Friday, January 22, 2016

சமீபத்தில் நம் பாரதக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதிபா பாட்டீல் தென்னமெரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்தார். ஆமாம், அவர்களுக்கும் ஐந்து வருடம் பொழுது போக வேண்டாமா? மக்கள் பணத்தில் இதையெல்லாம் செய்யாமல், ராஷ்டிரபதி பவனில் இருக்கும் பெரிய பெரிய அறைகளையும், மொகல் கார்டனையும் எத்தனை தடவைதான் சுற்றிவருவது? போரடிக்காதா என்ன? சமீபத்திய முதல் பயணத்தின்போது தன் மகன் திரு. ஷெகாவத்தையும் கூட்டிச் சென்றார். அதில் தவறொன்றும் காண முடியாது. முந்தைய ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வெளிநாட்டு விஜயங்களின்போது, தன் குடும்ப அங்கத்தினர்களைக் கூட அழைத்துச்செல்வது வழக்கமாகவிருந்தது. நேருவுடன் பலதடவைகள் இந்திரா காந்தி கூடப்போயிருக்கிறார்.
திருமதி பாட்டீலின் விஜயம் பல தவிர்க்கப்படவேண்டிய சில காரணங்களுக்காக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. பிரேஸில் நாட்டுப் பாராளு மன்றத்தில், காலியான இருக்கைகளுக்குத் தன் உரையை வாசித்தார். இதை நம் நாட்டுக்கு ஏற்பட்ட அவமானம் என்று பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன. கூடப்போன மகன் திரு. ஷெகாவத் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக அமெரிக்காவுக்கு, மகாராஷ்டிராவில் உள்ள தனக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடுவதற்காக, பயணம் செய்தாரென்ற இன்னொரு செய்தியும் வந்தது. இதை ஊடகங்களில் பார்த்த எனக்கு சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த சில சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தன.
எமர்ஜென்சிக்குப் பிறகு, ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்து திரு. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். இந்திரா காந்தி ஆட்சியில் சஞ்சய் காந்தியையும், சுற்றியிருந்த பன்ஸிலால்களையும், R.K.Dhawan களையும், P.N.Dhar களையும் போஷித்துவந்த தொழிலதிபர்களுக்கும், பெரிய பெரிய கான்ட்ராக்டர்களுக்கும் அன்றைய ஜனதா அரசின் மையப்பகுதியை எட்ட ஒரு சங்கிலி தேவைப்பட்டது. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தார் மொரார்ஜியின் மகன் காந்திபாய் தேசாய். Gandhi அல்ல, இவர் Kanti bhai Desai. (தமிழில் எழுதினால் சில சங்கடங்கள் உண்டு!) அது வரை பம்பாயில் இருந்த காந்திபாய் நிரந்தமாய் பிரதமரின் இல்லமான No.1, Safdarjung Roadக்குக் குடி பெயர்ந்துவிட்டார். (ஆம், ‘குடி’ பெயர்ந்துவிட்டார். இவர் மொரார்ஜியின் மகனாக இருக்கவே லாயக்கில்லையென்று சொல்வார்கள். ஊர்வன பறப்பன-வில் ரயில் வண்டியையும், ஏரோப்ளேனையும் தவிர மற்றவையெல்லாம் அவருக்குத் தள்ளுபடியல்ல! ‘தண்ணி‘யில் மீன்குட்டி போல நீந்துவார். (எனக்கு திரு. மொரார்ஜி தேசாய் அவர்களைப் பிடிக்காமல் போனதற்கு ஒரேயொரு காரணம்தான் உண்டு. அப்போது மாலைவேளைகளில் என் நண்பர்களுடன் நான் விரும்பியருந்தும்Whiskyயை இந்தியாவில் தடைசெய்ய விரும்பினார். அதற்கு என் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் என் வீட்டு Bar கதவில் ஒரு பெரிய போர்டு மாட்டியிருந்தேன். அதில் மொரார்ஜியின் தூக்கிய கையில் ‘மஞ்சள்’ திரவம் நிறைந்த ஒரு கோப்பை, அதன் கீழ் கொட்டையெழுத்தில், ‘You drink your Pissky! Let me drink my Whisky! Cheers! என்று எழுதியிருக்கும். வீட்டுக்கு வரும் நண்பர்கள் அதைப் பார்த்துச் சிரித்து பாராட்டுவார்கள். அவர் குடித்ததைச் செல்லமாக ‘மொரார்ஜி கோலா‘ என்றும் அழைத்து மகிழ்ந்தார்கள். இப்போது நினைத்துப்பார்த்தால் எனக்கே அது கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது. மற்றபடி அவர் நினைத்ததைச் சாதிக்க விரும்பிய Angry Old Man. இப்போது நான் ஒரு ‘குடிமகன்‘ இல்லையென்றாலும்கூட, குடியானாலும் புகைப் பழக்கமானாலும் எந்த ஒரு அரசுக்கும் தன் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் உரிமை இல்லையென்றுதான் நினைக்கிறேன். இந்த லட்சணத்தில் அரசாங்கமே காலையிலிருந்து மதுக்கடைகளைத்திறந்து வைத்திருக்கிறது, இதில் கஜானாவுக்கு ‘மூலா‘ அதிகமென்பதால்- நான் தில்லியைத்தான் குறிப்பிடுகிறேன்.
1978-ம் வருடம் லண்டனில் நடந்த Commonwealth Prime Minister’s Conference-ல்கலந்துகொள்ள மொரார்ஜி தேசாய் போவதாக முடிவாயிற்று. ஜனவரி மாதம் என்று ஞாபகம். அப்போது நான் கம்பெனி விஷயமாக ஃப்ராங்க்ஃபர்ட்டில் தங்கியிருந்தேன். அங்கே போவது எனக்குப் பிடித்தமான விஷயம். ஏனென்றால் அங்கே நான் தங்குவதுFrankfurt International Airport அருகிலிருக்கும் Frankfurt Sheration ஹோட்டல்Presidential Suite. எங்கள் Business Partner-ஆன M.A.N. ஜெர்மெனியில் மிகப்பெரிய இயந்திர உற்பத்தியாளர்கள் – இந்திய ராணுவம் உபயோகிக்கும் Shaktiman, மற்றும்Heavy Recovery VehicleAircrash Fire Tender போன்ற கோடிக்கணக்கில் விலையுடைய ராட்சத இயந்திரங்களைத் தயாரிப்பவர்கள். ஷெராட்டன் ஹோட்டல்களுக்கு அவர்களும் பங்குதாரர்கள் என்பதால், எல்லா ஹோட்டல்களிலும் ஒரு Presidential Suite அவர்களுக்காக வருடம் பூராவும் ஒதுக்கப்பட்டிருக்கும். காலியாகவிருந்தாலும், மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுவதில்லை. அதுதான் இருவருடங்களுக்கு என் வாசஸ்தலம். எதைச் சாப்பிட்டாலும் எதைக்குடித்தாலும் ஓசிதான், பில்லில் கையெழுத்து மட்டும் போட வேண்டும். பக்கிங்ஹாம் அரண்மனை போல நான்கு படுக்கையறைகள் கொண்ட மாளிகை. ஓடி விளையாடலாம்போல இருக்கும். தினமும் காலையில் ரிப்ரிஜிரேட்டரை நிரப்பிவிட்டுப் போய் விடுவார்கள். என்னைப் போன்ற கிராமத்துப் பாமரனுக்குச் சிறிது Etiquette, Table Manners எல்லாம் கற்றுக்கொடுத்தது இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்கள்தாம். பல்கலைக்கழகங்கள் கற்றுக்கொடுக்க முடியாததைச் சில வெளிநாட்டுப் பயணங்கள் சொல்லிக்கொடுத்துவிடும். ஹோட்டலிலிருந்து எஸ்கலேட்டர் வழியாக ஏர்போர்ட் போய்விடலாம். தற்போதையAirport Security கெடுபிடிகள் அப்போது இல்லாததால் மாலைவேளைகளில் அங்கே சுற்றுவதுதான் என் பொழுது போக்கு. Frankfurt Airport அப்போது JFK International Airport-க்கு அடுத்த படியாக மிகப்பெரிய விமான நிலையமாகக் கருதப்பட்டது. உள்ளே போனால் ஒரு சிறிய சுத்தமான நகரம் போலிருக்கும். இந்தியாவிலிருந்து யாராவது தெரிந்தவர்கள் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். அங்கிருக்கும் Sex Shop-களில் உடம்பில் பொட்டுத் துணியில்லாமல், போனால் போகிறதென்று காலுக்குச் செருப்பு மட்டும் அணிந்துகொண்டு, நடனமாடும் பெண்களை ஓரிருதடவைகளுக்கு மேல் பார்க்கமுடியாது. இலை மறைவு காய்மறைவுதானே நமக்குத் தெரியும்? தில்லி ஏர்போர்ட்டில் விமான வருகை/புறப்பாடு சாக் பீஸால் எழுதி அறிவித்துக்கொண்டிருந்த அந்தக்காலத்தில், இந்த ஏர் போர்ட்டில் ராட்சத போர்டுகள் தானாகவே கடகடவென்ற சப்தத்துடன் மாறுவதைப் பார்க்க எனக்கு பிரமிப்பாக இருக்கும்.
சிறுவயதில், என் பார்வதிபுரம் கிராமத்தில் ஆறுமாதத்துக்கு ஒரு முறை மேலே ஒரு சிறு புள்ளியாக Propeller உள்ள டக்கோட்டா விமானம் பறந்துசெல்லும். அதைப் பார்க்க கிராமமே தெருவில் கூடிவிடும். பெரிசுகள் உரக்க ‘சிலோன்லருந்து திருவந்தரம் போறான்’ என்று தெரிந்ததுபோல் சொல்வார்கள். அப்போது ‘நாமும் எப்போதாவது ஒருதடவை இதில் ஏறுவோமா’ என்று நினைத்ததுண்டு. பிறகு இதுவே அலுப்பூட்டுமளவிற்கு ‘Living in Suitcase‘ வாழ்க்கையாக மாறுமென்று அப்போது நினைத்ததேயில்லை. என்னை வளர்த்த தில்லிக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.
நான் விரும்பி அடிக்கடி Frankfurt போவதற்கு அங்கு நான் தங்கும் Presidential Suiteமட்டும் காரண மல்ல. (இங்கு நான் திரையுலகில் எதிர்கொள்ளும் ஒரு டார்ச்சரைப் பற்றியும் சொல்லவேண்டும். ‘அடுத்தவாரம் அவுட்டோர் இருக்கு. ஹீரோவுக்குப் பெரிய ஸுட்டா போட்டுடுங்க’ என்பார் இயக்குநர். அவர் சொல்வது உடையையல்ல. ஹீரோ தங்குவதற்கான Suite. அதே போல ‘எடிட்டிங் ஸுட்டு‘ என்கிற வார்த்தை அடிக்கடி காதில் விழும். எனக்கு ‘முட்டாப்பசங்களா, அது ஸுட்டு இல்லைடா, ஸ்வ்யீட்-Suite. வாயில் நுழையலேனா ஸ்வீட்னாவது சொல்லு. அது நிச்சயமா ஸுட்டு இல்லைடா’ என்று அலற வேண்டும்போலிருக்கும். தமிழ்நாட்டில், குறிப்பாகத் திரையுலகில் தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவதை எந்தக்கொம்பனாலும் தடுக்கமுடியாது.)
இன்னொரு காரணம் அங்கிருந்த என் நண்பனின் பெற்றோர்கள். திரு. அஹூஜா மிதிஷி, ஃபிராங்க்ஃபர்ட்டில் இந்தியத் தூதரகத்தின் Consul General of India-வாக பணியாற்றிவந்தார். திருமதி அஹூஜா என்னிடம் ஒரு தாயைப் போலப் பாசம் காட்டுவார். அடிக்கடி வேலை நிமித்தம் ஊர்சுற்றுவதால், IFS அதிகாரிகளின் மனைவிகளுக்கும்,  ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்கும் எல்லா மாநிலச் சமையலும் அத்துப்படி. குஜராத்தி டோக்லாவும், மலையாள எரிசேரியும், பஞ்சாபி பாஜ்ரே கா ரொட்டி-ஸர்ஸோன் கா ஸாகும் authentic-ஆக இருக்கும். திருமதி வந்தனா அஹூஜா பஞ்சாபியாக இருந்தாலும் அவர் வைக்கும் சாம்பாரும் தென்னிந்தியச்சமையலும், ஒரு மயிலாப்பூர் மாமி சமைப்பதைவிட ருசியாகவிருக்கும். தென்னிந்தியச் சமையலுக்காகவே இந்தியாவிலிருந்து ஒரு கறிவேப்பிலைக்கன்றைக் கொண்டுபோய் நட்டு குழந்தை போல் வளர்த்துவந்தார்.பச்சைக் கொத்தமல்லியில்லாத ரசம் ஒரு கற்பிழந்த பெண்ணைப்போல என்று சொல்வார். எனக்கும் சமையலில் ஈடுபாடிருந்ததால், எங்கள் நாஞ்சில்நாட்டுத் தேங்காய் அரைத்த குழம்பு, தயிர் சேர்க்காத அவியல், எரிசேரி, மாம்பழப்புளி சேரிபோன்றவற்றின் ரெசிப்பி சொல்லிக் கொடுத்து செய்தும் காட்டுவேன். எனது தேங்காய் அரைத்த குழம்புக்கு அஹூஜா தம்பதிகள் அடிமை. யானை விலை குதிரை விலை கொடுத்து Frankfurt Departmental Store-ல் வாங்கிய அல்போன்ஸோ மாம்பழத்தில் புளிசேரி வைக்கச்சொல்லுவார். வாரம் ஒருமுறை விமானநிலையம் அருகிலிருக்கும் என் ஹோட்டலிலிருந்து ஊருக்குள்ளிருக்கும் அவர் வீட்டுக்குப் போய் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அவர் அழகாகக் கட்டிக்கொடுக்கும் அடுத்த வாரத்துக்கான உணவுப் பொட்டலங்களையும் வாங்கிக் கொண்டு வந்து விடுவேன். நல்ல சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு சங்கோஜமே கிடையாது. (தில்லியில் என் சர்தார்ஜி நண்பன் வீட்டில் ஒரு நாள் சாப்பிடப் போயிருந்தபோது, அவன் தந்தை ‘சங்கோஜப்படாமல் சாப்பிடு‘ என்பதை இப்படிச்சொன்னார்: ‘Beta, This is your house. Eat shamelessly!‘)
அதுவரை ஆடிக்கொருதடவை குடித்துக்கொண்டிருந்தவனுக்குத் தினமும் பாட்டிலைத் திறக்கும் பழக்கம் அப்போதுதான் ஏற்பட்டது. அங்கிருக்கும் Sex Shop-களுக்குப் போவதில் ஆர்வமில்லாததால், மாலைவேளைகளில் ஹோட்டல் ரூமில் இருக்கும்போது, ஜெர்மானிய நண்பர்கள் எனக்காக வைத்துவிட்டுப் போன இரு பெரியHalf-a-gallon (2.5 litre) Chivas Regal பாட்டில்கள் என்னைத்திற திறவென்று கெஞ்சும். (இதை எழுதிக்கொண்டிருக்கும் போது World Space Radio Shruti சானலில் திருமதி MLV-யின் கச்சேரி வருகிறது. இதோ இன்னொரு உப கதையும் தயார். நான் தில்லி கர் நாடக சங்கீத சபாவின் செயலராக இருந்தபோது, கச்சேரிக்கு அங்கு வரும்போது சில சமயம்MLV என் வீட்டில் தங்குவார். கூடவரும் சுதாரகுநாதன் அப்போது சுதா வெங்கட்ராமன். மிருதங்கத்துக்கு மறைந்த தஞ்சாவூர் கிருஷ்ணமூர்த்தி ராவ். கடம் K.M. வைத்தியநாதன். MLVக்கு காலியான இரண்டரை லிட்டர் Chivas Regal பாட்டில்களின் மீது விருப்பம். அவர் வீட்டில் அதில் நல்லெண்ணெயும் தேங்காயெண்ணெயும் விட்டு வைத்திருப்பாராம். வழுக்காத பிடி, தோசைக்கு நாலு சொட்டு போதுமென்றால் ஐந்தாவது சொட்டு விழாத சிக்கனமான Stopper இவை தான் காரணம். கிருஷ்ணமூர்த்தி ராவைத் தன் தந்தையைப்போலக் கவனித்துக் கொள்வார். எங்களுடன் சேர்ந்து குடிக்க அனுமதிக்க மாட்டார். ஆனால் பாட்டிலில் பாதியளவு இருந்தால், ‘ராயரே, நீங்களும் இன்னிக்கு மணியோட ‘ஜோதி‘யிலே கலந்துக்குங்க. நாம மதராஸ் போகு முன்னே அந்த பாட்டிலைக் காலி பண்ணிக் கழுவிக்குடுங்கோ’ என்று அனுமதி கொடுப்பார். மிகவும் அற்புதமான பெண்மணி.) அப்போதெல்லாம் Duty-free Shopல் ஒரு Teacher’s Scotch Whisky எட்டு டாலர்கள்தான் – டாலருக்கு ரூ.18ஆக இருந்த காலம். 18 டாலருக்கு ஒரு Royal Salute or King of Kings வாங்கி விடலாம். (இப்போது ரூ. 5,000க்கும் மேலே என்று கேள்வி.)
நான் என் கம்பெனியின் C.E.O எனக்குமேல் கம்பெனிக்குச் சொந்தக்காரர் வினோத்President. என்மீது அளவில்லாத பிரியமுடையவர். ஒரு தடவை அவருடன் ரொமேனியா போயிருந்தபோது, எனது சைவ உணவுக்காக புக்காரெஸ்ட் கடைத் தெருக்களில் அலைந்து திரிந்து ரொட்டிகூடக் கிடைக்காததால் அவரும் அசைவ உணவைத் தவிர்த்து என்னோடு பட்டினி கிடந்தவர். இப்போது புக்காரெஸ்டில் நமது மசால்தோசையே கிடைக்கலாம். ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்னால், புக்காரெஸ்டில் நாற்றமடிக்கும் ஒரு துண்டு ரொட்டிக்கும், ஒரு பாக்கெட் பிளேடுக்கும் ஒரு மைல் நீள க்யூ நின்றிருந்த காலம். (அதே சமயம் அங்கு பதவியிலிருந்த ஷேஸெஸ்க்யூ அரண்மனையில் தங்கத்தாலான தேநீர்க் கோப்பைகளும், பாத்ரூம் வாஷ்பேசினும் பார்த்திருக்கிறேன்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைநகரான புடாப்பெஸ்ட், புக்காரெஸ்ட், ப்ராக், பெர்லின் எல்லாமே இதே நிலையில்தான் இருந்தன. அங்கே போனபோதெல்லாம் என்னைப் போன்ற நாக்கு நீளமுள்ள சைவனுக்கு அரைப்பட்டினியும் முக்கால் பட்டினியும்தான்.
என் கம்பெனி பிரஸிடென்ட் வினோத் ஒரு வினோதமான மனிதர். அவரிடம் வேலைக்குச் சேர்ந்ததே சுவாரசியமான விஷயம். அவர் அண்ணனுடன் இருந்த கருத்துவேற்றுமையால், தனியாகத் தொழில் செய்ய விரும்பினார். அதற்கு தொலைபேசிகள் முக்கியம். BSNL வருவதற்குமுந்தி Delhi Telephones, Department of Telecommunications கீழ் இயங்கிவந்தது. இன்றைய காலமல்ல – காலையில் சொன்னால் மாலையில் தொடர்பு வருவதற்கு. OYT முறையில் முழுப்பணத்தையும் கட்டிவிட்டு ஆறுவருடங்கள் O.B.க்காகக் காத்திருக்கவேண்டும். அதற்குப்பிறகு தொடர்பு சாங்ஷன் ஆனாலும் தொலைபேசிக்கருவி கொண்டுவந்து வைக்க இன்னும் ஆறுமாதங்களாகும்.General Category என்றால் தன் வாழ்நாளுக்குள் தொலைபேசித்தொடர்பு கிடைத்து விட்டால், அந்த சந்தோஷத்திலேயே, வீட்டுப் பெரியவர் மண்டையைப் போட்டுவிடுவார். உற்றார் உறவினருக்கு அதைப்பற்றிய தகவல் சொல்ல அந்தப் ஃபோன் உபயோகமாக இருக்கும். வீட்டில் ஃபோன் இருந்தால்தான் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தேவையேயில்லாமல், ‘Note down my Residence Phone Number‘ என்று படுத்துவார்கள். (என் வீட்டுப் போன் General Catetgoryயாக இருந்தாலும், அப்போதைய Deputy Minister for Telecommunications திரு. சிவராஜ்பாட்டீலின் – ஆம், தற்போதைய உள்துறை மந்திரி – ‘தீவிர‘ சிபாரிசினால் இரண்டே வாரங்களில் ‘பேச‘ ஆரம்பித்தது – என் சமூக அந்தஸ்தும் உயர்ந்தது.) வீடு மாற்றினால் பழைய வீட்டிலிருந்து புது வீட்டுக்கு கனெக்ஷன் மாற்றக் குறைந்தது ஒரு வருடமாகும். கையில் ஒன்று பையில் ஒன்று என்று செல்போன்களுடன் சுற்றிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு இவையெல்லாம் சொல்லிப் புரியவைப்பது மெத்தக்கடினம்.
தன் அண்ணன் லண்டனுக்குப் போயிருக்கும் இரு வாரங்களுக்குள் ஆபீசிலிருந்த தொலைபேசிகளிலிருந்து மூன்றை அபேஸ் பண்ணிவிட வேண்டுமென்பது வினோதின் திட்டம். பலரிடம் சொல்லியும் பணம் கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. நாள் நெருங்க நெருங்க என்ன செய்வதென்றறியாமல் குழப்பத்திலிருந்தாராம். அவர் செயலர் மூலம் செய்தியறிந்த நான், ‘என்னால் முடியும் தம்பி’ என்றேன். என்னை அவர் அறைக்குக் கரகரவென்று இழுத்துச் சென்று அவர் முன்னால் நிறுத்தினான். வினோத் என்னிடம் விஷயத்தைச் சொல்லி எத்தனை நாட்களாகும் என்று கேட்டார். தற்போதைய விலாசமும் போன் மாற்றப்பட வேண்டிய இடமும் ஒரே Lodhi Road Telephone Exchange கீழ் வருவதால், இன்று மாலையே விஷயம் முடிந்துவிடுமென்றேன். என்னை ஒரு புழுவைப்போல் பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டு, ‘You have a week’s time‘ என்றார். ஏதோவொரு தைரியத்தில், ‘தேவையில்லை. யாரிடமாவது மூன்று பழுதில்லாத ஃபோன் கருவிகளைக் கொடுத்துப் புதிய விலாசத்துக்கு அனுப்புங்கள். இன்று மாலை அங்கிருந்தே ஷிப்ட் ஆன அதே நம்பரிலிருந்து உங்களைக் கூப்பிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன். அவருக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் என்னை நம்பாமல் வேறுவழியுமில்லை. செயலர் மூலம் ‘செலவுக்கு’ ரூ.5,000 கொண்ட உறையைத் தந்தார். (அப்போது இது பெரிய பணம்). என்ன செய்தேனென்று எனக்கே தெரியாது. அதில் காலணாக்கூடச் செலவழிக்காமல், அன்று மாலை ஏழரை மணிக்கு, ‘Sorry for the delay. மூன்று போன்களும் புதிய இடத்தில் வேலை செய்கிறது. நீங்க டெஸ்ட் பண்ணலாம்’ என்று சொல்லிவிட்டு என் வீட்டுக்குப் புறப்பட்டேன். இது பொய்யல்ல.
அடுத்த வாரத்திலிருந்து முன்பிருந்த பிர்லா சம்பளத்தின் இரு மடங்கில், Chief Executive Officerஆக வேலைக்குப் போக ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் என்னைப் போன்றவர்கள் தில்லியில் ‘குப்பை கொட்ட‘ கீழ்க்கண்ட திறமைகள் இல்லாமல் முடியாது:-
1. Indian Airlines-ல் வீட்டிலிருந்து கொண்டே தொலைபேசியில் யாருக்கும் எந்தநேரத்திலும் எந்த ஊருக்கும் Ticket confirm செய்யும் திறன். இது இந்தியன் ரயில்வேக்கும் பொருந்தும்.
2. தில்லி அசோகா ஹோட்டலில் இல்லையென்ற பேச்சுக்கே இடமில்லாமல், நடு இரவிலும் Telephone மூலம் ஒரு டபிள் ரூம் ஏற்பாடு செய்யும் சாமர்த்தியம்.
3. தில்லி ஏர்போர்ட்டில் எந்த ஹாஜிமஸ்தானையும் சுங்கப்பரிசோதனையில்லாமல் வெளியே அழைத்துவருவது.
4. Tatkaal வராத காலத்தில் 24 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கச்செய்யும் திறமை.
5. நடுநிசியில் ஆயிரம் டாலர் கரன்ஸியோ இரு பாட்டில் ஸ்காச்சோ வரவழைக்கும் மாஜிக்.
6. போலீஸ் கேசில் மாட்டிக் கொண்டவரைப் பூப்போல எந்த கேசும் இல்லாமல் வெளியே கொண்டுவருவது.
7. Delhi Telephones General Managerன் அத்யந்த நட்பு.
தில்லியிலிருக்கும் ஒரு மத்திய மந்திரிக்கே மேலேசொன்ன பல விஷயங்கள் செய்யவராது. எங்களைப் போன்ற பாமரனுக்குத்தான் இதெல்லாம் அத்துப்படி. அதனால் தான் எங்களுக்கும் ஒரு ‘விலை‘யிருந்தது.
சரி, உபகதைகள் போதுமே. விஷயத்துக்கு வருவோம். 1978 ஜனவரி மாதம் நான் ஃபிராங்பர்ட்டிலிருந்த போது, தில்லியிலிருந்து ஒரு போன் செய்தி: ‘நாளை காலை லுஃப்தான்ஸா விமானத்தில் நானும் ஒரு முக்கிய விருந்தாளியும் அங்கு வருகிறோம். ஏர்போர்ட்டுக்கு வா.’ ஏர் போர்ட்டிலிருந்து எங்கள் ஷெராட்டன் ஹோட்டல் ஒரு எஸ்கலேட்டர் தூரம்தான். விருந்தாளியை ‘இவர்தான் காந்திபாய்‘ என்று அறிமுகப்படுத்தினார். அவருக்கு நாங்கள் (ஓசியில்) குடியிருந்த Presidential Suite-ஐ சுற்றிக்காட்டி, ‘நான் எவ்வளவு பெரிய ஆள் பார்த்தாயா?’ என்று சொல்லாமல் சொன்னார். இருநாட்களுக்குப்பிறகு, தில்லியிலிருந்து திரு. மொரார்ஜி தேசாய்Commonwealth Prime Ministers‘ Conference-க்கு லண்டன் போவதாகவும், காந்திபாய் லண்டனில் அவருடன் சேர்ந்துகொள்வதாகவும் பிறகு தெரிந்துகொண்டேன். இருவரும் தனியாக மணிக்கணக்கில் பேசினார்கள் – என்னைத் தவிர்த்து விட்டு. இருநாட்களாகத் தனியாக இருந்த எனக்கு என் நண்பன் பாலு சொன்ன சமஸ்கிருதப்பாடல் நினைவுக்கு வந்தது. நீங்கள் சமஸ்கிருதத்தில் வேதங்களும் கீதையும்தான் இருக்கிறதென்று நினைத்தால் அது உண்மையல்ல. இந்தப்பாடல் கொஞ்சம் பச்சையாக இருக்கும். Adults Only! யோனி சம்போகத்திற்குப்பிறகு, இரு கொட்டைகளும் – விரைகள் – தங்களுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கும் நீளமான ‘பெரியவரிடம்’ முறையிடுவதாக அமைந்த பாடல்: ‘நண்பா! பிறந்ததிலிருந்து நாங்கள் இணைபிரியாமல் உன்னுடன் கூடவே இருக்கிறோம். உனக்கு வலியென்றால் எங்களுக்கு வீக்கம் வருகிறது. ஒரே தூளியில் – கோவணம் – தூங்குகிறோம். ஆனால் ‘சமயம்’ கிடைக்கும்போது, நீ மட்டும் உள்ளே நுழைகிறாய். இன்பத்தை அனுபவிக்கிறாய். நாங்கள் வெளியே இருபக்கமும் தொங்கிக்கொண்டிருக்கிறோம். இது நியாயமா நண்பா?’
நம்மில் பலருக்கும், முக்கியமாக அரசியல்தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் கூட நடமாடும் ‘சம்சா’க்களுக்கும் பல சமயங்களில் இப்படி ‘இது நியாயமா?’ என்று கேட்கத் தூண்டும் சம்பவங்கள் நடந்திருக்கும்.
அடுத்த இருநாட்களும் வினோத் மிகவும் பிஸியாக இருந்தார். என்னிடம் அதிகம் பார்க்கவோ பேசவோ அவருக்கு சமயமில்லை. அடுத்தநாள் எங்கள் Business Partner M.A.N. தலைவர் நீண்ட அமெரிக்கப் பயணத்துக்குப்பிறகு, நாடு திரும்புகிறார். அவரை வரவேற்க சமயமில்லாமல், என்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு திடீரென சுவிட்ஸர்லாந்துக்குப் போனார். எனக்கு என்னவோ நடக்கிறதென்பது புரிந்தது. நான் வினோதிடம் அடிக்கடி சொல்வது: Vinod, In your Office Room, you should write all over the walls in bold letters: A Bird in hand is worth two in the bush அரசனை நம்பி புருஷனைக் கை விடாதே.’ கடைசிவரை அவருக்கு இது தெரிந்திருக்கவில்லையென்பது தான் வருத்தமான விஷயம். இரு தினங்களுக்குப்பிறகு திரு. காந்திபாய் தேசாய் லண்டனுக்குப் பயணமானார். அவருக்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லையென்று நிதர்சனமாகத் தெரிந்தது. எனக்கும் அப்படியே. It was mutual. வினோத் என்னிடம் அடுத்த திங்கட்கிழமை நாமிருவரும் லண்டன் போகிறோம் என்று சொன்னார். எனக்குள்ளேயிருந்து ஏதொவொரு பட்சி சொன்னதால், ‘அந்த ஆள் முழியே சரியில்லே. பணவிஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று மட்டும் சொன்னேன்.
வினோதிடமுள்ள இன்னொரு வினோதமான குணம் கம்பெனி சம்பந்தப்பட்ட எல்லா வெளிநாட்டுப் பயணங்களுக்கும் First Class தான். தனக்குமட்டுமல்ல தன் கம்பெனி அதிகாரிகளுக்கும் அது பொருந்தும். நான் சொல்வேன்: ‘நீங்கள் இரட்டைநாடி சரீரம். உங்களுக்கு First Class தேவைதான். எனக்கு எதற்கு? Economy-யில் புக் பண்ணிவிட்டு மிச்சப்பணத்தைக் கையில் கொடுத்தால் என் பெர்ஸனல் செலவுக்காகுமே.’ அதற்கு அவர் சொல்லும் காரணமும் வினோதமானது. ‘அரே மதராஸி, தங்கக்கலரில் இருக்கும்First Class Tag உன் பெட்டிகளில் இருந்தால் உன்னைப்பற்றி ஒன்றுமே தெரியாத Hotel Bell Boy-யிலிருந்து Reception வரை உனக்குக் கொடுக்கும் மரியாதையே தனி. அந்தTagதான் உன் அடையாளம் உன் அந்தஸ்து’. அதேபோல ஆபீசிலிருந்து ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கு ஒரு Crate Scotch Whisky வந்துவிடும். அடுத்தமாதம் ஒன்றாம் தேதிக்கு முன்னால் அதை ‘பார்ட்டிகள்’ வைத்து முடிக்கவேண்டும். அதனால் தில்லி யமுனையில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, என் வீட்டில் ஸ்காச் ‘தண்ணி’யாக ஓடும்.
லண்டனில் டார்ச்செஸ்டர் ஹோட்டலில் தங்கினோம். பிறகுதான் தெரிந்தது திரு. மொரார்ஜியும் அதே ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார் என்ற விஷயம். குளித்துத் தயாரானதும் காந்திபாய் எங்களை அவர் அறைக்கு அழைத்தார். உள்ளே போனதும், உள் அறையிலிருந்து மொரார்ஜி கும்பிட்டபடி வந்தார். நாங்கள் எழுந்து நின்றோம். ‘Bapu, they are my friends from India‘ என்று எங்களை அறிமுகப்படுத்தினார். ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ‘Excuse me I am a bit busy‘ என்று இன்னொரு கும்பிடு போட்டு விட்டு உள்ளே போய்விட்டார். திரும்ப ஃபிராங்க்ஃபர்ட் வந்தபிறகும் என் தலைவரின் முகம் தொங்கியே இருந்தது. நான் காரணம் கேட்கவில்லை. அவரே சொல்லட்டும் என்று ஒதுங்கிவிட்டேன்.
இந்தியாவுக்குத் திரும்பி இரு வாரங்களிருக்கும். இன்டர்காமில் வினோத் என்னை அவர் ரூமுக்கு அழைத்தார். தன் செக்ரட்டரியிடம் No Calls No Visitors என்று சொல்லிவிட்டு என்னை உட்காரச்சொன்னார். “நான் அப்பவே சொன்னேனே என்று ஆரம்பிக்காதே. காந்திபாய் ‘பொன்முட்டையிடும் வாத்து’, நமது வேலைக்கு உதவுவார் என்று நினைத்தேன். இப்போது ஜெர்மன் DM ஏறுமுகத்திலும் பிரிட்டீஷ் பௌண்ட் மதிப்பு கீழேயும் இருக்கிறது. லண்டனில் எனக்கு ரூ.40 லட்சம் மதிப்புக்கான பௌண்ட் இருக்கிறது. நீ இங்கே எனக்கு DM கரன்ஸி தந்தால் லண்டனில் அதற்கான பௌண்ட் தந்து விடுவேன். (அப்போது Bank of England மட்டுமே பெரியதொகைக்கான மாற்றுக் கரன்ஸி தரமுடியும் ஆனால் இது கறுப்புப்பணம்) என்று சொன்னார். பிரதமரின் மகன் ஏமாற்றமாட்டார், நமக்கும் அவரிடம் பல காரியங்கள் ஆக வேண்டுமென்பதால், உன்னிடம்கூடச் சொல்லாமல் ஜெனீவா போய் DM பணம் எடுத்து அவரிடம் கொடுத்தேன். லண்டனில் கேட்டபோது இந்தியா வந்து தருகிறேன் என்றார். இங்கே வந்து போன் செய்தால், அவரே எடுத்து ‘Kanti Bhai nahin hai‘ என்று பதில் சொல்கிறார். இது என் மனைவிக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும். அவரது unlisted phone number-க்கு நீ போன் பண்ணு” என்று சோகமாகச் சொன்னார். நான் போன் செய்து என் பெயர் சுப்பிரமணியன் என்று சொன்னதும், ‘Yes, Kanti speaking‘ என்றார். உடனே வினோதிடம் கொடுத்தேன். தொலைபேசியில் இருவருக்கும் வார்த்தைகள் தடித்தன. இனிமேல் போன் செய்யாதே என்று சொல்லித் துண்டித்துவிட்டார்.
இருநாட்களுக்குப்பிறகு, நான் வினோத் ரூமில் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, இருவர் உள்ளே வந்தனர். சொல்லிவைத்துச் செய்தாற்போல் இருவரும் ஆறரை அடி உயரம். தினமும் 5 லிட்டர் பால்குடித்து வளர்ந்த ஹரியான்விஜாட். போலீசைச் சேர்ந்தவர்களென்று அவர்களது Haircut காட்டிக்கொடுத்தது. அதிகமாக வளைந்து கும்பிட்டு ‘திரு. வினோத் அவர்களைப் பார்க்கவேண்டும். மாண்புமிகு காந்தி பாய்ஜியிடமிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறோம்.’ என்று பஞ்சாபி கலந்த ஹிந்தியில் ஒரேகுரலில் சொன்னார்கள். என்னைப் பார்த்துக்கொண்டே, ‘தங்களிடம் தனியாகத்தான் பேச வேண்டும். அப்படித்தான் எங்களுக்கு உத்தரவு’ என்று இன்னும் பணிவாகச் சொன்னார்கள். வினோத் ‘பரவாயில்லை, இவர் எனக்கு மிகவும் வேண்டியவர்தான். நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லலாம்’ என்றார். அவர்களில் பெரிய மீசையோடு இருந்தவர் கைகளைக் கட்டிக்கொண்டு மிகப் பணிவாக, ‘மஹோதய், தாங்கள் ஸ்ரீகாந்திபாய் அவர்களை அநாவசியமாகத் தொந்தரவு செய்கிறீர்களாம். அது தங்களுக்கு நல்லதல்ல. ஜெர்மனியில் நடந்ததை அவர் அப்போதே மறந்துவிட்டார். தாங்களும் அப்படியே மறந்துவிடுவதுதான் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அவரைக் கோபப்படுத்தாதீர்கள். அது தங்களுக்கு நல்லதல்ல. நமஸ்தேஜீ’ என்று சுத்த ஹிந்தியில் கூறி, இருவரும் வளைந்து கும்பிட்டு விட்டு திரும்பாமல் அப்படியே பின்னுக்கு நகர்ந்து மறுபடியும் ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போனார்கள். எனக்கு ஏதோ ஹிந்தி சினிமாவில் வரும் காட்சிபோல் இருந்தது.
இதில் நானும் பாதிக்கப்பட்டேன். என் புதுவீட்டுக்கு அட்வான்ஸாக ரூ. 4 லட்சம்தருவதாகச் சொல்லியிருந்த என் பாஸ் இதைக் காரணம் காட்டி கையை விரித்து விட்டார். வேறுபல காரணங்களுக்காகவும் இரு வாரங்களில் நான் அந்தக் கம்பெனியை விட்டுவிட்டேன். நான் கடைசியாகச் சொன்னது:Vinod,Please remember: A Bird in hand is worth two in the Bush.
அரசியல்வாதிகளுக்குப் பிள்ளைப்பாசம் ஒரு தீராத பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது. மொரார்ஜி தேசாயிலிருந்து ஜக்ஜீவன் ராம் வரை, நரசிம்மராவிலிருந்து அர்ஜுன்சிங் அஜீத் ஜோகிவரை, பெற்ற மகன்கள், பதவியிலிருக்கும் தங்கள் தந்தைகளை ஏதாவது பிரச்சினைகளில் மாட்டிவிட்டிருக்கிறார்கள். காந்தியவாதியாக அறியப்பட்ட மொரார்ஜிக்கு தன் மகன் காந்திபாய் நடத்திய பணஊழல்களை விசாரிக்க வைத்தியநாதன் கமிஷனை நியமிக்க வேண்டிவந்தது. அந்த அறிக்கை வெளிவருமுன்னரே அவரது ஜனதா அரசு கவிழ்ந்தது. பாவம், அவர் வாழ்நாளில் 25 பிறந்தநாட்களை மட்டுமே அவரால் கொண்டாட முடிந்தது. காரணம் அவர் பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர். 99 ரன்னில் அவுட்டாகும் டென்டூல்கர் மாதிரி சதம் அடிக்க முடியாமல் ஒரு சோகமான மனிதராக தனது 99-ம் வயதில் காலமானார்.
இதைப்போன்ற, இதைவிடப் பல ‘கனமான’ சம்பவங்கள் என் ஞாபகத்துக்கு வந்தாலும், அவைகளையெல்லாம் நான் எழுத ஆரம்பித்தால், எனக்குப் பிடித்த தில்லியில், எனக்குப் பிடிக்காத திஹார் ஜெயிலில் நிரந்தரமாக எனக்கு ஒரு இடம் நிச்சயம்.

0 comments:

Post a Comment