Thursday, January 21, 2016

நான் 1955-ல் தில்லிக்கு வந்தபோது சொந்தஊர் நாகர்கோவிலைப் போல இங்கேயும் கோல்டன் லாட்ஜும், ரகு விலாஸ், ஸ்ரீகிருஷ்ணபவன் [பிராமணாள் காபி & சாப்பாடு] ஹோட்டலும், அவைகளில் ரசவடை, இட்லி தோசை, தேங்காய்ச் சட்னியுடன் கிடைக்குமென்று நினைத்து ஏமாந்தேன். அப்போது ஈ.வே.ரா. பெரியார் பெயர்ப்பலகைகளில் ‘பிராமணாளை‘ தாரால் அழிக்க ஆரம்பிக்கவில்லை! அது சரியா தவறா என்ற சர்ச்சைக்குள்  நான் புக விரும்பவில்லை. தில்லியிலேயே ஐம்பது வருடங்கள் இருந்ததால், இது போன்ற பிரச்னைகளில் என் பார்வை    சற்று வித்தியாசமானது. நான் இதை ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்து பார்க்கவில்லை. நாக்கின் ருசி சார்ந்த    விஷயமாகவே எனக்குப்படுகிறது. It is not a question of any particular caste but of an individual taste. செட்டிநாடு ஹோட்டல், முனியாண்டி விலாஸ் மிலிட்டரி, திருநெல்வேலி சைவாள், சைனீஸ், பஞ்சாபி டாபா,    காரத்துக்கு ஆந்திரா இதெல்லாம் இருக்கமுடியுமென்றால், பிராமணாள் ஹோட்டலையும் அழிக்காமல்  விட்டிருக்கலாம். என்னைப்போன்ற நாக்கு நாலுமுழமிருக்கும் சைவர்களுக்கு, சோம்பு இல்லாத மசால் வடையும், ப்ரூவுக்குப்பதிலாக நல்ல பில்டர் காபியும் கிடைத்திருக்கும்.  ஆரியபவனில் சாப்பிட்டால் ரசத்தில் பூண்டு இருக்காதென்று நம்பலாம். ‘திராவிடநாடு திராவிடருக்கே‘ என்பதுபோல் ஆரியபவன் ஆரியருக்கே என்ற கோஷம் இருந்ததில்லை.  (இருந்திருந்தால் அவர்களை வெட்டிப்போட்டிருப்பேன்).  சொல்லப்போனால், பல ‘பிராமணாள்‘ ஹோட்டல்களை வசதி படைத்த ‘மற்றவர்கள்‘ தான் நிர்வகித்துவந்தார்கள்.  அந்தக்காலத்தில் எங்களூர் ஹோட்டல்களில் ‘தொத்து வியாதிஸ்தர்களுக்கு அனுமதியில்லை‘ என்ற பெயின்ட் போன ஒரு போர்டு சாய்வாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அவர்களும் ஒரு  மூலையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். காரணம் இது வியாபாரம் சார்ந்த நாக்கின் ருசி சம்பந்தப்பட்ட விஷயம். இப்போதும் ருசியளவில் ஆரியபவனை ஆதர்சமாகக் கொண்டு இயங்கும் உணவுவிடுதிகளில் தான் கூட்டம் அலை மோதுகிறது. சிக்கன்-65க்கு இருக்கவே இருக்கிறது செட்டிநாடும் முனியாண்டிவிலாசும்.  இதை அரசியலாக்கியது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். வடசேரி குண்டுப்போத்தி ஹோட்டலில் நடுவிரலால்  மெதுவாக அழுத்தினால் தாமரைப்பூ போல விரியும் ரசவடையை    சாப்பிட்டு வளர்ந்த நான்  தில்லி போனதும் எதிர்கொண்டதோ  சமோஸாவும், பூரிச்சோலேயும் தான். அவைகளில் இருந்த கரம் மசாலா என் நாக்குக்குப்பிடிக்கவில்லை. அவைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு, எனக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது. வேறு வழியில்லாமல் என் நாக்கு அவைகளை ஒத்துக்கொண்டது.
அப்போதெல்லாம் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹாண்டில் லோயரோ ஹையரோ தேறிவிட்டுUPSC அப்பாயின்ட்மென்ட் லெட்டரில் ரூ.160-10-330-EB-410 கிரேடில் தட்டச்சராக பணிநியமனத்துடன், சென்னையிலிருந்து அப்போது புதிதாகக்கட்டப்பட்ட புதுதில்லி ஸ்டேஷனில் வந்திறங்கும் பிரும்மச்சாரித் தமிழன் ‘பட்பட்டி‘யில் விலாசம் தேடிப்போகுமிடம் கரோல்பாகாகத்தானிருக்கும். அங்கே இவரைப்போன்றவர்களை பெற்ற தாயைப்போல அணைத்துக் கொள்வது கரோல்பாகிலிருக்கும் ராமானுஜம் மெஸ், வைத்யநாதய்யர் மெஸ், மஹாதேவன் மெஸ் போன்றவைகள் தான். முப்பதுநாள் இருவேளை சாப்பாட்டுக்கு ரூ.40 டோக்கன், மாடியில் பத்துக்கு எட்டு  ‘பெரிய‘ அறையில் இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள மாதவாடகை ரூ. 50. சனிஞாயிறு விடுமுறைகளில் காலை மாலை டிபன்  காபி எக்ஸ்ட்ரா. அன்று மதிய உணவில் அவியல் பாயசம் கொசுறு! அப்போது அளவுச்சாப்பாடு புழக்கத்துக்கு வரவில்லை! அதே போல் அப்போது, தில்லி டாபாக்களில் சப்ஜிகளுக்குத்தான் காசு; தாலும் (Dal) நெய் தடவிய தந்தூர் ரொட்டியும் சுடச்சுட எத்தனை சாப்பிட்டாலும் இலவசம்!
இந்த விஷயத்தில் நான் ரொம்ப கொடுத்துவைத்தவன். என் அக்காவும் அத்தானும் தில்லியில் இருந்தார்கள். அத்தான் நாற்பதுகளிலேயே தில்லிக்கு வந்தவர். [அவர் 60 வருடங்களுக்கும் மேலாக தில்லியில் இருந்தும் இன்றுவரை தில்லி செங்கோட்டையோ, குதுப் மினாரோ, ஆக்ரா தாஜ்மஹாலோ போய்ப்பார்த்ததில்லை!] நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர்கள் தான் முக்கிய காரணம். நான் முதல்தடவை  தில்லிக்கு வந்தநாளிலிருந்து எனக்கு வீட்டுச்சாப்பாடு தான். பள்ளிக்கூட லீவில் அக்கா குழந்தைகள் நாகர்கோவிலுக்குப்போனால் இரு மாதங்கள் மட்டும் வினே நகர் செட்டியார்  தான் என் அன்னதாதா!
C.P.W.D. தயவில் அப்போது Central Secretariat பாபுக்களுக்காக முதலில், கோல் மார்க்கெட், பிறகு லோதிரோடு, East Vinay Nagar [லக்ஷ்மிபாய்  நகர்], Vinay Nagar[சரோஜினிநகர்], West Vinay Nagar [நேதாஜிநகர்] என ஒவ்வொரு காலனியாக வர ஆரம்பித்தது.   கோல் மார்க்கெட்டில் ஸ்ரீதரன் [மலையாளி] மெஸ், லோதிரோடில்,  சிதம்பரம் மெஸ், கிருஷ்ணன்நாயர் மெஸ், கனாட்பிளேசில், South India Boarding House, மதராஸ் ஹோட்டல், ஜந்தர்மந்தரிலிருந்த South India Club-ல் ராம்சிங் மெஸ், செவிட்டு அய்யர் மெஸ் [குடுமி வைத்திருந்த அவர் பெயர் ஒருவருக்கும் தெரியாது!], வினே நகரில் செட்டியார் மெஸ் என பலரும்  தமிழ் பிரும்மச்சாரிகளை வரவேற்று உண்டியளித்து உபசரித்தனர். எல்லோரிடமும் மனித  நேயம் மிகுந்திருந்தது. மெஸ்ஸில் சாப்பிடும் ஒருவர் நோய்வாய்ப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவ மனையில் இருந்தால், டாக்டர் சொல்லும் கஞ்சியும்,  ஹார்லிக்ஸும் வேளாவேளைக்கு போய் சேர்ந்ததா என்பதை சிதம்பரம் ஒரு தந்தையைப்போல கவனித்துக் கொள்வார். கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் நடத்திவந்த ராவுஜி திடீரென்று வேலைபோன ஒருவருக்கு மறுவேலை கிடைக்கும்வரை மூன்று மாதங்களுக்கு இலவசமாக உணவளித்ததும் எனக்குத்தெரியும்! இந்த E F Type காலனிகளில் பலவருடக் காத்திருத்தலுக்குப்பிறகு அலாட் ஆகும் ஈரறை வீடுகளில், மாதாமாதம் ஊருக்குப் பணம் அனுப்பும்   நிர்ப்பந்தமிருந்ததால், ஒரு அறையை  தன்கீழ் வேலை செய்யும் ஒரு பிரும்மச்சாரிக்கு ரூ.80க்கு Sub-let செய்வார் வீட்டுக்காரர். எஸ்டேட் ஆபீசிலிருந்து வந்து விசாரித்தால் அவருக்கு தம்பி என்று சொல்வார்.ஓரிரு வருடங்களில், அந்த பிரும்மச்சாரித் ‘தம்பி‘, அவர் கூட இருக்கும் மச்சினியை ‘டாவடித்து‘ அவருக்கே ‘சகலை‘யான கதைகளும் உண்டு! அதனால்தானோ என்னவோ அவரும் குடிவைக்கும் பிரும்மச்சாரியின் குலம் கோத்திரம் முதலியவைகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு விடுவார்!
எனக்கு தில்லி வந்தபிறகு தான் சட்னியில் தேங்காயுடன் பொட்டுக்கடலை சேர்க்கலாம் என்பது தெரியும்.  ஆனால் கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக்கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்.  சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, தலைக்குத்தேய்த்த கடலைமாவு  வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னி!
நான் தில்லிக்கு வந்தசமயம் பிற்காலத்தில் ஆசியாவிலேயே பெரிய குடியிருப்பாகக்கருதப்பட்ட ராமகிருஷ்ணபுரம் எனப்படும் ஆர்.கே.புரம்  மோதி  பாக் எல்லாம் இரவுநேரங்களில் நரிகள் ஊளையிடும் காடாகவிருந்தது. அந்த  நரிகளெல்லாம் இப்போது எங்கே போயின?  நரியாகி பரியாகி நம்மில்  சிலரது உள்ளங்களில் தேடினால் பதுங்கி இருக்கலாம்! அப்போது தில்லித் தமிழ்ச்சங்கம் கனாட்பிளேசில் தற்போது பாலிகா பஜாராக பரிணமித்திருக்கும் Theatre Communication Building-ல் மாபெரும் விஞ்ஞானியான டாக்டர் K.S. கிருஷ்ணன் தலைமையில் மூன்றே  அறைகளில் இயங்கி வந்தது.
அறுபதுகளின் மத்தியில் [பின்னர் UNI Canteen என்று அறியப்படும்] கையேந்திபவனின் தொடக்கம் பார்லிமென்ட் வீதியில் PTI பலமாடிக் கட்டடம் வருவதற்கு முன்னால் இருந்த இடத்தில்தான். பல உயர் அதிகாரிகளிடம் சமையல்காரராக வேலைபார்த்து அனுபவம் வாய்ந்த சூரி எனும் சூரியநாராயணனும், அவர் தம்பி மணியும் சேர்ந்து தொடங்கினார்கள். முதல்நாளன்று நானும் அப்போது தரங்கதராவில் வேலை பார்த்த [ரிலையன்ஸ்] பாலுவும் அடுப்படியில் நின்றுகொண்டே அலுமினியத்தட்டில் சுடச்சுட தோசை சாப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. [இங்கே தில்லிப்பிரமுகர் என் நெடுநாளைய நண்பர் ரிலையன்ஸ் பாலுவைப்பற்றி ஒரு செய்தி சொல்லவேண்டும். பாலு அப்போது தரங்கதரா கெமிக்கல்ஸில் சந்தானம் என்பவரின் கீழ் வேலை பார்த்துவந்தார். ஒரு தமிழனின் கீழ் இன்னொரு தமிழன் வேலை  பார்ப்பதைப்போல் கொடுமை இல்லவேயில்லை. சந்தானத்துக்கு ‘நான் தான் Boss‘ என்பதை தூங்கும்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அவரது  டார்ச்சர் தாளாமல் அப்போது பெயரே கேள்விப்பட்டிராத, உலகத்துக்கு ‘குரு‘வாக அறிமுகமாகாத ஒரு தீருபாய் அம்பானி நடத்தும் Reliance Industries [P] Ltd.என்ற ஒரு ‘சிறு‘ கம்பெனியில் வேலைக்குச்சேர்ந்தார். As they say, the rest is history!இப்போது அவர் R.I.L. President. முகேஷ் அம்பானியின் வலதுகை. நான் பாலுவிடம் அவரது புது வீட்டு கிரகப்  பிரவேசத்தின்போது சொன்னேன்: ‘பாலு! உனக்கு சந்தானம் கடவுள் மாதிரி. அவர் மட்டும் நல்லவராக இருந்திருந்தால்……? அவருக்கு நீ ஒரு கோவில் கட்டித்தான் தீரவேண்டும்!]
பழைய கட்டடத்தை இடிக்கப்போவதாக PTI நோட்டீஸ் கொடுத்ததும், என் நண்பரும் என் நாடகங்களைத்தவறாமல் பார்க்கும் என் விசிறியுமான UNI General Managerராஜகோபாலனிடம் சூரியை அழைத்துச்சென்று கட்டடத்தின் பின்புறத்தில் ஒரு கான்டீன் தொடங்க அனுமதி வாங்கிக்கொடுத்தேன். ஒரே கண்டிஷன்: UNI ஊழியர்களுக்கு மதியஉணவு சலுகைவிலையில் கொடுக்கவேண்டும்.  அங்கும் நானும் பாலுவும் தான் ‘போணி‘ பண்ணினோம். இப்படி சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட UNI Canteen அறுபது எழுபதுகளில் எல்லா தலைநகரத் தமிழர்களுக்கும் மதியவேளையில் ஒரு கூடும் இடமாக திகழ்ந்தது. சென்னையில் சமீபத்தில் மூடப்பட்ட Woodlands Drive-inஹோட்டல் போல தில்லி UNI Canteen-க்கும் ஒரு சரித்திரம் உண்டு.
அப்போது தான்  ரிலையன்ஸில் சேர்ந்த பாலு அவர் தலைவர் தீருபாய் அம்பானியையும், சிறுவர்களாக முகேஷ், அனில் இருவரையும் சில தடவைகள் அங்கே அழைத்து வந்திருக்கிறார்! அவர்கள் அலுமினியத்தட்டில்  தோசையோடு சேர்த்து ஊற்றிய  சாம்பார் சட்னியில் முழுகப்பார்க்கும் ஜாங்கிரியை ஒரு  கையால் பிடித்துக் கொண்டே வளைந்த அலுமினியக்கரண்டியால் சட்டையில் சாம்பார் விழாமல் சாப்பிடுவதை தசாவதானமாகச் செய்வார்கள்! எல்லா தலைநகர்ப் பிரமுகர்களையும் அங்கே மதியஉணவு வேளைகளில் பார்க்கலாம். தி. ஜானகிராமனும் வருவார்.ஆதவனையும் பார்க்கலாம். சுப்புடு, பாலு, அடியேன், கிருஷ்ணமூர்த்தி, அகத்தியன் எனப்படும் PSR,  டாடா வைத்யநாதன் போன்றோர் தினமும் ஆஜர். நான் அப்போது பார்லிமென்ட்வீதி பிர்லாவில் வேலை பார்த்துவந்தேன். வீட்டிலிருந்து வரும் மதியஉணவை முடித்துவிட்டு, நண்பர்களைப் பார்ப்பதற்காகவே அங்கே   போவேன். எங்கள் ஆலோசனைப்படி, சூரி வருடாவருடம் தீபாவளிக்கு பக்ஷணங்களும் தயாரிக்க ஆரம்பித்தார். அதற்கு ஏக கிராக்கி! சூரி தில்லியில்  நிகழ்ந்த முதல் பஸ் வெடிகுண்டு விபத்தில் தப்பிப்பிழைத்தவர். UNI  கான்டீன் இப்பொது எப்படி நடக்கிறது?
தில்லியில் அப்போதிருந்த இன்னொரு கையேந்திபவனைப்பற்றியும் சொல்லவேண்டும். அறுபதுகளின் இறுதியில், India Coffee House-ல் காபி சிற்றுண்டிகளின் விலைகளை அதிகரித்தபோது, அதற்கெதிராக பெரிய போராட்டமே வெடித்தது. அங்கேயே ‘குடியிருந்த’ தில்லி ஜோல்னாப்பை ‘அறிவுஜீவிகள்‘ இந்த விலையதிகரிப்பை எதிர்த்து  கொடி பிடித்து தர்ணா, உண்ணாவிரதமிருந்தார்கள். கடைசியில் India Coffee House-ஐ பகிஷ்கரித்து, Price Rise Resistance Movement சார்பில் கூட்டுறவு முறையில், இப்போது பாலிகா பஜார் இருக்குமிடத்தில் ஒரு Coffee Houseஆரம்பித்து அது ஓகோவென்று ஓடியது. ஒரே சமயத்தில் 500 பேர் காபி சாப்பிடுவார்கள். ஆரம்பத்தில்   காபியும் சுடச்சுட மெதுவடையும் மட்டுமே. தக்காளியே இல்லாமல் வெள்ளைப்பூசணிக்காயில் புளியுடன் கூடிய ஒருவித Sauce அங்கே விசேஷம்!   பிறகு அதற்குக்கிடைத்த ஜனரஞ்சக வரவேற்பைக் கருத்தில்கொண்டு இந்தCoffee House-ஐ தில்லி சர்க்காரே தத்து எடுத்து இர்வின் ரோடு ஹனுமான் மந்திர் எதிரே பெரிய அளவில் ஆரம்பித்தது. ஆரம்பநாட்களில் அங்கே தில்லி முதலமைச்சரே பரிமாறினார்! நானும் அவர் கையால் சாப்பிட்டிருக்கிறேன். இப்போதும் இருக்கிறதென்று நினைக்கிறேன்!
எழுபதுகளில் உயர்மட்ட மத்திய வர்க்கத்துக்கு A.C. வசதியுடன் கூடிய ஒரு ஹோட்டலை தலைநகரில் ஆரம்பிக்கும் திட்டத்துடன் சென்னை Woodlands அதிபர் திரு. கிருஷ்ணராவ் தில்லி வந்தார். அதைப்பற்றிய கருத்துக்களைக் கேட்க தில்லிப்பிரமுகர்களில் சிலரை அழைத்தார். நானும் போயிருந்தேன். என்ன விலை நிர்ணயிக்கலாமென்று ஆலோசனைக் கேட்டபோது, மற்ற ஹோட்டல்களில் 2 வடை ஒரு ரூபாய், நீங்கள் 2 ரூபாய் வைக்கலாமென்று அபிப்ராயம் சொன்னோம். நாங்கள் சொன்னதையெல்லாம் பொறுமையாகக்கேட்டுக்கொண்ட அந்த புத்திசாலித் தொழிலதிபர் லோதி ஹோட்டலில் ஆரம்பித்த Delhi Woodlands Restaurant-ல் ஒரு காபிரூ.5, வடை ரூ.5, தோசை ரூ. 10 என்று மெனு கார்டு போட்டார். இது எங்கே ஓடப் போகிறதென்று நினைத்த நாங்கள், பிறகு மாலைவேளைகளில் அங்கே சாப்பிடப்போகும்போது, நமது பெயரைப்பதிவு செய்து இடத்துக்காக குறைந்தது அரைமணிநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை! After all, he was a shrewd businessman!
இதையடுத்து சென்னை தாஸப்பிரகாஷ் ஹோட்டலும், தங்கள் கிளையை சுஜான்சிங் பார்க்கில் ஆரம்பித்தார்கள். தில்லி சர்தார்ஜிகளும், மற்ற பஞ்சாபிகளும் மதராஸி சாம்பாருக்காக நாக்கைத்தொங்கப்போட்டபடி காத்திருக்க ஆரம்பித்தார்கள்! ஒரு பிளேட் இட்லிக்கு ஆறு கிண்ணம் சாம்பார் கேட்பார்கள். இவர்களுக்காகவே, Extra Sambaar….Re. 1.00 per Katori என்று எழுதிய போர்டும் தொங்க ஆரம்பித்தது.
இவையெல்லாம் தவிர கர்ஸன் ரோடு [கஸ்தூர்பா காந்தி மார்க்] அருகிலிருக்கும் எலக்டிரிக் லேனில் ஒரு மலையாளியின் மெஸ் இருந்தது. அங்கே பலதடவைகள் சென்னையிலிருந்துவந்த எழுத்தாள நண்பர்களுடன் சாப்பிட வரும் க.நா.சு.வை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தான் எனக்கு மாமனாராக வருவார் என்று எனக்கும் தெரியாது, அவருக்கும் அந்த தீர்க்கதரிசனம் இருந்ததில்லை!
அதேபோல தில்லியில் அசைவ உணவுக்கு அந்தக்காலத்தில் பெயர்பெற்றது தர்யாகஞ்சில் இருந்த மோத்தி   மகால். இரவு பதினோரு மணிக்குப்போனாலும், அரைமணி நேரம் காத்திருந்தால்தான் இடம் கிடைக்கும். அங்கே பல தடவை அசைவ நண்பர்கள் சர்தார்ஜிகளோடு, செமையான ‘தண்ணி‘ பார்ட்டிக்குப்பிறகு, ‘இன்று எப்படியும் தந்தூரி  சிக்கன் சாப்பிட்டுவிடவேண்டும்’ என்ற உறுதியோடு போய் உட்கார்ந்து ஆர்டர் செய்வேன். முதல் கவளமே உள்ளே போகாமல் ரப்பர் போல வாயில் சுற்றிக்கொண்டிருக்கும். துப்பிவிட்டு ஒரு நவரத்ன குருமாவுக்கு செட்டிலாகி   விடுவேன். கனாட்பிளேஸிலிருந்த Kaake-da-Hotelலிலும் இதே கதைதான். இன்றுவரை பலதடவை நான் ஒரு அசைவனாக முயற்சியெடுத்தும், தோற்றுத்தான் போயிருக்கிறேன்.
ஒரு காலத்தில் என்னை ஒரு Dr. Samuel Johnson ஆக நினைத்துக்கொண்டு, லண்டனுக்குப்பதிலாக தில்லியை, ‘A day out of Delhi is a day out of my life!‘ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். தில்லி என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியிருந்தது. நான் இருந்த ஐம்பது வருடங்களில், தில்லி எனக்கு என் தகுதிக்கு மீறியே எல்லா செல்வங்களையும் கொடுத்திருக்கிறது. 1955-ல் ஒரு விலாசமில்லாமல் தில்லிக்கு வந்த எனக்கு சுமாரான படிப்பறிவு, உவப்பான குடும்பவாழ்க்கை, ஐம்பது வருட நீண்ட நாடக அனுபவம், மிகப்பெரிய நண்பர்கள் வட்டம், தேவைக்கு அதிகமான வாழ்க்கைவசதிகள், நிறைவான மனம் இவைகளை இந்த மாநகரம் எனக்குத் தந்திருக்கிறது.  ஐம்பது வருடங்களில் தான் மாறியது போல, என்னையும் மாற்றியிருக்கிறது.
நான் வளர்ந்த, என்னை வளர்த்த தில்லியைப்பற்றிச்சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் ‘உயிர்மை‘ வாசகர்களுக்கு இவை சுவாரஸ்யமாக இருக்குமாவென்று தெரியவில்லை. மனுஷ்ய புத்திரன் மே மாதத்துக்கான கட்டுரைக்கு அவசரப்படுத்தியதும்,  இதை அனுப்பிவிட்டேன்.
தில்லியில் என்னைப்போல அரைச்சதம் அடித்தவர்கள் [Old Foxes] புலவர் விசுவநாதன், ஏ.ஆர். ராஜாமணி,  கிருஷ்ணமூர்த்தி, ரிலையன்ஸ் பாலு போன்ற சிலரே இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் சென்னைக்கு வந்து ஓய்வுக்குப்பிறகு கிடைத்த மொத்த ஊதியத்தையும் அதிகவட்டிக்கு ஆசைப்பட்டு ராயப்பேட்டை பெனிஃபிட் பண்டில் போட்டு இன்று முதலுக்கே மோசமானதால், கையில் மஞ்சள்பையுடன் பூட்டிய கேட்டுக்கு வெளியே நிற்கிறார்கள்! எஞ்சியவர்களைப்பார்க்க,  நான் மேலே போகவேண்டும்!

0 comments:

Post a Comment