Thursday, January 21, 2016


நேற்றைய முன் தினம் காலை 10.30 முதன் மாலை 4.00 வரை Bharati Mani-யுடன் இருந்தேன். இரண்டு கச்சேரிகள் கேட்டோம். அவர் ரசிகர் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நல்ல சங்கதிகள் விழும் இடத்தில் எல்லாம் என் வாய் ஆஹா என்பதற்கு அரை நொடிக்கு முன் அவர் வாய் அதை உதிர்த்துவிடுகிறது. இந்த முந்தல் பர்சில் இருந்து காசெடுப்பதில் தொடர, ‘இன்னொரு தடவை காசை எடுத்தா நீங்க உங்க வழியைப் பாருங்க’, என்று மிரட்ட வேண்டியிருந்தது.
காலையில் நிர்மலா ராஜசேகர் நாரத கான சபாவில் வராளியும் கரஹரப்ரியாவும் இழைத்து தள்ளினார்.
பார்த்தசாரதி சபாவில் சாப்பாட்டை பற்றி நிறைய பேசினோம். மோர்குழம்பு இருக்கும் போது தொட்டுக்கொள்ல பருப்பு உசிலி செய்யாமல் அவியலை மெனுவில் சேர்த்த மஹானுபாவரை முடிந்தவரை ‘வாழ்த்தி’னோம்.
“இதை ரசிக்கத் தெரியலைனா சங்கீதத்தை எப்படி ரசிக்க முடியும்?”, என்று முத்தாய்ப்பு வைத்தார். மவுண்ட்பேட்டன் மணி ஐயருக்கு இன்னும் சங்கீத ரசனை வளர வேண்டியிருக்கிறது. (எரிகிற கொள்ளியில் இந்தக் கொள்ளிதான் நல்ல கொள்ளி என்பது வேறு விஷயம்)
மதியம் திருவாரூர் கிரீஷ் பாட்டு. மேடையில் நண்பர் Poovalur Sriji அமர்ந்திருந்ததைப் பார்த்து இரட்டிப்பு சந்தோஷம். அந்த லதாங்கி ஆலாபனை கோடி பெறும். சமயத்தில் வோலேட்டியை நினைவு படுத்தியபடி அந்த தைவதத்தை கிரீஷ் கையாண்ட விதம் வெகு அபூர்வம். பாட்டுக்கு ஸ்ரீஜி அழகாய் போஷித்து வாசித்தார். தனி இன்னும் கொஞ்சம் வாசித்திருக்கலாம். நேரமில்லாததால் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
சாயங்காலம் நாடக ரிகர்சல் என்று நாலரைக்கு வளசரவாக்கம் கிளம்பினார் மணி தாத்தா (தாத்தாவென்று அழைக்கும் வயசுதான் எனக்கு :-)). இன்னும் கொஞ்ச நேரம் அவருடன் இருந்திருக்கலாம்.
சரி எங்கு போய்விடப் போகிறார். சாலிகிராமம் தானே. ஒரு வீக்கெண்ட் கோயம்பேட்டில் இறங்கி அவர் வீட்டுக்குப் போய்விட வேண்டியதுதான்.
எழுத்துக்காக: லலிதா ராம் (பொண்டாட்டி பேரு லலிதா இல்லை.)
ஊர்: மனதளவில் எப்போதும் தஞ்சை ஜில்லா. வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூர். டிசம்பரில் சிங்காரச் சென்னை.
படிப்பு: மெடீரியல் சயின்ஸ்
செய்ய-நினைப்பது: மெடீரியல் சயின்ஸ் தவிர
பிடித்த-வேலை: ஜி.என்.பி-யை வைத்துக் கொண்டு ஜல்லி அடிப்பது (அடிச்ச ஜல்லியில ஒரு புத்தகமே வந்துவிட்டதுதான் ஆச்சரியம்), டிசம்பரில் கச்சேரி கேட்பது, எண்பது வயதைத் தாண்டிய சங்கீதப்ரியர்கள் பேசுவதை வாய் பிளந்து கேட்பது. சோழ தேசத்தில் பயணம் செய்வது.
alma mater: தினம் ஒரு கவிதை, ரா.கா.கி, மரத்தடி
ஒரே-சாதனை: (நண்பர்களுடன் சேர்ந்து) varalaaru.com-ஐ தொடங்கி, இன்னமும் மூடாமல் வைத்திருப்பது.
எழுத-நினைக்கும்-விஷயங்கள்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டென்னிஸ், ஃபார்முலா ஒன், கடற்கரை ஓர சுற்றுலாத் தளங்கள், காற்றலை மின் உற்பத்தி, சங்க இலக்கியங்களில் இசை, “இராமநாதபுரம் கிருஷ்ணன், எம்.எல்.வி, ஐராவதம் மகாதேவன், மதுரை மணி, எல்லிஸ் டங்கன் ஆகியோரின் முழு நீள பயோகிராஃபி”. (இவற்றைப் பற்றி என் பெயரில் ஏதேனும் கிடைப்பின் அவை என் பெயரில் யாரோ எழுதியன என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)
எழுதிக்-கிழித்தவை: கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் இளையராஜா, கொஞ்சம் கர்நாடக இசை
அலுக்காமல்-படிப்பது: தி.ஜானகிராமன், லா.ச.ரா, உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’
அலுக்காமல்-கேட்பது: ஜி.என்.பி, மதுரை மணி, எஸ்.ராஜம், சேஷகோபாலன், பழநி சுப்ரமணிய பிள்ளை, லால்குடி, மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஜி.ராமநாதன், இளையராஜா
சமீபத்திய-(சோ)சாதனை: சக்களத்தி லெவலுக்கு கர்நாடக சங்கீதத்தை ஆக்கிக் கொண்டுவிட்டது
நடக்காது-என்று-தெரிந்தும்-செய்ய-நினைப்பது: ஒவ்வொரு மார்கழியிலும் குறைந்த பட்சம் 15 கட்டுரைகள்.
ஒரே-பிரச்னை: சுருக்கமாய்ச் சொல்லத் தெரியாதது. (என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை என்று எழுத நினைத்து இவ்வளவு நிரப்பியிருப்பதைப் பார்த்தாலே தெரியுமே!)

0 comments:

Post a Comment