Friday, January 22, 2016

இன்று ஆசிரியர் தினமாகக்கொண்டாடப்படும் டாக்டர் ஸர்வபள்ளி ராதாகிருஷ்ணனின்123-வது பிறந்தநாளன்று, அவரைப்பற்றிச்சொல்ல  அத்தோடு என்னைப்பற்றியும் சொல்ல சில சம்பவங்கள் உண்டு. நானும் அந்த மேதையோடு உரையாடியிருக்கிறேன், உடனிருந்து இட்லி சாப்பிட்டிருக்கிறேன் என்று நினைத்தால், பெருமையாகத்தானிருக்கிறது.
ஐம்பதுகளின் இறுதியில் அவர் குடியரசு துணைத்தலைவராக இருந்தபோது, அவர்  Vice President’s House என்று வெளியே சின்ன போர்டு போட்டிருந்த 6, மெளலானா ஆஸாத் ரோடு அரசு பங்களாவில் இருந்தார். மனைவி இறந்துவிட்டதால், அவரோடு அவர் மகளும், மருமகனான திரு. டி. சாண்டில்யாவும் கூட இருந்தனர். சாண்டில்யா 1956-ல்தொடங்கிய ஸ்டேட் டிரேடிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவின் மானேஜிங் டைரக்டர். நான் அவருக்குக்கீழ் பணிபுரிந்த செயலர். ஆபீஸ் நேரத்துக்கப்புறம் இரவு வேளைகளில் முக்கிய கோப்புகள், அயல்நாட்டு வர்த்தக்குழுக்களுடனான Memorandum of Understanding (MOU) போன்றவைகளில் அவசரமாகத்தேவைப்படும் கையெழுத்துக்காக, அந்த பெரிய பங்களாவுக்குள் போனதுண்டு. நமது முன்னாள் ஜனாதிபதியையே விமானம் ஏறுமுன், கையால் தடவி பரிசோதிக்கும் அவநம்பிக்கை அப்போதில்லை. இன்றைய செக்யூரிட்டி, கருப்புப்பூனைகள் எதுவுமின்றி வாசலிலிருக்கும் போலீஸ்காரர்கள் உள்ளே போக அனுமதித்துவிடுவார்கள். அவருக்கே உரிய கர்ணகுண்டலம் போலவிருந்த, டிரேட் மார்க் தலைப்பாகையில்லாமல் பார்க்கும்போது, வேறு யார் மாதிரியோ தெரிந்து, ஏதாவது படித்துக்கொண்டிருப்பார் நமது உப ஜனாதிபதி. என்னைப் பார்த்ததும், ‘Sit Down’ என்று சொல்லிவிட்டு, ‘Your Boy has come!’ என்று உள்ளே குரல் கொடுப்பார். அதிகமாக பேசியதில்லை. அப்போது இந்த சுண்டைக்காயிடம் அவருக்கு என்ன பேச்சு? இந்த சுண்டைக்காய் கொஞ்சம் பெரிதாகி பாவக்காய் ஆனபோது பேசினார்!
ராஜாஜிக்கு கிடைக்க வேண்டிய முதல் குடியரசுத்தலைவர் பதவியை தட்டிப்பறித்தவர்ராஜேந்திர பிரசாத் என்ற குற்றச்சாட்டு அவரை ’குல்லுக பட்டர்’ என்று விளிக்காத சில தமிழர்களிடையே உண்டு. நம் ஜனாதிபதிகளிலேயே மூன்றுமுறை – அதாவது 2+5+5 பன்னிரெண்டு ஆண்டுகள் – பதவியிலிருந்தவர் ராஜேன் பாபு மட்டுமே. அதனால் அடுத்த குடியரசுத்தலைவராக டாக்டர் ராதாகிருஷ்ணனும், ஐந்து வருடம் காத்திருக்க நேர்ந்தது. ராஜேந்திர பிரசாத் தன் பதவிக்காலத்தின் கடைசியில் நோயுற்று, பகதூர் ஷா ஸஃபர் மார்கிலிருந்த டாக்டர் ஸென் நர்ஸிங் ஹோமில் பல நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார். வெளியில் இருந்தபோர்டில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்த, அவ்வப்போது மாறும், அன்றைய உடல்நிலை பற்றிய அறிக்கையைப் படிக்க ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அதில் பாதிப்பேராவது அவர் விடுமுறை நாட்களில் சாகாமல், திங்கட்கிழமை இறந்தால், ஞாயிறோடு சேர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்குமே என்று வேண்டிக்கொண்டார்கள்! இரண்டாவது சனிக்கிழமையையொட்டிய திங்கள் என்றால் இன்னும் விசேஷம்…….ஐந்து நாட்கள் கிடைக்கும். அப்போது Breaking News என்று 24 மணிநேரமும் செய்தியை உடைக்கும் ’பெட்டிகள்’ இல்லாததால்,  தினமும் இரவு ஒன்பது மணிக்கு ரோஷன் மேனனோ, மெல்வில் டிமெல்லோவோ ரேடியோவில் என்ன சொல்கிறார்கள் என்று கவனிப்பார்கள். ஆனால் ராஜேந்திர பிரசாத் இவர்களை சுத்தமாக ஏமாற்றிவிட்டு 12 வருட பதவிக்காலம் முழுதும் அரசாண்டு, பின்னர் அதை ஒரேநாள் விடுமுறையாக்கி, சாவகாசமாக காலமானார்!
1962-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் ராஷ்டிரபதி பவன் பிரவேசமும், எனது பிர்லா ஹெளஸ் பிரவேசமும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. (அடாடா….என்ன ஒரு கம்பாரிஸன் பாருங்களேன்…… இமயமலைக்கும் குட்டிச்சுவருக்கும்!)
திரு. ஸி.லக்ஷ்மி காந்தன், மூர்த்தி இவர்களுடன் பாரதி மணி தன் முதல் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் – 1963
எங்கள் பிர்லா கம்பெனி ஒன்றில் C. லக்ஷ்மி காந்தன் என்றும், சுருக்கமாக C.L. என்றும் அறியப்பட்ட நண்பனொருவர் இருந்தார். பார்ப்பதற்கு ‘பாதி சிவாஜி கணேசன்’ மாதிரியே இருப்பார். (படம் பார்க்க) அந்தக்காலத்தில் இவரைத்தெரியாத தமிழ்/ஹிந்தி சினிமா நடிகர்கள்/நடிகைகள் யாருமே கிடையாது. அப்படி யாரேனும் இருந்தால் அவர் இண்டஸ்ட்ரிக்கு புதுசு என்று அறுதியிட்டு சொல்லலாம். காந்தன் மூலமாகத்தான் எனக்கு சிவாஜி, எம்.ஜி.ஆர். ’மேஜர்’, குருதத், தேவ் ஆனந்த் போன்றவர்களை பரிசயமாயிற்று. தில்லியில் என்ன வேலையாக வேண்டுமென்றாலும், ‘கூப்பிடு காந்தனை!’ என்பார்கள். என்னைப்போன்ற ஒன்றிரண்டு பேர் காந்தனின் எடுபிடிகளாக இருந்தோம். பிறகு ‘சரி, காந்தன் இல்லையென்றால் மணியைக்கூப்பிடு” என்றாயிற்று.
1962-ல் ரெய்ஸினா குன்றின் மேல் கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவனுக்கு குடியேறிய டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் குடும்பத்தினருக்கும் பில்டர் காபி, தென்னிந்திய உணவுவகைகளில் நாட்டமிருந்ததால், ஒரு நல்ல ‘மதராஸி குக்’ தேடும் பணி காந்தனுக்கும், எனக்கும் அளிக்கப்பட்டது. தேடித்தேடி தில்லி அசோகா ஹோட்டலில் வேலை பார்த்துவந்த, ஐரோப்பிய ‘மேசை நாகரீகம்’, ’ஸொல்ப’ ஆங்கிலமும் தெரிந்த ஒரு பாலக்காடு தமிழரை அனுப்பிவைத்தோம். நல்லதொரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எல்லா வகை தென்னிந்தியச்சிற்றுண்டிகளும் செய்து, ‘ருசி பார்க்கும் விருந்துக்கு’ குடியரசுத்தலைவரின் செயலர் எங்களையும் அழைத்திருந்தார். எல்லாவற்றையும் கொஞ்சம் ருசி பார்த்து, ‘Excellent, Very Good, Really Good’ என்று எல்லாவற்றுக்கும் ஜனாதிபதி மற்றும் அவர் மகள் திருமதி சாண்டில்யாவிடம் அமோக மார்க் பெற்று, ஸெண்டம் வாங்கிய பாலக்காட்டார் முதலாவது ராஷ்டிரபதி பவன் தலைமை தென்னிந்திய Chef ஆக நியமனம் பெற்றார். அவரை கண்டுபிடித்து அழைத்துவந்த எங்களுக்கும் நன்றி சொன்னார்கள்.
இதன் பிறகுதான், இந்தியாவின் முதல் குடிமகன் வீட்டில், டிகிரி காபி வாசனையும், இட்லி, பொங்கல், வடை, தோசையும் சாத்தியமாயிற்று.
தமிழ்நாட்டிலிருந்து வரும் நடிக/நடிகைகள், எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள் மற்றும் பிரபலங்களுக்கு அன்னியப்பிரதேசமான தில்லியில், தன் வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இருபத்துநாலு மணி நேரமும் ‘எள் என்றால் எண்ணெயாக, ஒரு சாரதியாய், ஹிந்தி மொழிபெயர்ப்பாளனாய், கரோல்பாக் கடைகளில் பேரம் பேசி, பாதி விலைக்கு வாங்கிக்கொடுக்கும் வாய்ச்சாலகனாய், இப்படிAll-in-one பிராணி வந்து சுளுவில் மாட்டுவதென்றால் சும்மாவா? எல்லோரும் எங்களோடு ஒட்டிக்கொள்வார்கள்! எங்களுக்கும் அந்த வயதில் அவர்களோடு காணப்படுவதும், ஒட்டியிருப்பதும் பெருமையாக இருக்கும்.
தில்லி மேடைக்கச்சேரி நடுவில், லால்குடி ஜெயராமன் மைக்கில் உரக்க, ‘மணி! மைக்கை கொஞ்சம் சரி பண்ணு’ எனும்போதும், எம்.எல்.வி. கச்சேரிக்கு வந்திருந்த மூப்பனாரிடம், ‘நான் மணி வீட்டிலே தான் தங்கியிருக்கேன்’ என்று சொல்லும்போதும், வீணை சிட்டிபாபு ‘மணிசார், அடுத்தது உங்களுக்காக……… நீங்கள் கேட்ட ரேவதி ராக ஆலாபனை, தானம், பல்லவி ராகமாலிகை’ என்று சபையோர் கேட்க ஒலிபெருக்கியில் அறிவிக்கும்போதும், உள்ளுக்குள் ஏதோ கள்வெறி உண்டாகும். தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்யும் பாராட்டுக்கூட்டங்களில், மேடையில் அமர்ந்திருக்கும் சிவாஜி கணேசன் என் பெயர் சொல்லிக்கூப்பிட்டு, கையைத்தோளில் போட்டு, காதோடு ஏதோ சொல்வதை, இரண்டாயிரம் பேர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். கூட்டத்துக்குப்பிறகு, பார்ப்பவரெல்லாம், ‘மணி! சிவாஜி உன் காதிலே ரகசியமா என்ன சொன்னார்? உங்கிட்டெ ரொம்ப க்ளோஸ் போலிருக்கு!’ என்று சொல்லும்போது, சாயுஜ்ய பதவியே கிடைத்தமாதிரி!
இவ்வளவுக்கும் சிவாஜி என்னிடம் கேட்டது “மணி, சாயங்காலத்துக்கு குழந்தை” –– எங்கள் வட்டாரத்தில் ஸ்காச் விஸ்கி பாட்டிலுக்கு இப்படி ஒரு சங்கேதப்பெயர் –– ரெடி பண்ணிட்டியா?’ என்பதாகத்தான் இருக்கும்! சிவாஜி கணேசன் தில்லியில் தங்கும்வரை அவரது விசிறியாக இருந்த ஓர் ஏர் வைஸ் மார்ஷலின் (தமிழர்) Canteen Stores Cardஎன்னிடம் தான் இருக்கும். அதைக்காட்டி, Central Vista-வில் தினமும் ரூ. 60-க்கு ஒரு பாட்டில் ஸ்காச் வாங்கிவிடலாம்!
மேலே உள்ள புகைப்படத்தில் இடது ஓரத்தில் இருப்பவர் தான்  சிவாஜியின் தம்பி வி.சி. ஷண்முகம்…
ராமனின் தம்பி லட்சுமணனை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் சிவாஜியின் தம்பி வி.சி. ஷண்முகத்தைப் பார்த்திருக்கிறேன். சிவாஜிக்கு நிழல் போல உடனிருந்து லட்சுமணனாகவே வாழ்ந்தவர். அவசரமாக தில்லியிலிருந்து புறப்படவேண்டிய நிர்ப்பந்தங்களிலும், சென்னை வந்தபிறகு ட்ரங்க் கால் புக் பண்ணி, ‘மணி! அண்ணனுக்கு அவசரமாக வரவேண்டியிருந்திச்சு. தில்லியில் நீங்க பண்ணின செலவை கணக்குப்பாத்து ஒரு கவர்லெ போட்டு அசோகா ஹோட்டல் காஷியர் அமல்ராஜ் கிட்டே குடுத்திருக்கேன். வாங்கிக்கிங்க’ என்று செய்தி வரும். அவருக்குத் தெரியும் 5 பாட்டில் விஸ்கி விலை தான் என் அப்போதைய ஒரு மாதச்சம்பளம் என்று. அவர் கூட வரவில்லையென்றால் காந்திக்கணக்கில் எழுத வேண்டியது தான்! அவரை தம்பியாகப்பெற்ற சிவாஜி கொடுத்துவைத்தவர்! அவர் இருந்தவரை எல்லா தீபாவளிக்கும், பொங்கலுக்கும், என் வீட்டு விலாசத்துக்கு தவறாமல் பட்டுவேஷ்டி பார்சல் வந்துவிடும். 1982-ல் சிவாஜி ராஜ்யசபா எம்.பி. ஆனபோது, மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கே அலாட் ஆகும் பண்டாரா ரோடு தனி பங்களாவுக்காக, பலமுறை எஸ்டேட் ஆபீஸ் ஏறி இறங்கியதும், அதை தயார்ப்படுத்த எடுத்த முயற்சிகளும் நினைவுக்கு வருகின்றன. அதன் பிறகு வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாட்டுப்பயணங்கள் போகவேண்டி இருந்ததால், சந்திப்புகள் குறைந்து, எங்கள் நட்பு துருப்பிடித்துப்போயிற்று. லக்ஷ்மி காந்தன் கானடா போனபிறகு, அந்த இடத்தை நிரப்ப வந்தவர் ‘மேஜர்’ சுந்தர்ராஜனின் தம்பி, ரங்கா எனப்படும் ரங்கராஜன்.
தில்லிக்கு வரும் நடிக/நடிகைகள், வித்வான்கள், எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும், ராஷ்டிரபதி பவன் போய் அப்போதிருக்கும் குடியரசுத்தலைவருடன் ஒரு போட்டோ எடுத்து, பெரிதாக ஃப்ரேம் போட்டு, தங்கள் வீட்டு வரவேற்பறையில் எல்லோரும் பார்க்கும்படி மாட்டி வைக்கவேண்டுமென்ற தணியாத ஆசை உண்டு. யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. சென்னையில் தன் வீட்டுக்கு வருபவர்களிடம், ஏதோ இவரைப்பார்க்காமல் குடியரசுத்தலைவருக்கு கண்களே பூத்துப்போன மாதிரி, ‘டெல்லிலே பிரஸிடென்ட்டெ பாக்கப்போனபோது, அவரே ஒரு ஸ்டில் எடுத்துக்கலாமேன்னு போட்டோகிராபரை கூப்பிட்டார்!’ என்று ’பொய்’ சொல்லும்போது, தில்லியில் இதற்காக, பலநாட்கள் ராஷ்டிரபதிபவன் போய் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்து, மன்றாடி, செயலரிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்க படாத பாடுபட்ட இந்த மணியை நினைத்திருப்பாரா? (கமல் குரலில்தெரியலியேப்பா!
அடுத்து நம் பிரபலங்கள் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புவது பிரதமர் இந்திரா காந்தியுடன். அவரது செயலர்கள் என்.கே. சேஷனும், ஆர்.கே. தவனும் என் நெருங்கிய நண்பர்களானதால், என் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதில்லை. அவர் எத்தனை பிஸியாக இருந்தாலும், இரண்டு மீட்டிங் நடுவில், ஐந்து நிமிடம் ஒதுக்கித் தந்து விடுவார்கள்.
இந்திரா காந்தி என்னைப் பார்த்தவுடன், ‘ஹலோ…மணி!’ என்று கூப்பிடும் அளவுக்கு தொழில்முறை பரிசயம் இருந்தது. இப்போது பல விஷயங்களில் நான் நினைப்பதை என்னால் எழுத்தில் சொல்லமுடிவதில்லை! கட்டுரைகளில் பல சம்பவங்களை எழுதிவிட்டு, மனுஷ்ய புத்திரனுக்கு அனுப்புமுன் எடுத்துவிடுகிறேன். என் நலனில் அக்கறையுள்ள நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள்…….’ஸார்…இது டெல்லி இல்லே….சென்னை. வீட்டுக்கு ஹெலிகாப்டரே வரும்!’  அதற்குப்பதிலாக எம்பெருமானின் புஷ்பக விமானம் வந்தாலாவது வசதியாக ஏறிக்கொண்டு மேலே போய்விடலாம்!
பிரபலமானவர்களென்றால், போட்டோவுடன், காலை சிற்றுண்டிக்கும் அழைக்கப்படுவர். எனக்குத்தெரிந்து அதிக குடியரசுத்தலைவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டு, டிபன் சாப்பிட்டவர் சிவாஜியாகத்தான் இருக்கும். பலதடவை அவரோடு ராஷ்டிரபதி பவன் போயிருக்கிறேன்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக இருந்தபோது நடந்த ஒரு விருந்தில் தில்லி வந்திருந்த பல தமிழ் நடிகைகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தலைவர் பார்த்த பார்வை ரொம்பவே ‘தீர்க்கமாக’ இருந்தது! உண்மையைச் சொன்னால், பெரியவர் கொஞ்சம் அதிகமாகவே ஜொள்ளு விட்டதை பார்க்கமுடிந்தது. விருந்து முடிந்து பேசிக்கொண்டிருக்கும்போது,  பேச்சுவாக்கில், ‘Why this prolonged cold war between Sivaji Ganesan and MGR?’ என்று அவர் கேட்ட முதல் கேள்வியும், அதைத்தொடர்ந்து வந்த, ’ஜெமினி கணேசன்-சாவித்திரி திருமணத்துக்கு முதல் மனைவி சம்மதம் இருந்ததா?’, ‘சரோஜா தேவிக்கும் இன்ன நடிகருக்கும் என்ன தகராறு?’ ‘அந்த ஹிந்தி நடிகை இப்போதெல்லாம் அதிகமாக குடிக்கிறாராமே?’ போன்ற ’கிசுகிசு’ கேள்விகளும் நம் குடியரசுத்தலைவர் வாயிலிருந்து வந்ததை, எங்களால் ஜீரணிக்க முடியவில்லை! You….too….President? அவரைப்பார்க்கும்போது, என் மனதுக்குள் இருந்த பிம்பம் இந்தியாவின் சமகால வேதாந்தியின் Impeccable English ஆளுமையும் என் தந்தையிடம் பார்த்த ஐந்து வால்யூம் “Indian Philosophy – By Dr. S. Radhakrishnan புத்தகங்களும் தான்! தந்தையிடம் ஆச்சரியத்துடன் இதைப்பற்றி சொன்னபோது, ‘அவாளும் மனுஷா தானேடா! நமக்கிருக்கிற ஆசாபாசங்கள் எல்லாம் அவாளுக்கும் உண்டு!’ என்பது தான் அவர் பதில்.
அந்தக்காலத்தில், தில்லியிலிருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மன், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில தினசரிகளின் மூன்றாம் பக்கத்தில் Today’s Weather-க்கு மேலே Rashtrapati Bhavan Communique  என்று ஒரு பத்தி தினமும் வரும். அதில் குடியரசுத்தலைவர் முந்தையதினம் சந்தித்த பிரமுகர்களின் பெயர்கள் இருக்கும். (ஜாகிர் ஹுஸேன் இறந்தபிறகு இது நின்று விட்டது.) பல நாட்களில் ராஷ்டிரபதி பவன் சிப்பந்திகள் தவறுதலாக Visitors’ Book-ல்பதிவாகியிருந்த எங்கள் பெயர்களையும் V.I.P. List-ல் இணைத்திருப்பார்கள். தினசரிகளில் The President was pleased to meet the following: His Excellency The Ambassador of USA,  H.E. Governor of West Bengal, Pandit Ravi Shankar, Mrs. Mrinalini Sarabhai, Mr. Dev Anand, Mr. C. Lakshmi Kanthan, Mr. S.K.S. Mani இப்படி இருக்கும். ஆபீசில் அன்று எல்லோரும் காதில் புகை வர, பொறாமையுடன் பார்ப்பார்கள். நண்பர்கள் போன் பண்ணி, ‘உன் பெயர் பேப்பர்ல வந்திருக்கே! நேத்திக்கு போயிருந்தியா?’ எனும்போது சந்தோஷமாகத்தானிருக்கும்! அந்த பக்கத்தை கத்தரித்து பாதுகாத்து வைப்பேன்!
ஐந்து வருடங்களுக்கொருமுறை, ஜாகிர் ஹுஸேன், வி.வி. கிரி, ஃபக்ருதீன் அலி அகமது, சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர்வி, சர்மா, நாராயணன் என்று மாறினாலும், சென்னை வரும் வரையிலும் ராய்ஸினா குன்றிலிருக்கும் மாளிகையோடு கொஞ்சமாவது தொடர்பு இருந்துவந்தது. ’பத்ம’ விருது, கேல் ரத்னா விருது விழாக்கள் அங்கிருக்கும் அசோகா ஹாலில் நடைபெறும். அழைப்பிதழ் வந்தாலும், தெரிந்தவர்கள் யாருக்காவது விருது கிடைத்தால் தான் போவேன். 45 நிமிஷங்கள் முன்னால் வந்து உட்காரச்சொல்லும் கட்டாய Protocol, வயிற்றுக்குள்ளும் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்துபார்க்கும் செக்யூரிட்டி, அங்கிருக்கும் மயான அமைதி, ஏ.சி. போட்டிருந்தாலும் கையிலிருக்கும் அழைப்பிதழாலேயே விசிறிக்கொள்ளச்செய்யும் புழுக்கம், விழா முடிந்து வெளியில் வந்து ஒரு மைல் தூரத்திலிருக்கும் Parking-ல்தெரியும் கார் சமுத்திரத்தில், நம் வாகனத்தைத்தேடும் பிரயத்னம் இதையெல்லாம் நினைத்தால் போகாமலிருக்கவே தோன்றும். வரதன், முராரி, தூபே, நாராயணஸ்வாமி போன்ற திறமைசாலிகள் அங்கு செயலர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் உபயத்தில் எல்லா விழாக்களுக்கும் அழைப்பிதழ் வந்துவிடும். நான் இதுவரை நேரில் சந்திக்காத தலைவர்கள் டாக்டர் கலாமும், பிரதீபா பாட்டீலும் தான்.
திரு. ஆர். வெங்கட்ராமன் தில்லியில் எம்.பி.யாக இருக்கும்போதே என் நாடகங்களுக்கு அடிக்கடி வருவார். நான் நடித்து அவருக்குப் பிடித்த நாடகங்களான ‘சோ’வின் கோ வாடிஸ், இ.பா.வின் மழை, சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார்! இவை பற்றி கடைசியாக பார்த்தபோது கூட குறிப்பிட்டார். அவர் தலைவராக இருந்த உத்தர சுவாமிமலை கோவில் டிரஸ்டுக்கு ஓரிருவருடங்கள் நானும் மெம்பராக இருந்தேன்.1988-ல் க.நா.சு. இறந்த தினம் காலையில் என்னைத்தொடர்பு கொண்டு, ’அடிக்கடி பார்த்துக்கொள்வதில்லையே தவிர க.நா.சு. என் நெருங்கிய நண்பர். நான் அவரை கடைசியாக பார்க்க உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். ஆனால் குறைந்த நேரத்தில், உங்கள் வீடு இருக்கும் மஸ்ஜித் மோத் காலனியில் Security Sanitize பண்ணமுடியாதென்று President’s Bodyguards சொல்லிவிட்டதால், எனது சார்பில், லெட்டர், மலர்வளையத்தோடு என் A.D.C. ரெண்டுபேர் வருவா. My heartfelt condolences’ என்று ஆறுதல் சொன்னார். அவர் எனக்கு போன் பண்ணுவாரென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. வேறு எதையோ தேடப்போய் அவர் எனக்கு எழுதிய கடிதம் நேற்று தட்டுப்பட்டது. அதையும் இணைத்திருக்கிறேன்.
2000-ல் பாரதி வெளியானபோது, சுஜாதா தில்லியில் திரையிட எனக்கு ஒரு பிரிண்ட் கொடுத்திருந்தார். ஒரு நாள் தில்லி தமிழ்ச்சங்கத்திலும், மற்றொரு நாள் ராஷ்டிரபதி பவன் மினி தியேட்டரிலும் பாரதி படத்தை திரையிட்டேன். அப்போது தலைவராக இல்லாதபோதும் ராஷ்டிரபதி பவன் வந்து, படத்தைப்பார்த்து பாராட்டினார். நீங்கள் கவனித்திருக்கலாம்…..இ.பா.வின் தந்திர பூமி, வேர்ப்பற்று நாவல்களில் ஆர். வெங்கட்ராமன் ஒரு அரசியல்வாதியாக பவனி வருவார்!
துணை ஜனாதிபதியாக இருந்தவர்கள் குடியரசுத்தலைவர்களாக பதவியுயர்வு பெறுவார்கள் என்ற எழுதப்படாத விதியொன்று உண்டு. அப்போதைய ஆளும் கட்சியின் ஆதரவு இல்லாததால், தில்லியின் மிகப்பெரிய வீட்டில் குடிபுகும் பாக்கியம் கிட்டாமல் போனவர்கள் ஜி.எஸ். பாடக், பி.டி. ஜட்டி, ஹிதயதுல்லா, கிருஷ்ண காந்த் மற்றும் பி.எஸ். ஷெகாவத். தன் பதவிக்காலத்திலேயே இறந்துபோனவர் டாக்டர் ஜாகிர் ஹுஸேன். ஜெயில் சிங் பதவியில் இருக்கும்போது இந்திரா காந்தியின் படுகொலைக்குப்பின், ராஜீவ் காந்திக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர். ஆர். வெங்கடராமன் பதவிக்காலத்தில் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்ந்தது. அவர் தான் அடுத்த பிரதமர் நரசிம்ம ராவுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
தில்லியில் இந்திரா காந்தி கொலைக்குப்பிறகு நடந்த சீக்கியப்படுகொலைகளுக்கு காரணமானவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் லலித் மாக்கனும் மனைவி கீதாஞ்சலி மாக்கனும் காலிஸ்தான் தீவிர வாதிகளால் சரமாரியாகச்சுடப்பட்டு கொலையுண்டார்கள். கீதாஞ்சலி மாக்கன் பின்னர் ஜனாதிபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவின் மகள். ஒரு வயதான தந்தை புத்திரி சோகத்தால் கதறிக்கதறி அழுததை அன்று பார்க்கமுடிந்தது.
லலித் மாக்கனின்  ஒன்றுவிட்ட சகோதரர் தான் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கன்.
வாரன் ஹேஸ்டிங்ஸால் 1773-மாண்டு தொடங்கப்பட்ட கவர்னர் ஜெனரலின்Bodyguards ஐம்பதில்  President’s Bodyguards என்ற பெயர் பெற்றது. குதிரையேற்றத்தில் வல்லவர்களான, ஆறரை அடிக்குக்குறையாத பொறுக்கியெடுத்த கம்பீரமான ஜாட் வீரர்களைக்கொண்டது. இதிலிருக்கும் பலர் போலோ விளையாட்டிலும் விற்பன்னர்கள். ராஜேந்திர பிரசாத் காலத்தில் குடியரசு தினத்தன்று குதிரை வீரர்கள் புடைசூழ, சாரட்டில் ராஜ்பத்துக்கு பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். இப்போதைய தலைவர்கள் ’லிமோ’வுக்கு பழகிவிட்டார்கள். செய்துவைத்த சிலைகள் போல கம்பீரமான இவர்களுக்கு முன்னால் சில ‘சொத்தை’யான குடியரசுத்தலைவர்கள் நிற்பதைப்பார்த்தால், பரிதாபமாக இருக்கும்!
அழகான தோற்றமுடைய, பன்முக ஆளுமையுடன் கூடிய காஷ்மீர் மன்னராக இருந்தடாக்டர் கரண் சிங் போன்றவர்களை ஆயுட்கால குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று சிலசமயம் நினைத்ததுண்டு.
ராஷ்டிரபதி பவனில் ஒரு மினி தியேட்டர், நான்கு டென்னிஸ் கோர்ட்டுகள், கிரிக்கெட் மைதானம், போலோ கிரெளண்ட், கோல்ஃப் கோர்ஸ் எல்லாம் உண்டு. மினி தியேட்டரில் ராஷ்டிரபதிபவன் சிப்பந்திகளுக்கு அவ்வப்போது ஹிந்தி படங்கள் திரையிடப்படும். தேசிய விருது பெற்ற படங்களை ஜனாதிபதி குடும்பத்தாருக்கு அங்கு திரையிடுவார்கள். எழுபதுகளில் நான் என் முதல் அம்பாசிடர் கார் வாங்கினபோது, மரங்களடர்ந்த, ஆள் நடமாட்டமில்லாத, ராஷ்டிரபதி பவன் உள்ளே வழுவழு சாலைகளில் தான் அதை ஓட்டக் கற்றுக்கொண்டேன். மூன்றே நாள்….. தில்லி ட்ராஃபிக்கில் சமாளிக்கப்பழகிவிட்டேன்.
வருடந்தோறும் பெப்ரவரி மாதத்தில் ராஷ்டிரபதி பவன் பின்னால் பூத்துக்குலுங்கும் புகழ்பெற்ற முகல் கார்டன்ஸ் மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும். தில்லியின் வசந்தகால இளம்வெயிலில், நம்மைப்பார்த்து சிரித்தபடியே, தலையாட்டி வரவேற்கும் பல்லாயிரம் விதவிதமான வர்ணத்தில் பூக்களை பார்த்துக்கொண்டே நடப்பது மறக்கமுடியாத சுகானுபவம்!
1931-ல் லார்டு இர்வின் முதன்முதலாகக்குடியேறிய இந்த மாபெரும் மாளிகை ஸர். எட்வின் லூட்டென்ஸால் வடிவமைக்கப்பட்டது. 360 அறைகளையும், இரண்டு லட்சம் சதுர அடிப்பரப்பையும் கொண்ட இது அமெரிக்க ’வெள்ளை மாளிகை’யை விடவும் மிகப்பெரிது, அழகானது. இதை கட்டிமுடிப்பதற்கான மொத்தச்செலவை யூகிக்கமுடிகிறதா? அந்தப்பணத்தால் இன்று வடபழனியில் கூட ஒரு நல்ல வீடு வாங்கமுடியாது! ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்! ராஷ்டிரபதி பவன் இருக்கும் நிலத்துக்கு மட்டும் இன்றைய மதிப்பு 36,000 கோடி ரூபாய் என்று எங்கேயோ படித்தேன்! உள்ளே நடக்கும்போது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை உணரவைக்கும் பிரும்மாண்டம். தில்லியின் இந்த மிகப்பெரிய வீடு, எத்தனை கோடி கொடுத்தாலும் வாடகைக்கு கிடைக்காது!
நம்மில் சிலருக்கு தெரியாத விஷயம் தில்லியில் ராஷ்டிரபதி பவன், நார்த் ப்ளாக், ஸெளத் ப்ளாக், பாராளுமன்றம், இந்தியா கேட், கனாட் ப்ளேஸ், மாடர்ன் ஸ்கூல், ஜிம்கானா கிளப், ஆல் இந்தியா ரேடியோ, AIFACS தியேட்டர் போன்ற பல அழகான Land Mark கட்டடங்களைக்கட்டிய முதன்மை காண்ட்ராக்டர் ஸர். ஸோபா சிங், நமக்குத்தெரிந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தந்தை என்பது. 1930-களில்மிகப்பெரிய அளவில் பாதி தில்லிக்கு மேல் ரூபாய் இரண்டுக்கு ஒரு ஸ்கொயர் யார்டு(கவனிக்கவும் சதுர அடி அல்ல – 1 Sq. Yard = 9 sq.ft) என்ற விலையில் கையில் கிடைத்த தில்லியின்  Prime Land அனைத்தையும் சுருட்டி வளைத்துப்போட்ட இந்த தீர்க்கதரிசி மேல் எந்த நில ஆக்கிரமிப்பு வழக்கும் இதுவரை இல்லை. அவர் திஹார் ஜெயிலுக்கும் போனதில்லை! மாறாக, Aadhi Dilli Da Maalik (பாதி தில்லியின் எஜமானர்) என்று கொண்டாடப்பட்டார். இப்போது ரூபாய் இரண்டுக்கு கால் கிலோ உருளைக்கிழங்கு கூட கிடைக்காது! ஸர். சோபா சிங் தன் தந்தையின் பெயரில் லோதி ரோடு அருகில் கட்டிய சுஜான் சிங் பார்க் குடியிருப்பில் தான் வயதான குஷ்வந்த் சிங் வாழ்ந்து வருகிறார்.
குஷ்வந்த் சிங்கின் சித்தப்பா உஜ்ஜல் சிங் அறுபதுகளில் தமிழ்நாட்டின் கவர்னராக இருந்திருக்கிறார் என்பது பெரிசுகளுக்கு ஞாபகமிருக்கலாம். ராஷ்டிரபதி பவனில் எந்தக்கல்லைத் தட்டினாலும், டிங் என்பதற்குப்பதிலாக சோபா சிங் என்று தான் சொல்லும்! அதிக படிப்பறிவில்லாத இவர் முப்பதுகளில் புது தில்லி முனிசிபல் கெளன்சில் தலைவர் பதவிக்கு முதல் இந்தியராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஆங்கிலேயரின் அடிவருடியென்றும், பஞ்சாபில் ஒரு வழக்கில் தியாகி பகத் சிங்கைக்காட்டிக்கொடுத்து, ‘ஸர்’ பட்டம் வாங்கியவரென்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு!
ராஷ்டிரபதி பவனைப்பற்றி இவ்வளவு சொல்லிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி ஜெயில் சிங்கைப்பற்றிய நூற்றுக்கணக்கான ஜோக்குகளில் ஒன்றையாவது சொல்லாமல் முடித்தால் எப்படி?
ஜெயில் சிங் தனது பி.ஏ.விடம், ‘அரே…..ராம் சந்திரன், இந்த ஆங்கிலம் நம்ம காலை வாரி விடுகிறது. எல்லாரும் என்னை கேலி செய்கிறார்கள். விருந்துக்கு வரும் பெண்களிடம் எப்படி ஆங்கிலத்தில் பேச்சை ஆரம்பிக்கிறது…..தெரியலியே?’……. ’ஸா..ர்! அது ரொம்ப சிம்பிள். மொதல்லெ Are you married?……How many children you have?….இப்படி பேச்சை தொடங்குங்கள். அவர்கள் பதிலளிப்பார்கள். அப்படியே தொடரவேண்டியது தான்!’. அன்று மாலை ராஷ்டிரபதிபவனில் நடந்த விருந்தின்போது, வலது பக்கத்தில் அமர்ந்திருந்த அயல்நாட்டுப்பெண்மணியிடம், ’Hello! Are you married?’ என்று பணிவாகக்கேட்டார். அந்த பெண்மணி, ‘No…..Your Excellency!’ என்று இன்னும் பணிவாக பதில் சொன்னார். நமது கதாநாயகன் அடுத்த கேள்வியாக,  How many children you have? என்று கேட்டதற்கு அந்தப்பெண்மணி ஏன் தன்னை முறைக்கிறாரென்று அவருக்கு புரியவில்லை. ‘ஓஹோ…கேள்வியை மாற்றிக்கேட்டுவிட்டோம். அது தான் தப்பு என்று ஒரு நிதானத்துக்கு வந்து, இடது பக்கமிருந்த பெண்மணியிடம்,  How many children you have? என்று சிரித்துக்கொண்டே கேட்டார். Two என்றார் இந்த பெண்மணி. Are you married?.. என்ற தன் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லாமல்,  ஏன் தன்னை முறைத்துப்பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டார் என்று நம் முதல் குடிமகனுக்கு புரியவேயில்லை!
—-oooo0000oooo—-

0 comments:

Post a Comment