Friday, January 22, 2016

நண்பர்கள் நம்மைப்பற்றி உயர்வாகச்சொல்லும்போது, கூச்சமாக இருந்தாலும், மனதுக்கு பிடித்துத்தான்  இருக்கிறது. ஏன்?  ‘ஆண்டவனுக்கே ஸ்துதி பிடிக்கிறதே…நான் மனிதன் தானே’  என்று நொண்டிச்சாக்கு சொல்லாமல் யோசித்தால், இன்னும் நாம் போகவேண்டிய தூரம் நிறைய  என்பதும் தெரிகிறது. 
என் நெருங்கிய நண்பர் குப்புசாமி  என்னைப்பற்றி எழுதியது……படித்துவிட்டு மறந்துவிடுங்கள்!!
பாரதி மணி பற்றி………..
 பி.குப்புசாமிஆசிரியர், ‘வார்த்தை 
பாரதி மணி அவர்களைப்பற்றி நான் கூறுவது, கயிலாயத்தைப்பார்த்து மானஸரோவர் ஏரியின் தவளைகள் கூப்பிடுவது போலத்தான் அமையும். இதில் துதி ஏதும் இல்லை. தூரம் மட்டுமே கருதி அந்தக் கயிலாயமும் மானஸரோவரும் சொல்லப்பட்டன.
பாரதி மணியின் கட்டுரைகள் ஓரிரண்டை நான் அகஸ்மாத்தாகப் படித்தேன். அடுத்தமுறை அந்தப்பெயரில் வெளிவருகிற கட்டுரைகளைப் படிக்கிற ஆர்வம் எனக்குத்தோன்றிற்று!
அப்படி இருக்கையில், ஒரு கல்யாண உற்சவத்தில் நண்பர்களால் அவர் எனக்கு நேரடியாக அறிமுகமானார். அதன்பின் தான் பிரபலமான அவரின் பல நேரங்களில்பல மனிதர்கள் என்னும்  புத்தகத்தை, அவர் உபயத்தால் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். அதிலேயே அவரது சொரூபம் எனக்குத் தெரிந்துவிட்டது.
இந்த பூர்வபீடிகையை இத்துடன் சுருக்கமாக முடிக்கிறேன்.
அதன்பின், போனில் அவ்வப்பொழுது பேசியதிலும், சாவகாசமான இரு அற்புதமான சந்தர்ப்பங்களிலும் அவரைப்பற்றி மேலும் மேலும் அறியலானேன். இன்னமும் கூட இது ஒரு தவளையின் அறிவு தான். அவர் செயல்பட்ட துறைகள் அனைத்தையும் தழுவியது அன்று அது! எனினும் அவர் மூர்த்திகரத்தின் முக்கியமான ஒரு கூறைத்தான் அது – அந்தத்தவளை – இப்பொழுது முணுமுணுக்கிறது.
போற்றி உண்’ என்கிற வாக்கினை ஜெயகாந்தன் தான் எங்களுக்குச் சொன்னார்! அது சம்பந்தமாக நண்பர்கள் நாங்கள் விஸ்தாரமாகப் பேசிக்கொண்டதும் உண்டு.
சாப்பிட நேர்ந்த சாப்பாட்டைக் குறை சொல்லிக்கொண்டே சாப்பிடுவது கூடாது. அங்ஙனமாயின் அதை உண்ணாமல் விடுவதே உத்தமம். ஒரு வேளை லங்கணம் உயிரைப் பறித்துவிடாது. உண்ணுகிற உணவைக் குறை கூறிக்கொண்டே உண்டால் அது உடம்பில் ஒட்டாது. செரிமானத்துக்கு இசையாது. உண்ண நேர்ந்தால் எதையும் போற்றி உண்ணுங்கள்! போற்றி உண்டால் புற்றுமண்ணும் பலகாரம் போல் ஜீரணமாகும்! இவ்வாறெல்லாம் அந்தப் ‘போற்றி உண்!’ என்கிற வாக்கியத்திலிருந்து நாங்கள் புரிந்துகொண்டோம்.
வாழ்வதும் உண்பது போலத்தான்!
வாழ்வைப் போற்றி வாழ்கிறவர் பாரதி மணி. இந்தப்பண்பு அவருக்கு ஒரு வரப்பிரசாதம் போல் வாய்த்திருக்கிறது ‘குறையொன்றுமில்லை…..கோவிந்தா!’ என்று அவர் பாடுவது தான் சரி! அவருக்கு அந்த வரி மிகவும் பொருந்துகிறது. கடவுளிடம் அவருக்குக் கெஞ்சல்கள் எதுவுமில்லை. நன்றிகூறல்கள் தான்!
என் தகுதிக்கு மீறியே எனக்கு எல்லாமும் அமைந்துள்ளன!’ என்பார் அவர். ஆம், எல்லாமும் திவ்யமாய் அமைந்திருக்கின்றன என்று நான் நினைத்துக்கொள்வேன்.
வாழ்வைப்பற்றிய ஒரு மனநிறைவின் வடிவம் அவர். ‘போற்றி உண்!’ என்பதை ‘போற்றி வாழ்!’ என்று அவரை வைத்துப் புரிந்துகொள்ளலாம்! அவரது வாழ்க்கை அத்தியாயங்களில் எந்த இடத்திலும் அங்கலாய்ப்பு என்பது இல்லை.
பாரதியாரின் ‘கண்ணன் என் சேவகன்” என்கிற கவிதை பூராவும் எனக்கு மனப்பாடமாகையால், அதில் பல வரிகளை எனக்குள் அடிக்கடி சொல்லிப் பார்த்துக்கொள்வேன். அப்படி ஒருவன் வாய்ப்பது எத்தகைய நற்பேறு என்று நினைப்பேன்!
பாரதி மணி அவர்கள் அந்தப்பேறும் பெற்றுள்ளார். இங்கேயும் அந்தப்பெயர் கண்ணன் என்பதுதான் விந்தை! ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!’ என்கிறார் இவர். சேவகனாயினும், சீடனாயினும், தந்தையாயினும், குருவாயினும், ஆண்டையாயினும், அடிமையாயினும், நண்பராயினும், காதலராயினும் அதில் தெய்வீகத்தைக் காண்கிற கவிமரபு இவருள் காலூன்றி நிற்கிறது. ஆயினும் இவர் கவிதை எழுதுவோர் அல்லர்.
நாடக உலகிலும் நடிப்பு உலகிலும் இவரை அளந்து சொல்லும் கருவி நான் அல்லன். நானும் என் பள்ளிக்கூட நாடகங்களில் ஹீரோவாக நடித்தவன் தான் எனும் அற்ப ஒற்றுமை அதற்குப்போதாது. தேசிய நாடகப்பள்ளியில் கற்று, லண்டன் நாடகப்பள்ளியில் குரல்வளம் பயின்று, அதை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர் இவர்!
இவர் குரலில் ஒரு கார்வை இருக்கிறது. அது எல்லாக்காலங்களிலும் இருந்த எல்லா மூத்தோர்களின் குரல் போன்றுள்ளது. மஹா நிர்வாணம் என்கிற நவீன நாடகத்தில் அவரது குரற்சிறப்பை நான் கேட்டபோது, இவர் பீஷ்மராக நடிக்கத்தக்கவர் என்று எனக்குத்தோன்றிற்று.
கலாபூர்வமான சினிமாக்களில் அவர் தமது நடிப்பூதியத்தை எதிர்பார்ப்பதே இல்லை என்பதும், வர்த்தகரீதியான சினிமாக்களில் நடிப்பதற்காக வரும் வருமானத்தை அவர் எவ்வளவு அர்த்தமும் அழகும் நிறைந்த காரியங்களுக்குச் செலவிடுகிறார் என்பதும் அவரது நண்பர்கள் கூறித்தான் உலகு அறிந்து கொள்ளவேண்டும்.
அவரது தனிமை ஆழ்ந்த அர்த்தமுடையதும், இந்த வயதில் எல்லாருக்கும் சிபாரிசு செய்யத்தக்கதும் ஆன ஒன்றாகும். தவமிருந்தாலும் யாருக்கும் வாய்க்கக்கூடிய தனிமை அன்று அது! சங்கீதத்தின் மீது அவர் கொண்ட காதல், அவரது தனிமைகளுக்கு ஊடே ஓர் ஆனந்தத்தின் சாரத்தைப் புகுத்தி விடுகிறது.
தனிமை கண்டதுண்டு – அதிலே
சாரமிருக்குதம்மா……
என்று சொன்ன கவியின் நிலையை இந்தக்கால இருப்பில் அவர் மெய்ப்பிக்கிறார்.
இவருக்குள்ளே இன்னும் என்னென்னவோ இருக்கின்றன. இவர் தொடர்ந்து எழுதப்போந்தால், அவை ஒவ்வொன்றும் உலகவாழ்வின் தரிசனங்களாக ஒளியோடு வெளிப்படும் என்று நாம் நம்புவதையும் அவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.
தமிழ் எழுத்துலகம் இவரைச் சமீபகாலம் வரை அறியாமல் தான் இருந்தது. ஆனால் நவீனத்தமிழ் இலக்கியத்தை நன்கு அறிந்தவர் இவர். பதிலுக்கு தமிழில் காலூன்றி நின்ற இலக்கியகர்த்தாக்களில் பெரும்பாலோரும் இவரைத் தனிப்பட நன்கு அறிந்திருந்தனர். நல்ல அறிமுகங்கள், அவற்றில் பங்குபெறாதவரையும் ஆனந்தப்படுத்தும் தன்மையுடையன! அதன் விளைவுகளில் ஒன்று தான் பத்திரிகைகள் இன்று இவர் கட்டுரைகளை வேண்டி நிற்பதுவும்! அதை அவர் நிதானமாகவாவது நிறைவேற்றுவார் என்று நாம் நம்பலாம்!
அந்தக்காலத்து திருவிதாங்கூர் சமஸ்தான வாழ்க்கையைப்பற்றி விரிவாக எழுதுமாறு நான் அவரைக்கேட்டுக்கொண்டுள்ளேன்.
தனது மாமனார் திரு. க.நா.சு. பற்றியும் அவர் எழுதலாம் என்றேன். அவரைப்பற்றி எழுதும் தகுதி தனக்கு இருக்கிறதா என்று இவர் ஐயுற்றார். இலக்கியம் தாண்டி க.நா.சு.விடம் இருந்த அரிய நற்பண்புகளை அறிமுகப்படுத்தும் தகுதி அவரைத்தவிர வேறு யாருக்கும் இருக்கமுடியாது என்று நான் சொன்னேன்.
பாரதி மணியை அறிந்தவர்கள் பலருக்கும், அவரவர் அறியவிரும்பும் பகுதிகளைப்பற்றி அவர் எழுதலாமே என்று தான் தோன்றும்.
களமும் அமைந்துளது, கருவியும் கையில் உளது, காலமும் நேர்ந்துளது. கருமசிரத்தையும் உள்ளவர் அவர். எழுதுக என்று வேண்டுதற்கு நாமும் உளோம். வேறென்ன இன்னும் தேவை?
—oooo0000ooo—
பி.ச. குப்புசாமி, ஆசிரியர், ‘வார்த்தை’
ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட பாரதி மணியை, ஒரு முக்கியமான எழுத்தாளனாக அறிய செய்தவை, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தில்லி வாழ்க்கையில் பரந்துபட்ட அனுபவங்கள், இதுவரை எங்கும் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் அவரது தனித்துவமான மொழிநடையில் வாசகர்களை பெரிதும் உற்சாகம் கொள்ள செய்தன. இவை ஒரு தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் ஒரு காலகட்டத்தின் சரித்திரமாகவும் இருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.

0 comments:

Post a Comment