Friday, January 22, 2016

உயிர்மை பத்திரிகை தொடங்கி, ஒன்பதாவது ஆண்டில், அதன் 100-வது இதழ்வெளியாவதையொட்டி, தமிழ் எழுத்தாளர்கள் நூறுபேரிடம் ஒரு கேள்வி கேட்டு, அதற்கு பதிலாக ஒரு சிறிய கட்டுரை கேட்டிருந்தார்கள். அந்த நூறு பேர்களில், மனுஷ்ய புத்திரன் என் பெயரையும் ஞாபகம் வைத்திருந்தது என் பாக்கியம். எனக்கு வந்த கேள்வி: ‘க.நா.சு.வைப்பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் ஏதேனும்..’ அவர் நூற்றாண்டு விழாவுக்காக, அவரைக்குறித்து நிறைய எழுதிவிட்டேன். இருந்தாலும், நாய், பூனைகளிடம் அவர் வைத்திருந்த அன்பும், பாசமும் பற்றி அதிகமாக வெளியில் தெரியாது. அதைப்பற்றி எழுதலாமே என்று தோன்றிற்று.
க.நா.சு.வுக்கு நாய்களிடமும், பூனைகளிடமும் உள்ள பிரியம் அதிகமாக பலருக்குத்தெரியாதது. எனது திருமணத்துக்கு முன்பே அவர் வீட்டில் நாய்களும் பூனைகளும் பவனி வந்தன. பூனைகளுக்கு அவ்வப்போது பெயர்கள் மாறும். ஆனால் நாய்கள் மாறினாலும், ஆண்நாய்களுக்கு கார்ட்டூனில் வரும் முட்டாள் நாயான (Goofy) கூஃபி என்ற பெயரும், பெண் நாய்க்கு (Dolly) டாலி என்ற பெயரும் நிரந்தரம். அவருக்கு ஜாதி நாய்களை வளர்ப்பதில் விருப்பம் இருந்ததில்லை. ‘Pedigree வளர்க்க நெறையப்பேர் இருக்காளே…..நம்ம ஸ்ட்டேடசுக்கு தெருநாய்கள் தான் சரி’ என்று தெருவில் அனாதைகளாகத் திரியும் நாய்க்குட்டிகளை கொண்டுவந்து வளர்ப்பார். கூஃபி, டாலி என்று நாமகரணமும் நடக்கும்! வீட்டில் நாய்கள் அஃறிணையாக அறியப்பட்டதேயில்லை. ’ராஜி! டாலி வெளீலெ போயுட்டு வந்தாளா?…….கூஃபிக்கு மருந்து குடுத்தியா?…. இன்னிக்கு ஒழுங்கா சாப்ட்டானா?’
ஒரு தடவை நாய்க்குப் பயந்த ஒரு பிரபல எழுத்தாளர், கநாசுவை பார்க்க வருமுன், ‘நாய்களை இன்னொரு ரூம்லே கட்டிப்போட்டுடுங்கோ!’ என்று கண்டிஷன் போட்டதும், “அப்படியானா நீங்க வரவேண்டாம்….  என் நாய்களைப்பத்தி எனக்குத்தெரியும்….. நீங்க நாயை கடிக்காமெ விட்டா சரி!’ என்று பதிலளித்தார்.
ஆரம்பகாலத்தில், நாய்களுக்காக வாரம் இருமுறை இறைச்சி வாங்கிவந்து, சமைத்துப்போடுவோம். நாளடைவில் அவைகளும் எங்களைப்போல் ‘வீர சைவர்’ களாகி விட்டன! பால் சாதமும் தண்ணீரும் சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் ஆரோக்யமாகவே வளர்ந்தன! சாப்பிடும்போது, அவனது தட்டைப்பிடுங்கினால் கூட, கடிக்கத்தெரியாத நாயாக வளர்ந்தான் கூஃபி!
பாரதி மணி திருமணத்தின் போது க.நா.சு. தம்பதியர்…
மழை’ நாடகம் எழுதி முடித்ததும், இ.பா.வுக்கு நான் போட்ட கண்டிஷன் நாடகத்துக்கான கதாநாயகியையும் அவரே தேர்வுசெய்து தரவேண்டும் என்பது தான். ’டிபன்ஸ் காலனியில் க.நா.சு.வின் மகள் ஜமுனா நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் கநாசுவைப்போய்ப்பாருங்கள்’ என்று இ.பா. சொன்னதும், நான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, திறந்திருந்த அவர் மேசை ட்ராயரிலிருந்து, பிறந்து ஒருவாரமே ஆகியிருந்த கறுப்பு பூனைக்குட்டியொன்று எட்டிப்பார்த்து, மேசைமேலே ஏற முயற்சித்தது. அடுத்தது இன்னொன்று. பாரதி சொன்னது போல், ‘சாம்பல் நிறமொரு குட்டி; கருஞ்சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி; வெள்ளைப்பாலின் நிறமொரு குட்டி’ …… இப்படி மேசை மேல் பலப்பல குட்டிகள். அவர் இதையெல்லாம் கவனிக்காது பேசிக் கொண்டேயிருந்தார்!
முதலில் வளர்த்த நாய்கள் இறந்துபோனபோது, இன்னும் இரண்டு நாய்களை தெருவிலிருந்து கொண்டுவந்து அவைகளுக்கும் கூஃபி, டாலி என்றே பெயர் வைத்தார். தன் அறையில் படுத்திருக்கும் கூஃபிக்கு தான் எழுதிமுடித்த புதுக்கவிதைகளை குரல் ஏற்ற இறக்கத்துடன் படித்துக்காண்பிப்பார். அவனது ஒப்புதலோடு தான் பத்திரிகைக்கு அனுப்புவார்! ஒருநாள் வேடிக்கையாக, ‘மணிக்கு கிடைத்த வரதட்சிணை ரெண்டு நாயும், ஒரு மாமியாரும் தான்!’ என்று சொன்னார். வீட்டில் நாய்கள் இருந்ததால், எல்லோருமாக சேர்ந்து வெளியூருக்கு போனதேயில்லை. ஒரு தடவை போக நேர்ந்தபோது, அவைகளை தில்லியில் திருமதி கிரிஸ்டல் ரோஜர்ஸ் நடத்திவந்த ‘பிராணிகளின் நண்பன்’ நாய்கள் இல்லத்தில் விட்டு வைத்திருந்தோம்.
1988-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தில்லியில் க.நா.சு. மறைந்த தினத்தன்று அவரது பிரியமான கூஃபி மெளனமாக எல்லாவற்றையும் அழுகையோ முனகலோ இல்லாமல், படுத்துக்கொண்டே பார்த்திருந்தது. நாய்களுக்கு இதெல்லாம் எப்படித்தெரியும்? பிறகு ஒரு வாரத்துக்கு சோறு தண்ணீர் சாப்பிடாமல், ஒருமூலையில் படுத்துக்கிடந்தது. இந்த கூஃபியைப்பற்றி க.நா.சு. ஓரிரு புதுக்கவிதைகளும் எழுதியிருக்கிறார்.
—0000oooo0000—-
சாகித்ய அகாதெமி விருதன்று, கமானி அரங்கில் கநாசு தன் பேத்தி,  நா.பா.,  இ.பா.வுடன் பாரதி மணி – 1986… 
கநாசுவின் ‘கூஃபி’ கவிதை கீழே:

0 comments:

Post a Comment