Thursday, January 21, 2016

1991ம் ஆண்டு ஒரு நாள் தேசீய நாடகப்பள்ளி இயக்குநரிடமிருந்து தொலைபேசிச் செய்தி. பி.பி.சி.சானல் 4 இந்தியாவில் எடுக்கும் ஒரு ஆங்கிலப்படத்தில் நடிக்க விருப்பமென்றால் அவர்களை வந்து பார்க்கச் சொல்கிறேன் என்றார். நாடகம் மட்டுமே போதும் என்று நினைத்திருந்த காலத்தில் பசி துரை, காமிராமேன் கர்ணன், பாலச்சந்தர் போன்றோர் கூப்பிட்டபோது சினிமா வேண்டாமே என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் தில்லி தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் சில ஹிந்தி சீரியல்களில் நடித்ததால் கிடைத்த பொதுஜன அடையாளம் ஆச்சரியப்பட வைத்தது. கன்னாட்பிளேசில், என்னைத் தாண்டிப்போனவர் மறுபடியும் வந்து ‘நேற்று தஸ்வீர் கா தூஸ்ரி ருக்கில் நடித்தீர்களா?’ என்று கேட்பது, கரோல்பாகில் ஒரு கடையிலிருந்து போன் பண்ணிவிட்டு அதற்கான 25 பைசாவை கொடுக்கும்போது, மரியாதையுடன் மறுத்துவிட்டு, உங்களை நேற்று டி.வி.யில் பார்த்தேன் என்று கடைக்காரர் சொல்வது எல்லாம் எனக்குப் பெருமையாக இருந்தது. அதற்கு முன்னால் சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக தில்லிமேடையில் கரடியாகக்கத்தியும் நாடகம் பார்க்கும் ஒரு குறுகிய தமிழ்வட்டத்திற்கு மட்டுமே அறிமுகமாயிருந்தேன். இந்தப் பரந்த கண்டுணர்வு எனக்குப் பிடித்திருந்தது.
திரு.பாபி பேதி [பேடி அல்ல] என்பவர் என்னை வீட்டில் வந்து பார்த்தார். அவர் சர்தார்ஜி [சிங்]. இவருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தேன். எனது சிங் நண்பனொருவன் சொல்வான், “எங்க சர்தார்ஜிகளுக்கு ஒரே கல்ச்சர் தான். அது அக்ரிகல்ச்சர்’ என்று. ஆனால் இவர் பெரிய ஆள். லண்டன் பி.பி.சி. ஆசியப்பிரிவுத்தலைவர் ஃபரூக் டோண்டிக்கு அத்யந்த நண்பர். நான் நடித்தசுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்‘ நாடகத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். பிறகு என்.எஸ்.டி.யில் என் விலாசம் கிடைத்திருக்கிறது, இப்பொது இந்தியசினிமா உலகில் முக்கியமானவர்.
அமீர்கான் நடித்த மங்கள்   பாண்டே, பூலான் தேவியின் கதை ‘பாண்டிட் க்வீன்‘ தயாரிப்பாளர். இப்போது லண்டன், கான் [கேன்ஸ் அல்ல] திரைப்படவிழாக்களில் தென்படும் ஒரே சர்தார்ஜி! நான் தில்லியிலிருந்த வரை உலகத்திரைப்படவிழாவுக்கு டெலிகேட் பாஸ் வாங்கித்தருபவர். தூர்தர்ஷனுக்காக பெண் எழுத்தாளர்கள் மஹாஸ்வேதா தேவியிலிருந்து ஆர். சூடாமணி வரை 26 சிறுகதைகளைசீரியல்களாக் தயாரித்து இயக்கியவர். அவைகளில் நானும் நடித்திருக்கிறேன். இவரைப்பற்றி இது போதும்!
பி.பி.சி நிறுவனம் அருந்ததி ராய் கதை வசனம் எழுதிய ‘எலக்ட்ரிக் மூன்‘ என்ற ஆங்கிலப்படத்தை மத்யப்பிரதேசத்திலிருக்கும் பச்மடி என்கிற சுகவாசஸ்தலத்தில் 45 நாட்களுக்குள் எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார். பேதி தான் பி.பி.சி.யின் நிர்வாகத்தயாரிப்பாளர்.
இயக்குநர் பிரதீப் கிருஷன். இவர் மாஸ்ஸே ஸாஹிப் என்ற படத்துக்காக தேசீயவிருது பெற்றவர். அந்தப்படத்தில் அருந்ததி ஒரு படிப்பறிவில்லாத மலைவாழ் பெண்மணியாக வருவார். பாத்திரப்பொருத்தத்திற்காக சில மாதங்கள் அக்குள் மயிரை எடுக்காமலிருந்தாராம்! அப்போது அவரும் அருந்ததி ராயும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தனர். அருந்ததிக்கு புக்கர் பரிசு கிடைத்தபிறகு தான் மணம் புரிந்துகொண்டனர்.
1989ல் அருந்ததி ராய் ‘இன் விச் ஆன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ்‘ என்று வாயில் நுழையாத பெயருடைய ஒரு ஆங்கிலப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். இது பல திரைப்படவிழாக்களில் பரிசு பெற்றது. தூர்தர்ஷனில் பலமுறை காட்டபட்டது. ராய் தில்லி ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சரில் படித்தவர். இந்தப்படம் அங்கு படித்த சில மாணவர்களைப்பற்றியது. ஒரு விதத்தில் அவரது சுயசரிதமென்றெ சொல்லலாம். பலருக்கு இவர் என்.டீ.டி.வி.ப்ரணாய் ராய்க்கு ஒன்றுவிட்ட சகோதரியென்பது தெரியாமலிருக்கலாம். இன்னொரு கொசுறுச்செய்தி: அருந்ததி வளர்த்த நாயின் பெயர் ‘பட்டி’ [மலையாளத்தில் நாய்] !
வீட்டுக்கு வந்த பேதி, படத்தில் எனக்கு ஒரு தமிழ்ப்பட இயக்குநர் வேடம் என்றார். எனது ஒரே கண்டிஷன் படத்தில் வரும் தமிழ்ப்பாத்திரத்தை அடிக்கொரு ஐயய்யோ சொல்லி ஹிந்தி நடிகர் மெஹ்மூத் மாதிரி கோமாளியாக செய்யமாட்டேன் என்பதுதான். அப்படிச் செய்வதானால் பத்துநாள் உங்கள் விலாசத்துக்காக அலைந்திருக்கமட்டேன் என்பது அவர் பதில். என் பாத்திரத்துக்கு முதலில்  நண்பர் பி.வி.காரந்த்தை யோசித்ததாகவும், அவர் ஒல்லியாக இருப்பதால், புஷ்டியான என்னை தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னார். போகும்போது, என்னுடைய புகைப்படமும், என் படிப்பு, நாடக அனுபவங்களையும் கேட்டறிந்தார். என் சம்பளத்தைபற்றி நானும் கேட்கவில்லை அவரும் சொல்லவில்லை.
Electric Moon படப்பிடிப்பில் ரோஷன் சேத்,ஆங்கில மேக்கப்மேன், லீலா நாயுடு மற்றும் திரு. பாரதி மணி
ஒருவாரத்திற்குப்பிறகு, அவர்கள் ஆபீசிலிருந்து ஓர் ஆள் வந்து பெரிய பொட்டலத்தைக் கொடுத்தான். பிரித்துப்பார்த்தால், கவரிங் லெட்டரில், படம் ‘எலக்ட்ரிக் மூன்‘ லண்டன் புருடன்ஷியல் இன்சூரன்ஸ் கம்பெனியாரால் காப்பு செய்யப்பட்டிருக்கிறது, தவிர்க்கமுடியாத காரணங்களைத்தவிர்த்து 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடியவேண்டும், நான் இதில் கலந்துகொள்ள சம்மதித்ததில் அவர்களுக்கு சந்தோஷம்.என்று அதனுடன் ரூ.50,000.00க்கு அட்வான்ஸ் செக்.  [தமிழில் 40 படங்கள்வரை செய்திருந்தும் இதில் நான் வாங்கின ரூ.2.00 லட்சம் தான் இதுவரை என் அதிகபட்ச சம்பளம்!]  கூட ஸ்பைரல் பைண்டிங் செய்த பெரிய புத்தகம். அதில், படத்தின் ஒன்லைனர், பூரா கதை வசனம், எல்லா நடிகர்களின் கால்ஷீட் தேதிவாரியாக, டைரக்டர், காமிரமேன், மற்ற டெக்னிஷியன்கள், நான் உட்பட எல்லா நடிகர்களின் புகைப்படத்தோடு முன் அனுபவங்கள், முதல்நாள் காலையுணவிலிருந்து 45வது நாள்டின்னர் வரைக்கான மெனு, நடிகர்களின் பிக்கப் கார் விவரங்கள், தங்கும் ஹோட்டல், போன் நம்பர் விபரம், தினசரி ஷூட்டிங் ஷெட்யூல், லொக்கேஷன் விவரம், என்று படத்தின் பூரா ஜாதகமே அதில் இருந்தது.எல்லாமே ஷூட்டிங் போக ஒரு மாதத்திற்கு முந்தியே தயார். செட்டில் வந்து வசனம் எழுதும் இந்நாளில் இது நடந்தது 1991ம் ஆண்டில்! இதில் இன்னொரு புதுமை டைரக்டரைத்தவிர காமிராமேன், மேக்கப், ஸௌண்ட் இஞ்சினீர், கிளாப் பாய் உட்பட லண்டனிலிருந்து வந்திருந்தார்கள். காமிராவும் அங்கிருந்தே. நடுவில் காமிரா பழுதடைந்ததால், இன்சூரன்ஸ் கம்பெனி செலவில் இருவர் காமிராவோடு லண்டன் போய் மாற்று காமிரா கொண்டுவந்தார்கள். சென்னையிலும், பம்பாயிலும் அதற்கு மாற்று கிடைக்கவில்லை. நான்கு நாட்கள் பூரா யூனிட் செலவும் கம்பெனியதே. நானிதை விவரிக்கக்காரணம், டெக்னாலஜி வளர்ச்சியடைந்த இந்நாளிலும் சென்னை, பம்பாய் சினிமாத்துறையில் இது சாத்தியமில்லை. காரணம் பிரிட்டனில் சினிமாத்துறையை ஒரு தொழிற்துறையாக அங்கீகரித்திருக்கிறார்கள்
அடுத்த 45 நாட்களுக்கு இயற்கையழகு கொஞ்சும் பச்மடி ஊரே விழாக்கோலம் பூண்டது. ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் பார்த்துப்பார்த்து கட்டிய பங்களாக்கள், சர்ச்கள். எனக்கு அந்த ஊர் சிம்லாவை நினைவூட்டியது. மத்திய போலீஸ் அகாடெமி இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னால் இந்தியர்கள் ஊருக்குள் வரத் தடையிருந்ததாம். எம்.பி.டூரிஸம் ஹோட்டல்கள் அனைத்தையும் புக் செய்திருந்தார்கள்.
லீலா நாயுடு
பிரிட்டனிலிருந்து அரை டஜன் நடிகநடிகைகள், பிரான்ஸிலிருந்து அரை டஜன். நேருவாக நடித்த ரோஷன் சேத், நஸீருதீன் ஷா, அலிக் பதம்ஸீ, அமுல் விளம்பரத்தின் தந்தையான ஜெர்ஸன் டிகுன்னா, உலக அழகிகள் ஐவரில் ஒருவராகக் கருதப்பட்ட லீலா நாயுடுவுடன் அவர் கணவர் பிரபல எழுத்தாளர் டாம் மோரியஸ், ரகுபீர் யாதவ் யாவரும் ஒரு ஹோட்டலில் தங்கினோம். என் ரூம் மேட் ரோஷன் சேத். நாடகப்பள்ளியில் இவர் எனக்கு வகுப்பு நடத்தியிருக்கிறார். தில்லியிலிருந்து க்ரேட் க்ரேட்டாக விஸ்கி, சோடாமேக்கர் ச்கிதம் போயிருந்தேன். அப்போது நான் ஒரு குடிமகனாக இருந்தேன். மாலை வேளைகளில் என் அறை தான் அறிவிக்கப்படாத ‘பார்‘. எல்லோரும் வந்துவிடுவார்கள். உரையாடல்கள் நாடகத்தைச்சுற்றியே இருக்கும். அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.
படப்பிடிப்புக்கு தினமும் வெவ்வேறு தொப்பிகள் அணிந்து வருவார். திடீரென ‘மணிசாப்’ என்ற சப்தம் கேட்கும்.   பார்த்தால் ஏதாவது  மரத்தின் மேல் உட்கார்ந்திருப்பார். அப்போது அவர் பிற்காலத்தில் புக்கர் பரிசு வாங்குவாரென்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். அவரே கூட நினைத்ததில்லை. படப்பிடிப்புக்கு ஒளி உபகரணங்கள், க்ரேன் முதலியவை சென்னை ஆனந்த் சினி சர்வீஸ் அனுப்பியது. அந்தக்குழுவில் வந்திருந்தவர்கள் ஒரு வாரத்திற்குப்பிறகு, என்னிடம் வந்து, ‘சார், தினம் தினம் ரொட்டி தின்னு அலுத்துவிட்டது. எங்களுக்கு சாதம்,  சாம்பார் ஏற்பாடு செய்யுங்கள்’ என்று முறையிட்டார்கள். அடுத்தநாளிலிருந்து அவர்களுக்கு தென்னிந்திய உணவு பரிமாறப்பட்டது. காமிரா பழுதானதைத்தவிர மொத்தப் படப்பிடிப்பும் 44 நாட்களுக்குள் முடிந்துவிட்டது. ஷூட்டிங் முடிந்து தில்லி திரும்பியதும், வீட்டில் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. எனக்கே  என்னைக் கண்ணாடியில் பார்க்க பயம்! அந்த அளவுக்கு உடல் கறுத்துவிட்டது. மலைப் பிரதேச குளிர்கால வெயில் எங்களைத் தாரில் குளுப்பாட்டிவிட்டது.
கருப்புத்தான் எனக்குப்புடிச்ச கலரூ’ என்று பாடவில்லை. காரணம் சேரன் படம் பிறகுதான் வெளியானது!
இந்தபடத்தின் ‘போஸ்ட் புரொடக்ஷன்’ வேலை லண்டனில் நடந்தது. ‘காந்தி‘ பட இயக்குநர் ஸர். ரிச்சேர்ட் ஆட்டன்பரோ படத்தொகுப்பு வேலையை முடித்தாராம்.
தேசீய  திரைப்பட விருதுக்கமிட்டி எலக்ட்ரிக் மூன் படத்தை ‘இந்தியாவில் தயாரித்த சிறந்த ஆங்கிலப்படமாக’த் தேர்வு செய்தது.  மொத்த படக்குழுவினருக்கும் என்.டீ.டி.வி. [அப்போது ஸ்டார் டி.வி.] பிரணாய் ராய் தன் வீட்டில் பெரிய விருந்து வைத்தார்.
எனது நண்பர் எடிட்டர் லெனின் அடிக்கடி சொல்வார், ‘மணிசார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும் அந்தப்படத்துக்கு   தேசீயவிருது நிச்சயம்’ என்று. நினைத்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மை தான்! என் முதல் ஆங்கிலப்படத்திற்கே விருது. எலக்ட்ரிக் மூனைத்தவிர, எனக்கு தமிழில் முதல்  படமான பாரதி, ஊருக்கு நூறுபேர், மொட்டுக்கா, றெக்கை, ஒருத்தி, நண்பா நண்பா, ஆட்டோகிராப், அன்னியன் என்று பட்டியல்  நீண்டுகொண்டே போகிறது. நல்லபடம் எடுக்கும் இயக்குநர்கள் கவனிப்பார்களாக!
‘உயிர்மை’ அக்டோபர் 2007-ல் வெளிவந்தது.

0 comments:

Post a Comment