Friday, January 22, 2016

நான் தில்லிக்குப் போனபிறகு ‘பார்த்த’ முதல் குடியரசு தின விழா1956ஆம் ஆண்டு. உண்மையைச் சொன்னால், ஒரு படத்தில் பழம்பெரும் நடிகர் ‘என்னத்தே’ கன்னையா சொன்னதுபோல் ‘பாத்தேன். . . ஆனா . . . பார்க்கலே’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். 150 சானல்களுள்ள டிவியும் கையில் ரிமோட்டும் வராத காலம். அதற்கு முன்னால் எங்களூரில் சினிமாத் தியேட்டர்களில் படத்திற்கு முன்னால் போடப்படும் இந்திய செய்திப் படம் எண் 1049இல் பிரதீப் ஷர்மா அல்லது மெல்வில் டி’மெல்லோவின் விளக்கவுரையுடன் குடியரசு தின விழாவைத் திரையில் தான் பார்த்தேன்.
நான்1955ஆம் வருடம்தில்லி போனபோது, அந்த வருடத்திய குடியரசு விழா நடந்து முடிந்திருந்தது.1956ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி விழாவுக்கு நேதாஜி நகர் அக்கா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த எஸ்.என். டிப்போவிலிருந்து அதிகாலை நான்கு மணியளவில் ஊர்வலம் நடக்கும் ராஜ் பத்துக்கு (அப்போது அந்தப் பெயர் சூட்டவில்லை. கிங்ஸ்வேதான்) சிறப்புப் பேருந்துகள் விடுவதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது. சரி, போய்ப் பார்ப்போமே என்று தெரியாத்தனமாக முடிவுசெய்தேன்.
தில்லிக் குளிரில், என் அக்கா மூன்று மணிக்கே எழுந்து, அவசர அவசரமாகத் தேங்காய் சாதம், பூரிக் கிழங்கு, தயிர் சாதம், வடாம் வற்றல்கள் தயாரித்துக் கொடுத்தனுப்பினாள். காத்திராமல் பஸ் கிடைத்தது. ஆனால் மாற்றுவழி என்கிற பெயரில் துக்ளக் ரோடு பக்கமாக இறக்கிவிட்டு விட்டார்கள். அங்கிருந்து நடையோ நடை. இன்றைய போலீஸ் கெடுபிடியொன்றுமில்லாமல் ராஜ்பத் போய்ச் சேர்ந்தேன். விடியாத இருளில், கொண்டுபோயிருந்த ஜமுக்காளத்தைப் பனியால் நனைந்திருந்த புல்வெளியில் விரித்துக் குளிருக்கு இதமாக ஷாலைப் போர்த்திக்கொண்டு நாலரை மணிக்கேஉட்கார்ந்துவிட்டேன். ஒன்பதரை மணிக்கு ராஷ்டிரபதி பவனிலிருந்து திறந்த குதிரை சாரட்டில் வரும் ராஜேந்திர பிரசாத் என்னைத் தாண்டித்தான் மரியாதை அணிவகுப்புக்குப் போக வேண்டும்!
பத்து நிமிடத்துக்குள் ராஜஸ்தானிலிருந்து ஒட்டக வண்டியில் ‘சப்பீஸ் ஜன்வரி’ (ஜனவரி 26) பார்ப்பதற்காகவே தில்லி வந்த ஐந்தாறு ராஜஸ்தானிக் குடும்பங்கள் என்னைச் சுற்றி வளைத்து உட்கார்ந்துகொண்டன. அங்கே தண்ணீரில்லாத காரணத்தால் வருடத்திற்கொரு முறையே குளிப்பவர்கள். அணிந்திருக்கும் ஜிப்பா வேஷ்டி, நீண்ட தலைப்பாகையை வருடத்திற்கு இருமுறை தோய்த்துவிடுவார்கள். தண்ணீரே கண்டறியாத அவர்கள் போர்த்தியிருந்த ரஜாய் நாற்றத்தையும் மீறின ஒட்டக வாசனை. ஐய்யோ, எப்படி இதை ஐந்து மணிநேரம் பொறுத்துக்கொள்வது என்ற யோசனையிலிருந்தபோது ஆரம்பித்தது அதைவிடப் பெரிய பிராணாவஸ்தை! முந்தைய இரவு அளவுக்கதிகமாக வேர்க்கடலையும் மூலி என்றழைக்கப்படும் முள்ளங்கியையும் பச்சையாக நிறையச் சாப்பிட்டிருக்க வேண்டும். ‘மௌனம் பிராணசங்கடம்’ என்பதன் பொருள் அன்றுதான் தெரிந்தது.
கொஞ்ச நேரத்தில் கிழக்கு வெளுத்து விடிய ஆரம்பித்தது. நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே அதி காலைப் பனிமூட்டத்தையும் மீறிச் சூரிய வெளிச்சத்தில் பிரமாண்டமான இந்தியா கேட் தெரிகிறது. அப்போது மணி ஆறரைதான். இன்னும் மூன்று மணிநேரத்தை எப்படிக் கழிக்கப்போகிறேன் என்பதுதான் அப்போதைய தலையாய – இல்லை, மூக்காய – பிரச்சினை!
ஒருவழியாக நான் மயக்கமடைவதற்கு முன்பே அந்த வேளையும் வந்தது. குடியரசு மாளிகையிலிருந்த ராய்ஸினா குன்றிலிருந்து குதிரைப்படை முன்னேவர ஜனாதிபதி அமர்ந்துவந்த சாரட் வண்டியின் குளம்பொலி கேட்கத் தொடங்கியது. அடுத்த நொடியே எங்கள் நாகர்கோவில் கிருஷ்ணா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த புதுப்படம் ரிலீஸாகும் முதல்நாள் முதல் காட்சி டிக்கெட் கௌண்டருக்கு முன்னால் இருப்பது போலிருந்தது. பின்னாலிருந்து முன்னேறிவரும் கூட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விரித்திருந்த பெட்ஷீட், உணவுப் பொட்டலங்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு பின்னால் நகர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கடைசி ஆளாக ஒரு கேணையனைப் போல் முழித்துக்கொண்டிருந்தேன். குதிரைகளின் குளம்புச்சத்தம் மட்டும் கேட்கிறது; ஆனால் முன்னால் முண்டியடித்துப் போனவர்களின் தலைகள்தாம் தெரிகின்றன. நானிருக்கும் உயரத்துக்கு எட்டியும் பார்க்க முடியாது!
எனக்கு வந்த ‘நபும்சக’ கோபத்தில், கூட்டத்தைவிட்டு வெகுதூரத்தில் புல்தரையில் பெட்ஷீட்டை விரித்துத் தனியாக உட்கார்ந்து, கொண்டுவந்திருந்த வாரப் பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கினேன். கம்பத்துக்குக் கம்பம் கட்டியிருந்த ஒலி பெருக்கியிலிருந்து ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நேர்முக வர்ணனை மட்டும் தெளிவாகக் கேட்டது. பக்கத்திலிருந்த மரத்திலேறிப் பார்ப்போமா என்று ஒரு சின்ன யோசனை. சிறு வயதிலிருந்தே மரமேறிப் பழக்கமில்லாததால், அந்த யோசனையை உடனே கைவிட்டேன்.
சற்றுநேரத்தில், ‘வீட்டிலிருந்தால் இப்போது ரேடியோ கமெண்டரியைத்தானே கேட்டுக்கொண்டிருப்போம்’ என்னும் நொண்டிச் சமாதானத்தோடு பத்திரிகையை மீண்டும் கையிலெடுத்தேன். அப்போது மூன்று, நான்கு வயதுக் குழந்தையொன்று என்னை நோக்கி ஓடிவந்தது. வேற்றுமுகம் பாராமல் என் மடியில் உட்கார்ந்து என் கண்ணாடியைப் பிய்த்தெடுத்தது. என் மூக்குக்குள் தன் பிஞ்சுவிரலை விட்டு எதையோ தேடியது. தில்லி எருமைப் பால் ஊட்டி வளர்த்த கழுக் மொழுக் பஞ்சாபிக் குழந்தை. அழகான குழந்தை. என் சட்டைப் பாக்கெட்டில் என்ன இருக்கிறது, கொண்டுவந்த பையில் என்னவிருக்கிறதென்று ஆராய ஆரம்பித்தது. ‘க்யா நாம் ஹை, பேட்டா?’ என்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. சுற்றுமுற்றும் குழந்தையின் பெற்றோர்கள் தென்படுகிறார்களாவென்று பார்த்தேன். ஊஹூம்… குழந்தையின் பக்கம் யாரும் திரும்பவில்லை. எல்லோரும் அப்போது மேஜர் பிரதாப்சிங் தலைமையில் அணிவகுத்துச் செல்லும் ராஜ்புட்டாணா ரைபிள்ஸ் ஜவான்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? ‘பிள்ளை பிடிப்பவன்’ என்று போலீஸ் வந்து ரெண்டு தட்டு தட்டினால் என்ன பதில் சொல்வது? நான் நல்லவன் தான் என்று சொல்லக் குழந்தைக்குப் பேசவும் தெரியாது! அக்கா கொடுத்துவிட்டிருந்த பொட்டலத்திலிருந்த நாடா பக்கோடாவை நானும் குழந்தையும் – நான் கொஞ்சமாகக் குழந்தை நிறைய – சாப்பிட்டு முடித்தோம். திரும்பிப் பார்த்ததில் ஊர்வலத்தில் போய்க்கொண்டிருந்த ஆவடி டாங்க்கின் மூக்கு மட்டும் உயரத்தில் தெரிந்தது.
இத்தனை தூரம் வந்ததற்கு, கொண்டுவந்த சாப்பாட்டையாவது ஒழுங்காகச் சாப்பிடலாமென்று நினைத்து, ஒலிபெருக்கிகளிலிருந்து வரும் ரன்னிங் கமெண்டரியைக் கேட்டுக்கொண்டே தேங்காய் சாதம், பூரிக்கிழங்கு, தயிர்சாதம் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகப் பிரித்துக் குழந்தைக்கும் ஊட்டிவிட்டு நானும் சாப்பிட்டேன். அந்தப் பஞ்சாபிக் குழந்தைக்கு அதுதான் முதல் தென்னிந்திய உணவாக இருந்திருக்க வேண்டும். என் மருமகன்களைப் போல் படுத்தாமல் சமத்தாக (நிறைய்ய்ய) சாப்பிட்டது. பக்கத்திலிருந்த நீர் ஊற்று அருகில் போய்க் குழந்தைக்குக் கைகழுவி வாயைத் துடைத்துவிட்டேன். சாப்பிட்ட தெம்பில் குழந்தை என்னைச் சுற்றி ஓடி விளையாடத் தொடங்கியது. குளிருக்காகக் கொண்டுவந்திருந்த (என் அத்தானின்) குரங்குக் குல்லாயை நான் வீசியெறிய, குழந்தை கொள்ளைச் சிரிப்புடன் ஓடிப்போய் அதை எடுத்து வந்தது. இதையே ஒரு விளையாட்டாகக் கொஞ்ச நேரம் தொடர்ந்தோம். இதற்கிடையில், ஒலிபெருக்கிகளில் ‘கடைசி ஐட்டமாக விமான அணிவகுப்பு நடைபெறும்’ என்ற அறிவிப்பு வந்தது. ‘போங்கடா, இதைப் பார்க்க உங்க தயவு தேவையில்லை’ என்று நினைத்துக்கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே அண்ணாந்து பார்த்தேன். முதலில் மலர் தூவிக்கொண்டே வந்த இந்தியக் கொடியேந்திய ஹெலிகாப்டர்கள். தொடர்ந்து 2, 3, 4, 3, 2 என்ற அணிவரிசையில் ஜெட் விமானங்கள், கடைசியாக ஆரஞ்ச், வெள்ளை, பச்சைக்கலரில் புகையுடன் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு மேலே போய் மறையும் மூன்று ஜெட் விமானங்கள். சுபம்! அந்த வருடத்துக் குடியரசு தின அணிவகுப்பு நான் பார்க்காமலே இனிதே நிறைவுற்றது. என்னைப் பார்க்கவிடாமல் பின்னுக்குத் தள்ளிய நாசகாரக்கூட்டம் கலைந்து செல்ல ஆரம்பித்தது. ஆமாம், இப்போது இந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய? சரி, கூட்டம் குறையட்டும் என்று சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். அந்த அழகான குழந்தையின் பெற்றோர் கூட்டத்திலிருந்து விடுபட்டு வந்து, ‘அரே முன்னா, அங்க்கில் கே ஸாத் மஸ்தி கர் ரஹே ஹோ! அங்க்கில் கோ சுக்ரியா போலோ’ (‘மாமாகூட ஜாலியா இருந்தியா? மாமாவுக்கு வணக்கம் சொல்லு’) என்று குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு, என்னிடம் ‘படுத்தாமல் இருந்தானா? ரொம்ப தாங்க்ஸ்’ என்று விடை பெற்றுச் சென்றார்கள். அவர்கள் குழந்தை தொந்தரவு இல்லாமல் இரண்டு மணிநேரம் ‘சப்பீஸ் ஜான்வரி பரேட்’ பார்க்க, இந்த ‘அசமஞ்சம்’ குழந்தையைக் ‘கவனித்துக்’கொண்டிருந்தது! அவர்கள் போனபின்தான் குழந்தையின் பெயரைக் கேட்டு வைத்துக் கொள்ளவில்லையே என்று தோன்றியது. (அந்தக் குழந்தைக்கு இன்று 56 வயது ஆகியிருக்கும்! நிச்சயமாக என்னை அவருக்கு நினைவிருக்காது!)
வீட்டுக்குப் போனதும், என் அக்கா கேட்ட, ‘எப்படீடா இருந்தது? எல்லாம் பாத்தியா?’ என்ற கேள்விக்கு, ‘நீ தந்து விட்ட தேங்காய் சாதமும் பூரிக் கிழங்கும் நன்னா இருந்துது’ என்று தான் என்னால் பதில் சொல்ல முடிந்தது!
அதற்குப் பிறகு தில்லியில் எனக்கென ஒரு விலாசமும் அதையொட்டிய ‘வியாபகமும்’ வந்தபிறகு, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து விவிஐபி பாஸ் வாங்கிப் பலமுறை குடியரசுத் தலைவர் அமரும் பகுதியிலேயே உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும் என் முதல் அனுபவம் மறக்க முடியாதது.1982க்குப் பிறகு இந்தியாவில் கலர் டிவி வந்த பின் தில்லி தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பை வீட்டிலிருந்தே பார்க்க வசதி வந்துவிட்டதால், அதற்குப் பிறகு போனதேயில்லை.
இந்தத் தலைமுறை இளைஞர்கள் எத்தனை பேருக்கு Beating the Retreat என்பதன் பொருள் தெரியும்? போன வருடம் ஜனவரி 29ஆம் தேதி மாலை சென்னையில் எனது வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த, நான் ஆண்டு தோறும் தவறாமல் பார்க்கும் இந்த நிகழ்ச்சியைத் தில்லி தூர்தர்ஷனில் பார்த்துக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு இளைஞன் என்னைப் பார்க்க வந்தான். அவனுக்கு இதைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. கோபத்துடன் ‘உன் தந்தையிடம் போய்க்கேள்’ என்று சொல்லியனுப்பினேன். அந்த மகானுபாவருக்கும் ‘பீட்டிங் தி ரெட்ரீட்’ பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. இன்னும் நான்கு இளைஞர்களிடம் கேட்டேன். அவர்களும் இந்த அற்புதத் தேசிய நிகழ்ச்சி பற்றி அறியாதவர்களாகத் தான் இருந்தார்கள்.
தமிழ்நாட்டில் இன உணர்வு என்று சொன்னவுடனேயே, பலருக்கும் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலமும்’, ‘புலியும் முறமும்’தாம் முதலில் ஞாபகத்துக்கு வருகிறதென்று சொன்னால், என் வீட்டுக்கும் ஆட்டோ வரலாம். நான் சொல்வதெல்லாம், தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும் முரண்படாமல் அமைதியாகக் கூடி வாழ முடியுமென்பதைத் தான். அவை ஒன்றுக்கொன்று விரோதிகளல்ல. இதற்கு ஐம்பதுகளில் நமக்குப் போதிக்கப்பட்ட ஹிந்தி வெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். தேசியத்தையும் இந்தியையும் நாம் ஒருசேரப் பார்க்கிறோம். தமிழக அரசியலை வெளியிலிருந்து கவனித்து வருபவன் என்ற நிலையில், நம்மில் பலருக்குத் தேசிய உணர்வு என்பது நீர்த்துப்போயிருக்கிறதென்பதே உண்மை. சென்னைக் கோட்டையில் ஆண்டுக்கொருமுறை கூடித் தேசிய உறுதிமொழியை அச்சிட்ட காகிதத்தைப் பார்த்துப் படித்துவிட்டு, போகும்போது அதைக் காற்றில் வீசிவிட்டுத் தான் போகிறோம். தேசியம் என்பது நமக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி, தில்லி போகும் போது குளிருக்குப் போர்த்திக்கொள்ளும் ஒரு போர்வையாகவே உள்ளது. பட்டிமன்ற மேடைகளில் மட்டுமே பகத்சிங், லாலா லஜ்பத் ராய், ராணி லட்சுமிபாய் போன்ற பெயர்கள் ஒரு பேசுபொருளாக உதவுகின்றன. நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு நமது தேசியகீதத்தை முழுவதுமாக, கடைசி வரிவரை பிழையின்றி உரக்கப் பாடத் தெரியும்? நிச்சயமாக அது இந்திமொழி அல்ல! நாடாளு மன்றம் சென்னையிலிருந்து இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ‘இப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு என்ன சார் பிரயோசனம்?’ என்று பதில் கேள்விகேட்ட என் பக்கத்து வீட்டு இளைஞன்தான் இன்றைய சமூகத்தின் முகம்!
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26ஆம் தேதி தொடங்கும் நமது குடியரசு தின விழா 29ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு Beating the Retreat (போரை நிறுத்திவிட்டுப் பாசறைக்குத் திரும்பும்) நிகழ்ச்சியுடன் இனிதே நிறைவடையும். 2001ஆம் ஆண்டு மட்டும் அந்தச் சமயத்தில் நம் முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் இறந்துபோனதால் ‘பீட்டிங் தி ரெட்ரீட்’ நடைபெறவில்லை. 1690இல் இங்கிலாந்து இரண்டாம் மன்னர் ஜேம்ஸ் காலத்திலிருந்து நடந்துவருகிறது. போருக்குப் புறப்பட்ட படைகள் வெற்றிவாகை சூடிச் சூரிய அஸ்தமனத்துக்குப்பின் போரை நிறுத்திவிட்டு, மகிழ்ச்சியுடன் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பும் நிகழ்ச்சி. இந்தியா குடியரசான பின் 1950இல் மேஜர் ராபெர்ட் தலைமையில் முதல்முறை நடைபெற்றது.
நான் தில்லியில் இருந்தபோது ஒவ்வொரு வருடமும் நேரிலோ தூர்தர்ஷனிலோ தவறாமல் கண்டுகளிக்கும் நிகழ்ச்சி இது. எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காமல், ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர் பார்த்திருக்கும் முப்படைகளின் பிராஸ், பைப்ஸ், ட்ரம்ஸ் இசைக் கருவிகளின் சங்கமம். சரியாக மாலை ஐந்து மணிக்கு ராய்ஸினா குன்றின் மேலிருக்கும் ராஷ்டிரபதி மாளிகையிலிருந்து தாளகதி தவறாமல் வாசிக்கும் இசைக்கேற்ப விஜய் சௌக் நோக்கி அணிவகுத்து நடந்துவரும் முப்படை வீரர்களைப் பார்க்கப் புற்றிலிருந்து வெளிவரும் எறும்பு வரிசை போலிருக்கும். காந்திஜிக்கும் எனக்கும் மிகவும் பிடித்த ‘Abide with me…’ என்னும் பாடல் எப்போது வருமென்று காத்திருப்பேன். நடுவில் ட்ரம்கள் மட்டுமே பங்கெடுக்கும் தனியாவர்த்தனம். தொடர்ந்து முப்படைகளின் சக்ரவியூக அணியில் வீர் கார்கில், தேசோம் கா சர்த்தஜ், ப்யாரீ பூமி இப்படி வந்து காதையும் கண்ணையும் நிறைக்கும். ஒரு மணி நேரம்போவதே தெரியாது. கடைசியாக கோரஸில் ‘ஸாரே ஜஹான்ஸி அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (எல்லா உலகிலும் இனியது எங்கள் ஹிந்துஸ்தானம்) வாசித்துக்கொண்டு அனைவரும் திரும்பிப் போகும்போது நமது மனம் இசையில் கரைந்து, அவர்களோடு போய்விடும். அந்த அந்தியிருட்டில், மணிச் சத்தத்துக்கிடையே ராஷ்டிரபதி பவன், சௌத் ப்ளாக், நார்த் ப்ளாக், நாடாளுமன்றக் கட்டடம் எல்லாம் ஒரே நேரத்தில் வரிசை விளக்குகளால் ஒளிமயமாகக் காட்சியளிக்கும். அந்தக் கணத்தில் தேசிய உணர்வுள்ளோருக்கு நெஞ்சு இரண்டு இஞ்சாவது விம்மியிருக்கும்.
என் மூத்த மகள் ரேவதியின் திருமணம் ஜனவரி 29ஆம் தேதிதான்நடந்தது. அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர் நண்பர்கள், பார்க்க ஏதுவாகக் கல்யாண மண்டபத்தில் பெரிய திரையில் அன்று மாலை ஒளிபரப்பான ‘பீட்டிங் தி ரெட்ரீட்’ திரையிடப்பட்டது. கல்யாணக் கச்சேரி, இசை நிகழ்ச்சிக்குப் பதிலாக, ஆர்மியில் ‘பெரிய இடத்து’ சிபாரிசு மூலம் இந்திய ராணுவ இசைக்குத் தான் ஏற்பாடு செய்திருந்தேன். சாதாரணமாக ‘தனிநபர்’ நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் போவதில்லை. அந்த அளவுக்கு எனக்கு அதில் மோகம்.
இதுவரை இந்த இசை நிகழ்ச்சியை நீங்கள் பார்த்ததில்லையென்றால்,இந்த மாதம் கடைசி வெள்ளிக் கிழமை 29ஆம் தேதி மாலை ஐந்துமணிக்கு தில்லி தூர்தர்ஷனில் ‘பீட்டிங் தி ரெட்ரீட்’ நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். நமது ‘அசட்டு’ தூர்தர்ஷன்தான் சில உருப்படியான நிகழ்ச்சிகளை இன்னும் தந்து கொண்டிருக்கிறது! இந்த ஒரு மணி நேரம் மற்ற சானல்களில் வரும் மானாட மயிலாட. . ., டீலா நோ டீலா?…, சூப்பர் 10… அவனா அவளா?… , சிரி சிரி… மற்றும் ‘விடுமுறை தின’ சிறப்பு நிகழ்ச்சிகளை மறந்துவிட்டு இதைப் பாருங்கள். பெருமிதத்தில் உங்கள் நெஞ்சு ஒரு இஞ்சாவது விம்மிப் புடைக்காவிடில், பணம் வாபஸ்!
பாரதி மணி (Bharati Mani)
bharatimani90 at gmail dot com

0 comments:

Post a Comment