செய்து,ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அது  நடக்கவில்லை. சாகித்ய அகாதெமி அவருக்கு India International Centre-ல் தங்க வசதி செய்திருந்தார்கள். விழாவுக்கு முன்தினம் அங்கு போவதற்கான ஆயத்தங்களில் இருந்தார். பெட்டி,Portable Typewriter, தடிக்கம்பு, அடுத்தநாள் விழாவில் வாசிப்பதற்கான தலைமையுரை,  சிறிது ஜலதோஷமானதால் இரண்டு டப்பி Zambuk எல்லாம் ரெடி. [உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்: க.நா.சு. ஜாம்பெக்கை ஒரு சர்வரோகநிவாரணியாகவே கருதினார்!  ஜலதோஷத்துக்கு, இருமலுக்கு, கால்புண்ணுக்கு, சிராய்ப்புக்காயத்துக்கு, கத்திவெட்டுக்கு, வேர்க்குருவுக்கு, இன்னோரன்ன பிற பிணி களுக்கு, ஜாம்பெக் தான் அவரது ஒரே வைத்தியம். யாராவது அவரிடம் காலில் கான்ஸர் வந்திருக்கிறதென்று சொல்லி வருத்தப்பட்டால், ‘ரெண்டுநாள் ஜாம்பெக் தடவுங்கோ. சரியாப்போயிடும்’ என்று நம்பிக்கையோடு சொல்வார்!  என் குழந்தைகள் அவரைப் பரிகாசம் செய்யும்!]
வியாழக்கிழமை மாலை, ஜாம்பெக்குக்கு பணியாத ஜலதோஷம் நல்ல காய்ச்சலையும் சேர்த்துக்கொண்டது. ‘நான் இன்னிக்குப்போகலே.  ரெஸ்ட் எடுக்கிறேன்’ என்று படுத்துவிட்டார். என் காலனியிலிருந்த ஒரு டாக்டர் வந்து  பார்த்துவிட்டு, வெறும் ஜுரம் தான் என்று மருந்து எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார். இரவு கனவில் இளமையில் இறந்த தன் சகோதரி வந்து கூப்பிட்டதாகச்சொன்னார். மருந்தைக்கொடுத்து தூங்கவைத்தோம். 1988 டிசம்பர் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு தன் மனைவி ராஜியிடம் ஒரு ஹார்லிக்ஸ் கேட்டுவாங்கி குடித்துவிட்டு படுத்தவர் தான். அரைமணி கழித்து, ‘மணி! ஓடிவாங்கோ, என்னவோபோல் இருக்கார்’ என்று என் மாமியார் கூப்பிடவும், போய்ப்பார்த்ததில், க.நா.சு. அடங்கிவிட்டாரென்று தெரிந்தது. இருந்தும் இருகைகளால் நெஞ்சை வேகமாக அழுத்திப்பார்த்தேன். எந்தச்சலனமுமில்லை. உடனே வந்து பார்த்த டாக்டரும் அதையே சொல்லிவிட்டு, Death Certificate எழுதிக்கொடுத்துவிட்டுப் போனார். கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன், ஆல் இந்தியா ரேடியோ தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமிக்கு வீட்டில் தகவல் சொன்னேன்.  சிறிதுநேரத்தில், டூட்டியிலிருந்த என் நண்பர் செய்திவாசிப்பாளர் ராஜாராம் AIR-லிருந்துஎன்னைத்தொடர்பு  கொண்டு க.நா.சு.வின் பிறந்த ஊர், வயது முதலியவற்றைக்கேட்டறிந்து, காலை 7.15 தமிழ்ச்செய்தியில் தமிழ்  நாட்டுக்கு க.நா.சு. இறந்த செய்தியை அறிவித்தார். எட்டுமணி ஆங்கிலச்செய்தி வருமுன்பே, ராஷ்டிரபதி பவனிலிருந்து நாணா [கல்கியின் மருமகன் – குடியரசுத்தலைவர்  வெங்கட்ராமனின் செயலர்] என்னிடம் தொடர்பு   கொண்டு, பெரியவர் என்னிடம் பேசவிரும்புவதாகச்சொன்னார். திரு. வெங்கட்ராமன், தன் ஆழ்ந்த அநுதாபங்களைத்தெரிவித்து, சிறுவயதிலேயே இருவரும் நண்பர்களென்றும், நேரில் வர ஆசை இருந்தும், என் காலனிக்குள் வர பாதுகாப்பு அதிகாரிகள் Security Clearanceதரவில்லையென்றும், தன் சார்பாக இரு A.D.Csமலர்வளையங்கள், கைப்பட எழுதிய இரங்கல் செய்தியுடன் வருவார்களென்றும் தெரிவித்தார். தில்லி தமிழ்ச்சங்க நண்பர்கள், சாகித்ய அகாதெமி தலைவர், வாஸந்தி, வெங்கட் சாமிநாதன், பென்னேஸ்வரன் உட்பட தில்லி எழுத்தாள நண்பர்கள் வர ஆரம்பித்தனர். காலில் அடிபட்டு பிளாஸ்டர் போட்டிருந்த வெங்கட் சாமிநாதன், ஒவ்வொரு படியாக ஏறமுடியாமல் ஏறி வந்து, தூரத்தில் நின்று, படுத்திருந்த க.நா.சு.வை அரைமணிநேரம்   வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. க.நா.சு. வளர்த்தGoofyஎன்ற நாயை விட அவரிடம் மரியாதை, நன்றிவிசுவாசம் வைத்து, அவருக்குப் பிரதம சீடனாக இருந்த தில்லி எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி மட்டும் வரவில்லை ஊரில் இல்லாத காரணத்தினால்! ஆனால், பெரியவரது சாம்பலை யமுனைநதியில் கரைக்கப்போகும்போது என்னுடன் இருந்தார். Goofyயும் ஒரு வாரத்துக்கு சோறுதண்ணியில்லாமல் சோகமாக படுத்துக்கிடந்தது! இந்த Goofy பெயரில் ஓரிரு கவிதைகள் கூட எழுதியிருக்கிறார்!
க.நா.சு.வுக்கு சென்னையைவிட தில்லி பிடித்திருந்தது. அந்தக்காலத்தில் அவரைப்போல எழுத்தையே தொழிலாக நம்பிவாழ்ந்த வெகு சிலருக்கு சென்னை அரைவயிறாவது நிறைய வாய்ப்பளித்திருக்குமா என்பது சந்தேகம் தான்! தில்லியில்,Statesman, Hindustan Times, Patriot, Pioneer, Times of India, Indian Express போன்ற தினசரிகளில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுதி வந்ததால், அங்கே வசதியாகவே வாழ்ந்தார். இவ்விஷயங்களில், ஞானபீடம் ஜெயின், குல்தீப் நய்யர், குஷ்வந்த் சிங் போன்றோர் உதவி அவருக்கிருந்தது.1984-வாக்கில் மைசூரில் நடந்த ஒரு ‘எழுத்துப் பட்டறை’க்காக இருமாதங்கள் தெற்கே வந்தவர், மூன்று வருடங்கள் சென்னையிலேயே தங்கிவிட்டார். அப்போது ஒரு நிருபர் கேட்ட இடக்கான ஒரு கேள்விக்கு, ‘ஆம், சாவதற்காக சென்னை வந்திருக்கிறேன்’ என்று சொன்னாராம். ஆனால் சாவதற்கு, அவருக்குப்பிடித்த தில்லிக்குத் திரும்பிவிட்டார்!
க.நா.சு.வுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கையிருந்தாலும் சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருந்ததில்லை. அவர் பூணூலையே கழட்டிவிட்டார். அதனால், புரோகிதர்,மந்திரங்கள், தீச்சட்டியில்லாமல், தில்லி கார்ப்பொரேஷன் புதிதாகக்கட்டியிருந்த நிகம்போத் மின்சார சுடுகாட்டில் அவரை எரியூட்டினேன்.  என் வீட்டுக் காரியத்துக்கும், நானே தான் மந்திர் மார்க் போய் அமரர் ஊர்திக்கு பதிவு செய்துவிட்டு வந்தேன். எனக்குத்துணைக்கு பாரதி பாலுவைத்தவிர யாருமில்லை. அவருடன் அவர் எழுதிய, அப்போது மறுபதிப்பு வந்திருந்த, எல்லா சிறுகதை நாவல்கள், உலக இலக்கிய மொழிபெயர்ப்புக்களின் ஒவ்வொரு பிரதியையும் அவருடன் சேர்த்து எரியவிட்டேன். இதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.
எழுபதுகளில் நாங்கள் செளத் எக்ஸ்டென்ஷனில் இருந்தபோது, க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கவும், மதராஸி பில்டர் காபி சாப்பிடவும் மாலை ஏழு மணிக்குப்பிறகு  வீட்டிலிருந்த என் ‘Bar‘ல் பேகம் அக்தர் கேட்டுக்கொண்டே, மூன்று லார்ஜ் ‘ஷிவாஸ் ரீகல்‘ விஸ்கி சாப்பிடவும் முதுபெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் என் வீட்டுக்கு வருவார். ஒரு சமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘கானா, உன்னிட மிருக்கும் எல்லா புத்தகங்களையும் மொத்தமாக எனக்குத்தருகிறாயா, ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். I am serious‘ என்றார். அதற்கு, ‘My book collections are not for sale. எனக்குப்பிறகு இவைகளைப்படிக்க யாருமில்லையென்றால், அவைகளை என்னோடு சேர்த்துவைத்து   எரித்துவிடட்டும். Thank you very much for your offer.’என்று அவர் சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதனால் தான் அவர் போகும்போது, அவருக்கு மிகவும் பிடித்த புத்தகங்களும் அவருடன் போகட்டுமே என்று அவைகளையும் சேர்த்து எரியவிட்டேன். American Library, British Council-லிருந்து வாங்கிவந்த புத்தகங்களையெல்லாம் படித்துமுடித்து, படிப்பதற்கு வேறு புத்தகங்களொன்றுமில்லை’ யென்றால், என் குழந்தைகளின் பாடபுத்தகங்களை கேட்டுவாங்கிப்படிப்பார்! படிப்பதற்கு எதுவாக இருந்தாலும் சரி! என் மூத்தமகள் ரேவதி தான் அந்தத்தாத்தாவுக்கு சரியான பேத்தி! அவர் விட்டுச்சென்ற புத்தகங்களையெல்லாம் குறைந்தது இரண்டுமூன்று தடவைகளாவது படித்திருப்பாள். அவள் கணவனும் ஒரு ‘புத்தகப்புழு‘ என்பதால்,கல்யாணமாகிப்போனதும், க.நா.சு.வின் எல்லா புத்தகங்களையும் பாதுகாத்து பராமரித்து வந்தாள். என் மகள் ரேவதிக்கு World Bank வேலையில் சென்னைக்கு மாற்றலானதும்,ஐம்பது பெரிய டிரங்க் பெட்டிகள் வாங்கி புத்தகத்துக்கென்றே ஒரு தனி லாரி ஏற்பாடுசெய்து க.நா.சு.வின் புத்தகங்கள் தில்லியிலிருந்து சென்னை வந்துசேர்ந்தது. என்வீட்டில் ஒரு ஆள் நடக்கப்போதுமான இடைகழி விட்டு மூன்று அறைகளிலும், வரவேற்பு அறையிலும் கூரை வரை புத்தகப்பெட்டிகள்! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீடு பூரா பழைய புத்தகநெடி. சென்னை எழுத்தாளநண்பர்களிடம் சொன்னேன். ஓரிருவர் வந்து அவர்களுக்குத்தேவையான சில புத்தகங்களை எடுத்துச்சென்றார்கள். விற்கவும் மனசு வரவில்லை. ஒருமாதத்திற்குப்பிறகு, ‘காலச்சுவடு‘ கண்ணனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சென்னையிலோ நாகர்கோவிலிலோ ஒரு புத்தகநிலையம் அமைத்து இந்தப் புத்தகங்கள் மக்களுக்கு உதவும்படி செய்யமுடியுமாவென்று கேட்டேன். அவர் சொல்லி ஆ.இரா. வேங்கடாசலபதி வந்து ஒரு லாரியில் எல்லா புத்தகப்பெட்டிகளையும் ஏற்றிச்சென்றார். [புத்தகநெடியால் ஒருவாரம் அவஸ்தைப்பட்டாராம்]. அதற்குப்  பிறகு, ஒரு வருடத்துக்குமேல் கண்ணனிடமிருந்து புத்தகப்பெட்டிகள் வந்து சேர்ந்ததைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை. நான் இதைப்பற்றி காலச்சுவடில் நாலுவரி அறிவிப்பைத்தான் எதிர்பார்த்தேன். சரி, இதையெல்லாம் எதிர்பார்ப்பது  நம் தவறு என்று எண்ணிக்கொண்டேன். சமீபத்தில் கண்ணனை நேரில் பார்க்க நேர்ந்தபோது, நாகர்கோவிலில் அமையப்போகும் சு.ரா. நினைவுப் புத்தகநிலையத்தின் ஒரு பகுதியாக இவைகளும் இடம்பெறுமென்று அவராகவே சொன்னார்.
சரி, நிகம்போதுக்கு திரும்பிவருவோம். கிருபானந்த வாரியார் போல், எம்பார் விஜயராகவாச்சாரியார் போல், கதை உபகதையென்று எங்கெங்கோ சுற்றினாலும், விஷயத்துக்கு வந்துவிடவேண்டும்! இரண்டாவதாக என் குடும்பச்சாவுக்கு நிகம்போத் போனது வயதான என்  தாயார் சிவகாமி இறந்தபோது  எல்லா நல்ல விஷயங்களையும் பார்த்து அனுபவித்து நிறைவாக எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்வோடு மறைந்ததால், அது எங்களுக்கு ஒரு கல்யாணச்சாவாகத்தான் இருந்தது.
தில்லியில் இன்னமும் பிரேத ஊர்வலங்கள் தனிமனிதனின் துக்கத்தை மதிக்கும் வகையில் அமைதியாகத்தான் நடைபெறுகின்றன. அமரர் ஊர்திக்குக்கூட வழியில்லாதவர்கள் மறைந்தவருக்கு ஓரிரு துலுக்கன் சாமந்தி   மாலைகளை அணிவித்து, உறவினர்களில் சிலர் மாறிமாறி   ‘ராம் நாம் ஸத்ய ஹை‘ என்று அவர்களுக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தூக்கிச்செல்வார்கள். சுமங்கலிப்பெண்களாக இருந்தால், சடலத்தை சிவப்புத்துணியால்   போர்த்துவார்கள்.  நிகம்போத் சுடுகாட்டுக்குப்போனவுடனே,பாடையை யமுனை படித்துறையில் ஒரு தரம் முக்கியெடுத்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட சிதையில் வைப்பார்கள். ஆனால் சென்னையில் சாவு எனும் தனிமனித துக்கத்தை ஒரு கொண்டாட்டமாகவே நிகழ்த்துகிறார்கள். பத்திரிகைகளில் பக்கம்பக்கமாக ‘கண்ணீர் அஞ்சலி’ விளம்பரங்கள், அவர் வாழ்ந்த பேட்டை முழுவதிலும், முடிந்தால் சென்னை மாநகர் முழுவதும் பெரிய இரு கண்களிலிருந்து குடம் குடமாகக்கொட்டும் ‘கண்ணீர் அஞ்சலி‘ போஸ்டர்கள், முக்கிய வீதிகளில், போக்கு வரத்தையே ஸ்தம்பிக்கச்செய்யும் பூஜோடனையுடனான ஊர்திகள், அதன் முன்னே ‘உள்ளே   போன குவார்ட்டர் அரைக்கு’ வஞ்சகமில்லாமல், தாரைதப்பட்டைகளின் ‘கல்யாணந்தான் கட்டீக்கிட்டு‘ மெட்டுக்கு சிம்பு ஆட்டம் ஆடும் இருபதுக்குக்குறையாத இளைஞர்கள், இவர்களை மேய்க்கவும், வேண்டிவந்தால், அவசரமாகப்போகும் ஆம்புலன்ஸையும் நிறுத்திவைக்கும் இரு டிராபிக் ‘தாதாக்கள்’, அடுத்தநாள் பார்த்தாலும் இந்தவழி ஒரு பிரேத   ஊர்வலம் போயிருக்கிறதென்பதை தெரிவிக்கும் மலர்த்தூவல்கள்…. இப்படி ஒரு தனிமனிதனின் துக்கத்தையும் பொதுஜனக்கொண்டாட்டமாகவே நிகழ்த்திவருகிறோம்! ஒரு சிறுமியின் ‘மஞ்சள் நீராட்டு விழா’வையே போஸ்டரடித்து ஊரறியக் கொண்டாடும் நாம் சாவை விட்டுவைப்போமா?
சில நெருங்கியநண்பர்கள் வீட்டுக்கல்யாணங்களைத்தவிர்த்திருக்கிறேன். ஆனால் சாவுச்செய்தி கேட்டு போகாமலிருந்ததில்லை. இப்போது நினைத்துப்பார்க்கும்போது, அறுபது எழுபதுகளில் ஒரு மாதத்தில் இருதடவைகள் கூட நிகம்போத் சுடுகாடு போயிருக்கிறேன்.  இருமாதங்கள் போகவில்லையென்றால், அடுத்ததடவை போகும்போது, ‘க்யா ஸாப்,பஹுத் தின்ஸே திக்காயி நஹீன் தியா?‘ [ஏன் உங்களை ரொம்பநாளாக்காணோம்?] என்று அங்குள்ள  வெட்டியான்கள் விசாரிக்கிற அளவுக்கு நான் அறிமுகமாகியிருந்தேன்! நான் போனால் அதிக நேரம் பிணத்துடன் காக்க வைக்காமல், எரியூட்டுமிடத்தை தயாராக வைத்திருப்பார்கள். ஆர்.கே.புரம், லோதி ரோடு, கால்காஜி என்று பக்கத்தில் சுடுகாடுகளிருந்தாலும், எல்லோரும் இந்தியாவிலேயே பெரிய சுடுகாடான நிகம்போத் சுடுகாட்டில் எரியூட்டுவதையே விரும்புவார்கள். பக்கத்தில் ஓடும் யமுனையாறு ஒரு முக்கியக்காரணம். அடுத்தநாள் அஸ்திச்சாம்பலை ஒரு படகில்போய் யமுனை நடுவே கரைப்பது எளிதாக இருந்தது. நிகம்போத் அருகிலேயே யமுனைநதிக்கரையில்,தேசப்பிதா மகாத்மா காந்தியிலிருந்து,   நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் உட்பட பல தலைவர்களும் நீங்காத்துயில் கொண்டிருப்பது இன்னொரு காரணம். அவர்கள் பக்கத்தில் இடம் கிடைப்பது எளிதா என்ன? அதனால் தான் நானும் என்னையறியாமலே எனக்குப்பழக்கமான நிகம்போதில் என் இடத்தைப் பதிவுசெய்து வைத்திருக்கிறேன் போலும்!
என் மாமியார் ராஜி இப்போதும் அடிக்கடி, ‘கடைசியா என் கையாலே ஹார்லிக்ஸ் சாப்பிட்டார். போயுட்டார்!’ என்று சொல்வதுண்டு. அதற்குப்பின் அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுக்கொடுத்ததில்லை! இது உண்மை!!
எழுபதுகளுக்குமேல் அடிக்கடி வெளிநாடுகள் போகவேண்டிய நிர்ப்பந்தம், வாழ்க்கை வசதிகளைப்பெருக்குவதிலிருந்த ஆர்வம் காரணமாக எனது நிகம்போத் விஜயம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. என்னதான் என் மனது நொண்டிச்சாக்கு சொன்னாலும், மே ஜூன் தில்லி வெயிலில் நான்குமணி நேரம் நிகம்போதில் ஓடியாடி வேலை செய்தவனுக்கு, இங்கே கண்ணம்மாப்பேட்டை வெயில் தாங்காது என்று வீடு திரும்பிவிட்டேன். அரசியல் மொழியில் சொன்னால், அப்போது தொண்டனாகவிருந்தவன்,இப்போது தலைவனாகிவிட்டேனா? சென்னை  வெயில் தாங்காமல் இப்போது ஏ.ஸி. குளிர் கேட்கிறது இது ஏன்? நான் மாறிக்கொண்டுவருகிறேனா? இல்லை என் வயதுதான் காரணமா?
இப்போது இந்தக்கட்டுரையின் முதல் பாராவை மறுபடியும் படித்துப்பாருங்கள். அந்த ‘லாவாரிஸ் பாபா‘வுக்கும் எனக்கும் சிறிதாவது ஒற்றுமை தெரிகிறதா?
‘உயிர்மை’ நவம்பர் 2007 இதழில் வெளிவந்தது

0 comments:

Post a Comment