Thursday, January 21, 2016


பாரதி மணியை முதலில் நான் அவரது எழுத்துக்களில் சந்தித்தேன்.தமிழகத்தை சேர்ந்தவர்.வட இந்தியாவில் பன்னெடுங்காலம் வசித்தவர்.தனது டில்லி அனுபவங் களை பாரதிமணி தனித்த ஆளுமைத்திறனோடு விவரிப்பதை கேட்பதே சுகானுபவம்.
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை யில் தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் இரண்டு விழாக்கள் உயிர்மை சார்பாக நடைபெற்றன.ஒன்று மதியம்.இன்னொன்று மாலை.மதியம் நடந்த நாலு நூல்களின் வெளியீட்டுவிழாவை நான் தொகுத்து வழங்கினேன்.சென்னையில் அது எனக்கு முதல் மேடையானது.
அந்த விழா முடிவடைந்தது 5.30 மணி.அதே மேடையில் மாலை மனுஷ்யபுத்திரனின் “பசித்த பொழுது” என்னும் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நிகழ்ந்தது.நான் அந்த மேடையில் மனுஷ்யபுத்திரனின் அந்த புதிய தொகுப்பில் இருந்து “இயேசுவைக் கொல்லும் வழி” என்னும் கவிதையை நான் வாசித்தேன்.நான் வாசித்த விதத்தை அதன் பின்னால் சந்திப்புகளில் சிலபலர் என்னைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.அவர்களில் ஒருவராகத் தான் பாரதிமணியை எனக்கு அறிமுகம்.

பாரதிமணியை அதன் பிறகு இரண்டு மூன்று முறைகள் சந்தித்திருக்கிறேன்.முகப்புத்தகத்தில் அவர் எப்போதெல்லாம் நுழைகிறாரோ…அப்போதெல்லாம் எதாவது கமெண்ட் இடுவார்.அவரைப் பார்த்தால் ஒரு வயோதிகர் என்ற எண்ணமே வராது எனக்கு.அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களே அயர்ந்து விடுகிற இக்காலத்தில் பாரதி மணிக்கு எத்தனை வயது என்பது வெறும் புள்ளி விபரம் மட்டுமே.அவர் ஒரு இளைஞர். நிசமான இளைஞர்.அவரை வெறுமனே புகழ்வதற்காக இதனை எழுதவில்லை.என்னளவில் முதுமை இனிது. எப்போது..?பாரதிமணி போல அதனை எதிர்கொள்கையில் மட்டும்.

சென்ற மாதம் பாரதியார் நினைவகத்தில் (திருவல்லிக்கேணி) “அசோகமித்திரன் 82” என்ற நிகழ்ச்சி நடந்தது.மதுரையில் இருந்து பன்முக வருகையாக நானும் அன்பு நண்பன் பயஸும் சென்றிருந்தோம்.அங்கே எதிர்பாராத வண்ணம் பாரதிமணியைப் பார்த்தேன்.,
மனிதர் குன்றாத உற்சாகனாய் என்னோடு எழுந்து நினைவில்லத்தின் வாசலுக்கு வந்தார் பாரதிமணி. அந்த மாலை அவ்வளவு உற்சாகமாய் மாறிப்போகும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.
ரஜனியுடன் பாபா படத்தில் நடித்த தனது அனுபவத்தை பாரதிமணி விவரித்தது ஒரு ஸ்வாரஸ்யம் என்றால் ரஜனியுடனான தனித்த அனுபவங்களை அவர் சொன்னது இன்னோர் ஆச்சர்யம்.அம்ரீஷ்பூரி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நடிகர்களுடனான தன் உறவுகளை அனாயாசமான குரலில் அவர் சொன்னது ரசம்.
பாரதி மணியின் கையில் கைத்தடி ஒன்று இருந்தது.அவரது தனித்துவங்களில் ஒன்றான பைப்பை அவர் ,புகைப்பது மிடுக்கு.அவரது கைத்தடியை அனாயாசமாக அவர் கையாள்வது கம்பீரம்.எதையும் சுருக்காமல் விரிக்காமல் அவர் பேசுவது என்பது அவரது சிறப்பு.அவர் ஒரு நடமாடும் அனுபவங்களின் தொகுப்பு.சில மனிதர்களுடன் தான் நம்மால் ஒரு சிறப்பம்சத்தை உணரமுடியும்..அது யாதெனில் நேரம் செல்வதறியாது லயிக்கிறதை அதனை பாரதிமணி இடத்தில் என் அனைத்து சந்திப்புகளிலும் நான் கண்டிருக்கிறேன். தன்னை ஒரு மனிதன் உச்சபட்சமாக ஆசீர்வதித்துக் கொள்வதற்கான ஒரே வழி தான் உண்டு.அது… மனதில் இளமை.பழகுவதில் குழந்தமை.இரண்டும் வாய்த்த நற்பிறவி…. பாரதிமணி. தொடர்ந்து அன்பு பாராட்டுவோம்

0 comments:

Post a Comment