Friday, January 29, 2016


1970 என்று நினைக்கின்றேன். அன்று தில்லியில், ரஃபி மார்கிலிருந்த ஐஃபாக்ஸ் (AIFACS) அரங்கில் தட்சிண பாரத நாடக சபாவினர் ஒரு புதிய நாடகம் மேடையேற்றுவதாக இருந்தனர். அன்று மாலை ரீகல் பார்க்கில், ராஜாஜியின் தலைமையில் 'சோ' பேசுவதாக இருந்தார். கூட்டம் ஐந்தரை மணிக்கு. நாடகம் ஏழு மணிக்கு. தமிழர்கள் யாரும் நாடகம் பார்க்க வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தனர் பலர். ஆனால், ஒரே ஒருவர்தான், புதிய நாடகம் பார்க்க நிச்சியமாக வருவார்கள் என்று உறுதியுடன் சொன்னார். அவ்வளவு நம்பிக்கை அவருக்கு, அவருடைய சபா அங்கத்தினர்களிடம்.

ஏழுமணிக்கு அரங்கம் நிறைந்து வழிந்தது. அன்று அவ்வாறு சொன்னவர், அன்று எஸ்.கே.எஸ். மணியாக இருந்த இன்றைய பாரதி மணி. நாடகம், ‘மழை'. என்னுடைய முதல் நாடகம்.

அந்த நாடகத்தை நான் எழுதும்போது, யார் இதை மேடையேற்றுவார்கள் என்பதைப் பற்றி நான் யோஜிக்கவில்லை. ஆனால், இது மட்டும் என்னால் சொல்லமுடியும், அது அப்போது மணி மூலம் மேடை ஏறாமலிருந்திருந்தால், தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடை ஏறுவதற்கு முழு காரணமாக இருந்தவர் மணி தான்.

மழை' நாடகம் அவ்வாண்டு தில்லி மாநில அரசின் அனைத்திந்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதைவிட மகத்தான பரிசாகிய மணியின் திருமணம் நிகழ்வதற்கும்மழை' காரணமாக இருந்தது.

மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக, தொழில் துறையில் பணி புரிகின்றவர்களுக்குக் கலைத்துறையைப் பொறுத்த வரையில் புரவலத்தன்மையான ஒரு மனோபாவம் இருக்குமேயன்றி, நல்ல ரஸனையுடன் கூடிய ஈடுபாடு இருக்காது. இந்த வகையில், பிர்லா நிறுவனத்தில் அப்பொழுது பணி புரிந்த மணியின் நுணுக்கமான ரஸனை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.

தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை அவர் வீட்டில் தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது..

மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்' என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத  தென்னிந்தியக் கலாசாரக் குழு எதுவுமில்லை.

“ ‘முடியாது' என்பது என் அகராதியில் கிடையாதுஎன்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்த வரையில் மிகவும் பொருந்தும்.


அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சர்யப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பதுதான் என் ஆச்சர்யம்!

0 comments:

Post a Comment