Friday, January 22, 2016

ஒருநாள் நாடகப்பிரதி பற்றி பேச சுஜாதா வந்திருந்தார். கூட்டம் முடிந்து காரில் ஏறப்போகும்போது, ‘சார், இன்னிக்கு 47 தடவை தான்‘ என்றேன். புரியாமல் என்ன என்பது போல் என்னைப் பார்த்தார். அதற்கு ‘சுஜாதா சார், நீங்கள் கூட்டத்தில் பேசும்போதும், T.V.யில் நேர்காணலில் பேசும் போதும், நீங்கள் எத்தனைதடவை ‘வந்துட்டு’ ‘அது…வந்துட்டு‘ சொல்கிறீர்கள் என்று எண்ணுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இன்னிக்கு 47 தடவைதான் ‘வந்துட்டு‘ சொல்லியிருக்கீங்க’ என்றேன். சில நொடிகள் என்னைப் பார்த்துவிட்டு, ‘நடிகரில்லையா, அதான் கவனிச்சிருக்கீங்க‘ என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் போய் விட்டார். அதிகப்பிரசங்கித்தனமாக பேசி விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து இன்றுவரை நான் விடுபடவில்லை. ஆனால் அவரிடம் பிறகு மன்னிப்பும் கேட்கவில்லை. அவர் சொல்லும் போது அது ‘வந்துட்டு‘ என்பதை விட ‘வந்திற்று‘ என்றுதான் காதில் விழும்.
நாரத கான சபா ‘உயிர்மை‘ சுஜாதா நினைவஞ்சலியில் அவரது ஒரு T.V. நேர்காணலைத் திரையிட்டார்கள். அதிலும் என்னையறியாமல் சுஜாதா எத்தனை தடவை ‘அது வந்திற்று……‘ சொல்கிறாரென்று எண்ணிக்கொண்டிருந்தேன் …….. இனிமேல் எண்ண முடியாது!

0 comments:

Post a Comment