Friday, January 22, 2016


ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. சமீபத்தில் ஜெய்ப்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கு அங்கு பஞ்சம்பிழைக்க வந்த பங்களாதேஷ் அகதிகள்தான் காரணமென்று அவர்களைச் சிறையிலடைத்து விசாரித்தது ராஜஸ்தான் அரசு. முன்னர் தில்லியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கும் காரணமாக, அங்கிருந்த பங்களாதேஷ் அகதிகள்தான் முதல் இலக்காக இருந்தார்கள். அவர்களுக்குத்தான் முதல் தர்ம அடி. இந்த அகதிகளை பங்களாதேஷுக்குத் திருப்பி அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்து NDTV, CNN-IBNசானல்களில் தினமும் தொடரும் சர்ச்சை. வி.பி.சிங் அரசு இவர்களிடம் பெரிய ஓட்டு வங்கியைக் கண்டதால், தில்லி யமுனையின் அக்கரையில் தங்க இடம் கொடுத்து மின்சாரமும்  ரேஷன் கார்டுகளும் வினியோகித்தது. தற்போது இந்தியாவில் நான்கு மெட்ரோக்களிலும் முக்கிய நகரங்களிலும் பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 50 லட்சமா இல்லை இரண்டு கோடிகளுக்கும் மேலேயா என்று இந்திய அரசு கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறது. இன்றைய கணக்கு நாளை மாறிவிடும். பங்களாதேஷில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சைக்கிள் ரிக் ஷா ஓட்டிக்கொண்டேதான் வெளியே வருகிறதென்று சொல்வார்கள். டாக்காவில் மோத்தி ஜீல் ஏரியாவில் ஓடும் சைக்கிள் ரிக் ஷாக்களைப் பார்க்கும்போது அது உண்மையாகத்தானிருக்கும். இந்தியாவுக்கு வந்தபிறகும், கொல்கத்தாவிலும் தில்லியிலும் மற்ற மாநகரங்களிலும் பெரும்பான்மை பங்களாதேஷ் அகதிகள் சைக்கிள் ரிக் ஷாதான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எழுபதுகளில் ஒருதடவை இந்தியா-பங்களாதேஷ் Benapole எல்லையில் கல்கத்தா STCஅதிகாரிகளிடம் முக்கியமான சில ஆவணங்களைக் கொடுப்பதற்காக இரவு முழுவதும் காத்திருந்தேன். பகல் நேரங்களில் பல தடவைகள் வந்திருக்கிறேன். இருதடவைகள் பங்களாதேஷிலிருந்து பேனாப்போல் பார்டர் தாண்டி கல்கத்தாவுக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால் இரவு தங்கியதில்லை. இந்த எல்லையை இந்தியத்தரப்பில் எல்லைப் பாதுகாப்புப் படையும்  அவர்கள் சார்பில் Bangladesh Rangers-ம் ‘காத்து வந்தார்கள்’. இரவு இரண்டரை மணிக்குக் காரில் தூங்கிக்கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன். திடீரென்று இருபக்கமும் விளக்கெரிந்து கூச்சல் அதிகமாகிறது. பங்களாதேஷ் எல்லைக்குள் 12 நபர்கள் பிடிபடுகிறார்கள். ப.தே. அதிகாரிகள், “ஸூவர் கே பச்சே (பன்றியின் மக்களே), என்ன தைரியமிருந்தால், ‘எங்கள்’ எல்லைக்குள் வருவாய்? மரியாதையாக உன் சொந்த இடத்துக்குப் போய்விடு” என்று சரமாரியாக எல்லோருக்கும் அடி விழுகிறது. நம் பக்கமிருக்கும் BSF ஜவான்களிடம், ‘இந்தா, உன் ஆட்களை நீயே மேய்த்துக்கொள். உள்ளே வந்தால் கொன்றுவிடுவோம்’ என்று 12 பேர்களையும் இந்திய எல்லைக்குள் விரட்டிவிடுகிறார்கள். நம் ஜவான்கள் சிரித்துக்   கொண்டே மௌனமாகிறார்கள். Search Light அணைகிறது. எல்லை அமைதியாகிறது. சுபம். கதை முடிந்தது கத்தரிக்காய் காய்த்தது. ஏதாவது புரிகிறதா? பத்து  நிமிடத்திற்குள் 12 பங்களாதேசி ‘அகதிகள்’ பாஸ்போர்ட் இல்லாமல், விஸா இல்லாமல், விமானச்செலவு இல்லாமல், ஒருசில அடிகள் மட்டுமே வாங்கிக்கொண்டு, இந்திய எல்லைக்குள் ‘இந்தியப்பிரஜைகளாக’ சிரித்துக் கொண்டே நடந்து செல்கிறார்கள். என் கார் டிரைவர், “யே ரோஜ் கா தந்தா ஹைஸாப்” (இது தினமும் நடக்கும் தொழில் தான் சார்) என்று அலட்சியமாகச் சொல்கிறார். டாக்காவிலும், குல்னாவிலும் ஜெஸ்ஸூரிலும் இதற்கென்றே தனி ஏஜெண்ட்களுண்டு. இந்தப் பன்னிரண்டு இந்தியப்பிரஜைகளும் ஏஜெண்டுக்கு தலா 6000 டாக்கா (Dhaka அல்ல 6000 Taka – அவர்கள் நாணயம் – இந்தியமதிப்பில் சுமார் ரூ. 3000 – இது அப்போதைய ரேட்டு) கொடுத்திருப்பார்கள். அந்தத் தரகர் எல்லையிலிருக்கும் Bangaladesh Rangers இடம் கலந்துபேசி இந்த ‘சுப முகூர்த்தத்துக்கான’ நாள், தேதி, நல்ல நேரம் எல்லாம் குறித்துக்கொடுப்பார். அவர் வாங்கும் வரதட்சிணையில் பாதி BSF ஜவான்களுக்கும் மொய் எழுதப்படும். Saare Jahaan Se Achchaa, Hindustaan Hamaara!
டாக்காவில் எனக்கு ஒரு ‘சின்ன வீடு‘ இருக்கிறதென்று என் நண்பர்கள் கேலி செய்யுமளவுக்கு எழுபதுகளில் நான் மாதம் இருமுறையாவது பங்களாதேஷ் போய்வருவேன். எனது நிறுவனம் இந்தியாவில் பங்களாதேஷ் அரசின் ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுபட்டதும் ப. தேஷின் பொருளாதாரம் தரை மட்டத்திலிருந்தது. அவர்கள் Balance of Trade-ஐ சரிசெய்யும் நோக்கில் இந்திய அரசு அங்கிருந்து பெரிய அளவில் செய்தித்தாள் காகிதம் இறக்குமதி செய்யத்தீர்மானித்தது. அதை நான்தான் நிர்வகித்து வந்தேன். அதுசம்பந்தமாக, வங்கத்தந்தை (பொங்க பொந்து) ஷேக் முஜீபுர் ரஹ்மானை அவரது தன்மண்டி ஏரியா வீட்டில் மூன்றுமுறை சந்தித்திருக்கிறேன். இந்த நியூஸ்பிரின்ட் ஏற்றுமதியை அவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானதாகக் கருதினார். (பங்களாதேஷ் காகிதம் மெல்லியதாக இல்லாமல் அட்டைபோல் இருக்கிறதென்று  இந்தியப்பத்திரிகைகள் ஒதுக்கிவந்தன.
உட்கார்ந்திருப்பவர் தான் பாரதி மணியின் நண்பர் திரு. S.I. ஷாஜஹான்

நவீனப்படுத்தமுடியாமல் காலாவதியான பழைய இயந்திரங்களை வைத்துக்கொண்டே, தனிமனிதராக, Khulna Newsprint Mills General Manager திரு. ஷாஜஹானின் – இவர் பெயருக்குப் பின்னால் Paper Technology-யில் உலகப் பல்கலைக் கழகங்களின் எல்லாப்  பட்டங்களும் ஒட்டிக்கொண்டிருக்கும் – ஒருவருட விடாமுயற்சியால், தரம் உயர்த்தப்பட்டு, 1977-ல் சென்னை ‘ஹிந்து‘ பத்திகையில் சோதனை வெள்ளோட்டம் நடந்தது. மணிக்குப் பத்தாயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சடிக்கும் திறமையுள்ள ராட்சத இயந்திரங்களுக்கு நடுவில் ஒரு தடவை கூடக் கிழியாமல் ஈடுகொடுத்து ஓடி சாதனை படைத்தது ப.தே. நியூஸ்பிரின்ட். அதைக் கண்களில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்தார், விஷயம் தெரிந்தவர்களால் Paper Tiger என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு. S.I. ஷாஜஹான். மேலேயிருந்து ஷேக் முஜீபுரும் பார்த்துக் கொண்டிருந்தார் என்று நான் நம்பினேன்). இத்தனை நல்லவரான ஷேக் ஸாஹிப் அரசியல் சதுரங்கத்தில் ஈடுகொடுக்க முடியுமா என்று ஆச்சரியப்படுமளவிற்கு நன்றாகப் பழகுவார்.
1975 ஆகஸ்ட் 15-ம் தேதி. நமது சுதந்திர தினம். எமர்ஜென்ஸி நாட்கள். பயந்து கொண்டு தினமும் காலை ஒன்பதே முக்காலுக்கே தன் சீட்டில் ஆஜராகிவிடும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் அதிகாரிகளும் பாபுக்களும் – எமர்ஜென்ஸியில் நான் கண்ட தில்லி அதிசயங்களில் இதுவும் ஒன்று – தங்கள் வீட்டில் விச்ராந்தியாக இந்திரா காந்தியின் செங் கோட்டைச் சொற்பொழிவை ஆல் இந்தியா ரேடியோவில் கேட்டுக்கொண்டிருந்த நேரம். அன்று தில்லியில் எனக்கு மட்டும்தான் விடுமுறையில்லை. ஆபீசுக்குப்போன சிறிதுநேரத்தில் லண்டனிலிருந்து ஒரு போன் செய்தி: ‘பங்களா தேஷ்  பிரதமர் ஷேக் முஜீபுர் ரஹ்மான் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்’. இது வதந்தியாக இருக்கவேண்டுமென்று நம்பினோம். ஆனால் சிலமணி நேரத்தில் BBC இதை உறுதிசெய்தது. நமது ஆல் இந்தியா ரேடியோ மாலை வரை வாயே திறக்கவில்லை. எமர்ஜென் ஸியல்லவா! செய்தி கேட்ட நான் இதை என் சொந்த இழப்பாகக் கருதி வருந்தினேன். இருவாரங்களுக்கு முன்புதான் அவரை டாக்காவில் சந்தித்துவிட்டு வந்திருந்தேன். நமது State Trading Corporation of India சுட்டிக்காட்டிய குறைகளைக் களைந்து பங்களாதேஷ் நியூஸ்பிரின்டை உலகத்தரத்துக்கு உயர்த்தவேண்டுமென்பதில் அவருக்கிருந்த   முனைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது. விடைபெறும்போது சாமான்யனான என்னை வீட்டு வாசல்வரை வந்து வழியனுப்பிய அவரது மனித நேயத்தை என்னால் மறக்கமுடியாது. அரசியல் வல்லுநர்கள் அவரை ஒரு Weak Prime Minister என்று குறிப்பிடுவார்கள். பங்களாதேஷில் ‘Beedi to 555 Culture‘ என்னும் புதிய தலைமுறையை உருவாக்கியவர். மேற்குப்பாகிஸ்தான் அரசு விடுதலைப்போராட்டத்தின்போது இவரைச்  சிறையிலடைத்தது. சிறையில் அரசியல் கைதியாகவிருந்த தன்னை தலைவராக மதித்து பணிவிடைகள் செய்த சக கைதிகளிடமும், தன்னை நன்றாகக்  கவனித்துக்கொண்ட ஜெயில் அதிகாரிகளிடமும் நன்றியுடையவராக இருந்தார். மற்ற அரசியல் தலைவர்களைப்போலல்லாமல் பதவிக்கு வந்த பிறகும் அவர் அதை மறக்கவில்லை. தன்னைச் சந்திக்க வரும் மாஜி கைதிகளை உட்காரவைத்து பேசிக்கொண்டிருப்பார். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு ஆதாரமாக, கையில் கிடைத்த காகிதத்தில், To C.C.I & E, Dacca. Please allow the bearer to import without Customs Duty one truckload of Blades/Cigaretter/Lactogen/Fabrics/Auto Spare parts/Fans இதில் ஏதாவது ஒன்றை எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, ‘இதை வைத்துப் பிழைத்துக்கொள்’ என்று சொல்வாராம். இந்தப்பழக்கம்   அரசாங்க விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறானதால், அங்கிருந்த Chief Controller of Imports & Exports-க்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. நேற்றுவரை குடிசையில் உட்கார்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்த ‘புதுப்பணக்காரர்‘ இன்றிலிருந்து 555 சிகரெட் மட்டுமே புகைப்பார். இதைத்தான் ‘Beedi to 555 Culture‘ என்று பத்திரிகையாளர்கள் கேலியாகச் சொன்னார்கள். அப்படிப் பணம் சேர்த்த ஒருவரை ஒருமுறை டாக்காவில் சந்தித்தேன்.  தன் பேரக் குழந்தைகளுக்காக வீட்டு வரவேற்பறையில் பல வர்ணங்களில் ஒரு சிறிய நீச்சல் குளம் கட்டி சுற்றிலும் எட்டு ஏர்கண்டிஷனர் பொருத்தியிருந்தார். Vulgar Display of Wealth! அர்த்தராத்திரியில் குடை பிடிக்கும் ரகம். என்னைப் பொறுத்தவரையில்Banga Bandhu was the right person at a wrong place. டாக்காவில் நான் தங்கியிருந்தDacca Intercontinental Hotel-ன் வயதான ரிஸப்ஷன் அதிகாரி ஒருமுறை என்னைச் சற்றுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, You are looking like our Banga Bandhu in his younger days! என்று சொன்னார். என் அப்போதைய தோற்றம் – வகிடில்லாமல் பின்னுக்கு வாரிய முடி, கறுப்புப் பிரேம் போட்ட கண்ணாடி, மீசை – அப்படியிருந்ததாம். தில்லியில் பிறகு சந்தித்த திருமதி ஷேக் ஹஸீனாவும் என்னை முதன்முதல் பார்த்தபோது தன் தந்தையின் சாயல் எனக்கிருப்பதாகச் சொன்னார். எங்களுக்குள் இன்னொரு ஒற்றுமை: நாங்கள் இருவரும் Pipe புகைப்பவர்கள். அவர் இறந்தபிறகு – 1988-ல் தான் நான் ஆரம்பித்தேன்.
ஷேக் ஸாபின் படுகொலைக்குப் பிறகு நான் டாக்கா போனபோது அரசு அனுமதியுடன் அவர் கொலையுண்ட தன்மண்டி ஏரியா வீட்டைப் போய்ப்  பார்த்தேன். சரமாரியாகத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள் எனக்கு ஏனோ ஜாலியன்வாலா பாக்கை ஞாபகமூட்டியது.
இவரைக்கொலை செய்துவிட்டு Chief Martial Law Administrator-ஆக முடிசூடிக் கொண்ட ஜெனரல் ஜியாவுர் ரஹ்மானும் அதிகநாள் நீடிக்கவில்லை. தன்வினை தன்னைச்சுடும் என்பதுபோல் அவருக்கும் அதே கதி நேர்ந்தது. அவரைப் படு கொலை செய்துவிட்டுப் பதவியேற்றார் அடுத்த ஜெனரல் பி.வி. எர்ஷாத் – இவரது மன்மதலீலைகளைப்பற்றி நிறைய தெரியும், எழுதலாம், சுவாரசியமாக இருக்கும். அதன்பின் மக்களாட்சியில் பங்கபந்துவின் மகள் ஷேக் ஹஸீனாவும் பிறகு ஜியாவுர் ரஹ்மான் மனைவி காலிதா ஜியாவும் பிரதமர்களாகப் பதவியேற்றனர். ஷேக் ஹஸீனாவுடன் எனக்கிருந்த நட்பையும், அவரது குணாதிசயங்களைக் குறித்தும் வேறொரு கட்டுரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.
பாகிஸ்தான் பிறந்ததிலிருந்து பெரும்பாலும் ராணுவ ஆட்சியே நடப்பது அதன் சாபக்கேடு. அறுபது வருடங்களுக்குப் பிறகு இனியாவது அங்கே ஜனநாயகம் வேரூன்றுமென நம்புவோம். பெரும்பாலான ஆட்சியில் – ராணுவமானாலும் சரி மக்களாட்சியானாலும் சரி – பங்களாதேஷ் (முந்தைய  கிழக்குப் பாகிஸ்தான்) மாற்றாந்தாய்க் கொடுமையையே அனுபவித்துவந்திருக்கிறது. பாகிஸ்தானில் பெரும்பான்மையான பஞ்சாபி முஸ்லீம்கள் கையில்தான் எப்போதும் அதிகாரம் இருந்தது. அவர்கள் வங்காளி முஸ்லீம்களைக் கிள்ளுக் கீரையாகவே நினைத்திருந்தார்கள். மதம் அவர்களை ஒரு நாடாக இணைக்குமென்ற மாயை, காலப்போக்கில் முற்றிலும் வேறுபட்ட இனக்கலாச்சாரத்தின் வலிமையால் தவிடுபொடியானது. பங்களாதேஷ் முஸ்லீம்கள் தங்களை பாகிஸ்தான் பஞ்சாபி முஸ்லீம்களைவிட கலாச்சார ரீதியாக இந்திய வங்காளிகளோடு சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். மதரீதியில் இணைக்கப்பட்டவர்கள் கலாச்சார ரீதியாகக் கடைசி வரையில் ஒட்டவேயில்லை. நாட்டின் ராணுவம் மக்களாட்சியில் குறுக்கிடுவது பங்களாதேஷுக்கு பாகிஸ்தானிடமிருந்து தொற்றிக்கொண்ட சாபம். அது இன்னும் தொடர்கிறது.
ஒருதடவை நான் புகழ்பெற்ற டாக்கா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்-Deans எனக்காக ஏற்பாடு செய்திருந்த (சைவ) விருந்துக்குப் போயிருந்தேன். பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு வயதான டீன் உணர்ச்சிவயப்பட்டு, ‘இப்போது என் முன்னால் ஜனாப் முகம்மது அலி ஜின்னா தோன்றினால், யாரிடமாவது ஒரு துப்பாக்கி கடன் வாங்கி அவரை மூன்றுமுறை சுட்டிருப்பேன். உங்கள் காந்தியைப்போல் மூன்றுமுறை ‘அல்லாஹோ அக்பர்‘ சொல்லுகிறாரா என்பது தெரிந்திருக்கும். எங்கள் நாட்டின், குழந்தைகளின் சீரழிவுக்கு அவர் தான் காரணம்’ என்று ஆவேசமாகப் பேசினார்.
காரணம் கேட்டதற்கு, ‘பிரிவினைக்குப்பிறகு எங்கள் கிழக்குப் பகுதியில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? பஞ்சாபிகளுக்கு குலாம் ஆக இருந்தோம். இந்த முப்பது வருடங்களில் உங்கள் இந்தியாவில் எவ்வளவு முன்னேற்றம்? உணவு, உரம், இரும்பு, சிமென்ட், மின்சாரம், ரோடுகள், கல்வி, சுகாதாரம் எதிலும் முன்னணியிலிருக்கிறீர்கள்.  நீங்கள் போகும் கார், ஏறும் லிப்ட், உழும் டிராக்டர்கள், பயணம் செய்யும் ரயில் எல்லாமே  நீங்கள் இந்தியாவில் தயாரித்தது. இங்கே தோலையும் சோப்பையும் தவிர வேறு என்ன தயாரிக்கிறோம்? இந்தப் பாழாய்ப்போன பார்ட்டிஷன் வராமலிருந்தால், உங்கள் முன்னேற்றத்தில் பாதியாவது எங்களுக்கும் வந்திருக்காதா? உங்களைவிட முப்பது வருடம் பின்னோக்கி இருக்கிறோம். இதற்கெல்லாம் ஜின்னாதான் காரணம்’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். அவருக்காக நான் அனுதாபப்பட்டாலும், எனது அடி ‘இந்திய’ மனம் அவர் புகழ்ச்சி வார்த்தைகளில் சந்தோஷப்பட்டதை மறுக்கமுடியாது. மற்ற நாட்டுப்பயணங்களை விட பங்களாதேஷ் போனால்தான் நம் ‘இந்தியப்பெருமிதம்’ தலைநிமிர்ந்து நிற்கும்.
பங்களாதேஷ் ராணுவ ஆட்சியில் மேல்தட்டு கர்னல் பிரிகேடியர்களுக்குத் தலையில் ஒரு கொம்பு இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். எல்லா இடத்திலும் அவர்களுக்குத்தான் முதலிடம் நம் நாட்டு ஆளும்கட்சி அரசியல்வாதிகளைப்போல. எங்கு போனாலும் அவர் களுக்கே முதல் பரிவட்டம். ஏர்போர்ட்டில் உட்காருமிடம் காலியில்லையென்றால் யாராவது எழுந்து அவர்களுக்கு நாற்காலி கொடுத்தாகவேண்டும். டாக்காவிலிருந்து ஜெஸ்ஸூர் போக விமானத்தில் இடமில்லையென்றால் முன்னரே இடப்பதிவு உறுதிசெய்யப்பட்ட பயணிகளை இறக்கிவிட்டு, இவர்கள் ஏறிக்கொள்வார்கள். ஒருதடவை ஜெஸ்ஸூரிலிருந்து டாக்கா வரும்போது ராணுவ அதிகாரிகள் ஏறியதால் எனது உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கு இடமில்லையென்று கை விரித்துவிட்டார்கள். விமானம் Propellerஉள்ள சிறிய Super Constellation வகை. பிறகு Bangladesh Biman ஆபீசில் சிறிய ‘பேயாட்டம்’ போட்டு, அன்றையதினமே டாக்காவிலிருந்து தில்லி போக ‘தாய்’ விமானத்தில்டிக்கெட் பதிவாகியிருக்கிறதென்று கூச்சலிட்டேன். தொந்தரவு தாளாமல், மற்றொரு ‘ஏமாந்தவர்’ இறக்கிவிடப்பட்டு, எனக்கு இருக்கை தந்தார்கள். ராணுவ அதிகாரிகளுக்கு அவ்வளவு மவுசு அங்கே.
ஒரு படத்தில் பழம் நாடகநடிகர் வீராச்சாமி அடிக்கடி ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்று சொல்வார். அதேபோல 1971-ல் பங்களாதேஷ் பிறந்ததிலிருந்து எண்பதுவரை பல பல முறை அங்கே போய்வந்துகொண்டிருந்தேன். எனக்கு ஒரு உண்மை இதுவரை தெரியவில்லை. பாகிஸ்தானிடமிருந்து அவர்களுக்கு, இந்தியா ஒரு போர் நடத்தி, நமது பல ஜவான்களின் உயிர்ப்பலியில் அவர்களுக்கான தனிநாட்டை மீட்டுக்கொடுத்தோம். பிறகு அவர்கள் நாட்டுப்பொருளாதாரத்தை மேன்படுத்துவதில் இந்திரா காந்தி தனிப்பட்ட சிரத்தை காட்டிவந்தார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகளும் பங்களாதேஷுக்கு அளவுக்குமீறியே பொருளாதார உதவிகளைச்செய்து வருகின்றன. கடக் வாஸ்லா IMA உட்பட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் பங்களாதேஷ் மாணவர்களுக்கு முன்னுரிமை உண்டு. அவர்கள் ராணுவத்தளபதி இந்தியா வந்தால், ராஜமரியாதை செய்து போகும் போது ஆறு சிறந்த பொலி குதிரைகளையும் கொடுத்தனுப்புகிறோம். மாறாக பாகிஸ்தான் அவர்களை ஒரு கொத்தடிமை போலவே நடத்திவந்திருக்கிறது. இருந்தாலும் வங்கதேசத்தில் ஆட்சிக்கு வந்த அரசுகள் – ராணுவமானாலும் மக்களாட்சியானாலும் – இந்தியாவைச் சீண்டுவதிலேயே சுகம் கண்டிருக்கின்றன.ஷேக் முஜீபுர் ரஹ்மானும், அவர் மகள்ஷேக் ஹஸீனாவும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. கொஞ்சமாவது நன்றியுணர்ச்சி வேண்டாமா? அதற்காக நாயைப்போல் வாலையாட்ட வேண்டாம். மனதில் சிறிது ஈரத்தை எதிர் பார்ப்பது தவறா? அவ்வப்போது ‘தம்மாத்துண்டு’Bangladesh Rangers நம் எல்லைகளில் சீண்டிப்பார்க்கிறார்கள். நம்மை ஒரு Big Bad Brother என்றவகையிலேயே பார்க்கிறார்கள். காரணம் என்ன? பாகிஸ்தானும் பங்களாதேஷும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் என்னும் காரணத்தை நான் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. டாக்காவில் ஒருமுறை அரிதாகத் தென்படும் ஒரு ஆட்டோ ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்து மீட்டரைப் போடச் சொன்னேன். ‘வோ சலேகா நஹீன் ஸாப்’ என்றார் ஆட்டோக்காரர். அதை என்னால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் கொசுறாக, ‘வோ இந்தியா ஸே ஆயா ஹை‘ இந்தியாவிலிருந்து வந்தது அதனால் ஓடாது’ என்பதுபோல் சொல்லுவார். பதிலுக்கு நான், ‘நானும் ஒரு இந்தியன்தான். என் கைபட்டதும் எப்படி ஓடுகிறது பார்‘ என்று, அவர்களுக்கு இந்தியப்பொருளாதார உதவியின்கீழ் இலவசமாகக் கொடுக்கப்பட்ட புத்தம்புதியபஜாஜ் ஆட்டோவின் புத்தம்புதிய மீட்டரைப் போடுவேன். கீழ்மட்ட மக்களிடமும் இந்தக் காழ்ப்புணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. இந்த ஜூன் மாதம் 14-ம் தேதி பங்களூரில் என் மகள் வீட்டிலிருந்து இந்தக் கட்டுரையை என் கம்ப்யூட்டரில் எழுதிக்கொண்டிருந்தேன். அன்று டாக்காவில் இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் சல்மான் பட்டின் கேச்சை நமது இர்பான் பட்டான்(பதான் அல்ல) தவறவிட்டபோதும், கடைசியில் பாகிஸ்தான் நம்மைத் தோற்கடித்தபோதும், மைதானமே கரகோஷத்தால் அதிர்ந்தது. பார்த்துக்கொண்டிருந்த என் மருமகன் ‘பாகிஸ்தான் இந்தியாவைத் தோற்கடிப்பதில், பங்களாதேஷுக்கு ஏன் இத்தனை கொண்டாட்டம்?’ என்று என்னைக் கேட்டார். ஏன்? எனக்குத் தெரியவில்லை. அரசியல் வல்லுநர்கள்தான் காரணம் சொல்லவேண்டும்.
நாற்பத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தவருடம் கொல்கத்தா – டாக்கா பயணிகள் ரயில் Maitree Express கோலாகலமாக விடப்பட்டது. 1965 பாகிஸ்தான் போருக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்டது. இது பயணிகள் ரயில். அதனால் பங்களாதேஷ் போனால் முழுசாக அப்படியே திரும்பிவிடும். ஆனால் நமது சரக்கு ரயில் முன்பு பங்களாதேஷ் போனால், கல்கத்தாவிலிருக்கும் Eastern Railway General Manager-க்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். இந்தியக் கச்சாப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 20 வாகன்கள்பேனாப்போல் பார்டர் தாண்டி பங்களாதேஷ் போனால் அதில் பத்துக்கூடத் திரும்பிவாரா. எழுபதுகளில் இதுதான் திரும்பத்திரும்ப நிகழ்ந்தது. ஒருதடவை எங்கள் குல்னா கெஸ்ட் ஹௌஸிலிருந்து ஜன்னல் வழியாக பின்பக்கம் போகும் பங்களாதேஷ் சரக்கு ரயிலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் இஞ்சின் மட்டும் அவர்களது. பின்னால் ஓடிய 20 வாகன்களில் பதினொன்று நமது ‘பாரதீய ரேல்‘ காசு கொடுத்து வாங்கியவை. E.R., N.E., N.R., W.R., C.R. என்று பேதமின்றி நமது இந்திய ரயில்வேயின் வாகன்கள். அதில் ஒன்று நம் S.R. (Southern Railway) வாகன். இது எப்படி குல்னா போய்ச்சேர்ந்ததென்று ஆச்சரியமாக இருந்தது. ஒருதடவை அவர்கள் எல்லைக்குள் போய்விட்டால் அவைகளைத் தன் சொந்தச் சொத்து போல் நினைத்து உபயோகித்துக்கொள்வார்கள். அவர்கள் மொத்த சரக்குவாகன்களில் கால்வாசி இங்கிருந்து போனவை. நமது ரயில்வே போர்டு இந்தப் பிரச்சினையைப் பலதடவை எழுப்பியும் பலனொன்றும்  காணவில்லை.
எனக்குத் தேவையேயில்லாமல் பார்வதிபுரம் சின்னவயது சம்பவம் ஞாபகத்துக்கு வரும். எங்கள் பக்கத்துவீட்டு மாமி வாரத்துக்கொருமுறை ஒரு   பெரிய கரண்டியைக் கொண்டுவருவாள். ‘சோமு மாமி, இதிலே கொஞ்சம் காப்பிப் பொடி தரேளா? இப்போதான் பாத்தேன். டப்பா காலியா இருக்கு.’ இரண்டுநாள் கழித்து அதே கரண்டி சீனிக்காக வரும் – அப்போது சீனிக்கு ரேஷன். சிரித்துக்கொண்டே கொடுத்தனுப்பிய பிறகு, ‘இதுவரை இந்தமாசத்திலே நாலு தடவை காப்பிப்பொடி, மூணுதரம் சீனி. கரண்டியா அது? பாதாளக் கரண்டி. எங்கிருந்துதான் கெடச்சிதோ. ஒழக்குப் பொடி கொள்ளும். நம்பாத்து படி எறங்கறோதே அவ இதை மறந்துருவா. எனக்குத்தான் ஓர்மையிருக்கும்’ என்று அலுத்துக்கொள்வாள்  என் அம்மா.   நீ ஏன் கேட்கவில்லையென்றால், ‘இது ஸ்டேன்ஸ் காப்பி, அவ அய்யனார் காப்பியைத் தருவா. இதையெல்லாம் கேக்கப் படாதுரா, பக்கத்தாத்திலே இருக்கா . . .பாவம் . . . இல்லாமை தானே காரணம்.’ என்று விளக்கமும் சொல்வாள். இரு வீடுகளுக்குப் பொருந்துவது இரு நாடுகளுக்குப் பொருந்தாதா என்ன? இந்திய ரயில்வே போர்டுக்கும் என் அம்மாவின் விளக்கம் சரியாகப்பட்டிருக்க வேண்டும்.
டாக்காவிலிருந்து குல்னா வரைகாரில் பிரயாணம் செய்வது ஒரு நிறைவான அனுபவம். இற்றுப்போன பழையபனியனின் கையகலத்துண்டு போலிருக்கும் பங்களாதேஷில் 29 நதிகள் ஓடுகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கும். இந்நதிகளில் லாரி லாரியாக மணல் அள்ள முடியாது. எப்போதும் தண்ணீர் ஓடும். அவைகளில் பத்மா (அன்பாக பொத்தோ என்று அழைப்பார்கள்) மேக்னா, தீஸ்தா, புரிகங்கா, கர்ணாபுலி, பைரவ் போன்றவை முக்கியமானவை. பத்மா மற்றும் இன்னும் பெயர் தெரியாத நதிகளைக் கடக்கும்போது, வழியில் தண்ணீருக்கு பயந்து,  நம் கார் மூன்று நான்குமுறை படகில் (Barge) ஏறிவிடும். அக்கரை தெரியாத பெரிய நதிகள். அதி காலையில் வழிந்தோடும் பாதைக்கு இருபுறமும், பல இடங்களில் மக்கள் கையில் ஒரு பாத்திரத்தோடு வட்டமாகக் கூடியிருப்பார்கள். கூர்ந்து கவனித்தால், நடுவில் ஒரு பசு கழுத்தறுபட்ட நிலையில் துடித்துக்கொண்டிருக்கும். ஹலால் முறையில் அதன் ரத்தம் முற்றிலும் வெளியேறியபின்தான் அதை வெட்டிக் கூறு போடுவார்கள். அதற்காகத்தான் எல்லோர் கையிலும் பாத்திரம். இந்தியாவில் வளர்ந்த நமக்கு இது ஒரு கோரமான காட்சியாக இருக்கும். வழியெல்லாம் இந்தக் காட்சிகளை நிறைய பார்க்கலாம். அதேபோல வெள்ளிக்கிழமை காலை வேளைகளில்  நண்பர்கள்  வீட்டுக்குப் பார்க்கப் போனால், தோட்டத்தில் இரண்டுமூன்று கோழிகள் கழுத்தறுபட்ட நிலையில் துடிதுடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ‘சைவ‘ மனதை என்னவோ செய்யும்.
பத்மா. மேக்னா போன்ற நதிகளில் ஹீல்ஸா என்னும் ஒருவகை மீன் கிடைக்கிறது. இது Fresh Water Fishவகை. வங்காளிகளுக்கு இது அமிர்தமாம். இரு வங்காளிகள்  இதைப்பற்றிப் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். இதற்காகத் தன் சொத்தில் பாதியைத்தரத் தயங்கமாட்டார்களாம். அதன் பெருமைகளைச் சொல்லி, ‘ஐயோ நாம்Vegetarian-ஆக இருந்துவிட்டோமே’ என்று என்னை ஏங்கவைத்திருக்கிறார்கள். It is a rare delicacy for them. இது நமது மேற்கு வங்காளத்தில் கிடைக்காது. பங்களாதேஷ் நதிகளில் மட்டும்தான் கிடைக்குமாம். சமீபத்தில் CNN-IBN-ல் ஒரு செய்தித் தொகுப்பு பார்த்தேன். இப்போது ஹீல்ஸா மீன் பங்களாதேஷிலிருந்து திருட்டுத்தனமாகக் கடத்திவரப்பட்டு கொல்கத்தா மீன் சந்தையில் கிலோ ரூ. 900-க்கு விற்கப்படுகிறதாம். ப.தே. காகிதத்தை இந்தியாவில் பிரபலப்படுத்தும் நோக்கில் கல்கத்தா ‘அம்ருத் பஜார் பத்ரிகா’ குழுவின் தலைவர் திரு. தருண் காந்தி கோஷ் அவர்களை, சந்திக்கப்போயிருந்தோம். இவர் நம் ராம்நாத் கோயங்காவைப்போல இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர். அவரைவிட வயதானவர். அவருடன் பேசிக்கொண்டிருந்த ஒன்றரைமணி நேரத்தில், திரு. ஷாஜஹானுடன் ஒரு மணி 25 நிமிட  நேரம் சுத்த பெங்காலியில் ஹீல்ஸா மகிமை பற்றியே பேசிக் கொண்டிருந்தார். சின்ன வயதில் டாக்காவில் இருந்தபோது அதை விரும்பிச் சாப்பிட்டதையும், அதன் ருசிக்கு உலகத்தில் எதையும் இழக்கத் தயாரென்றும், கல்கத்தா வந்தபின்னரும் அதன் ருசி தன் நாக்கிலிருந்து மறையவில்லையென்றும் துதி பாடிவிட்டு, கடைசி ஐந்து நிமிடங்களில், மொத்த 10,000 டன் நியூஸ்பிரின்டையும் அம்ருத பஜார் குரூப்பே வாங்கிக் கொள்ளுமென்றும் சொல்லிக் கை குலுக்கி விடைகொடுத்தார். அதன்பிறகு எப்போது பங்களாதேஷிலிருந்து நேராக கல்கத்தா வந்தாலும், அவருக்குக் கொடுக்க என்னிடம் ஹீல்ஸாமீன் பாக்கெட் இருக்கும். தில்லியில் ரகசியமாக இந்திரா காந்தியால் வரவழைக்கப்பட்டு, ‘Z’ பிரிவுப் பாதுகாப்புடன் பண்டாராரோடு பகுதியில் ‘அக்ஞாத வாசம்’ இருந்த ஷேக் ஹஸீனாவுக்கும் பல தடவை கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறேன்.
இந்தியாவுக்கு நியூஸ்பிரின்ட் அனுப்பும் Khulna Newsprint Mills பங்களாதேஷ் அரசுக்குச் சொந்தமானது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  கொண்ட ஒரு சிறிய நகரம். (மில்லுக்குச் சொந்தமான இரு கப்பல்களும் பல Barges-ம் உண்டு). அதற்குள்ளேயே ஒரு சின்ன ஸ்டேடியம், நீச்சல் குளம், கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், வாலிபால் விளையாடத் தனித்தனி மைதானங்கள், கிளப்பில் பில்லியார்ட்ஸ், ஸ்னூக்கர், டேபிள் டென்னிஸ் விளையாடத் தனி இடங்கள். அந்தப் பரந்த சாம்ராஜ்யத்துக்கு ஜெனரல் மானேஜர் ஷாஜஹான்தான் முடி சூடாத மன்னர். ஊருக்குள்ளே எங்கே சென்றாலும் அவருக்கு இதே ராஜமரியாதை இருந்தது. அது தானாகவே வந்தது. எனக்கு மிக நெருங்கிய நண்பர். விடு முறைகளில் குல்னா நகரைச் சுற்றிப் பார்க்க அவர் காரில் அழைத்துப் போவார். வழியில் காணும் இளநீர்க்காரரிடம் இளநீர் குடித்துவிட்டு காசைக் கொடுத்தால் வாங்க மறுப்பார். ‘மரியாதை உன் மனதிலிருந்தால் போதும். இது உன் தொழில்’ என்று சொல்லி கையில் பணத்தைத் திணித்துவிட்டு வருவார். குல்னா நகருக்கே   ராஜாவாக இருந்தார். மாலைவேளைகளில் கிளப்பில் எனக்கு பில்லியார்ட்ஸ் கற்றுக் கொடுப்பார். என்னைவிடக் குள்ளமான அவர் எம்பி எம்பி  லாவகமாகப் பந்துகளை அடிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் கீர்த்தியில் பெரியவர். கனடாவிலிருந்தும், ஸ்வீடனிலிருந்தும் நியூஸ்பிரின்ட் வல்லுநர்கள் இவரிடம் சந்தேகம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள். அவருக்கு சுத்தமாக குடிப்பழக்கம் இல்லை என்றபோதும் என் பழக்கத்தை சகித்துக்கொண்டு இரண்டும் மணி நேரம் என்னோடு இருப்பார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது எங்கள் ‘எல்லை’ மீறிய நட்பு.
நான் தங்கும் K.N.M. கெஸ்ட் ஹௌஸ் சரித்திரப்பிரசித்தி பெற்றது. நான் வழக்கமாகத் தங்கும் Deluxe ரூமில்தான் 1971 போரின் போது ஜெஸ் ஸூர் வழி வந்த இந்தியப்படையின் தளபதி Lt. Gen. Jagjit Singh Aurora ஒருவார காலம் தங்கியிருந்தாராம். அதைப் போற்றும் வகையில் அறையின் வெளியே ஒரு பெயர்க்கல் நாட்டியிருக்கிறார்கள். (இங்கே ஒரு சின்ன கொசுறுச்செய்தி: 1971-ம் வருடம் டாக்கா மைதானத்தில் நமது வெற்றித் தளபதி Lt. Gen. J.S. Aurora-வும் தோல்வியடைந்த பாகிஸ்தான் தரப்பில் Lt. Gen. AAK Niazi-யும் Surrender Declaration-ல் கையெழுத்திடும் பிரபல புகைப்படத்தை நாமெல்லாம் ஒருதடவையாவது பத்திரிகைகளிலும் டிவியிலும் பார்த்திருப்போம். அதில் பின்னால் வெள்ளைச் சீருடையில் ஒரு தமிழரும் இருக்கிறாரென்பது சிலருக்கே தெரியும். போரின்போது வங்காளவிரிகுடாவில் பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்த கமாண்டர் என். கிருஷ்ணன்  தான் அவர். பிறகு Admiral ஆகப் பதவியேற்றம் பெற்றவர். எங்கள் பார்வதிபுரத்தையடுத்த கிருஷ்ணன்கோவில்காரர்). எனக்கு தில்லியில் நண்பரானவர்.
அங்கிருக்கும் வயதான சமையல்காரர் ஹபீப்தான் எனது ‘சின்ன வீடு’! நான் படிப்படியாகச் சொல்லிக்கொடுத்த தமிழ்நாட்டு சமையல் ரெசிப்பியை விரைவில் கற்றுக்கொண்டு என் வாய்க்கு ருசியாகச் சாம்பாரும் ரசமும் அவியலும் பொரியலும் சமைத்து அன்போடு பரிமாறுவார். அவை ஷாஜஹான் பங்களாவுக்கும் போகும். ஷாஜஹான் அசைவராக இருந்து சைவராக மாறியவர். ஹபீப் நாற்பதுகளில் டார்ஜிலிங்கில் ஓர் ஆங்கில பிரிகேடியரிடம் சமையல்காரராக வேலை பார்த்தவர். திரு ஷாஜஹானும் ஹபீபும் நான் ஒரு சைவனாகத் தொடர்ந்திருக்க அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வார்கள். திருமதி ஷாஜஹான் வீட்டிலிருந்து தினமும் காலையில் கறந்த பசுவின் பால் கொடுத்துவிடுவார். தில்லி ரீகலில் அப்போது ஓடிக்கொண்டிருந்த ராஜ் கபூரின் ‘சத்யம் சிவம் சுந்தரம்‘ படத்தை ஷாஜஹான் தம்பதியர் ஐந்தாறு தரமாவது பார்த்திருப்பார்கள். அதன் பாடல்கள் கொண்ட L.P. ரிக்கார்டுகளைகொண்டுபோய்க் கொடுத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர்கள் வீட்டில் காலையிலிருந்து மாலை வரை அந்த ஒரே ரிக்கார்டுதான் ஓடிக்கொண்டிருக்கும். எப்போதோ ஒருதடவை அஜ்மீர் பயணத்தின் போது எனக்குப் பலாப்பழம் பிடிக்கும் என்று சொன்னதை ஞாபகத்தில் வைத்திருந்து, பல மாதங்களுக்குப்பிறகு பலாப்பழ சீஸனில், நான் தில்லி திரும்பும் போது, அந்த அம்மையார் எனக்குத் தெரியாமல், அவர்கள் தோட்டத்தில் விளைந்த ஒரு பலாப்பழத்தை விமானத்தில் கொண்டுபோக வசதியாக பிடி வைத்து அழகாக பேக் பண்ணி கார் டிரைவரிடம் கொடுத்தனுப்பியதை என்னால் மறக்கமுடியாது. அந்த நல்ல மனிதர்கள் இப்போது எப்படி இருக்கிறார்களோ? முப்பது வருடங்களாக எனக்குத் தொடர்பேயில்லை. ஆனாலும் என்னை மறந்திருக்க மாட்டார்கள்.
நான் என் மனைவியுடன் போயிருந்த சமயம், எங்களுக்காகவே தனது மில்லுக்குத் சொந்தமான கப்பலில் Royal Bengal Tigers-ன் உறைவிடமான Sundar Bans எனப்படும் சுந்தரவனத்தைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். ஐந்து நாட்கள் கப்பலிலேயே கழித்தது சுகமான அனுபவம். உலகப்புகழ் பெற்ற Sundar Bans காட்டை முழுவதுமாக -இந்தியத்தரப்பிலிருந்தும் பங்களாதேஷ் பக்கத்திலிருந்தும் – பார்த்த வெகுசில இந்தியர்களுள் நானும் ஒருவன். இதைப்பற்றியும் விரிவாக எழுத ஆசை. ஆனால் கட்டுரை ஏற்கனவே பெரிதாக வளர்கிறது. உயிர்மை ஆசிரியர் என் மீது வைத்திருக்கும் மரியாதையை நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
திரு ஷாஜஹான் கல்கத்தாவுக்கு வந்தால், தன் பிள்ளைப்பிராயத்தை நினைவு கூர்வார். தனது பத்தாவது வயதுவரை வாழ்ந்துவந்த கல்கத்தாவை விட்டு பாகிஸ்தான் பிரிவினையின்போது டாக்கா போனவர். தன் இளவயது நினைவுகளை இங்கேயே விட்டுப் போனவர். என்னிடமிருந்த பல கெட்ட பழக்கங்கள் இல்லாதவர். மாலை வேளைகளில் கல்கத்தா கிராண்ட் ஹோட்டலிலிருந்து Tram பிடித்து அவர் சிறுவயதில் வாழ்ந்த வீட்டையும் பழகிய தெருக்களையும், இளமைக்கால நண்பர்களையும் மனதில் இருத்தி சுற்றியுள்ள சந்தடி இரைச்சலில் இருந்து விடுபட்டு, பழைய ஞாபகங்களில் மூழ்கி மணிக்கணக்கில் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருப்பார். ஈரமான கண்களைத் துடைத்துக்கொண்டு ‘மணி ஸாப், போகலாம்’ என்பார். ஹோட்டல் திரும்பும் வரை காரில் இருவரும் அமைதி காப்போம். எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டதில்லையென்றாலும், அவர் அடி மனத்தின் வலியை என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது.
பலருக்கு பங்களாதேஷில் தமிழ் பேசும் பல தமிழ்க்குடும்பங்கள் வாழ்கின்றன என்கிற செய்தி தெரிந்திருக்காது. அவர்களைப் பார்க்கும் வரை எனக்கும் தெரியாது. இதைப்பற்றி விரிவாக ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். ஆனால் இதை உங்களுக்கும் சொல்லவேண்டும். இவர்கள் நாற்பதுகளில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன்பே நாகப்பட்டினம், கீழக்கரை, கிருஷ்ணாபுரம், ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து தங்கள் குலத்தொழிலான வாசனைத்திரவியம்/அத்தர் வாங்கி விற்க அப்போதைய கிழக்கு வங்காளத்துக்குப் போனவர்கள். அனைவருமே இஸ்லாமிய மதத்தைச்சார்ந்தவர்கள். அவர்களைக் கேட்காமலேயே இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து நாடு துண்டாடப்பட்டது. அவர்களுக்குத் தெரியாமலே அவர்கள் வேற்று நாட்டவர் ஆக்கப்பட்டனர். தங்கள் சொந்தமண்ணுக்குத் திரும்ப, உற்றார் உறவினர்களைப் பார்க்க அவர்களுக்கு பாஸ்போர்ட்/விஸா தேவைப்பட்டது. அதிகப் படிப்பறிவில்லாதவர்கள். தங்கள் விதியை நொந்து கொண்டு அறுபது வருடங்களுக்கும் மேலாகத் தாய்நாட்டின் தொடர்பேயில்லாமல் வாழ்ந்துவருபவர்கள். (இப்போதிருக்கும் டி.வி. ஊடக விஸ்தரிப்பு எழுபதுகளில் வந்திருந்தால், தமிழ்ச்சானல் ஒன்றில் அரசியோ உரசியோ பார்த்துக்கொண்டு கண்ணீர் மல்க  மூக்கைச் சிந்திக்கொண்டிருப்பார்கள்.) நான் அங்கிருக்கும்போது தில்லி ஆபீசுக்கு ஏதாவது தகவல் அனுப்பவேண்டுமென்றால், லண்டனுக்குச் சொல்லி, அவர்கள் தில்லியைத் தொடர்பு கொள்ளுவார்கள். நான் பங்களாதேஷ் போய் வந்துகொண்டிருந்த ஏழெட்டு வருடங்களில் அங்கே போனவுடன் ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கும் என் ஆபீசுக்கும் ட்ரங்க் கால் புக் பண்ணுவேன். ஒரு தடவைகூட கனெக்ஷன் கிடைத்து பேசியதில்லை. மூன்றுநாள் காத்திருந்து அவர்களே கான்ஸல் செய்துவிடுவார்கள். தில்லியிலிருக்கும் பங்களாதேஷ் ஹை கமிஷனருடன் நல்ல பரிச்சயமிருந்ததால், நான் போகும்போதெல்லாம் அவர்கள் Foreign Office-க்கு அனுப்ப வேண்டிய அவசரக்கடிதங்களை என்னிடம் கொடுத்தனுப்புவார்கள். இல்லையென்றால் Diplomatic Bag போய்ச்சேர பத்துநாட்கள் ஆகும். நான் அங்கிருக்கும் போது இந்தியாவில் கிரிக்கெட் டெஸ்ட் மேச் நடந்தால், ஷாஜஹானிடம் கடன் வாங்கிய டிரான்ஸிஸ்டர் ரேடியோ, எல்லைக்கு அப்பாலிருந்து வரும் கல்கத்தா ஆகாசவாணியின் மீடியம் வேவ் அலைகளை எட்டிப்பிடிக்க முடியாமல் கரகர வென்று அரற்றிக்கொண்டிருக்கும்.
எந்த வெளிநாட்டுக்குப் போனாலும் அங்குள்ள காய்கறிச்சந்தைக்குப் போகாமலிருக்க மாட்டேன். சந்தையில் அந்த ஊர் பச்சைக்காய்கறிகள் குவியலாக அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்க மனதுக்கு நிறைவாகவிருக்கும். எனக்கு சமையலில் உள்ள ஆர்வமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒருநாள் குல்னா மார்க்கெட்டில் போய்க்கொண்டிருந்த போது, ‘எலே செய்யிது. உன்னை வாப்பா கூப்பிடறார்டா’ என்று தமிழ் தேனாகக் காதில் பாய்ந்தது. பக்கத்தில் போய் விசாரித்தேன். நான் தமிழில் பேசினது அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம். பக்கத்துக் கடைகளிலிருந்து வந்து என்னை மொய்த்துக்கொண்டார்கள். அவர்கள் கடைகளில் சின்னதும் பெரியதுமான பாட்டில்களில் பச்சை மஞ்சள் சிவப்பு நீலம் என்று வர்ணவர்ணமாக வாசனைத் திரவியங்கள் அத்தர் வகைகள். தெருவே மணத்தது. ஐந்து நிமிடத்திற்குள் ஐந்துபேர் கையில் டீ கிளாசுடன் வந்து குடிக்கும்படி வற்புறுத்தினார்கள். குல்னாவில் மட்டுமல்ல, டாக்கா, மைமென்சிங், சிட்டகாங், ஸில்ஹட், ராஜ்ஷாஹி  போன்ற இடங்களிலும் தலா பத்து பதினைந்து தமிழ்க் குடும்பங்கள் வாழ்வதாகவும் சொன்னார்கள். இவர்களில் மூத்த தலைமுறையினருக்கு மட்டும் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும். இளையவர்கள் நல்ல பேச்சுத்தமிழைத் தவறவிடாமல் காப்பாற்றிவருகிறார்கள். இவர்களைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டின்/இந்தியாவின் காலக்கடிகாரம் 1944-ம் ஆண்டிலேயே நின்றுவிட்டிருந்தது. அவர்களுக்கு அசோகா பாக்கு தெரியும் ஆனால் ரஷிக் லால்/ஏஆர்ஆர் சீவல் தெரியாது. த.பி. சொக்கலால் ராம்சேட் பீடி தெரியும், கணேஷ் பீடி தெரியாது. தங்கபஸ்பம் புகையிலை தெரியும். பான்பராக் தெரியாது. NO.  ஸ்டேன்ஸ் காப்பி தெரியும், நரஸூஸ்/லியோ ஊஹூம். காந்தி நேருவைத் தெரியும் – பங்களாதேஷ் போரினால் இந்திரா காந்தியையும் தெரியும்  லால்பகதூர் மொரார்ஜியை சுத்தமாகத் தெரியாது. காமராஜர் அண்ணா பெயர்களைக் கேள்விப்பட்டதேயில்லை. யாரிடமும் பாஸ்போர்ட் கிடையாது. பங்களா தேஷைத் தவிர வேறெதுவும் தெரியாது. தங்களுக்குள்ளேயே கல்யாணப் பரிவர்த்தனையை வைத்துக்கொண்டார்கள். டாக்கா வாழ் ஜலாலுதீன் மகன் பீர் முகம்மதுவுக்கும் சிட்டகாங் முகம்மதுஅலி மகள் ஜமீலாவுக்கும் நிக்காஹ் நடைபெறும். இளைய தலைமுறையினருக்குத் தமிழ் எழுத, படிக்கத் தெரியாது. நான் அங்கே தங்கியிருக்குமிடத்தைச் சொன்னதும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு வி.ஐ.பி. ஏரியா.
அடுத்த வெள்ளிக்கிழமை விடுமுறை நாளானதால், ஆறேழு நண்பர்கள் என்னைப் பார்க்க தயங்கித்தயங்கி வந்தார்கள். Mill Complex-ல் செக்யூரிட்டி அதிகம். அவர்கள் வீட்டுக்கு அழைத்து எனக்காக சைவ உணவு தயாரித்துப் பரி மாறுவார்கள். கெஸ்ட் ஹௌஸில் ஹபீப் சமைத்த சாம்பார் ரசம் பொரியலையும் ரசித்துச் சாப்பிடுவார்கள். அவர்கள் கூச்சம் மட்டும் மாறவேயில்லை.  ஒவ்வொருமுறை தில்லி போகும்போதும்  ஒரு அத்தர்க்கடை வைக்குமளவிற்கு என்னிடம் சென்ட் பாட்டில்கள் சேர்ந்துவிடும். இது ஈஸ்தான்புல்லிலிருந்து வந்தது, இது கெய்ரோவிலிருந்து வந்தது என்று ஆசையோடு கொண்டு வருவார்கள். சிட்டகாங்,  டாக்கா போகும்போது என் தங்குமிடத்தைத் தெரிந்துகொண்டு அங்குள்ள தமிழர்களுக்குச் செய்தி சொல்லிவிடுவார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததில், தமிழ்நாட்டைப் பற்றியோ இந்தியாவைப்பற்றியோ எந்த விவரங்களும் தெரியாதென்பது புரிந்தது. இது என் மனதுக்குச் சங்கடமாக இருந்தது.
டாக்காவில் ஒருமுறை சில வயதானவர்கள் பார்க்க வந்தார்கள். பேச்சுக்கிடையில் திடீரென்று, ‘இப்பொ எம்.கே. டி. பாகவதர்,  டி.ஆர். ராஜகுமாரி, என். எஸ். கிருஷ்ணன், மதுரம் எல்லாம் நடிச்சிட்டு இருக்காகளா?’ என்று கேட்டார் ஒரு முதியவர்.  கேள்வி கேட்ட வருடம் 1974. எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.பாகவதர்-பி.யூ. சின்னப்பாவுக்குப்பிறகு சிவாஜி-எம்.ஜி.ஆர். என இரு மாபெரும் சகாப்தங்கள். பிறகு கமல்-ரஜினி ஆளுமை. இதை எப்படிச்சொல்லி இவர்களுக்குப் புரியவைப்பது? இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு1944க்குப்பிறகு ஸ்தம்பித்துவிட்டது. நான் அந்தப் பெரியவரிடம் கேட்டேன்: ‘ஐயா, நீங்க இந்த ஊருக்கு வரும்போது உங்களுக்கு என்ன வயசு?’ – ‘என்ன, ஒரு முப்பது முப்பத்தைந்து இருக்கும்.’ ‘இப்போ உங்களுக்கு என்ன வயசாகுது?’ – ‘இப்பொ எழுபதைத் தாண்டியாச்சு.’ நான் சொன்னேன்: ‘இந்த வயசு வித்தியாசம் அவங்களுக்கும் உண்டுமில்லியா? தமிழ் நாட்டிலே உங்களுக்குத் தெரியாம என்னெல்லாமோ நடந்துபோச்சு.’ இது என்னை வெகுவாக பாதித்தது. 1974-ல் சிவாஜி, எம்.ஜி.ஆர் பெயர்களைக்கூடக் கேள்விப்படாத தமிழர்கள்.  தில்லி போனதும் என் மனைவியிடம் விவரங்களைச்சொல்லி,        ‘இனிமேல் வீட்டுக்கு வரும் விகடன், கல்கி, குமுதம் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளைப் பழையபேப்பர்காரனுக்குப் போடாதே. தனியாகக் கட்டிவை. அடுத்த தடவை போகும்போது அவர்களுக்கு எடுத்துச்செல்கிறேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறதென்பதை ஓரளவு படித்துப் புரிந்துகொள்வார்கள்’ என்று சொன்னேன். இப்படி நான் கொண்டுபோய்க் கொடுத்த தமிழ்ப் பத்திரிகைகள், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பிறகு, வந்திருக்கும் தமிழ்க் குடும்பங்களுக்குப் படித்துக்காட்டப்படும். டச்சில்லாததால், எழுத்துக்கூட்டிப் படிப்பார்கள். அங்கிருக்கும் நாட்களில் மைக்கில் நானே படித்துச் சொல்வேன். ஒரு ஊரில் படித்தபிறகு, புத்தகங்கள் மறுபடியும் கவனமாகக் கட்டப்பட்டு டாக்கா, மைமென்சிங் என்று ஊரூராகப்பிரயாணம் மேற்கொண்டது. ஒவ்வொரு முறையும் இந்தியாவிலிருந்து அவர்கள் விரும்பிக்கேட்டவை அசோகா பாக்கு, நேந்திரங்காய் வறுவல், தங்கபஸ்பம் புகையிலை போன்றவையே.
தமிழ் எழுத, படிக்கத் தெரியாத அங்கேயே பிறந்துவளர்ந்த இளம் தலைமுறையினருக்கு என்ன செய்யலாமென்று யோசித்தபோது எனக்கும் ஒரு ஐடியா பளிச்சிட்டது. தில்லி தமிழ்ப்பள்ளியிலிருந்து பத்துப் பிரதி தமிழ்ப் பாலபாடம் (அணில் ஆடு இலை ஈ உரல் ஊஞ்சல்) வாங்கிக்கொண்டுபோய் ஒவ்வொரு ஊரிலும் கொடுக்கச் செய்தேன். நல்லபலன் இருந்தது. சில வெள்ளிக்கிழமைகளில் நானும் போய்ச் சொல்லிக் கொடுத்தேன்.
பங்களாதேஷிலிருந்த ஒரே ஒரு மலையாளியையும் என்னால் பார்க்க முடிந்தது. கோட்டையத்துக்காரரான அப்துல் கரீம் 1945-ல் பிரிட்டீஷ் இந்தியாவில் இம்பீரியல் பாங்கில் வேலை பார்த்துவந்தவர்.  பதவியுயர்வில் டாக்கா கிளைக்கு மாற்றப்பட்டார். சுதந்திரத்துக்குப்பிறகு இம்பீரியல் பாங்க் இந்தியாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவாயிற்று. அங்கே Bank of Pakistan ஆகி, 1971க்குப் பிறகு Bangladesh Bankஆனது. நமது ரிஸர்வ் பாங்க் ஆப் இந்தியா மாதிரி இது அவர்களது Central Bank.திருமணமாகாத இவர் படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று, குல்னா கிளைக்கு Deputy Governor ஆகியிருந்தார். பரம சாது. ‘நான் மட்டுமே இங்கு இருக்கும் ஒரே ஒரு மலையாள பங்களாதேசி’ என்று பெருமையாகச் சொல்வார். இவர் கையெழுத்தில்லாமல் ஏற்றுமதி ஆவணங்களை இந்தியா அனுப்பமுடியாது. ஓரிருமுறை அவசரமாக வெள்ளிக்கிழமை இந்தியா திரும்ப நேர்ந்ததால், ரப்பர் ஸ்டாம்ப், முத்திரை சகிதம் கெஸ்ட் ஹௌஸ் வந்து எனது கமிஷனுக்கான Foreign Exchange Banker’s Draft தயார் செய்து கொடுத்தார். அவருக்கு நான் கொடுத்ததெல்லாம் அவர் விரும்பிக் கேட்கும் ‘ஏத்தங்ஙாய் உப்பேரி’ மட்டுமே.
அடிக்கடி பங்களாதேஷ் போய் வந்ததால், அங்கேயிருந்த இந்தியன் ஹைக் கமிஷனர்களிடம் நல்ல பரிச்சயம் உண்டு. திரு KPS மேனன் Jr., முச்குந்த்தூபே போன்றவர்கள் நல்ல நண்பர்கள். இருவரும் பிறகு பதவியேற்றம் பெற்று இந்தியாவின் வெளியுறவுச்செயலர்களாக உயர்ந்தவர்கள். (ஒரு ருசிகரமான கொசுறு: ஒரே குடும்பத்தில் தாத்தா, பிள்ளை, பேரன் மூவரும் இந்தியாவின் வெளியுறவுச்செயலர்கள் – Mr. KPS Menon, ICS, KPS Menon Jr., IFS and Mr. Shiv Shankar Menon IFS, , தற்போதைய வெ.உ. செயலர்) திருமதி மேனனுக்கு தில்லியிலிருந்து புளி, சாம்பார்ப்பொடி எடுத்துப்போவது நான்தான். டாக்காவிலிருந்தால் ஞாயிற்றுக்கிழமைகள் மாலையில் எனக்குத் தூதரகத்தில்தான் டின்னர். ப.தேஷில் இரண்டே இரண்டு அம்பாஸிடர் கார்கள்தான் உண்டு. அவை நம் தூதரகத்துக்குச் சொந்தம். அவைதான் என்னைக் கூட்டிப்போக வரும்.
ஒருதடவை திரு KPS மேனனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தத் தமிழர்களுக்கு நம் அரசுத்தரப்பில் ஏதாவது உதவி செய்யமுடியுமா என்று கேட்டேன். அதற்கு சிரித்துக்கொண்டே, ‘உன் திருவாயை மூடிக்கொண்டு பேசாமலிரு. ஏற்கனவே பீஹாரி முஸ்லீம்கள், அகதிகள் பிரச்சினையில் மூழ்கியிருக்கிறோம். இது தெரிந்தால், ‘அவர்கள் தமிழ் வம்சாவளியினர். உங்கள்நாட்டு அகதிகள். அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என்று தங்கள் ஜனத்தொகையைக் குறைக்க இன்னொரு வழி பார்ப்பார்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்காதே!’ என்று என் வாயை அடைத்துவிட்டார்.
நான் கடைசியாக பங்களாதேஷ் போனது முப்பது வருடங்களுக்கு முன்னால். அதன்பின் தொடர்பேயில்லை. இப்போது அங்குள்ள நம் தமிழர்கள் எப்படியிருக்கிறார்களோவென்று பலசமயம் நினைத்துப் பார்த்ததுண்டு. இப்போதுள்ள ஊடகங்களின் வளர்ச்சியில், தமிழ் நாட்டுச்சானல்களில் பிழியப்  பிழிய அழ வைக்கும் தமிழ் சீரியல்கள் பார்த்து மூக்கைச் சிந்துகிறார்களா, மானாட மயிலாடுகிறார்களா, தொகுப்பாளினிகளின் தீந் தமிழைக் கற்றுக்கொண்டுவிட்டார்களா, இளைஞர்கள் திருட்டு DVD-யில் குருவியும் பில்லாவும் பார்த்து மகிழ்கிறார்களா, தசாவதாரம் DVDமோத்தி ஜீல் மார்க்கெட்டுக்கு வந்தாச்சா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் . . . ப்ளீஸ்!
*
மில்ஸ் சம்பந்தமாக ஏதாவது புகைப்படங்கள் கிடைத்தால், உயிர்மைக்குக் கட்டுரையுடன் அனுப்பலாமே என்று ஆராய்ந்தேன். கிடைத்த செய்தி என்னை மிகவும் பாதிக்கிறது. அரசின் கவனமின்மை, நிதிப்  பற்றாக்குறை, கடன்கள், பழைய இயந்திரங்கள் இவை காரணமாக 1958-ல் தொடங்கிய குல்னா நியூஸ்பிரின்ட் மில்லைநவம்பர் 30, 2002-ல் மூடிவிட்டார்களாம். 2,000 தொழிலாளிகளை ஒரேநாளில் வேலையிழக்கச் செய்தார்கள். அதனால் என்ன, சில வருடங்களில் அரசு இந்தப் பொன்னான பூமியைத் தனியாருக்கு விற்று அவர்கள் அங்கே Malls-ம் Multiplexes-ம் Holiday Resorts-ம் கட்டி லாபம் சம்பாதிப்பார்கள். பங்களாதேஷில் எங்கோ வாழ்ந்து வரும் என் நண்பர் திரு. ஷாஜஹானுக்கு வாழ்க்கையிலேயே சோகமான சம்பவம் இதுவாகத்தானிருக்கும். இருபத்தைந்து வருடங்களாக இதை வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாளைச் செலவிட்டவர். அவருக்கு இது மாதச் சம்பளம் வாங்கும் வேலையல்ல. ஒரு தவமாகச்செய்து வந்தார். தன்னலமில்லாது உழைத்தவர். என் ஆத்மார்த்த சினேகிதர். அவருடன் இந்த துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள மனம் ஏங்குகிறது. தன் சாம்ராஜ்யத்தை இழந்த பழைய ஷாஜஹான் போல இவரும் ஒரு சோகமான மனிதராக குல்னாவிலோ டாக்காவிலோ வாழ்ந்து கொண்டிருப்பார். என்னை  மறந்திருக்கமாட்டார். அவருடன் உடனே பேசவேண்டும் போலிருக்கிறது. எப்படி என்றுதான் தெரியவில்லை. வயதானவர்களுக்கே உரிய ஆற்றாமை.
பாரதி மணி (Bharati Mani)
‘உயிர்மை’ ஜூலை, 2008 இதழில் வெளிவந்தது

0 comments:

Post a Comment