Friday, January 22, 2016

சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ஹிந்து பத்திரிகை நடத்திய மெட்ரோ ப்ளஸ் நாடக விழாவில் பதினோரு நாடகங்களில் பத்துபார்த்தேன். அதில் ஒன்று ‘டியர் பாப்பு‘. இதில் சம்பந்தப்பட்ட மூவரும் என் டில்லி நண்பர்கள். நாடகத்தை இயக்கிய மோகன் மஹரிஷி எனக்குப்பிறகு தேசீய நாடகப்பள்ளியில் படித்து அதன் இயக்குநரானவர். பிரசார் பாரதியின் தலைவராக இருந்த பாஸ்கர் கோஷ் காந்தியாகவும் சுனீத் டண்டன் நேருவாகவும் கடிதங்களை வாசித்தனர். இரு தலைவர்களும் பரிமாறிக்கொண்ட கடிதங்களிலேயே நாடகம் இருந்தது.
நம் நாட்டின் அறுபதாவது சுதந்திர விழாவையொட்டி, எல்லா ஊடகங்களும் ரோஜாவின் ராஜாவான நேருவை நினைவு கூர்ந்தன.
எல்லா டி.வி.யிலும் கம்பீரமான குரலில், ‘லாங் இயர்ஸ் எகோ…….‘ என்று அவர் 1947 ஆகஸ்ட் 14ம் நாள் நள்ளிரவில் முழங்கியது, தமிழ்நாட்டின்  ‘வாஜி…. வாஜி‘ க்கு மேலாக எதிரொலித்தது! எழுபது வயதான என் மனம், அந்தக் காலத்தில்…….நான் தில்லியில்  இருந்த போது………..அவரைச்சந்தித்தது….  கை குலுக்கியது … போட்டோ எடுத்துக் கொண்டது……அவர் இறந்தபின் தீன்மூர்த்தி போய் யாரோ  வாங்கி வைத்திருந்த மலர்வளையத்தை அவர் காலடியில் வைத்து அஞ்சலி செலுத்தியது…..’ என சினிமா ஃப்ளாஷ் பேக் போல நினைக்கத்தொடங்கியது.  எழுபதை நெருங்குபவர்களுக்கு பழைய நினைவுகளை அசைபோடுவது தவிர்க்கமுடியாத, ஆனால் சந்தோஷமான பொழுது போக்கு! இப்போது, அதைத்தான் செவ்வனே செய்துகொண்டிருக்கிறேன்! என் வாழ்க்கையின் ஐம்பது நல்ல வருடங்களை தில்லியிலேயே வாழ்ந்திருக்கிறேன். தில்லி எனக்கு பல மனிதர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பைத் தந்திருக்கிறது.
1958-ம் ஆண்டு. எங்கள் நாடகக்குழு டி.பி.என்.எஸ். உபதலைவர் திரு.சி.எஸ்.மணி, ‘இன்று மாலை காஷ்மீர் ஹௌளஸில் ஒரு முக்கியமான மீட்டிங். நீயும் வரணும்.’ என்றார். அது இந்திய ராணுவத்தின் இஞ்சினீரிங் பிரிவு தலைமையகம், பாதுகாப்பு அதிகம். அங்கே அவர் வேலை பார்க்கிறார். என்னைப்போன்ற பாமரனுக்கு அங்கே அனுமதி சிரமம். ஆனால் மாலையில் நான் போனபோது என் பெயர் வரவேற்பு அதிகாரியின் பெயரேட்டில் இருந்தது. சிரித்துக்கொண்டே சல்யூட் அடித்து நுழைவுச்சீட்டை கையில் கொடுத்து கூடவே வழிகாட்ட ஒரு ஜவானையும் அனுப்பி வைத்தார். கூட்டத்துக்கு ஒரு மேஜர் ஜெனரல் தலைமை வகித்து, “இந்த வருடம் இந்திய அரசாங்கம் பண்டிட் மோதிலால் நேருவின் நூற்றாண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாட இருக்கிறது. அதையொட்டி தால்கட்டோரா பூங்காவில் மேடையமைத்து ஒரு நாடகவிழாவும் நடக்கும். மேடையமைக்கும் பணி நமக்கு தரப்பட்டிருக்கிறது. தரமான ஒளி ஒலி அமைப்புக்கொண்ட பெரிய மேடையை நம் இஞ்சினீர்கள் தயாரிப்பார்கள். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும், ஆலோசனையும் தேவை.” என்றார். இதற்காக ‘மோதிலால் நேரு நூற்றாண்டுவிழாக்கமிட்டி’ அமைக்கப்பட்டது. அதன் தலைவர் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அந்தக் கமிட்டியில் ஒரு உறுப்பினராக, பதிமூன்றாவதாக வாலைப்போல் ‘எஸ்.கே.எஸ். மணி‘யென்று என் பெயரும் லெட்டர் பேடில் பளிச்சிட்டது. 1955லிருந்து தில்லியில் தமிழ் நாடகங்களில் நடித்திருந்ததைத்தவிர யானொன்றுமறியேன் பராபரமே என்று சொல்ல தைரியமில்லாமல் ஒளிக்கு தபஸ் சென் போலவும், மேடையமைப்புக்கு பௌளமிக் போலவும் ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்தேன். இதன் காரணமாக பிரிட்டீஷ் கௌளன்சில் புத்தகாலயத்திற்குப் போய் தடிதடியான புத்தகங்களிலிருந்து மேடை நாடக ஒளி ஒலி பற்றி குறிப்புக்கள் எடுத்து என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன். அறுபதுகளில் தேசிய நாடகப்பள்ளியில் சேரும்போது, இந்த ஏட்டுச்சுரைக்காய் கைகொடுத்தது!
அப்போது நான் அரசு நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்ப்பொரேஷனில் வேலை பார்த்துவந்தேன். அதன் தலைவர் டி. சாண்டில்யா. டாக்டர் ராதாகிருஷ்ணனின் மாப்பிள்ளை. என் உயர் அதிகாரி. என்னுடைய ‘சேவை‘ நாட்டுக்குத் தேவையென்றும், அவ்வப்போது மட்டுமே ஆபீஸ் வந்துபோக அனுமதி கொடுக்கவேண்டுமென்றும் விழாக்கமிட்டி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது. அதில் 13வதாக என் பெயரும் இருந்ததே!
அதன் பிறகு இருமாதங்கள் டில்லிவெயில் கொஞ்சமும் பாழே போகாமல் தால்கட்டோரா கார்டனிலேயே பழியாய்க்கிடந்தேன். பாரதப்பிரதமரின் தந்தையின் விழா என்பதால் பணத்திற்கோ தொழில்நுட்பத்திற்கோ தட்டுப்பாடு இல்லாமல் ராணுவ இஞ்சினீர்களும் ஜவான்களும் இரவுபகலாக ஒரு பிரும்மாண்டமான மேடையைத் தயார் செய்தார்கள். ஒரு நாள் பிற்பகல் நேரம். பைலட் ஜீப் அலறிக்கொண்டு முன்னேவர பின்னால் ஒரு அம்பாசிடர் கிறீச்சிட்டு நின்றது. இப்போதைய தமிழ் சினிமாக்களைப் பார்த்திருக்கும் வாய்ப்பு இல்லாததால், ஒரே ஒரு ஜீப், ஒரே ஒரு அம்பாசிடர், அதுவும் கறுப்புக்கண்ணாடி இல்லாமல்.. அதிலிருந்து இறங்கியது கோடி சூரியப்பிரகாசம்! ஆம், காரிலிருந்து நேருஜி இறங்கினார். பார்வதிபுரம் கிராமத்தில் என் பாட்டி சொல்வாள், ‘ரோஸாப்பூக்கலர்‘ என்று. அது சாதாரணமான வெளுப்பு அல்ல.  நிஜமாகவே கண்களைக்கூசும் நிறம்.
நான் பார்த்தவரையில் இந்தியாவில் மூன்று பேருக்குமட்டுமே இந்த ‘ரோஸாப்பூக்கலர்‘ வாய்த்திருந்தது. முதலில் நேருஜி, பிறகு நம்எம்.ஜி.ஆர். கடைசியாக ராஜீவ் காந்தி!
நேருஜி தன் பகலுணவை முடித்து சிறிய தூக்கத்திற்குப்பிறகு தீன் மூர்த்தி பவனிலிருந்து பாராளுமன்றத்திற்கு போகும்வழி. புதிதாய்ச்செருகிய ஒற்றை ரோஜா. கையில் ஒரு வெள்ளிப்பூண் போட்ட பிரம்பு. மேற்பார்வை பார்த்துவந்த ப்ரிகேடியர்கள் லஞ்சிலிருந்து திரும்பாததால், நான் தான் அங்கே விஷயம் தெரிந்த பெரிய மனிதன். பிரம்பை சுழட்டிக்கொண்டே, அவர் கேட்ட கேள்விகளுக்கு என் அரைகுறை ஆங்கிலத்திலும், கால்குறை ஹிந்தியிலும் வெளுத்துவாங்கினேன். போகும்போது கைகுலுக்கி, ‘குட் வொர்க்‘ என்று சொன்னது பெருமையாக இருந்தது. அதன்பிறகு நாலைந்து முறை வந்து பார்வையிட்டார். ஒரு முறை இந்திரா காந்தியும் கூட இருந்தார். காருக்குத் திரும்பும்போது சகஜமாக என் தோளில் கைபோட்டுக்கொண்டு போனது இப்பொதும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. அப்போது எனக்கு வயது இருபத்தொன்று மட்டுமே!
நாடகவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழு பாதல் சர்க்கார் அல்ல, சம்பு மித்ராவின் பகுரூப்பியல்ல, சத்யதேவ் தூபேயுமல்ல. நமது டி.கே.எஸ். சகோதரர்கள் தான். மூன்றே நாடகங்கள் அதுவும் தமிழ்நாட்டிலிருந்து. இது எப்படி சாத்தியமாயிற்று என்று எனக்கு இன்னும் புரியவில்லை. அவ்வையார், வ.உ.சி. மற்றும் ரத்தபாசம். அவர்கள் என் சொந்த ஊர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் என்பதில் எனக்குப் பெருமை. தால்கட்டோரா பக்கத்திலேயே எம்.பி.க்கள் வசிக்கும் நார்த் அவென்யூவில் அவர்களுக்கு தங்கும் வசதி. ஸ்டேஷனிலிருந்து வந்திறங்கியதும் டி.என். சிவதாணு மட்டும் மேடை அமைப்பை பார்க்க என்னுடன் வந்தார். ஆச்சரியப்பட்டு, திரும்பியதும், டி.கே.எஸ்ஸிடம், ‘மாமா, இந்தமாதிரி ஸ்டேஜ் எங்கியும் பார்த்ததில்லே. படுத்து புரளலாம்போலே இருக்கு’ என்று சொல்லி சந்தோஷப்பட்டார். சாதாரணமாக மூங்கிலில் பரண் அமைத்து மேலே பலகை போட்டிருப்பார்கள். ஒன்றுக்கொன்று இடைவெளியோடு இருக்கும். கால்  மாட்டிக்கொள்ளும் அபாயம் அதிகம். இங்கே ராணுவத்தினர் அல்லவா, ப்ளைவுட் அடித்து மொசைக் தரை போல் இழைத்திருந்தார்கள். இந்த விஷயத்தை ஞாபகம் வைத்திருந்து, பல வருடங்களுக்குப்பிறகு, 1992-ல் மதுரை மு. ராமசாமியின் நிஜ நாடக இயக்கம் நடத்திய நாடகவிழாவில் பார்த்தபோது திரு. சிவதாணு நினைவுகூர்ந்தார். நாங்கள் யதார்த்தா சார்பில் மேடையேற்றிய ‘முறைப்பெண்’ நாடகத்தையும் பார்த்து பாராட்டிப்பேசினார்.
மூன்று நாடகங்களிலும் உதிரி வேடங்களில் நடிக்க எங்கள் DBNS குழு நண்பர்களை அழைத்துச்சென்றேன். எனக்கு அவ்வையாரில் மந்திரி வேஷம். சிதம்பரனாரில் அவருடன் செக்கிழுக்கும் ஒரு கைதியாக நடித்தேன். வ.உ.சியாக டி.கே.பகவதி நடித்தார். அவருக்கு ஷண்முகத்தைப்போல ஸ்பஷ்டமாகப் பேச வராது. ஒரு நீண்ட வசனம் வாய்ஸ் ஓவரில் மைக்கில் பேசவேண்டும். ஷண்முகம் பக்கத்தில் நின்றுகொண்டு, ‘மெதுவா… மெதுவா… ஸ்பஷ்டமா… ஓடாதே…‘ என்று முதுகைத் தட்டிச்சொல்லுவார். எல்லா நாடகங்களுக்கும் அரைமணி முன்னரே தானைத்தலைவர்கள், பட்டாளம் எதுவுமின்றி நேருஜி வந்துவிடுவார். கூட அவரது செயலர் என்.கே.சேஷன் மட்டும். [டி.என்.சேஷன் அல்ல]. நாடகத்தின் கதைச்சுருக்கத்தை எனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் தட்டிவிடுவேன். அவ்வையாரைப்பற்றி, ‘அகர வரிசையில் பாடுவாரே…அவர் தானே’ என்று கேட்டார்.அப்போது புரியவில்லை. வீட்டுக்குப் போய் யோசித்ததும் தான், ‘அறம் செய விரும்பு..ஆறுவது சினம்‘ என்பதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று வியந்தேன். பாரதியைப்பற்றியும், சிதம்பரனாரைப்பற்றியும், சுப்பிரமண்ய சிவாவைப்பற்றியும்  நிறைய தெரிந்து வைத்திருந்தார். டிஸ்கவரி ஆப் இந்தியா எழுதியவராச்சே! (இதே மூச்சில் ஞானசூன்யமான வேறொரு அமைச்சரிப்பற்றியும் சொல்லி விடுகிறேனே, ப்ளீஸ்! உபகதைக்குப்போனாலும், கடைசியில் சமத்துக்கு வந்துவிடுவேன்…..ப்ராமிஸ்! எண்பதுகளில் ‘நடுவண்‘ தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த திருவாளர் H.K.L. பகத் அவர்களை தெரியாத்தனமாக, அப்போது நான் செயலராக இருந்த ‘தில்லி கர்நாடக சங்கீத சபா‘வின் இசைவிழாவுக்கு தலைமை தாங்க அழைத்துவிட்டோம்….. I.&.B.அமைச்சர் வந்தால் தூர்தர்ஷன் கவரேஜ் நிச்சயம்…. அதுதான் காரணம். அமைச்சர் இதோ வருகிறார் அதோ வருகிறாரென்ற செய்தி வந்ததேயன்றி, அமைச்சர் வரக்காணோம். அவருக்காக காத்திராமல், குறிப்பிட்ட நேரத்தில் கச்சேரியை    ஆரம்பிக்கச்சொல்லிவிட்டேன். திரு எம்.டி. ராமநாதன் கச்சேரியென ஞாபகம். இரண்டு மணிநேரம் தாமதமாக தரிசனம் தந்தார் அமைச்சர். வரவேற்று முதல்வரிசையில் உட்காரவைத்தேன். கச்சேரி ஆரம்பமாகிவிட்டதால்  நடுவில் நிறுத்தமுடியாதென்று பவ்யமாகத் தெரிவித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். பின்னாலேயே அமைச்சரின் செயலர் என்னை துரத்திக்கொண்டு வந்தார், அமைச்சர் பேசவிரும்புவதாக. நச்சரிப்பு அதிகமானவுடன், பாடிக் கொண்டிருந்த இசைக்கலைஞர்களிடம் அனுமதி பெற்று, அமைச்சரைப்பேச அழைத்தேன். செயலர் தயாரித்துக் கொடுத்த தலைமையுரையை அமைச்சர் தன் காரிலேயே மறந்து வைத்துவிட்டார் போலும்! அமைச்சருக்குத்தெரியுமா ‘கர்நாடக சங்கீத‘ வாசனை? அதை கர்நாடக மாநிலத்தவர் நடத்தும் ஏதோ சங்கமென்று நினைத்துக்   கொண்டு, ‘எனக்கு தென்னிந்தியாவிலேயே பிடித்த நகரம் பெங்களூர் தான். அங்கே மைசூர்பாக், மைசூர் போண்டா இவை பிரசித்தம். கர்நாடகாவில் தான் ஜோக் அருவி கொட்டுகிறது. கூர்க் பெண்கள் மிகவும் அழகானவர்கள். மைசூர் தசரா வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. மைசூர்பட்டு எல்லோரும் விரும்புவது. பெங்களூர் M.T.R.ல்சாப்பிட்டிருக்கிறேன். அங்கே பில்டர் காபி நன்றாக இருக்கும்…… இப்படி சங்கீதத்தைத்தொடாமலேயே, கர்நாடக சுற்றுலாத்தகவல்களை ஒருமணிநேரம் வாரிவழங்கினார்! செயலர் இருமுறை அருகில் சென்று சொன்னதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சபையோர் பொறுமையிழந்து, மெதுவாக கைதட்டல்    ஆரம்பித்ததும் தான் பேச்சை நிறுத்தினார். இந்த அமைச்சர் தான் 1984-ல் தில்லியில் சீக்கியருக்கு எதிராக நடந்த படுகொலைகளுக்கும் கலவரங்களுக்கும் பின்னாலிருந்த கதாநாயகர்களில் ஒருவராகக்கருதப்பட்டவர். அந்த அட்டூழியங்களை நேரில் பார்த்தவன் நான். அதைப்பற்றி இன்னொரு கட்டுரையில்).
நாடகத்துக்கு முன்பும், என்வேடங்கள் முடிந்ததும் உடை மாற்றிக்கொண்டு முன் வரிசையில் வாலண்டியர் பாட்ஜ் குத்திக்கொண்டு உட்கார்ந்துவிடுவேன். அப்பொது ரயில்வே உபமந்திரியாக இருந்த ஓ.வி.அளகேசன் பின்வரிசையில் உட்கார்ந்திருப்பார். இரண்டாம்நாள் அப்போது பாராளுமன்ற சபாநாயகரான அனந்தசயனம் அய்யங்கார் தலைமை வகித்தார். கடைசிநாளன்று நேருஜி மூன்று நாடகங்களைப்பற்றியும் விரிவாகப்பேசினார். போட்டோ எடுக்கும்போது ஓரமாக நின்றிருந்த என்னைக் கூப்பிட்டு, தோளில் கைபோட்டு  பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார். அடுத்த நாள் டி.ஏ.வீ.பி. போய் ஒரு பிரதி வாங்கிவைத்துக்கொள்ளத் தெரியவில்லை அல்லது தோன்றவில்லை! ஊர் திரும்புமுன் ‘சம்முகம் அண்ணாச்சி‘ போட்டோ ஆல்பத்தைக் காட்டினார். இப்பொது அது சென்னையில் டி.கே.எஸ். புகழேந்தி வீட்டுப்பரணில் இருந்தாலும் இருக்கும்!
அதற்குப்பிறகு ஓரிருமுறை சேஷன் அறையில் அவரைப் பார்க்கப்போயிருந்த போது, திடீரென்று கதவைத் திறந்து கொண்டு, ‘சேஷன்‘ என்று கூப்பிட்டபடி உள்ளே வந்த நேருஜி, எழுந்துநின்ற என்னைப்பார்த்து, ஸிட் டௌன்….ஸிட் டௌன் என்று முறுவலுடன் சொல்லிவிட்டுப் போனார். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்று சத்தியமாக நம்பினேன். எவ்வளவு பெரிய ஆளு நான், என்னை மறந்திருக்க முடியுமா?
1964-ம் ஆண்டு மே மாதம் 24-ம்தேதி. நேருஜி காலமானார் என்ற செய்திகேட்டு தலைநகரமே சோகத்தில் ஆழ்ந்தது. தெருவெங்கும் மக்கள் வெள்ளம். அப்போது நான் பதவியுயர்வில் ‘பிர்லா பிரதர்ஸ்‘ ஆபீசில் பணியாற்றி வந்தேன். என் ஆபீஸ் இருந்த பார்லிமெண்ட் தெருவில் மக்கள் தலைகளைத்தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆல் இந்தியா ரேடியோவில் சோகமாக ஷெனாய் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் என் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு, தீன் மூர்த்தி பவனை நோக்கிப் புறப்பட்டேன். உருட்டிக்கொண்டு தான் போக முடிந்தது. பாதி வழியில் ஏண்டா இந்த சனியனைக்கொண்டுவந்தோம் என்றாகிவிட்டது. மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு: கச்சிட்டு துப்பானும் வைய்யா…மதுரிச்சிட்டு இறக்கானும் வைய்யா…அதைப்போல ஒரு அவஸ்தை. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஒரு வழியாக தீன் மூர்த்தி மார்க் வரை வந்துசேர்ந்தேன். ‘ஜவஹர்லால் நேரு ஜிந்தாபாத்… பண்டிட்ஜீ அமர் ரஹே‘ கோஷம் உண்மையிலேயே வானைப் பிளந்தது. இன்னும் அடுத்த ஜங்ஷன் போகவேண்டும். அங்குலம் அங்குலமாகக்கூட நகரமுடியவில்லை. பளிச்சென்று ஓர் ஐடியா. நான் நின்றிருந்தது திரு.ஹரிஹரன் ஐ.ஸீ.எஸ். பங்களா முன்னால். என் நாடகங்களைத் தவறாமல் பார்க்க வருபவர்.  எனக்கு விசிறி! பின்பக்கமாகப் போய் சர்வெண்ட் குவார்ட்டரில் ரேடியோவில் ஷெனாய்க்கு நடுவே ஏதாவது செய்தி வருமா என்று காத்திருந்த அவரது சமையல்காரனிடம் ஸ்கூட்டரை ஒப்படைத்துவிட்டு கால்நடையாக தீ.மூ. பவனை நோக்கி புறப்பட்டேன். விசாலமான கேட்டுக்குள் போக முடியவில்லை. அந்தமாதிரியான ஜனத்திரளை நான் அதுவரை பார்த்ததில்லை. [காந்திஜி இறந்தபோது எனக்கு வயது பத்து தான். திருவனந்தபுரத்தில் இருந்தேன்]. போதாததற்கு டில்லியின் மே மாசத்து வெயில். [அடுத்த நாள் பத்திரிகையில் செய்தி: கடந்த பத்தாண்டுகளில் அன்றுதான் கடுமையான வெயிலாம்]. என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.
இந்தக் கூட்டத்தில் நம்மால் முண்டியடித்துப் போகமுடியாது, திரும்பிவிடுவோம் என்று தீர்மானித்தேன். ஆனால் இந்த ஜனசமுத்திரத்தில் எங்கே திரும்புவது? நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை என் வாழ்நாளில் பல சமயம் உணர்ந்திருக்கிறேன். நம்ப முடியாத அற்புதங்கள் நமக்கே நிகழும். அப்படியான ஒரு சமயமது. போலீஸ் பாதுகாப்புடன் ஏதொவொரு மந்திரியை வழியனுப்ப திரு.சேஷன் வந்துகொண்டிருந்தார். எப்போதும் சிரித்த முகத்துடனிருக்கும் சேஷன், அன்று என்னைப் பார்த்தவுடன் சலிப்புடன் ‘நீ  எங்கடா இப்போ வந்தே?‘ என்று கேட்டார். பாவம், வீட்டுக்குப் போகாமல் அங்கேயே இருந்து, வருகிற வி.வி.ஐ.பி.க்களைக் கட்டி மேய்த்த களைப்பு. அவர் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு உள்ளே போனேன். பொதுமக்கள் பார்வைக்காக நேருஜியின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. அந்த இறுக்கமான சூழ்நிலையிலும், நேருவின் அந்தரங்கச்செயலர் எம்.ஓ. மத்தாய் வேலைக்காரர்களை எதற்காகவோ உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தார். அவர் மறைந்த தலைவரின் பல ரகசியங்களுக்கு சாட்சியாக இருந்தவர். பிற்காலத்தில், அவைகளைப் புத்தகமாக எழுதி காசுக்கு விற்கப்போகிறவர்! எல்லா அறைகளிலும் மலர்வளையங்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவைகளில் சிறிதான ஒன்றை எடுத்துக்கொண்டு வி.ஐ.பி.க்கள் வரிசையில் நின்று, மறைந்த அந்த மாமனிதருக்கு கண்மூடி அஞ்சலி செய்தேன். ஓரமாக நின்று, சாந்தமான அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த உத்தமர் சில வருடங்களுக்கு முன்னால், புகழின் உச்சியிலேயே இறந்திருக்கலாமே — 1962 சீனப்போரின் அவலங்களையும், கிருஷ்ணமேனன், சீனப்பிரதமர் சூ-என்-லாய் போன்றோரின் பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர்த்திருக்கலாமே‘ என்று நினைக்கத் தோன்றியது.
பிரபல புகைப்படக்கலைஞர் ரகு ராய் எடுத்த ஒரு படத்தில் வாயில் சிகரெட்டுடன் உதட்டைப்பிதுக்கியபடி சோகமாக தோற்றமளிப்பார் நேருஜி. தமிழ்நாட்டின் வரைபடத்தை உற்று கவனித்திருக்கிறீர்களா? அதில் நீண்ட மூக்குடன் சிகரெட் குடிக்கும் நேரு எனக்குத் தெரிவார். சிகரெட்டாகத்தெரிவது தான் இப்போது சில அரசியல்வாதிகளுக்கு இனிப்பாகவும்,  சிலருக்கு புளிப்பாகவும் இருக்கும் ராமர் பாலம்! டி.வி.யில் தினமும் வானிலை அறிக்கை படிக்கும்போது, பின்னால் இருக்கும் தமிழ்நாட்டை கூர்ந்து கவனித்தால், அதில்  உங்களுக்கும்     நேருஜி தெரியக்கூடும்!
பாரதி மணி (Bharati Mani)

0 comments:

Post a Comment