Friday, January 22, 2016

அசோகமித்திரனுக்கு இரண்டாண்டுகளுக்குமுன் 80 வயது பூர்த்தியானதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இ.பா.வுக்கும் அ.மி.க்கும் ஒரே வயது. இ.பா.வுக்கு அவர் குடும்பத்தினர் ஒரு விழா நடத்தினர். உயிர்மையும் இ.பா-80 விழாவை சிறப்பாகக்கொண்டாடியது. அசோகமித்திரனை அப்போது மறந்துவிட்டோம்.
நவீன விருட்சம் அழகிய சிங்கர் செப்டெம்பர் 22-ம்-தேதி அசோகமித்திரன்-82 என்ற பெயரில் ஒரு விழாவை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள். ஆளுக்கு ஐந்து நிமிஷம். பலர் அதைத்தாண்டியும் பல நிமிஷங்கள் அசோகமித்திரனோடு தங்களுக்குள்ள பரிசயத்தை அழகாகச்சொன்னார்கள். கவிஞர் ரவி சுப்பிரமணியன் அ.மி.யைப்போலவே மிமிக்ரி செய்தது எல்லோரையும் ரசிக்கச்செய்தது. (எனக்குத்தெரிந்த திரைப்பட இயக்குநர்களிடம் அவர் பெயரை சிபாரிசு செய்யலாமென்றிருக்கிறேன்!)
அழகிய சிங்கர் என்னிடம் போனில் “சார்! உங்க நம்பரை தொலைத்துவிட்டேன். நீங்களும் அவரைப்பற்றி நாலு வார்த்தை பேசணும்’ என்று கேட்டுக்கொண்டார். நான் “அழைப்பிதழில் போட்டிருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் ஐந்து நிமிடத்துக்கு மிகாமல் பேசினாலே, கூட்டம் இரண்டுமணி நேரத்துக்குமேல் நடக்கும். நான் வழியில் போகும் ஓணான். என்னை ஏன் தொந்தரவு செய்து மற்றவர்களும் ‘குடைகிறதே!’ என்பார்கள். இந்த விஷப்பரீட்சை வேண்டாம்!’ என்று தடுத்துவிட்டேன்.
விழாவுக்கு வந்த அசோகமித்திரன், ‘இங்கே ரத்னா கஃபேயில் காபி சாப்பிட்டு நாளாச்சு. போயுட்டு வருவோமே’ என்று நண்பர்களுடன் கிளம்பி போயிருக்கிறார். அங்கே படியேறும்போது சற்று தள்ளாட்டம். அப்போது நண்பர்களிடம், ‘இன்னிக்கு பாரதி மணி கூட்டத்துக்கு வருவார். அவரிடமிருந்து எப்படியாவது அவர் Walking Stick தடிக்கம்பை ‘லவட்டிடணும்’ நமக்கு உபயோகமாக இருக்கும்!’ என்று சொல்லியிருக்கிறார். இந்த விபரத்தை கூட்டத்துக்கு முன்பே சுந்தர்ஜி என்னிடம் சொல்லிவிட்டார். தனது ஏற்புரையிலும் ‘அதோ உட்கார்ந்திருக்கிற பாரதி மணியிடமிருந்து தடியை லவட்டிடணும்னு சொல்லிண்டிருந்தேன்!’ என்றபோது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த நான், ‘ஸார்…..நீங்க லவட்ட எல்லாம் வேண்டாம்.  நான் பாரி, ஓரி பரம்பரையில் வந்திருந்தால் என் கையிலிருக்கும் கம்பையே இப்போது கொடுத்திருப்பேன். ஆனால் வீடு திரும்பும்போது நான் குடிக்காமலே தள்ளாடுவேன். இன்னும் இரண்டுநாட்களில் உங்கள் வீடு தேடி இரு கம்புகள் வந்து சேரும். என்றேன். அவரது ‘லவட்டிடணும்’ பதப்பிரயோகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!
இருநாட்களில் என் நண்பன் மூலம் இரு கம்புகள் அவர் வீட்டுக்கு போய்ச்சேர்ந்தன. உடனே, அவரிடமிருந்து போன் கால். ‘மணி! நான் எதோ விளையாட்டுக்கு சொன்னேன். இனிமெ இதெ வெச்சு நடக்கப்பழகணும். தாங்க்ஸ்….மணி!’ நான் சொன்னேன்: ’ஒரு கண்டிஷன்…….இதை வீட்டிலோ, வெளியிலோ துஷ்பிரயோகம் செய்யக்கூடாது!
அந்த பெரிய எழுத்தாளருக்கு என்னால் எழுதுகோல் கொடுக்கத் திராணி இல்லை……ஊன்றுகோலாவது கொடுக்க முடிந்ததே! தன்யனானேன்!

0 comments:

Post a Comment