Thursday, January 21, 2016

இது வீட்டில் ஃப்ரிஜ் வருவதற்குமுன் பிறந்தவர்களுக்கு மட்டும்!……சரி….சரி! ‘பழங்குழம்பு’ / சுண்டக்கறி வாசனையும் ருசியும் பிடித்தவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்!
என்னை இரண்டாவது கனிஷ்ட குமாரனாகப்பெற்ற என் அம்மா ஸ்ரீமதி சிவகாமி அம்மாள் பார்வதிபுரம் மற்றும் சுத்துப்பட்டு பதினெட்டு கிராமப்புகழ் வாய்ந்த சமையல் வல்லுநரென்பதும், எனக்கு நாக்கை நாலு முழம் வளர்த்துவிட்டவரென்பதும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்க! கூட்டுக்குடும்பமான எங்கள் பெரிய குடும்பத்தில் விசேஷங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னரே வந்துவிடும் முப்பதுக்கு மேற்பட்ட இலைகளுக்கு ’பொங்கிப்போட’, சோமு இருக்கா…..கவலையில்லை என்று என் பெரியமாமா சொல்லிவிடுவார்!
விசேஷ தினங்களுக்கு சமைக்கவரும் ஆஸ்தான சமையல்காரர் சமவயது ‘கோம்பை’ மணியனிடம், ‘மணியா! சாம்பாரும், அவியலும் கொஞ்சம் கூடவே வெச்சுடு. பழங்கறிக்கு வேணும்!” என்று எக்ஸ்ட்ரா இரண்டு போணிகள் நிறைய சாம்பாரும், அவியலும் தனியாக எடுத்து வைத்து விடுவார்! அடுத்தநாள் பெரிய உருளியில் இரண்டையும் ஒருசேரக்கிளறி சுண்டவைத்து, கண்ணை மூடிக்கொண்டு நிறைய தேங்காயெண்ணெயும் ஊற்றி கலந்து வைப்பார். இதில் தெருவில் வரும் கோஸாயி சாப்பிடுவது போல் மீந்து போன துவரன், பொரியல், மோர்க்குழம்பெல்லாம் சேரக்கூடாது. போனால் போகிறதென்று மீந்துபோன ரசவண்டி வேண்டுமானால் சேரலாம்!
அன்று எல்லோருக்கும் அது தான் விருந்து…..’பத்துப்பசை’ மடி பார்க்கும் பெரியவர்கள் ஏங்கி பார்த்துக்கொண்டிருக்க, சாக்கில் சுருட்டி வைத்திருக்கும் மீதமான துண்டு இலைகளை ஆளுக்கொன்றாக போட்டு, தண்ணீர் தெளித்து, சுடச்சுட சம்பா அரிசிச் சாதத்தை பரிமாறி, அதன்மேல் சூடான பழங்கறியை தளரத்தளர விட்டு மேலுக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெயையும் சேர்த்து பிசைந்து கொண்டு, தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் உத்தமம். நேற்றுப்பொரிந்த அப்பளம் மத்யமம். கரியடுப்பில் அப்பளம் சுடுவதும் ஒரு கலை! ரொம்ப பக்கத்தில் காட்டினால் கருகிவிடும். பாந்தமாக எல்லா பக்கமும் சீராக சுடப்பட்டு, கருகாமல் இருக்கவேண்டும்!
இப்படி மூன்றுமுறை சாப்பிட்டும் திருப்தியடையாமல், நாலாவது முறை magnanimousஆக, சாதத்துக்கு தயிர் போதும் என்று விட்டுக்கொடுத்து, தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள அதே பழங்குழம்பு! ஊறுகாயெல்லாம் பக்கத்தில் வரக்கூடாது!
சாப்பிட்டு கையலம்பியவுடன் வலதுகையை அரைமணி நேரமாவது மோந்து பார்க்க வேண்டும்! அந்த வாசனைக்கு எதுவுமே ஈடாகாது! சாயுஜ்ய பதவி கிடைத்தாற்போல் தான்!
இன்றைக்கு என் வீட்டில் பழங்குழம்பும் சுட்ட அப்பளமும் தான்! நானே செய்தது! சிவகாமி அம்மாளும் மேலிருந்து வந்து, சாப்பிட்டுவிட்டு, ‘நன்னா இருக்குடா! ஆசாரமெல்லாம் ஒருநாளைக்கு இல்லாமெப்போனா ஒண்ணும் தப்பில்லே!’ என்று சொல்லிவிட்டு அலம்பின கையை மோந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்!

0 comments:

Post a Comment