Friday, June 17, 2016

bharatimani
நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு 85 வயது, இந்திரா பார்த்தசாரதிக்கு 86 வயது, இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்புக்கு 83 வயது, ஆ. மாதவனுக்கு 84 வயது இவர்களெல்லாம் இன்றும் மிகச்சிறந்த உரையாடல்காரர்களாக இருக்கிறார்கள். புதியவர்களை சந்திப்பதில் ஒருபோதும் உற்சாகமிழக்காதவர்களாகவும் அபாரமான நகைச்சுவையுணர்வோடும் இருக்கிறார்கள். முதுமையின் சினிக்னெஸ் இவர்களிடம் சுத்தமாக இல்லை கவனித்திருக்கிறீர்களா என்றார்.
நல்ல அப்சர்வேஷன் சார்.. காரணம் என்ன என்றேன். அவர்களுக்குள் இருக்கும் ரசனையே காரணம் என்றார். கிரியேட்டிவிட்டியும் வாசிப்பும் கலைத்தேட்டமும் அவர்களை ஒரு ஆயுளுக்குள் பல்வேறு நிகர்வாழ்க்கை வாழ வைக்கிறது. ஆகவே, தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு சராசரி மனிதனின் கசப்புகள் இவர்களிடம் மண்டியதில்லை என்றார்.கலைஞனுக்கு வயதாக வயதாக அவனது கலைமனம் இளமையாகிறது என மெலட்டூர் கிராமத்தில் ஒரு பாகவத மேளா கலைஞர் சொன்ன வரிகளை நான் நினைவு கூர்ந்தேன். தன் எண்பதாண்டு கால வாழ்வில் கசப்பின் சிறு நிழலும் எட்டிப் பார்க்காத பன்முக நுண்கலைஞன் பாரதி மணியைக் கொண்டாடும் நிகழ்வில் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்கிறேன் நண்பர்களே..
இந்த மேடையில் பொன்னீலன் இருக்கிறார். எழுத்தாளன் ஒரு சராசரி அல்ல அவனொரு ஆளுமை என பதின்மத்தில் என் மனம் பதிய காரணமாக இருந்தவர் அவர். பதினைந்து வயதில் நண்பர் ஈஸ்வர சுப்பையா உதவியுடன் பொன்னீலனைப் பேட்டி கண்டிருக்கிறேன். அவர் திகசியால் உந்தப்பட்டு எழுத வந்தவர். இன்று புதியதாக எழுதவரும் பலருக்கு திகசியின் பின்னத்தி ஏராக இருந்து உற்சாகமளிப்பவர்.
தோப்பில் முகமது மீரானின் ஐந்து நாவல்களுக்குமே வடிவ ஒழுங்கு கொடுத்தவர் திகசி. பொன்னீலனும் திகசியும் எடுத்த பெருமுயற்சியில்தான் சாய்வு நாற்காலிகளுக்கு சாகித்ய அகாதமி கிடைத்தது. தமிழில் சிறுபான்மை இலக்கியத்தின் மீது விழுந்த முதல் வெளிச்சம் அது என்றே கூறலாம். அவரும் இந்த அவையில் இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. அமைப்புகளால் தொகையால் அல்ல பெற்றுக்கொள்ளும் மனிதர்களாலேயே விருதுகள் கெளரவம் கொள்கின்றன.
இந்த விருது பாரதிமணியின் பல பத்தாண்டு கலைச்சேவைக்கு அளிக்கப்படுகிறது. நந்தா விளக்கு விருது அமைப்பாளர்களுக்கு என் பாராட்டுகளைப் பதிவு செய்து கொள்கிறேன்.
வாழும் கலை
பள்ளிப்பருவத்தில் மு.வ எழுதிய பெர்னார்ட் ஷாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். அச்சிறுநூல் இளமையில் மகத்தான மன எழுச்சியை ஊட்டியது. ஒரு நாடக ஆசிரியனாக, எழுத்தாளனாக, அரசியல் சமூக விமர்சகனாக மட்டுமல்லாமல் சமரசமில்லா வாழ்வை செதுக்கிக்கொண்டவராகவும் அவர் எனக்கு தெளிவானார். அவரை வாழும் கலையின் பிதாமகன் என்றே மனம் சொல்லியது. விதிக்கப்பட்ட வாழ்வை அல்ல நீ வாழ விரும்பும் வாழ்வை உன்னால் அமைத்துக்கொள்ள முடியும் என ஒரு கிராமத்துச் சிறுவனுக்குள் விழுந்த முதல் விதை அப்புத்தகம். பின்னாட்களில் பாரதிமணி எனக்கு அறிமுகமானபோது ‘ஹா.. தன் வாழ்வை அழகாக செதுக்கிக்கொண்ட மனிதர் இவர்’ எனும் எண்ணமே தோன்றியது.
தொழில், இல்லறம், நாடகம், இலக்கியம், இசை, நண்பர்கள், மது, எழுத்து என எல்லாவற்றையுமே தன் வாழ்வை மேலதிக அழகும் செறிவும் இனிமையும் கொண்டதாக்கிக் கொண்டவர் அவர். மது அவருக்கு குடிக்கப்பட வேண்டியதோ அடிக்கப்பட வேண்டியதோ அல்ல.. சுவைக்கப்பட வேண்டிய ஒன்று. அவரது மதுசாலை உள்-அலங்கார நிபுணரான அவரது மனைவியால் டிசைன் செய்யப்பட்டது. ஒரு லட்ச ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைக்க முடிகிற காலத்தில் ஒன்னேகால் லட்சத்தில் வீட்டில் குடிமனை அமைத்தவர் அவர். வெங்கட் சாமிநாதனின் சொற்களில் சொல்வதானால் “மணிக்கு எதுவும் வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வேண்டும்”
எஸ்.கே.எஸ் மணி எனும் நிர்வாகி
ஓர் இளம் மேலாளனாக நான் எப்போதும் வியப்பது பாரதி மணியின் காரிய சித்தியை. கார்ப்பரேட் பாஷையில் அவர் ஒரு ‘Go Getter’. விராத் கோலி அளவுக்கு most reliable brand. அவரால் மாலை விருந்திற்கு எவரெஸ்ட் உச்சியிலிருந்து ஐஸ்கிரீமுக்கு பனிக்கட்டியை கொணரவும், வீட்டு வாசலில் வெள்ளை யானையை நிறுத்தவும் முடியும் என்பது அன்றைய டில்லியின் புகழ்மிக்க சொலவடைகள். சுப்புடுவால் வாங்க முடியாத ஒரு பென்ஸ் காருக்கான அனுமதியை மணி ஒரே நாளில் சுளுவாக வாங்கி விடும் சம்பவத்தை ஓர் எளிய உதாரணமாக இங்கே நினைவு கூர்கிறேன்.
சுஜாதாவின் ஓலைப்பட்டாசு தொகுதியில் ‘பீட்டர்’ என்றொரு சிறுகதை. சிவா பீட்டர் இருவரும் கல்லூரி விடுதியறை தோழர்கள். சிவா அபாரமான ஒழுக்கவாதி. தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடித்து ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து மேலாளராகப் பதவி உயர்கிறான். எந்நேரமும் கிடாரும் போதையுமாக திரிந்து கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட பீட்டர் ஒரு நிறுவனத்தின் தலைவர் ஆகிவிடுகிறான். இது என்ன வாழ்வின் நியாயம் என குமுறும் சிவாவிற்கு தான் வளர்ந்த கதையை பீட்டர் சொல்கிறான். தொழிலாளர் பிரச்சனையால் முடங்கி கிடக்கும் ஒரு தொழிற்சாலையை தன் அணுகுமுறை மனிதர்களை கையாளும் திறனால் பீட்டர் இயங்க வைக்கிறான். பாரதி மணி மேலாண்மை கல்லூரிகளில் படித்தவர் அல்ல. அவர் கற்றதெல்லாம் நடிப்பும் இலக்கியமும்தான். ஆனால் பாரதி மணிக்கு மனிதர்களைத் தெரியும். ஓவ்வொரு மனிதனும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அதற்குரிய மரியாதையை அவர் ஒருபோதும் வழங்கத் தவறியதில்லை. பாரதிமணியின் புகழ்மிக்க மேற்கோள்களின் ஒன்று என் அலுவலக வாழ்வில் எப்போதும் பயன்படக் கூடியது ‘நேரான விரலில் வராத நெய்.. வளைந்த விரலில் வரும்’
எழுத்தாளர் பாரதி மணி
திரு ஒருமுறை கேட்டாள் ‘பாரதிமணி ஏன் 74 வயதில் எழுத வந்தார்?’ வீட்டிற்குள்ளே க.நா.சு; அலுவலகத்தில் சுப்புடு; வாழும் ஊரில் வெங்கட் சாமிநாதன். இத்தனை கடுவன் பூனைகளை மடியில் கட்டிக்கொண்டு ஒருவர் எப்படி எழுத முடியும் என்று வேடிக்கையாக பதில் சொன்னேன். டில்லி வாழ்வுக்குப் பின் சென்னை திரும்பி ‘பாரதி’ படத்தில் நடித்த மணிக்கு அந்த அடையாளமே சுமையாக மாறிப்போனது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நாடக கலைஞராகவும் இசை விமர்சகராவும் விளங்கிய அவரை ஒரு துணை நடிகராக மட்டுமே அடையாளம் காண்பது பொருத்தமானதல்ல. அந்தச் சுழலில் சுப்புடு மரணத்தையொட்டி அவர் எழுதிய புகழ்மிக்க அஞ்சலி குறிப்பு தீராநதியில் வெளியானது. பிற்பாடு மனுஷ்யபுத்திரனால் இழுத்து கொணரப்பட்டு உயிர்மையில் தொடர் எழுதலானார்.
நண்பர்கள் ஆக்ரோசமான விசையுடன் அரசியல் பேசும் தருணங்களிலும், ஊடகங்கள் உருவாக்கியளிக்கும் சித்திரங்களாலும் செவிவழி வதந்திகளாலும் உருவாக்கிக் கொண்ட அபிப்ராயங்களுடன் இன்று நிகழும் ஃபேஸ்புக் ரத்தக்களறி யுத்தங்களையும் புன்னகை மாறாத முகத்துடன் கடந்து செல்வது என் வழக்கம். ஓர் ஊடகவியலாளனாக ஒரு தரப்பின் உண்மைக்கும் மறு தரப்பின் உண்மைக்கும் மத்தியில் உண்மையான உண்மை எங்கோ தொலை தூரத்தில் மங்கிய ஒளியில் மயங்கிக் கிடக்கும் என்பதை அறியும் கூருணர்வு உண்டெனக்கு. இதன் பொருள் ஊடகக்காரனுக்கு ஞானக்கண் உண்டென்பதல்ல. நான் பூனைக்கண் கொண்டவனல்ல என்பதே. பாரதி மணி உயிர்மையில் தொடர் எழுதிய போது அந்த உண்மையான உண்மைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் இணைத்து எழுதக்கூடிய ஒரு ஆசிரியர் வந்து விட்டார் எனும் கொண்டாட்டம் என்னுள் கிளம்பியது. முதல் கட்டுரைக்கே வாசகர் கடிதம் எழுதிய ஜெயமோகன், அ.முத்துலிங்கம், தி.க.சி உள்ளிட்ட பலருள் நானும் ஒருவன். அன்றாட அரசியலுக்கு அப்பால், கார்ப்பரேட் தரகர்களாலும், பொலிடிக்கல் லாபியிஸ்டுகளாளுமே இந்த தேசம் நிர்வகிக்கப்படுகிறதெனும் பேருண்மை பெரும்பான்மை தமிழ் வாசகனுக்குப் பாரதி மணி மூலமே அறிமுகமானது. அவரது நீராராடியா உரையாடல் பற்றிய கட்டுரையை இங்கே நினைவு கூர்கிறேன்.
அவரது உரைநடை அதிவிரைவானது. பலரும் முதல் புத்தகத்திலேயே இந்த உரைநடை எப்படி சாத்தியம் என இன்றும் விழி விரிக்கிறார்கள். ஜெயமோகனை மனதில் வைத்து நாஞ்சில் அதை பார்வதிபுரத்து பிஜிரார்ஜித சொத்து என்கிறார். தமிழில் எழுதுவதற்கு முன்பே இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற புகழ்மிக்க ஆங்கில இதழ்களில் டெல்லியின் ஜாலவித்தை ஆங்கிலத்தில் பாரதி மணி பெயர் குறிப்பிடாமல் எண்ணற்ற கலைவிமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒன்றை செய்தியாக்கும் போதே உண்மை சற்று அடிவாங்கும் எனும் சொலவடை பத்திரிகையுலகில் உண்டு. பாரதி மணி எழுதும் விஷயங்கள் பேருண்மைகளின் தீவிரத்தால் கட்டப்பட்டவை. ’டேய் முட்டாப்பயலே.. நான் ஒருத்தன் என்னென்னமோ எழுதறேன்.. அதெல்லாம் உண்மைன்னு எப்படிரா நம்பறீங்க..’ எனும் கேள்வியை அவர் எல்லோரிடத்திலும் வைப்பார். என்னிடமும் ஒரு முறை கேட்டபோது நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் ‘நீங்கள் எழுதிய எல்லா விஷயங்களையும் அறிந்த இன்னொரு இணைமனம் வெசா.. நீங்கள் எழுதியதில் ஏதேனும் சரடு விட்டிருந்தால் அவர் உங்களை கட்டி வைத்து கபடி ஆடியிருப்பார் சார்..’ என்றேன்.
அசோகமித்திரன் தனது கட்டுரை தொகுப்பொன்றின் முன்னுரையில் இப்படி சொல்கிறார் ‘ஒரு நல்ல கட்டுரை சிறந்த சிறுகதை வாசித்த உணர்வை தரவேண்டும் என்பதே அதற்குரிய இலக்கணம்’ பாரதி மணியின் எல்லா கட்டுரையுமே சுயசரிதை தன்மை கலந்த சிறுகதைகளை வாசித்த உணர்வை கொடுப்பவை. தனியனுபவத்தின் மூலம் ஒரு காலகட்டத்தின் அறியப்படாத இணை வரலாற்றை தெரியப்படுத்துபவை. ஆகவே, வரலாற்றாவணங்களுக்கு இணையானவை.
அசோகமித்திரனின் எழுத்துக்களில் சுதந்திர காலகட்டத்தின் செகந்திரபாத் துலங்குவதைப் போல, அமுத்துலிங்கத்தின் வரிகளின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்ட இனங்களின் அவல வரலாறு ஆறாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல, நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் நாஞ்சில் நாட்டு வெள்ளாள வாழ்வு துலங்கி வருவதைப் போல.. ஆறாம் நூற்றாண்டு யமுனை நதிக்கரையில் தொடங்கி ஷாஜகனால் வடிவமைக்கப்பட்ட தில்லியின் மாபெரும் வரலாற்று நெடும்பயணத்தின் வரலாற்றைப் பதிவதில் பாரதி மணியும் ஒரு நீட்சி என்றே நான் புரிந்து கொள்கிறேன்.
சமீபத்தில் ஜெயமோகன் தளத்தில், இலக்கியம் ஒருவனின் வென்றெடுக்கும் உத்வேகத்தை மட்டுப்படுத்துகிறதா என்றொரு வினாவை எழுப்பியிருந்தேன். பல்வேறு தரப்பினரும் பல தரப்பட்ட கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். இறுதியாக ஜெயமோகன் ‘Compartmentalism’ முக்கியமானது. தொழில் வாழ்வில் இலக்கியத்தின் உணர்ச்சிகளையும், இலக்கியத்தில் தொழில் வாழ்வின் பிரச்சனைகளையும் கலந்து கொள்ள வேண்டியதில்லை. தொழிலுக்கான நேரம் மனநிலை தனி, இலக்கியத்திற்கான நேரம் மனநிலை தனி எனும் தெளிவு வேண்டும் என பதிலளித்தார்.
மகிழ்ச்சிகரமான வாழ்வை வடிவமைத்துக்கொண்ட மனிதனாகவும், பன்முக கலைஞனாகவும், எழுத்தாளனாகவும் வெற்றிகரமாக உயர்ந்து நிற்கும் பாட்டையாவைப் பார்க்கையில் அந்தக் கேள்வியே அபத்தமானது என இப்போது தோன்றுகிறது.
God bless you பாரதி மணி சார்!
(02/04/2016 அன்று நெல்லையில் பாரதி மணிக்கு நந்தா விளக்கு வழங்கிய போது ஆற்றிய உரை)
இந்த தலைப்பு ஓர் ஆச்சர்யத்தின் வெளிப்பாடு!

ஒரு ரசனையான மனிதனின் பல பரிமாணங்களை கண்டு வியந்து போனதின் விளைவு.

ஆமாம் இன்றைய பொழுது முழுதையும் என்னை ஆக்கிரமித்த ஒரு நூல் ஏற்படுத்திய பிரமிப்பு.

காலையில் சென்னை புறப்பட்டு கொஞ்ச நேரம் முன்புதான் வந்து சேர்ந்தேன். இடையில் இரண்டு மணி நேரம் காரிலேயே காத்திருப்பு. ஆனால் ஒரு நிமிடம் கூட அலுப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டது 

"புள்ளிகள், கோடுகள், கோலங்கள்"

இப்போது புரிந்து கொண்டிருப்பீர்களே,

ஆம் திரு பாரதி மணி அவர்கள் எழுதிய நூல்தான்.


சில வாரங்கள் முன்புதான் முகநூலில் அவருடைய நண்பர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு கிட்டியது. அதுவே இந்த நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்குவதற்கான தூண்டுதலாகவும் இருந்தது. 

ஒரு கலா ரசிகனாக, நாடக நடிகராக, அரசாங்க நெளிவு சுளிவுகளை கற்றறிந்த தொழில் நிறுவன நிர்வாகியாக, பல்வேறு ஆளுமைகளின் நெருங்கிய நண்பராக, திரைப்பட நடிகராக, தேர்ந்த சமையல் நிபுணராக பல முகம் காண்பிக்கிறார் திரு பாரதி மணி. 

ஐந்நூற்றி அறுபது பக்க நூலைப் பற்றி ஓரிரு பக்கத்துக்குள் அடக்குவது என்பது சாத்தியமில்லை. அதனால் அந்த முயற்சியில் நான் இறங்கவில்லை. 

நூல் முழுதும் இழையோடுகிற நகைச்சுவை இந்த நூலின் மிகப் பெரிய பலம். 

எதையும் மறைக்காமல் (தனது அளவான அதே நேரம் மிகுந்த ரசனையான மதுப் பழக்கம் உட்பட. சிவாஜி, ஜெமினி பற்றிய தகவல்களும் உண்டு) எழுதியுள்ள நேர்மை இன்னொரு பலம். 

ஜவஹர்லால் நேரு தொடங்கி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பேன்ட்ரி  கார் மேனேஜர் வரை பரிச்சயம்  உள்ளவர். வங்க தேச பிரதமராக பின்னால் பொறுப்பேற்ற ஹசீனா டெல்லியில் இருந்த காலத்தில்  அவருக்கு வங்க தேசத்து பத்மா நதியில் கிடைக்கும் "ஹீல்சா மீன்" கிடைக்கவும் செய்துள்ளார். டெல்லி நிகம்போத்காட் சுடுகாட்டில் பலருடைய தகனத்திற்கும் தூணாய் நின்றுள்ளார்.

ஆணவம் மிக்க அரசியல்வாதியாக இதுநாள் வரை நாம் அறிந்திருக்கிற ராஜீவ் காந்தியை டெல்லி விமான நிலையத்தில் அவரது அன்னை ஆட்சியை பறி கொடுத்திருந்த காலத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சோதனை செய்து படுத்திய போதும் அவர் பொறுமையாக இருந்தார் என்பது புதிய செய்தி.

அரசு வேலையை விட்டுவிட்டு தனது கம்பெனிக்கு வந்து சேருமாறு பிர்லா அழைக்கிற போது இரண்டு மடங்கு சம்பளமும் பழைய வேலைக்கான நோட்டீஸ் பீரியட் சம்பளத்தையும் கேட்கிற துணிவு எனக்கு பிடித்திருந்தது. அவரது கோரிக்கையை பிர்லா ஏற்கிறார்.

அது போல எல்லா முதலாளிகளும் எல்லா தொழிலாளர்களிடமும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

இந்த நூலில் அவர் எழுதியதை விட எழுதாமல் விட்டதுதான் அதிகம். 

அது போல இந்த நூல் பற்றி நான் எழுதாததுதான் அதிகம்.

தயங்காமல் இந்த நூலை வாங்கலாம். சுவாரஸ்யத்திற்கு நான் கியாரண்டி.

நீங்களும் சொல்வீர்கள்,

என்ன ரசனையான மனுஷன் சார் இவரு !!!!

Saturday, May 7, 2016

ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்ததால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ணமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டுரைகளை படித்தபோது நிச்சயமாக எதையோ  தவற விடுகிறோம் என்று தோன்ற வைத்து, பிறகு முழுதும் படிக்கச் செய்தது..

அனுபவம் கனிந்த மனிதனே புத்தகம் ஆகிறான் என்பதை ருசுப்பிக்கும் புத்தகம் இது. அனுபவ அறிவு கட்டுரைகளாக மாறும்போது டைரிக் குறிப்பாகவோ தகவல் களஞ்சியமாகவோ மாறிவிடும் அபாயம் அதிகம். பாரதி மணி இதை மிக லாகவமாக கையாண்டிருக்கிறார். அவரது நாடக மனம் இதற்கு அஸ்திவாரம் எனலாம். பிரத்யேக மொழி நடை எதுவும் இல்லை. ஆங்கில வார்த்தைகள் பல கலந்த சகஜமான உரையாடல் பாணி. சுவாரசியங்கள் மிகுந்த தொகுப்பு.
தன்னை முன்நிறுத்திக் கொண்டு பேசாத கட்டுரைகள். ஆனால் எல்லாவற்றிலும் நேரடியாக அவர் இருக்கிறார் - ராஜீவ் காந்தி கட்டுரை தவிர.

பூடகமாக எதையும் சொல்வதில்லை. பல விஷயங்களை தேங்காய் உடைப்பது போல 'பட்' என உடைக்கிறார். சொல்ல முடியாதவற்றை சொல்ல முடியாது என்றே சொல்லிப் போகிறார். நிறைய நெத்தியடிகள், அங்கதங்கள், இயல்பான நகைச்சுவைகள்   உண்டு.

நிம்போத் சுடுகாடுசுப்புடுசிங் இஸ் கிங்நீரா ராடியா கட்டுரைகள் மிகச் சிறந்தவை.  நீரா ராடியா கட்டுரையெல்லாம் இவர்தான் எழுதவேண்டும். எத்தனை பெரிய ஆளுமைகளை  எல்லாம் சந்தித்து இருக்கிறார், அந்த நிகழ்வுகளின் அங்கமாக இருந்திருக்கிறார் எனும்போது பிரமிப்பு மட்டுமல்ல, நாம் சந்திக்க வேண்டிய முக்கியமான நபர் இவர் என்பதை உணர வைக்கிறது. இத்தகு கட்டுரைகள் மூலம் அறியப்படவேண்டிய இவருக்கு திரைப்படத்தில் வரும் புகைப்படத்துக்காக பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது அக்கிரமம்.

இனி கட்டுரைகளில் இருந்து சில சுவாரசியங்கள்

கட்டுரை முழுக்க ரயில் நிறைய இடங்களில் வருகிறது.  நீண்ட பிரயாணங்களுக்கு அப்போதெல்லாம் கட்டுச் சாதம்தான். தயிர்சாதம் இரண்டாம் நாள் புளிக்க ஆரம்பிப்பதால் அதில் சீனி கலக்காத பால் சேர்த்துக் கொள்ளும் வயணம் இவரை  'நள' அடையாளம் காட்டுகிறது.

நாதசுரம் (நாகசுரம் என்பது இவருக்கு பிடிக்கவில்லை ) பற்றி நல்ல ரசிகராக எழுதுகிறார். மற்ற வாத்தியம் போல் அன்றி நாதசுரம் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் அது கர்ணகடூரம் ஆகும் என்பது முழு நிஜம். மூச்சு மூலம் வாசிப்பதால் இது வாய்ப்பாட்டுக்கு அருகில் உள்ள கலை. (திருமாலின் திருமார்பில் என்ற திரிசூலம் படத்தில் வரும்  பாட்டுக்கு ட்ரம்பெட் சுருதி பிசகி மானத்தை வாங்குவதை கேட்டிருப்பீர்கள். )

கநாசு பூணூல் அணியாதவர். இவரது திருமணத்துக்கு மாமனாராக பூணூல் அணிகிறார். எதற்காக உங்கள் விருப்பத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் என்று இவர் கேட்கும்போது 'உங்கள் குடும்பத்தினருக்கு இதில் மரியாதை இருக்கிறது. அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை' என்றார் என்று க.நா.சு பற்றி எழுதுகிறார். நிறைகுடங்கள் சப்தமிடுவதில்லை. இங்கே இரண்டு குடங்களை நாம் பார்க்க முடிகிறது.

புத்தாண்டு நாள் தவிர பிற நாட்களில் கநாசு மதுவை பொருட்படுத்துவதில்லை.  கீழே மது பார்ட்டி நடக்க இவர் ஒரு கோப்பையில் ராயல் சல்யூட் கொண்டு போய் மாடியில் இருக்கும் காநாசுவிடம் வைக்கிறார். அவரும் சரி என்கிறார். காலை வரை அது அப்படியே இருக்கிறது.  இதில் நாம் புரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கிறது.  மது என்பதை குடி என்கின்ற பொதுப்புத்தியில் இவர் கருதுவதில்லை. அப்படி வாழ்ந்ததும் இல்லை. தில்லி வாழ்வுக்கு நெருக்கமான ஒரு அங்கம் அது. இந்த புத்தகத்தில் உள்ள பாராட்டுக் கட்டுரையில் கூட சிலர் அவர் மதுபற்றி வெளிப்படையாக சொல்லுவதை விதந்து சொல்கிறார்கள். அவரது கட்டுரையை படித்தபின்னும் அவர்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆச்சரியம் என்று தெரியவில்லை.

பிரசித்தமான தில்லி குளிர் பற்றி சொல்லும்போது ஏதோ ஒரு ஸ்வெட்டரை அணிவதால் அதன் உள்ள லைனிங் கிழிந்து உண்டாகும் அவஸ்தையை சொல்லும்போது ஒற்றன் நாவலில் அசோகமித்திரன் விளக்கும் ஸ்வெட்டர் நினைவுக்கு வருகிறது.  தில்லியாக இருந்தாலும் தீபாவளி தவிர பிற எல்லா நாட்களிலும் பச்சைத் தண்ணீர்தான் குளிப்பதை இவர் சொல்லும்போது நம் உடல் விறைக்கிறது. ஸ்வெட்டர் பின்னி முடித்தபின் உண்டாகும் பெருமகிழ்ச்சி பற்றி சொல்லும்போது இந்த தலைமுறை இப்படியான அனுபவத்தை நழுவ விடும் வருத்தம் நம்மை தொற்றிக் கொள்கிறது.  இதை எல்லாம் சொல்லி ரிக்ஷாக்காரர்கள் உறையவைக்கும் குளிரில் நடைபாதைகளில் படுத்திருப்பதையும் சொல்கிறார். அது தரும் குற்ற உணர்ச்சியையும் சொல்கிறார்.  இவர்களுக்காக கட்டி வைத்திருக்கும் ஓய்வு அறைகளில் இவர்களது உடைகள் திருடு போகின்றன என்பதையும் சொல்கிறார். அப்போது குளிர் சுடுகிறது.  (கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா சொல்லும் தில்லிக் குளிர் நினைவில் வரும்.)

சில சமயங்களில் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை என்று உணரும் சமயங்கள் உண்டு. எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் ஒரு வார்த்தை அல்லது செயல்.  பாரதி மணியை பிர்லா அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்ள அழைகிறார். இவர் போனவுடன் அந்த இடமே அதிகாரத்தின் உயர் இடம் என்று சொல்கிறது. சம்பளம் உனக்கு சற்று உயர்த்தி தருகிறேன் என்று அவர் சொல்லும்போது அதை இப்படி எழுதுகிறார்.  'அவரிடம் கேட்டேன்  If you can double my salary. என் குரல் எனக்கே கேட்டது ! "

பிராமணாள் ஹோட்டல் என்ற போர்டுகள் பற்றி சொல்லும்போது மிக தெளிவான  ஒரு நியாயத்தை சொல்கிறார். அது சாதி சார்ந்த அடையாளம் அல்ல . ருசி சார்ந்த அடையாளம். சோம்பு  இல்லாத மசால் வடை வேறெங்கும் கிடைக்காது என்பது அது.

ராவுஜி மெஸ்ஸில் வழக்கமாக சாப்பிடும் ஒருவர் வேலை இல்லாமல் தவித்தபோது மூன்று மாதம் அவருக்கு இலவசமாக சாப்பாடு போட்டு வந்தார் என்ற விஷயம் படிக்கும்போது ஜெயமோகன் சோற்றுக் கணக்குகதையில் வரும் கெத்தெல் சாகிபுவை நினைவூட்டுகிறது.

ஒரு கடையில் சட்டினி பற்றி சொல்லும்போது கடலை மாவு வைத்து எண்ணெய் குளியல்போது தலையில் வழியும் மாவை உதாரணமாக சொல்வது நல்ல நக்கலடிப்பு.

தற்போது கார்பரேட் உலகில் நடப்பதை டிவி சானல்கள் கூப்பாடு போட்டு ஊதுவதால் அது தெரிகிறது. இத்தகைய நீக்குப் போக்குகள்  எப்போதும் நடப்பதுதான்.  என்பதை நீரா ராதியா கட்டுரையில் அறிய முடியும்.  கொலை விஷயமாக மட்டும் இருந்திராவிட்டால் தற்போது டெங்கு ஜுரத்தில் இருக்கும் பெண்மணி பெரும் அதிகாரப் பாவையாக இருந்திருப்பார் அல்லவா!. ஒரு டெல்லிக்காரந்தான் இதை எழுத திராணி உள்ளவன் எனலாம்.

நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு வரும் ராமச்சந்திரன்  ஐ.ஏ.எஸ். அலுவலகம் வரும்போது  அதை சற்றும விரும்பாத கிருஷ்ண மேனன் நாளை முதல் உன்னை இப்படிப் பார்க்கக் கூடாது என்கிறார் கறாராக. அதற்கு ராமச்சந்திரன் பணிவாக நாளை இப்படி என்னைப் பார்க்க மாட்டீர்கள்  என்று சொல்லி அன்று மதியமே வேறு ஒரு துறைக்கு மாற்றல் வாங்கிப் போய் சாகும் வரை மேனனைப்  பார்க்கவில்லை என்ற செய்தி ஆச்சரியமூட்டுகிறது. 

நுணுக்கமான சில விஷயங்களை சொல்கிறார்........................ அதில் சில துளிகள்.

'சாயங்காலத்து குழந்தை ரெடியா" என விழா மேடையில் உள்ள சிவாஜி இவரை அழைத்துக் கேட்பது மதுப்புட்டியை பற்றித்தான். LKA -50 L  என ஒரு டைரியில் மந்திரி எழுதி இருப்பது லஞ்ச ஊழல் வழக்கில் சிக்குகிறது.  அவர் LK  அத்வானி  என்கிற மாடு 50 லிட்டர் பால் கறந்தது என்று சொல்கிறார். கோர்ட் ஒத்துக் கொள்கிறது.  மேலும் மனதை கொஞ்சம் கசிய வைக்கும் செய்தி  கநாசு வின் மனைவி ராஜி அவருக்கு ஹார்லிக்ஸ் போட்டுத்  தந்தார். பிறகு கநாசு இறந்து போகவே அதன் பிறகு அவர் யாருக்கும் ஹார்லிக்ஸ் போட்டுத் தந்ததே இல்லை.

சீக்கிய படுகொலை சமயத்தில் நடந்தவற்றை சொல்லும்போது சாரு நிவேதா எழுதிய சிறுகதை நிழலாடியது.

எம்பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் சம்பளம் உயர்த்தும் விஷயத்தில் அது தங்களுக்கும் சாதகம் என்றாலும்  பெயரளவில் அதை எதிர்த்து இடதுசாரிகள் குரல் கொடுப்பதை feeble  protest  என்கிறார். மிருதங்கத்தில் ஒற்றை விரல் சுண்டும்போது உண்டாகும் ஒலி போல கச்சிதமான பதப்பிரயோகம் அது.   நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்னவெல்லாம் இலவசம் வசதி என்று  வீடு மின்சாரம் என்று பட்டியல் போட்டுக்கொண்டே வந்து இரண்டு கோடி தொகுதி மேம்பாட்டு நிதி என்று அதில் சேர்க்கிறார். இப்படி சில ஊசிப் பட்டாசுகளை நிறைய கொளுத்திப் போடுகிறார்.
காணாமல் போனவை:

இந்த கட்டுரை படிக்கும்போது  முன்பு இருந்து தற்போது எத்தனை விஷயங்கள் காணாமல் போயின என்று தெரிகிறது. உதாரணமாக  OYT தொலைபேசி (அந்த கஷ்டம் பட்டவர்களுக்குதான் தெரியும் ) - வாளி அடுப்பு - நூதன் ஸ்டவ் -  தம்பூர் மீட்டும் ரஜாய் தைப்பவர்கள் - ரயில்வே பிளாட்பாரத்தில் பந்தி சாப்பாடு - எனப் பல

அது தவிர இதில் தகவல்களுக்குப் பஞ்சமில்லை.

உதாரணமாக - India Foils நிறுவனத்தின் ஏற்றுமதி அலுமினிய தகடுகள் நிராகரிக்கப்பட்டதால் மத்திய அமைச்சர் கமல்நாத் அவருடைய அமைச்சர் நண்பரிடம் இதைப் பற்றி பேச ரயிலில் இனிமேல் அலுமினிய தகடுகளில் உணவு என்று அமைச்சர் உத்தரவிட்டது. அருந்ததி ராய் திரைப்படத்தில் நடித்தது - அவர் NDTV  பிரணாய் ராயின் ஒன்றுவிட்ட சகோதரி என்பது  - ஹசீனாவின் கணவர் (ஆமாம் வங்கம்தான் ) ரகசியமாக இந்திரா காந்தியின் தயவால் இங்கே   அஞ்ஞ்சாத வாசம் இருந்தது  அவர் கணவருக்கு அணுசக்தி துறையில் இந்திய பிரஜை என்ற சொல்லி வேலை கொடுத்தது - வங்கத்தின் பத்மா நதியில் கிடைக்கும் ஹில்சா மீன் விசேஷம் - சரண்சிங் நடத்தி வந்த Rural India  பத்திரிகையில் கநாசு சொற்ப நாட்கள் ஆசிரியராக வேலை செய்தது -  மெட்டி ஒலி டெல்லி குமார் அரவிந்த் சாமியின் அப்பா - டெல்லி ந்யூஸ்ஸ்ரீடர் ராமநாதன் சரத்குமாரின் அப்பா - முத்துசாமி தீட்சிதர் பூர்விகல்யாணி பாடியபிறகு உயிர் நீத்தார்,  போன்ற பாப்கார்ன் கொசுறுகளுடன் செய்திகள் -  பலப்பலப்பல

சிங் இஸ் கிங் அருமையான கட்டுரை. பாகிஸ்தானில் இருந்து வந்த சிங் சமூகம் பாஸ்மதியை நமக்கு கொடுத்த வெகுமதி என்பதும்  - 'இப்படிச் செய்தது தப்பில்லையா,'  என்று ஒரு முதிய சர்தாரைக் கேட்க, 'நேராக எடுக்க முடியாத நெய்யை விரல் வளைத்து எடுப்பதில் தப்பில்லை,' என்ற அவர் பஞ்சாபிக் கூற்றை வைத்த இடம்   சொல்லப்பட்ட விதத்துக்காகவே இந்த புத்தகம் உயர்ந்து நிற்கிறது.  போன மாதம் கூட பாகிஸ்தான் பாஸ்மதிக்கு புவிசார் குறியீடு தங்களுக்குத் தரவேண்டும் என்று நீதிமன்றம் சென்று அது மறுக்கப்பட்டதன் பின்னணியில் இதைப் படிக்கவேண்டும்.

சோஷல் ட்ரிங்கிங் என்பதைப் பற்றி தமிழர்களுக்கு இன்னும் தெளிவில்லை என்றும், தமிழர்களுக்கு தேசியம் என்பது டெல்லி போகும்போது போட்டுக்கொள்ளும் போர்வை என்றும் சொடக்குகிறார். நிஜம்.

யாரிந்த மணி?

சரி.. இந்த புத்தகம்  மூலம் நாம் காண முடிகின்ற SKS மணி யார்? 50களில் தென்னிந்தியாவிலிருந்து கிளம்பிப் போன, படித்த சூட்சுமமான மணி மணியான புத்திசாலி இளைஞர்களில்  ஒருவர். வேலை பார்த்துக்கொண்டே MBA வரை  படித்து புத்தியால் முன்னேறிய பலருள் ஒருவர். இதை புத்தகத்தின் பல இடங்களில் பார்க்க முடியும். இவர் பழகிய மனிதர்கள் எல்லாருமே பெரிய ஆளுமைகள் என்பதால் இவர் அதி மேல்தட்டு பேர்வழி என்று ஒரு பிம்பம் உண்டாகக் கூடும். ஆனால் அது முழு உண்மை அல்ல.

Mutton Tallow என்ற விஷயத்தில் அரசு வெளியிடும் பட்ஜெட் அறிக்கைகளில் உள்ள அறிவிப்புகளை புத்தி கூர்மையுடன் பார்த்து அலசியறிந்து அதில் உள்ளவற்றை ஒரு வக்கீலின் நுண்மையுடன் கையாளும் மத்திய வர்க்க புத்திசாலியின் அறிவு எப்படி வேலை செய்கிறது. பிர்லா கம்பெனிக்கு காற்றுவாக்கில் சொன்ன ஒரு வார்த்தை எப்படி 250 கோடியை லாபமாக்கியது என்பதில் ஒரு மணியைக் காணலாம்.

துரைராஜன் என்ற என் சித்தப்பா ஒருவர் சென்ட்ரல் எக்சைஸ் அதிகாரியாக இருந்தார். பட்ஜெட் சமயங்களில் வீட்டில் பள்ளிக்கூட பிள்ளை போல நிறைய புத்தகமும் காகிதமும் வைத்து நள்ளிரவெல்லாம்  குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பார். விடுமுறை நாட்களில் வரிவிதிப்பு சம்பந்த புத்தகங்களைப் படிப்பார். அவர் சொல்லுவார் "எல்லா விதிகளின் புது  மாற்றங்கள் குறித்து தெளிவாக கச்சிதமாக தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சின்ன கவனப் பிழையில் லட்சக்கணக்கில் வரிவசூல் நழுவிவிடும். அரசாங்கத்துக்கு நஷ்டம் என்பார் அவர். SKS மணிகள் பற்றிய எச்சரிக்கை அவருக்கு இருந்திருக்கிறது என்று இப்போது தெரிகிறது. ஆனால் இந்த டாம் அன் ஜெர்ரி ஆட்டம்தான் அரசாங்கம்.

வினோத் என்பவர் ஒரு டெலிபோன் உடனடி இணைப்பு கேட்டு அதற்கு இவர் முயல, ஏளனமாக இவரிடம் அவர் 5000 ரூபாயை பையில் வைக்க மறுநாளே ஒரு பைசா செலவு இல்லாமல் அதைச்  செய்து முடித்து, 'செக் பண்ணிக்கோங்க,' என்று சொன்னதில் ஒரு மணியைக் காணலாம்.

குன்னக்குடி வைத்யனாதனுக்காக விருதுக்காக இரண்டு வருடம் முயன்று மூன்றாவது வருடம் இயல்பாகவே வந்து விட அதற்கு இவரை பாராட்டும் குன்னக்குடியிடம் இவர் காட்டிய மௌனத்தில் ஒரு மணியைக் காணலாம்.

Beating retreat என்பது பற்றி தெரியாத இளைஞர்கள் பற்றி சினக்கும் இடத்தில் நெஞ்சு விம்மும்  ஒரு மணியைக் காணலாம் 

இந்த புத்தகத்தின் சிறந்த கட்டுரைகளில் ஒன்றான நிகம்போத் சுடுகாடு பற்றி பேசாத வாய் இருக்க முடியாது. பாடை கட்டுவதில் எனக்கு இணையில்லை என்று சொல்லிக் கொள்ளும் பரம எளிய மணியை இங்கு காணலாம். இறப்புச் செய்தி கேட்டால் யார் என்று தெரியாவிட்டாலும் 500 ரூபாயை பையில் செருகிக்கொண்டு நிகம்போத் சுடுகாடு கிளம்பும் ஒரு மணியைக் காணலாம்.

இப்படி அடிக்கடி போய்ப் போய் அங்கிருக்கும் வெட்டியான்களே பழக்கமாகிவிட ஒரு முறை போகாவிட்டால் எங்கே காணோம் என்று கேட்கும் அளவுக்கு சகஜமான ஒரு மணியைக் காணலாம்.

இந்த கட்டுரை படிக்கையில் என்னுடைய தந்தை நினைவு வருகிறது. அவர் எந்த இடத்தில் எந்த பாடையில் யார் பிணம் போனாலும் ஒதுங்கி நின்று கைகூப்பி அல்லது கண்மூடி மரியாதை செய்வார். ஒரு முறை பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் யாரோ ஒரு பெண் ஏதோ பிரச்னையில் பூச்சி மருந்து குடித்து இறந்துவிட அந்த பிணம் சாலையில் போகும்போது அவசர அவசரமாக அருகில் இருந்த ஓட்டல் ஒன்றுக்குள் நுழைந்து மாடிப்படி வளைவில் அவர் குலுங்கி அழுதது நினைவுக்கு வருகிறது.

தில்லியில் உத்தியோகத்தில் குப்பை கொட்ட தேவையான 7 விஷயங்கள் என்று சொல்வதில் சற்றும் சங்கோஜமோ மறைவோ இல்லாமல் விளம்பும் தைரியம் இவர் எளிமையிலிருந்தும் வரும் பாசாங்கற்ற முகத்தில் ஒரு மணியைக் காணலாம்.

ஒரு பேட்டியில், 'எழுத்தாளன் என்று என்னை சொன்னால் கூசுகிறது' என்கிறார். அது அவர் அடக்கம். ஆனால் இவ்வளவு அனுபவங்களை வைத்து நூறு சிறுகதைகள் அவர் எழுதி விடலாம். அந்த லாகவம்  தெரிகிறது. உதாரணமாக - நிம்போத் சுடுகாடு கட்டுரையை ஒரு சைக்கிள் ரிக்ஷா பாபாவைச் சொல்லி தொடங்குகிறார். பிறகு பலவும் சொல்லி விட்டு இப்போது பாபாவை சொன்னதன் காரணத்தை முடிச்சு போடுகிறார். 
பூர்ணம், சுஜாதா, டப்பிங் செய்திகள், தேசியவிருதுகள், செம்மீனுக்கு இவர் செய்த முயற்சிகள், போன்றவை முன்பே பல கட்டுரைகளில் நிறைய பேசப்பட்டுவிட்டன.  அப்போது தில்லி வாழ் தமிழர்கள் இலக்கிய உலகம் மற்றும் நாடக உலகில் இருந்த அந்நியோன்னியங்கள் விழாக்கள் வரவேற்புகள் அறிமுகங்கள் அதிகாரங்கள் என அனைத்தையும் மத்தாப்புத்  தெறிகளாக நாம் இதில் காணமுடியும்.

அண்ணா முதல் எம்ஜியார் வரை பலருக்கும் நன்றாக தெரிந்தவராக உதவி செய்திருந்தும் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு முறை கூட அவர்களை சென்று சந்தித்தது இல்லை என்பதில் ஒரு மணியைக் காணலாம்.

புள்ளிகள் வைத்து கோலம் போடுவதில் புள்ளிகளை தொட்டு இணைத்தபடியும், தொடாமல் வளைத்தும் கோலம் போடப்படுவதுண்டு. அப்படி இவர் பல 'புள்ளி'களை தொட்டும் தொடாமலும்  போட்டிருக்கும்  கோலத் தொகுப்பு  - "புள்ளிகள் கோடுகள் கோலங்கள்".  பாரதி மணி அவர்களை - ஒவ்வொரு மணியை ஒவ்வொன்றில் நாம்  காண முடிந்தாலும் எல்லாமே ஒரே மணியின் பல ஒலிகள்தான் என்பதையும்  நாம் அறிய முடியும்.

இந்த சிறப்பு புத்தகத்துக்கா? பாரதி மணிக்கா? 

ஒன்றில் உள்ள மற்றொன்றுக்காக.

''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்'' – பாரதி மணி – வம்சி பதிப்பகம்.
இணையத்தில் வாங்க - உடுமலை, நூல் உலகம்

-- ------------------------------------------------------------------------------------------------------------

Sunday, February 14, 2016


நாடகமே உலகம் 
நாடி, நரம்பு, நடிப்பு 
மனிதனை மகிழ்வித்த, ஆசுவாசப்படுத்திய, சிந்திக்கத் தூண்டிய தாய்க்கலையான நாடகக்கலையின் ஆளுமைகளைச் சந்திக்கும் மேடைதான் இந்த நாடகமே உலகம் !

‘உங்களுக்கு, ஜெயகாந்தன் மாதிரி இன்டலெக்ச்சுவல் அரொகன்ஸ் கொஞ்சம் இருக்கு’ என்று நண்பர் ஒருமுறை சொல்ல, ‘கொஞ்சம் இல்லீங்க, நிறையவே இருக்கு. அப்புறம் இன்டலெக்ச்சுவல் எல்லாம் இல்லை, வெறும் அரொகன்ஸ் மட்டும்தான் இருக்கு!’ என்றவர் ஷி.ரி.ஷி. மணி. தற்போது ‘பாரதி’ மணி. நாடக உலகத்தாரும், சினிமா உலகத்தாரும் கலைத் தந்தையாகப் பார்க்கும் இவரை, இன்றைய தலைமுறையினருக்கு, ‘பாரதி’ திரைப்படத்தில் பாரதியாருக்குத் தந்தையாக நடித்தவர் என்று சொன்னால் தெரியும். ஏழு வயதில் நாடக நடிகராக அரிதாரம் பூசியவருக்கு, இப்போது 78 வயது. 

71 வருட நடிப்பு அனுபவம். தமிழகத்தின் மூத்த நாடக எழுத்தாளர்கள் அனைவரின் கதைகளையும் நாடகமாக அரங்கேற்றியவர். நவீன நாடகத்தை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். ஆயிரக்கணக்கான மேடைகளில் மைக் தவிர்த்து நடித்தவர். ‘ஐயா உங்களுக்குக் குரல் நல்லா இருக்கு, நீங்க மைக் இல்லாம நடிச்சுருவீங்க. மத்தவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?’ எனக்கேட்டபோது, ‘மைக் இல்லாமப் பேசுறதுக்குக் குரல் எழும்பாதவனை வீட்டுக்குப் போகச் சொல்லு!’ என்று கர்ஜித்தவர். 

‘நாடகமே உலகம்’ தொடரை இந்த ஆதிப்புள்ளியில் இருந்து துவங்குவதுதான் ஆகச்சரி என்று, ‘பாரதி’ மணியைச் சந்திக்கச் சென்றோம். "வாங்க, வாங்க!" - 80 வயதை எட்டயிருப்பவரின் குரலில் இருந்த திடம், அன்று இவர் மைக் வேண்டாமென்று சொன்னது ஆச்சர்யமில்லை என நினைக்கவைத்தது. தன் புகை ஊதுகுழலை எடுத்து, "புகைபிடிக்கும்போது பக்கத்துல இருக்குறது உங்களுக்கு ஒண்ணும் சங்கடமா இருக்காதே?" என்றார். "இல்லை" என்றோம். "ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன். நீங்க சங்கடமா இருக்கும்னு சொன்னாலும், மத்தாயிக்கு ம__ரா போச்சுன்னு, குடிக்க ஆரம்பிச்சுடுவேன்" என்றார். இதுதான் இன்டலக்ச்சுவல் அரொகன்ஸ்போல என்று நாம் யோசிக்க, "மத்தாயிக்கு ம__ரா போச்சுன்னா என்னன்னு தெரியுமா?" என்று கேட்டு, ஒரு மலையாள கிருத்தவ பக்தனின் கதையைச் சொல்லிச் சிரிக்கிறார். 

‘சுத்தமா நடிக்கத் தெரியாது, உங்ககிட்ட வந்தா கொஞ்சம் ஒழுக்கம் கத்துக்குவான்’னு எங்கப்பா ஏழு வயசில் என்னை நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையோட அனுப்பிவெச்சார். பள்ளிப்படிப்பு முடியும்வரை, எல்லா கோடை விடுமுறைகளிலும் அவரோட நாடகங்கள்ல நடிச்சுட்டு வந்தேன். எஸ்எஸ்எல்சி முடிச்சுட்டு நாகர்கோயில், இந்துக் கல்லூரியில அப்ளிக்கேஷன் போட்டுட்டு, ரெண்டு மாசம் சும்மா இருக்கணுமேனு டெல்லியில இருந்த எங்க அக்கா வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே கத்துக்கிட்ட டைப்ரைட்டிங் அங்க எனக்கு ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’-ல வேலை வாங்கிக்கொடுத்தது.

வேலை, மாலைநேரக் கல்லூரினு வாழ்க்கை போயிட்டிருந்தப்போ, உள்ளூர இருந்த நாடக ஆசையால 1956ல ‘தக்ஷிண பாரத நாடக சபா (DBNS)’  ஆரம்பிச்சேன். முதல் நாடகமா, பம்மல் சம்பந்தம் அவர்களோட ‘சபாபதி’ நாடகத்தை தயாரிச்சு இயக்குனேன். தொடர்ந்து நாடகம் போட்டுட்டு இருக்கும்போதே, 1962ல நேரு ஆரம்பிச்ச ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து ரெண்டு வருஷம் படிச்சேன். அங்கதான் நாடகங்களை அறிவியல்ரீதியா எப்படி அணுகணும்னு கத்துக்கிட்டேன். உலக நாடகங்கள், இந்திய நாடகங்கள் அங்கதான் அறிமுகமாச்சு. மேடையில பேசிட்டிருக்கும்போது கையை எப்படி வெச்சுக்கணும், எப்படி நிக்கணும்னு ஆரம்பிச்சு அங்க கத்துக்கிட்டதுதான், நவீன நாடகங்களை உருவாக்கக் காரணமா இருந்துச்சு. அந்த நேரத்துலதான் டெல்லி கணேஷ், பாலச்சந்தர், கோமதி சுவாமிநாதன் போன்றோரின் அறிமுகங்களும், அவங்களோட நாடகங்களை டெல்லியில போடுறதுக்கு வாய்ப்பும் கிடைச்சது. பரிதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பாம்பே, சென்னைனு இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான மேடைகளில் நாடகம்போட்டிருப்போம்" என்ற தன் நெடிய வரலாறைச் சுருக்கமாகச் சொன்ன ‘பாரதி’ மணி, தனக்கும், நடிகர் நாகேஸுக்கும் உள்ள ஆழமான நட்பைச் சொல்லி கண் கலங்குகிறார். பின் தானே தொடர்கிறார்.

"நடிகர் நாசர், சத்யராஜ் ரெண்டு பேரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘மணி சார்... நாம ஒரு நாடகம் போடணும்’னு சொல்றது வழக்கம். ‘உங்களைவிட ரொம்ப பிஸியான நஸ்ருதின் ஷா, ஓம்பூரி மாதிரி நடிகர்கள் எல்லாம் சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும்போதே, கிடைக்குற கூலியைப்பத்திக் கவலைப்படாம நாடகங்கள்லயும் நடிக்குறாங்க. நாடகத்துல நடிக்குறதுக்குப் பெரிய மெனக்கெடல் வேணும், அர்ப்பணிப்பு வேணும். நீங்க என்னை ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் இதேதான் சொல்லுவீங்க. அதனால வாயிலேயே பாயாசம் வைக்குறது வேண்டாம்’னு அவங்களுக்கு நேராவே சொல்லிடுவேன்!" - இந்த இடைவெளியில் நாடகத்தின் மீதான நஸ்ருதின் ஷாவின் அர்ப்பணிப்பைப் பற்றி வியந்து பேசுகிறார். 
 
இப்போது ஏன் நாடகங்களில் நடிப்பதில்லை?
"50 வருஷம் டெல்லியில இருந்தேன். அங்க நிறைய நண்பர்கள் இருந்தாங்க. அவங்ககிட்ட அதிகாரப்பிச்சை எடுக்குறது வழக்கம். காசு கொடுக்கலைன்னா, நீ உயிரோட இருக்க மாட்டேனு சொல்லி உரிமையோட மிரட்டி, 40 ஆயிரம் ரூபாய்வரைக்கும் கலெக்ட் பண்ணி, அந்தக் காசு தீர்றவரைக்கும் நாடகம் போடுவோம். இங்க யார்கிட்டயும்போயி யாசகம் கேட்க முடியாது. யாரையும் எனக்குத் தெரியாது. ஸ்பான்ஸர்ஷிப் கேட்டுப்போனா, ரெண்டு நாள் கழிச்சு வரச் சொல்லுவான். அவன் பின்னாடியேபோயி கைகட்டி நிக்க நம்மளால முடியாது. நாடகம் போடணும்னு எங்கிட்ட வந்து பேசுறவங்ககிட்ட நான் சொல்றது, ‘கைக்காசைப் போட்டு நாடகம் போடாத, அப்புறம் கஷ்டப்படுவ. நீ நாடகம் போடலைன்னா கலைத்தாய் தூக்குமாட்டிக்கப் போறதில்லை! " - அடுத்த கேள்விக்கு நாம் தயாரான நொடிகளில்,

"இப்படிக் கால்மேல கால்போட்டு நான் சொல்ல முடியும் (கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார்)... நாடகத்துல இருந்து அஞ்சு பைசா நான் என் வீட்டுக்குக் கொண்டுபோனதில்லை!" ‘நவீன நாடகத்துக்கான விதை டெல்லியில் ஷி.ரி.ஷி. மணியால் போடப்பட்டது’ என்று ஒருமுறை கலை விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் இவரைப்பற்றி எழுதியதை அவருக்கு நினைவுபடுத்திக் கேட்டோம். "எல்லாமே ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ கொடுத்த உத்வேகம்தான். ‘மழை’, ‘மஹா நிர்வாணம்’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’ போன்ற மிக வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றியதுனால கிடைச்ச பெருமை அது. இந்திரா பார்த்தசாரதியை துரத்தித் துரத்தி எழுதவெச்சு அதை நாடகமா அரங்கேற்றியிருக்கோம். அதுமாதிரியான நாடகங்களை இன்றைய தலைமுறையினர் நிச்சயமாப் பார்க்கணும்."

நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சமூகம் சினிமாவை நோக்கித் திரும்பியது. அந்தச் சமூகம் மீண்டும் நாடகத்தை நோக்கித் திரும்ப வாய்ப்பிருக்கிறதா?
"நாகர்கோயில்ல நான் இருக்கும்போது, ரெண்டு அணாவுக்கு ஒரு மசால் தோசை, ஒரு ரசவடை, ஒரு டிகிரி காபி கிடைக்கும். அந்த நாட்கள் திரும்பிவருமான்னு இப்பவும் நான் கேட்டுட்டிருக்கேன். அது எப்படி வராதோ அதே மாதிரி, முன்பு நாடகத்துக்கும், நாடக நடிகர்களுக்கும் இருந்த மரியாதையும் திரும்ப வராது; இந்தச் சமூகமும் மீண்டும் நாடகத்தை நோக்கித் திரும்ப சாத்தியமே கிடையாது. இதுதான் யதார்த்தம்!"- புகை ஊதுகுழல் பணி முடித்திருந்தது.

- விஷன்.வி
--இன்று தொடங்கிய மனம் இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்

Monday, February 1, 2016


அப்ப்ப்பா! ரொம்ப குளிருதே! ஏக ஐஸ் மழை! ஆமாம், இந்த நல்ல நண்பர்களெல்லாம் யாரைப்பற்றி சொல்கிறார்கள்? சத்த்தியமா, அது நான் இல்லை!

எனக்கு தில்லிக்குளிரும் பிடிக்கும். புகழுரைகளும் அதை விட பிடிக்கும். ஆண்டவனே ஸ்தோத்திரத்துக்கும் முகஸ்துதிக்கும் அடிமையாவானாம்... நான் எம்மாத்திரம்? I am really humbled.

இந்த நிறைந்த உள்ளங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்னால் நன்றி சொல்லத்தான் முடியும். நன்றி.....நன்றி!

                                                                                             பாரதி மணி


சமர்ப்பணம்

தில்லியில் தாயும் தமக்கையுமாக
இருந்து, நான் வளரக்காரணமாயிருந்த

என் அக்கா பகவதிக்கும் அத்தான் கணபதிக்கும்.

We cannot change our memories, but we can change their meaning and the power they have over us" - David Seamands

சிலரின் அறிமுகங்கள் முதல் சந்திப்பிலே நெருக்கம் கொண்டுவிடுகின்றன. அப்படி அறிமுகமானவர் தான் டெல்லி மணி. அப்போது அவர் பாரதி மணியாக அவதாரம் எடுக்கவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுபமங்களா  நாடகவிழாவின் போது க.நா.சு.வின் மருமகன் என்று கோமல் சுவாமிநாதன் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

வெளிப்படையான பேச்சும், எப்போதும் முகத்தில் ததும்பி நிற்கும் சிரிப்பும், பைப் பிடிக்கும் கம்பீரமும் மனத்தடைகள் அற்ற உரிமை கொள்ளலும் அவரிடம் நெருக்கம் கொள்ள வைத்தன. நவீன நாடகம், இந்திரா பார்த்தசாரதி, அல்காஸி என்று அன்றையப் பேச்சு நீண்டது. பாரதி மணியின் சிறப்பு நாமாக கேட்காமல் எதைப்பற்றியும் அவர் ஒரு போதும் பேசுவதில்லை. ஆனால் அவர் பேசத்துவங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உருவம் நம் கண்முன்னே வளரத்துவங்கி விஸ்வ ரூபம் கொண்டுவிடும். நவீன நாடகம், அரசியல், சினிமா. இசை, இலக்கியம், பயணம் என்று எவ்வளவு அனுபவம், எத்தனை மனிதர்களை அறிந்திருக்கிறார். எப்படி இந்த மனிதன் இத்தனை அமைதியாக இருக்கிறார் என்று வியக்க வைக்கும்.

தன்னை பகடி செய்து கொள்வதும், தனது அனுபவங்களை தன்னிலிருந்து பிரித்து விமர்சனம் செய்வதும் உயர்ந்த கலைஞர்களுக்கே சாத்தியமானது. அது பாரதி மணியிடமிருக்கிறது. சிரிப்பும், கேலியும், பகிர்ந்து கொள்ளப்படாத உள்ளார்ந்த துக்கமும், நினைவுகளை துல்லியமாக வெளிப்படுத்தும் நுட்பமும் அவரிடம் எப்போதுமிருப்பவை. மிகத் தாமதமாக அவர் எழுத்தாளராகியிருக்கிறார். இதையும் ஒரு விபத்து என்று சொல்லியே அவர் சிரிக்கிறார். உண்மையில் அவரது மனதில் உள்ளதில் ஒரு கைப்பிடியளவு கூட அவர் இன்னும் எழுதவில்லை.

பெரும்பான்மையினருக்கு அனுபவம் நேர்கிறது. சிலர் மட்டுமே அனுபவத்தை உருவாக்குபவர்கள். அதை தேடி அலைபவர்கள், நேர்கொண்டு அதன் சுகதுக்கங்களோடு தன்னை கரைத்து கொள்கின்றவர்கள். பாரதி மணி அப்படி ஒருபக்கம் டெல்லி சுடுகாட்டு மனிதராக வாழ்ந்திருக்கிறார் இன்னொரு பக்கம் டெல்லி சுல்தான் போல லண்டனில் பிரதமர் மொரார்ஜிக்கு பக்கத்து அறைவாசியாகவும் இருந்திருக்கிறார்.

டெல்லி நினைவுகளால் பீடிக்கபட்ட நகரம். அந்த நகரின் ஏதோவொரு வீதியின் பனிபடர்ந்த பின்னிரவில் நீங்கள் ஷாஜகானையோ, ஔரங்கசீப்பையோ கூட வீதியோரம் குளிர்காய்ந்தபடி காண முடியும். காரணம் அடங்க மறுத்த நினைவுகள் அந்த நகரில் பகலிரவாக அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ஊரில் வசித்தும் ஒரு மனிதன் எழுத்தாளன் ஆகவில்லை என்றால் அவனது புலன்கள் பழுதடைந்து விட்டிருக்கிறது என்றே அர்த்தம்.

பாரதிமணி வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர். நல்ல இசை, புத்தகம், சூடான காபி, நண்பர்கள், உலக சினிமா, நீண்ட தனிமை என்று அவரது வாழும் முறை அவர் விரும்பி உருவாக்கி கொண்டது. எல்லா அனுபவங்களையும் போலவே அவருக்கு தான் ஒரு எழுத்தாளர் ஆனதும் ஒரு அனுபவமே. ஆனால் வாசகர்களுக்கு அவை வெறும் அனுபவம் மட்டுமில்லை. வாழ்க்கையை அருகில் சென்று தோழமையுடன் கைகுலுக்கவும், அதன் விசித்திரங்களை கண்டு நகைக்கவும், வலிகள், வேதனைகளை எதிர்கொண்டு முன்செல்லவும் கற்றுத்தரும் பாடங்கள்.

தன்னை பெரிது படுத்திக் கொள்ளாமல் இருப்பதையே இயற்கை தன் ஒவ்வொரு துளியிலும் கற்றுத் தருகிறது. மலைகள் ஒரு போதும் சப்தமிடுவதில்லை. நம் குரலைத் தான் எதிரொலிக்கின்றன. தன்னை அறிந்த மனிதர்களும் ஒருவகையில் அப்படியே. பாரதிமணி அவர்களில் ஒருவர். இப்படி எவராவது தன்னைப் பாராட்டுவதை கூட அவர் பரிகாசமே செய்யக்கூடும். அது தான் அவரை இத்தனை அழகாக எழுத வைக்கிறது...........

--எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.


.                           ****              *****                              ****
க.நா.சு. தமிழின் இலக்கிய வரலாற்றில் பிரும்மரிஷி பிரதிஷ்டை பெற்றவர். அவரது புதல்வியை மணந்தவர், திருவனந்தபுரத்துக் காரர் எனும் அறிமுகத்துடன் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இங்கே எனது சாலை வட்டார வியாபாரஸ்தலத்தில் வந்து படியேறினார் இப்போதைய பாரதி மணி. எங்கள் பேச்சு அப்போது அவர் படித்து முடித்திருந்த எனது நாவல் கிருஷ்ணப்பருந்து பற்றியே இருந்ததாக ஞாபகம். அதன்பிறகு திருவனந்தபுரம் வரும்போதெல்லாம், நான் கடையில் இல்லாத சமயமாகப் பார்க்க வருவார்.

சமீபத்தில் பாரதி மணி உயிர்மை, தீராநதி போன்ற இதழ்களில் எழுதி வெளிவந்த கட்டுரைகளைப் படிக்க வாய்ப்புக்கிடைத்தது. ராஜீவ் காந்தி, அன்னை தெரசா, சங்கீத விமர்சகர் சுப்புடு, ரோஜாவின் ராஜாவான நேரு, அருந்ததி ராய் இவர்களைப் பற்றியெல்லாம் நகல் தரிசனம் போல கட்டுரைமணிகளுக்குப்புறம்பாக, நாதஸ்வரம் பற்றி, பங்களாதேஷ் தமிழர்கள் பற்றியெல்லாம் விரிவாக, ஆழமாக, அர்த்தஞானமுடன் எழுத்துமணிகள்......நிறைவில் நெகிழ்ந்துபோனதற்கு இன்னும் முக்கிய காரணமொன்றுண்டு......அது:

இங்கே திருவனந்தபுரத்தில் நான் வாழ்ந்து முட்டையிட்ட தமிழ் உலகின் திருவிதாங்கூர் ராஜவம்ச ஆட்சியின் மகத்வ வித்தாரங்கள், பத்மநாபர் ஆலய முறைஜப, லக்ஷ தீபோத்ஸவம் பற்றியெல்லாம் -- ஏதோ நானே எழுதியது போல இந்த பாரதி மணி, ‘நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் எனும் தலைப்பில் கட்டுரைச்சித்திரம் தீட்டியதைப் பார்த்தபோது, அறுபதிற்கும் மேல் ஆண்டுகள் நகர்ந்துவிட்ட சுந்தர சொப்பனங்கள் எல்லாம் அலை வீசி குளிர் நினைவுகளாக மனதில் புளகம் கொண்டன. அவரது சிறுவயது திருவனந்தபுரம் நினைவுகளை எப்படி அசை போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.

புத்தகங்கள் படித்த அறிவின் பிரதிபலிப்புகளாக கட்டுரை தீட்டிவிடலாம். ஆனால் பட்டறிவின் இழைகளை நேர்த்திச்சித்திரங்களாக எழுத்தில் அடுக்குவது நிபுணத்துவ ஞானத்தால் மட்டுமே சாத்தியமானது. பாரதி மணி இந்த நினைவுக்கட்டுரைகளை அழகிய இலக்கிய மணிமாலைகளாக கோர்த்துத்தந்துள்ளார். பாரதி மணி ஒரு பூ மரம். அவரது இந்த இலக்கியப்பணி இன்னும் இன்னும் பூத்துக்குலுங்க என் வாழ்த்துக்கள்........... 

--எழுத்தாளர் ஆ. மாதவன்.


                        ****                   *****                             ****