Thursday, January 21, 2016

தில்லியில் கலர் டி.வி. வந்த புதிதில் ஆர்வமாக Bold and Beautiful போன்ற ஆங்கில சீரியல்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். சில மாதங்களுக்குப்பிறகு அதில் Erric Forrester-ன் மருமகள் Brooke Logan தன் மாமனார் உட்பட, அந்த சீரியலில் வரும் எத்தனை பேருடன் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாமல் போனதால், அந்த சீரியல் பார்ப்பதையே விட்டு விட்டேன். 1987-ல் தொடங்கிய போல்டு அண்ட் ப்யூட்டிஃபுல் தொடர்ந்து 27 வருடங்களாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதாம்! இப்போது வயதான ப்ரூக் லோகன் ஆயிரக்கணக்கான காதலர்களோடு சண்டையில்லாமல் நன்றாக இருக்கட்டும்! 
பிறகு புனியாத், ஹம்லோக் போன்ற ஹிந்தி சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்துவந்தேன். அவை ஒளிபரப்பும் சமயம் தில்லி போக்குவரத்தே ஸ்தம்பித்துவிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை விஷயமாக வெளியே சுற்றிவிட்டு, நண்பர்கள் வீட்டுக்குப் போனால் கூட, அன்றைய ஹம்லோக் கதையை பூராவும் சொல்லிவிட்டுத்தான் குடிக்க தண்ணீரே தருவார்கள்! புனியாத் சீரியலில் எனது நாடக நண்பர் வினோத் நாக்பால் நடித்துக்கொண்டிருந்ததால் அவர் சிபாரிசில் நானும் இரண்டு மூன்று எபிசோடுகளில் தலையைக்காட்டியிருக்கிறேன்!
உண்மையைச்சொன்னால், இப்போது அசட்டுத்தனமாக ஆகிவிட்ட தூர்தர்ஷன், பொதிகை போன்ற அரசு நிறுவனங்கள் தான் சில உன்னதமான சீரியல்களையும், விருதுப்படங்களையும் நமக்கு அளித்திருக்கின்றன. தில்லி தூர்தர்ஷன் ஒலிபரப்பிய “தஸ்வீர் கா தூஸ்ரா ருக்” என்ற சீரியலில் நிறையத்தடவை நானும், என் மனைவி மகளும் நடித்திருக்கிறோம்.. எங்கள் வீட்டிலேயே ஷூட்டிங் நடந்த, . தூர்தர்ஷனுக்காக எடுக்கப்பட்ட சூடாமணியின் நாகலிங்கப்பூக்கள் சீரியலின் இயக்குநர் பாபி பேதி என்ற சர்தார்ஜி. பாண்டிட் க்வீன் தயாரிப்பாளர்.
2000-க்குப்பிறகு நான் சென்னை வந்தபோது சித்தி, அண்ணி என்று பல சீரியல்கள் வந்தாலும், ஒரு எபிசோட் கூட பார்க்கும் மனவலிமை எனக்கு இருந்ததில்லை. எல்லாமே மாமியார்-மருமகள் சண்டை, கணவனை ஆள் வைத்து கொலை செய்வது, போன்ற அரைத்த மாவாகவே இருந்தன. மின்பிம்பங்கள், ரேவதி மேனன் இவர்களது ‘எதிர்நீச்சல்’, ’கால் முளைத்த ஆசை’, போன்ற சீரியல்களில் ஹீரோயின் தாத்தாவாக நான் நடிக்க ஆரம்பித்தேன். அவைகளைக்கூட முறையாக டிவியில் பார்க்க தைரியம் வந்ததில்லை. அதனால் கதை தெரியாது. எனக்கான சீன்களில் என் வசனத்தை ஒழுங்காகப்பேசிவிட்டு, அதற்கு மட்டும் டப்பிங் செய்துவிடுவேன். தெருவில் பார்க்கும் தாய்மார்கள், “ஐயா! உங்க பேத்தி போன எபிசோடில் யாரையோ பார்க்க வேகமாக ஓடினாளே? யாரைப்பார்த்தாள்?” என்று கேட்பார்கள். எனக்கு தெரியாதும்மா! என்பது தான் என் பதிலாக இருக்கும். உண்மையும் அது தான்! ஆனால் யாரும் நம்ப மாட்டார்கள். எந்த சீரியல் டைரக்டர்களும் முழுக்கதையை முன்னதாக சொன்னதே இல்லை…..காரணம் அவர்களுக்கே அப்போது முழுக்கதையும் தெரியாது! எல்லாமே சித்தன் போக்கு….சிவன் போக்கு தான்!
எனக்கு எந்த தமிழ் சீரியல் பார்க்க ஆரம்பித்தாலும், நான் பார்க்கும் டிவி பெட்டியில் மட்டும் “Watching TV Serial is injurious to your Mind and Health!” என்ற ஒரு Scrollingஎப்போதும் ஓடிக்கொண்டிருப்பதாக ஒரு பிரமை! என் நண்பர்கள் “என்ன….சார்! நீங்க பல சீரியல்லெ நடிச்சிருக்கீங்க…..ஆனா இப்படி பேசறீங்க?” என்று கேட்பார்கள்! இதற்கெல்லாம் காரணம் சீரியலுக்கு வசனம் எழுதும் கதாசிரியர்கள் கற்பனை வறட்சியும், அனுபவமின்மையும் தான். சாணக்யா, இந்திரா செளந்தர்ராஜன், பா. ராகவன், பாஸ்கர் சக்தி, ஞாநி போன்ற விஷயம் தெரிந்தவர்கள் இங்கே மிக மிகக்குறைவு! வங்கிக்கையாடல் என்றால் ஆயிரம் வகை இருக்கிறது…..இவர்களுக்கு கள்ளக்கையெழுத்து மட்டுமே தெரியும். எல்லா மருமகளும் ஒரே மாதிரி வெள்ளை வேட்டி சட்டையோடு அரசியல்வாதி போலிருக்கும் பெரிய மீசையிடம் தான் தன் மாமியாரைக்கொல்ல காசு கொடுப்பார்கள். பெட்டிக்குள் என்ன இருக்கிறதென்பதே தெரியாமல் அவரும் ‘அஞ்சு லட்சம் இருக்கு!’ என்றால் நம்பி வாங்கிப்போவார். ஒரு பாவமுமறியாத குடும்பத்தலைவரை கைது செய்ய கமிஷனர் ஆஃப் போலீசே வீட்டுக்கு வருவார். கைது செய்யுமுன் விலங்கை க்ளோசப்பில் காட்டிவிட்டுத்தான் கையில் பூட்டுவார். போகும்போது ‘கான்ஸ்டபிள்!’ என்று உரக்க கூவிக்கொண்டே தான் போவார்! பத்து வருடங்களுக்கு முன் நான் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, காலையில் ஷூட்டிங் போகும்போது, வழியில் காரை நிறுத்தி, அன்று எடுக்கவேண்டிய காட்சிகளின் டயலாக் பேப்பரை, அரைக்கப் டீயை உறிஞ்சிக்கொண்டு, அரைத்தூக்கத்திலிருக்கும் வசனகர்த்தாவிடமிருந்து வாங்கிப்போவோம்! தற்காலத்தில் என்னென்ன உத்திகளை கையாண்டு மாலை வேளைகளில் குடும்பப்பெண்களையும், வயதானவர்களையும்Captive-ஆக வைத்திருக்கிறார்களெனத்தெரியவில்லை! சத்தியமாக நான் சீரியல்கள் பார்த்து ஒரு மாமாங்கத்துக்கும் மேல் ஆகிறது! இப்போதும் அப்படித்தான் நடக்கிறதென்று நினைக்கிறேன்!
இரும்புக்கம்பியையும் ரப்பராக இழுக்கத்தெரிந்தவர்கள் இக்கால சீரியல் டைரக்டர்கள். ‘மாத்தி யோசி’ என்ற வாசகமே அவர்களுக்குத்தெரியாது! குண்டுச்சட்டியில் ஒரு கிண்டி குதிரைப்பந்தயத்தையே நடத்திக் காட்டுவார்கள்! யதார்த்தம் கிஞ்சித்தும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்!
பல வருடங்களுக்குப்பிறகு இப்போது அமிதாப் பச்சன் முதல்முறையாக சின்னத்திரையில் நடிக்கும் Yudh – யுத்தம் என்ற பிரும்மாண்டமான சீரியலை பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். Yudh என்ற தலைப்பு Yudhirsthir Sikarwar என்ற குடும்பத்தலைவர் பெயரின் சுருக்கம். அல்லது நல்லவைக்கும் கெட்டவைக்குமிடையிலான போராட்டம் – யுத்தம் – என்றும் கொள்ளலாம். ரப்பராக இழுக்காமல், சீரியல் ஐந்து வாரங்களில் முடிந்துவிடும் இதில் Angry Youngman-ஆக நடித்த பச்சன் ஓல்டுமேனாக வருகிறார். கொழுத்த பணக்கார பிசினெஸ்மேனாக இருந்தாலும் நல்லவராகவே வளையவருகிறார்! இந்த சீரியலின் ஒவ்வொரு எபிசோடு எடுக்கும் செலவு ரூ. மூன்று கோடிக்கும் மேலாம்! ஆமாம்….ஒவ்வொரு எபிசோடும் மூன்று கோடி! இதில் ஒரு முக்கிய பகுதி ஒழுங்காக வருமானவரி செலுத்தும் அமிதாப் வங்கிக்கணக்கில் சேரும்! பெரிய கான்வாஸ்…..புத்திசாலித்தனமான கதையமைப்பு, கூரான வசனங்கள், தேர்ந்த டைரக்‌ஷன்.….பிரும்மாண்டம்!
அனுராக் கஷ்யப் Creative Head-ஆக பின்னாலிருந்து இயக்கி, சரிகா, கேகே மேனன் போன்றவர்களும் நடிக்கும் இந்த சீரியலில் நான் நடித்த முதல் ஆங்கிலப்படம் ‘The Electric Moon‘ உதவி இயக்குநரும் என் நண்பருமான திக்மான்ஷு தூலியாவும் ஒரு அமைச்சராக நடிக்கிறார். இவர் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற Pan Singh Tomar, Saaheb, Biwi aur Gangster, Bullet Raja போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். முதல் எபிசோடில் அமைச்சராக வரும் இவர் பேசும் வசனம்: ”சந்தர்ப்பம் கிடைத்தும் முதுகில் கத்தியால் குத்தாமல் இருப்பவனே உண்மையான நண்பன்!” இவர்கள் எல்லோருமே நடிப்பில் நம்மை இன்னொரு கட்டத்துக்கு இட்டுச்செல்கிறார்கள்!
தமிழ் சீரியல்கள் எடுப்பவர்கள் ஹிந்தி தெரியாவிட்டாலும் தயவுசெய்து இந்த சீரியலைப்பார்க்கவேண்டும்! Sony Entertainment Channel-ல் ஐந்து வாரங்கள் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10.30லிருந்து 11.30 வரை ஒளிபரப்பாகிறது! என் தில்லி நண்பர் குறையாகச்சொன்னது….’மணிரத்னம் படம் மாதிரி இருட்டிலேயே எடுத்திருக்கான்! ஆனா ரொம்ப நன்னா இருக்கு!’ என்பது தான். தினமும் தமிழ் சீரியல்கள் பார்த்து களித்திருப்பவர்களும் நொந்துபோயிருப்பவர்களும் இதைப் பார்க்கவேண்டும். ஹிந்தி தெரிந்திருந்தால், வசனத்தில் உள்ள வார்த்தை விளையாட்டு ஒரு போனஸ்!
கடைசியில் ஒரு டிஸ்கி: கடவுள் சத்தியமாக சோனியில் ஒளிபரப்பாகும் ‘யுத்’ என்ற குறும் சீரியலை ப்ரமோட் செய்ய எனக்கு யாரும் ‘அம்மா உணவகத்தில்’ ஒரு பொங்கல் கூட வாங்கித்தரவில்லை! இது சத்தியம்!

0 comments:

Post a Comment