Friday, January 22, 2016

இன்று (ஜூலை 19, 2012) தினப்பத்திரிகைகளில் ஒரு செய்தி பார்த்தேன். இந்திரா காந்தியின் வலது கையாக இருந்த – அப்போது என் நெருங்கிய நண்பரும், இப்போது தொடர்பே இல்லாது விலகிவிட்ட – திரு. ஆர்.கே. தவன் (Mr. R.K. Dhawan) தனது 74-வது வயதில் திருமணம் செய்துகொண்டாராம். அப்போதும் இவரை ஞாபகமறதியில் கூட பிரும்மச்சாரி என்று சொல்லமுடியாது…..கல்யாணம் ஆகாதவர் என்று மட்டுமே சொல்லலாம்.
ஆர்.கே.தவன்
நேருவின் நம்பிக்கைக்குப்பாத்திரமான திரு. என்.கே. சேஷன் (இவரை பிரபலமான டி.என். சேஷனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது!) இந்திரா காந்தியிடம் ப்ரைவெட் செக்ரட்டரியாக சேர்ந்தபிறகு, ஒரு பஞ்சாபி அரசியல்வாதி யஷ்பால் கபூர் சிபாரிசின் பேரில் இளைஞர் தவன் P.M.O.வில் ஒரு ஸ்டெனோகிராபராகச்சேர்ந்தார். பஞ்சாபிகளுக்கே உரித்தான அடாவடித்தனங்களும், native intelligence-ம் உடையவர். படிப்படியாக விளம்பரத்தை சிறிதும் விரும்பாத, வயதான சேஷனை பின்னிருத்திவிட்டு, இந்திரா காந்தியின் உள்நாட்டுப்பயணங்களில் அவருடன் கூடவே இருந்தார். எண்பதுகளில் தில்லி விக்ஞான் பவனில் நடந்த Non Alligned Summit மாநாட்டில் இந்திரா சார்பில் வெளிநாட்டுத்தலைவர்களை வரவேற்றவர் நமது வெளியுறவுத்துறை மந்திரியல்ல…..தவன் மட்டுமே! எந்த ஒரு விஷயத்துக்கும் ”RK kahaan hai?……RK se bhol do……RK se pooch thee hun!’ என்று இந்திரா காந்தி இவரது உதவியை நாட ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் நான் வேலை பார்த்த கம்பெனியின் தலைவர் இந்திராவுக்கு நெருக்கமானார். அதில் தவன் பங்கும் இருந்தது. நாங்களிருவரும் நண்பர்களானோம். பன்ஸிலாலின் முக்கியச்செயலர் ராஜேஷ் மெஹ்தானியும் எனக்கு நெருக்கமானார்.
இந்திராவுடன் தவன்
அந்த சமயத்தில் தான் தில்லியின் Posh Colony-யான Golf Links-ல் ஒரு பெரிய வீடு வாங்கி குடியேறினார். அவர் வண்டியை அவரே ஓட்டிக்கொண்டு போவார். அவரது காரில் முன்பக்கத்தில் ஒரு சிறிய ‘பார்’: விஸ்கி, சோடா, முந்திரிப்பருப்பு….எல்லாமே இருக்கும்! தில்லி போலீஸ்காரர்களுக்கு அவர் பயப்படுவதில்லை…..அவர்கள் பயப்படுவார்கள்!
அவரிடம் கேட்டால், எமெர்ஜென்ஸி வந்ததற்கு இந்திரா காந்தி காரணமில்லையென்று அடித்துச்சொல்லுவார். எழுபதுகளில், மொரார்ஜி உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் இந்திரா ஒரு தலையாட்டி பொம்மையாக இராமல், தன்னிச்சையாக பல முடிவுகள் எடுத்ததை பொறுத்துக்கொள்ளமுடியாமல், தன் தலைவருக்கு தொடர்ந்து பல நெருக்கடிகளை உண்டாக்கியதாகவும், பிறகு தேவகாந்த் பருவா, ரஜனி பட்டேல், மோஸினா கித்வாய், உமாசங்கர் தீக்ஷித் (தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மாமனார்), சித்தார்த் சங்கர் ராய், பன்ஸிலால் போன்றோர் உடனடியாக எமெர்ஜென்ஸி அமல்படுத்தச்சொல்லியும், இந்திரா அவர்களது ஆலோசனையை கேட்கவில்லையென்றும் வாதிடுவார். 1975-ல் அலகாபாத் உயர்நீதி மன்றம் அவருக்கெதிராக தீர்ப்புச்சொன்னதும், வேறு வழியில்லாமல் தான் இந்திரா காந்தி சித்தார்த் சங்கர் ராயுடன் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதைப்போய்ப்பார்த்ததாகவும், தான் இரவு ஒருமணிக்கு மீண்டும் ராஷ்டிரபதி பவன் போய் Emergency Proclamation-ல் ஜனாதிபதியின் கையெழுத்தைப் பெற்றதாகவும் சொல்வார். இந்திரா காந்தி பிறகு எமெர்ஜென்சிக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவர் குற்றமற்றவர் என்றும் வாதிப்பார்!
ஜனதா ஆட்சியின்போது, இந்திரா காந்தியின் அட்டூழியங்களை ஆராய அமைக்கப்பட்ட ஜக்மோகன் ரெட்டி கமிஷன் முன் அவருக்கெதிராக சாட்சியங்கள் சொன்ன அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களை, 1980-ல் மறுபடியும் இந்திரா ஆட்சிக்கு வந்தபோது, அவர்களை ஒவ்வொருவராக லிஸ்ட் போட்டு, ஆப்படிக்கும் வேலையில் தவனும், சஞ்சய் காந்தியும் மும்மரமாக இருந்தார்கள். அவர்களது அதிர்ஷ்டம், சில மாதங்களிலேயே சஞ்சய் ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார்.
இந்திரா புகைப்பட கண்காட்சியில் தவன்
இந்திரா காந்தி மறைவுக்குப்பின் வந்த ராஜீவ் சந்தேகத்தில் இவரை கொஞ்சநாள் ஒதுக்கியே வைத்திருந்தார். பிறகு இவரை ராஜ்ய சபா மெம்பராகவும் காங்கிரஸ் காரியக்கமிட்டியில் அங்கத்தினராகவும் சேர்த்துக்கொண்டார். இந்தத்தலைமுறையில் அரசியல் சன்யாசம் வாங்கிக்கொண்டுவிட்டார். இப்போது பேரனுக்கு பெண் தேடும் வயதில், தனக்கு ஒரு கல்யாணமும் செய்துகொண்டார்!
நேரு-காந்தி குடும்பத்தின் இன்னும் வெளிவராத – ’அன்னை’ சோனியா காந்திக்கும் தெரியாத – பலப்பல ’உயர் ரகசியங்கள்’ இவருள்ளே புதைந்திருக்கின்றன. நல்லவேளை……நேருவின் செயலரான M.O. மத்தாயைப்போல (அந்த ‘ரகசியங்களை’ வெளியிட்டு) நானும் ஒரு புத்தகம் எழுதப்போகிறேனென்று சொல்லி, காங்கிரஸ் மேலிடத்தை இவர் பயம் கொள்ளச்செய்யவில்லை! தன் மகளுக்கு அமைந்ததைப்போல ஒரு விசுவாசச்செயலர் நேருவுக்கு அமையவில்லை! எமர்ஜென்ஸிக்குப்பிறகு வந்த ஜனதா அரசு இவரை கைது செய்து, துன்புறுத்தி, கைகளைக்கட்டி பனிக்கட்டியின் மேல் பலமணிநேரம் படுக்கவைத்து, ‘உனக்கு நிறைய அரசாங்க ரகசியங்கள் தெரியும்….சிலவற்றையாவது சொல்!’ என்று மிரட்டியபோதும், வாயைத்திறக்காதவர்.
ஜனதா ராஜ்யத்தில் ஒருநாள் இரவு என் வீட்டுக்கு வந்திருந்தார். களைப்போடு இருப்பதாகவும், ஒரு பெக் ராயல் ஸல்யூட் பொருத்துமாறும் சொன்னார். அவர் எதிர்கொண்டிருந்த பல கஷ்டங்களை விவரித்தார். அவர் காரில் ஏறிப்போன ஐந்தாவது நிமிடம் வாசல் மணி அடித்தது.  வாட்டசாட்டமாக இரு போலீஸ் அதிகாரிகள். ‘இப்போது வந்தவர் யார்?’…பெயரைச்சொன்னேன். “அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’…….ஒன்றுமில்லை…….அவர் என் நண்பர்…..’எதற்காக வந்தார்?’……’நண்பனாக ஒரு பெக் அருந்திவிட்டு என்னோடு பேசிக்கொண்டிருக்க வந்தார்…..’காங்கிரசுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’……….உங்களுக்கும் எனக்குமுள்ள சம்பந்தம் தான்!…….’நீங்கள் உடனே கோட்லா முபாரக்பூர் போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டும்!’……இந்த ராத்திரி வேளையில் வாரன்ட் இல்லாமல் நான் எங்கேயும் வரத்தயாரில்லை. நாளை காலை பத்துமணிக்குமேல் நீங்கள் எங்கே கூப்பிட்டாலும் வருகிறேன். அதற்குள் எங்கேயும் ஓடிவிட மாட்டேன்! ”. இருவரும் ஹரியான்வியில் ஏதோ தனியாக பேசிவிட்டு, ‘இனிமேல் இப்படி செய்யாதீர்கள்!’ என்று சொல்லி ஜீப்பில் ஏறிப்போய்விட்டார்கள்.
பல வருடங்களாக அவரிடம் தொடர்பு இல்லை. இப்போது அடையாளம் தெரியுமோ…என்னவோ? லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக ஒரு வாழ்க்கைத்துணைவியைத் தேர்ந்தெடுத்ததற்கு என் வாழ்த்துகளும்….பாராட்டுக்களும்!
—-0000ooooo0000—-

1 comment: