Friday, January 22, 2016

சுஜாதாவை அறிமுகமாகுமுன்னரே எனக்கு (ஸ்ரீரங்கம்) எஸ். ரங்கராஜனைத்தெரியும். அறுபதுகளில் கணையாழியில் ‘கடைசி பக்கம்’ வந்துகொண்டிருந்த நேரம். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். யாரென்று கணையாழி கஸ்தூரிரங்கனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருநாள் மாலைவேளையில் ஜன்பத்திலிருந்த New York Times Office-ல்அவரைப் பார்க்கப்போனபோது, ஒரு உயரமான அழகான இளைஞர் — அப்போது நானும் குள்ளமான இளைஞன் தான் — உட்கார்ந்திருந்தார். அறிமுகப்படுத்தும் போது, என்னை ‘இவர் உங்க Fan!‘ என்று அறிமுகப்படுத்தினார். நாற்பத்தைந்து ஆண்டுகளாக, இன்றுவரை நான் ஒரு ‘சுஜாதா விசிறி‘யாகவே இருந்திருக்கிறேன்!
அப்போது கணையாழி சார்பில், I.E.N.S. ஹாலில் தி. ஜானகிராமன், க.நா.சு., இ.பா., ஆதவன், ‘கிருத்திகா’,  ‘காவ்ய ராமாயணம்’ ஸ்ரீநிவாசன், என்.எஸ். ஜகந்நாதன், ஏ.ஆர். ராஜாமணி போன்றோர் பங்குபெறும் மாதாந்திர இலக்கியக்கூட்டம்  நடைபெறும். (கஸ்தூரிரங்கன் பத்திரிகையாளராதலால் ஹால் இலவசம்). தமிழ் இலக்கியத்தைப்பற்றி காரசாரமான விவாதம் நடக்கும். அது அடுத்தமாத கணையாழியில் பதிவாகும். பார்வையாளராக (உலகுக்கு அறிமுகமாகாத) இளைஞர் சுஜாதாவும் வருவார். இடையிடையே அவரது நறுக்குத்தெறித்த கிண்டல் நக்கல் விமர்சனங்களைக் கேட்க, அவர் அருகிலேயே உட்காருவேன். அப்போதே நான் அவருக்கு ‘விசிறி‘யாகி விட்டேன். எங்கள் தக்ஷிண பாரத நாடகசபா போடும் நாடகங்களுக்கு அவ்வப்போது கணையாழியில் விமர்சனம் எழுதுவார். ‘தூயவன்‘ எழுதிய ‘தீர்ப்பு‘ நாடகம் ஒரு நேர்மையான கோவில் குருக்களைப்பற்றியது. அதற்கு கணையாழியில், ‘இதில் குருக்களாக நடித்தவர் இருகைகளையும் விரித்து குழிவாக வைத்துக்கொண்டு மேலும்   கீழும் ஆட்டி, ‘இது எத்தனை பலம் இருக்கும்?’ என்று அடிக்கடி எடை பார்த்துக்கொண்டிருந்தார்’ என்று எழுதியிருந்தார். அந்த நக்கலை நான் மிகவும் ரசித்தேன்.  [நான் குருக்களாக   நடிக்கவில்லை, ராமுவாக மற்றொரு பாத்திரத்தில் நடித்திருந்தேன்!]  ஸப்தர்ஜங் விமான நிலையத்தினருகிலிருந்த அவரது அலுவலகத்துக்கு  ஓரிருமுறை போயிருக்கிறேன். N.S.Dயில் திரு. அல்காஸி தயாரித்த முன்ஷி பிரேம் சந்தின் ‘கோதான்‘ உட்பட  சில நாடகங்கள் சேர்ந்து பார்த்திருக்கிறோம். இதெல்லாம் அவர் பெங்களூர் B.E.L-ல் சேர்வதற்கு முன்பாக.
அவர் பெங்களூர் போனபிறகு, நான் பணிநிமித்தம் அங்குபோகும்போதெல்லாம், அவரை நேரில் சந்திப்பதோ அல்லது தொலைபேசியிலாவது தொடர்பு கொள்ளுவதோ ஒரு சடங்காகவே ஆகிவிட்டிருந்தது. ஒருதடவை குடும்பத்துடன் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். மறுநாள் மாலை B.E.L. Clubக்கு என்னை அழைத்திருந்தார். பெங்களூருக்குப் புதிதான எனக்கு, எனது டைரியில் அசோகா ஹோட்டலிலிருந்து BEL போவதற்கு ஒரு வரை படத்தை,  சில நொடிகளில் ஒவ்வொரு ஜங்ஷன் பெயரும் எழுதி என்னிடம் நீட்டினார்.   கோணலில்லாமல் ஒரு நேர்கோடு கூட போடத் தெரியாத நான் ஆச்சரியத்துடன் அந்த இஞ்சினியர் வரைந்த Road Map-ஐவாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த டைரி இன்னும் பத்திரமாக தில்லியிலிருக்கிறது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, 1955-ல் நான் தில்லி போனதும், என் முதல்வேலை பாதுகாப்பமைச்சின்  கீழ் இயங்கிய BEL-ன் தில்லி அலுவலத்தில் தானென்றும் அதனால் அந்தக்கம்பெனியில் அவரைவிட பத்து வருடம் சீனியர் என்றும் சொன்னேன். அப்போது அவர் புத்தகங்கள் நிறைய வெளிவந்துகொண்டிருந்தன. தில்லியில் அவைகளை  வாங்க கடை வசதியில்லாததால்,  ஒவ்வொருதடவை பெங்களூர் போகும்போதும், ‘நண்பர் மணிக்கு, அன்புடன் சுஜாதா‘  என்று கையெழுத்திட்டு ஒருகட்டு புத்தகங்கள் கொடுப்பார். என்னிடமிருக்கும் அவர் எழுதிய எல்லா புத்தகங்களிலும் அவர் கையெழுத்து இருக்கும். B.E.L. மின்வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்து, அதன் ஒப்புதலுக்காக தில்லி தேர்தல் ஆணையத்திற்கு அடிக்கடி அவர் வரவேண்டியிருந்தது. இதற்காகவே அவருக்கு மத்திய அரசு அவருக்கு பத்ம விருது கொடுத்திருக்கவேண்டும். அப்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
சுஜாதா சித்தரித்த முக்கிய நாடகப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, அவர்களை ரசிகர்கள் முன்னே அறிமுகப்படுத்தும் பேறு சென்னையில் பூர்ணம் விசுவநாதனுக்கும் தில்லியில் எனக்கும் தான் கிடைத்தது. உண்மையிலேயே நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். சுஜாதா நாடகங்களில் நாங்கள் தான் ‘ஹீரோ‘! நான் தில்லியில் அரங்கேற்றிய ‘கடவுள் வந்திருந்தார்’  நாடகத்தில்,  நிஜவாழ்க்கையில் படுத்தியது போதாதென்று,  மேடையிலும் எனக்கு மனைவியாக நடித்தார் திருமதி ஜமுனா மணி! என் மூத்தமகள் ரேவதி இந்த நாடகத்திலும், இளையவள் அனுஷா ‘டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு‘  நாடகத்திலும் நடித்திருக்கின்றனர்.  ‘கடவுள்….‘  நாடகத்துக்கு,  ‘60 Laughters a Minute!‘ என்று தலைப்பிட்டு விமர்சகர் சுப்புடு தில்லி ஸ்டேட்ஸ்மனில் அட்டகாசமான விமர்சனம் எழுதியிருக்கிறார். சென்னையில் ஒருதடவை பூர்ணத்தின் ‘கடவுள் வந்திருந்தார்‘ நாடகத்தைப்பார்க்க நானும் சுஜாதாவும் மயிலை R.R.சபாவுக்குப் போயிருந்தோம்.  தில்லி ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி வந்த     விசுவநாதனின் தங்கை பூர்ணம் லக்ஷ்மியும் நாடகம் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் தோன்றியதை வெடுக்கென்று பேசுபவர். நாடகம் முடிந்து க்ரீன் ரூமில் பூர்ணத்திடம், ‘அண்ணா, உங்க நாடகத்தைவிட மணி  நாடகம் தான் technically perfect‘ என்று சுஜாதா முன்னால் பட்டென்று சொன்னது என்னவோ போல் இருந்தாலும் மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்ததை மறுக்கமுடியாது.
1998-ல் தில்லி தேசீய நாடகப்பள்ளி சென்னை தரமணியில் திரு K.S. ராஜேந்திரன் தலைமையில் ஒரு மாத   நாடகப்பட்டறை நடத்தி முடிவில் இ.பா.வின்  ‘ராமானுஜர்‘ நாடகத்தை மேடையேற்ற ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு நாளும் மாலையில் பி.வி. காரந்த், செ. ராமானுஜம், நாசர், இ.பா., வெங்கட் சாமிநாதன்,  ராஜு, அம்ஷன்குமார், ந. முத்துசாமி போன்றவர்கள் பட்டறை மாணவர்களுக்கு நாடகக்கலையின் பல்வேறு பரிமாணங்களை விளக்கி பாடம் நடத்தவேண்டும். அவர்களை வரவேற்று மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது,     போகும்போது ஒரு சிறியதொகையை சன்மானமாக உறையில் போட்டு அவர்கள் கையில் அசட்டுச் சிரிப்புடன்   திணிப்பது எனக்களிக்கப்பட்ட பணி. ஒருநாள் நாடகப்பிரதி பற்றி பேச சுஜாதா வந்திருந்தார். கூட்டம் முடிந்து காரில் ஏறப்போகும்போது, ‘சார், இன்னிக்கு 47 தடவை தான்‘ என்றேன். புரியாமல் என்ன என்பது போல் என்னைப் பார்த்தார். அதற்கு ‘சுஜாதா சார், நீங்கள் கூட்டத்தில் பேசும்போதும், T.V.யில் நேர்காணலில் பேசும் போதும், நீங்கள் எத்தனைதடவை ‘வந்துட்டு’ ‘அது…வந்துட்டு‘ சொல்கிறீர்கள் என்று எண்ணுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இன்னிக்கு 47 தடவைதான் ‘வந்துட்டு‘  சொல்லியிருக்கீங்க’  என்றேன். சில    நொடிகள் என்னைப் பார்த்துவிட்டு, ‘நடிகரில்லையா, அதான் கவனிச்சிருக்கீங்க‘ என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் போய் விட்டார். அதிகப்பிரசங்கித்தனமாக பேசி விட்டோமோ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து இன்றுவரை  நான் விடுபடவில்லை. ஆனால் அவரிடம் பிறகு மன்னிப்பும் கேட்கவில்லை. அவர் சொல்லும் போது அது ‘வந்துட்டு‘  என்பதை விட  ‘வந்திற்று‘  என்றுதான் காதில் விழும்.
அவரிடமிருந்து நான் பெற்ற ஒரே பாராட்டுவார்த்தை: பஞ்சபூதங்களைப்பற்றி ‘நிலம், நீர், நெருப்பு…‘ வரிசையில் சிறுகதைகள் எழுதினார். அதில் ‘நிலம்‘ சிறுகதை தில்லியில் ஒரு ஆஸ்திக சமாஜத்துக்கு DDA மூலம் அலாட் செய்த நிலம் கந்தா நாலா (கூவம் மாதிரி சாக்கடை) பக்கத்தில் எருமைமாடுகளுக்கிடையே இருக்கும். பூமிபூஜைக்கு நாள் குறித்தபின் Liaison Officer ஆன கதாநாயகன் படித்த வித்தை பதினெட்டும் செய்து (இதில் Call Girl-ம்அடக்கம்) DDA அதிகாரிகளை மடக்கி மயக்கி, வேறு நல்ல இடத்தில் நிலம் அலாட் பண்ணவைப்பான். பூமிபூஜையன்று யாரோ மைக்கில் ‘பகவான் ஸர்வவியாபி! அவருக்கு கிடைத்த இடம் பிடிக்காமல், அவரே மாத்தினுட்டார். பகவான் Omnipresent இல்லியோ’ என்று சொல்வதில் கதை முடியும். பாலு மகேந்திரா எடுத்த ‘கதை நேர‘ த்தில் இதுவும் ஒன்று. பிறகு சுஜாதாவை சந்தித்தபோது, ‘மணி, இந்தக்கதைக்கு, You are my inspriration‘ என்று சொன்னார். That is the best compliment I got from Sujatha!
2000-ம் ஆண்டு சுஜாதா மீடியா ட்ரீம்ஸில் இருந்த போது அவர்கள் தயாரித்த முதல்படம் ‘பாரதி‘. அதற்கு அவரே முழுமுதற்காரணமாக இருந்தார். அதில் பாரதியின் தந்தையாக நடிக்கவும், ஸாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்களை ஹிந்தியில் விளக்கி சொல்லிக்கொடுக்கவும் ஞான. ராஜசேகரன் என்னை தில்லியிலிருந்து வரவழைத்தார். முதல்நாள் படப்பிடிப்பில் ஸாயாஜிக்கு பாரதியின் வேஷப் பொருத்தம் இருக்கிறதாவென்று பார்க்க சுஜாதா வந்திருந்தார். அன்று சி.சு. செல்லப்பா, தி.ஜா., க.நா.சு. பற்றி நிறையப்பேசினார். அவர்கள் தன்னை ஒரு இலக்கியவாதியாக ஒத்துக்கொள்ளவில்லையென்ற ஆதங்கம் வெளிப்பட்டது.  ‘பாரதி‘ படத்தின் ஒரு பிரின்டை என்னிடம் கொடுத்து தில்லியில் தமிழர்களுக்காக தில்லி தமிழ்ச் சங்கத்திலும்,  குடியரசுத்தலைவர் வெங்கட்ராமன் பார்க்க வசதியாக ராஷ்டிரபதி பவனிலும் திரையிட ஏற்பாடு செய்யச் சொன்னார். சென்னை வந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தபிறகு, படப்பிடிப்புநேர மதியஉணவு வேளைகளில் சில இயக்குநர்களிடம்  பேசிக் கொண்டிருக்கும்போது, ‘சுஜாதா சார் உங்களைப்பத்தி நிறைய சொல்லியிருக்கார்‘ என்பார்கள். என்ன சொல்லியிருக்கார் என்று நானும் கேட்டதில்லை.
நான் சென்னை வந்தபிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கவேண்டும். மாறாக குறைந்துகொண்டே வந்தது. ‘அவர் பிஸியான ஆள். தசாவதானி. சிகரம் தொட்டவர். அவரை அநாவசியமாக  தொந்தரவு செய்யக் கூடாது‘  என்பதும் ஒரு காரணம். தவிர அவர் கமல்/ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதுவதில் மும்மரமாக இருந்தார். அந்த சமயங்களில் போன் செய்தால், ‘இவன் சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்கிறானோ’ என்று அவர் தப்பாக நினைக்கக்கூடும் என்ற அசட்டுத்தனமான மிடில் கிளாஸ் குற்றவுணர்ச்சியும் காரணம். ஆக, ‘உயிர்மை‘ புத்தக வெளியீட்டுவிழாக்களில் ஓரிரு முறை, ‘அன்னியன்‘  போன்ற படங்களின் திரையிடலில் ஒரு   சின்ன ‘ஹலோ‘ இப்படி எங்கள் சந்திப்புகள் குறைந்துகொண்டே வந்தன. எனக்குத் தெரிந்த பழைய சுஜாதாவை எங்கேயோ எப்போதோ இழந்துவிட்டிருந்தேன்.
ஃபிப்ரவரி 27-ம் தேதி மறைந்த சுஜாதாவுக்கு காலம் தாழ்த்தாமல், மார்ச் 2-ம் தேதியே ஒரு நினைவஞ்சலியை நாரத கானசபாவில் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. நெகிழ்வான நிகழ்ச்சி. பாலு மகேந்திரா மேடையில் பேசமுடியாமல் உணர்ச்சிவசப்பட்டார். இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே பெங்களூரிலிருந்து வந்திருந்த சுஜாதாவின் நண்பர்தேசிகன், என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சொன்ன விஷயம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “மணிசார், சுஜாதா கடைசியாகப் படித்த கட்டுரை ‘உயிர்மை‘யில் நீங்கள் எழுதிய தில்லி (நிகம்போத்) சுடுகாட்டைப்பற்றியது. அவர் இருந்த மனநிலையில் இந்தக்கட்டுரை அவரை மிகவும் பாதித்தது.  ‘எப்போதோ ஒருதடவை தான் இந்தமாதிரி கட்டுரை படிக்க கிடைக்கிறது. ‘மனுஷ்ய புத்திரன்’ சின்ன font-ல் போட்டிருக்கிறார். கண்ணைக் கவித்து படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்க படிச்சேளோ?’ என்று கேட்டார். விகடனில் நான் சுஜாதாவைப்பற்றி எழுதிய கட்டுரையில் இதையும் பதிவுசெய்திருந்தேன். இடநெருக்கடி  காரணமாக எடுத்து விட்டார்கள்” என்று   சொன்னார் தேசிகன். இந்த ‘L’ Board கத்துக்குட்டி எழுத்தாளனுக்கு இதைவிட வேறென்ன பாராட்டு வேண்டும்? இந்த சந்தோஷத்தை ‘உயிர்மை‘ ஆசிரியரோடு தொலைபேசியில்   பகிர்ந்துகொண்டபோது, ‘ஆமாம்! எங்கிட்டகூட உங்க கட்டுரையைப்பத்தி ரொம்பநேரம் பேசிட்டிருந்தாரு. உங்களுக்கு வாழ்த்து சொல்லச் சொன்னாரு. நான் தான் மறந்திட்டேன்’ என்று சாவகாசமாகச் சொல்கிறார் இந்த மனுஷ்யன்… ஸாரி.. மனுஷ்ய புத்திரன்! சுஜாதா, என்னிடம் ஏன் நீங்கள் நேரில் சொல்லவில்லை? என் கைபேசி எண் உங்களிடம் இல்லையா? அவர் தான் சுஜாதா!
சுஜாதாவின் எழுத்துலகத்தை ‘நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப்பின்‘ என்று பிரித்தால்,  நைலான் கயிறுக்குப்பின் அவரைக்கட்டவே முடியவில்லை! அவர் இருந்தபோது கண்டுகொள்ளாத சாகித்ய அகாடெமி,  இப்போது விழித்துக்கொண்டு — நிச்சயமாக விழித்துக்கொள்ளமாட்டார்கள் — மரணோபராந்த்‘ (மரணத்துக்குப்   பின்னால்) விருது கொடுக்க முன்வந்தால், அவர் குடும்பத்தினர் அதை நிராகரிக்கவேண்டும். அப்போதுதான்    சுஜாதாவின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்கும். அவரும் அதைத்தான் செய்திருப்பார். உலகெங்குமிருக்கும்  கோடிக் கணக்கான ‘சுஜாதா விசிறிகள்‘  அவருக்களித்திருக்கும் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் மேலல்ல இவ்விருதுகள்.  பல வருடங்களுக்கு முன்பே அந்த மாபெரும் எழுத்தாளருக்கு  ‘கட்-அவுட்‘  வைத்தவர்களல்லவா நாம்!
நாரத கான சபா ‘உயிர்மை‘ சுஜாதா நினைவஞ்சலியில் அவரதுஒரு T.V. நேர்காணலைத் திரையிட்டார்கள்.   அதிலும் என்னையறியாமல் சுஜாதா எத்தனை தடவை ‘அது வந்திற்று……‘ சொல்கிறாரென்று எண்ணிக்கொண்டிருந்தேன் …….. இனிமேல் எண்ண முடியாது!
பாரதி மணி (Bharati Mani)

3 comments:

 1. at first read it with happy frame of mind. nearing its end, a feeling of sadness is with me. wonderful writing.

  ReplyDelete
 2. என்ன ஒரு ஆத்மார்த்த பதிவு.. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டே தான் படித்தேன். ச்சே.. இதெல்லாம் நேரில் பார்த்தபோது பேசி இருந்திருக்கலாம்.. உங்களோடு..

  ReplyDelete
 3. There is a lot of 'from the heart' in your writing. That Shines.

  Are you at Chennai now ? It would be great to meet sometime sir.

  ReplyDelete