Friday, January 22, 2016

1978ம் ஆண்டு. எமர்ஜென்ஸிக்குப்பிறகு நடந்த தேர்தலில் ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. அப்போதெல்லாம் பிஸினஸ் சம்பந்தமாக உலகம் சுற்றும் 40 வயது வாலிபனாக இருந்தேன். குளிர்காலம்.  ஃப்ராங்க்பர்ட்டிலிருந்து லுப்தான்ஸா விமானத்தில் தில்லி வந்து கொண்டிருந்தேன். வழியில் ரோம் விமான நிலையத்தில் முக்கால் மணி நேரம் நிற்கும். புகைபிடிப்பதற்காக Transit Loungeபோய்விட்டு மறுபடியும்  விமானத்தில் ஏறினேன். ரோமில் இறங்கும் பயணிகள் இறங்கி, தில்லிக்குச்செல்லும் புதுப்பயணிகள் ஏறியிருந்தார்கள். என் இருக்கைக்குப் போகும் போது, ராஜீவ் காந்தியும் ரோமிலிருந்து புதுப்பயணியாக ஏறியிருந்ததைப் பார்த்தேன்.
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, சோனியா காந்தியும் குழந்தைகளும் (ஆம், அப்போது அவர்கள் குழந்தைகள்!)  மிலான் அருகிலிருக்கும் அவர் சொந்த ஊரிலேயே  வாழ்ந்தார்கள். அவர்களைப்பார்த்துவிட்டு தில்லி திரும்புகிறாரென்று நினைத்துக்கொண்டேன். அவரைத் தாண்டிச் செல்லும்போது புன்முறுவலால் வணக்கம் சொன்னேன்.  நீலநிற ஜீன்ஸ், ஸ்வெட்டர் போட்டிருந்தார்.
என் பாட்டி சொல்வதைப்போல ‘ரோஸ்ஸாப்பூக்கலர்‘! சிறிதுநேரம் கழித்து   டாய்லெட் போகும் வழியில் அவர் என்னைக் கடந்து போகும்போது மெல்லிய புன்சிரிப்புடன் ஒரு சின்ன ‘ஹலோ‘ சொன்னார். நான் ஒரு இந்தியன் என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது போலும்! நான் அவரிடம் வலியப்போய் பேச முயற்சிக்கவில்லை. அது எனக்கு எப்போதுமே கைவந்ததில்லை! அவர் பிற்காலத்தில் இந்தியாவின் பிரதமராவாரென்று அப்போது எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
அதிகாலையில் வழக்கமான தில்லியின் பனி மூட்டத்திற்கிடையே விமானம் தரையிறங்கியது. விமானத்திலிருந்து   நிலையம் வரை செல்லும் பஸ்ஸில்  சேர்ந்து பயணித்தோம். தில்லி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளெல்லோரும் என் நண்பர்கள். நடிகர் ‘மேஜர்‘ சுந்தர்ராஜன் தம்பி ரங்கராஜன் அங்கே கஸ்டம்ஸ் சூப்பிரெண்ட். எனது அத்தியந்த நண்பன். அவரும் ட்யூட்டியிலிருந்தார். அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு கஸ்டம்ஸ் தயவு மிகவும் அவசியம். நான் சத்தியமாக ஒரு கடத்தல் பேர்வழி இல்லை யென்றாலும் அனுமதிக்கப்பட்ட ஒரு பாட்டில் ஸ்காச் விஸ்கிக்குப்பதிலாக மூன்று இருக்கும். 555 சிகரெட் கார்ட்டனும் மூன்று நான்கு கொண்டு வருவேன்.  என்  பணத்தில் நான்   வாங்குகிறேன். அதில் இவர்களுக்கு என்ன வந்தது? ஆனால் அந்தக் காலத்தில் விமானத்திலிருந்து இறங்கி கஸ்டம்ஸ் ஹாலுக்குள் வரும்போதே,  அதிகாரிகள்  ‘வாடா வா‘ என்று எல்லா பிரயாணிகள் முகத்திலும், ஹாஜி மஸ்தானைத் தேடுவார்கள். அதனால் எல்லா கஸ்டம்ஸ் அதிகாரிகளையும் என் நண்பர்களாக  மாற்றியிருந்தேன்!  தில்லி ஏர்போர்ட்டில் எனக்கு எப்போதும் ராஜமரியாதை தான்.  இருந்தாலும் நான்     கொண்டு வந்ததில் பாதியை அவர்களே பிறகு வீட்டுக்கு வந்து பிடுங்கிக் கொள்வார்கள்!  தில்லி  ஏர்போர்ட்டில் இதுவரை என் பெட்டிகளை எந்த கஸ்டம்ஸ் அதிகாரியும் திறக்கச் சொன்னதில்லை. சோதனை முடிந்ததாக     சாக்பீஸால் மார்க் பண்ணி வெளியில் வரும் முதல்பயணி நானாகத் தானிருக்கும். அன்று ட்யூட்டியிலிருந்த ரங்கராஜன்,  ‘மணி சார், இன்னும் அரைமணியில் என் ட்யூட்டி முடிந்துவிடும். டாக்ஸி போகும்வழியில் என் வீட்டில் இறக்கி விடுங்களேன்‘ என்று சொல்லி, சூடாக தேநீருடன் பொழுதுபோக அன்றைய செய்தித்தாளை என்னிடம் கொடுத்தார். பதினைந்து நாட்களுக்கப்புறம் இந்தியப் பத்திரிகையைப் பார்க்கிறேன்.
அந்த விமானத்தில் வந்தவர்களனைவரும் வெளியே போய் விட்டார்கள் ஒரே ஒருவரைத்தவிர. நாலு கௌண்ட்டர்  தள்ளி ராஜீவ் காந்தியின் இரு பெரிய பெட்டிகள்,  கைப்பை திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான் களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ‘ தேடிக் கொண்டிருந்தார். ஒருமணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னகை மாறவில்லை! ஆபீஸர் பார்த்த  சாமான்களையே திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு  ராஜீவ் பொறுமையாக பதிலும் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் ரங்கராஜன் அறை யிலிருந்து கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப்பொறுக்கவில்லை. ‘என்னடா இது, இரண்டுமணி நேரமா அவர் பொட்டியிலே என்னடா தேடறீங்க, அவர் யாரு தெரியுமில்லே, முன்னாள் பிரதமரின் மகன். அவரென்ன கடத்தல் காரரா? ஏண்டா இப்படி படுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனை கண்டுக்கறதில்லே’ என்று பொரிந்து தள்ளி விட்டேன். அதற்கு ரங்கராஜன்: ‘சார்,  எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு  வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர். குறைந்தது  ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத்   ‘தாளித்து‘ அனுப்பவேண்டுமென்று நார்த் பிளாக்- கிலிருந்து  உத்தரவு. சார், எங்களுக்கும் மனசு கஷ்டமாகத் தானிருக்கு. ஆனா நாளைக்கு போன் வந்தா நாங்க தான் பதில் சொல்லணும்’. இந்த அநியாயக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ் காந்தியோ ‘ ‘  நன்றாகத் தெரிந்திருந்தும் அவர் காத்த பொறுமையை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை!  எப்படி அவரால் அந்த சமயத்தில் கடுப்பின்றி  சிரிக்கமுடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர்!
கடைசியில்,  தேவையில்லாத மூன்றுமணிநேர Torture-க்குப் பிறகு, வெளியில் வாரியிறைத்த துணிகளை மறுபடியும் பெட்டிகளில் அடைக்க முயன்று அது முடியாமல், ஒரு பெட் ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி, அதையும் சுமந்து கொண்டு, முகத்திலிருந்த புன்சிரிப்பு துளியும் மாறாமல், ஏர்போர்ட்டுக்கு வெளியே காத்திருந்த  காருக்கு நடந்து போனார், பிற்காலத்தில்  பிரதமராகப்போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன்! எனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம்.     நிச்சயமாக இன்றைய காங்கிரசின் அனுதாபியுமல்ல. ஆகவே ஒரு தொண்டன் தன் தலைவரை ‘செம்மனச்செம்மல்‘, ‘தங்கத்தாரகை‘ என்றெல்லாம் உயர்வுநவிற்சியில் வெற்று கோஷம் போடுவது  போலல்ல இது. என் பார்வையில் ராஜீவ் காந்தி எனும் தனிமனிதனைப் பற்றிய கணிப்பு மட்டுமே. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னவாகும் என்று ஒரே ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
தன் ஓட்டை மோட்டார்பைக்கில் தப்பாக ஒன்வேயில் போய், போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்ட என்னைப்  போன்ற பொதுஜனம், ‘நான் யாரு தெரியுமில்லே, 17-வது வார்டு கௌன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா, எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா’ என்று சொல்கிற இந்தக்காலத்தில், ஒரு வித்தியாசமான உண்மைக் காட்சிக்கு, நான் ஒரு சாட்சி!
Bharati Mani
’உயிர்மை’ ஃபிப்ரவரி 2008 இதழில் வெளியானது.

0 comments:

Post a Comment