Saturday, January 23, 2016

இப்போதும் எனக்குப் பிடித்த ரயில் பயணத்தின்போது, எதிர் இருக்கையிலிருப்பவர் லேட்டாக வந்துவிட்டு, மேல் முச்சு வாங்க ‘என்ன சார் ரயில் விடறாங்க, ஒண்ணுமே சரியில்லே . . .’ என்று ஆரம்பிக்கும்போது, எனது பலமான பீச்சாங்கையால் பளீரென்று ஒரு அறை விடவேண்டுமென்ற தணியாத வேட்கை வரும். அந்தப் பிரயாணம் முடியும் வரை அவரை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். என்னைப்பொறுத்தவரையில், இன்றைய இந்தியன் ரயில்வேயைக்குறை கூறுபவர்கள் சிவன்கோவிலில் விளக்கணைத்த பாவத்துக்கு ஆளாவார்கள். ரயில்வண்டியின் மீது எனக்கு அளவில்லாத மோகம் எப்போதும் உண்டு -சொல்லப்போனால் திரு. லாலு (லல்லு அல்ல) பிரசாத் யாதவைக்காட்டிலும். அவரது காதல் அவர் ரயில் மந்திரியாக இருப்பதுவரை மட்டுமே நிலைக்கும். இந்த மோகம் நான் சிறுவனாக இருக்கும்போதே தொடங்கிவிட்டது. திருவனந்தபுரத்தில் ரயில்வே ஸ்டேஷன் என் வீட்டிலிருந்து கூப்பிடுதூரம்தான். தினமும் மாலைவேளைகளில் தீப்பெட்டிப்படம்/ஸ்டாம்புகள் பொறுக்க யார்டிலுள்ள குப்பைகளையெல்லாம் கிளறுவோம். வெள்ளி-சனிகளில் ஆனந்தவிகடன், கல்கி மதராஸ் மெயிலில் வந்திறங்கும். பிளாட்பாரத்திலேயே கட்டுப்பிரித்தவுடன் நாலணா கொடுத்து வாங்கி, புதுப்புத்தக மணத்துடன் அங்கேயே சுடச்சுடப் படிப்பது சுகமான அனுபவம்.
இந்தியன் ரயில்வே நாம் அன்றாடம் அர்ச்சனை செய்யும் மத்திய அரசைப்போல-நாம் எவ்வளவுதான் குறை கண்டாலும், நம் அரசியல்வாதிகளையும் மீறி அவை கடந்த வருடங்களில் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மனிதன் மணிக்கணக்கில் அலுக்காமல் ஆசையோடு பார்த்து மகிழும் அதிசயங்களில் – நிலா, கடல், யானை – நான் தூரத்திலிருந்து பார்க்கும் ரயில் வண்டியையும் சேர்த்துக்கொள்வேன். இந்தியாவுக்குள் அலுவலக வேலைகளுக்காக பிரயாணம் மேற்கொள்ளும் போது, ரயில் பயணம் தான் என் முதல் சாய்ஸ். (அந்த இரு நாட்களுக்காவது அலுவலகக் கழுத்தறுப்பு இருக்காதே). முடிந்தால் லண்டனுக்கும் ரயிலில் போக நான் தயார்.
கோடைக்காலங்களில் தில்லியிலிருந்து சென்னை போக டிக்கெட் ரிஸர்வ் செய்வதென்பது பிரும்மப்பிரயத்தனத்தையும் மீறிய தெய்வச்செயல். ரிஸர்வேஷன் என்றால் இப்போதைய படுக்கை வசதியல்ல. ஒரு பக்க இருக்கையில் நான்குபேர் உட்காருவதற்கானது. வெயில் காலத்தில் இரு பகல் இரவு நேரங்கள் தூங்காமல் உட்கார்ந்துகொண்டே வருவது பிரயாணமல்ல, நாம் வளர்ந்த கிராமத்தை விட்டு தில்லிக்கு ஓடிவந்ததால் கடவுள் நமக்கு அளித்த தண்டனை. பலவருடங்களுக்குப் பிறகுதான் படுக்கும் வசதி வந்தது. எழுபதுகளில்தான் ஏ.ஸி. சேர் கார் அறிமுகப்படுத்தினார்கள். எண்பதுகளின் மத்தியில் தான் ஸ்லீப்பர் கோச்சும் அதன்பிறகு A.C.Sleeper-ம் அறிமுகப்படுத்தப்பட்டன.
நான் STC-யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இரு வருடங்களுக்கு ஒருமுறை தன் சொந்த ஊருக்குப் போய்த்திரும்ப Leave Travel Concession அமுலுக்கு வந்தது. என் அலுவலகத்தில் எனக்குத்தான் பெரிய தொகையாக சாங்ஷன் ஆகும். தில்லியிலிருந்து கன்யாகுமரி வரை போக வேண்டாமா? ஐம்பதுகளில் நான் மட்டுமே தில்லியிலிருந்து பார்வதிபுரம் வரை போகத் தரைமார்க்கத்தில் உபயோகமாகும் எல்லாவித வாகனங்களையும் பயன்படுத்தியவனாக இருந்திருப்பேன். தில்லி வீட்டிலிருந்து ஸ்டேஷன் போக பட்பட்டி, பிறகு ப்ராட்கேஜில் ஓடும் ஜி.டி. எக்ஸ்பிரஸ், சென்னை ஸென்ட்ரலில் இருந்து எக்மோர் போக டாக்ஸி, அங்கிருந்து மீட்டர் கேஜில் ஓடும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (அப்போது நெல்லை எக்ஸ்பிரஸ் பழக்கத்தில் இல்லை, டின்னவேலி எக்ஸ்பிரஸ்தான்). திருநெல்வேலி வரைதான் ரயில்பாதை. அங்கிருந்து Southern Railway Out Agencyயாக பயனீர் பஸ்ஸில் நாகர்கோவில் வரை பேருந்துப்பயணம். அங்கிருந்து பார்வதிபுரம் போக மாட்டு வண்டி.
ஒவ்வொரு வருடமும் (அக்கா) குழந்தைகளின் பள்ளிக்கூட விடுமுறையில் ஊருக்குப் போவதென்பது ஒரு பெரிய சடங்காகவே நடக்கும். தில்லிக்கோடைக்கு பயந்து ரயிலில் நான்கு நாட்கள் வறுபட்டு சித்திரை-வைகாசி வெயிலுக்கு வேக பார்வதிபுரம் வந்துவிடுவோம். இப்போதைப்போல கம்ப்யூட்டர் பதிவுநிலையத்தில் பத்துநிமிடக் காத்திருப்புக்குப்பிறகு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுடன் வெளியே வரமுடியாது. ஐம்பதுகளில் தில்லியிலிருந்து சென்னை வரகிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸும் ஜனதா எக்ஸ்பிரசும்தான்ஜி.டி.யையே விரும்புவார்கள். அக்காலத்தில் 24 பெட்டிகள் கொண்ட ரயிலை இழுக்கும் எலக்ட்ரிக் எஞ்சின்     வந்திருக்கவில்லை. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஓடிக்கொண்டிருந்தன. ஜனதா சரியான நேரத்துக்கு தில்லியிலிருந்து புறப்படுமேயல்லால், மூன்று இரவு-இருபகல் பிரயாணத்துக்குப்பிறகும் எப்போது சென்னை வந்து சேருமென்பது அப்போதைய ரயில்வே மந்திரி ஜக்ஜீவன் ராமுக்கே தெரியாது. வழியில் எந்த பிளாட்பாரத்தைப் பார்த்தாலும், உடனே நிற்கவேண்டுமென்ற தணியாத ஆசை அதற்குண்டு. குறுக்கே ஒரு எருமைமாடு போனாலும், ரயில் நின்று அதற்கு வழிவிட்டு பிறகுதான் மெதுவாகத்தொடரும். அதனால் தொலை தூரப்பயணிகள் அதை விடுத்து – போன ஜன்மத்தின் பிரும்மஹத்தி தோஷம் இருந்தாலொழிய – கிடையாது. தயங்கித்தயங்கி 14 பெட்டிகளை இழுக்கும் நிலக்கரியைக் கபளீகரம் செய்யும் நீராவி எஞ்சின்களே பயன்படுத்தப்பட்டன.
பிரயாணத் தேதிக்கு ஒருவாரம் முந்தி தான் பதிவுசெய்ய முடியும். அதிகாலை ஆறுமணிக்குத் திறக்கும் கௌண்டருக்கு முன்னால் முந்தைய மாலையே க்யூ ஆரம்பித்துவிடும். நான் ஜமுக்காளம், தலையணை, விசிறியுடன், இரவு உணவு, படிக்க பத்திரிகைகள் சகிதம் மாலை ஆறுமணிக்கே புதுதில்லி ஸ்டேஷன் போனால், எனக்கும் முந்தி இருபது பேர்கள் காத்திருப்பார்கள். அதில் பலர் எனக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். நானே சட்டாம் பிள்ளையாக சட்டம் ஒழுங்குமுறை, அமைதியான வகையில் க்யூ பாலித்தல் பற்றி ஒரு சிறிய உபதேசம் நல்கிவிட்டு, வீட்டில் தயாரித்துக் கொண்டுசென்ற என் கையெழுத்துடன் கூடிய நம்பரிட்ட டோக்கன்களை எல்லோருக்கும் வினியோகிப்பேன். சீனியாரிட்டிப் பிரகாரம் எனக்கான 23-ம் நம்பர் டோக்கனையே எடுத்துக் கொள்வேன். இது எல்லோரிடமும் என்மீது ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கும். எல்லோரும் கடைசிவரை கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் சில: டோக்கன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போய் விடக்கூடாது, ஒருமணிக்கொருதரம் அட்டெண்டென்ஸ் எடுக்கப்படும். கண்டிப்பாக புதுதில்லி ஸ்டேஷன் அருகிலிருக்கும் ஷீலா தியேட்டரில் தலைவருக்குத் தெரியாமல் இரவுக்காட்சிக்குப் போவது, டோக்கன் பறிமுதலுக்கு வழிவகுக்கும்.   சாயா குடிக்க, டாய்லெட் போக முன் அனுமதி கண்டிப்பாகத் தேவை. இரவு இரண்டுமணிக்கு ஸ்டேஷனைத் தண்ணீர்விட்டுக் கழுவிவிட ஆட்கள் வரும்போது தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியே போய்விடவேண்டும். கடும் ஸம்மரானதால் கழுவிவிட்ட மூன்றாம் நிமிடமே காய்ந்துவிடும். அதன்பிறகு க்யூவரிசை தவறாமல் திரும்ப வரவேண்டும். அதிகாலை ஆறுமணிக்கு ‘சொர்க்கவாசல்’ திறக்கும்போதுதான் நமக்குள் ஒற்றுமை அவசியம். வெளியாட்கள் நம் க்யூவை உடைக்காமல் பரிபாலிப்பது நம் கடமை. எல்லாவற்றையும் வாரியார் பிரசங்கம் போல் செவிசாய்ப்பார்கள். இரவு மூன்று மணியிலிருந்து ஐந்தரை வரை பொழுது போவது பெரும்பாடாக இருக்கும். பிறகு எல்லோரும் வைகுண்ட ஏகாதசிக்கு கதவு திறக்கக் காத்திருப்பதுபோல் ஒழுங்காக வரிசையில் நிற்பார்கள். ஆனால் ஆறுமணிக்கு கேட் திறக்கும்போதுஎம்.ஜி.ஆர் படத்துக்கு கிராமத்துக் கொட்டகைகளில் நிகழும் அடிதடி தள்ளல் நெரிசலோடு ஒரு கூட்டம் எங்கிருந்து வருமோ தெரியாது, முதலில் நின்றவர் கடைசியில் கையில் விண்ணப்பத்தாளுடன் சோகமாக நின்றுகொண்டிருப்பார். அப்போதுதான் நுழைந்த தரகர் முகத்தில் புன்னகையும் கையில் டிக்கெட்டுமாக வெளியே வருவார். அரைமணி நேரத்தில் அன்றைய எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து ஷட்டரை மூடிவிடுவார்கள். அடுத்தநாள் மறுபடியும் ‘அடியைப்பிடியடா பாரதபட்டா.’ கடைசியில் வேறுவழியில்லாமல் இன்னும் இருதடவை நடந்து, வியாழக்கிழமை புறப்படும் ரயிலில் உட்கார இடம் கிடைக்கும். காரணம் வியாழனன்று ‘தெற்கே சூலம்.’ நீண்ட பயணமாதலால், நம்பிக்கையுள்ளவர்கள் ஹோல்டால் கட்டமாட்டார்கள். இதெல்லாம் தில்லியில் நான் எனக்கான ஒரு விலாசத்தைத்தேடிக்கொண்டிருந்த நாட்களில் நடந்தவை. எனக்கென்று தனியாக தெம்பும் அடையாளமும் வந்தபிறகு, பார்லிமென்ட் அலுவலகத்தில் எம்.பி.க்களுக்கான ரயில்வே புக்கிங் ஆபீசில் நண்பர்கள், ரயில்வே போர்டில் உயர் அதிகாரிகள் பழக்கமானார்கள். மந்திரி வந்து அவர் லிஸ்டைக் கொடுக்காத வரையில் Headquarters Quota-வில் டிக்கெட் confirm ஆகிவிடும். ஒரே பிரச்சினை ரயில் கிளம்புவதற்கு ஒருமணி நேரம் வரை திரிசங்கு சொர்க்கம். சார்ட் வந்தபிறகுதான் பயணம் உறுதியானது தெரியும்.
ரிஸர்வேஷன் வந்த புதிதில் வண்டி ஆக்ரா தாண்டினதுமே, உத்தர்பிரதேச பையாக்கள் இந்தப்பெட்டியில் மட்டும் ஏன் கூட்டமில்லையென்று இங்கே படையெடுப்பார்கள். கக்கூஸ் அருகில் இருக்கை கொண்ட ஒரு  கரோல்பாக் மாமா கையில் கம்பில்லாத குறையாக, ‘யே ரிசர்வ் கம்பார்ட்மென்ட் ஹை, அந்தர் ஆனா மனா ஹை’ என்று குதிரையோட்டிக்கொண்டிருப்பார். சிலர் பயந்து அடுத்தபெட்டி நோக்கி நகர்வார்கள். இன்னும் சிலர், ‘ஹம் பீ ரிஜர்வ் . . . தும் ஆஸ்மான் ஸே டபக் படா . . . க்யா?’ என்று உள்ளே நுழைய முயற்சிப்பார்கள். இரவுநேரங்களில் ‘மாமா’வுக்குத் தூக்கம் கோவிந்தாதான். இந்தத் தொந்தரவு வெவ்வேறு மொழிகளில், வண்டி பேசின் பிரிட்ஜ் வரும்வரையிலும் தொடரும்.
வரும் வழியில் GT எக்ஸ்பிரஸ்லூப்லைன் போடாத காரணத்தால், வார்தாவிலிருந்தும், காஸிப்பேட்டிலிருந்தும் புறப்படும்போது வந்தவழியே பின்னோக்கி ஓடத்துவங்கும். அம்மாக்கள் குழந்தைகளிடம் ‘மம்மம் சாப்பிட படுத்தினியோல்லியோ, திரும்ப டெல்லிக்கே போறான். ஊருக்குப்போய்  தாத்தா பாட்டியைப்பாக்க முடியாது’ என்று பயமுறுத்துவார்கள். நாக்பூர் போவதற்கு முன்னர் விந்தியமலையைக்குடைந்து போடப்பட்ட டனல்களை, ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பிப்பார்கள்.
புகை எஞ்சின் ஆதலால், தில்லியிலிருந்து சென்னை வருவதற்குள் கரிப்பொடியால் எல்லாப்பயணிகளுக்கும் வஞ்சகமில்லாமல் மேக்கப் போட்டு விடும். டாய்லெட் போய்விட்டு திரும்பி வருவதற்குள் நாம் இருந்த இடத்தை விரலால் தேய்த்தால், கரிப்பொடி அப்பியிருக்கும்.
சென்ட்ரலில் இறங்கியபின், தசாவதாரம் பூவராகன் போலிருக்கும் பயணிகளையும், அழைத்துப்போக வந்தவர்களையும் அதுவே வித்தியாசம் காட்டி விடும்.
நான் பிரும்மச்சாரியாக இருந்தவரை ஸம்மரில் அக்கா குழந்தைகளுடன்தான் GTயில் பயணம். நிற்கும் ஸ்டேஷன்களில் தண்ணீர் பிடிப்பதைத்தவிர வேறு பொருட்கள் வாங்கவேண்டிய அவசியமிராது. ஒரு தூக்கு நிறைய நல்லெண்ணெய் மிளகாய்ப்பொடிக் கலவையில் ஊறவைத்த இட்லி, மற்றொன்றில் எண்ணெய் மிதக்கும் புளியோதரை, மூன்றாவதில் கொஞ்சம் தயிரும் மீதி பாலும் கலந்த தயிர்ச்சாதம். பாத்திரத்தைத் திறந்தாலே, கோச்சு முழுவதும் மணக்கும். அடுத்தநாள் வெயிலில் தயிர்ச்சாதம் புளித்துவிடும். அதற்கு ஸ்டேஷனில் நிற்கும்போது, சீனி கலக்காத ஒரு டம்ளர் பால் வாங்கிக் கலந்துகொள்ளவேண்டும். அப்போதெல்லாம் Pantry Car சமாசாரம் கிடையாது. போப்பாலிலோ நாக்பூரிலோ வண்டி நிற்கும்போது க்ரூட் ஆயில் போலிருக்கும் கறுத்த எண்ணெயில் பொரித்தெடுத்த பூரியும், உருளைக்கிழங்கும் பிலாச இலையில் வைத்துத் தருவான். ரயில் பசிக்கு அதுவும் ருசியாகத்தானிருக்கும். லாலு பிரசாத் அறிமுகப்படுத்தியும் பிரபலமாகாத குல்லட் எனப்படும் மண்குடுவையில்தான் தேநீர் கிடைக்கும். இரண்டாம்நாள் காலையில் விஜயவாடா ஸ்டேஷனில் இட்லி சாம்பாரைப் பார்த்ததும்தான் நம்மவர்களுக்கு உயிர் வரும்.
மெதுவாக ஆடி அசைந்து மதியச் சாப்பாட்டு வேளையில் கூடூர் வந்து சேரும். ஸ்டேஷன் வருமுன்பே ரயிலில் ரூ.2-க்கு சாப்பாட்டுக்கூப்பன் வாங்க வேண்டும். கூடூர் வெஜிடேரியன் ரூமில் வரிசையாக இலை போட்டுப் பரிமாறப்பட்டு, செம்பில் தண்ணீருடன் வைத்திருப்பார்கள். ரயில் நிற்பதற்கு முன்பே பந்தியில் இடம்பிடிக்க ஓடுவார்கள். ரூ.2-க்குவடை பாயசத்துடன் இன்றும் நினைவிலிருக்கும் சாப்பாடு. உட்கார்ந்தவுடன் கூப்பனைப் பிடுங்கிக்கொள்வார்கள். கடைசிப்பயணியும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்து ரயிலேறும் வரை ரயிலும், கார்டும், எஞ்சின் டிரைவரும் காத்திருப்பார்கள்.
பல ரயில்வே அமைச்சர்கள் இந்திய ரயில்வேயை தன் சொந்த ஜாமீனாகவே கருதி, அதன்படி ஆட்சி செய்தார்கள். A.B.A கனிகான் சௌத்ரி தன் தொகுதியான மால்டாவை ஒரு சொர்க்கபூமியாகவே மாற்றினார். கர்நாடகாவைச் சேர்ந்த ஜாபர் ஷெரீப் ரயிலில் போகும்போது இரவு இரண்டுமணிக்கு பெயர் தெரியாத ஒரு ஸ்டேஷனில் ஐஸ்கிரீம் வேண்டுமென்று பிடிவாதம்பிடித்து இரண்டுமணி நேரம் ரயிலை நிறுத்தி வைத்தார். தற்போதைய ரயில்வே அமைச்சர் லாலுவின் மாமனார் மாமியார் ஒரு தடவை, ‘என் மருமகன் ரயில்மந்திரியாக இருக்கும்போது யார் எங்களிடம் டிக்கெட் கேட்கமுடியும்?’ என்று டிக்கெட் வாங்காமல் அடம்பிடித்தார்கள். ரயில்வே அமைச்சராக இருந்து ராஜிநாமா செய்த திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தாபானர்ஜி, மறுபடியும் மந்திரிசபையில் சேர அழைத்தபோது, லாலுவிடமிருந்து ரயில்வே அமைச்சரகத்தைப் பிடுங்கி திரும்பத் தன்னிடமே தரவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார். ரயில்வே அமைச்சர்களாக இருந்த கோபாலஸ்வாமி ஐயங்கார், லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜீவன் ராம், சிந்தியா, கனிகான் சௌத்திரி, ஜாபர் ஷெரீப் போன்றவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் திரு. மது தண்டவதே தான். அவர் அமைச்சராக இருக்கும்போது என் நண்பர் உண்ணி நாயருடன் அவர்   வீட்டுக்குப் போயிருக்கிறேன்.  பாராளுமன்ற அங்கத்தினராகவிருந்த தன் மனைவி பிரமீளா தண்டவதே சமையலறையிலிருந்து போட்டுக்கொடுத்த தேநீரை அவரே ஒரு ட்ரேயில் கொண்டுவந்து  கொடுத்தார். அவர் உடுத்தியிருந்தது வேட்டியும், வயிற்றுப் பக்கம் பை வைத்த கதர் பனியனும்.  அப்போது அவர் ஆபீஸ் சப்ராஸி வீட்டிலிருந்ததுகூட அவர் வீட்டில் கிடையாது – அதுதான் கலர் டி.வி.
இந்திய ரயில்வேயில் முதன்முதலாகAluminium Foil உபயோகத்துக்கு வந்ததைப்பற்றி ஒரு கதை உண்டு. தற்சமயம் காங்கிரஸ் வர்த்தக அமைச்சராகவிருக்கும் திரு. கமல்நாத்துக்குச் சொந்தமான India Foils Ltd. என்ற நிறுவனம் கல்கத்தாவில் இயங்கிவந்தது. ஏற்றுமதிக்காகத் தயாரித்த சுமார் 600 டன்னுக்கும் மேலான அலுமினியத்தாள் தரக்கட்டுப்பாடு காரணமாக நிராகரிக்கப்பட்டது. கோடிக்கணக்கில் மதிப்புள்ள சரக்கை இந்திய மார்க்கெட்டில் வாங்க யாருமில்லை. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற கவலையிலிருந்த கமல்நாத் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த தன் நண்பர் திரு. மாதவ்ராவ் சிந்தியாவிடம் சென்று முறையிட்டதாகவும், இருவாரத்துக்குள்ளாக, இந்திய ரயில்வே போர்டு தன் கீழ் இயங்கும் Catering Department-க்கு இனி பிரயாணிகளின் உணவு வழங்க Aluminium Foil மட்டுமே உபயோகிக்கப்படவேண்டுமென்று ஆணையிட்டு, உடனடியாக கமல்நாத்திடமிருந்து 600 டன் ஸ்டாக்கை வாங்க உத்தரவு பிறப்பித்தது. பிறகு இந்திய ரயில்வேயின் ராட்சதத் தேவையை சமாளிக்க முடியாமல், India Foils இன்னும் மூன்று தொழிற்சாலைகளைத் தொடங்கியதாகவும் தில்லியில் ‘நம்பத்தகுந்த வட்டாரங்கள்’ கூறின.
ஆரம்ப காலங்களில் சென்னையிலிருந்து தில்லிக்கு வரும் சங்கீத வித்வான்கள், எழுத்தாள நண்பர்கள், GTயில் சென்னைக்குத் திரும்பும்போது அவர்கள் ஹோல்டாலுக்குள் குறைந்தது இரண்டு வெள்ளை சலவைக்கல் ரொட்டிக்கல்லும் குழவியும் நிச்சயமாக இருந்தாக வேண்டும். வெளியில் தெரியும்படியாக இரண்டு சைக்கிள் டயர் போட்ட தில்லி மோடாக்கள். இவைகளெல்லாம் அவர்கள் தில்லி போய்விட்டு வந்ததற்கான அழியாத அடையாளங்கள். (சென்னையில் ஒரு வயதான வித்வானைப் பார்க்கப் போயிருந்தேன். இன்னும் கிழியாத மோடாவில் உட்கார்ந்தேன். ‘மணிசார், ஞாபகம் இருக்கோ. நான் மொதத்தரம் டெல்லிக்கு வந்தப்போ வாங்கித் தந்தேளே, நாப்பது வர்ஷம் ஆச்சு.’ மனதுக்கு நிறைவாக இருந்தது)  பல வித்வான்கள்  ஸ்டேஷனுக்கு வந்தபிறகு, ‘மணி, மோடா வாங்க மறந்துபோச்சு, வெளிலேருந்து ரெண்டு சீக்கிரம் வாங்கிண்டு வாயேன்’ என்று என்னை விரட்டுவார்கள். செம்பை, செம்மங்குடி, மதுரை மணி அய்யருடன் கூடவரும் வேம்பு அய்யர், எம்.எல்.வி. யாரும் இதற்கு விலக்கல்ல. சில வருடங்களுக்குப் பிறகு சாந்தினி சௌக்கில் மலிவாகக் கிடைக்கும் டிரான்ஸிஸ்டர் ரேடியோ மோடாவின் இடத்தைக் கைப்பற்றியது. அதன்பிறகு தில்லியிலிருந்து புறப்படும் GT ஸ்லீப்பர்    கோச்சில் மடக்கும் வசதியுள்ள இரும்புக் குழாய் கட்டில்கள் அங்கங்கே தென்பட ஆரம்பித்தன. குளிர்காலமானால், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் தில்லி ஸ்வெட்டர் இருக்கவே இருக்கிறது. தில்லி போய்த் திரும்பும் தமிழர்களுக்குத் தேவையான பலபொருட்கள் சாந்தினி சௌக்கில் கொட்டிக் கிடக்கின்றன.
நீண்டபயண ரயில்பயணிகளுக்கு முதலில் டைனிங் கார் வசதி அறிமுகமானது. காலை மதிய உணவுக்கு அங்கே போகவேண்டும். கோச்சில் கொண்டு தரும் வசதி கிடையாது. அதன்பிறகு சென்னை-தில்லி ரயில்களுக்கு Pantry Car வசதி வந்தது. இரவு தில்லியில் தங்கிவிட்டு அடுத்தநாள் காலையில் அங்கிருந்து புறப்படும். அநேகமாக எல்லா Pantry Car Managers-ம் எனக்குத் தெரிந்தவர்கள். இரவு ‘தாகசாந்தி’க்காக என் வீட்டில் தங்கிவிட்டு அதிகாலையில் ரயிலைப் பிடிப்பதற்காக ஸ்டேஷன் ஓடுவார்கள். எனக்கு மிகவும் நெருக்கமான மானேஜர் சந்துரு சொல்வார்: ‘நாங்கள் எங்கள் ஆபீசுக்கு லேட்டாகப்போனால், ஆஃபீஸ் எங்களை விட்டுவிட்டு ஓடிவிடும்.’
அப்படி ஓரிருதடவைகள் ‘ஆஃபீசை’ தவறவிட்ட அவர்களை நிஜாமுதீன் ஸ்டேஷனில் கொண்டுபோய் விட்டிருக்கிறேன். மிகக்குறைவான நிறுத்தங்கள் கொண்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஜி.டி.யின் மௌசு குறைய ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் டிக்கெட் கிடைக்காதவர்கள் வேறு வழியில்லாமல் ஜி.டி.யில் போவார்கள். தில்லியில் இருக்கும்போது யார் யார் எந்தெந்த தினங்களில் Pantry Carமானேஜராக வருவார்கள் என்பது எனக்கு அத்துபடி. வெயிட் லிஸ்டில் இருக்கும், டிக்கெட் confirm ஆகாத நண்பர்களுக்காக அன்றைய பான்ட்ரி கார் மானேஜருக்கு ஒரு சீட்டு எழுதிக் கொடுத்துவிடுவேன். அவர்களுக்கு TTE-யிடம் சொல்லி ஏற்பாடு  செய்து விடுவார்கள். காரணம் தில்லியிலிருந்து சென்னை வரை வழியில் ஏறும் TTE-க்களுக்கு இவர்கள் தான் அன்னதாதா, டிபன்தாதா. நண்பர்கள் சென்னை போனதும், ‘உன் பிரண்ட் ரொம்ப கவனிச்சிண்டான்பா, பிளாஸ்கிலே காபி, ஸ்பெஷல் சாப்பாடு. Thank him on my behalf‘ என்று போன் பண்ணிச் சொல்வார்கள். காலை டிபன் வகைகளை வண்டியிலேயே செய்வார்கள். வெண்பொங்கல் என்றால் இத்தனை கிலோ அரிசிக்கு, இவ்வளவு நல்லமிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு போட்டிருக்க வேண்டுமென்று அவர்கள் Cooking Manual சொல்லும். அதை  சந்துரு அக்ஷர சுத்தம் பின்பற்றுவார். மதியத்துக்கு எத்தனை வெஜ், நான்-வெஜ் சாப்பாடு என்று ஆர்டர் எடுத்து தந்தி மூலம் ஆம்லா ஸ்டேஷனிலிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு தகவல் சொல்லிவிடுவார்கள். நமக்கு பயணத்தின்போது காபி, டீ, டிபன் கொண்டுவந்து தரும் ரயில்வே சிப்பந்திகளைப்பற்றி நாம் யோசித்திருக்கிறோமா?  வழியில் திடீரென மழை வெள்ளம் வந்து தண்டவாள உடைப்பினால், மாற்றுவழியில் இரண்டு நாள் தாமதமாகப்போகும்போது நம் வயிறு வாடாமலிருக்க அவர்கள் படும் சிரமம் நமக்குத் தெரியுமா? ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து கிளம்பும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் Pantry Car Batch திரும்ப சென்னைக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்து சேருவார்கள். மூன்றரை நாட்கள் ஓய்வு. மறுபடியும் ஞாயிறு இரவு புறப்படவேண்டும். சென்னை-தில்லி மார்க்கத்தின் மையப் புள்ளியாக நாக்பூர் ஸ்டேஷன். பல வேளைகளில் சென்னையிலிருந்து போகும்GTயும் தில்லியிலிருந்துவரும் GTயும் நாக்பூர் ஸ்டேஷனில் சந்தித்துக் கொள்ளும். அறிமுகமானபிறகு
தில்லியில் நண்பர்களை நம் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் போன்ற விசேஷங்களுக்கு சாப்பிட அழைத்தால், அவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: E.P.D.P.யா இல்லை T.P.D.Pயா? என் வீட்டில் பெரும்பாலும்E.P.D.Pயாகத்தான் இருக்கும். அவர்கள் கேட்பது: ‘இலை போட்டு தண்டபுண்டமா இல்லை தட்டு போட்டு தண்டபுண்டமா?’ இலை போட்டு என்றால் உண்மையிலேயே வடை பாயசத்துடன் பெரிய விருந்து. தில்லியில் வாழையிலை கிடைப்பது பெரும்பாடு. தவிர்க்க முடியாத வீட்டு திதி திவசங்களுக்கு மலைமந்திர் கோவிலுக்கருகிலிருக்கும் கடையில் ஒரு வாழையிலை ரூ.5-8கொடுக்க வேண்டும். தில்லியில் நடக்கும் கல்யாணங்களிலேயே மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மட்டுமே நுனியிலை. மற்றப் பந்திகளுக்குக் கீற்று இலைதான்.  ஆனால் எனக்கு அந்தக் கஷ்டமே இருந்ததில்லை. என் வீட்டு எல்லா விசேஷங்களுக்கும் வாழையிலை, பூமாலைகள், காய்கறிகள் எல்லாம் நான் கேட்காமலே வீடுவரை வந்துவிடும். இவைமட்டுமல்ல, கோடையில் பலாப்பழம், வடுமாங்காய், தீபாவளிக்குப் பட்டாசுகள், பொங்கலுக்குக் கரும்பு மஞ்சள் குலைகள் – தில்லியில் இவை கிடைப்பது அபூர்வம் – முதலியவையும் எனக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நண்பர்களே கொண்டுவருவார்கள். இவ்வளவு ஏன், பத்து வருடங்களுக்கு முன் எனது சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூரில் நடைபெற்றது. அதற்கு வந்திருந்தவர்களில் இருபத்தைந்து பேருக்குமேல் GT எக்ஸ்பிரஸ்நண்பர்களே. நானும் ரயிலில் காபி கொண்டுவரும் உமா என்று செல்லமாக அழைக்கப்படும் உமாபதியின் கூடுவாஞ்சேரி கிரகப்பிரவேசத்துக்குத் தவறாமல் போயிருக்கிறேன். பலசமயங்களில் சென்னை வரும்போது ரிஸர்வ் செய்யப்பட்ட என் II-AC கோச் பக்கமே போகாமல் பான்ட்ரி கார் மானேஜர் ரூமிலேயே என் முழுப்பயணத்தையும் கழித்திருக்கிறேன். சமையல்காரர் செட்டியாருக்கு நான் ‘ஸ்ட்ராங் சக்கரை கம்மி’ காபி தான் சாப்பிடுவேன் என்பது தெரியும். மதியத்துக்கு சின்னவெங்காயச் சாம்பார், அவியல் பொரியலோடு விருந்தே சமைத்து விடுவார். கோடைக்காலமானால் சாப்பாட்டிற்கு முந்தி, நேற்று இரவே ராட்சத ரிஃப்ரிஜிரேட்டரில் போட்ட பீர் பாட்டில்கள் ஆஜராகிவிடும். மாலையில் தொடரும் ‘சோமபான ஜோதி’க்குச் சுடச்சுட மசால்வடையும், சுண்டலும், எனக்குத் தனியாகப் பச்சை வெங்காயமில்லாத ஸாலட் எல்லாம் ரெடி. எனது விஸ்கியில் பாதி சோடா, பாதி தண்ணீர், கைநிறைய ஐஸ் இருந்தாக வேண்டும். அதற்காக காலியான ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் வயிற்றில் கூரான கத்தியால் ஒரு ஸர்ஜனுக்கே உரிய   லாவகத்தில் அறுவை செய்து எனக்கு ஒரு பெரிய கிளாஸ் தயார் செய்துவிடுவார்கள். (தங்கள் பார்ட்டியில் புதிதாகச்சேரும் சினேகிதர்களுக்கு கிளாஸ் தேடியலையும் எழுத்தாள நண்பர்கள் இதைக் கருத்தில் கொள்ளற்க).
எட்டு வருடங்களாக நான் குடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டதால், சில நன்மைகள்  இருந்தாலும், மாலை வேளைகளில் சோடா மேக்கர், பெரிய பக்கெட் நிறைய ஐஸ், பாட்டில் சகிதம் உட்கார்ந்திருக்கும்போது வரும் அழைத்த விருந்தாளிகளையும், ‘ச்சும்மாதான், எப்படி இருக்கீங்கனு பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ என்று வரும் அழையாத விருந்தாளிகளையும் நான் இப்போது சுத்தமாக இழந்துவிட்டேன்.
ஒரு தடவை தில்லியில் என் வீட்டில் வந்திருந்த நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நான் கேட்டேன்: ‘இடம் மாறும்போது மனிதனின் குணமும் மாறுமா?’ எல்லோரும் ஒரே குரலில் ‘மாறாது‘ என்று அடித்துச் சொன்னார்கள். நான் தொடர்ந்தேன்: ‘ரயிலில் நான்தான் நீண்ட பயணம் செய்கிறேன் நாகர் கோவில் வரை. புதுதில்லி ஸ்டேஷனில் வண்டி ஏறியவுடன், அம்மா, தாயே என்று தமிழில் பிச்சை கேட்கும் அம்மாளுக்கு பிரயாணம் நல்லபடியாக இருக்க வேண்டுமே என்று நினைத்து ரூபாய் ஐந்தை தட்டில் போடுகிறேன். (அதற்கு அப்போது மதிப்பு அதிகம்). அடுத்தநாள் நாக்பூரில் பிச்சை கேட்டால் அது இரண்டு ரூபாய் நோட்டாகிறது. விஜய வாடாவில் ஒரு ரூபாய். சென்னை வரும்போது எட்டணா. எக்மோர் ஸ்டேஷனில் அது நாலணாவாகச் சுருங்குகிறது. மதுரை விருதுநகரில் இரண்டணாவுக்குமேல் கையில் வருவதில்லை. திருநெல்வேலிக்கு ஓரணா. பயனீர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவுடன் தேடித்தேடிப் பார்த்து அரையணா நாணயம்தான் கையில் வருகிறது. நாகர்கோவிலில் பஸ்ஸைவிட்டு இறங்கி வில்வண்டிக்காகக் காத்திருக்கும்போது, ‘ஒண்ணும் இல்லேப்பா, போயுட்டுவா’ என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொள்கிறேன். ஏன்? அதேபோல் ஏழெட்டு உறவினர்களை ஹோட்டலுக்கு டிபன்       சாப்பிட அழைத்துச் சென்றால், அவர்கள் ஆர்டர் செய்யும்போது, நம் கண்கள் விலைப்பட்டியலைப் பார்த்து பில் எவ்வளவு ஆகும் என்று மனக்கணக்குப் போடுகிறது அங்கே. கிருஷ்ணா தியேட்டரில் படம் பார்க்க அழைத்துச் சென்றால், ரூ.2.00க்கு பால்கனி தேவையில்லையென்று, ரூ.1.20 கொடுத்து சேரில் உட்கார்த்துகிறோம். தில்லியில் இது நிச்சயமாக நடக்காது. ஏன்?’ என்று இரண்டாவது தடவையாகக் கேட்டேன். கிளாஸில் இருந்ததை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, வாயைத் துடைத்துக்கொண்ட மறைந்த நண்பர்ஆதவன், ‘I know the reason. You see the shape of India. இந்தியாவின் வரை படம்தான் உங்களுக்கு பதில். மணி சார், இமயமலையின் அடிவாரத்திலிருந்து நீங்க கன்யாகுமரி வரை போறீங்க. கீழே போகப்போக இந்தியாவின் வரைபடம் போல் உங்கள் மனசும் சுருங்குகிறது. அதுவும் நீங்க நுனி வரை போறீங்க. கேக்கவே வேண்டாம்!’ என்று முடித்தார்.
எழுத்தாள நண்பர் ஆதவன் சொன்னதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, லாஜிக் இடிக்கவில்லை.

0 comments:

Post a Comment