Saturday, January 30, 2016

நண்பர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள்தான் முதன்முதலில் திரு பாரதி மணி அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னார். "மிகவும் பெரிய மனிதர், சுவாரஸ்யமானவர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அவரை அவசியம் சென்று பார்க்க வேண்டும். ஒரு நாள் போகலாம்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நேரில் சந்தித்த முதல்நாளிலேயே நாஞ்சில் சார் சொன்னது அவ்வளவும் உண்மை என்று தெரிந்தது. அவர் முன் நாம் சௌகர்யமாக இருக்கலாம். தோன்றும் எதைப் பற்றியும் பேசலாம். கவனமாகக் கேட்கும் செவிகளை உடையவர்.  தான் பேச பிறர் கேட்க வேண்டும் என்கிற சில பெரிய மனிதர்களிடம், பிரபலஸ்தர்களிடம் இருக்கும் குணம் இவரிடம் இல்லை. இந்நூலில் இருப்பதைப் போல் நூறு மடங்கு நேரடி அனுபவங்களும், தொடர்புகளும் உடையவர். நூறு மடங்கு நகைச்சுவையும் தவறாது இருக்கும். தில்லி போகும் தமிழ் நடிக நடிகையர்களுக்கு -- சிவாஜி, எம்.ஜி.ஆர். உட்பட - வேண்டிய உதவிகளைச் செய்து வந்தவர். இவரது சினிமா பற்றிய  Adult Only ‘Quiz' ஒன்றின் பதில் தெரியாமல் பல இரவு பகல்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்ட வருங்கால மாபெரும் இயக்குனர்களையும், ஒளிப்பதிவாளர்களையும், உதவி இயக்குனர்களையும் நானறிவேன்!

இவரிடம் நான் கவனித்த சில குணாதிசயங்கள்:- தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பதில்லை. எந்த எதிர்பார்ப்பும், சார்பும் (dependenceஇல்லாமல் அன்புடன் பழகும் பற்றற்ற நட்பு. மிகவும் sophisticated ஆன, நாகரிகமான பிறரை சிறிதும் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ளும் விதம். அவரது விருந்துபசாரத்திலும், கைகளைப் பற்றுவதிலும், தங்கிச்செல்லும் நண்பர்களை தற்காலிகமாகப் பிரியும் தருணங்களிலும் வெளிப்படுத்தாமலே தென்படும் அவரது வாத்ஸல்யம். தன் எழுத்தின் மேல் மிக அதிகமான அபிப்பிராயம் இல்லாமல் 'கத்துக் குட்டி' என்றே தன்னை அழைத்துக் கொள்வது. எழுத்தை விட நாடகத்தின் மேல் அவருக்கு இருக்கும் அபாரப் பற்று.

மிக நல்ல பண்பாளரை அறிமுகம் செய்து என் நண்பர்கள் வட்டத்தை செழுமைப்படுத்திய திரு நாஞ்சில் அவர்களுக்கு நன்றி..........
எழுத்தாளர் . ஸ்ரீநிவாசன்.
ஒருத்தி படத்தில் பாரதி மணிக்கு கீதாரியாக முக்கிய வேடம் கொடுத்தேன். திரைப்பட நடிகர்கள் அவர்கள் வேடத்தைப் புரிந்து கொண்டு இயக்குநரின் வழிகாட்டலுடன் தங்கள் பாணியில் அதை செய்து விடுவார்கள். மணி விஷயத்தில் நான் படக்கதை முழுவதையும் எடுத்துக் கூறி அவரது கதாபாத்திரம் பற்றியும் நிறைய தெளிவு படுத்தினேன். படத்தில் அவரது    நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.  இருந்தாலும் நாடகத்தில் நடிப்பது போலவே படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தானே படித்து பிறகு அதில் வரும் தனது கதாபாத்திரத்தை மனதில் உருவாக்கி கொள்ள முடியவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்ததை   பின்னால் அறிந்து கொண்டேன். மனப்பழக்கத்தால் ஒரு நாடக நடிகராக இருந்தாலும் திரைப்படத்திற்கேற்ற நடிப்பினையும் அவரால் எளிதில் கொண்டுவர முடிகிறது. தனது கதாபாத்திரத்தை ஆழ்ந்து அனுபவித்து வெளிப்படுத்தும் பாணி அவருடையது.  அல்காஷியின் மாணவர், க.நா.சு.வின் மருமகன் என்றெல்லாம் அறிமுகமாகி பலகாலமாக இனிய நட்பு கொண்டிருப்பவர்.

அவரது மற்றொரு ஆளுமை அவரது எழுத்துகள். பரபரப்பு ஆதாயம் தேடாத வெளிப்படையான எழுத்தின் மூலம் உயர்மட்ட டெல்லி வாழ்க்கையை தமிழ் வாசகர்கள்  அனுபவிக்குமாறு செய்திருக்கிறார். டெல்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களிடம் கிடைக்காத ஒரு அண்மைத்தன்மையை நான் அவருடைய எழுத்துகளில் காண்கிறேன். முன்பெல்லாம் யாராவது அவரைப்பேச அழைத்தால் `கையில் ஸ்கிரிப்ட் இல்லை. எனவே என்ன பேசுவது என்று தெரியவில்லை` என்று கூச்சத்துடன் உரையை முடித்து கொள்வார்.

சுவாரஸ்யத்துடன் பல புத்தகங்கள் எழுதக்கூடிய அளவிற்கு அவரிடம் திறமையும் அனுபவங்களும் இருப்பதை அவர் எழுத்துகளைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். 

---- ஒருத்தி இயக்குநர் அம்ஷன் குமார்
A.Muttu
இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி திரைப்படம் வெளியானபோது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் நான் அதைப் பார்த்தேன். படத்தில் கதை சொல்லப்பட்டவிதம், பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேயின் தோற்றப் பொருத்தம், செல்லம்மாவாக நடித்த தேவயானியின் அடக்கமான நடிப்பு, இளையராஜாவின் இசை எல்லாமே பாராட்டும்படியாக அமைந்திருந்தன.  பாரதியின் தகப்பனாராக நடித்தவர் மிக சொற்ப நேரமே திரையில் வந்து போன ஒரு புதுமுகமாக இருந்தார். அவருடைய நடிப்பு இயற்கையாகவும் அலட்டல் இல்லாமலும் இருந்தது. தமிழ் சினிமாவில் வரும் அப்பாக்களுக்கு ஒரு முகம் இருக்கும். அது இங்கே இல்லை. ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டின் கண்டிப்பான தகப்பனாரை எங்கள் கண்முன்னே நிறுத்தினார். படம் முடிந்தபோது அந்த நடிகரைப் பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன். ஒருவருக்குமே  தெரியவில்லை. மன அடுக்கின் அடியில் போய் மறந்துவிட்ட பல விசயங்களில் இதுவும் ஒன்றாகியது.

 இரண்டு வருடங்களுக்கு முன்னால் பாரதி மணி என்ற பெயரில் ஒருவர் உயிர்மை யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் யாரென்று எனக்கு தெரியாது. கட்டுரையை பாராட்டி அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அவர் பதில் எழுதினார். இப்படித்தான் மின்னஞ்சல் மூலம் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே நாங்கள் சிநேகமானோம். (இன்னும் நான் அவரை சந்தித்ததில்லை.) அப்பொழுது அவர்  பாரதி படத்தில் பாரதிக்கு அப்பாவாக தான் நடித்த விசயத்தை குறிப்பிட்டார். நான் ஆச்சரியப்பட்டேன். அத்துடன் என் மனதில் ஓர் எண்ணம் ஓடியது. 'நிழல்கள் ரவி' 'ஜெமினி கணேசன்' என்று பெயர் சூட்டுவதுபோல இவரும் பாரதி படத்தில் நடித்ததால் தன் பெயரை 'பாரதி மணி' என்று மாற்றியிருப்பாரோ என்று நினைத்தேன். அந்த நினைப்பும் தவறு என்பது எனக்கு பின்னால் தெரியவந்தது.

 ஒரு நாள் அவரிடமிருந்து வந்த கடிதத்தில் போகிற போக்கில் க.நா.சு.வின் மகளை தான் மணமுடித்த விசயத்தை அவர் எழுதினார். அப்பொழுது எனக்கு உடனே மூளையில் தோன்றிய ஒரு கேள்வியை கேட்டேன். 'க.நா.சு.விடம் நிறைய புத்தகங்கள் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு என்ன நடந்ததென்று உங்களுக்கு தெரியுமா?'  இதிலே ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் கேள்வியை நான் கேட்குமுன்னரே பாரதி மணி அந்தப் புத்தகங்களைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதி 'உயிர்மைக்கு' ஏற்கனவே அனுப்பியிருந்தார். ஆகவே அவரும் வியப்படைந்தார், ஆனால் எனக்கு பதில் சொல்லவில்லை. 'அடுத்த உயிர்மையை படித்துப் பாருங்கள்' என்று மட்டுமே கூறினார்.  

இப்படி எங்கள் நட்பு கடிதம் மூலம் வளர்ந்தது. அவர் எழுதும் கடிதங்களில் தவறாமல்  ஒரு வாசகம் காணப்படும். 'நான் ஒரு மோசமான நடிகன் என்றுதான் நினைத்திருந்தேன். இப்பொழுது நான் ஒரு மோசமான எழுத்தாளனும் கூட என்று நிரூபிப்பதற்கு அரும்பாடுபட்டு வருகிறேன். நான் அதற்கு ஒவ்வொரு முறையும் விதம் விதமான பதில்கள் எழுதுவேன். அவை அடிப்படையில்  இப்படி பொருள்கொண்டதாக இருக்கும். 'தயவு செய்து நீங்கள் உங்களை ஓர் எழுத்தாளனாக மாற்ற வேண்டாம். மூளையிலிருந்து ஒரு எண்ணத்தை பேப்பரில் பதியும்போது ஓர் எழுத்தாளன் அதை பல இடங்களில் மாற்றிவிடுகிறான். எழுதியபிறகு அதை மினுக்குகிறான்; புடம் போடுகிறான்; ஒவ்வொரு வார்த்தையும் சீர்தூக்கிப் பார்த்து செம்மையாக்குகிறான்; திருத்துகிறான்; திருப்பி எழுதுகிறான். ஆனால் உங்களுடைய எழுத்து அப்படியில்லை. You are not yet corrupted as a writer. நீங்கள் சிந்திப்பது உங்கள் மூளையில் இருந்து நேராக பேப்பரில் இறங்குகிறது. இயற்கையான எழுத்து. எளிமையிலும் எளிமை. அதுதான் சிறப்பு. தயவுசெய்து அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம். என்ன செய்தாலும் உங்கள் எழுத்தை மேம்படுத்தவேண்டாம்.என்று எழுதுவேன். இப்படி அவர் புலம்புவதும் நான் தேற்றுவதும் பலமுறை நடந்தது.

சமீபத்தில் அவர் எழுதி நான் படித்தது மகாநதி திரைப்படத்தில் முன்னர் எப்போதும் தொடாத உச்சத்தை தொட்ட நடிகர் பூர்ணம் விசுவநாதனுடைய மறைவு குறித்து உயிர்மையில்அவர் எழுதிய பதிவு. சுஜாதா எழுதும் நாடகத்தில் ஒரு பாத்திரத்தை பூர்ணம் ஏற்று சென்னையில் நடிப்பார். அதே பாத்திரத்தை பாரதி மணி டில்லியில் நடிப்பார். இவர்கள் மூவரும் நல்ல  நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள். பூர்ணத்தின் அஞ்சலிக் குறிப்பை முடிக்கும்போது பாரதி மணி எழுதிய வரிகள் மறக்கமுடியாதவை. பூர்ணத்தின் ஆவி மேலுலகம் சென்றதும், கண்ணில் படும் முதல் தேவதையிடம் இப்படிக் கேட்குமாம்: 'அம்மா, பரதேவதே!  சுஜாதா எங்கே இருக்கார்?'

அவர் எழுதிய அத்தனை கட்டுரைகளிலும் எனக்குப் பிடித்தது டில்லியின் நிகம்போத் சுடுகாடு பற்றி  எழுதிய கட்டுரை. ஒரு சுடுகாட்டைப் பற்றி ஒருவர் என்ன அதிகம் எழுதிவிடமுடியும்? ஆனால் பாரதி மணி அந்த கட்டுரையை சிறந்த இலக்கியமாக்கியிருந்தார். தொடக்கத்திலிருந்து முடிவு வரை ஒரு சிறுகதையை படிக்கும் ஆர்வத்துடன் கட்டுரையை படித்து அனுபவிக்க முடிந்தது. இப்படியான எழுத்து எல்லோருக்கும் சாதாரணமாக அமைந்துவிடுவதில்லை. நாடக நிகழ்வுபோல எழுத்தும் ஒரு வெளிப்பாட்டுக் கலைதான்.

பாரதி மணி 18 கட்டுரைகள் கொண்ட தன்னுடைய தொகுப்பை 'என்னுடைய முதலும் கடைசியுமான ஒரே புத்தகம்' என்று குறிப்பிடுகிறார். 71 வயதில் ஒருவர் தன்னுடைய முதல் புத்தகத்தை எழுதி வெளியிடுவது அவருக்கு அபத்தமாகப் பட்டிருக்கலாம். நோர்மன் மக்லீன் என்ற அமெரிக்க பேராசிரியர் தன்னுடைய முதல் புத்தகமான A river runs through it நாவலை எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 74.அவர் எழுத்துக்கு பாராட்டுகளும் புகழ்மாலைகளும் பரிசுகளும்  குவிந்தன. சமீபத்தில் ஃபிராங்க் மக்கோர்ட் என்ற எழுத்தாளர் Angela's Ashes என்ற நாவலை எழுதி வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 67. அந்த நூலுக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்தது. ஆகவே வயது பொருட்டில்லை. கிரிக்கட் விளையாட்டில் நல்ல பந்து வீச்சாளன் நீண்டதூரத்துக்கு ஓடிவந்துதான் பந்தை வீசுவான். நீண்ட தூரம் பயணித்து வந்த பாரதி மணியின் படைப்பும் நல்லதாகவே இருக்கும். ஆகவே 'ஒரே புத்தகம்' என்று வாசகர்கள் கருதாமல் முதல் புத்தகம் என்று  நினைத்தே இதை படிக்கவேண்டும். பாரதி மணியின்  வார்த்தைகளையே கடன் வாங்கி நான் சொல்வதானால் 'நேரான விரலில் வராத நெய் வளைந்த விரலில் வரும்.' அனுபவத்தில் பழுத்து வளைந்த ஒரு மனதுக்குத்தான் சில விசயங்கள் சொல்வதற்கு சாத்தியமாகும். காட்டாறு ஒன்று 
தனக்கென்று வகுத்த பாதையில் பெருகி கடகடவென்று உருண்டு ஓடுவதுபோல அவருக்கு
எழுத்து வருகிறது. பாரதி மணி அதை தன் போக்கிற்கு விடவேண்டும்;  தடைபோடக்கூடாது.


ஒரு முறை தோல்ஸ்தோய் செக்கோவிடம் 'நீ சேக்ஸ்பியரிலும் பார்க்க மோசமாக எழுதுகிறாய்' என்று சொன்னார். அதைக் கேட்ட செக்கோவுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. வீட்டுக்கு திரும்பும் வழியெல்லாம் அதையே நினைத்துக்கொண்டு குதிரையை சவுக்கினால் செல்லமாக அடித்தபடி பிரயாணம் செய்தாராம். இன்று யாராவது என்னிடம் 'நீங்கள் பாரதி மணியிலும் பார்க்க மோசமாக எழுதுகிறீர்கள்' என்று சொன்னால் நானும் கண்ணில் படும் முதல் குதிரையின் மீதேறி சவுக்கினால் செல்லமாக தட்டியபடி நீண்ட நேரம் பயணம் செய்யத் தயாராயிருக்கிறேன்!........... 

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.
அ. முத்துலிங்கம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் தனித்துவமான எழுத்துநடையும் அடையாளமும் கொண்டவர். அவருடைய எழுத்துக்கள் வழியே உருவாகும் உலகம் மிகுந்த நவீனத்துவமும் பரந்த அனுபவங்களும் கொண்டவை. தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
என்னைப்பற்றி – About Me
A.Muttuஇலங்கையில், கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்து,2000 ஆண்டில்ஓய்வுபெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.
அறுபதுகளில்எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல் என எழுதியிருக்கிறேன்.
இதுவரை வெளிவந்த நூல்கள் :
1. அக்கா – 1964
2. திகடசக்கரம் – 1995
3. வம்சவிருத்தி – 1996
4. வடக்குவீதி – 1998
5. மகாராஜாவின் ரயில்வண்டி – 2001
6. அ.முத்துலிங்கம் கதைகள் – 2004
7. அங்கே இப்ப என்ன நேரம் ? – 2005
8. வியத்தலும் இலமே – 2006
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – 2006
10. பூமியின் பாதி வயது – 2007
11. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – 2008
12. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் – ஒலிப்புத்தகம் – 2008
13. Inauspicious Times – 2008
14. அமெரிக்கக்காரி – 2009
15. அமெரிக்க உளவாளி – 2010

Friday, January 29, 2016

https://i1.wp.com/solvanam.com/wp-content/uploads/2010/07/csc_2950-225x300.jpg
நான் முதன் முதலாக மணியை (எங்களுக்கு அவர் வெறும் மணிதான். S.K.S. மணியோ, பாரதி மணியோ அல்லர்) பார்த்த நினைவு 1960-ன் ஆரம்பமாக இருக்கவேண்டும். புது டெல்லி கரோல்பாகில் வைத்தியநாதய்யர் மெஸ்ஸில் தங்கி இருந்த போது, உள்ளே நுழைந்ததும் இடது பக்கம் இருந்த ஹால் போன்ற பெரிய அறையில், (நான்கு கட்டில்கள் போடப்பட்டிருக்கும் அதில்) தங்கியிருப்பவரைப் பார்த்துப் பேச அளவளாவ வினே நகரிலிருந்து வருவார். மணி ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு  உள்ளே நுழைவதைப் பார்த்திருக்கிறேன். இருவரையும் எனக்கு பழக்கமில்லாத காரணத்தால் அந்த அளவளாவலில் நான் கலந்து கொண்டதில்லை. இருவரையும் ஒன்று சேர்த்தது அனேகமாக இருவரும் தமிழ் நாட்டின் தென்கோடியைச் சேர்ந்தவர்கள் என்பதும் கர்நாடக சங்கீதத்தில் இருந்த பிரேமையும் என்று நினைக்கிறேன். நான் அது பற்றிக் கேட்டதில்லை. பின்னர் பல வருடங்களுக்குப் பின் அந்த நண்பரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவர் பேசிய தமிழும் சங்கீத ஈடுபாட்டையும் கொண்டு இருவரையும் இணைத்தது இந்த இரண்டு பிணைப்புகள் தான் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பிறகு நான் அதிக நாட்கள் அந்த இடத்தில் நீடிக்கவில்லை. அந்த நாட்களில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும் ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு போகும் நிலைதான் தில்லியில் வாழும் தனிக்கட்டைகளுக்கு இருந்தது. எங்களில் ஒரு சிலரை ஒன்று சேர்த்தது மாதம் ஒரு முறையாவது சந்தித்துக்கொள்ளச் செய்தது தில்லியிலிருந்து பிரசுரமாகிக்கொண்டிருந்த கணையாழி பத்திரிகையின் சார்பில் நடந்து வந்த மாதாந்திர இலக்கிய சந்திப்புகள். அதில் தெரியவந்தவர்களில் இப்போது முக்கியமாகப் பேசப்படவேண்டியவர், கணையாழியில் கம்பனையும் வால்மீகியையும் ரசித்து காவ்ய ராமாயணம் என்ற ஒரு ராமாயணத்தொடர் எழுதி வந்த கே.எஸ். சீனிவாசன். நல்ல இலக்கிய ரசிகர். தமிழிலும் சமஸ்கிருதத்திலும் நிறைய ரசனையோடு படித்தவர். சங்கீதத்திலும் நாட்டியத்திலும் அவருக்கு ஞானமும் ரசனையும் உண்டு என்பது பின்னர் தான் எனக்குத் தெரிந்தது. அவர் எழுதிய 'சந்தி' (பெயர் சரிதான் என்று நினைக்கிறேன்) என்ற நாடகம் தில்லியில் AIFACS ஹாலில் நடிக்கப்பட்டது. தில்லியில் வெகு நாட்களாக நடந்து கொண்டிருந்த தக்ஷிண பாரத் நாடக சபா தான் அந்த நாடகத்தை மேடையேற்றியது. இதற்கு முன்னாலேயே பல வருஷங்களாக தக்ஷிண பாரத் நாடக சபாவைப் பற்றி பத்திரிகைகளில் வரும் மதிப்புரைகள் வழியாக நான் கேள்விப்பட்டிருந்தாலும், எனக்கு அதில் ஏதும் அக்கறை இல்லாதிருந்தது. காரணம் இந்த தில்லி சபாவும் சென்னை சபா நாடகங்களையே தில்லியிலும் பிரதி செய்ததாக நான் நினைத்திருந்தது தான். ஆனால் 'சந்தி' நாடகம் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. நாடகத்தை எழுதிய சீனிவாசன் வித்தியாசமாகச் சிந்திப்பவராகத் தான் எனக்கு கணையாழி சந்திப்புகளில் அவர் தெரிந்தார். அத்தோடு அதில் மணியும் ஒரு பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார். சில வருஷங்களுக்கு முன் வைத்தியநாத அய்யர் மெஸ்ஸில் இருந்த தன் நண்பரைப் பார்க்க வந்துகொண்டிருந்தவரல்லவா இவர் என்று நினைத்துக்கொண்டேன். அந்த நாடகத்தில் வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லையென்றாலும்,  இவர் தரையில் உட்கார்ந்து கொண்டு  அரிவாள் மணையில்  காய்கறி நறுக்கியவாறே பேசிக்கொண்டிருக்கும் காட்சி இன்னும் நினைவில் பசுமையாகத்தான் இருக்கிறது. அந்த நாடகம் பற்றி அடுத்த நாளே தில்லி பத்திரிகைகளில் மதிப்புரை வெளியாகியிருந்தது. அந்த நாட்களில் இப்படி ஒரு வித்தியாசமான நல்ல பழக்கம் தில்லி பத்திரிகைகளில் இருந்தது. எந்த நிகழ்ச்சிக்கும் உடனுக்குடன் மறு நாளே பத்திரிகைகளில் அது பற்றி ரெவ்யு வந்து விடும். அதுவும் தரமறிந்த மதிப்புரையாக இருக்கும். எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு பாராட்டும் சென்னை பத்திரிகைகள் மதிப்புரையாக இராது.

தக்ஷிண பாரத் நாடக சபாவில் மணி ஒரு முக்கியமான புள்ளியாக இருந்தார். சந்தி நாடகத்தின் வித்தியாசமான முயற்சி சபாவுக்கும் மணிக்கும் சந்தோஷமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். இப்ராஹிம் அல்காஷி என்னும் ஒரு இளைஞர் தில்லியின் தேசீய நாடகப் பள்ளிக்கு பொறுப்பேற்று பத்து வருடங்களுக்கு மேலாகி அகில இந்திய பரப்பில் தன் தாக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 'சடி ஜவானி புட்டேனு' (கிழவனுக்கு வந்தது வாலிப முறுக்கு) என்பது போன்ற நாடகங்களை எழுதி மேடையேற்றி ரகளை செய்து கொண்டிருந்த பஞ்சாபி நாடகங்கள் மறையத் தொடங்கின. ஹிந்தி, மராத்தி வங்க நாடக வெளிகளில் அல்காஷியின் அந்தத் தாக்கம் தெரிந்த போதிலும் தமிழ் நாடு தன் தமிழ் மரபின் தனித்தன்மையை விடாது திரும்பத் திரும்ப வலியுறுத்தி தன் கற்பைக் காத்துக் கொண்டிருந்தது. அந்நாட்களில் தேசீய நாடகப் பள்ளியின் நாடங்களை பார்க்க வந்த கூட்டத்தில்  தில்லித் தமிழர் யாரையும் பார்த்ததாக எனக்கு நினைவில் இல்லை. ஒரு நாள் இந்திரா பார்த்தசாரதியின் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது, தக்ஷிண பாரத் நாடக சபாவின் மணி வந்து தன்னை அவர்கள் சபாவுக்கு என ஒரு நாடகம் எழுதித் தரக் கேட்டிருப்பதாகச் சொன்னார். அப்படித்தான் மழை நாடகம் எழுதப்பட்டது மட்டுமல்லாமல் தக்ஷிண பாரத் நாடக சபாவே அதை அதே AIFACS ஹாலில் மேடையேற்றவும் செய்தது. இந்திரா பார்த்தசாரதி நாடகாசிரியர் ஆனார். தமிழ் நாடக மேடையேற்றத்தில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியது. இதைச் சொல்ல வந்த காரணம் இந்திரா பார்த்தசாரதி நாடகத்தின் பக்கம் பார்வையைத் திருப்ப முதலும் முக்கியமுமான காரணம் எஸ்.கே.எஸ். மணி என்பதோடு, எப்போதும் தன் சக்தி இட்டுச் செல்லும் தூரம் வரையிலும், பின் அதற்குச் சற்று மீறியும் கூட, செயல்படவேண்டும் என்ற ஒரு துடிப்பு மணியிடம்  இயங்கிக் கொண்டிருந்தது என்பதைச் சொல்லத்தான். மணி தூண்டியதால் மட்டுமே எல்லாம் நடந்துவிடும் என்று சொல்லவில்லை. இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகள் எல்லாமே பெரும்பாலும்  உரையாடல்களாலேயே உருவானவை என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். நாடகாசிரியராக இ.பா. உருவானது போல, கே.எஸ். சீனிவாசன் உருவாகவில்லையே. சந்தியோடு அவரது நாடக நுழைவு நின்றுவிட்டது. 'எனக்கு நாடகம் பார்ப்பதில் ஆர்வம் இருந்ததில்லை. எப்படி இருட்டில் இரண்டு மணி நேரம் சும்மா அப்படியே உட்கார்ந்திருப்பது?' என்று ஒரு காலத்தில் சொன்னவர் இ.பா. "தப்பு பண்ணிட்டேய்யா, மழையை நாவலா எழுதியிருக்கலாம்" என்று சுஜாதா சொன்னதாகவும் இ.பா. சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் மீறி இ.பா. தொடர்ந்து நாடகம் எழுதியதும் பெரிய விஷயம் தான் இல்லையா? இதற்குப் பிள்ளையார் சுழி இட்டது மணி தான்.

எனக்குத் தெரிந்து தக்ஷிண பாரத் நாடக சபாவோ மணியோ தமிழ் நாட்டு சபா நாடகங்கள் பக்கம் திரும்பவில்லை என்று தான் நினைக்கிறேன். அது மட்டுமில்லை. 1973-ல் இ.பா வின் நாடகங்கள் தில்லி தக்ஷிண பாரத் நாடக சபாவால் சென்னைக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. அடுத்த நாடகமான போர்வை போர்த்திய உடல்கள் தில்லியில் மேடையேறியதும் அதை அஃ பத்திரிகையில் மேடைக் காட்சிகளின் புகைப்படங்களோடு வெளியிடவேண்டும் என்று எண்ணினேன். அப்போது தொடங்கியது தான் மணியோடுடனான  எனது  நெருங்கிய  பழக்கம். புகைப்படங்களுக்காக மணியை அவருடைய  அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது அவர்  பார்லிமெண்ட் ஸ்ட்ரீட்டில்  உள்ள UCO Bank கட்டிடத்தில் ஏதோ ஒரு பிர்லாவிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சில வருடங்கள் கழிந்து மணி சுய சம்பாத்தியக்காரராக மாறிவிட்டார். அதில் அவர் வெற்றியுமடைந்திருந்தார். சங்கீதம், நாடகம் என பல ஈடுபாடுகள் இருந்த போதிலும், சினேகங்களைப் பேணுவதிலும், முடிந்தவரை நண்பர்களுக்கு உதவும் இயல்புடன், வாழ்க்கையின் லௌகீக விஷயங்களிலும் அவர் கெட்டிக்காரராகத் தான் இருந்தார். 'இது இருந்தால் அது இருப்பதில்லை' என்பது மணி விஷயத்தில் இல்லை.

சந்தியையும் மழையையும் தொடர்ந்து மணியின் நடிப்பையும் அவர் முயற்சிகளையும் நான் தொடர்ந்து பார்க்கும் வாய்ப்புக்களை தக்ஷிண பாரத் நாடக சபாவும் பின் அதைத் தொடர்ந்து எண்பதுகளில் தில்லி வந்த கி. பென்னேஸ்வரனின் நாடக ஈடுபாடும் தந்து கொண்டிருந்தன. மணியின் நாடக ஈடுபாடுகளும், நடிப்பும் அவரை மேலும் மேலும் என்ற தீவிர நாட்டம் கொண்டவராகக் காட்டியது. இருப்பினும் யாருடைய வளர்ச்சியும் நாடகம் அளிக்கும் வாய்ப்பைப் பொருத்துத் தானே அமையும்? அதை சி.சு.செல்லப்பாவின் 'முறைப்பெண்' நாடகத்தை பென்னேஸ்வரனின் யதார்த்தா மேடையேற்றிய போது, அந்த வாய்ப்பை மணிக்கும் அதில் நடித்த மற்ற நடிகர்களுக்கும் அந்த நாடகம் சிறப்பாகத் தந்தது. நவீன நாடக மோஸ்தரில் இருந்தவர்கள் யாரும் தொடாத செல்லப்பாவின் நாடகத்தை, கிராமச் சூழலையும் அதன் வாழ்க்கை மதிப்புகளையும் இயல்பாகப் பிரதிபலித்த முறைப்பெண் நாடகத்தைப் பென்னேஸ்வரன் எடுத்துக்கொண்டதும் நல்லதாயிற்று. தன் இயல்பில் வெள்ளையத்தேவராக நடித்த மணி என்ன செய்யமுடியும் என்பதை அந்த நாடகம் காட்டியது.

நான் சென்னை வந்துவிட்டேன். வந்த ஒரு சில வருடங்களிலேயே மணியும் சென்னை வந்துவிட்டது தெரிந்தது. அதற்கு வாய்ப்பு அளித்தது ஞான. ராஜசேகரனின் பாரதி படத்தில் அவர் பாரதியின் தந்தை சின்னசாமி அய்யராக நடித்தது. அதன் பின் அவர் பாரதி மணியாகவே அறிமுகப்படுத்தப்பட்டார். இங்கு பல திரைப்படங்களில் அவருடைய வயதுக்கும் நடிப்புத் தேவைக்கும் ஏற்ப சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வருகிறார். லெனின், ஜெயபாரதி போன்றோரின் வணிக நோக்கற்ற முயற்சிகளில் மாத்திரமல்ல, வணிக நோக்கிலான ரஜினி சாரின்  பாபா போன்ற பெரும் படங்களிலும் அவர் கோமாளித்தனம் வேண்டாத பாத்திரங்களில் நடித்து வருகிறார். ஒரு கோமாளித்தனமும் பைத்தியகாரத்தனமும் நிறைந்த உலகில் ஒரு நிதானத்தோடும் சுய நினைவோடும் உலவுகிறார் என்று தான் சொல்லவேண்டும். கூத்தாட்டம் போடுவதில்லை அவர். இருப்பினும் தமிழ் சினிமாவிலும், அது லெனினோ, ஜெயபாரதியோ, ஞான. ராஜசேகரனோ எவ்வளவு சாத்தியமோ அது வரை தான் செல்ல இயலும். இருப்பினும் சிலர் தம்மால் சில உயரங்களை எட்ட முடியும் என்று பசுபதி, ஷண்முக ராஜா போன்றோர், தமிழ் சினிமாவில் அந்த சாத்திய எல்லையை சற்று விஸ்தரித்திருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். அதுவே கூட வணிக வெற்றியாக மாறிவிட்ட இப்போதைய சூழலில் இது எத்தனை நாளைக்கு நீடிக்குமோ தெரியாது. 'இதோ பார் நான் நடிக்கிறேன் பார், என்னமா நடிக்கிறேன் பாத்தியா!" என்று சத்தம் போடாமல் கூத்தாட்டம் இல்லாமல் வாழ்வது தமிழ் நாடகத்திலும் சினிமாவிலும் சாத்தியமில்லை.

மணியின் சினேக வட்டம் மிக விஸ்தாரமானது. அனுபவ உலகமும் மிக விஸ்தாரமானது. இவ்வளவு விஸ்தாரமானதா என்பதைப்பற்றி நாம் சாதாரணமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அதைப் பற்றியெல்லாம் சொல்லி அவர் அலட்டிக் கொள்வதில்லை.  வியப்பூட்டும் அளவுக்கு விஸ்தாரமானது. அதை இப்போது அவர் எழுதி வருவதிலிருந்து தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 'ராஜீவ் காந்தியாவது, ஷேக் ஹஸீனாவாவது, மனுஷன் அளக்கறார்' என்று தோன்றலாம். இல்லை......அவர் சொன்னவற்றில்  சொல்லாமல் விட்டது தான் நிறைய உண்டு. சொல்லாமல் விட்டதற்கு அந்தந்த சந்தர்ப்பங்களில் தனித்த காரணங்கள் இருக்கலாம். "வேண்டாம், இவரைப் பற்றிய இந்த விஷயங்களைச் சொல்லி, அவர் சம்பாதித்துக் கொண்டிருக்கும்  பெயரைக் கெடுக்க வேண்டாம்" என்ற ஸ்வதர்மம் காரணமாக இருக்கலாம். அல்லது "இந்த சம்பவத்தைப் பற்றி இந்த இடத்தில் இப்போது சொல்லவேண்டாம்" என்ற இடம் பொருள் ஏவல் காரணமாக இருக்கலாம். அவரிடம் சொல்வதற்கு நிறையவே இருக்கிறது. சங்கீத உலகம் பற்றிச் சொல்வதற்கும் நிறையவே அவரிடம் உண்டு. தில்லியில் பழமையான கர்நாடக சங்கீத சபாவுக்கு செயலராக இருந்தவர். அங்கும் எல்லா சங்கீத வித்வான்களுடனும் அவரது சினேக வட்டம் பரந்தது. சாதாரணமாக இது பற்றியெல்லாம் சொல்லி அவர் அலட்டிக் கொள்வதில்லை. அதுவும் ஒரு ரசனை தான்.

இதை மணி விஷயத்தில் சொல்வதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். நல்ல ரசனை உள்ளவர்.  சங்கீத அனுபவத்தில் மாத்திரமில்லை. சினேக வெளிப்பாட்டிலும் சரி. மது அருந்துவதில் கூட அவரது அமைதியும் ரசனையும் சுகமானது, ரசிக்கவைப்பது. நான் அவரோடு கழித்த எந்த இரவும் மது அருந்தாத இரவாக இருந்ததில்லை. க.நா.சு. குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும்போது கூட மணியின் அறையில் அவரது பார் காட்சி தரும். தில்லியிலிருந்து சென்னையில் நடந்த N.S.D. நாடகப் பட்டறைக்கு அவர் வந்து பதினைந்து நாட்களே தங்குவதாக இருந்தாலும், அவரோடு அவர் பார்-ம் அவர் அறைக்கு வந்து விடும். வெத்திலைச் செல்லம் இல்லாது எந்த சங்கீத வித்வான் தன் இடத்தை விட்டு நகர்வார்? சோடா மேக்கர் இல்லாது, ஐஸ் பாக்ஸ் இல்லாது மணி எங்கும் நகர்வது இல்லை. அந்த மணி இப்போது சில வருடங்களாக மதுவைத் தொடுவது கூட இல்லை. ஆச்சரியம் தான். மது அருந்துவது ஒரு ரசனை என்றேன். ஒரு அனுபவம் என்றேன். வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பதில் மதுவும் சேர்ந்தது தான் அவருக்கு. நண்பர்களோடு கூடி அளவளாவுவது போல, நன்றாக ரசித்து சாப்பிடுவது போல, நல்ல கவிதையும் சங்கீதமும் கேட்பது போல. இதை அலங்கோலமாக்கும் (டாஸ்மாக் கடைக் கூட்டத்தை விட்டு விடுவோம்) தமிழ் இலக்கிய கலை உலகப் பிரமுகர்களை அவரும் அறிவார், நானும் அறிவேன். எதுவும் வாழ்க்கைக்கு அழகு சேர்க்க வேண்டும். ஒருவரின் நட்பின் ஆழத்தையும் தீவிரத்தையும்  இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மாத்திரமே நான் அறிந்துகொண்டது என் அனுபவத்தில் உண்டு. கூடவே உருது கவிதைகளும் மணம் சேர்க்கும். இந்த அமர்வுகளில், உருது படிக்க எழுதத் தெரியாத நான் கற்றுக்கொண்ட உருது கவிதைகளே நிறைய..... மங்கி வரும் நினைவுகளில் தங்கிய ஒன்று:

பிஸ்தர் கி சில்வட்டோன் ஸே பூச், பேகராரி உஸ்கி
ஜிஸ்மே வஹ் காட்டீ ஹோ ராத், கர்வட் பதல் பதல்கர்.

உமர்களையும் கய்யாம்களையும் நாம் இங்கு சந்திக்கலாம். இம்மாதிரி கவிதைகள் மதுவோடு கிடைக்குமென்றால் அதன் அழகையும் ரசனையையும் பற்றி வேறென்ன சொல்லவேண்டும்?

**** ***** ****        

1970 என்று நினைக்கின்றேன். அன்று தில்லியில், ரஃபி மார்கிலிருந்த ஐஃபாக்ஸ் (AIFACS) அரங்கில் தட்சிண பாரத நாடக சபாவினர் ஒரு புதிய நாடகம் மேடையேற்றுவதாக இருந்தனர். அன்று மாலை ரீகல் பார்க்கில், ராஜாஜியின் தலைமையில் 'சோ' பேசுவதாக இருந்தார். கூட்டம் ஐந்தரை மணிக்கு. நாடகம் ஏழு மணிக்கு. தமிழர்கள் யாரும் நாடகம் பார்க்க வரமாட்டார்கள் என்று சத்தியம் செய்தனர் பலர். ஆனால், ஒரே ஒருவர்தான், புதிய நாடகம் பார்க்க நிச்சியமாக வருவார்கள் என்று உறுதியுடன் சொன்னார். அவ்வளவு நம்பிக்கை அவருக்கு, அவருடைய சபா அங்கத்தினர்களிடம்.

ஏழுமணிக்கு அரங்கம் நிறைந்து வழிந்தது. அன்று அவ்வாறு சொன்னவர், அன்று எஸ்.கே.எஸ். மணியாக இருந்த இன்றைய பாரதி மணி. நாடகம், ‘மழை'. என்னுடைய முதல் நாடகம்.

அந்த நாடகத்தை நான் எழுதும்போது, யார் இதை மேடையேற்றுவார்கள் என்பதைப் பற்றி நான் யோஜிக்கவில்லை. ஆனால், இது மட்டும் என்னால் சொல்லமுடியும், அது அப்போது மணி மூலம் மேடை ஏறாமலிருந்திருந்தால், தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடை ஏறுவதற்கு முழு காரணமாக இருந்தவர் மணி தான்.

மழை' நாடகம் அவ்வாண்டு தில்லி மாநில அரசின் அனைத்திந்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதைவிட மகத்தான பரிசாகிய மணியின் திருமணம் நிகழ்வதற்கும்மழை' காரணமாக இருந்தது.

மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது. பொதுவாக, தொழில் துறையில் பணி புரிகின்றவர்களுக்குக் கலைத்துறையைப் பொறுத்த வரையில் புரவலத்தன்மையான ஒரு மனோபாவம் இருக்குமேயன்றி, நல்ல ரஸனையுடன் கூடிய ஈடுபாடு இருக்காது. இந்த வகையில், பிர்லா நிறுவனத்தில் அப்பொழுது பணி புரிந்த மணியின் நுணுக்கமான ரஸனை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.

தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை அவர் வீட்டில் தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது..

மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்' என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத  தென்னிந்தியக் கலாசாரக் குழு எதுவுமில்லை.

“ ‘முடியாது' என்பது என் அகராதியில் கிடையாதுஎன்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்த வரையில் மிகவும் பொருந்தும்.


அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சர்யப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பதுதான் என் ஆச்சர்யம்!