Friday, January 22, 2016

முந்தாநேற்று தில்லி வந்துசேர்ந்தேன். பல வருடங்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த தில்லிக்குளிரை அனுபவித்து, ரசித்துவிட்டுத்திரும்பலாமே என்று ஓர் ஆசை. வந்த அன்று மனுஷ்ய புத்திரனிடமிருந்து ஒரு போன் கால்: ’சார்! மார்ச் இதழுக்கு உங்களிடமிருந்து ஒரு கட்டுரை எதிர்பார்க்கிறேன். 20-ம் தேதிக்குள்ளே அனுப்பிடுங்க!’ என்றார். ‘என்னையும் ஒரு எழுத்தாளனாக நினைத்து, உயிர்மைஆசிரியர் என்னிடம் கட்டுரை கேட்பது மனசுக்கு சந்தோஷமாகத் தானிருக்கிறது. ஆனா எதைப்பற்றியும் எழுத உந்துதல் இல்லை’……யென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு. நான் எதிர்பார்க்கிறேன்……. அனுப்பிருங்க’ என்று சொல்லி போனை வைத்துவிட்டு சிங்கப்பூர் கிளம்பிவிட்டார்!. சரி! ஆசிரியர் பெருமான் சொன்னால் தட்டமுடியாது……எதைப்பற்றி எழுதலாமென்று யோசித்தபோது, வருஷக்கணக்கில் ரசித்து, அனுபவித்த தில்லிக்குளிரைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே….அதைக்குறித்து எழுதலாமென்று தோன்றியது.
நான் படித்துக்கொண்டிருக்கும் Lonely Planet publications வெளியிட்டிருக்கும் Delhiஎன்ற புத்தகத்தில் தில்லியின் பருவநிலையைப்பற்றி வெள்ளைக்காரன் இப்படி எழுதியிருக்கிறான்: One of Delhi’s drawbacks is that more than half the year, the climate is lousy! April is the build-up to the furnace heat of summer, with temperatures around 38 Degrees. May and June are intolerable, with daily temperatures well in excess of 45 degrees – roads start to melt, birds drop out of the sky and quite a few people also fail to last the distance!   இந்தியாவுக்கு குளிர்மாதங்கள் நவம்பரிலிருந்து மார்ச் வரை மட்டுமே வாருங்கள் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பயமுறுத்துகிறான்!
தில்லிக்குளிரை ஒரு தடவையாவது அனுபவித்திராத தமிழக மக்களுக்கு அதை விளக்கிச்சொல்வது கடினம். தமிழர்களுக்கு தில்லி குளிர் பாட்டன் என்றால், ஐரோப்பியக்குளிர் கொள்ளுப்பாட்டன் தான்! ‘என்ன பெரிய குளிர்? நான் பாக்காத குளிரா?’ என்று ஒரு ஸ்வெட்டர் கூட கையில் இல்லாமல் தில்லி வந்திறங்கும் தமிழ் எழுத்தாளர்களையும், சங்கீத வித்வான்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். ஒரு சங்கீத வித்வான் வெறும் வேட்டி சட்டையோடு தில்லி வந்துவிட்டு, ‘அம்மாடியோவ்! என்ன குளிர்யா இது? ஒவ்வொரு தடவையும் ஒண்ணுக்கு போறதுக்கு, ‘அதை’ தேடவேண்டியிருக்கு!’ என்று அலுத்துக்கொண்டிருக்கிறார். இவர்களுக்கென்றே ஐ.என்.ஏ. மார்க்கெட்டில் சீப்பாக பத்து ஸ்வெட்டர் வாங்கி வைத்துவிடுவேன். சமீபத்தில் சந்தித்த ஓர் எழுத்தாளர், ‘மணி சார்! தில்லி வந்தப்பொ நீங்க வாங்கிக்கொடுத்த ஸ்வெட்டரை இன்னும் வச்சிருக்கேன்’ என்று சொன்னபோது சந்தோஷமாகத்தான் இருந்தது.
எல்லா வருடங்களும் நான் தில்லியில் கேட்கும் வார்த்தைகள்: இந்த வருஷம் தில்லிக்குளிர் ரொம்பக்கொடுமை…..வாட்டியெடுத்திருச்சி!’. எத்தனை வருடங்கள் கேட்டும் சலிக்காத வார்த்தைகள்!
1955-ல் நான் தில்லியில் முதல் குளிரை அனுபவித்தேன். பார்வதிபுரம் கிராமத்திலிருந்து தில்லி போனவனுக்கு குளிரில் தேங்காயெண்ணெய் உறைந்துபோய் கத்தியால் வெட்டியெடுப்பது முதல் அனுபவமாக இருந்தது. அக்டோபரில்மாலைவேளைகளில் ‘ராத் கீ ராணி’யின் வாசனையுடன் குளிர் காற்று இதமாக வீசத்தொடங்கும். வழக்கமாக நவராத்திரி கொலுவை பெரிய அளவில் வைக்கும் அக்கா வீட்டில் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ரஜாய்/ஸ்வெட்டர் இருக்கும்  பெட்டிகள் எல்லாம் பத்துநாட்கள் கொலுப்படிகளாக உருவெடுத்துவிடும். குளிர் தான் வரவில்லையே…ஸ்வெட்டர் தேவைப்படாது என்று வைத்துவிடுவோம். நவராத்திரி நடுவில் நாலாம் ஐந்தாம் நாள் சின்ன மழை பெய்து குளிரைக்கிளப்பிவிடும். ஆபத்துக்கு பாவமில்லையென்று பொம்மைகள் வைத்திருக்கும் படிப்பலகைகளை உயர்த்தி, ஒருவிதமாக ஆளுக்கொரு ஸ்வெட்டரை பெட்டிகளிலிருந்து உருவிக்கொண்டதும் உண்டு! .முதல் குளிருக்கு ஸ்வெட்டர், கோட்டு, சூட்டு எதுவும் வாங்கவில்லை. என் அத்தானின் பழைய ஸ்வெட்டர்களையும், ஒரு பழைய Suit-ஐயும் வைத்து குளிரை தள்ளிவிட்டேன். அத்தான் தந்த Double-breast Suit அரதப்பழசு. உள்ளேயிருக்கும்lingings இற்றுப்போனது. கையை உள்ளே நுழைத்தால், லைனிங்ஸ் இடையே கை சிக்கிகொண்டு வெளியே வராது. இடதுகை ஒழுங்காக வந்துவிட்டால், வலதுகை உள்ளே மாட்டிக்கொள்ளும் அபாயம் உண்டு! அதற்கு தனியாக பிரார்த்தனை செய்யவேண்டும். .
அடுத்தவருடம் புதிதாக ஒரு சூட் தைத்துக்கொள்வது என்று தீர்மானித்து, என்னுடன் பாரத் எலக்ட்ரானிக்ஸ் தில்லி ஆபீசில் வேலை பார்த்துவந்த சர்தார்ஜி அம்ரீக் சிங்கிடம் சொன்னேன். கரோல்பாகில் தனக்குப்பரிசயமான Karolbagh Tailors-க்கு அழைத்துச்சென்றார். Raymond Suit length துணியோடு தையற்கூலி உட்பட ரூ. 250/-மட்டுமே. அதை ரூ.50 வட்டியில்லாத்தவணைகளாக ஐந்து மாதங்கள் பத்தாம் தேதிக்குள் கொடுக்கவேண்டும்.  அம்ரீக் சிங் எனக்கு காரண்டி அல்லது காரன்ட்டர்! (ஆமாம்…இப்போது ஒரு ஸூட் தைக்க எத்தனை ரூபாய் ஆகிறது?) அதன் பிறகு லண்டனிலும், சிங்கப்பூரிலும் காலையில் அளவு கொடுத்து, மாலை டெலிவரியான பல சூட்கள் வந்தாலும், என்முதல் சூட் பத்திரமாக என் அலமாரியில் இருந்தது……அதை என் பிர்லா ஆபீஸ் பியூன் ராதே ஷ்யாமுக்கு தானம் கொடுக்கும் வரை!
தில்லியில் முதல் வின்ட்டருக்கு வெந்நீரில் தான் குளித்தேன். நேதாஜி நகரில் எங்கள் வீட்டுக்கு எதிர்த்த ப்ளாக்கில் அத்தானின் நண்பர் வெங்கடாசலம் குடியிருந்தார். காலைவேளைகளில் அவர் வீட்டிலிருந்து ஊ…வ்வ்…ஆ,…வ்…..ஸ்….ஸ்…..ஸோஒ….ஓஒ…சூஊஊ என்றெல்லாம் சப்தம் வரும். கொலை ஏதாவது நடக்கிறதோவென்ற சந்தேகமும் சிலருக்கு வரலாம். சப்தம் அடங்கிய பிறகு, ஓர் கரிய உருவம் இடுப்பில் துண்டோடு பாத்ரூமிலிருந்து ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது ஐயர்வாள் தினமும் பச்சைத்தண்ணீரில் குளிக்கிறார் என்பது.  அவர்நாற்பதுகளில் தில்லி வந்ததிலிருந்து குளிரோ சம்மரோ, பச்சைத்தண்ணி குளியல் தானாம். எனக்கும் ஒருநாள் ஞானோதயம் வந்தது: ‘நாற்பது வயது சம்சாரி பச்சைத்தண்ணீரில் குளிக்கமுடியுமென்றால், பத்தொன்பது வயது பாலகன் ஏன் முயற்சிக்கக்கூடாது?’ என்று. அடுத்தநாளிலிருந்து நானும் பச்சைத்தண்ணீர் குளியல் தான்….ஆனால் அவரது ஊ…வ்வ்…ஆ,…வ்….. ஸ்….ஸ்…..ஸோஒ….ஓஒ…சூஊஊ ரீரிக்கார்டிங் சவுண்டு இல்லாமல் என்னால் மெளனமாக குளிக்கமுடிந்தது. தில்லியில் இருந்ததுவரை எல்லா தீபாவளி விடியற்காலைகளில் மட்டும் தான் வெந்நீர். வெந்நீர் அடுப்பு மாறி பாத்ரூமில் கீஸர் வசதி வந்தபிறகும் கூட எனக்கு பச்சைத்தண்ணீர் தான். ஒரு வைத்ய சிரோமணி என்னைப்பார்த்து, ‘இந்த எழுபத்தைந்தாண்டுகளில் நீங்கள் ஆரோக்யமான உடலும் மனமும் கொண்டு வாழ முக்கிய காரணம் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பச்சைத்தண்ணீரில் குளித்ததால் தான்!’ என்று சொன்னபோது, நான் மெளனமாக தலையாட்டினேன். அந்த சுகம் குளித்துப்பார்த்தால் தான் தெரியும்!
குளிர் வரப்போவதற்கு முன்னாலேயே ராஜஸ்தானி ரஜாய் தைப்பவர்கள் கையில் வில்லுடன், டொய்ங்..டொய்ங் என்று மீட்டிக்கொண்டு போவார்கள். இப்போதைய தில்லி வாசிகளுக்கு ‘வாளி அடுப்பு’ என்றால் தெரியுமா? நிச்சயமாகத்தெரியாது. காஸ் சிலிண்டர், நூதன் ஸ்டவ் போன்றவை வருமுன் தில்லியில் சமையல்/வெந்நீர் போட நிலக்கரியில் எரியும் வாளி அடுப்பு தான். எல்லோர் வீட்டிலும் சிறிய பெரிய சைஸ்களில் ஓரிரண்டு அடுப்புகள் இருக்கும். தகர வாளியில் ஒருபக்கம் காற்று போக அரைவட்டத்தில் ஒரு துவாரம் இருக்கும். மேற்பகுதியில் மூன்று குமிழ்வைத்து களிமண்ணால் பூசிவிடுவார்கள். நடுவில் நிலக்கரி தங்கவும், சாம்பல் கீழேபோகவும் ஒரு பில்டர் இருக்கும். ஒரு அடுப்பு ரூ. பத்துக்கு வாங்கக்கிடைக்கும்.   நிலக்கரி லேசில் எரியாது. ஆரம்பத்தில் மரக்கரியில் (Charcoal) பற்றவைத்து பிறகு நிலக்கரி போடவேண்டும். வீடெல்லாம் ஒரே புகையாக இருக்கும். அதனால் வாளியை வீட்டுக்கு வெளியில் நன்றாக எரியும் வரை வைத்திருப்பார்கள். பற்றிக்கொண்டால், பகபகவென்று எரியும். வெந்நீருக்கு பெரிய வாளி அடுப்பு. தில்லியில் பிறந்து வளர்ந்த என் மகளே வாளி அடுப்பைப்பார்த்ததில்லை!
இப்போது தில்லி இல்லத்தரசிகள் சுத்தமாக மறந்துவிட்ட இன்னொரு கலை ‘ஸ்வெட்டர் பின்னுதல்’ என் அக்கா கீழ்வீட்டு தனேஜா ஆன்ட்டியிடம் கற்றுக்கொண்டு, சரோஜினி மார்க்கெட் போய் Oswal, Raymond என்று விதவிதமான கலர்களில் லுதியானாவில் தயாராகிவரும் கம்பளி நூல்கண்டுகள் வாங்கி வந்து ஒரு சுபதினத்தில் ஆரம்பிப்பார். ‘மேலே வர வர, ரெண்டு ரெண்டு கண்ணியா குறைக்கணும்….கழுத்துக்கு 2,4,6,8 என்று மாத்தி மாத்திப்போடணும்’ இப்படியெல்லாம் பேச்சு காதில் விழும். தனேஜா ஆன்ட்டி கைகளால் 5 நாளில் உருவாகும் ஸ்வெட்டர் அக்கா கைகளில் 20 நாட்களில் உருவாகும். தினமும் நான் ஆபீசிலிருந்து வந்ததும், அன்றுவரை போட்டதை என் மேல் வைத்துப்பார்ப்பார். நேற்றிருந்ததை விட ஒரு இஞ்ச் கூடியிருக்கும். ஸ்வெட்டர் தயாராகி, ‘இத போட்டுப்பாருடா’ எனும்போது, அக்கா முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இன்னும் என்னிடம் அக்கா எனக்காக பின்னிய பழைய ஸ்வெட்டர்கள் உண்டு…அன்புக்கும் பாசத்துக்கும் சாட்சியாக! பஸ்ஸில், அலுவலகத்தில்…இப்படி எங்கேயும் தில்லி பெண்கள் நூலும் ஊசியுமாகவே இருப்பார்கள். இப்போது அதற்கெல்லாம் அவர்களிடம் நேரம் இல்லை. ‘காசை விட்டெறிந்தா…கடையிலே விதவிதமா இருக்கு. இதுக்கெல்லாம் யாரு டைம் வேஸ்ட் பண்ணுவது?
இம்மாதங்களில், தில்லி அரசு காரியாலயங்களில் வருடத்தின் எல்லா மாதங்களையும் போலவே வேலை மந்தமாக இருக்கும். அரைமணி நேரம் லேட்டாக, இரு கைகளையும் அழுந்த தேய்த்து, சிகரெட் இல்லாமலே புகைவரும் வாயால் ஊதிக்கொண்டு ஆபீசுக்குள் நுழையும் அலுவலர், ஆஜ் பஹுத் டண்ட் ஹை.  ட்ராபிக் ஜாம் மே ஃபஸ் கயா’ என்று சொல்லிக்கொண்டே ரிஜிஸ்தரில் கையெழுத்துப்போடுவார். ஏக் சாய் ஹோ ஜாயேஎன்று இருப்பவர்களையும் டீ சாப்பிட இழுத்துச்செல்வார். ஆபீஸ் கான்ட்டீனில் இன்றுபனீர் பக்கோடா ஸ்பெஷல். குளிர் காலங்களில் இருக்கையில் ஆள் இல்லாவிட்டால், ‘சாய் பீனே கயா’ என்று பக்கத்து சீட்டு பதில் அதிகாரபூர்வமாக கருதப்படும். இந்தக்குளிருக்கு பத்துத்தடவை சுடச்சுட சாய் சாப்பிடவில்லையானால், உடம்பு என்னாகிறது? மதிய உணவுக்குப்பிறகு, அருகிலிருக்கும் புல்வெளியிலோ, பட்டேல் செளக்கிலோ, Poor Man’s Dryfruit என்று அறியப்படும் வேர்க்கடலையை தோ ஸெள கிராம் வாங்கி,  மத்தியான இளம் வெயிலில், நிதானமாக உடைத்து, தோல் நீக்கி சாப்பிட்டபின்னர் தான் ஆபீஸ் பிரவேசம். பெண் அலுவலர் கையில் கம்பளி நூல்கண்டும், இரு ஸ்வெட்டர் ஊசிகளும் இருந்தாகவேண்டும்.
தில்லி தன் குளிர்காலத்தை கொண்டாடத்தவறியதே இல்லை. தில்லியின் கலாச்சார மாதங்கள்….அக்டோபரில் தசரா, ராம்லீலா, விஜயதசமியில் தொடங்கி, தீபாவளி, நவம்பரில் ப்ரகதி மைதானில் நடைபெறும் Indian Trade Fair, Christmas, New Year Day, மெஹ்ரோலியில் நடக்கும் Phulwalon Ki Sair, சாகித்ய அகாதெமி நடத்தும் விருதுவிழா, சங்கீத நாடக அகாதெமி நடத்தும் இசை, நாட்டிய நாடகவிழா, தேசிய நாடகப்பள்ளி நடத்தும் நாடகவிழா,, ஸ்ரீ சங்கர் லால் இசைவிழா, Delhi Book Fair, ITC Sangeet Sammelan, Film Awards Function, நமது பொங்கலுக்கிணையான பஞ்சாபிகளின் Baisakhi-யும், அதையொட்டிய Bangra Festival-ம், ’பத்ம’ விருதளிக்கும் விழா, குடியரசுதின விழா, பீட்டிங் ரெட்ரீட், சூரஜ்குண்ட் மேளா, வஸந்த் பஞ்சமியன்று திறக்கப்படும், ராஷ்டிரபதி பவன் மொகல் கார்டன்ஸ், இப்படியாக ஹோலியும் கொண்டாடி, குளிரை சிவ,சிவ என்று வழியனுப்புவார்கள். போதும் போதாததற்கு தில்லிவாழ் தமிழர்கள், பெங்காளிகள், மராத்தியர் போன்றவர்கள் நடத்தும் இசை, நாடக விழாக்கள், எங்கள்D.B.N.S. உயிர்ப்போடு இருந்த அறுபது, எழுபதுகளில் நாங்கள் நடத்தும் 5 நாள் நாடகவிழா என்று ஒரே கோலாகலம் தான்!
குளிரைப்பற்றி சொல்லிவிட்டு,  முட்டாள்களின் பண்டிகையான ஹோலியைப்பற்றியும் சொல்லியாகவேண்டும். தில்லியில் ஹோலியை ஒட்டி ’முட்டாள்களின் சம்மேளனம்’ நடக்கும். அதில் ஹாஸ்ய கவிகள் கவிதைகள் படிப்பார்கள். சிறந்தவர்களுக்கு மஹா மூர்க் (மகா முட்டாள்) விருதும் வழங்கப்படும். ‘ஹோலியன்று ’மயங்காதவன்’ மனிதனே அல்ல!’ Bhang கலந்த பானகமும், இனிப்புகளும் வழங்கப்படும். ஒவ்வொரு காலனியிலும் மதிய உணவுக்கு Community Kitchen ஏற்பாடு செய்துவிடுவார்கள். அன்று வரை நம்மிடம் பேசாத நம் அயல்வீட்டினர் அன்று நம் வீட்டுக்கு வந்து 2 பெக் அடித்துவிட்டுப் போவார்கள். இப்படி மண்டகப்படியாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று 2 பெக் போடவேண்டும். ஒருவனது ‘குடிக்கும் திறன்’ என்ன என்பதை ஹோலி தீர்மானித்துவிடும். ஆளே அடையாளம் தெரியாமல் முகத்தில் வர்ணக்கலவைகள்! சந்தோஷமான நாட்கள்!
இத்தனை கோலாகலத்துக்கிடையே, தில்லி குளிருக்கு ஒரு சோகமான முகமும் உண்டு. தில்லி நடைபாதையில் குடியிருப்பவர்கள், ரிக்‌ஷாக்காரர்கள் இரவெல்லாம் நடைபாதையில் ஒரு போர்வை கூட இல்லாமல், நடுக்கும் குளிரில் வருடாவருடம்நூறுக்கும் குறையாமல் பலியாகிறார்கள். இவர்களுக்கு கிடைக்காத ஸ்வெட்டரும், கம்பளி உறைகளும் மாட்டிக்கொண்டு, அதிகாலை வாக் போகும் நாய்களைக்கண்டால் மனதை என்னவோ செய்கிறது. ராதா ரமண் காலத்திலிருந்து இப்போதைய ஷீலா தீக்ஷித் வரை எத்தனையோ முதலமைச்சர்களாலும் இதற்கு ஒரு வழி பிறக்கவில்லை!   அரசு ஏற்பாடு செய்திருக்கும் Night Shelters காலியாக இருக்கிறது. அவர்கள் சொல்லும் காரணம்: ‘எங்களிடம் இருக்கும் ஒரே சொத்தான போர்வையையும், ரேஷன் கார்டையும் இரவில் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள்’. இந்த ஏழைகளிடம் திருடும் நல்லவர்களை நாம் என்ன செய்யலாம்?
Carrot halwa
குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் Gaajar Ka Halwaவுக்காக கரோல்பாக் வரை நடந்தே போகலாம். இரவு வேளைகளில் அடுப்பில் குறுகிக்குறுகி காய்ந்து கொண்டிருக்கும் சந்தனக்கலரில் பால்.  400 மி.லி பிடிக்கும் லோட்டாவில் ஓர் இஞ்ச் கனமுள்ள மலாய் மிதக்கும் பால்….. அமிர்தம் என்று வேறில்லை! பஞ்சாபிகளின் தாரக மந்திரம் ‘Khao….Piyo….Aash Karo! On drop of a hat, காரணமே இல்லாமல் வீட்டில் (தண்ணி) பார்ட்டி வாரம் ஏழு நாளும் கொண்டாடத் தயாராக இருப்பார்கள்.
milagaai bajji 3bajji 1cauliflower bajji
மாடிவீட்டில் குடியிருந்த சுஷ்மா டம்டா மலைப்பிரதேசமான Almora-வைச்சேர்ந்தவர். குளிர் மாதங்களில் நாலு தூறல் போட்டாலே, குளிருக்கு இதமாக, சுடச்சுட Cheese, Cauliflower, உருளை, வாழைக்காய், மிளகாய், பாவக்காய் எல்லாவற்றிலும் ஒரு வண்டி பஜ்ஜி – இங்கே அதற்குப்பெயர் பக்கோடா தான் – செய்து தட்டு நிறைய என் வீட்டுக்கு அனுப்புவார். என் மகள் அனுஷா மதிய வேளைகளில், ’அப்பா! இன்னிக்கு நல்ல மழை பேஞ்சு குளிரா இருக்கே…….சுஷ்மா ஆன்ட்டி இன்னும் கூப்பிடலியே?’ எனும்போதே சொல்லிவைத்தாற்போல் மாடியிலிருந்து, ‘அனுஷா பேட்டீ…….ஏக் மினிட் ஊபர் ஆவோ….’என்ற குரல் கேட்கும்! எங்கே போனார்கள் இந்த நல்லவர்களெல்லாம்?
இந்த வருடமும் தில்லியில் குளிர் வாட்டி எடுத்துவிட்டது. மினிமம் ஐந்துடிகிரியைத்தொட்டது. பிப்ரவரி மாதமும் குளிர் குறைந்தபாடில்லை. இந்தவருடம் பச்சைத்தண்ணீரில் குளிக்க என் மகள் அனுமதி தர மறுத்துவிட்டாள். எனக்குஎழுபத்தைந்து வயதாகிறதாம். உண்மை தானே! வெந்நீர்க்குளியலும் சுகமாகத்தானிருக்கிறது!
சென்னை திரும்ப தமிழ்நாடு எக்ஸ்பிரசில் ஏறி உட்கார்ந்தபோது, எதிர் சீட் பயணி லக்கேஜை சீட்டுக்கடியில் வைத்தவாறே, ‘இந்த வருஷம் தில்லிக்குளிர் ரொம்பக்கொடுமை…..வாட்டியெடுத்திருச்சி!’ என்று பேச்சை ஆரம்பித்தார். எத்தனை வருடங்கள் கேட்டும் சலிக்காத வார்த்தைகள்!
—000ooo000—
உயிர்மை மார்ச் 2012 இதழில் வெளியான கட்டுரை

2 comments:

  1. உங்கள் சீடர் சகா வின் பிளாக்கில் உங்கள் பல நேரங்களில் பல மனிதர்கள் பற்றி அவர் எழுதி இருந்த்து வாசித்து சமீபத்தில் அதனை வாசித்தேன், மிக அருமை, பின்னர் உங்கள் தொடர்ந்து வசித்து வருகிறேன், அடியேன் இலஙகை கண்டியை சேர்ந்தவன், பூர்விகம் , சிவகங்கை மாவட்டம் . 140 ஆண்டுகளுக்கு முன்னர் முத்தையா தேவர் கண்டிக்கு குடி பெயர்ந்ததால் , நான் அங்கே , இப்போ இருப்பது நோர்வேயில், என்னை போனறவர்களுக்கு , தமிழகத்துடனான தொடர்பு உங்கள் எழுத்துக்கள் தான்

    ReplyDelete
  2. மனசு குளிரக் குளிர படித்தேன்.

    ReplyDelete