Friday, January 22, 2016

உள்ளே நுழைந்ததும் ஏசியின் ’சில்’ நம்மை ’கூல்’ ஆக்குகிறது. அரங்கு பரவலாக நிறைந்திருக்கிறது. சின்னதாக ஒரு ஒளி மேடையில் நகர, முன் வந்து பேச ஆரம்பிக்கிறார் கடவுள், இல்லை.. இல்லை… பாரதி மணி.. “நமஸ்காரம். எல்லாரும் வந்தாச்சுன்னு நினைக்கறேன். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே சில அறிமுக வார்த்தைகள்…” என்று துவங்கி அவர் பேசப் பேச அந்தக் குரலில் கட்டுண்டு நாம் மெள்ள மெள்ள நாடகத்துக்குள் ஆழ்கிறோம்.
”சென்னை அரங்கம்” அரங்கேற்றிய சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்” நாடகம் தான் அது. சில நாடகங்கள் படிக்க சுவாரஸ்யமானவையாக இருக்கும். ஆனால் நாடகமாகப் போட முடியாது. சுந்தரம் பிள்ளையின் ”மனோன்மணீயம்” ஒரு உதாரணம். சில நாடகங்கள் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் படிக்க ’சப்’ என்று இருக்கும். சில துணுக்குத் தோரண நாடகங்களை இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால், சுஜாதாவின் நாடகங்கள் படிக்க, பார்க்க சுவாரஸ்யமானவை மட்டுமல்ல; நடிக்கவும் சவாலானவை. அதைத் மிகத் திறம்படக் கையாண்டு வெற்றி கண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பூர்ணம் விஸ்நாதன். மற்றொருவர் பாரதி மணி. முன்னவர் சென்னையிலும், பின்னவர் டெல்லியிலும் சுஜாதாவின் நாடகங்களை அரங்கேற்றி அதற்கு புதுப் பரிமாணத்தை அளித்தனர் என்று சொன்னால் அது மிகையில்லை.
சுஜாதாவின் நாடகங்கள் மத்திய தரப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதில் சயன்ஸ் பிக்‌ஷன், நவீன ஹை-டெக் சாமியார்களின் தந்திரம், காதல், நகைச்சுவை என்று எல்லாம் கலந்த கலவையாக எழுதப்பட்ட நாடகம் “கடவுள் வந்திருந்தார்”. 1980களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாடகம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகும் சுவை குன்றாமல் இருக்கக் காரணம் சுஜாதா எழுத்தின் வல்லமை. கூடவே அன்றைக்கான மத்தியமரின் பிரச்சனைகள் மாறாது இன்றும் தொடர்வதும்தான்.
நாடகத்திற்கு வருவோம்.
ஒரு 58 வயது கதாபாத்திரத்தில் ஒரு 76 வயது மனிதர் ஆடி, ஓடி, பாடி அசராமல் நடித்திருக்கிறார் என்றால் அது நாடகத்தின் மீது அளவற்ற பற்றுக்கொண்ட ஒரு நாடகக் காதலரால் மட்டுமே முடியும். அவர் சுஜாதாவின் காதலாரகவும் இருப்பது கூடுதல் பலம். வசுவைப் பெண் பார்க்க வரும் நாற்காலியில் படுத்துக் கொண்டு போடும் ஆட்டம், பெண்ணோடு சேர்ந்து பாடும் பாட்டு, மணியை வாங்க வேண்டி சிறுமி அம்பிகாவைத் துரத்திக் கொண்டு ஓடும் ஓட்டம் என தன் துடிதுடிப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விட்டார் பாரதி மணி என்னும் இளைஞர். சுழலும் விழிகள், அதற்கேற்றவாறு மாறும் உடல் பாவனைகள், சைகை மொழிகள் என்று ஒரு அனுபவம் வாய்ந்த தேர்ந்த நாடகக்காரரை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிந்தது. கூட நடித்த பத்மஜா நாராயணன் மிகவும் பாந்தமாக நடித்தார். (எப்படி விதம் விதமாக காட்சிக்கு காட்சிக்கு அவ்வளவு சீக்கிரம் ’மடிசார்’ கட்டிக் கொண்டு வந்தார் என்பது ’மடிசார்’ பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு ஆச்சரியமான விஷயம்) வசுவாக நடித்தவர் “வெளுத்து” வாங்கி விட்டார். சீனிவாசனுக்கு சமமான பாத்திரம் சுந்தர் கேரக்டருக்கு. அதை அவர் சிறப்பாகவே செய்தார். சொல்லப்போனால் எந்த மிகை நடிப்பும் இல்லாமல் அவர் நடித்தது மிக இயல்பாக இருந்தது. ஆனால் கொஞ்சம் ”பிராமணத் தமிழ்”தான் ஆங்காங்கே ஒத்து வரவில்லை. சேஷகிரி ராவின் சேட்டைகள் உம்மணா மூஞ்சியையும் சிரிக்க வைக்கக் கூடியது.
ராமமூர்த்தியின் அப்பாவாக வருபவர் டிபிகல் அந்தக் கால ஆசாமிகளை (ஏன் இந்தக் காலத்திலும் இப்படி இருக்கத் தான் செய்கிறார்கள்) கண் முன் கொண்டு வந்தார். (கிருஷ்ணன் வெங்கடாசலம்?) பூசாரியாக நடித்தவர் (சுரேஷ் குமார்) மிக நன்றாக நடித்தார். அந்த முரட்டு மீசையும், கன ஆகிருதியான உடம்பும், உடுக்கை அடித்த விதமும் நிஜமாகவே அவர் பூசாரி தானோ என்ற சந்தேகத்தை உண்டு பண்ணியது. டாக்டர், போலீஸ்காரர்கள், ஆம்புலன்ஸ் ஆசாமி, ராமமூர்த்தி என எல்லோருமே இயல்பாக நடித்தனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் எதிர்கால மனிதனாக நடித்த “ஜோ”
இந்த மாதிரி நாடகங்கள் நடத்துவதில் ஒரு சிரமம், நாடகத்து நாயகனுக்கு அந்த எதிர்கால மனிதனைத் தெரியும். பார்க்க முடியும். பார்வையாளர்களுக்கும் தெரியும். பார்க்க, கேட்க முடியும். ஆனால் நாடகத்தின் பிற கதாபாத்திரங்களுக்கு அது தெரியாது. அது நாடகத்தில் வெளிப்பட வேண்டும். அதேசமயம் அது பார்வையாளர்கள் ரசிக்கும் படியாகவும் இருக்க வேண்டும். இது ஒரு சவால். இதுவே திரைப்படமாக இருந்தால் ”கேமரா” கோணங்களும், கிராஃபிக்ஸூம் எல்லாவற்றையும் காட்ட உதவும். ஆனால் நாடகத்தில் அது முடியாது. அந்தச் சவாலை சிறப்பாகவே அரங்கேற்றினர் நடிகர்கள்.
சுஜாதாவின் முத்திரைகள் ஆங்காங்கே வெளிப்பட்டு அரங்கை அதிர வைத்துக் கொண்டே இருந்தது.
”கொஞ்சம் கத்திர்க்காய் நறுக்கித் தரேளா?”
…………………..
“ எங்க வம்சத்தில ஒருத்தரும் கத்திரிக்கா நறுக்கினத்தில்லை”
”தினம் ஆபிஸ் போறாப்பல ஒரு பார்க்லயோ, லைப்ரரிலயோ போய் உட்கார்ந்துட்டு வாங்களேன். டிபன் கட்டித்தரேன்”
”திராவிடன் ஃபண்டுன்னு ஏதோ சொன்னீங்களே”
”அது பிராவிடண்ட் ஃபண்டு”
” ஒவ்வொரு கணமும் வச வச என்று என் இருதயம்”
“அய்யோ அது வச வச இல்லை. ’வசு’ப்பா…”
”பிள்ளைப் பேறு இருக்கா பாரு”
“ஓ அதுவா. நானும் ஒரு பெண்ணும் கை குலுக்குவோம். ஷ் ஷ் ஷ் அவள் பையிலிருந்து ஒரு சின்ன ஜோவை எடுத்துக் கொடுப்பா. நீங்க?”
“இங்க கை குலுக்கி பத்து மாசம் ஆகும். தேவலையே, இடுப்புவலி கிடுப்புவலி ஒண்ணும் கிடையாதா?”
இப்படி சுஜாதா டச்கள் ஆங்காங்கே நாடகத்தை விட்டு நம் கவனத்தை திசை திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றன. மத்தியமர்களின் பிரச்சனைகளோடு கூடவே ஆன்மீகத்தை நிறுவனமயமாக்கல், பொய், உண்மையாவது, செம்மறியாட்டுக் கூட்டங்களாய் மக்கள் சாமியார்களை நம்புவது – ”உண்மையச் சொன்னா பைத்தியம்ங்கறாங்க; பொய் சொன்னா கடவுளங்கறாங்க”, ”சுவாமிஜி என்ன அழகா மூக்கைச் சிந்தறார்”, ”சுவாமிக்கு ஜூரம் கூட வருமா என்ன”, ”யாரையாவது, எதையாவது விழுந்து சேவிச்சிண்டே இருக்கணும்” (இதை பகவான் ரமணர் கூட அடிக்கடிச் சொல்லியிருக்கிறார்) – வசனங்கள் அக்மார்க் சுஜாதா டச். (நவீன சாமியார்களுக்கும் அவர்களை கண்மூடித்தனமாக நம்பும் பக்தர்களுக்கும் இதை ஒரு ஸ்பெஷல் நாடகமாகப் போட்டு காண்பிக்க வேண்டும் பாரதி மணி சார்) மனிதன், கடவுளாக மாறி, அதிலும் சில நன்மைகள் விளைந்து, ஆனால் அவன் தன்னுடைய சுதந்திரத்தை இழப்பதை கிண்டலும், கேலியுமாக இன்றைக்கும் பொருந்தும் வகையில் சொல்லியிருக்கிறார் அமரர் சுஜாதா.
மேடை அமைப்பு, அரங்க அமைப்பு, லைட்டிங் கச்சிதம். அதுவும் பறக்கும் தட்டு பறந்து வருவது போல் வெண் திரையில் காண்பித்தது கூடுதல் சுவாரஸ்யம். நாடகத்தின் இறுதியில் அனைவரும் மேடையேறி ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்திப் பேசியது “பொம்மை”யையும், எஸ்.பாலசந்தரையும் நினைவுபடுத்தியது. பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் மேடையேறி, பாரதி மணி தன்னை நாடகத்துக்கு அழைத்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகக் கண்கலங்கிப் பேசினார். (இன்னுமொரு நூறாண்டு இருப்பீர்கள் பாரதி மணி சார், சுஜாதாவின் இன்னும் எத்தனை நாடகங்கள் இருக்கின்றன…)
நாடகத்துக்கு ஸ்பான்சர்கள் என்று யாருமில்லை. பாரதி மணியும் அம்ஜத்தும் லட்சக் கணக்கில் தங்கள் கைக்காசைச் செலவழித்துப் போட்டிருக்கிறார்கள் எனும் போது ஓசியில் பார்த்த எனக்குக் கொஞ்சம் உறுத்தத் தான் செய்தது. பாரதிமணியையும், ஓரிருவரையும் தவிர அனைவருமே இளைஞர்கள். தொழில் முறை நாடகக்காரர்கள் அல்லாமல் நாடக ஆர்வத்தால் வந்து நடிப்பவர்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்த வகையில் பார்த்தால் நிச்சயம் இந்த நாடகம் ஒரு வெற்றிகரமான நிகழ்வுதான். சாதனைதான்.
சரி, நாடகத்தில் குறையே இல்லையா? ஒலி அமைப்பு இன்னமும் சற்று கூடுதலாக இருந்திருக்கலாமோ என்பது என் எண்ணம். பத்மஜா நாராயணன் பேசிய சில வசனங்கள் ரொம்பவே மென்மையாக இருந்தது. (ஒருவேளை என் காது ’டமாரம்’ ஆகிக் கொண்டு வருகிறதோ? :-( )
அதே மாதிரி கதையில் ஒரு சின்ன தகவல் பிழையும் இருக்கிறது. நாடகத்தில் கதை நடக்கும் வருடம் 21-06-1982 என்று வருகிறது. (சுந்தர், வசுமதிக்கு எழுதிய காதல் கடிதத்தை சீனிவாசன் படிக்கும் போது சொல்வது) வசுமதி, தன் அப்பாவிடம், ராமமூர்த்திக்கு வயது 29. பிறந்த தேதி ஜூன் 6, 1949 என்கிறாள். அப்படியென்றால் 33 வயது என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்? (29 வயது என்றால் 1978 தானே வருகிறது) ஒருவேளை சுஜாதா இந்த நாடகத்தை முதன் முதலில் 1978ல் எழுதியிருக்கக்கூடும். அடுத்து வந்த பதிப்புகளில் அது மாற்றப்படாமல் இருக்கக் கூடும், அதையே ஸ்க்ரிப்டாக வைத்துப் படித்தனால் வந்த பிழை என்று நினைக்கிறேன். ஆனால் இது ஒரு பெரிய பிழை என்று சொல்ல முடியாது. கூர்ந்து கவனித்தபோது காதில் கேட்டது. That Doesn’t Matter.
அனல் மிகுந்த ஒரு மாலைப் பொழுதின் இரண்டரை மணி நேரங்களை, மிக ரம்மியமானதாக, இனிமையானதாக மாற்றிய பாரதி மணி, அம்ஜத் மணிமேகலை மற்றும் சென்னை அரங்கக் குழுவினர் அனைவருக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள். அடுத்தடுத்த நாடகங்களுக்கு, நல்ல ஸ்பான்சர்கள் கிடைத்து, நாடகம் தமிழகமெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடக்க எல்லாம் வல்ல அந்த ”ஸ்ரீரங்கம் ரங்கராஜன்”நிச்சயம் அருள் புரிவார்.
****
இந்தக் கட்டுரையாளர் அரவிந்த் சுவாமிநாதன்  பற்றி ஓர் சிறிய அறிமுகம்…
அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் மாத இதழின் Associate Editor திரு. அரவிந்த் சுவாமிநாதன் 

0 comments:

Post a Comment