Friday, January 22, 2016

ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட பாரதி மணியை (Bharati Mani), ஒரு முக்கியமான எழுத்தாளனாக அறிய செய்தவை, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தில்லி வாழ்க்கையில் பரந்துபட்ட அனுபவங்கள், இதுவரை எங்கும் பதிவு செய்யப்படாத சம்பவங்கள் அவரது தனித்துவமான மொழிநடையில் வாசகர்களை பெரிதும் உற்சாகம் கொள்ள செய்தன. இவை ஒரு தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் ஒரு காலகட்டத்தின் சரித்திரமாகவும் இருப்பதே இந்நூலின் தனிச்சிறப்பு.
கடிதம் – 1
அன்புள்ள பாரதிமணி அவர்களுக்கு,
வணக்கம். ‘உயிர்மை‘ வெளியிட்டுள்ள உங்களது ‘பல நேரங்களில் பல மனிதர்கள்‘ கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். இதிலுள்ள 23 கட்டுரைகளில் அதிகமும் நான் முன்பே ‘உயிர்மை‘ இதழ்களில் படித்ததுதான். எனினும் தொகுப்பில் ஒரு சேரப் படிப்பதில் ஒரு தனித் திருப்தி உண்டல்லவா? ‘ஒரே மூச்சில் படித்தேன்’ என்பது உயர்வு நவிர்ச்சியாகும். நான் முழு லட்டையும் அப்படியே விழுங்கி விடாமல், ஒவ்வொரு துணுக்காய் உதிர்த்து, சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறதே என்று நிதானித்துச் சுவைக்கிற குழந்தை மாதிரி, தினமும் கொஞ்சமாய் ரசித்துப் படிக்கிறேன். படிக்கப் படிக்க நான் ரசித்தபடி உங்களது ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கிற ஆசையில் தொடர் கடித விமர்சனமாக இதனை எழுதுகிறேன்.
கட்டுரை இலக்கியம்‘ தி.ஜ.ர வுக்குப்பின் யாரும் திரும்பத் திரும்பப் படிக்கிற வகையில் சுவாரஸ்யமாக படைக்க முயற்சிக்கவில்லை அல்லது முடியவில்லையோ என்ற ஆதங்கம் எனக்குண்டு. உங்களின்- முன் எழுத்து அனுபவமே இல்லாமல், சுயம்புலிங்கம் போலத் திடீரென்ற முளைத்த இலக்கியப் பிரவேசம் இந்த தொகுப்பின் மூலம் அந்த ஆதங்கத்தைத் தீர்த்து வைக்கிறது.
பல நேரங்களில் பல மனிதர்கள்‘ தலைப்பே உள்ளடகத்தைப் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. படித்த பிறகு எவ்வளவு கச்சிதமாய்ப் பொருந்துகிற தலைப்பு என்று தலையாட்டத் தோன்றுகிறது. உங்களுக்குக்கிடைத்த பலதிறப்பட்ட இந்த அரிய அனுபவங்கள் உண்மையில் சாத்தியமா என்று மலைப்பாக உள்ளது. ஆனால் அத்தனையும் சாத்தியமாகி இருப்பதை நம்பித்தான் ஆக வேண்டும் என்பது நம்மை அறியாமலே தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அட! எத்தனை வித மனிதர்கள் – எல்லா மட்டத்து மனிதர்களும் அது வங்க தேசத்து குடிசைவாழ் இந்தியக்
குடியேறிகளாக இருக்கட்டும், வங்கபந்துவின் மகள் ஹசீனா பேகமாகட்டும் – அத்தனை பேரும் உங்களுடனான தொடர்பில் எங்களை அசத்துகிறார்கள்!
ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் கேள்விப்பட்ட ஆனால் அதிகமும் அறியாத முக்கிய பிரமுகர்கள் பற்றியும் முற்றும் புதிதாகத் தோன்றுகிற பல தகவல்களுமாய் அடிக்கடி வாசிக்கிறவரைப் புருவம் உயர்த்த வைக்கின்றன. ‘அருந்ததிராயும் என் முதல் ஆங்கிலப் படமும்‘ என்கிற முதல் கட்டுரையில் உங்களது முதல் ஆங்கிலப்பட அனுபவத்தில் அந்தப் பட இயக்குநர் காட்டிய அக்கரையும் முன்னேற்பாடும், டெக்னாலஜியும் புதிய செய்திகள். கொசுறாக அருந்ததிராய் என்.டீ.டிவி பிரணாப்ராயின் சகோதரி என்கிற தகவலும் பலருக்குத் தெரியாதுதானே!
கடிதம் – 2
சிரிப்புத்தான் வருகுதையா‘ என்ற இரண்டாவது கட்டுரையில், தங்களது 50 ஆண்டு தில்லி வாசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான உங்களது நட்பையும் அவர்கள் தொடர்பான பல ரசமான தகவல்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.அதோடு சாமான்யனை வாய் பிளக்க வைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களது இலவச சலுகைகளைப் பட்டியலிட்டிருப்பது மூச்சு முட்ட வைக்கிறது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ஒரு அறையை மட்டும் வைத்துக் கொண்டு பாக்கிப்பகுதியை வாடகைக்கு விட்டு அதிலும் தேற்றுகிற கேவலத்தையும் அறிய நாம் தான் வெட்கப்பட நேருகிறது. இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து பிழைக்கும் கும்பல் பற்றிய தகவலும் ‘சிரிப்புத்தான் வருகுதய்யா‘ தலைப்பை அர்த்தப்படுத்துகின்றன.
அமுதசுரபி‘ தீபாவளிமலரில் வந்த ‘நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி‘ என்னும் கட்டுரை நாதஸ்வரம் பற்றியும் அதில் மன்னராக விளங்கிய திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை மற்றும் அவரது அத்யந்த சீடர் காருகுறிச்சி அருணாசலம் பற்றியெல்லாம் பல ரசமான தகவல்களைச் சொல்கிறது. ‘நாதஸ்வரமா – நாகஸ்வரமா‘ எனும் சர்ச்சை, ரயிலில் பயணம் செய்யும் போது தன் ஊர் நெருங்குகையில் 50ரூ அபராதத்தை தன் உதவியாளரிடம் கொடுத்து விட்டு சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி தன் வீட்டுக்கருகே இறங்கிக் கொண்ட ராஜரத்தினம் பிள்ளையின் சாகசம் என எத்தனை சுவாரஸ்யமான தகவல்கள்!
தீராநதி‘யில் வந்த ‘சுப்புடு சில நினைவுகள்‘ அவரைப் பற்றிய பல புதிய செய்திகளைச் சொல்கிறது. சிறு வயதில் பர்மாவிலிருந்து பலநாட்கள் உணவில்லாமலே நடந்தே இந்தியா வந்து, குமாஸ்தாவாகச் சேர்ந்து அண்டர் செகரட்டரியாக ஓய்வுபெற்ற சாதனை பெரிதல்ல எனும்படி பின்னர் உங்கள் சிபாரிசில் உங்கள் அலுவலகத்தில்நல்ல சம்பளத்தில் வாங்கிக் கொடுத்த வேலையில் அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு உங்களைச் சங்கடத்தில் ஆழ்த்தியதும், நீங்கள் அவரை நம்பி ஒப்படைத்த பல முக்கிய, அவரது துறைசார்ந்த வேலைகளில் அவர் நாணயமற்று நடந்துண்டதுமான நிகழ்வுகளை நீங்கள் பெரிது படுத்தாமல் பெருந் தன்மையுடன் அவரது கடைசிக்காலம் வரை நடந்து கொண்டதும் நெகிழ்ச்சியூட்டுபவை. ஆனால் உங்களிடம் நன்றி உணர்வை பலமுறை வெளிப்படுத்தியதையும், உங்களது திறமைகள் பலவற்றை மனம் திறந்து பாராட்டிய குணத்தையையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
உபரியாக செம்பை வைத்தினாத பாகவதருடனான உங்கள் பரிச்சயத்தையும், அவருக்குப்பிடித்த உங்கள் ஊர் மட்டிப்பழத்தையும்,அது தொடர்பாக அவர் சொன்ன ஜோக்கை உங்களிடமிருந்த அறிந்தது நினைவில்லாமல் உங்களிடமே சுப்புடு தனது ஜோக்காகக் குறிப்பிட்டதும்  வேடிக்கைதான்.  பலாபலன்களை எதிர் பார்த்து சுப்புடுவின் நட்பு அடிக்கடி மாறும் என்னும் பலரது குற்றச்சாட்டுகளுக்கு மாறாக உங்களிடம் அவர் ஆத்மார்த்தமான நட்புடன் இருந்ததைப் பெருந்தன்மைடன் மறவாது குறிப்பிட்டுள்ளீர்கள்.
கடிதம் – 3
நான் பார்த்த ரோஜாவின் ராஜா‘ என்கிற கட்டுரையும் உங்களது அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் பற்றி சிலிர்ப்பான சம்பவங்களைச் சொல்கிறது. 21 வயதில் தில்லி நாடகக்குழு பழக்கத்தால் மோதிலால் நேருவின் நூற்றாண்டு விழாக் கமிட்டியில் இடம் பெற்றதும் அது தொடர்பான ஏற்பாடுகளின்போது பார்வையிட வந்த நேருஜியிடம் அறிமுகமும் நேரடி பாராட்டும் பெற்றதும் அரிய வாய்ப்புகள்தான். தொடர்ந்து உங்களது நாடகங்களை அவர் பார்த்துப் பாராட்டியதுடன் உங்களது தோள்மீது கைபோட்டுக்கொண்டு படம் எடுததுக் கொண்டதும் யாருக்கு வாய்க்கும்?
அடுத்து அன்னை தெரஸாவோடு நேர்ந்த விமானப்பயணத்தில் அவரது இருக்கைக்கு அடுத்து அமரும் பாக்யம் கிட்டியதும் அவர் சிறு பைபிள் புத்தகமும் ஜெபமாலையும் தந்து உங்களை ஆசீர்வதித்ததும் குருட்டு அதிஷ்டம் என்று சொல்ல முடியுமா?  எல்லோருக்கும் அந்தக் கொடுப்பினை வாய்த்து விடுவதில்லை.
அடுத்து வங்கபந்துவின் மகளான ஷேக் ஹசீனாவின் சந்திப்பும் தொடர்ந்தநான்கு ஆண்டு நட்பும் உங்களுக்கு மட்டும் எப்படி சாத்யமாகிறது என்ற வியப்பைஏற்படுத்துகிறது. தில்லியில் மறைவாக அவர் இந்திரா அம்மையாரின் பாதுகாப்பில்இருந்தபோது கடுமையான கட்டுக் காவலுக்கிடையே அவரைச் சந்திக்க நேர்ந்ததும் பின்னர்பங்களாதேஷ் போய்த் திரும்பிய போதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்தமான ‘ஹீல்ஸாமீன்‘ பார்சலைத் தவறாமல் கொண்டு வந்து கொடுத்ததும் பெரிய சாகசம் போல வியக்கவைக்கிறது. அவருடனான சந்திப்பின் போது நம் தமிழர் போலல்லாமல் ஒரு ஆங்கிலச்சொல்கூடக் கலக்காது தம்மொழியில் மூன்று மணி நேரம் பேசியது நம் டாக்டர் ராமதாசை மகிழ வைத்திருக்கும் என்ற உங்கள் விமர்சனத்தையும் ரசித்தேன்.
அடுத்த கட்டுரையான ‘நான் வாழ்ந்த திருவாங்கூர் சமஸ்தானம்‘ பல புதிய ரசமான தகவல்களைத் தருகின்றன. 1940களில் இந்தியாவில் மதிய உணவுத்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தபட்டது திருவிதாங்கூரில்தான் என்கிற தகவல் இன்றைய ‘மூன்று முட்டைத் திட்டம்‘ பற்றி உரிமை கொண்டாடுபவர்க்கு மட்டுமல்ல நமக்குமே புதியதுதான். பத்மநாபசுவாமிகோயில் பக்கத்தில் உள்ள பத்ம தீர்த்தத்தில் குளித்தவர்களில் பத்துக்கு நாலு பேருக்காவது யானைக்கால் நோய் இருந்ததும் பலருக்கு விரைவீக்கம் காரணமாய் பெரிய மூட்டையைக் காலிடுக்கில் சுமந்த சோகத்தையும் பற்றிச் சொல்கையில் அது சார்ந்து நீங்கள்குறிப்பிட்டுள்ள பழமொழி ‘பத்மதீர்த்தத்தில் குளிச்சால், ஸ்ரீபத்மநாபன் கடாட்சிச்சு வெச்சு எழுதான் மேசைவேண்டா‘ குபீர்ச்சிரிப்பை உண்டாக்குகிறது. அடுத்து இந்தியத் தலைநகரங்களிலேயே சேரிகள் இல்லாத நகரமாக திருவனந்தபுரம் திகழந்தது என்பதும் வியப்பான செய்திதான். மற்றுமமுறைஜபம் நடக்கும் நாட்களில் கோயில் ஊட்டுப்புரையில் தினமும் ஆயிரக் கணக்கானவருக்குஅன்னம் வழங்க உணவு தயாரிக்கிற பிரம்மாண்டத்தைப் பற்றி சிறுவயதில் நீங்கள் உங்கள் தகப்பனாரைக் கேட்ட கேளவியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் கூட நினைக்கும்தோறும் சிரிப்பை வரவழைப்பதாகும். ஆயிரக் கணக்கானவருக்குச்சமைக்க நாம் வசிக்கும் அறையின் கொள்ளளவுகொண்ட பெரிய வெண்கல உருளிகளில் , சாம்பார், ரசத்துக்காகப் புளி கரைக்க இரண்டு மூட்டைப் புளியைப் போட்டு ஆட்கள் உள்ளெ இறங்கி காலால் மிதிப்பதை பற்றி ‘அந்த சமயத்திலே அவங்களுக்கு ஒண்ணுக்கு வந்தா என்னப்பா செய்வாங்க?‘ என்ற குழந்தைத்தனமான கேள்வியும் ‘அது எனக்குத் தெரியாதததனாலேதாண்டா நான் ஊட்டுபபுரையிலெ சாப்பிடறதேயில்லே‘ என்ற உங்கள் தந்தையார் பதிலும் எந்த உம்மணாமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும். இன்னும், உங்கள் தகப்பனாரின் சிக்கன நடவடிக்கையால் S.S.L.C வரை முழுப் பென்சிலையே உபயோகித்ததில்லைஎன்பது இன்றைய தலைமுறையால் நம்பமுடியாதுதான்! திருவனந்தபுரம் மகாராஜா. மற்றும் திவான் சி.பி.ராமசாமி அய்யர் பற்றிய ரசமான புதிய தகவல்கள் தனி அத்தியாயம். அதுஅடுத்த கடிதத்தில்.
கடிதம் – 4
நாற்பதுகளில் நமது சுதந்திரத்துக்கு முன்னால் திருவிதாங்கூரில் நடைபெற்ற ஆட்சியை வஞ்சி நாட்டின் பொற்காலம் என்பார்கள். அதற்கு ஸ்ரீசித்திரைத்திருநாள் மகாராஜாவும், திவான் சர். சி.பி. ராமசாமி அய்யருமே காரணம். கல்வி, சுகாதாரம், மின்சார வசதி தவிர, கலையுலகிலும் திருவிதாங்கூர் முன்னணியிலிருந்தது. என்பதும், மூன்றுபோக நெல் விவசாயத்துக்காக பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு, நாஞ்சில்நாடு ‘திருவிதாங்கூரின் நெற் களஞ்சியம்’  எனப் பெயர் பெற்றதும், விமர்சையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இசைவிழா நிகழ்ச்சிகள் திருவிதாங்கூர் வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப் பெற்றதும் இதெல்லாம் நடை பெற்றது நாற்பதுகளில் என்று எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதோடு திருமணம் செய்து கொள்ளாத ஸ்ரீசித்திரைத் திருநாள் மகாராஜாவின் ஒழுக்கம், தெய்வ பக்தி, அவர் தினமும் காலையில் பத்மநாபசாமி கோயில் தரிசனத்துக்குச் செல்லும் நேரம் பார்த்து, கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம் என்கிற நேர ஒழுங்கு – எனும் செய்திகளும் பிரமிப்பை அளிப்பவை தாம்.
திவான் சர்.சி.பி யும் பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்தவர் என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய முப்பதுபேர் கொண்ட மந்திரிசபை செய்ய முடியாததை, தனி ஆளாக நிர்வகித்த சிறந்த நிர்வாகி அவர் என்பதும், அளந்துதான் சிரிப்பவரான அவர் He was a ‘no nonsense’ man என்பதாலேயே அவருக்கு இடது வலதுசாரி அரசியல் கட்சிகளிடையே விரோதிகள் இருந்தனர் என்பதும் எமக்குப் புதிய செய்திகள்தாம், ஆனால் அவரது இந்தப் பெருமைகளை எல்லாம் குலைக்கிறமாதிரி பின்னால் நிகழ்ந்தவற்றைக் கேட்கத்தான் கஷ்டமாக இருக்கிறது. அவருக்கும் ‘அம்மை ராணி‘க்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாக வதந்தி பரவியதும், அதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியால் இரவோடிரவாக அவர் சென்னை திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், அதற்குப் பின்னர் அவர் திருவிதாங்கூர் திரும்பவே இல்லை என்பதும், அவருக்கு எதிராக நடந்த கிளர்ச்சிக்கு மறுநாள் தம்பனூர் பேருந்து நிலையத்துக்கு எதிரே தலைப் பாகையுடன் நின்றிருந்த, கைதேர்ந்த சிற்பியால் உருவாக்கப்பட்ட அவரது வெள்ளைப் பளிங்குச்சிலை தரையில் கோலமாவாய்ச் சிதறடிக்கப்பட்டதும் வேதனை தரும் தகவல்கள். கேரளம் ஒரு தலைசிறந்த நிர்வாகியை இழந்தது பெரிய சோகம். திருவனந்தபுரத்தை விட்டு அவர் போவதற்கு முன் மகாராஜாவுக்கு எழுதிய கடைசிக் கடிதம், ‘ it is impossible for me to function here as one of several Ministers,….By temperament and training, I am unfit for compromises; being autocratic and over-decisive, I don’t fit into the present environment‘ -அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறது.
மேலும் அவர் ‘The man with a silver tongue‘ என்று பெயர் பெற்ற சீனிவாச சாஸ்திரிக்குஇணையான ஆங்கிலப் புலமை மிக்கவர் என்பதும், பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு அவரது ஆங்கிலத்தில் மோகம் என்பதும் அறிய அவரது பெருமை மேலும் உயர்கிறது.
கடிதம் – 5
creamatorium_may_02-small
தில்லியின் நிகம்போத் காட் (சுடுகாடு)‘ இங்குள்ள தமிழர்களுக்கு புதிய செய்திகளைச் சொல்லும் ரசமான கட்டுரை. தில்லியில் நீங்கள் இருந்த காலத்தில் எங்கே தமிழர்கன் வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் ‘கூப்பிடு மணியை‘ என்று உரிமையோடு உங்களை அணுகி உதவி கேட்டதும், உடனே பையில் 500 ரூபாயைப்போட்டுக் கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டுப்போய் நீங்கள் பலனை எதிர் பாராது மயானத்தில் இடம் பிடித்து இறுதிச் சடங்குகள் முறைப்படி நடக்க உதவியதுமாய் சுமார்200 தடவைக்கு மேலாக தில்லி சுடுகாட்டுக்கு (நிகம்போத்)அலைந்ததும் அறிய சிலிர்ப்பாய் இருக்கிறது. இப்படியும் ஒரு மனிதநேயமா என்று வியக்க வைக்கிறது. அது தொடர்பான உங்களது அனுபவங்களும் – நெகிழ்ச்சியும் உருக்கமும் மிக்கவை.மாதத்துக்கு இரண்டு முறையாவது தவறாது இந்த சுடுகாட்டுக்குப் போயிருந்தாலும்  உங்களுக்காகப் போனது இரண்டு தடவைதான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் ஒன்று உங்கள் மாமனார் க.நா.சுவுக்காகப் போனது. இதையொட்டி க.நா.சு பற்றி கூறியுள்ள பல ரசமான தகவல்கள் இலக்கிய ரசிகர்களுக்கு புதியதும் இனியவையுமாகும்.
அடுத்து தில்லி திரைப்பட விழாக்கள் பற்றிய உங்களது அனுபவங்களையும் தகழியின் ‘செம்மீன்‘  ‘தங்கத் தாமரை‘ விருது பெற்றதில் உங்களது பங்கு பற்றியும் ‘செம்மீனும்தேசீயவிருதுகளும்‘  என்ற கட்டுரை சொல்கிறது. திரைப்பட விருது தேர்வுக் கமிட்டியின் ஜூரிகள் நியமனத்தில் நடக்கும் அபத்தங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளவை சுவாரஸ்யமானவை. ஒரு சிலர் சினிமாவையே சுவாசிப்பவர்கள். ஹாலிவுட் படங்களை frame by frame ஆக அலசுபவர்கள். எந்த இந்திய சினிமாவைப் பார்த்தாலும், அதற்கு நதிமூலம் ரிஷிமூலமாய், எந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதற்கு லிஸ்டே வைத்திருப்பவர்கள். மாறாக சினிமா மொழியின் ‘ஆனா ஆவன்னா’ கூடத் தெரியாத பலர் மத்திய அரசின் ஏதாவது ஒரு அமைப்பில் தலைவர்களாக இருக்கும் ஒரே தகுதியில் ஜூரிகளாகத் தேர்வு செய்யப்படும் பலருக்கு எல்லாப் படங்களும் ஒன்றுதான், மற்ற ஜூரி நண்பர்களின் கருத்தை ஒட்டியே இவர்களது தேர்வு இருக்கும் என்பதெல்லாம் உங்களைப் போன்று அருகிருந்த பார்த்தவர்கள் சொன்னால்தான் தெரிகிறது. இத்தகைய அபத்தத்தால், நல்ல தென்னிந்தியப் படங்கள் – குறிப்பாகத் தமிழ்ப் படங்கள் அடிபட்டுப்போகும் அநீதியைப் பல சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஒரு தடவை மட்டும் க.நா.சு நடுவராக இருந்தபோது வெ.சாமிநாதன் எழுதி ஜான் ஆபிரகாம் இயக்கிய ‘அக்கிரகாரத்தில் கழுதை‘ படம் தேர்வானது ஆறுதலான செய்தி. 1965ல் ‘செம்மீன்’ படத் தேர்வில் ஐந்து ஜூரிகள் தேர்வு செய்த பட்டியலில் ஹாலிவுட் படத்துக்கு இணையான ‘செம்மீன்‘ இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்ற நீங்கள், நடுவரில் ஒருவரும் உங்களின் நெருங்கிய நண்பருமான புல்லா ரெட்டியிடம் முறையிட்டும் பயனில்லாது போய், மறுநாள் அதுவரை ‘செம்மீன்‘ படத்தைப் பார்க்காத பிரபல சினிமா விமர்சகரும், உங்களுடன் தில்லி பிலிம் சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினரில் ஒருவருமான திருமதி.அமீதாமாலிக் அவர்களை வற்புறுத்தி அவருக்கென ஸ்பெஷல் ஸுகிரீனிங் போடச் செய்து பார்க்க வைத்து அவரை உங்கள் கடசிக்கு மாற வைத்து, பட்டியலில் ‘செம்மீனை‘ச் சேர்க்க வைத்ததும் பிறகு அப்படம் தேசீய விருது பெறுவது சுலபமாயிற்று என்பதும் உங்களது அரிய சாதனைகளில் ஒன்று என்பது மட்டுமல்ல – முதல் தடவையாக ‘தங்கத்தாமரை‘ விருது விந்திய மலைக்குத் தெற்கே பயணித்ததும் அற்புதமானது ஆகும்.
கடிதம் – 6

சுஜாதா: சில நினைவுகள்‘ கட்டுரையில் அவருடனான சில இனிய அனுபவங்களை எழுதி விட்டு, இறுதியில் அவரைக் கடைசிவரை சாகித்ய அகாதமி கண்டு கொள்ளாததைக் குறிப்பிடுகையில், ‘சுஜாதாவின் எழுத்துலகத்தை ‘நைலான் கயிறுக்கு முன்/நைலான் கயிறுக்குப் பின்’  என்று பிரித்தால், நைலான் கயிறுக்குப்பின் அவரைக் கட்டவே முடியவில்லை! அவர் இருந்த போது கண்டு கொள்ளாத சாகித்ய அகாதமி, இப்போது விழித்துக்கொண்டு – நிச்சயமாக விழித்துக் கொள்ள மாட்டார்கள் – ‘மரணோபராந்த்‘ (மரணத்துக்குப்பின்னால்)விருது கொடுக்க முன் வந்தால், அவர் குடும்பத்தினர் அதை நிராகரிக்க வேண்டும்.  அப்போதுதான் சுஜாதாவின் ஆத்மாவுக்குச் சாந்தி கிடைக்கும்.  அவரும் அதைத்தான் செய்திருப்பார்.   உலகெங்குமிருக்கும் கோடிக்கணக்கான ‘சுஜாதா விசிறிகள்‘ அவருக்களித்திருக்கும் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் மேலல்ல இவ்விருதுகள்.  பல வருஷங்களுக்கு முன்பே சென்னையில் அந்த மாபெரும் எழுத்தாளருக்கு ‘கட்-அவுட்‘ வைத்தவர்களல்லவா நாம்’ என்று குறிப்பிட்டிருப்பது அவரது விசிறி அல்லாதவரும் ஏற்கக் கூடியதே.
தில்லியில் தென்னிந்திய ஹோட்டல்களும் கையேந்தி பவன்களும்‘ கட்டுரை தில்லியில் தமிழருக்குத் தங்குமிடங்களும் உணவு வசதிகளும் கடந்த 50 ஆண்டுகளில்வளர்ந்த கதையைச்சொல்கிறது.
அடுத்த கட்டுரையான ‘காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனையர்களும்‘, நம்மூர்த் தலைவர்களின் வாரிசுகளை நல்லவர்களாக்கி விடுவதாக உள்ளது. நேர்மைக்கும் நாணயத்திற்கும் சிறந்தவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட மொராய்ஜி தேசாயின் மகன் காந்திபாய் தேசாயின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளை அறியும்போது இது ஊர்ஜிதமாகிறது.’இவர் மொராய்ஜியின் மகனாகவே இருக்க லாயக்கில்லை என்பார்கள். ஊர்வன பறப்பனவில் ரயில் வண்டியையும், ஏரோப்பிளேனையும் தவிர மற்றவையெல்லாம் தள்ளுபடியல்ல! தண்ணியில் மீன் குட்டி போல நீந்துவார்‘ என்பது உண்மையில் வெட்கக்கேடானதுதான். இதைவிடக் கேவலம் நீங்கள் குறிப்பிட்டுள்ள அவரது நாணயக் குறைவான செயல் பற்றியது. தங்களது முதலாளி வினோத் என்பவர் நெருக்கமாய் இருந்த உங்களிடம்கூட சொல்லாமல், காந்திபாய் தேசாய்க்கு – மொராய்ஜி மகன் ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையில் 40 லட்சம் கைமாற்றாகக் கொடுத்ததைக் கேட்ட போது காந்திபாய் அடியாட்கள் வைத்து மிரட்டி பணத்தைத் திருப்பித் தராதது பற்றி அறிய அதிர்ச்சியாக உள்ளது. முடிவில் காந்திய வாதியாக அறியப்பட்ட மொராய்ஜிக்குத் தன் மகன் காந்திபாய் நடத்திய பண ஊழல்களை விசாரிக்க வைத்தியநாதன் கமிஷனை நியமிக்க நேர்ந்துதான் பரிதாபம்!
அடுத்து தில்லியில் சுலபத்தில் சாதிக்க முடியாத பலவற்றை வி.ஐ.பி களுக்காக உங்களால் மட்டும் எப்படி செய்து தர முடிந்தது என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் புருவத்தை உயர்த்த வைப்பது:
‘அந்தக் காலத்தில் என்னைப் போன்றவர்கள் தில்லியில் குப்பை கொட்ட கீழ்கண்ட திறமைகள் இல்லாமல் முடியாது –
1. Indian Airlines- ல் வீட்டில் இருந்து கொண்டே தொலைபேசியில் யாருக்கும் எந்த நேரத்திலும் எந்த ஊருக்கும் Ticket confirm செய்யும் திறன். இது இந்தியன் ரயில்வேக்கும் பொருந்தும்.
2. தில்லியில் அசோகா ஹோட்டலில் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், நடு இரவிலும் telephone மூலம்ஒரு டபுள் ரூம் ஏற்பாடு செய்யும் சாமர்த்தியம்.
3. தில்லி ஏர்ப்போர்ட்டில் எந்த ஹாஜி மஸ்தானையும் சுங்கப் பரிசோதனை இல்லாமல் வெளியே அழைத்து வருவது.
4. Takkal வராத காலத்தில் 24 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கச் செய்யும் திறமை.
5. நடு நிசியில் ஆயிரம் டாலர் கரன்சியோ இரு பாட்டில் ஸ்காட்சோ வரவழைக்கும் மாஜிக்.
6. போலீஸ் கேசில் மாட்டிக் கொண்டவரைப் பூப்போல எந்தக் கேசும் இல்லாமல் வெளியே கொண்டு வருவது.
7. Delhi Telephones General Managerன் அத்யந்த நட்பு.
– உண்மையாகவே இது அசாதாரணமானதுதான்!
‘தில்லியிலிருக்கும் ஒரு மத்திய மந்திரிக்கே மேலே சொன்ன பல விஷயங்கள் செய்ய வராது. எங்களைப் போன்ற பாமரருக்கத்தான் இது அத்துபடி. அதனால்தான் எங்களுக்கும் ஒரு ‘விலை‘ இருந்தது’ என்பது சுவாரஸ்யமான முத்தாய்ப்பு!
கடிதம் – 7
ஒரு நீண்ட பயணம்‘ என்கிற கட்டுரையில் தில்லிக்கும் தமிழ் நாட்டிற்குமான இந்தியன் ரயில்வே பயணம் கடந்த 50 ஆண்டுகளில் கண்ட மாற்றங்களை, வளர்ச்சிகளை – முன் பதிவு செய்வதில் அந்தக்காலத்து அவஸ்தை, அப்போதைய ஜனதா எக்ஸ்பிரஸ், கிராண்டிரங்க் எக்ஸ்பிரஸ்களின், இன்றைய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் போலன்றி எப்போது போய்ச்சேரும் என்று ரயில்வே அமைச்சரே சொல்ல முடியாத ஆமை வேகம், புகை எஞ்சின் என்பதால் வண்டியைவிட்டு இறங்கும் போது எல்லோருக்கும் போடப்படும் கரிப்பொடி மேக்கப், பல ரயில்வே அமைச்சர்கள் இந்திய ரயில்வேயை தம் சொந்த ஜமீனாகவே கருதி ஆட்சி செய்தது (ஜாபர் ஷெரீப் இரவு இரண்டு மணிக்குப்பெயர் தெரியாத ஸ்டேஷனில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து ரயிலை இரண்டு மணி நேரம் நிறுத்திவைத்தது, டிக்கட் வாங்காமல் பயணம் செய்து பிடிபட்டபோது ‘எங்கள் மருமகன் ரயில்வே மந்திரியாக இருக்கும்போது யார் எங்களிடம் டிக்கட் கேட்பது?‘ என்று லாலுபிரசாத்தின் மாமனார் மாமியார் அடம் பிடித்தது போல), முதன் முதலில் ரயில்வேயில் Aluminium foil உபயோகத்துக்கு வந்ததின் பின்னணி ரகஸ்யம் – என்று ஏகப்பட்ட ரசமான தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள்.
பங்களாதேஷ் சில நினைவுகள்‘ கட்டுரையில் இந்தியாவிற்குள் பங்களாதேஷ் அகதிகள் வந்ததின் ரகசியம் பற்றிச் சொல்லி இருப்பது – நமது எல்லைப் பாதுகாப்பு ஜவான்களுக்கு கையூட்டு தந்து, நாடகம் ஆடும் அவலம் – நம்மைத் தலைகுனிய வைக்கும் செய்தி. மாதம் இருமுறை உங்கள் நிறுவனத்தின் பிரதிநிதியாக நீங்கள் பங்களாதேஷ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை – வங்கஅதிபர் முஜீபூர் ரஹ்மானைச் சந்தித்தது, அவரது மனித நேயம், அவரது படுகொலை தந்த அதிர்ச்சி, கொல்கத்தா – டாக்கா பயணிகள் ரயில் விட்டதில் நமது கசப்பான அனுபவம் என நிறைய புதிய தகவல்களைச் சொல்லியுள்ளீர்கள். நம்மில் பலருக்கும் தெரியாத தகவலான பங்களாதேஷில் தமிழ் பேசும் குடும்பங்கள் இருப்பது பற்றி எழுதும்போது, பல ரசமான செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.நாற்பதுகளில் நாகப்பட்டினம், கீழக்கரை, கிருஷ்ணாபுரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தம் குலத் தொழிலான வாசனைத் திரவியம் வாங்கி விற்க அப்போதைய கிழக்கு வங்காளத்துக்குப் போன முஸ்லிம்கள் அங்கேயே தங்கிப் போனதும், அவர்களுக்குத் தமிழ்நாட்டைப்பற்றியோ,அங்கு தற்போது நடப்பவை பற்றியோ எதுவுமே தெரிந்திருக்கவில்லலை என்பதும், 1974ல் உங்களிடம் ஒரு முதியவர் ‘எம்.கே. தியாகராஜ பாகவதர், ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், எல்லாம் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார்களா?‘ என்று கேட்டதும் அவர்களுக்காக அங்கே போகும் போதெல்லாம் பழைய ஆனந்த விகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளுடன், தமிழ் கற்க உதவும் பாலபாட நூல்களை தில்லி தமிழ்ப்பள்ளியிலிருந்து வாங்கிப்போய்க் கொடுத்ததும் நெகிழ்ச்சியான செய்திகள். அதோடு வெளியுறவுச்செயலர் திரு. கே.பி.எஸ். மேனனனுடன் அதில் உள்ள நடைமுறைச் சிக்கலைச் சொன்னதால் உதவமுடியாமல் போன தகவலும் மனதை உருக்குபவை.
கடிதம் – 8
சிங் இஸ் கிங்‘ என்கிற கட்டுரை சீக்கியர்கள் பற்றி நாங்கள் அதிகம் அறியாத பல செய்திகளைச் சொல்கின்றது. 1984ல் இந்திராகாந்தி படுகொலையை முன்னிட்டு அப்பாவி சீக்கியர் பலர் கொல்லப்பட்டதையும் அதன் பரிதாபத்தையும் நேரில் பார்த்த நீங்கள் உருக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். இப்போது கேட்டாலும் மனதை நடுங்கச் செய்யும் கொடுமை அது. அது தொடர்பாக சீக்கியர்களின் பழக்கங்கள், வாழ்க்கைமுறை அவர்களது தனித்தன்மை, பெருமை பற்றி எல்லாம் குறிப்பிட்டு சர்தார்ஜி, சிங் பற்றியெல்லாம் நம்மிடையே புழங்கும் அசட்டு நையாண்டிக் கதைகளைக் களையவும் அவர்களைப்பற்றி உயர்ந்த எண்ணம் ஏற்படவும் செய்திருக்கிறீர்கள்.
‘எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்’. அதேபோல ‘எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான். ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர்‘ என்ற உண்மைகள் எம்மில் பலர் அறியாததுதான். இவ்வுண்மைகள் பற்றி உதாரணங்களுடன் விளக்கியிருப்பதுடன் பஞ்சாபிகளின் கடின உழைப்பைப் பற்றியும், புத்திசாலித்தனம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களது கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் தான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்கிற செய்தி பாராட்டுக்குரியதும் பஞ்சாபிகள் பற்றிய நம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதும் ஆகும். இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்லியுள்ளீர்கள். ‘இந்திய மொழிகளிலேயே பஞ்சாபியைப் போல் ஒரு வாக்கியத்துக்கு இரு அர்த்தங்கள் உள்ள வேறு மொழியே இல்லை‘ என்பதை உதாரணங்களுடன் ரசமாகச் சொல்லியுள்ளீர்கள். அதிகார வர்க்கத்தின் காலில் விழும் கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது என்பது தமிழர்கள் தலை குனிய வேண்டிய செய்தி. சீக்கியர்கள் வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள், நன்கு பழகி விட்டால் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்பவையும் அவர்களைப் பற்றிய நமது மரியாதையைக் கூட்டுகிறது.
கடைசிக் கட்டுரையான ‘பூர்ணம் விசுவநாதன் நினைவுகள்‘ ஒரு ஆரோக்கியமான நினைவஞ்சலி. 50களில் அவர் அகில இந்திய வானொலியில் தமிழ்ச் செய்தி வாசிப்பாளராக இருந்ததும், அவரது குரலைக் கேட்க தினமும் தமிழர்கள் ஆவலோடு காத்திருந்ததும் என்னைப் போன்ற வயதில் மூத்தவர்கள் அறிந்ததுதான் என்றாலும் இந்தியா சுதந்திரம் பெற்ற செய்தியை முதலில் தமிழில் உலகுக்குச் சொன்னவர் அவர்தான் என்பது எம்மில் பலரும் அறியாதது. அவரது சகோதரர்கள் பூர்ணம் சோமசுந்தரம், ‘முள்ளும் மலரும்‘ திரைப்படக் கதாசிரியர் உமாசந்திரன், தங்கை பூர்ணம் லட்சுமி அனைவருமே எழுத்தளார்கள் என்பதும் இளைய தலைமுறையினர் பலர் அறியாதது. பூர்ணம் விசுவநாதன் சிறந்த நாடக ஆசிரியராக மட்டுமின்றி அற்புதமான குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்ததும்,சுஜாதாவின் நாடகங்கள் அவரது நடிப்பால் பிரபலமானதும் பலரும் அறிந்ததுதான். ஆனால் அவருடனான உங்கள் வானொலி நாடக அனுபவங்கள் உங்களது ரசமான பதிவுகளின் மூலமே அறிய முடிகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லியில் தங்கிப் படித்த, 1991ல் சமாதானத்துக்கான நோபல் பரிசினைப்பெற்ற பர்மியப் போராளி ஆங் ஸான் ஸு கி அம்மையாரை நீங்கள் பூர்ணத்துடன் சந்தித்ததும், அப்போது அவருக்கு இந்தியாவில் தங்க அனுமதி கிடைப்பதில் பிரச்சினை இருந்ததை அறிந்து உங்கள் நண்பரின் உதவியால் மேலும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி ஒரு நொடியில் பெற்றுத் தந்தமைக்காக அவர் உங்களுக்கு நன்றி சொன்னதுமமான உங்கள் சாதனையும் பிரமிப்பைத்தருகிறது. பிரமிப்புக்குக் காரணம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் பள்ளி இறுதி வகுப்புத் தகுதியுடன், சிறுவனாகத் தனியே தில்லி சென்ற பாலக்காட்டுத் தமிழன் படிப்படியாக எல்லாவிதத்திலும் தன்னைத் தகுதியாக்கிக்கொண்டு தில்லியில் எவருக்கும் எதையும் சாதித்துக் கொடுப்பவராக உயர்ந்ததும், உலகம் முழுழும் சுற்றி வந்ததும், உலகத்தலைவர் பலரது அறிமுகமும் அன்பும் பெற்றதும் மட்டுமல்ல – இத்தனை சாதனைக்கும் அதிர்ஷ்ட தேவதையின் பூரண அருள் இப்படி யாருக்கு வாய்க்கும் என்பதும்தான்.
தமிழ் நாட்டிற்கு வெளியே – 50 ஆண்டுகளுக்கு மேலாய் தில்லியில் இருந்த உங்களது அலுப்புத் தராத எழுத்துத் திறனும் அரிதான அனுபவங்களும் தமிழகம் திரும்பிய பிறகே நாங்கள்அறிய உதவிய ‘உயிர்மை‘ ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.
இத்தொகுப்பில் உள்ள உங்களது கட்டுரைகளைப் போலவே உங்களைப்பற்றி பிரபல எழுத்தாளர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் என்று 25க்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ள பாராட்டுரைகளும் உங்களைப்பற்றி மேலும் பல ரசமான செய்திகளைச் சொல்கின்றன. அவையும் படித்து ரசிக்கத்தக்கவையே.
– நிறைவுற்றது

0 comments:

Post a Comment