Friday, January 22, 2016

’புதிய தலைமுறை’யிலிருந்து அதிஷா வினோ, கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தில் பிறந்த என்னிடம் என் தீபாவளி அனுபவங்களைப்பற்றி ஒரு கட்டுரை கேட்டார். அந்தக்கட்டுரையை நீங்கள் தவறவிட்டாலும், நான் விடுவதாக இல்லை!
தீபாவளியை எப்போதுமே நிறைய ‘காசைக்கரியாக்கி’ வாண வேடிக்கைகளோடு ஒளித்திருநாளாக நான் கொண்டாடியதே இல்லை! நாற்பதுகளில் திருவனந்தபுரத்தில் அப்பா தீபாவளிக்கு முன்தினம் சாலைக்கடைக்குப்போய் ஒன்றேகால் ரூபாய்க்கு (125 பைசா) ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் பட்டாசு வாங்கிவருவார்………’காசை வீணா கரியாக்கப்டாதுடா……..நல்ல நாளில் சாஸ்திரத்துக்கு ஏதோ கொஞ்சம் வேணும்! திறந்துபார்த்தால் அதில் 20 ‘எறி படக்கம்’,  சிகப்பு/பச்சை தீப்பெட்டிகளில் இரண்டிரண்டு, நாலு தரைச்சக்கரம், அரைச்சாணில் நாலு சரவெடி அவ்வளவே!
இந்த எறி படக்கத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லத்தோன்றுகிறது. இது சிறு வயதில் புழக்கத்திலிருந்து எனது பதின்ம வயதில் வழக்கொழிந்து போனது. சிறு சிறு கூழாங்கற்களை மஞ்சளாக கந்தகம் (?) கலந்து, பசை தடவிய பழைய பேப்பரில் நெல்லிக்காய் சைஸிலிருந்து பெரிய ஆரஞ்சு அளவு வரை உருண்டையாக இருக்கும். அளவைப்பொறுத்து வெடிச்சத்தத்தின் டெஸிபல் மாறும்! இதை வெடிக்கச்செய்ய திரி தேவையில்லை. சிமெண்டுத்தரையில் ஓங்கி விட்டெறிந்தால் போதும். பத்துக்கொன்று கூட பழுதில்லாமல் கூழாங்கற்கள் சிதற டமாரென்று வெடிக்கும். தெருவில் நடமாடும் வயசானவர்கள் இதைக்கண்டு நடுங்குவார்கள். அவர்கள் பின்னே பதுங்கிச்சென்று, படாரென்று ஒன்றை வெடித்தால், மலையாளத்தில் நாம் கேட்டிராத கெட்டவார்த்தைகளை உதிர்த்துக்கொண்டே ஓடுவார்கள். என் நண்பனுக்கு கூழாங்கல் கண்ணில் தெறித்து ஆஸ்பத்திரியில் இருநாள் இருக்க நேர்ந்தது. இவையெல்லாம் தான் ‘டோடோ’ போல எறி படக்கம் வழக்கொழிந்து போன காரணங்களாக இருக்கும்.
ஆனால் அம்மா தன் பங்குக்கு அதிகநெய் விட்டு வாயில் போட்டால் கடிக்கும்படியான மைசூர் பாகு, (துவரம்பருப்பைப்போலிருக்கும்) முக்குப்பருப்பில் வெல்லம் போட்ட உக்காரை, ஜெம் பிஸ்கட் கலந்த பெருங்காயம் தூக்கலான மிக்சர், பண்டிகை நாளானதால் வெங்காயம் போடாத மொருமொரு பருப்பு வடை, அம்மாவின் பிரசித்திபெற்ற பூப்போன்ற இட்லி, சட்னி இவை எல்லா வருடமும் உண்டு. கடைகளிலிருந்து தீபாவளிக்கு பட்சணம் வாங்கி வருவதென்பது அந்தக்காலத்தில் கேள்விப்படாத ஒன்று!  எல்லாம் வீட்டிலேயே செய்யவேண்டும்.
சாலைக்கடையில் ஒரு சின்ன முடுக்கில் ஒரு பழைய தையல்மிஷினுடன் இருந்த பழைய தையல்காரர் யூசுப் பாய் கடைக்கு நடையாய் நடந்து, தீபாவளி முன்னிரவு 11 மணிவரை காத்திருந்து ஒருவழியாக அவசரத்தில் முன் பின்னாக பட்டன்கள் தைத்து வீட்டிலுள்ளோருடைய தீபாவளி புத்தாடைகளும் வாங்கி வருவேன். ஏன்? Vijaya Mall போய் Van Hausan, West Side போன்ற Readymadeடோ இல்லை…. Pothy’s Chennai Silks போய் வாங்கி வந்திருக்கலாமே என்று தற்கால பேரன்கள் கேள்வி கேட்டால் என் பதில் ’அப்போதெல்லாம் ரெடிமேட் அண்டர்வெயர் கூட வந்திருக்கவில்லை! ……. ஒரே ரெடிமேட் பனியன் மட்டுமே!’ என்பது தான்!
பட்டாசு நினைப்பிலேயே தூங்கிப்போயிருக்கும் எங்களை அம்மா விடியற்காலம் எழுப்பி, வரிசையாக கோலம்போட்டு மேல் வைத்திருக்கும் பலகைகளில் கிழக்கே பார்த்து உட்காரச்செய்து, ஏதோ ஒரு மந்திரத்தை – அதில் கங்காஸ்நானம், நர்மதா, சிந்து, காவேரியெல்லாம் வரும் — சொல்லி உச்சந்தலையில் காய்ச்சின நல்லெண்ணெய் தேய்த்து விடுவாள். தீபாவளியன்று கூட வெந்நீரில் குளிப்பது எனக்குப்பிடிக்காது. ‘அம்மா! அக்கா அண்ணா வெந்நீரை தீத்துட்டா……நான் பச்சத்தண்ணிலெயே குளிக்கிறேன்!’
அப்போதெல்லாம் தீபாவளிக்கு வாசலில் அகல்விளக்கு, சரவிளக்கெல்லாம் கிடையாது. அதெல்லாம் பின்னால் வரும் திருக்கார்த்திகைக்குத் தான்!
1955-ல் தில்லிக்குப்போனபிறகு தான் தீபாவளிக்கான மகத்துவம் புரிந்தது. வட இந்தியர்கள் தீபாவளியை நம்மை விட பிரும்மாண்டமாக கொண்டாடுவார்கள். அவர்களுக்கு தீபாவளி ஆரம்பமே மாலை நேரத்தில் தான். அவர்களைப்பார்த்து தீபாவளியன்று  நம் வீடுகளிலும் பால்கனியில் அகல்விளக்கும், மின்சார சரவிளக்குகளும் பளிச்சிட்டன.
அறுபதுகளில் நான் பிர்லாவில் வேலை பார்த்தபோது, வருடாவருடம் தீபாவளிக்கு முன்னால் Dry Fruits நிறைந்த கூடைகள், இன்னொன்றில் தீபாவளி இனிப்பு வகைகள், மூன்றாவது கூடையில் பழங்கள் இவைகளை லாரி நிறைய ஏற்றிக்கொண்டு, பி.எம். பிர்லா கையெழுத்திட்ட தீபாவளி வாழ்த்து அட்டைகளுடன் நேரு மந்திரிசபையிலிருந்த எல்லா மந்திரிகள் வீட்டுக்கும் போய் மந்திரியை நேரில் சந்தித்து, வாழ்த்து அட்டையுடன் மூன்று கூடைகளையும் கொடுத்துவிட்டு வருவது எனது முக்கியமான வேலை. அவர்களில், “Young man! Because of acute sugar shortage, I am not celebrating Diwali this year. I will accept Mr. Birla’s Greetings Card but kindly take back the Sweets and Dry Fruits!” என்று கூடைகளை மறுத்துவிடும் ஜெய்சுக்லால் ஹாத்தி போன்றவர்களும், “Arre Bhai……..aur do set thokri de sakte ho?…..doosron ko denaa hai!” என்று அதிகாரத்துடன், இன்னும் இரண்டு செட் கூடைகள் கேட்டு வாங்கிக்கொள்ளும் காபினெட் அமைச்சர்களும் அடக்கம்!
பிர்லாவிலிருந்து விலகியபிறகும் எனக்கு நிறைய மார்வாடி நண்பர்கள் இருந்தார்கள். தீபாவளியன்று இரவு லக்ஷ்மி பூஜை செய்து புது கணக்கு தொடங்குவதும், சீட்டாடுவதும், அதன் பின் விச்ராந்தியாக Kesar Kasturi பாட்டிலைத்திறப்பதும் எல்லா வருடமும் நடக்கும். கேஸர் கஸ்தூரி குங்குமப்பூவிலிருந்தும் கஸ்தூரியிலிருந்தும் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த மது வகை. அப்போதே பாட்டிலுக்கு இரண்டாயிரத்துக்கும் மேலே. இப்போது நாப்பதாயிரத்துக்கும் மேஏஏஏலே இருக்கும்! ராயல் ஸல்யூட்டெல்லாம் கேஸர் கஸ்தூரி முன்னால் கைகட்டி நிற்கும்! மது விரும்பிகள் ஒரு தடவையாவது இதை அருந்தினால் தான் அவர்கள் ஜென்மம் சாபல்யமடையும்! நிச்சயம்!!
தீபாவளிக்கும் முத்துசாமி தீட்சிதருக்கும் தொடர்புண்டு. தீபாவளியன்று தான் இந்த மேதை தான் பூர்விகல்யாணியில் இயற்றிய ‘மீனாக்ஷிமேமுதம்’ கீர்த்தனையை தன் சீடர்கள் பாட, கேட்டுக்கொண்டே உயிர்நீத்தாரென்று படித்திருக்கிறேன். அதிலிருந்து தில்லியிலிருக்கும்போது எல்லா தீபாவளி விடியற்காலைகளிலும் காருகுறிச்சியார் விச்ராந்தியாக ஆலாபனை செய்து சவுக்க காலத்தில் இந்த கீர்த்தனையை பாடிவிட்டுப்போவார்! நாதஸ்வரமும் ஆச்சு……..தீட்சிதருக்கு அஞ்சலியும் ஆச்சு…….ஒரே கல்லில்!
இப்போதெல்லாம் தில்லி போகாமல் சென்னையில் தனியாக தீபாவளியென்றால், வருபவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகள், சுற்றிலும் விடியற்காலை பட்டாசு சத்தத்துடன் உட்கார்ந்திருந்து, தொலைபேசியில் தீபாவளி வாழ்த்து சொல்லும் நண்பர்கள் கேட்கும் ‘கங்காஸ்நானம் ஆச்சா……மணி?’  என்ற கேள்விக்கு பொய்யாக ‘ஆச்சுடா’ என்று பதில் சொல்லிவிட்டு, ஒன்பது மணிக்கு குளிக்கப்போவேன். வரும்போது என் அண்டர்வேர் பனியன் மட்டும் புதிதாக இருக்கும்! ஆஹா…..நானும் எழுபத்தேழு விதவிதமான தீபாவளி நாட்களைப்பார்த்திருக்கிறேன்!
உங்களுக்கெல்லாம் Happy Deepaavali!…….என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்!……..கங்காஸ்நானம் ஆச்சா?
—-0000—-

0 comments:

Post a Comment