Thursday, January 21, 2016

சிறுவயதிலிருந்தே நாதஸ்வரமும் தவிலும், மற்ற வாத்தியங்களைவிட, வாய்ப்பாட்டைவிட என்னை ஈர்த்திருக்கின்றன. கிராமத்தின் பின்னிரவில், தூரத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையை வீட்டில் படுத்தபடியே தூக்கத்தை மறந்து கேட்டுக்கொண்டிருப்பேன். சிறுவயதில், திருவனந்தபுரத்திலும், பின்னர் நாகர்கோவிலுக்கு வந்தபிறகு, சுற்றிலுமுள்ள சுசீந்திரம், கன்யாகுமரி, மஹாதானபுரம், ஆரல்வாய்மொழி, தேரூர், பத்மநாபபுரம், புலியூர்க்குறிச்சி, பூதப்பாண்டி, மண்டைக்காடு, ராஜாக்க மங்கலம் போன்ற ஊர்கோவில்களில் கொடியேற்றத்திலிருந்து 10 நாள்திருவிழா நடக்கும். மாலை வேளைகளில் நடக்கும் இசைக்கச்சேரிகளுக்கும், முக்கியமாக இரவு பூரா நடக்கும் நாயனக்கச்சேரிகளுக்கும் என் தந்தை அழைத்துச்செல்வார். அந்தக்காலத்தில், போகுமிடங்களில் போதிய ஹோட்டல்வசதி இல்லாததால், வீட்டிலிருந்து அம்மா தயாரித்த தேங்காய்சாதம், எலுமிச்சைசாதம், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சுவைமிகு சித்திரான்னங்கள், வற்றல் வடாம் சகிதம் போகும் வில்வண்டியில் முதலில் ஏறிவிடும். மூடிய தூக்குச் சட்டிகளிலிருந்து வரும் வாசனை ‘எப்போடா ராத்திரி வரும்?‘ என்று ஏங்கவைக்கும்! இந்தக்கோவில்களின் நிர்வாகத்தை ஏற்றிருந்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்த்துப்பார்த்து கச்சேரிகளை ஏற்பாடு செய்யும். எல்லா முன்னிலை வித்வான்களையும் வருடத்தில் ஐந்தாறுமுறை கேட்டுவிடலாம். [இங்கே ஒரு கொசுறுச்செய்தி அவசியம்: மேலே குறிப்பிட்ட கோவில் திருவிழாக்களில், பத்து நாட்களும் தவறாது பசும்பொன் திரு. முத்துராமலிங்கத்தேவரின் ஆன்மீகச்சொற்பொழிவு நடைபெறும். ஆஜானுபாகுவான தோற்றம், நெற்றி நிறைய திருநீறு, எண்ணெய் தடவி வாரிய நீண்ட தலைமுடி, மேடையேறும்போது, சிறிதே பெண்மை கலந்த நளினம்; பேச ஆரம்பித்துவிட்டால், தங்குதடையில்லாத தமிழருவி கொட்டும். இந்து சமய மேன்மைகளை விளக்கும் போதும், மற்ற சமயங்களை மதிக்கத்தெரிந்த பக்குவம், நமது இதிகாசபுராணங்களில் அவருக்கிருந்த ஆளுமை எவரையும் வியக்கவைக்கும். மகுடியில் கட்டுண்டவர்கள் போல் தினமும் ஆயிரக்கணக்கில் கூடும் ஜனத்திரளில் நானும் ஒருவன். பன்முகம் கொண்ட அந்த மாமனிதரை, இப்போது அரசியலுக்காக ஒரு சிறுவட்டத்துக்குள் அடைத்து, சந்திக்குச்சந்தி உருவ ஒற்றுமையேயில்லாத சிலைகளுக்குள் அவரை சிறைப்படுத்தி வைத்திருப்பதைப்பார்த்தால், மனதை என்னவோ செய்கிறது! சிலகாலம் அவர் ஃபார்வேர்டு பிளாக் எம்.பி.யாக இருந்தபோது, தில்லியிலும் அவரைச்சந்தித்திருக்கிறேன்].
சரி, இந்த ராஜவாத்தியத்தின் பெயர் நாதஸ்வரமா இல்லை நாகஸ்வரமா? இந்த சர்ச்சை பலகாலமாக இருந்துவந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஆல் இந்தியா ரேடியோ, இதை ‘நாகஸ்வரம்’ என்றே அறிவித்துவந்தது. அவர்கள் வெளியிட்டுவந்த வானொலி பத்திரிகையில், இதன் பெயர் நாகஸ்வரம் என்பதற்கான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையையும் படித்திருக்கிறேன். எனக்கு நாதஸ்வரம் தான் பிடித்திருக்கிறது!
நான் செய்த பேறு ‘நாதஸ்வர சக்கரவர்த்தி‘ திருவாவடுதுறை T.N.ராஜரத்தினம்பிள்ளை, [குருவைமிஞ்சிய சிஷ்யன்] காருகுறிச்சி P. அருணாச்சலம், நாச்சியார்கோவில் ராகவபிள்ளை, நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் போன்றவர்கள் காலத்தில் வாழ்ந்து அவர்கள் இசையைக் காதுகுளிரக்கேட்டு வந்ததுதான்! நான் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலத்துக்குப் பிந்தியவன். அவரை நேரில் கேட்டதில்லை. அந்தக்காலத்தில், திருவெண் காடு சுப்பிரமணியபிள்ளை, P.S.வீருசாமிப்பிள்ளை, திருவீழிமழலை சகோதரர்கள், செம்பனார்கோவில் சகோதரர்கள், எங்களூர் குண்டலக்கம்பர், அம்பலப்புழை சகோதரர்கள் போன்ற பல பிரபலமான நாதஸ்வரவித்வான்கள் இருந்தாலும், இந்த அசுர [ராஜ] வாத்தியத்தை சரிவரக் கையாளத் தெரிந்தவர்கள் இருவர் மட்டுமே. ‘கார்த்திகைக்குப்பின் மழையுமில்லை, கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை’ என்பது போல் திருவாவடு துறை/காருகுறிச்சிக்கு முன்னாலும் பின்னாலும் யாருமே இருந்ததில்லை. இருவரும் இந்த வாத்தியத்துக்காகவே பிறந்தவர்கள்! அவர்கள் காலத்தில் வாழ்ந்த, பிறகு வந்த முன்னணி நாதஸ்வரகலைஞர்களையும் நிறையக்கேட்டிருக்கிறேன். ஆனாலும், நான் இவர்களுக்குத்தான் அடிமை! குருவுடன் ஏன் சிஷ்யரை இணைக்கிறேனென்றால், சில விஷயங்களில், காருகுறிச்சியார் குருவையே மிஞ்சியவர். இவரது சீவாளியின் குளுமை, பெரியவரிடம் சிலசமயம் இருந்ததில்லை! இந்தக்கருத்தை என் நண்பர் எழுத்தாளர் கி.ரா. நிச்சயம் ஒத்துக்கொள்வார். நாதஸ்வரமென்றால் சுவாமி புறப்பாட்டின்போது, வீதியில் நடந்துகொண்டே வாசிப்பது என்பது மாறி, இந்த ராஜவாத்தியத்துக்கான மரியாதையைக் கொடுத்து அதை மேடையில் அமர்ந்து வாசிப்பது என்ற அந்தஸ்தை தேடிக்கொடுத்தது திருவாவடுதுறையார் தான்.
முந்தையகாலத்தில், நாதஸ்வரம் திமிரிநாயனம் என அறியப்பட்டது. அது அளவில் சிறியதாக, ஷெனாய் போலிருக்கும். மைக் இல்லாத காலங்களில், ஐந்து ஆறுகட்டை சுருதியில், shrill-ஆக கோவிலுக்குவெளியே, எல்லோரும் கேட்க ஏதுவாக, ஆனால் நளினம் குறைவாக இருந்தது. இப்போதும், திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோவில் உட்பட சில கோவில்களில், மரபு காரணமாக திமிரி நாயனமே வாசிக்கப்படுகிறது. இதைConcert Hall Instrument-ஆக மாற்றும் முயற்சியில், திமிரி, பாரி நாயனமாக உருப்பெற்றது. வடிவத்தில் சிறிது நீளமாக, இப்போது நாம் பார்க்கும் நாதஸ்வரமாக, வாசிப்பவர் வாசித்தால், நளினத்துடன், குளுமையுடன், குழைவோடு, நம் காதை நிரப்புகிறது! நாதஸ்வரத்துக்கென்றே சில பிடிகள், சங்கதிகள் உண்டு. அவைகளை, தேர்ந்த சில வாய்ப்பாட்டு வித்வான்களிடம் இன்றும் கேட்கமுடியும். கோவில் உத்சவங்களில் சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கப்படும் மல்லாரி நாதஸ்வரத்தின் தனிச்சொத்து!
அதேபோல், தவிலும் இப்போது சில மாற்றங்களைக்கண்டிருக்கிறது. ராகவ பிள்ளை காலத்தில், உத்சவமூர்த்தி பல்லக்கு முன்னால் நின்று வாசிக்க செளகரியமாக, தோளில் மாட்டிக்கொள்ளும் வாரும் தவிலை மூடிவைக்கும் உறையும் சாயம்போன காவிக்கலரில் இருக்கும். இப்போது தவில் சுருதியை கூட்டிக்குறைக்க Nut-Spanner-டன் தன் பெரிய உடம்பை ஒரு சாண் அகல ஜிகினாபோட்ட வெல்வெட் துணியால் மூடிக்கொண்டு, திரைப் பட நடனக்காட்சிகளில் வரும் கதாநாயகிகளைப்போல் அரைகுறையாகக் காட்சியளிக்கிறது!
என் தலைமுறையில் நான் மிகவும் கொடுத்துவைத்தவன். கோவில் மேடையில் நடுநாயகமாக ராஜரத்தினம் பிள்ளை, அவருக்கு ஓரடி பின்னால் காருகுறிச்சி, இருபக்கங்களிலும் நாச்சியார்கோவில் ராகவ பிள்ளை, நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் புடைசூழ, T.N..R-ன் ஆறுமணி நேரக்கச்சேரிகளை, பல தடவைகள் கேட்டிருக்கிறேன். காருகுறிச்சி அருணாச்சலம் தனியாக கச்சேரி செய்ய ஆரம்பித்த பிறகு, இருவரும் சேர்ந்து வாசித்த கச்சேரிகள் மிகக்குறைவு. மேடைக்கு முன்னால் உட்கார்ந்து, தலையாட்டி, பஞ்சமம் போனாலே கைதட்டும் ‘பெரிசுகள்‘, ராஜரத்தினம்பிள்ளை அடிக்கடி வெள்ளி டம்ளரில் ‘ஏதோ‘ குடிப்பதைப் பார்த்துவிட்டு, ‘அன்னா அந்த பிளாஸ்கிலிருந்து, வெள்ளி டம்ளர் வளி உள்ளே போகுல்லா, அது தான் தோடியாட்டும், காம்போதியாட்டும், கல்யாணியாட்டும் வெளீலெ வருது!’ என்று கமென்ட் அடிப்பார்கள். அந்த பிளாஸ்கில் என்னதான் இருக்கிறதென்று கண்டுபிடிக்க சிறுவயதில் முயன்று, பலதடவை தோற்றிருக்கிறேன். ஒரு தடவை சுசீந்திரம் திருவிழாவில் அதிகாலை 4 மணிக்கு, சிந்துபைரவி வாசித்து திருவாவடுதுறையார் கச்சேரியை முடித்தபின், ஜால்ரா போடும் பையன், வெள்ளி டம்ளரில் மிச்சமிருந்ததை, மேடைக்குக்கீழே மணலில் கொட்டினான். மணலோடு எடுத்து முகர்ந்துபார்த்த எனக்கு அப்போது, ஸ்பிரிட் வாசனை தான் தெரிந்தது. இப்போது முகர்ந்தால், கண்ணை மூடிக்கொண்டு என்ன பிராண்ட் ஸ்காச் விஸ்கி என்பதைச் சொல்லிவிடுவேன், அவைகளைத்தொட்டு சில வருடங்களானாலும் கூட!
சங்கீதத்தை நன்கு ரசிக்கக் கற்றுக்கொடுத்த ஆசான் என் தந்தையார். கோவில் கச்சேரிகளில் ராக ஆலாபனை செய்யும்போது, ‘என்ன பாட்டு மாதிரி இருக்கு?’ என்பார். கொஞ்சம் யோசித்து, ‘தாமதமேன் ஸ்வாமி’ என்றால், ‘வெரி குட், இது தோடி ராகம்’ என்று விளக்குவார். ‘இது என்ன?’…. ‘இன்னமும் சந்தேகப்படலாமா..’… ‘சபாஷ்… இது கீரவாணி ‘…..இது?……’சபாபதிக்கு வேறு தெய்வம்’…..’ரைட், ஆபோகி’. இப்படித்தான் நான் ராகங்கள் கற்றுக்கொண்டேன். நல்ல கச்சேரிகள் கேட்டுக்கேட்டு, ஆரோஹணம், அவரோஹணம் தெரியாமலே, நூறு ராகங்களின் பெயரை, பாடகர் ஆலாபனையைத்தொடங்கிய இரு நொடிக்குள் சொல்லிவிடுவேன். ‘எப்படிடா டக்குனு சொல்றே?‘ என்று என் நண்பர் சுப்புடு ஆச்சரியப்படுவார். அவர் சிலசமயம், ‘இது என்ன ராகம்? தொண்டையிலே இருக்கு, வரமாட்டேங்கிறது‘ என்று என்னிடம் சந்தேகம் கேட்பார். இது அவரே ஒத்துக்கொண்ட உண்மை! நான் படிக்கும்போது, ஆல் இந்தியா ரேடியோ திருச்சி ஸ்டேஷன் மீடியம் வேவ், எங்கள் ஊரில் கரகரவென்று கேட்கும். வெள்ளிக்கிழமைகளில் மாலை 7.30 – 9.00 நல்ல கச்சேரிகள் ஒலிபரப்பாகும். அந்த வேளைகளில் நான் உரக்கப்படிப்பது தடைப்பட்டால், ‘டேய்! புஸ்தகத்தை மூடி வெச்சுட்டு வா. கச்சேரிக்கப்புறம் ஒம்பது மணி நியூஸ் கேட்டுட்டு அப்புறமா படிக்கலாம்’ என்று சங்கீதம் கேட்க உற்சாகப்படுத்துவார். ஐம்பதுகளில், அரியக்குடியும், ராஜரத்தினமும், தங்களுக்கு மற்ற வித்வான்களைவிட ஒரு ரூபாயாவது அதிகமாக சன்மானம் தரப்படவேண்டுமென்று ஆல் இந்தியா ரேடியோவுடன் சண்டைபோட்டு, இரண்டு மூன்று வருடங்கள் ரேடியோவில் கச்சேரி செய்யாமலிருந்தார்கள். ஒரு ஸ்தாபனமாக இயங்குவதால், AIR-ல் தனிமனித முன்னுரிமை பாரபட்சம் காட்ட முடியாதென்று அவர்களும் பிடிவாதமாக இருந்தார்கள். கடைசியில், சமரசம் ஏற்பட்டு, இருவரும் அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில், மதியம் 3.30 -6.00 வரை சென்னை வானொலியில் இரண்டரைமணிநேரக்கச்சேரி செய்தார்கள். ராகவபிள்ளை தவிலுடன் மத்தியானநேர திருச்சி வானொலி கரகரப்புடன், அஞ்சல் செய்த கச்சேரி கேட்டது ஞாபகம் வருகிறது! அப்போது நாகர்கோவிலில் வானொலி நிலையம் வந்திருக்கவில்லை!
அந்தக்காலத்தில், ஒவ்வொரு வித்வானிடமும், ஒரு குறிப்பிட்ட ராகத்தைக்கேட்க, மக்கள் ஆவலாக வருவார்கள். மோகனத்துக்கு மஹாராஜபுரம் விசுவநாதய்யர், காம்போதிக்கு அரியக்குடி [அதிலும், ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே], முகாரிக்கு முசிரி, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு தோடி, இப்படி! பிள்ளைவாளின் ஐந்து நிமிட தோடி ராக இசைத்தட்டு [78 r.p.m.] மிகப்பிரபலமானது. கச்சேரிகளில் மூன்று மணிநேரம் ஆலாபனை செய்யும் தோடி ராகத்தை, ஐந்துநிமிடங்களில், பிழிந்து சாறெடுத்துக்கொடுத்துவிடுவார். அந்தச்சாறை ஆயிரம் தடவைகளுக்குமேல்குடித்திருக்கிறேன்!
சங்கீத வித்வான்களுக்கு கேலியும் கிண்டலும் குசும்பும் கொஞ்சம் அதிகம் தான்! இரு வித்வான்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பதே ஒரு சுகமான அநுபவம். அவர்கள் கச்சேரி செய்தால், கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பேச்சுக்கச்சேரியில் வல்லவர்கள்! அதிலும் பிள்ளைவாள் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார். அவரைப்பற்றிய ரசகரமான துணுக்குகளுக்குப் பஞ்சமேயில்லை. திருவாவடுதுறை ரயில்வேஸ்டேஷனில் இறங்கினால், தன்வீட்டுக்கு அதிகதூரம் நடக்கவேண்டுமென்பதால், ரயில் தன் வீட்டுக்குப்பக்கத்தில் வரும்போதே, சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி இறங்கி வீட்டுக்குப்போய் விடுவாராம். அபராதத்தொகையான ஐம்பது ரூபாயைக்கட்டுவதற்கு, அவர் உதவியாளர் Guardவரும்வரை காத்திருப்பாராம். இந்தத்தொகை அப்போது ஒரு சராசரி இந்தியனின் மாதவருமானம்! 1954-ல் சங்கீத நாடக அகாடெமி ஆரம்பித்த இருவருடங்களிலேயே கர்நாடக சங்கீதத்துக்கான விருதுகளை அரியக்குடிக்கும், திருவாவடுதுறையாருக்கும் அளிப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. They were the natural choices!
இறப்பதற்கு சிலமாதங்கள் முன்பு தில்லி ஆல் இந்தியா ரேடியோவில் சனிக்கிழமைNational Programme of Music-காக காருகுறிச்சி தில்லி வந்திருந்தார். அப்போது தான் அவருடன் பேசிப்பழகும் சந்தர்ப்பம் நேர்ந்தது. தில்லி கர்நாடக சங்கீத சபாவில் அவரது மேடைக்கச்சேரியும் ஏற்பாடு செய்திருந்தேன். ஊர் திரும்பியதும், நன்றி தெரிவித்து கடிதமெழுதியிருந்தார். நான் தில்லியில் இருந்தபோது, கநாசுவைப்பார்க்க தி. ஜானகிராமன் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவருக்குப்பிடித்த காம்பினேஷன் டீச்சர்ஸ் ஸ்காச்சும் திருவாவடுதுறையாரும்! அதிலும் அவர் வாசித்த லதாங்கி ராக ஆலாபனையை திரும்பத்திரும்ப போடச்சொல்லிக் கேட்பார்!
நான் பிறப்பதற்குமுன்பே தொடங்கப்பட்ட தில்லி கர்நாடக சங்கீத சபாவுக்கு சிலகாலம் செயலராக இருந்தேன். அப்போது அனைத்து முன்னணிக்கலைஞர்களுடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்புக்கிடைத்தது. எல்லா வித்வான்களுடைய இசைநாடாக்களும் என் Music Library-யில் இருந்தன. சபாக்கச்சேரி, AIR Recording என்று Spool Tape-ல்உயிருக்குயிராக, பொக்கிஷமாகப் பாதுகாத்துவந்தேன். ராஜரத்தினம்பிள்ளை 12 மணிநேரம், காருகுறிச்சி 14 மணிநேரம், எம்.டி.ராமநாதன் மதுரை மணி 16 மணியென்று தேனீக்கள் போல சேகரித்தது, இன்று ஊடகத்தின் வளர்ச்சியில், டெக்னாலஜியின் புதுப்புது கண்டுபிடிப்புகளில், டேப் ரிகார்டர் reduntant ஆகி, spool tapesகாளான் பிடித்து உபயோகமில்லாமல் போய்விட்டது. என் தில்லி நண்பர்களுக்கிடையில் காருகுறிச்சியின் டேப், ராஜரத்தினம் பேரில் கைமாறும். அதில் சந்தேகம் வந்தால், என்னிடம் கொடுத்து யார் வாசித்தது என்று தீர்ப்புக்கேட்பார்கள். ஒரிரு நிமிடங்கள் கேட்டுவிட்டு, இது காருகுறிச்சி என்று அறுதியாகக்கூறிவிடுவேன். அந்த அளவுக்கு, அவர்கள் பாணி, சங்கதிகள், நாபிக்காற்று, சீவாளியில் அழுத்தம் என் மனதுக்குள் பிடிபட்டிருந்தது. பல வருடங்களாக, நான் வீட்டிலிருக்கும் நாட்களில், காருகுறிச்சியார் தான் எனக்கு தாலாட்டுப்பாடி தூங்கவைப்பார். அவரது CDஒன்றைப்போட்டு விட்டுத்தான் படுக்கப்போவேன்! நான் முறையாக கர்நாடக இசை கற்றுக்கொள்ளவில்லையென்ற குறை எனக்கு இப்போதும் உண்டு! அதற்காகவே இன்னொரு பிறவி எடுத்தாலும் எடுப்பேன்!
தமிழ்நாடு நாதஸ்வரப்பள்ளியிலிருந்து வரும் மாணவர்களை கூர்ந்து கவனிக்கிறேன். வருடாவருடம் சென்னை கிருஷ்ண கானசபா ஏற்பாடு செய்யும் நாதஸ்வர விழாவுக்கும் தவறாமல் போகிறேன், இன்னொரு இளம் ராஜரத்தினமோ, அருணாச்சலமோ தென்படுவார்களாவென்று. இப்போதைக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனாலும், நான் நம்பிக்கையிழக்க மாட்டேன். I am an incorrigible optimist! இன்றைய பிரபல தவில் வித்வான்களுக்கு, அவர்களுக்கிணையாக சேர்ந்து வாசிக்க முன்னணி நாதஸ்வரக்கலைஞர்களில்லை. அதனால் தான், வலையப்பட்டியும் ஹரித்வாரமங்கலமும், நாதஸ்வரமேடை காலியாக இருப்பதைக்கண்டு, குன்னக்குடியையும், கத்ரியையும், கன்யாகுமாரியையும் தேடிப்போக வேண்டியிருக்கிறது! இந்த விஷயத்தில், ராகவபிள்ளை கொடுத்து வைத்தவர்.
வாய்ப்பாட்டோ, மற்ற வாத்தியங்களோ சிறிது பிசிறடித்தாலும், உட்கார்ந்து கேட்கமுடியும். ஆனால், இந்த அசுர வாத்தியத்தில், ஒரு தப்பான சங்கதி விழுந்தாலும், காதைப்பொத்திக் கொள்ளத்தோன்றும். அதனால்தான் வேண்டிக்கொள்கிறேன், ‘கார்த்திகைக்குப்பிறகும் மழை பெய்ய‘ வேண்டுமென்று! எனதுகாலத்தில் அந்த ‘இசைமழை‘ பெய்யுமா?
bharatimani90 at gmail dot com
அமுதசுரபி தீபாவளி மலர் நவம்பர் 2007-ல் வெளியானது

0 comments:

Post a Comment