‘ஒருத்தி’ படத்தில் பாரதி
மணிக்கு கீதாரியாக முக்கிய வேடம் கொடுத்தேன். திரைப்பட நடிகர்கள் அவர்கள்
வேடத்தைப் புரிந்து கொண்டு இயக்குநரின் வழிகாட்டலுடன் தங்கள் பாணியில் அதை செய்து
விடுவார்கள். மணி விஷயத்தில் நான் படக்கதை முழுவதையும் எடுத்துக் கூறி அவரது
கதாபாத்திரம் பற்றியும் நிறைய தெளிவு படுத்தினேன். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இருந்தாலும் நாடகத்தில் நடிப்பது போலவே
படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தானே படித்து பிறகு அதில் வரும் தனது கதாபாத்திரத்தை
மனதில் உருவாக்கி கொள்ள முடியவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு இருந்ததை பின்னால் அறிந்து கொண்டேன். மனப்பழக்கத்தால்
ஒரு நாடக நடிகராக இருந்தாலும் திரைப்படத்திற்கேற்ற நடிப்பினையும் அவரால் எளிதில்
கொண்டுவர முடிகிறது. தனது கதாபாத்திரத்தை ஆழ்ந்து அனுபவித்து வெளிப்படுத்தும் பாணி
அவருடையது. அல்காஷியின் மாணவர், க.நா.சு.வின் மருமகன் என்றெல்லாம்
அறிமுகமாகி பலகாலமாக இனிய நட்பு கொண்டிருப்பவர்.
அவரது மற்றொரு
ஆளுமை அவரது எழுத்துகள். பரபரப்பு ஆதாயம் தேடாத வெளிப்படையான எழுத்தின் மூலம்
உயர்மட்ட டெல்லி வாழ்க்கையை தமிழ் வாசகர்கள்
அனுபவிக்குமாறு செய்திருக்கிறார். டெல்லி வாழ் தமிழ் எழுத்தாளர்களிடம்
கிடைக்காத ஒரு அண்மைத்தன்மையை நான் அவருடைய எழுத்துகளில் காண்கிறேன். முன்பெல்லாம்
யாராவது அவரைப்பேச அழைத்தால் `கையில் ஸ்கிரிப்ட் இல்லை.
எனவே என்ன பேசுவது என்று தெரியவில்லை` என்று கூச்சத்துடன்
உரையை முடித்து கொள்வார்.
சுவாரஸ்யத்துடன்
பல புத்தகங்கள் எழுதக்கூடிய அளவிற்கு அவரிடம் திறமையும் அனுபவங்களும் இருப்பதை
அவர் எழுத்துகளைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து கொள்வார்கள்.
---- ஒருத்தி
இயக்குநர் அம்ஷன் குமார்
0 comments:
Post a Comment