Friday, January 22, 2016

என் சிறுவயதில் என் தந்தை திருவனந்தபுரத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் சாலைப்பள்ளியில் படித்தது தமிழ். மலையாளத்திலிருக்கும் சினிமாபோஸ்டரைப் படித்தும், சினிமா நோட்டீசில் கதைச்சுருக்கம் (கதா ஸாரம்) படித்தும் மலையாளம் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொண்டேன். தகழியின் சுருக்கப்படாத ‘ரெண்டிடங்கழி’யை ஒரேமூச்சில் முடித்திருக்கிறேன். மேலோட்டமாகவல்ல; அந்த மொழியின் இலக்கிய நுட்பங்களை ரசித்துப் படிப்பேன். இப்போதும் சிறந்த மலையாளப்படங்களைத் தேடித்தேடிப் போய் விரும்பிப் பார்ப்பதுண்டு. வீட்டிலிருக்கும்போது, டி.வி.யில் தமிழ் ‘சூரியனை’ விட, ஏஷியா நெட், கைரளி, சூர்யா சானல்கள் தான் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு, ஊருக்கு நூறு பேர் என்ற ஒரு தமிழ்ப்படத்தை இயக்கிய தமிழர் திரு B. லெனின் என்பவருக்கு இந்தியாவின் சிறந்த இயக்கு நருக்கான தேசியவிருது கிடைத்ததை, எனக்கு முதலில் அறிவித்தது மலையாள ஏஷியாநெட்தான்! தமிழ்ச்சானல்களுக்கு இது ஒரு செய்தியாகவே படவில்லை. அன்று பாங்காக்கில் ஒரு நாய்க்கும் பூனைக்கும் நடந்த திருமணத்தை படத்துடன் செய்தியாகக்   காட்டினார்கள்!
ஐம்பதுகளில் தில்லி போனதும், சிறந்த உலகசினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பு அதிகரித்தது. உற்சாகத்துடன் செயல்பட்ட தில்லி பிலிம் சொஸைட்டி உலக சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது. சர்வதேசத் திரைப்படவிழா நடக்கும்போது, அதிகாலையிலேயே க்யூவில் நின்று சீஸன் டிக்கெட் வாங்கி, தினசரி நான்கு படங்களாக,பதினைந்து நாட்களில் 60 படங்கள் பார்த்திருப்பேன். அப்போதிருந்த சொற்ப சம்பளம் முழுவதும் இதற்குத்தான். (தணிக்கை செய்யப்படாத அயல்நாட்டுப் படங்களைத் திரையிடுவதால், படுக்கை/குளியல் காட்சிகள் அதிகமிருப்பதாக ‘முன்தகவல்’ வந்த படங்களுக்குக் கூட்டம் அலை மோதும். படம் முடிந்து வெளியே வரும்போது, அடுத்த காட்சிக்குக் காத்திருக்கும் மகாஜனங்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ‘குச் திக்காயா?’ ஏதாவது காட்டினானா? என்று ஆவலுடன் கேட்பார்கள்! சில படங்களில், இன்டர்வலுக்கு முன்பாகவே, அவர்கள் எதிர்பார்த்த காட்சிகள் வராததால், சமீபத்தில் கிரிக்கெட் வீரர் (ஆமா, அதென்ன வீரர்? எந்தப் போருக்குப் போனார்?) ஹர்பஜன்சிங் ஆன்ட்ரூ ஸைமன்ஸிடம் தனியாகச் சொல்லி மாட்டிக்கொண்ட பஞ்சாபி கெட்டவார்த்தையில் ஆரம்பித்து திட்டிக்கொண்டே கூட்டமாக வெளியேறி விடுவார்கள். பிரெஞ்ச் படங்களுக்கு ‘மவுசு’ அதிகம். ஏதோ ஒருவருடம் Swimming Pool என்ற பிரெஞ்ச் படம் கன்னாட் ப்ளேஸ் ஓடியனில் திரையிடப்பட்டது. அதற்கு ஓடியனிலிருந்து  ரிவோலி வரை கூட்டம். படத்தின் பெயர்தான் அதற்குக் காரணம். முன்பே வாங்கிய சீஸன் டிக்கெட்டுடன் நானும் என் நாடக  நண்பர் M.K. ராவும் போயிருந்தோம். ஒரு பெரிய கூட்டம் எங் களைச் சூழ்ந்துகொண்டு, லண்டன் Sotheby’s-ல் ஏலம் போடுவதைப் போல், பத்துரூபாய் டிக்கெட்டுக்குப் படிப்படியாக ஏறி ரூ. 350 வரைவந்தார்கள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு, ‘அந்த’ படம் பார்க்கா மல் எங்கள் டிக்கெட்டுகளை விற்று விட்டோம். இவ்வளவுக்கும் என்  நண்பர் ஒரு ‘சபலானந்தா!’ மற்றப் படங்கள் இலவசமாகப் பார்த்த திருப்தி எனக்கு. நண்பர்  ராவோ, பன்னிரண்டு ரூபாய் வீதம், ரூ.350க்குஎத்தனை  Army XXX Rum பாட்டில்கள் வாங்கலாமென்று கணக்கு போட்டுக்கொண்டிருந் தார். அவர் ஒரு ‘ரம்’ பிரியர்!)
பிறகு இதற்கும் நண்பர் திரு. C.L. காந்தன் மூலமாக ஒரு வழி கண்டு பிடித்தேன். திரைப்படவிழாக்களை நடத்துவது தகவல் ஒலிபரப்பு இலாகாவின் கீழ் வரும் டைரக்டரேட் ஆப் பிலிம் ஃபெஸ்டிவல். அதில் இயக்குநராக இருப்பவர் பெரும்பாலும் அந்த மந்திரிக்கு வேண்டியவராக இருப்பார். பெரும்பாலும் அரசியல் நியமனமாகவே இருக்கும். உண்மையில் வேலை பார்ப்பவர் அவர் கீழிருக்கும் டெபுடி டைரக்டர் தான். அவரை சினேகிதராக்கிக்கொள்வேன். தமிழராக இருந்தால் என் நாடகங்களைப் பார்க்க அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் VIP பாஸ், அவர் ஜெயகாந்தன் விசிறியென்றால், மதுரை மீனாட்சி புத்தகாலயத்திலிருந்து அவரது சிறுகதைத் தொகுப்புகள், இல்லையென்றால் வீட்டில் ஓரிரு ‘பார்ட்டிகள்’ . . . நல்ல நண்பராகிவிடுவார்! அப்படி ஐம்பதுகளிலிருந்த டெபுடி டைரக் டர் மாத்தூரிலிருந்து இப்போதிருக் கும் திரு. சந்தானம் வரை எல்லோரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள்! விழா நடக்கும்போது மட்டும் நண்பனாக இல்லாமல் தீபாவளி, புதுவருடம், அவர் பிறந்தநாள் போன்ற நாட்களில் சிறு பரிசுடன் பார்க்கப் போவேன். அந்த வருடம் எனக்கு ஒரு டெலிகேட் பாஸ் நிச்சயம்! எப்படியோ நல்ல படங்கள் பார்க்கவேண்டும்! இதில் எனக்கு முன்னோடியாக இருந்தவர் அப் போது தில்லியிலிருந்த என் நண்பர் திரு. C.L. காந்தன். அவருக்கு அப்போதிருந்த அத்தனை தமிழ்/ஹிந்தி நடிக நடிகைகளும் அத்யந்த நண்பர்கள்.
இந்த டெபுடி டைரக்டர்கள் மூலம் வருடாவருடம் திரைப்படத் தேர்வுக்கு வரும் ஜூரிகளுடன் பழ கும் வாய்ப்பு ஏற்பட்டது. குருதத், பாஸு சாட்டர்ஜி, விஜயா மேத்தா போன்ற பல மேதைகளின் நட்பு கிடைத்தது. ஒரு ஞாயிறன்று அதி காலையில் குருதத்துடன் ஓக்லா அருகே யமுனைநதியில் மீன் பிடிக்கப்போனது நினைவுக்கு வருகிறது.
தேர்வுக் கமிட்டி ஜூரிகளைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல் லியே ஆகவேண்டும். ஒருசிலர் சினி மாவையே சுவாசிப்பவர்கள். அவர் களிடம் பேசும்போது, சினிமாவைப் பற்றி நமக்குத்தெரிந்தது கைம்மண்ணளவே என்பதை நமக்கு உணர்த்திவிடுவார்கள். They will reel out names after names after names! கேட்பதற்கு மலைப்பாக இருக்கும். இன்னும் சிலர் எந்த இந்திய சினிமாவைப் பார்த்தாலும், அதற்கு நதிமூலம் ரிஷி மூலமாய், எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதற்கு லிஸ்டே வைத்திருப்பார்கள். ஹாலிவுட் படங்களை  Frame by frame ஆக அலசுவார்கள். நல்ல படங்கள் நிறைய பார்த்திருந்தாலும், எந்த இயக்குநர் பெயரும் சட்டென்று ஞாபகத்துக்கு வராத நான் – இப்போதும் அப்படித்தான் – அவர்கள் பேசுவதை வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப் பேன்.    பிரபாகர் மாச்வே போன்றவர்களுக்கு எல்லாப் படமும் ஒன்றுதான். அவர்களுக்கு ‘இன்றைய மதிய உணவில் சிக்கன் உண்டா? தினப்படி பேட்டா தரும் DFF சிப்பந்தி பல்பீர்சிங் இன்னும் ஏன் வரவில்லை? இன்று மதியம் மூன்று மணிக்கு வீட்டுக்குப் போகவேண்டும், பம்பாயிலிருந்து மகளும் குழந்தை களும் வந்திருக்கிறார்கள்’ என்பது போன்ற கவலைகள் மட்டுமே. படங்கள் ‘பார்க்கும்’ போது, குறட்டையொலி சத்தமாகக் கேட்கும். எங்கே கையெழுத்து  போடச்சொன்னாலும், போட்டுவிடுவார்கள். அவர்கள் ‘தேர்வு’ மற்ற ஜூரி நண்பர்களின் கருத்தையொட்டியே இருக்கும். இவர்களைப் போன்றவர்கள் உள்ளே நுழைவதால்தான் நல்லபடங்கள் அடிபடுகின்றன. சிபாரிசுக் குப்பைகள் கோபுரமேறுகின்றன. சினிமா மொழியின் ஆனா ஆவன்னாகூடத் தெரியாத இவர்கள், மத்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்பில் தலைவர்களாக இருந்து தொலைப்பார்கள். அதுவே இவர்களது ஒரே தகுதி!
ஹிந்திப்பட குணச்சித்திர நடிகரொருவர் ஒருமுறை தேர்வுக்குழுத் தலைவராக இருந்தார். அவர் பார்த்த படங்கள் நாலோ ஐந்தோ தான். தில்லியில் இருந்தவரை, அவர் தன் அசோகா ஹோட்டல் அறையைவிட்டு வெளியே வருவது அரிதாக இருந்தது. ஹோட்டல் லிப்டில் ‘அறிமுகமான’ புதுப் பெண்துணையோடு, காலையிலேயே ஸ்காச் பாட்டிலைத்திறந்து, இரவுவரை தொடர்ந்து, பாட்டிலை மூடமறந்து தூங்கிவிடுவார்! தேர்வு செய்யப்பட்ட விருதுப்பட்டியலில் அவர் கையெழுத்து வாங்க அவர் அறைக்குப்போக வேண்டியிருந்தது! நல்ல வேளை, விருதுகள் அறிவிக்கும் பத்திரிகையாளர் கூட்டத்துக்கு ஆஜராகி பெருமை சேர்த்தார்! வெளி ஊர்களிலிருந்து தேர்வுக்காக தில்லி வரும் ஜூரிகளுக்கு, தலை நகரில் மற்ற அலுவல்கள் நிறையவே இருந்தன. அரசாங்கச் செலவில் அவற்றைச் செவ்வனே செய்ய முயன்றார்கள். ஒருமுறை ஜூரியாக இருந்த இயக்குநர் திரு.G.V. அய்யர் தனது அடுத்த படத்திற்குத் தேவை யான ஒலி ஒளிக் கருவிகளின் லிஸ்டோடு, தினமும் சாந்தினிசௌக் போய்வருவார். இவர் ஓவியர் M.F.ஹூஸேன் போல கால்களுக்குச் செருப்பு அணிவதேயில்லை. தில்லிக் குளிரில், செருப்பில்லாமல் வளையவருவார். ஜூரிகள் அனைவருமே இப்படியல்ல. நேமிசந்த் ஜெயின், கோமல் சுவாமிநாதன், தியடோர்   பாஸ்கரன் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு.
வருடாந்திர விருதுக்குப்போகும் தமிழ் சினிமாக்களைப்பற்றி, தில்லிச் சூழலில் ஊறியவன் என்ற முறை யில் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். விவாதத்தில் விழ வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆனால் சொல்லிவிடுவது இங்குள்ள இளம் இயக்குநர்களுக்கு உதவியாக இருக்குமென்று இப் போது நினைக்கிறேன். காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதைப்போல எல்லா இயக்குநர்களுக்கும் தன் படம் உசத்தி தான். அதில் தவறு காண முடியாது. தில்லி போனால் தேர்வுக்கு வந்திருக்கிற 184 படங்களில் உங்கள் படமும் ஒன்று. அவ்வளவுதான். சென்னையில் ‘ராம்’ படத் திரையிடலின் போது இயக்குநர் அமீர், தனக்குரிய மரியாதை தில்லியில் கிடைக்கவில்லையென்று தேர்வுக் கமிட்டியைச் சாடினார். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது யூனிட்டில், ஏன் தமிழ் நாட்டிலும் நாம் ராஜாவாக இருக்கலாம். ஆனால் Directorate of Film Festival கீழ்மட்ட சிப்பந்தி திரு. அனில் பாட்டியாவுக்கு, அமீர், பாரதிராஜா, அகத்தியன், பாக்கியராஜ், லெனின் எல்லோருமே ‘மதராசி’தான். உங்களைப்போல் இன்னும் 183 பேருக்கு அவர் பதில் சொல்லவேண்டும். இங்கு கிடைக்கும் ஒரு பரந்த அடையாளம்/கண்டுணர்வு தில்லியில் சாத்தியமில்லை. ஒரு தடவை சிவாஜி கணேசனுடன் தில்லி அசோகா ஹோட்டல் லிப்டில் உள்ளே நுழைந்ததும், ‘கண்டுக்கவே மாட்டேங்கிறானே!’ என்று குறைபட்டார். ‘சார், சத்தியமா நீங்க யாருன்னு அவனுக்குத் தெரியாது!’ என்று பதிலளித்தேன். கூட இருந்த அவர் தம்பி V.C. ஷண்முகம் சிரித்தார். அடுத்த மாடியில், ஹிந்திநடிகர் பெயின்ட்டல் உள்ளே நுழைந்தால், ‘ஆயியே ஸாப்’ என்று பல்லிளித்து வரவேற்பான். அவரை அவனுக்குத் தெரியும். சிவாஜி கணேசனுக்குத் தேசியவிருது கிடைக்கவில்லையென்ற குறை நமக்கெல்லாம் உண்டு. நாம் அவர் நடிப்பைப் பல படங்களில் பார்த்துப்பார்த்துப் பழகி, அவர் நடிகர் திலகம் என்று ஒத்துக்கொண்டவர் கள். ஒருமுறை சிவாஜி நடித்து விருதுக்குப்போன ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெங்காலி ஜூரி, படம் நடுவில் ‘Atrocious! Kyaa Overacting Hai!’ என்று சொல்லிவிட்டு, மீதிப் படம் பார்க்காமல் வெளியேறியதையும் பார்த்திருக்கிறேன். அவருக்கு சிவாஜியின் மீது  தனிப்பட்ட வெறுப்பு இருக்க நியாயமில்லை. என் மனதுக்கு வருத்தமாகத்தான் இருந்தது, என்ன செய்ய? அவர்களுக்கு இவர் நடிப்பு மிகையாகப்படுகிறது! We are basically very loud people! எல்லா சென்னைத் தியேட்டர்களிலும்,dts/DOLBY உச்சத்தில் இருப்பதே ஒரு சான்று! நம் பார்வை வேறு அவர்கள் பார்வை வேறு. சிவாஜியை மேடையில் வானளாவப் புகழ்ந்து பேசிய பிரபல வடஇந்திய நடிகர்கள்  தனிப்பட்ட முறையில் மாறான கருத்துக்கொண்டவர்கள். அது எனக்குத் தெரியும்.
எந்த பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், தன் படத்தைத் தேர்வுக்கு அனுப்பினால், அதிர்ஷ்டத்தை நம்பியேயாக வேண்டும். முக்கியமாக மற்ற மாநிலங்களிலிருந்து வேறு நல்ல படங்கள் போகக்கூடாதென்று வேண்டிக்கொள்ளவேண்டும். பல வருடங்களில் மிகக்கடுமையான போட்டி இருக்கும். இன்னும் சில சமயங்களில் யாருக்குக் கொடுப்பது என்று தேடுவார்கள். மஹேஷ் பட்டின் Saaraans-ல் சிறந்த நடிகருக்காக அனுபம் கேர் பரிசீலனை செய்யப்பட்டபோது, வங்காளத்திலிருந்து கடும்போட்டியிருந்தது. நீண்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, அனுபம் கேர் தன் வயதுக்கு மீறிய பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டார் என்பதால் ஜூரிகள் அவருக்குப் பரிந்துரைத்தனர். எனது நண்பர் M.K. ராவ், ‘வேறு போட்டியில்லாததால்தான் தபரென்ன கதெ கன்னடப் படத்தில் நடித்ததற்காக சாருஹாஸனுக்குச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அவர் படம் முழுக்க வந்தார். அவருக்கு அதிர்ஷ்டம்” என்று சொல்வார். சிவாஜிக்கு இத்தனை வருடங்கள் கொடுக்கத் தயங்கியதைத் தன்னிடம் கொடுத்துவிட்டார்களேயென்ற சங்கோஜம் அவருக்கு நிச்சயம் இருந்திருக்கும். நான்கைந்து ஆண்டுகளுக்குமுன், ஜெயபாரதி இயக்கிய நண்பா . . . நண்பா படத்தில் வாகை சந்திரசேகருக்கு Best Supporting Actor விருது கிடைத்தது. அந்தப்படத்தில் நானும் ஒரு பாதிரி வேடத்தில் நடித்திருந்தேன். ஒரு Positive Role. அந்தப்படத்தை விருதுக்கு அனுப்பும்போது, ஜெயபாரதி என்னிடமும் Actor’s Biodata கேட்டு பலதடவை வற்புறுத்தினார். விருது பரிசீலனைக்குத் தேவையானfootage-ம் நடிப்பும் எனக்கு அந்தப்படத்தில் இல்லையென்பதால் கடைசிவரை நான் கொடுக்கவில்லை. என்னைப்பற்றி எனக்குத் தானே தெரியும். நண்பா . . . நண்பாவில் தனக்கு விருது கிடைக்கவில்லையென்ற குறை சார்லிக்கு இப்போதும் உண்டு. இந்த வருடம் பெரியார், ஒம்பது ரூபா நோட்டு படங்களில் அற்புதமாக நடித்த என் நண்பர் திரு. சத்யராஜ் இந்தத் தடவை சிறந்த நடிகர் விருது பெற வேண்டும். அதனால், மற்ற மாநிலங்களிலிருந்து கடுமையான போட்டி வரக்கூடாது என்று – அவர் நம்பாவிட்டாலும், நான் நம்பும் – கடவுளை இப்போதே வேண்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
என் மாமனார் க.நா.சு.வும் ஒரு தடவை திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் ஜூரியாக இருந்தார். அந்த வருடம்தான் வெங்கட் சாமிநாதன் எழுதி,  ஜான் ஆப்ரகாம் இயக்கிய அக்ரகாரத்தில் கழுதை சிறந்த தமிழ்ப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது. மற்றப் படங்களைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை. ஹிந்தியில் எந்தப்படம் தேர்வாயிற்று என்று என் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்டதற்கு, படத்தின் பெயர் தெரியாமல் ‘ஏதோ ஒரு படம்’ என்றுதான் பதில் சொன்னார்.
சரி, இந்தக் கட்டுரைக்கான விஷயத்துக்கு வருவோம். 1965ம் வருஷத்துக்கான திரைப்படத் தேர்வுக்கமிட்டியில் பி.புல்லா ரெட்டி, அமீதா மாலிக், புத்ததேவ் தாஸ்குப்தா போன்றவர்கள் இருந்தார்கள். மொழி தெரியாத ஜூரி மெம்பர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அரசே ஆட்களை நியமிக் கும். தமிழுக்கும், மலையாளத்துக் கும் வருடாவருடம் நான் ஆஜராகி விடுவேன். எல்லாப் படங்களையும் பார்க்க வாய்ப்புக்கிட்டுமே. நடு நடுவே என் ஆபீசிலும் தலையைக் காட்டுவேன். அறுபதுகளில்  Siri Fort Auditorium இருக்குமிடம் காடாக இருந்தது. மஹாதேவ் ரோடிலிருக்கும் சிறிய  Films Division தியேட்டருக்குப் போனவுடன், ‘இன்று ஒரு மலையாளப்படம், பேருசெம்மீன். முதல் கலர் படமாம். புல்லா ரெட்டி பக்கத்தில் நீ உட்காரு’ என்று இயக்குநர் ராவ் சொன்னார். டைட்டில் ஓடும் போதே கலரில் அலைகளும், பின்னணியும் பிரமிக்கவைத்தன. டைரக்டர் ராமு காரியாட் பெயர் புதிதாக இருந்தாலும், சங்கீதம் ஸலீல் சௌத்ரி, பின்னணி மன்னாடே, காமெரா மார்க்கஸ் பார்ட்லே, எடிட்டிங் ரிஷிகேஷ் முகர்ஜி யென்று பெரிய பெரிய பெயர்களாக இருந்தன. கலரில் நடிகர்களுக்கு ஈடாகக் கடலலைகளையும்  நடிக்க வைத்திருந்தார். அலைகளின் சீற்றம், கோபம், சிரிப்பு, முறுவல், முணுமுணுப்பு, நாணம், கெஞ்சல், கொஞ்சல், பிடிவாதம் எல்லாம் நாம் ஹாலிவுட் படம் பார்ப்பது போலிருந்தது. நல்ல நாவல்கள் எல்லாமே நல்ல படங்களாக உரு மாறுவதில்லை. ஆனால் தகழி எழு திய செம்மீன் ஒரு விதிவிலக்கு. அன்று முழுவதும் அந்தப்படம் என் மனதிலிருந்து வெளியேற மறுத்தது. எங்களுடன் ஐந்து ஜூரிகள் அந்தப் படத்தைப் பார்த்தனர். இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு படங்களைப் பார்த்து, பார்த்ததில் நல்ல படங்களை வடிகட்டி ஷார்ட் லிஸ்ட் செய்து சுமார் 20 படங்களாகச் சுருக்கி அவற்றை எல்லா ஜூரி களும் பார்த்து சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர் போன்ற பிரிவுகளுக்குத் தங்கள் சிபாரிசை முன் வைக்கவேண்டும். ஒரு ஜூரி எல்லாப் படங்களையும் பார்க்க இயலாது. அதுவரை சிறந்த படத்துக்கான விருது பெரும்பாலும் வங்கப் படத்திற்கே போகும். அந்த வருட மும் ஒரு வங்கப்படத்திற்கே கொடுக்க பலமான ‘லாபி’ இருந் தது. இறுதி 20 படங்களில் செம்மீன் பெயர் இல்லை. எனக்கு ஒரே அதிர்ச்சி. புல்லா ரெட்டியிடம் முறையிட்டேன். அவரும் சொல்லிப் பார்த்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எனக்கு வருத்தமும் ஆத்திரமும். வேறு ‘ஏதோ’ வேலை செய்கிறதென்பது புரிந்தது. செம்மீன் என்ற நல்ல படத்தைப் பார்த்திருந்தேனேயொழிய அப்போது ராமு காரியாட் கறுப்பா வெளுப்பா என்பதுகூடத் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து போன ஒரு சிறந்த படத்துக்குப் பரிந்து பேச யாருமில்லை. நான் அந்த வங்கப்படத்தையும் பார்த்திருந்தேன். அதைவிடச் செம்மீன் Streets ahead, பல படிகள் உயர்ந்தது. விழா டைரக்டரிடம் இதுபற்றிப் பேசினேன். அவரும் இதில் தலையிட முடியாதென்று மறுத்துவிட்டார். எனக்கு ஒருவித தார்மீகக் கோபம். எந்தப்படம் ஜெயித்தால் நமக்கென்ன என்று இருக்க முடியவில்லை. என் கோபம் செம்மீன் தென்னிந்தியாவிலிருந்து போன படம் என்பதனால் மட்டுமல்ல. ஒரு சிறந்த படத்திற்கு வாய்ப்பு நழுவுகிறதேயென்ற வருத்தம். எங்கள் குழுவிலிருந்த ஒரு பெங்காலி ஜூரி, ‘அரே! நீ ஒரு சோக்ரா (பொடிப்பயல்) சினிமாவைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? எந்தப் படத்திற்கு விருது கொடுக்க வேண் டுமென்று எங்களுக்குத்  தெரியும். வாயை மூடிக் கொண்டு சும்மா இரு’ என்று திட்டினார். அப்போது எனக்கு வயது 27. அன்றிரவு தூக்கம் வராமல் யோசித்தேன். மறு நாள் பகலுணவு நேரத்தில் அமீதா மாலிக்கிடம் போய் முறையிட்டேன். அவர் தில்லியில் பிரபல சினிமா விமர்சகர். ஆங்கிலப் பத்திரிகைகளில் உலக சினிமா பற்றி அடிக்கடி எழுதுபவர். சினிமாவை கரைத்துக் குடித்தவர். தில்லி பிலிம் சொஸைட்டியில் நானும் அந்த அம்மையாரும் நிர்வாகக்குழு அங்கத்தினர்கள். கமிட்டிக்கூட்டத்துக்கு வரும்போது அந்த மாதம் திரையிடப்படும் அயல்நாட்டுப் படங்களில், எந்தெந்தப் படங்களை நான் மிஸ் பண்ணக்கூடாதென்று   லிஸ்ட் தருவார். அவருக்கு ஓரளவு என்னைப்பற்றித் தெரியும். அவர் செம்மீனைப் பார்த்திருக்கவில்லை. ஆனால் எனது கணிப்பில் அவருக்கு நம்பிக்கையிருந்தது. என் நச்சரிப்பு தாங்காமல், ஸ்பெஷல் ஸ்கிரீனிங் போடச்செய்து பார்த்தார். பிறகு அவரும் என் கட்சிக்கு மாறி விட்டார். அவரே தீவிரமாக வாதாடி, லிஸ்டில் செம்மீனையும் சேர்க்கச்செய்தார். அவருக்கும் ராமு காரியாட்டைத் தெரியாது. அதன்பிறகு என் வேலை சுலபமாகி விட்டது. மற்றத் தேர்வுக்  கமிட்டி உறுப்பினர்கள் ‘நல்ல படங்கள்’ லிஸ்டை என்னிடம் கேட்க ஆரம் பித்தார்கள். பம்பாயிலிருந்து வந்த ஜூரிகள், ‘நமக்கு வராத விருது எப்போதும் ஏன் கல்கத்தாவுக்கே போகவேண்டும், இந்தத் தடவை தென்னிந்தியாவுக்குத்தான் போகட்டுமே!’ என்று விட்டேத்தியாக நினைக்கலானார்கள்.
ஆக, 1965ம் வருட சிறந்த திரைப் படத்திற்கான தேசியவிருதுசெம்மீன் என்ற மலையாளப் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்தியத் திரைப்பட வரலாற்றில் முதல் தடவையாக, தங்கத்தாமரை விருது விந்திய மலைக்குத் தெற்கே பயணித்தது. ஏதோ நான் நடித்த படம் விருது பெற்றதைப்போல மகிழ்ச்சியடைந்தேன். இராமருக்கு அணில் உதவியதைப்போல இதில் எனக்கும் ஒரு சிறுபங்கு உண்டுதானே?
விஞ்ஞான் பவனில் விருதுவிழா தொடங்குவதற்கு முன்னால் ஓரமாய் நின்றிருந்த என்னை இழுத்துப் போய் ‘இவர் தான் ராமு காரியாட்’ என்று எனக்கு அவரை அறிமுகம் செய்துவைத்தார் அமீதா மாலிக். கூடவே படத்தேர்வு நேரத்தில் நடந்தவற்றை சாங்கோபாங்கமாக ராமு காரியாட்டுக்கு விவரித்தார். கண்கள் நனைய ராமு, ‘வளரே நந்நி, வளரே நந்நி’யென்று என் கைகளை அவர் கண்களில் ஒற்றிக்கொண்டார். அடுத்தநாள் தில்லி கேரளா கிளப் சார்பில் செம்மீன்குழுவினருக்குப் பாராட்டு விழா நடந்தது. என்னையும் அழைத்திருந்தார்கள். ராமு காரியாட்டுக்கு மாலை போட்டபோது, மாலையுடன் மைக் அருகில் சென்று என் பெயர் சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அவர் மாலையைக் கழட்டி எனக்குப் போட்டுவிட்டு கூட்டத்தினருக்கு நடந்ததை விவரித்தார். நானே கூசுமளவிற்கு ஏகக் கரகோஷம், கைகுலுக்கல்கள். கேரளா கிளப் தலைவர் கிருஷ்ணன் நாயர் எனக்கு ஒரு குத்துவிளக்கு பரிசளித்தார்.
இப்பொதும் டி.வி.யில் செம்மீன் படம் பார்க்கும்போது, முதல் தடவையாக மஹாதேவ் ரோடு பிலிம் டிவிஷன் தியேட்டரில் புல்லா ரெட்டியுடன் பார்த்த ஞாபகம் வரும். எல்லாத் தென்னிந்தியர்களும், குறிப்பாக மலையாளிகள் எனக்கு ‘நந்நி’ சொல்ல வேண் டாமா?
–உயிர்மை – இணைய மாத இதழ் (மார்ச், 2008)

0 comments:

Post a Comment