Friday, January 22, 2016

டிசம்பர் 1-ம் தேதி சென்னையில் நடந்த உயிர்மை 100-வது இதழ் வெளியீடும், சீனு ராமசாமியின் காற்றால் நடந்தேன் கவிதைத்தொகுப்பு வெளியீடும் ஒரே விழாவாக இனிதே நடந்தேறியது.
உயிர்மை 100-வது இதழை வெளியிட்டுப்பேசிய மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அதிக நேரம் உட்காரமுடியாதென்ற காரணத்தால் உடனே வீட்டுக்குப் போய்விட்டார். அடுத்தநாள் என்னை தொலைபேசியில் அழைத்து, உயிர்மை 100-வது இதழில் வந்திருந்த எனது கட்டுரையை சிலாகித்துப் பேசிவிட்டு, தான் போனபிறகு, விழாவில் யாரெல்லாம் என்ன பேசினார்கள் என விசாரித்தார். என் பங்குக்கு நான் ‘சீனு ராமசாமியின் கவிதைத் தொகுப்பைப்பற்றி பேச வந்த நடிகர் விவேக் உங்கள் பெயரை தவறாக இந்திரா செளந்தர்ராஜன் என்று சொல்லிவிட்டு, உடனே தவறைப் புரிந்து கொண்டு, இந்திரா பார்த்தசாரதி என்று திருத்திக்கொண்டார்’ என்று ‘போட்டுக்கொடுத்தேன்’! இதைக்கேட்ட இ.பா. கொஞ்சமும் வருத்தமில்லாமல், ‘என் பெயர் ராசி அப்படி! அந்தக்காலத்தில் நா. பார்த்தசாரதியும், இப்போது இந்திரா செளந்தர்ராஜனும் தான் என் எதிரிகள்!’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு இரு சம்பவங்களை நினைவு கூர்ந்தார்:
முன்பொரு சமயம் இ.பா.வும், நா.பா.வும் பம்பாய் தமிழ்ச்சங்கத்தாரால் ஒரு விழாவுக்கு அழைக்கப்பட்டு, பம்பாய் போயிருந்தனர். அங்கே அவர்கள் பேசப்போகும் ஒரு நிகழ்ச்சியில், பார்வையாளராக வந்திருந்த வாசகர் ஒருவர் மேடையேறி, வலுக்கட்டாயமாக இந்திரா பார்த்தசாரதியின் வலது கையைப்பிடித்து, விரலில் ஒரு புது மோதிரத்தை போட்டுவிட்டு, ‘சார்! இது ‘குறிஞ்சி மலர்’ எழுதிய கைக்கு!’ என்று சொல்லி கும்பிட்டாராம். திகைப்படைந்த இ.பா. மோதிரத்தை கழட்டி அவர் கையில் கொடுத்து, குறிஞ்சி மலர்’ எழுதிய கை அவர்ட்டே தான் இருக்கு!’ என்று நா.பா.வை கை காட்டினாராம்!
ஒருமுறை இ.பா. கும்பகோணம் போயிருந்தபோது, கலை விமர்சகர் தேனுகா இவரை தெருவில் பார்த்ததும், பக்கத்திலிருந்த, தான் வேலை பார்க்கும் வங்கிக்கு அழைத்துப் போய், தனது வங்கி மானேஜருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மானேஜர் மிகுந்த மகிழ்ச்சியோடு, மாலை வாங்கிவரச்செய்து, மரியாதை செய்துவிட்டு, ‘சார்! என் மனைவி உங்களோடெ பெரிய விசிறி! உங்க கதையெல்லாம் விழுந்து விழுந்து படிப்பா!…..நீங்க அவசியம் நம்ம வீட்டுக்கு வரணும். அவ ரொம்ப சந்தோஷப்படுவா!’ என்று இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்துக்குப்போன இ.பா.வுக்கு ராஜ உபசாரம். வடை பாயசத்துடன் சமைத்திருந்தார் மானேஜர் மனைவி. ‘சார்! உங்க சிறுகதை, நாவல், மாதாந்திர ராணி எல்லாம் ஒண்ணு விடாமெ படிச்சிருக்கேன். ‘மர்ம தேசம்சீரியல் வந்தால், டி.வி.யை விட்டு நகரமாட்டேன்!’ என்றதும் தான் இ.பா.வுக்கு ஓஹோ…. இது ராங் நம்பர் என்பது புரிந்தது. ‘அம்மா! அவர் வேறே……நான் வேறே…….நீங்க சமைச்சு வச்சது இந்திரா செளந்தர்ராஜனுக்கு….இப்போ அவர் எங்கே இருக்கார்னு எனக்குத்தெரியாது. எம்பேர் இந்திரா பார்த்தசாரதி. நானும் ஒரு எழுத்தாளன் தான்! எனக்கு சாப்பாடு உண்டா….இல்லியா?’ என்று அவருக்கே உரிய நக்கலோடு கேட்டிருக்கிறார்!
—-oooo0000oooo—-
பாரதி மணி

0 comments:

Post a Comment