Friday, January 22, 2016

முதல் தடவையாக 1955-ல் சென்னையிலிருந்து ஜி.டி. எக்ஸ்பிரசில் என் அக்கா அத்தானுடன் புதிதாகக்கட்டியிருந்த புதுதில்லி ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, பதினெட்டு வயதான எனக்கு பிரமிப்பாக இருந்தது. புதிய மனிதர்கள், மொழி, உணவுப்பழக்கங்கள் எல்லாமே வேறாக இருந்தது. வந்த புதிதில் ‘எப்படி நாம் நமது அரைகுறை ஆங்கிலத்தையும், கால்குறை ஹிந்தியையும் வைத்துக்கொண்டு இங்கே குப்பை கொட்டமுடியும்?…….. திரும்ப ஊருக்கே ஓடிவிடலாமா?’ என்று பலமுறை நினைத்ததுண்டு! ஆனால் தில்லி என்னை பல வருடங்கள் வைத்திருந்து, என் தகுதிக்கு மேலாகவே ஆயுர், ஆரோக்யம், ஐஸ்வர்யம், கல்வி எல்லாமே தந்து, என்னைக் கொஞ்சம் பக்குவமானவனாக மாற்றி அனுப்பிவைத்தது! ஒரு காலத்தில் ஸாமுவெல் ஜான்ஸன் போல, “A day out of Delhi is a day out of my life” என்று கூட சொல்லிக் கொண்டிருந்தேன்.  தில்லியைப்பற்றி எழுத எனக்கு வண்டி வண்டியாக விஷயங்கள் உண்டு!
ஒரு குக்கிராமத்திலிருந்து திடீரென தில்லிக்கு உந்தித்தள்ளப்பட்ட எனக்கு அங்கே பார்த்த பல விஷயங்கள் புதிதாகவும், புதிராகவும் இருந்தன. ரகசியமொன்று சொல்கிறேன். வெளியில் யாரிடமும் சொல்லவேண்டாம். மானம் போய்விடும். நமக்குள்ளேயே இருக்கட்டும்! தில்லி போன மறுநாள் ஒரு முக்கிய விஷயமாக ஆபீசிலிருந்த என் அத்தானுக்கு போனில் தகவல் சொல்ல சரோஜினி நகர் மார்க்கெட் போனேன். ஒரு கடையில் என் வாழ்வில் முதல் தடவையாக நம்பர் சுழட்டும் டயல் போனை பார்த்தேன். என் பார்வதிபுரம் கிராமத்தில் எந்த வீட்டிலும் அப்போது தொலைபேசி கிடையாது. நாகர்கோவிலிலிருந்த என் உறவினர் வீட்டில் ஐந்தாறு கிலோவுக்குக்குறையாத எடையுள்ள கருப்பு போன் டயல் இல்லாது சுழற்றும் கைப்பிடியுடன் இருக்கும். அதில் என் உறவினர் பேசக்கேட்டிருக்கிறேன்.  ரிசீவரை ’தொட்டிலில்’ இருந்து எடுக்காமலே கைப்பிடியை இரண்டு மூன்று முறை சுற்றுவார். பின் ரிசீவரை எடுத்து ‘யாரு!….சம்முகமா? லீவிலெருந்து எப்பம்டே வந்தே? சின்னவளுக்கு கல்யாணமெல்லாம் நல்லா நடந்திச்சா? குளந்தைகளெ வீட்டுக்கு வரச்சொல்லுடே. எம் பொஞ்சாதிக்கு பாக்கணுமாம்.
முன்னூத்தியெட்டு….ரெட்டியாருக்குப்போடு’ என்பார். எக்ஸ்சேஞ்சிலிருக்கும் ஆபரேட்டர் சம்முகம் தொங்கும் பிளக்கை எடுத்து 308 நம்பரில் செருகுவார் போல. இதையெல்லாம் பார்த்திருந்த எனக்கு, டயல் செய்யும் போன் புதிசு. என்பதினெட்டாவது வயதில், ஆயுசிலேயே முதன்முறையாக டெலிபோனில் பேசப்போகிறேன்! என்னிடம் என் அத்தான் ஆபீஸ் ஐந்து டிஜிட் நம்பர் இருந்தது. இப்போது ஒரு சந்தேகம். ரிசீவரை கையிலெடுத்து பிறகு எண்களை சுழற்றவேண்டுமா….அல்லது எடுக்காமலே டயல் செய்யவேண்டுமா? யாரிடமாவது கேட்கலாமென்றால் முதலில் கூச்சம். பிறகு மொழிப்பிரச்னை. ஹிந்தி சுமாராக புரிந்துகொள்ளவும், எழுத்துக்கூட்டிப்படிக்கவும் தெரியுமே தவிர சரளமாகப் பேச வராது!
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் படித்த எனக்கு அப்போது ஐந்தாம் வகுப்பிலிருந்து மெட்ரிக் வரை ஹிந்தி கட்டாயப்பாடம். Local Calls …. Annas Two only என்ற போர்டு தொங்கும் கடையெதிரே கொஞ்சநேரம் காத்திருந்தேன். ஒருவர் வந்தார். ரிசீவரை எடுத்து காதில் வைத்துக்கொண்டு டயல் செய்தார். ஓரிரு வினாடிகளுக்குப்பிறகு ரிசீவரை வைத்துவிட்டார். (ஏன்? ஓஹோ…எங்கேஜ்டுனு சொல்வாங்களே….அதுவா?) மறுபடியும் எடுத்து டயல் செய்தார். பேசினார்….யாரையோ மாலை ஆறுமணிக்கு பார்க்கவரலாமா என்று கேட்கிறாரென்பது புரிகிறாற்போல இருந்தது. எனது அடுத்த பிரச்னை எங்கேஜ்டு டோனுக்கும் டயல் டோனுக்கும் வித்தியாசம் தெரியாது! பண்டும் செத்திருந்தாத்தானே சுடுகாட்டுக்கு வழி தெரியும்? அந்த பகவான் அதற்குமேல் என்னை சோதிக்கவில்லை. டயல் செய்தவுடனேயே ட்ரிங்,,,ட்ரிங்… என்றது. அடுத்த முனையிலிருந்து ‘யெஸ்….கணபதி ஹியர்” என்று அத்தானின் குரலும் கேட்டது தில்லியில் என் முதல் தொலைபேச்சு வெற்றிகரமாக நடந்தது! இது நமக்குள்ளியே இருக்கட்டும்!…… வெளீலெ தெரியாண்டாம்!
நினைத்துப்பார்த்தால் என் தலைமுறையினர் தான் டெக்னாலஜியின் பலப்பல மாற்றங்களை சந்தித்தவர்களெனத் தோன்றுகிறது தொலைபேசியின் வளர்ச்சியையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஆரம்பத்தில் ஆபரேட்டர் மூலம் பேசும் சுழற்றும் கைப்பிடி கருவி, ஐந்து டிஜிட் டயல் போன், பின்னர் க்ராஸ் பார் எக்ஸ்சேஞ்ச், OYT (Own Your Telephone) மூலம் ரூ.3000 கட்டிவிட்டு ஆறுவருடம் கனெக்‌ஷனுக்காக காத்திருப்பு, வீடு மாறினால் டெலிபோன் மாற இரு வருடங்கள், ஆபரேட்டர் மூலம் Trunk Call Booking,  அதிலும் Ordinary, Urgent Calls. நமக்கு நாள் நல்லதாக இருந்தால் காலையில் புக் பண்ணிய அர்ஜென்ட் கால் இரவுக்குள் பேசமுடிந்த அதிசயம், பின்னர் வந்த Optical Fibre, Co-axial Cables, ஏரியா கோடுடனான S.T.D., தொண்ணூறுகளில் ஆரம்பித்தThirtytwo Rupees Only per minute for both Incoming and Outgoing Calls மொபைல் போன்……அதனால் எல்லோருக்குமே, ’அப்ப நான் வச்சிடறேன்’ என்று பேச்சைத்துண்டிப்பதில் ஓர் அவசரம்! படிப்படியாக ரூ. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விழுங்கிய 2G, Incoming Calls are also charged while Roaming. டாட்டா டோகோமோ அறிவித்த All Calls Local/National/Roaming One Paise per second! ரிஷி கபூர் மகன் அடிக்கடி டி.வி.யில் சொல்வது போல் “Keep it Simple! Silly!‘ அதன் பின்னர் 3G at no extra cost! அடிக்கடி விளம்பரங்களில் வரும் Vodafone 3G Zoozoo, அனுமனைப்போல விர்விர்ரென்று பறந்து செய்யாத சாகசங்களே இல்லை!
அப்படியே 2G ஊழல் மூலம் சிறையில் வாடும் ஆண்டிமுத்து ராசாவையும், மகள் கனிமொழியையும் விர்ரென்று பறந்துபோய் தில்லி திஹாரிலிருந்து ககன மார்க்கத்தில் மீட்டுக்கொண்டுவந்து, இங்கே கோபாலபுரத்தில் நிறுத்தினால், தமிழ்நாட்டின் மூத்த தலைவர் எவ்வளவு சந்தோஷப்படுவார்? அந்த ஸூஸு அனுமனைப்பாராட்டி முரசொலியில் ஒரு கட்டுரை நிச்சயம் வரும்! அப்புறம் வந்தது Smart Phone, I-Phone. இப்படி தொலைபேசிக்கிருந்த ஊளச்சதையெல்லாம் குறைந்து கைக்கடக்கமாக வந்துவிட்டது!
நானும் நேற்று மார்க்கெட் போய் ரூ. 27,000 கொடுத்து புதிதாக வந்திருக்கும் Androidதடவிய Gingerbread இருக்கும் Samsung Nexus S Smart Phone வாங்கிவிட்டேன்!  இந்த வயதான குழந்தைக்கு கையில் வைத்து விளையாட, பொழுதுபோக ஒரு கருவி! பாருங்கள்… என் கண் முன்னாலேயே டெக்னாலஜி எப்படியெல்லாம் கன்னாபின்னாவென்று வளர்ந்திருக்கிறது என்று!
தில்லி நார்த் பிளாக்.
அப்போது நான் பார்த்த தில்லி வேறு. என்னைப்போன்ற ‘பெரிசு’களுக்கு மட்டுமே தெரிந்த தில்லி! இப்போதைய ராமகிருஷ்ணபுரம் நரிகள் நடமாடும் காடாக இருந்தது. மெஹ்ரோலி ரோடில் சப்தர்ஜங் மருத்துவமனையை விட்டால், மெஹ்ரோலி கிராமத்தில் தான் ஆள் நடமாட்டமிருக்கும் .பழைய கோடம்பாக்கம் போல, ஐ.என்.ஏ. காலனியில் ரயில்வே லெவல் கிராஸிங் இருந்த காலம். டகோட்டா விமானங்கள், சப்தர்ஜங் விமானநிலையத்தில் இறங்கின. தில்லி தமிழ்ச்சங்கம் கனாட்பிளேசில் இப்போதிருக்கும் பாலிகா பஸார் மேல் இருந்த தியேட்டர் கம்யூனிகேஷன் பில்டிங்கில் வாடகைக்கு எடுத்த மூன்று சிறிய அறைகளில் அரசியல், போட்டி பொறாமையில்லாமல் இயங்கிவந்தது.
கோடை காலத்தில், குளிர்ந்த தண்ணீருக்காக வீட்டுக்கொரு புது சுராய் (Surahi) இடம் பிடிக்கும். தினக்கூலியில் நியமனம் பெற்ற ‘Watermen–தண்ணீர் மனிதர்கள்’ அரசாங்க அலுவலகங்களின் ஜன்னல்களை மூடியிருக்கும் விளாமிச்சவேர் (கஸ்கஸ்) தட்டிகளுக்கு அவ்வப்போது தோளில் மாட்டியிருக்கும் தோல்பையிலிருந்து தண்ணீர் தெளித்து, மத்தியானப் புழுக்கத்தை அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.
வாரத்துக்கொருமுறை ராஜஸ்தான் பாலைவனத்திருந்து வரும் ’ஆந்தி’க்காற்று வீடு முழுக்க புழுதியையும், கூடவே குளிர்ச்சியையும் கொண்டுவர மறக்காது. குளிர்காலம் வருமுன்பே, தெருக்களில் புது ரஜாய்கள் செய்யும் ‘நாரதர்கள்’ தங்கள் ஒற்றைநாண் தம்புராவை டொய்ங் டொய்ங் என்று மீட்டிக்கொண்டே போவார்கள். ஆட்டோக்கள் கண்டு பிடிக்குமுன்னர் இருந்த நாலு சீட் ‘பட்பட்டி’கள் பத்துப்பேரை அடைத்துக்கொண்டு, கிங்ஸ்வே, க்வீன்ஸ்வேயில் விரைந்து போகும். நார்த் ப்ளாக் அருகே ட்ராபிக் சிக்னலில் காத்திருக்கும்போது பல தடவைகள் பக்கத்தில் திரும்பிப்பார்த்தால், பைலட், பந்தா ஏதுமில்லாமல், சிக்னலை மதித்து நிற்கும் கருப்புக்கண்ணாடியில்லாத அம்பாசிடர் காரில் பூனைத்தூக்கத்திலோ, அல்லது கோப்பு பார்த்துக்கொண்டோ போகும், காந்திக்குல்லா இல்லாத வழுக்கைத்தலை பிரதமர் நேருவைப்பார்க்க முடிந்தது! தினமும் பாலுக்கு பாத்திரத்துடன் விடியற்காலை இருட்டில், ‘கந்தா நாலா’ அருகிலிருந்த செளத்திரி சுக்ராமின் பால்பண்ணையின் கிழிந்த கயிற்றுக்கட்டிலில் காத்திருக்கவேண்டும். காண்டாமிருகம் போல் கருகருவென வளர்ந்திருந்த ஐம்பது தில்லி எருமைகளின் சாண மூத்திர வாசனையை பொறுத்துக்கொள்ளும் மனத்திடம் அவசியம் தேவை! இல்லையென்றால் வீட்டுக்கு சைக்கிளில் கொண்டுவந்து கொடுக்கும் ’தூத்வாலா’க்களின் சரிபாதி தண்ணீர் கலந்த பா..ஆ..ல் தான் கதி! Delhi Milk Service, Mother Dairy, டோக்கன் பால் எல்லாம் வர ஆண்டுகள் பல காத்திருக்க நேர்ந்தது.
தில்லி வந்து புதிதாகக்குடித்தனம் வைத்திருக்கும் இல்லத்தரசிகளிடம், “தூக்கான்ல போய் ஸப்ஜி வாங்கினா ரொம்ப மஹங்காவா இருக்கும். ஸடக்வாலாட்டே வாங்குங்க…..ஸஸ்தாவா தருவான்” என்று சுத்தத்தமிழில் உபதேசம் செய்யும் சேலத்து வேலைக்காரிகள்! வீட்டையே புகையில் ஆழ்த்தும் தகர வாளி நிலக்கரி அடுப்புகள்! தினமும் அதிகாலையில் நமக்குத்தேவையான தினசரிப்பேப்பர்களை சைக்கிள் ட்யூபிலிருந்து தயாரித்த கருப்பு ரப்பர் பாண்டில் சுருட்டி, சைக்கிளில் போய்க்கொண்டே, மேல்மாடியில் குடியிருக்கும் நம் வீட்டுக்கதவுகளில் குறி தவறாது வீசும் பேப்பர்வாலாக்கள் இன்னும் இருக்கிறார்களா? ஷாஜஹான் ரோடில் அரை நூற்றாண்டுக்கும் மேல் வெற்றிநடை போடும் பிரபுதயாள் கையேந்திபவன் இந்தியாவுக்கு வெளியேயும் பிரசித்தி பெற்றது. அமோல் பாலேகர் நடித்த ரஜ்னிகந்தாபடத்தில் (?) பாலேகர் அங்கே கதாநாயகியுடன் பானி-பூரி சாப்பிடுவார்!
நினைத்தாலே வாயில் உமிழ்நீர் சுரக்கும் கோல்கப்பா-தஹி பல்லா-பாப்டி அப்போது ஒரு பிளேட் எட்டணா தான். ஒரு ப்ளேட் சாப்பிட்டால், மதிய உணவை மறந்துவிடலாம்! தினமும் ஃப்ரெஷ்ஷாக அரைத்துச்சேர்க்கும் மசாலாக்களும் கைமணமும், வேறெங்குமில்லாத ருசியைக்கொடுத்தன. அமைச்சர்கள் வீட்டிலிருந்தும் டிரைவர்கள் மாலை வேளைகளில் காத்திருந்து வாங்கிப்போவார்கள்.
தில்லியின் Wall Fleet Street என அறியப்பட்ட மதுரா ரோடு – பின்னர் பஹதூர் ஷா ஸஃபர் மார்க் என்று நாமகரணம் ஆனது – இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து அப்போது வெளிவந்த சங்கரப்பிள்ளையின் சங்கர்ஸ் வீக்லி வரையிலான முக்கிய பத்திரிகை அலுவலகங்களைக்கொண்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஸ்டேட்ஸ்மன் மட்டும் கனாட்பிளேசில் இருந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டட மூன்றாவது மாடியில் நான் வேலை பார்த்த ஸ்டேட் டிரேடிங் கார்ப்பொரேஷன் இருந்தது. உணவு இடைவேளைகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆபீஸ் போய் – அங்கே மட்டும் ஏர் கண்டிஷன் மிக நன்றாக வேலை செய்யும்! — முந்தையநாள் டாக் எடிஷன் தினமணியை ஆரஅமர புரட்டுவேன்.
ஏ.என். சிவராமன் எழுதிய பொருளாதாரக்கட்டுரைகளையும் தினமணி கதிரையும் விரும்பிப்படிப்பேன். இந்தியன் எக்ஸ்பிரசில் முக்கிய கார்ட்டூனிஸ்டாக இருந்த அபு ஆப்ரகாம் என் நண்பரானார். எனது மலையாள ஞானத்தை விருத்தி செய்ய, அவ்வப்போது அவருடன் மலையாளத்தில் பேசிக்கொண்டிருப்பேன். அவரது மேசை எப்போதும் துடைத்துவிட்டாற்போல சுத்தமாக இருக்கும். எங்கள் நட்பு அவர் ரிட்டயராகி, திருவனந்தபுரத்தில் அவருக்காக கட்டடக்கலைஞர் லாரி பேக்கர் வடிவமைத்த புது மனை புகுவிழா அழைப்பிதழ் வரை நீடித்தது!
ராம்நாத் கோயங்கா
அவரிடம் பேசிவிட்டு, திரும்பும் வழியில் தென்படும் வெள்ளை வெளேரென்று மார்வாடி வேஷ்டி ஜிப்பாவிலிருக்கும் ஸ்ரீ ராம்நாத் கோயங்காவுக்கு வணக்கம் சொல்வேன். கோயங்காவை எனக்கு நன்றாகத்தெரியும்….என்னைத்தான் அவருக்குத்தெரியாது! அவர் தில்லியிலிருக்கும்போது எக்ஸ்பிரஸ் காரியாலய விருந்தினர் அறையிலேயே தங்குவார். பல கலையுலகப் பிரமுகர்கள், சில மத்திய மந்திரிகள், சீனியர் அரசியல்வாதிகள் அவரைப்பார்க்க வருவார்கள்.
கோயங்கா ஒரு முக்கிய பாத்திரமாக, மணி ரத்னத்தின் ‘குரு’ படத்தில் வருவார். இயக்குநர் என்னிடம் கேட்டிருந்தால் எமெர்ஜன்ஸி காலத்தில் கோயங்காவுக்கு அரசு கொடுத்த நெருக்கடிகள் பற்றிய பல சுவையான சம்பவங்களைத் தந்திருப்பேன்!
உங்களில் சிலருக்கு தில்லியில் ஆல்புகர்க் ரோடு எங்கேயிருந்ததென்று தெரியாமலிருக்கலாம். அங்கேயிருக்கும் ஒரு மாளிகை நம் சுதந்திர இந்தியாவில் நடந்த துயர்மிகு சம்பவத்துக்கு மெளன சாட்சியாக நிற்கிறது. ஆம்….பின்னர் (தீஸ்) 30 ஜனவரி மார்க் என்று பெயர் மாற்றம் பெற்ற சாலையில் இருந்த பிர்லா மாளிகை (Birla House). தான் அது. சரித்திரப்புகழ் பெற்ற அந்தக்கட்டடதுடன் அறுபதுகளில் தொடங்கிய எனது தொடர்பு பத்தாண்டுகளுக்கு மேல் நீடித்தது! அதனுள்ளே 1948-ம் வருடம் ஜனவரி 30-ம் தேதி மாலை கொலையுண்ட காந்திஜியின் நினைவாக ஒரு ஸ்தூபி இருக்கிறது.
அந்த இடத்தில் தான் ‘சத்திய சோதனை’ எழுதிய மகான் கடைசியாக ‘ஹே ராம்…..ஹே ராம்…..ஹே ராம்’ என்று மூன்றுமுறை — ஆமாம்…….மூன்று முறை சொன்னாரா? – சொன்னாராம்! எனக்குப்பிடித்த படமான கமல் ஹாஸனின் ’ஹே ராமி’லும் நஸ்ருதீன் ஷா மூன்று முறை சொன்னார்!
{எனக்குள்ள பிர்லா மாளிகைத்தொடர்பை விளக்கவேண்டுமென்றால், கொஞ்சம் ‘கதைக்க’வேண்டியிருக்குமே! பரவாயில்லையா? நீங்களெல்லோரும் கோரஸாக ‘பரவாயில்லை!…. பரவாயில்லை!!’ யென்று சொல்வது என் காதில் விழுகிறது! நன்றி!}
1957-லிருந்து நான் வேலை செய்துவந்த S.T.C.-யில் ’கொடுத்த வேலையை ஒழுங்காகச்செய்பவன்’ என்று எனக்கு கொஞ்சம் நல்ல பெயர் உண்டு. ஒவ்வொரு வருடமும், எனது Confidential Report-ல் என்ன எழுதவேண்டுமென்று அதிகாரிகள் என்னிடமே கேட்டு என்னை நெளியவைப்பார்கள்! மாதத்தில் நான்கைந்துமுறை ஆபீஸ் நேரத்தில், பக்கத்து ஆஸப் அலி ரோடிலிருக்கும் ‘டிலைட்’ தியேட்டரில் மதியக்காட்சிகளுக்கு போய்வருவேன் என்கிற விவரம் அவர்களுக்குத்தெரியாது!
எங்கள் மானேஜிங் டைரக்டருக்கு பெர்சனல் செக்ரட்டரியாக இருந்த கல்யாணராமன்LTC லீவில் போய்விட்டால், அந்த இடத்துக்கு என்னை மாற்றிவிடுவார்கள். அதற்குத் தனியாக ஒரு Peanut அலவன்சும் உண்டு! 1962-ல் அப்படி ஒருமுறை அங்கே இருந்தபோது, திரு. B.M. பிர்லா (Brij Mohan Birla) எங்கள் எம்.டி.யை பார்க்கவந்தார். உள்ளே போயிருந்த ரஷ்யன் டெலிகேஷன் மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், இவர் ஒரு மணிநேரத்துக்குமேல் என் அறையில் காத்திருக்க நேர்ந்தது. அதற்காக மன்னிப்புக்கோரி அடிக்கடி டீ, பிஸ்கட் கொடுத்து சமாளித்தேன். நான் மற்றவர்களிடம் வேலை வாங்கும் விதம் அவருக்குப்பிடித்திருக்கவேண்டும். அவருடன் வந்திருந்த அவரது வயதான செயலரிடம் பெங்காலியில் ஏதோ சொன்னார். மீட்டிங் முடிந்து போகும்போது, ‘நாளை பார்க்கலாம்!’ என்று சொல்லிவிட்டுப்போனார்.  செயலர் தாஸ்குப்தா என்னிடம், ’நாளை உன்னால் பிர்லா ஹெளஸ் வரமுடியுமா? பி.எம். பாபு பார்க்க விரும்புகிறார்’ என்று சொன்னார். ஏதோ வேலைக்குத்தானென்று புரிந்தது. இந்தவேலை பிடித்ததாக இருந்தாலும், ‘போய்த்தான் பார்ப்போமே’ என்று நினைத்தேன்.
காந்தி ஸ்தூபி-பிர்லா ஹெளஸ்
அடுத்தநாள் சொன்ன நேரத்துக்கு முந்தியே பிர்லா ஹெளஸ் போய்விட்டேன். உள்ளே போனதும் நேராக கண்ணில் பட்டது காந்திஜியின் ஸ்தூபி தான். அதற்குமுன்னால் அங்கே போனதில்லை. துலுக்கன் சாமந்தி மாலைகளும் ரோஜாத்துகள்களும் சார்த்தியிருந்தன. பக்கத்திலிருந்த ரோஜாச்செடியிலிருந்து ஒரு மலர் பறிக்க முற்பட்டபோது, எங்கிருந்தோ ஓடிவந்த தோட்டக்காரர் தடுத்தார். அவர் அனுமதியுடன் இரு செம்பருத்தி மலர்களைப் பறித்து தேசப்பிதாவின் நினைவிடத்தில் வைத்தேன். எப்படி பிரார்த்தனை செய்வதென்று தெரியாமல், ‘ஹே ராம்’ என்று மூன்று முறை சொன்னேன். புது வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளத்தெரியவில்லை.
பின்னர் சுமார் பத்தாண்டுகள் எப்போதெல்லாம் அங்கே போனேனோ, முதல் வேலையாக செருப்பைக்கழட்டிவிட்டு, இரண்டு செம்பருத்தி மலர்களோ, தோட்டக்கார தனிராம் தயவிருந்தால் இரு ரோஜா மலர்களோ சமர்ப்பிக்க நான் மறந்ததில்லை. ஒரு கோவிலைப்போல, மனதுக்கு ஒருவித நிம்மதியை அளிக்கும் இடம் அது. அன்று நடப்பதெல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை தானே வந்தது.
பிர்லா ஹெளஸ்…..இப்போது காந்தி ஸ்மாரக்
உள்ளே போனதும், தாஸ்குப்தா வரவேற்று, என்னை அழைத்ததன் காரணத்தைச்சொன்னார். ‘எனக்கு வயதாகிவிட்டது. கல்கத்தாவில் வேலை செய்வதே முடியாமலிருக்கிறது. அதோடு ஒவ்வொரு மாதமும் பாபுவோடு தில்லிக்கு நாலைந்து நாட்கள் வந்துபோவது என்னால் முடியவில்லை. பி.எம். பாபு தில்லி வரும் நாட்களில் அவரோடு இங்கேயே இருக்க வேண்டும். மற்ற நாட்களில் பார்லிமெண்ட் தெருவிலிருக்கும் யூக்கோ பாங்க் கட்டடத்தில் கோலி என்பவரின் கீழ் சீனியர் எக்ஸிகூடிவ் ஆக வேலை.  லைஸன்ஸ், பெட்மிட் விஷயமாக உத்யோக் பவன், நார்த் பிளாக் போகவேண்டியிருக்கும். மற்ற விஷயங்களை பாபு பேசுவார்’ என்று கூறி என்னை ஒரு சோபாவில் உட்காரச்சொன்னார். அது ஆளை உள்ளிழுக்கும் சோபா. அதில் உட்கார்ந்தால் நினைத்தபோது எழுந்திருக்கமுடியாது. குஷன் நம்மை அழுத்திவிடும்.
ஓரிரு நிமிடங்களில் வெகுநாள் பழகியவர் போல, பி.எம். பிர்லா  ‘ஹலோ…மணி!’ என்று அழைத்துக்கொண்டே பிர்லா அறையில் நுழைந்தார். நேற்று லண்டனில் ஆர்டர் கொடுத்து தைத்த கோட் சூட்டிலிருந்தவர், இப்போது மார்வாடிக்கே உரிய வெள்ளை ஜிப்பா, வேஷ்டியில் இருந்தார். எந்த மில்லில் தயாரான மல் வேஷ்டியோ?  அந்த வெள்ளையை அதுவரை பார்த்ததில்லை. எழுந்திருக்க முடியாமல் எழுந்து, கை குலுக்கினேன். நேராக விஷயத்துக்கு வந்தார். எஸ்.டி.சி.யில் நான் வாங்கும் சம்பளத்தைக்கேட்டார். சொன்னேன். அதோடு ரூ. 200 கூட்டித்தருவதாகச்சொன்னார். அப்போது ரூ. இருநூறே நல்ல சம்பளம். (ஒரு மாதத்துக்கான இருவேளைச்சாப்பாட்டுக்கு ரூ.40 மட்டுமே!)
அப்போது தான் அவர் எதிர்பாராதது நிகழ்ந்தது. “Sir! If you can double my salary, I will consider about it!” என்று என் குரல் எனக்கே கேட்டது. திகைத்தவராக, ‘What!?’ என்று கேட்டார். நான் சொன்னதையே மறுபடியும் நிதானமாகச்சொன்னேன். ‘யாரிடம் பேசுகிறோம் என்ற விவஸ்தை இந்தப்பொடியனுக்கு இருக்கிறதா?’ என்பதைப்போல் தாஸ்குப்தாவைப்பார்த்தார். பிறகு என்னையும்! ஐந்து வினாடிகளுக்குப்பிறகு, O.K., Done!’ என்று கைகுலுக்க வந்தவரிடம்,  ‘Sir! If I have to join here immediately, I have to pay S.T.C. one month’s salary instead of notice period! Hope you will  re-imburse that amount also!’ என்று சொல்லிமுடித்தேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு வெடிச்சிரிப்புடன், “Dasgupta! He is not a Madrasi. He is worse than a Marwari !’ என்று என்னிடம் கைகுலுக்கிவிட்டு, “Anything else?…..” என்று கேலியாகக்கேட்டார்! கடைசிவரை, நான் எதுவரை படித்திருக்கிறேன் என்று அவர் கேட்கவேயில்லை!
பிர்லா குடும்பத்தில் ஜி.டி. பிர்லா எல்லோருக்கும் தெரிந்தமுகம். காந்திஜியுடனும், காங்கிரசுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். பிர்லா மாளிகையையே காந்திஜியின் உபயோகத்துக்கு திறந்துவிட்டார். பி.எம். பிர்லா குடும்பத்தின் தொழில் மூளை. நாட்டின் கல்வி, பொருளாதாரம், விவசாயம் இவற்றில் கவனம் செலுத்துபவர். அவரது தீவிர முயற்சியில் தான் பிலானி மற்றும் (மெஸ்ரா) ராஞ்சியில் Birla Institute of Science & Technology, ஜெய்பூர், ஹைதராபாத் மற்றும் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்த B.M. Birla Planetarium, உ.பி. பந்த் நகரில் தொடங்கப்பட்ட Birla Agricultural University போன்றவை தேசநலனில் அவருக்கிருந்த அக்கறைக்கு எடுத்துக்காட்டு.
அறுபதுகளில் உணவு அமைச்சர் சி. சுப்பிரமணியம் தலைமையில் நிகழ்ந்த (Green Revolution) பச்சைப்புரட்சிக்கு பி.எம். பிர்லாவின் பங்கு வெளியில் வராதது. டாக்டர் எம்.எஸ். ஸ்வாமிநாதன், டாக்டர் அன்னா (ஜார்ஜ்) மல்ஹோத்ரா, ஜே. வீரராகவன் போன்றவர்களுடன் இவரும் அரசு உயர்மட்டக்குழுவில் நிரந்தர உறுப்பினர். இது சம்பந்தமாக பலமுறை சி. சுப்பிரமணியம் பிர்லா மாளிகை வந்திருக்கிறார். பிர்லாவின் முயற்சியால் அமெரிக்க Cargill, Northrup கூட்டுறவில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிDr. Norman Borlaugh இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு மெக்ஸிகோவில் வெற்றியடைந்த Hybrid கோதுமைக்கான வீரிய விதை உற்பத்தி இந்தியாவிலும் தீவிரமடைந்தது. பி.எம். பிர்லா தன் பங்குக்கு சொந்தச்செலவில் பஞ்சாபில் பெரிய அளவில் Ropar Agricultural Farm தொடங்கி, இந்தியாவின் தலைசிறந்த விவசாய நிபுணர்களை வேலைக்கமர்த்தி, நவீன ராட்சத இயந்திரங்களின் மூலம் கோதுமை விதை உற்பத்தியை விரிவாக்கி, அது வெற்றியடைந்ததும், பண்ணையை பஞ்சாப் அரசுக்கே தானமாகக்கொடுத்துவிட்டார்,. அப்போது அந்தப்பண்ணையின் மேற்பார்வையாளனாக இருந்ததால், இந்தப்பெரிய பெரிய  தலைகளுடன் எனக்கும் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிட்டியது.
பிர்லா மாளிகையில் முதலாளி, தொழிலாளி பாகுபாடு இல்லை. மதியம் தில்லியிலிருக்கும் எல்லா பிர்லாக்களும் தொழிலாளிகளுடன் — தரையில் பலகைமேல் உட்கார்ந்து எதிரே சிறு மரமேசையில் வெள்ளித்தட்டு, கிண்ணங்களுடன் சுவையான மார்வாடி சாப்பாடு — ஒரே பந்தியில் சாப்பிடவேண்டும். பிற்காலத்தில் எனது பல வெளிநாட்டுப்பயணங்களுக்கான பிள்ளையார் சுழி இங்கே தான் போடப்பட்டது. ஆயுசில் முதன்முறையாக ரோமுக்கும், நைஜீரியாவிலிருந்த லாகோஸ் நகருக்கும் பிர்லாவுடன் போனேன். எங்களுக்கு ஒரு வாரம் முன்னதாகவே ‘மகராஜ்’ என்று அழைக்கப்படும் மார்வாடி சமையற்காரர் தேவையான ராஜஸ்தானி சமையல் பொருட்கள், ’கங்கா ஜலத்துடன்’ அனுப்பப்பட்டார்!
எல்லா பிர்லாக்களும் தங்கள் இனிஷியலுடன் ‘பாபு’ சேர்த்து அறியப்பட்டார்கள். பிர்லா கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் தங்கள் முதலாளிகளை சந்திக்குமுன், தங்கள் ‘சிகரெட் நாற்றத்தை’ மறைக்க ‘பான் பராக்’ டப்பாவும் வைக்கப்பட்டிருந்தது! தினமும் காந்திஜியின் நினைவிடத்தை பார்க்கவரும் வெளியூர் பஸ் பயணிகளுக்கு இடையூறில்லாவகையில் உதவிசெய்ய தனியாக ஆட்கள் இருந்தார்கள். காந்திஜி கடைசியாக தங்கிய அறை எந்த மாற்றமுமில்லாமல் காட்சியாளர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. என்ன காரணத்தாலோ எமர்ஜென்ஸி நாட்களில் மத்திய அரசு – இந்திரா காந்தி என்று படிக்கவும் — பிர்லாவுக்கு பல நெருக்கடிகளை செய்தவாறே இருந்தது. பி.எம். பிர்லாவின் அம்பாசிடர் கார் நிறுவனம் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் அமெரிக்க ஜெனரல் மோட்டர்ஸ் தொழில் நுட்பத்தோடு – அன்னியச்செலவாணி ஒரு டாலர் கூட தேவையில்லாமல் — இந்தியாவில் தொடங்கவிருந்த நவீன குறைந்தவிலை கார் ப்ராஜக்ட் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டது.
காரணம் மகன் சஞ்சய் காந்தியின் ’நிறைவேறாத’ கனவுத்திட்டமான ரூ. 5,000-த்தில்மாருதி — ஏழைகளின் கார்! திடீரென்று ஒரு நாள் காந்தியின் நினைவிடத்தைக்கொண்டிருந்த பிர்லா மாளிகை நாட்டுடமையாக்கப் பட்டு, ஒரு மாதத்திற்குள் எல்லா பிர்லாக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பக்கத்திலிருந்த பிருத்விராஜ் ரோடில் தங்க இடம் தேடி அலைந்தார்கள். ஆண்டாண்டு காலமாக புழங்கிய சொந்த வீட்டிலிருந்து திடீரென கல்தா! இதைப்பற்றியெல்லாம் விரிவாக எழுதவேண்டும்!
பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதிக பணத்தைத்தேடும் மாரீசன் வேட்டையில், நான் பிர்லா வேலையை விட்டபோது, அதை முழுமனதுடன் ஆதரித்து விடைகொடுத்தனுப்பினார். அவரிடம் நான் கற்றதும், பெற்றதும் அதிகம். பின்னர் ஒரு தடவை கல்கத்தா போகும் விமானத்தில் பி.எம். பாபுவை சந்திக்க நேர்ந்தபோது, பக்கத்தில் உட்கார வைத்து, அன்போடு பேசிக்கொண்டிருந்தார். 1982-ல் ஒரு நாள் பத்திரிகையில் அந்த நல்ல மனிதர் லண்டன் தெருவில் அதிகாலை வாக்கிங் போகும்போது, மாரடைப்பால் இறந்துபோனார் என்ற செய்தி என்னை மிகவும் பாதித்தது. இந்தியாவில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட பல B.M. Birla நவீன இருதய சிகிச்சை மருத்துவமனைகள் அவருக்கு பயன்படவில்லை!
தில்லி மக்களிடம் பல விஷயங்கள் நாம் கற்றுக்கொள்ளும்படி இருந்தன. அதிகாலையில் தெருவில் சந்திக்கும் பழக்கமில்லாதவர்களோடும் ‘ராம்…ராம்….பாய்ஸாப்!’ என்று கடவுள் பெயராலேயே வணக்கம் சொல்லுவது எனக்கு புதிதாக இருந்தது. அடுத்தநாள் அவரைப்பார்த்தால், நானே முதலில் ‘ராம்…ராம்….சாச்சா!’ என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஊரில் முத்து உதிர்வதுபோல சில பெரிசுகள் எதிரே வருபவர்களிடம் ‘என்ன….ஆத்தங்கரைக்கா?’ என்பது எப்போதாவது வரும். குட் ஈவினிங் என்பதை தமிழ்ப்படுத்தி ‘மாலை வணக்கம்’ சொல்வதெல்லாம் பரவலாக பிற்பாடு தான் வந்தது!
மனதுக்கு திருப்தியாக சாப்பிட்டு முடிந்ததும், நமக்கெல்லாம் ‘ஆஆ…..வ்வ்’ என்றோ ‘ஏஏ..வ்வ்’ என்றோ தான் ஏப்பம் வரும்.  அது கேட்பவர்களை முகம் சுளிக்கவைக்கும். தில்லிப் பெரிசுகள் ஏப்பம் வந்தால் வாயைக்குவித்துக்கொண்டு, அதை ‘ஓ…ம்…..ஹரி ஓம்’ என்று மாற்றிவிடுவார்கள். ’ஐடியா நல்லா இருக்கே!’ என்று இதைப்பார்த்து நானும் என்னை மாற்றிக்கொண்டேன். இப்போது நானும் ‘ஓ…ம், ஹரி ஓம்!’ தான்!  நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்! கோவில் மற்றும் பொதுவிடங்களில் லட்டு போன்ற பிரசாதங்கள் வினியோகிக்கும்போது, ஒவ்வொன்றாக எடுத்து நம் கைகளில் தூக்கிப்போடுவதற்குப்பதிலாக, பணிவாக தட்டை நம் முன் நீட்டி, நம்மையே எடுத்துக்கொள்ளச்செய்யும் ‘பெருந்தன்மை’ எனக்குப்பிடித்திருந்தது.
சென்னை திரும்பியபிறகு, நண்பர்கள் என்னை ‘தில்லி மணி’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் நடித்த ஓரிரு படங்களில் எனது பெயர் ‘தில்லி மணி’யென்றே டைட்டில் கார்டில் காட்டப்பட்டது. அந்த மாநகரம் என்னை பல வருடங்கள் கல்வி தந்து, போஷித்து வளர்த்து ஆளாக்கியதென்றாலும் என் பெயரில் அதை ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு முன்பே இங்கே டெல்லி கணேஷ், டெல்லி குமார், டெல்லி கண்ணன், டெல்லி ராஜா என்று பலபேர் இருந்தார்கள். அந்த ஜோதியில் கலந்துகொள்வதில் எனக்கு விருப்பமில்லை. 2000-ல் எனது முதல் தமிழ்ப்படம் ‘பாரதி’ வந்த புதிது.
ஒருநாள் ராணி சீதை ஹால் கச்சேரியில் நீண்டநாள் நண்பர் வயலின் வித்தகர் லால்குடி ஜெயராமனை சந்தித்தேன். பாரதி படத்தை வெகுவாக சிலாகித்து பாராட்டிவிட்டு, ‘மணி! இனிமே உன்னை ‘பாரதி மணி’னு தான் கூப்பிடப்போறேன்’ என்று சொன்னார். சென்னையில் ஓர் அடையாளத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு அது உவப்பாக இருந்தது. என்னால் அந்த முண்டாசுக்கவிஞனாக மாறமுடியாவிட்டாலும் அவன் பெயரை ஒட்டிக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது!
டெல்லி மெட்ரோ
வெகுநாட்களுக்குப்பிறகு சமீபத்தில் தில்லி வந்தபோது, அந்த நகரமே மாறிப்போய் எனக்கு அந்நியமாகத்தெரிந்தது. வழவழவென சாலைகள், பார்க்குமிடமெல்லாம் ஃப்ளை ஓவர்கள், நகரை சுத்தமாகப்பராமரிப்பதில் அரசின் கவனம் எல்லாம் நகரத்தையே மாற்றிவிட்டன. எத்தனை கோடி ஊழல் நடந்திருந்தாலும், சமீபத்தில் நடந்துமுடிந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் தில்லியின் அடிப்படைக் கட்டுமான வசதிகளை பெருக்கித்தான் இருக்கின்றன. தில்லியில் தரைக்கு கீழேயும், மேலேயும் சீராக ஓடும் மெட்ரோ ரயிலும் இதற்கு முக்கிய காரணம்.
தூங்கிக்கொண்டிருந்த ஹரியானாவின் Gurgaon – குட்காவ்ன் ஒரு ஹாங்காங் போல மாறி, தில்லியோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. எனது மகள் இருக்கும் பதினாறாவது மாடியிலிருந்து தூரத்தில் புழுவைப்போல் ஊர்ந்து போகும் மெட்ரோ ரயிலைப்பார்க்கும்போது, நாம் ஹாங்காங்கில் தான் இருக்கிறோம் என்றே தோன்றியது. இரண்டுமணி நேரம் அவஸ்தைப் பட்டுக்கொண்டு போகும் ஆஸாத்பூர் மண்டிக்கு அலுங்காமல் நலுங்காமல் 37 நிமிடத்தில் போகமுடிகிறது. மெட்ரோ ரயில் தலைநகரத்தையே புரட்டிப்போட்டிருக்கிறதென்பதை மறுக்கவே முடியாது! தன் வீட்டுக்கு வழி சொல்வதும் இப்படி மாறியிருக்கிறது: ‘நேரா வந்து 236-ம் மெட்ரோ பில்லர்லே ஒரு யூ டர்ன் எடுங்க….செகண்ட் லெப்ட்….மூணாவது வீடு’!
தலைக்கு மேலே போகிறது!
எனது ஒரே வருத்தம் எனக்குத்தெரிந்த பஞ்சாபி நண்பர்கள் யாரையும் தில்லியில் பார்க்கமுடியவில்லை என்பது தான், தெருவில் இறங்கினால் எல்லாமே புதிய தலைமுறை முகங்கள்! என்னைத் தெரிந்தவர்களெல்லாம் எங்கே போனார்கள்? வயதானால் இதெல்லாம் நடக்கும் போலிருக்கிறது. தெருவில் பார்த்த ஒருவர் கூட ‘அரே மணி ஸாப்! கைஸே ஹோ? பஹுத் தின் ஸே திக்காயி நஹீ தியா?’ என்று என் கைகளைப்பற்றிக்கொள்ளவில்லை!
—-0000oooo0000—-

1 comment:

  1. வணக்கம் ஐய்யா ,உங்கள் பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகம் சம்பந்தமாக எழுதி இருந்தார் அதன் பின்னர் உங்கள் புத்தகம் வாசித்தேன், மிக அருமைஅதனை நன்றாக என்ஜாய் பண்ணினேன் , மிக்க நன்றி இப்போ உங்கள் பலகை தேடி வாசிக்கின்றேன்,Premraj from Norway

    ReplyDelete