Friday, January 29, 2016


ஒரு முன்னுரை எழுதுவதற்கு எப்படி எல்லாம் தயாராக வேண்டியதிருக்கிறது? ஒரு முழுப் பொய் சொல்வதற்கு எவ்வளவு தயார் செய்ய வேண்டுமோ அவ்வளவு பிரயாசை வேண்டியது இருக்கிறது. யாராவது சொல்லிக் கொடுத்தால், முன்னே பின்னே இருந்தாலும், அதே போலச் சொல்லிவிடலாம் என்று, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகத்தில் யார் யார் எழுதியிருக்கிறார்களோ அதையெல்லாம் படித்துப் பார்த்தேன்.

எடுத்த எடுப்பிலேயே, அந்த அளவுக்கு உயர்ந்த தரத்தில் பொய் சொல்ல வராது. அதற்குக் கொஞ்ச காலமாவது டில்லியில் இருந்திருக்கவேண்டும். நான் டில்லியில் இருந்தது அதிக பட்சம் ஐந்து நாட்கள். அந்தக் குறைந்த அவகாசத்தில், ஸ்வெட்டர் போடாமல் குளிரில் நேரே ஒழுங்காய் நடப்பதே கஷ்டமாக இருந்தது. தலை கீழாக நின்று பொய்யில் சிரஸாசனம், ஹலாஸனம், குக்குடாஸனம் செய்வது பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாது.

சரி.....நாம் ஏற்கனவே சொன்ன பொய்யில் இருந்து துவங்கினால் சரியாக இருக்கும் என்று, சுகாவுடைய ‘தாயார் சன்னதி’க்கு நான் எழுதியிருக்கிற முன்னுரையைப் படித்துப் பார்த்தேன். மருந்துக்குக் கூட அதில் பொய்யில்லை.. நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறது. வேறு வழியில்லை. இதிலும் உண்மையே சொல்லிவிட வேண்டியதுதான். இப்போதெல்லாம், வேறு வழி இல்லை என்றால்தானே உண்மை சொல்லப்படுகிறது?

சுகா முன்னுரையை 19 டிசம்பரில் எழுதியிருக்கிறேன். இதை 29 டிசம்பருக்குள்ளாவது எழுதி அனுப்பிவிட வேண்டும். ஆனால் எதைப் பற்றி எழுத? புதிய கட்டுரைகளை, முகநூல் பதிவுகளைக் கண்ணில் கூடக் காட்டவில்லை. ‘எல்லாத்தையும் படிச்சுட்டு எழுதணும்னு கட்டாயம் இல்லை. தோணறதை எழுதினாப் போதும்’ என்ற சலுகை வேறு. இது சலுகை அல்ல, தூண்டில் என்று எனக்குத் தெரியாதா? புழு இல்லாமலே எத்தனை திமிங்கலங்களைப் பிடித்தவர் இவர் என்று நமக்குத் தெரியும் அல்லவா!

சிலரைப் பற்றி இவ்வளவு தெரிந்ததே போதும் என்று தோன்றும். வேறு சிலரைப் பற்றி அந்தக் கொஞ்சம் தெரிந்ததற்கே உள் நாக்கு வரை கசக்கும். பாரதி மணியை – இத்தனை பத்திகளுக்கு அப்புறம் கூடக் கதாநாயகன் பெயரைச் சொல்லாவிட்டால் எப்படி? – ப் பற்றி, கொஞ்சம் தெரிகையில் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் போல இருக்கிறது. நெல்லையப்பர் கோவில் மாக்காளையைச் சுற்றிக் குனிந்து குனிந்து ஒரு கனிந்த மனுஷி கோலம் கோலமாக இழைத்துக்கொண்டே போனதைப் பார்த்த ஞாபகம் வருகிறது. குருவாயூர் கோவிலில் நுனிமுடிச்சும் சந்தனக் கீற்றுமாக நின்று ஆயிரம் அகல்கள் ஏற்றும் சித்திரம் உண்டாகிறது. நடந்துபோய்க்கொண்டு இருக்கும்போது மழை வந்து, கட்டுமானம் ஆகும் சர்ச்சில் ஒதுங்கி நிற்கையில், எதிரே செம்மண் தரையில் பெயல் நீர் ஓடையாகிப் பெருகியதைப் பார்த்ததும் அப்படித்தான். சுகாவுக்கு எழுதிய முன்னுரையில் சொன்ன, அதே தைப்பூச மண்டபத்துக்கு மேல் ஆட்டுக்குட்டி போல நிற்க, குறுக்குத் துறை முங்க, தாமிரபரணியில் வெள்ளம் போனால் நன்றாகத்தான் இருக்கும்.

எனக்குத் தாமிரபரணி. அவருக்கு பங்களா தேஷ் பத்மா நதி, மேக்னா நதி. ஹீல்ஸா மீன், ஷேக் ஹஸீனா, வங்க பந்து தெரியும். மோனி தாதா என்கிற மணி என்கிற, எஸ்.கே.எஸ் மணி என்கிற பாரதி மணி நினைத்தால் குருதத்துடன் ஓக்லா அருகே யமுனையில் மீன் பிடிப்பார். நான் ஏழெட்டு வரிகளுக்கு முன் குறிப்பிட்ட தூண்டிலை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் இப்போது!

இப்படிப்பட்ட, நினைத்தால் வெள்ளை யானையைக் கொண்டுவந்து வீட்டு வாசலில் நிறுத்துகிறவர், புலிப்பாலை வற்றக் காய்ச்சி ஸ்டேன்ஸ் டிகாக்‌ஷன் கலந்து காஃபி தரமுடிகிறவர், போயும் போயும் என்னிடம் எதற்கு ‘முன்னுரை, அணிந்துரை, -- என்னமோ ஒண்ணு’ ( அவர் தொலைபேச்சு இது) -- எழுதித்தரச் சொன்னார் என்பதுதான் புரியவில்லை!

எனக்கும் பாரதி மணிக்கும் அப்படி ஒன்றும் நேரடிப் பழக்கம் அதிகம் கிடையாது. மிஞ்சிப் போனால் ஐந்தாறு சந்திப்புகள் இருக்கும். சென்னையில் சாரல் விருது விழா, உயிர்மை புத்தக வெளியீடு என்று இரண்டு மூன்று தடவை. நாஞ்சில்நாடன் மகள் திருமணத்தில், அப்புறம் திருநெல்வேலி வசந்த பவன் விடுதியில் என்று இவ்வளவுதான். சின்னக் கை குலுக்கல், அணைப்பு, சிரிப்பு. அதை மீறி எந்த உரையாடலும் தனிப்படக் கிடையாது. ஒரு வேளை அதெல்லாம் இல்லாததால் தான், ஆளற்ற பிரஹாரத்தில் கிளி பறக்கிற மாதிரி, என்னைப் பார்க்கிறார் போல. ஏதோ ஒரு சிறகடிப்புச் சாடல், ஒரு கீச் கீச் என்னிடம் அவருக்குப் பிடித்திருக்க வேண்டும்.

நாஞ்சில் நாடன் மகள் கல்யாணத்தைச் சார்ந்த புகைப்படங்கள் ஒன்றில், அவர் நாதஸ்வரக்காரர்களுக்கு முன்னால், கைத்தடியில் முகம் ஊன்றி ரசித்தபடி உட்கார்ந்திருப்பார். ஒரு மகுடிக்கு மயங்குகிற ராஜ நாகம் போலத்தான் இருக்கும் அந்தத் தோற்றம். வண்ணநிலவனின் ‘பாம்பும் பிடாரனும்’ கதையில் தலையை வானத்தை நோக்கி அண்ணாந்து, சூரியனைத் தரிசித்து, வேறு வேறு நாத ரூபங்களை யாசிக்கிற பாம்பைப் போல அவர் இருந்தார். ராஜாக்களைக் கும்பிட வேண்டுமானால் யோசிக்கலாம். ராஜ நாகங்களைக் கும்பிடலாம். பாரதி மணி அப்படித்தான் கும்பிடும்படி இருந்தார். வனப்பேச்சி கோயில் மாடாக்குழி விளக்கு மாதிரி, தன்னந்தனியாக ஒருத்தன் இப்படி மெய்மறந்து வாசிப்புக்கு உருகுகையில், நாதஸ்வரக்காரர்கள் கண்கள் எப்படித் திறந்து இந்த லோகத்தைப் பார்க்கும்? அவை கசிந்து கண்மூடிக் காணாமல் போயிருந்தன.

அவரை திருநெல்வேலி வசந்தபவன் விடுதியறையில் சந்திக்கும் போதும் முதலில் காதில் விழுந்தது நாதஸ்வர இசைதான். எனக்கு என்ன தெரியும் ராகம், தாளம் எல்லாம்? ஆலாபனை துவங்கி இரண்டாவது நொடியில் ராக அடையாளம் சொல்ல நான் என்ன பார்வதிபுரத்தானா? எனக்கு நாதஸ்வரம் இன்னும் பீப்பி தான். ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் எல்லாம் எனக்குத் தெரியாது. உள்ளூர் பாம்பாட்டி நடேசக்கம்பர் தெரியும். செந்திலாதிபதி ஆதீன வித்வான் சின்ன சுப்பையா தெரியும். காணும் காணாததற்கு என் சின்ன வயதில், ராஜ வல்லிபுரம் கொட்டாரத்தில் விளையாடும் போது வெருகுப் பூனையை, புலிக்குட்டி என்று சொல்லிப் பயம் காட்டிய பொன்னு உவச்சரைத் தெரியும். மற்றப்படி பாரதி மணி சொல்கிற பெயர்களை எழுதுவதற்கே கை நடுங்குகிறது. என்ன செய்ய? அவ்வளவுதான் என்னுடைய நாதஸ்வர ஞானம் அல்லது நாதஸ்வர அஞ்ஞானம்.

இதில் என்ன அழகு என்றால், அவருடன் இருந்த கொஞ்ச நேரத்தில் அவர் என்னிடம் சங்கீதம் பற்றியும் பேசவில்லை. இலக்கியம் பற்றியும் பேசவில்லை. எதிரே ஒரு ஆள் வந்து உட்கார்கிற சைஸை வைத்தே, அவரிடம் எதைப் பேசுவது அல்லது பேசாமல் இருப்பது அவருக்கு மட்டும் அல்ல, இரண்டு பேருக்குமே நல்லது என்று சொடக்குப் போடுகிற நேரத்துக்குள், மிஞ்சிப் போனால் பைப் பற்ற வைக்கிற நேரத்துக்குள் அவருக்குத் தீர்மானிக்க முடியும்!

அப்படி இல்லாமலா அவருக்கு சுப்புடுவால் பத்து நாளில் பம்பாயில் முடியாத பென்ஸ் காரை தரை மார்க்கமாக டில்லி கொண்டுவந்து சேர்க்க முடிந்தது? ராமு காரியத், ‘வளர நந்நி, வளர நந்நி’ என்று உருக செம்மீன் படத்திற்கு விருது கிடைக்கச் செய்ய, பத்துக் கட்டளைகள் போலத் துல்லியமாக ஏழு கட்டளைகளை வரிசைப்படுத்த, தீன் மூர்த்தி பவனில் நேருவின் சடலத்திற்கு, யாருக்கோ வைத்திருந்த மலர்வளையத்தை எடுத்து அஞ்சலி செய்ய முடிந்தது? மனைவி, இரண்டு குழந்தைகளோடு, கண்களில் பயத்துடன் வந்து நிற்கிற பக்வான்சிங்கிற்கு அடைக்கலம் தர முடிந்தது? குல்னா மார்க்கெட் தமிழர்களுக்கு பழைய வாரப்பத்திரிக்கைகளைச் சுமந்துபோய்க் கொடுத்து, முடிகிற போது தமிழும் சொல்லிக்கொடுக்கும் மனம் வேறு எப்படி வரும்? டி.ஆர். ராஜகுமாரி இருக்கிறாரா என்று கேட்கும் ஒருவரின் கனவு கலையாமலும், அது நீடிக்காமலும் கண் கூசாத நிஜத்தைத் தெரிவிக்க எத்தனை பக்குவம் வேண்டும்? ஒற்றை மலையாளி அப்துல்கரீமும். குல்னா நியூஸ் பிரிண்ட் மில்ஸ் ஷாஜகானும் எத்தனை முறைகள் தூக்கப் புரளலில் இவரை நினைத்து எழுந்து உட்கார்ந்திருப்பார்கள்? தன்னுடைய வெதுவெதுப்பை அடுத்த மனிதர்களுக்கு எளிதில் கடத்திவிட முடிவது எத்தனை பெரும் பேறு? அவருடைய இன்றுவரையிலான ஆயுளின் ஐந்தொகையில் அவருடைய வங்கி இருப்பை விடக் கூடுதலாக, அல்லது அதற்குக் கொஞ்சமும் குறையாமல் இந்த மனித சேகரம் இருக்கத்தானே செய்யும்? எந்தச் சூக்குமமும் இல்லாமல், சூத்திரமும் பிரயோகிக்காமல், நிறை நாழி நெல் போல மனதால் வாழ்வும், வாழ்வால் மனமும் நிரம்பிக்கிடப்பது ஒரு கொடுப்பினைதான்.

ஆனால், அன்றைக்கு எனக்குக் கொடுத்துவைத்தது வசந்த் பவன் காஃபிதான். நான் குஷ்வந்த் சிங் இல்லை. இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், தி.ஜானகிராமன், ஆதவன், நாஞ்சில் நாடன் எல்லாம் இல்லைதான். எனினும், உங்கள் மினி பார், சோடா மேக்கர் சகித தினங்களில் உங்களை நான் சந்தித்து இருக்கலாம். உங்களுடன் ஒரு நான்கு விரற்கடை அருந்தியபடி, உங்கள் எழுத்தும் எண்ணமும் அல்லது கழுத்தும் கன்னமும் குழுமக் கதைகளைக் கேட்டுக்கொண்டு இருந்திருக்கலாம்.

இந்த இருந்திருக்கலாம்களை, ஆனால்களை விடுங்கள். இந்த நிகம்போத், சுஜாதா, பூர்ணம், பரதேவதை எல்லாம் இருக்கட்டும். உயிர்மை வெளியிட்டது, வம்சி வெளியிடப் போவது எல்லாம் ஒரு சமீபத்திய ஐந்தாறு வருடக் கதை என்று வைத்துக்கொள்வோம். அதையெல்லாம் தாண்டி, பாரதி மணி என்கிற மனிதன் எத்தனை அசலானவன். வெளிப்படையானவன். தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே, தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க, துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை. இல்லையென்றால் அவருக்கு எப்படி இத்தனை மனிதர்கள் வாய்ப்பார்கள்? என்ன ஒரு நம்பகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக்கும்? எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது எத்தனை அரிய கனிவு!

உங்களிடம் ஏதோ இருக்கிறது……இந்த ஏதோ தான் முக்கியம். அது எது எனப் பிடிபட அவசியம் இல்லை. அந்த ஏதோ தான் உங்களை வழி நடத்துகிறது. அல்லது அந்த ஏதோவை நீங்கள் நுட்பமாக இயக்குகிறீர்கள். அந்த ஏதோவினால்தான் உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது பாரதி மணி ஐயா! உங்களைப் போல இருக்க முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். நீங்கள் எதிலும் தோற்றிருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு அருகில் இருந்தவர்களை நீங்கள் தோற்றுப் போகவும் அனுமதித்து இருக்க மாட்டீர்கள். ஆனால் துளிக்கூட வெற்றியின் பகட்டு அற்ற பார்வதிபுர முகமே உங்களிடம் இப்போதும் இருக்கிறது.

அந்த முகத்தைத்தான் எல்லோரும் வரைய விரும்புகிறார்கள். வரையக்கூட அல்ல, கேலிச்சித்திரமாக்க  முனைகிறார்கள். உங்களுக்குத்தான் எத்தனை கேலிச் சித்திரங்கள், முகப்புத்தகத்திலும் அதற்கு வெளியிலும். கொஞ்சம் நுணுக்கமாக அவதானித்தால், சாதாரணமானவர்கள் வரையப்படுகிறார்கள். உங்களைப் போன்ற அருகதை உடையவர்களே கேலிச்சித்திரமாக்கப்படுகிறார்கள். கேலிச் சித்திரக்காரர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோர்க்குமே உங்கள் முகம் உவகைக்குரியதுதான்.

என்னிடம் என்னுடைய 60ம் வருடத்துத் தூரிகை இல்லை. இருந்திருந்தால், நானும் உங்களின் கேலிச் சித்திரத்தை வரைந்திருப்பேன். உங்களின் முழு ஆன்மாவும் அதில் துலங்கும்படி இருந்திருக்கும். அன்னை தெரஸா உங்களுக்குச் செய்தது போல, நீங்கள்,  ’To my dearest son, Kalyaani, With Love’ என்று அதில் கையெத்திட்டுத் தந்திருப்பீர்கள்!

இப்போதும் குறைந்து போகவில்லை. இதை வாசித்துவிட்டு, ‘God bless you’  என்பீர்கள். என்னை ஆசீர்வதிக்கும் சாமியின் பெயர் பாரதி மணி என்று இருக்கக் கூடாதா என்ன?

கல்யாணி.சி
28.12.2013.    


0 comments:

Post a Comment