பாபா படத்தில் தான் முதன்முதலில் அவரை பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராக தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னை போல் தான் எமி ஜாக்சனுக்கும் அவரைப் பற்றி அபிப்ராயம்.
பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றி சுகாவின் ‘மாங்குலை இல்லாத கல்யாணம்‘ என்ற கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் ‘பாட்டையா’. பாட்டையா என்றால் எனக்கு என்னவென்று அப்பொழுது தெரியாது. அது இசை கட்டுரை என்பதால் கர்நாடக சங்கீதம் பாடுபவரை விளிக்கும் சொல்லென நினைத்துக் கொண்டேன். சுகாவின் அந்தக் கட்டுரையைப் படிக்க சொன்னது கவிஞர் பத்மஜா நாராயணன். அவர் சுகாவிற்கு நண்பர். எனக்கும் நண்பர். அதே போல் பாரதி மணிக்கும் நண்பர் என தெரிய வந்தது.
–
“தினேஷ்.. ‘பல நேரங்களில் பல மனிதர்கள்‘ படிச்சிட்டீங்களா? உங்களுக்குப் பிடிக்கும். பாரதி மணி சார் சூப்பரா எழுதியிருக்கார்.”
அனைத்து புத்தகங்களையும் அப்படித் தான் சொல்வார் பத்மஜா. மேலும் பாரதி மணி அவர் நண்பர் வேறு. படித்தே தீர வேண்டிய 10/100 புத்தகங்கள் என ஆளாளுக்கு பட்டியலிட்ட புத்தகங்களையே படிக்கவில்லை. அதனால் அந்தப் புத்தகத்தில் நான் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. மேலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்‘ என்ற ஜெயகாந்தனின் தலைப்பை உல்டா செய்யப்பட்ட கற்பனை வறட்சி வேறு பூதாகரமாக உறுத்தியது. இருந்தாலும் பத்மஜா நாலைந்து முறை வெவ்வேறு சமயத்தில் அந்தப் புத்தகத்தை சிலாகிக்க.. 101-வது புத்தகமாக சேர்த்துக் கொண்டேன். பட்டியலில் உள்ள 100 புத்தகங்கள் எவரிடம் இருந்தாவது படிக்க கடன் கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் 101-வது புத்தகம் சுலபமாக கிடைத்தது.
–
பல ஆச்சரியங்களைக் கொடுத்தது புத்தகம். அதில் பெரிய அதிர்ச்சி சுப்புடு குறித்து நான் வளர்த்து வைத்திருந்த பிம்பம். சுப்புடு – இசை விமர்சகர் என்பது மட்டும் தெரியும். ‘ஜோடி‘ படத்தில் இசை விமர்சகர் வெங்குடுவாக விஜயகுமார் நடித்திருப்பார். நானாகவே ரொம்ப யோசித்து வெங்குடு கதாபாத்திரம் சுப்புடுவின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டது என நினைத்துக் கொண்டேன். ‘உன்னை யாருடா அப்படி நினைச்சுக்க சொன்னது?‘ என என் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் பாரதி மணி. இந்தப் புத்தகத்திற்கு ‘பல நேரங்களில் பல மனிதர்கள்‘ என்ற தலைப்பைத் தவிர்த்து வேறெந்தத் தலைப்புமே பொருந்தாது. C.N.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, குஷ்வந்த் சிங், எழுத்தாளர் ஆதவன், அருந்ததி ராய், அன்னை தெரஸா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா, எழுத்தாளர் சுஜாதா, நோபல் பரிசுப் பெற்ற பர்மியப் போராளி ஆங் ஸான் ஸூ கி என அவர் சந்தித்த பிரபலங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது பட்டியலின் ஒரு சிறு பகுதி மட்டுமே!
–
‘பாரதி‘ படத்தில் பாரதியின் தந்தையாக நடித்ததால் தான் மணி என்ற அவரது பெயரில் பாரதி இணைந்து “பாரதி மணி“யாக பெயர் மாறியது என பலரும் நினைத்துள்ளனர். ஏன் அவரது ஆத்மார்த்த நண்பரான நாஞ்சில் நாடனும், முதல் வாசகரான ஜெயமோகனும் கூட அப்படித் தான் மதிப்புரை (அ) முன்னுரையில் எழுதியுள்ளனர். ஆனால் “அப்படி இல்லை” என அ.முத்துலிங்கம் பின்னுரையில் எழுதியுள்ளார். தனது பெயர் காரணத்திற்கு அவரே அரவிந்த் சுவாமிநாதனுடனான நேர்காணலில் கொடுத்த விளக்கம்: “டெல்லியில் கச்சேரி, நாடகம், இலக்கியக் கருத்தரங்கு, சினிமா விழா எல்லாம் நடக்கும். இப்படித்தான் எனக்குப் பல்கலை ஆர்வம் வளர்ந்தது. நான் ‘பாரதி மணி‘ ஆனேன்.” தனக்கு தானே சூட்டிக் கொண்ட பட்டமில்லை என அவரை நம்பலாம்.
இரயிலைப் பற்றி, “ஒரு நீண்ட பயணம்” என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். கரி – டீசல் – மின்சாரம் என இரயில் எஞ்சின் அடைந்த மாற்றங்கள் குறித்துத் தெரியும். மீட்டரில் இருந்து ப்ராட்டான தண்டவாளங்கள் குறித்தும் தெரியும். ஆனால் கோச்சுப் பெட்டிகள் அடைந்த மாற்றம் குறித்து அழகாக பதிந்துள்ளார் பாரதி மணி. தில்லியிலிருந்து ஜனதா எக்ஸ்பிரஸ், கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் என இரண்டு இரயில்கள் அப்பொழுது சென்னைக்கு வந்தது. அதில் ஜனதா எக்ஸ்பிரசில் ஏறுபவர்கள் போன ஜன்மத்தில் பிரம்மஹத்தி தோஷம் பெற்றவர்கள் என சொல்கிறார். அதற்கான காரணத்தையும் சுவாரசியமாக விவரிக்கிறார். கிண்டல், தகவல், அனுபவம் என்ற மூன்றையும் சம அளவில் கொண்ட அற்புதமான கட்டுரை அது. “சென்ட்ரலில் இறங்கியபின், தசாவதாரம் பூவராகன் போலிருக்கும் பயணிகளையும்…” என முகத்தில் புகை எஞ்சினால் முகத்தில் அப்பியிருக்கும் கரிப்பொடிப் பற்றிக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இரயிலின் வளர்ச்சி பற்றி எழுதும் பொழுது வராத சந்தேகம் தொலைபேசி பற்றி எழுதும் பொழுது பாரதி மணிக்கு வந்து விடுகிறது. ஒரு தொலைபேசியின் முகவரியை மாற்றுவது எவ்வளவு கடினம் என்று குறிப்பிட்டு விட்டு, இந்தக் காலத்து இளைஞர்களுக்கு அது புரியாதென குறைப்பட்டுக் கொள்கிறார். சாமான்யனுக்கு இன்னும் பி.எஸ்.என்.எல். அல்லது எந்த அரசு அலுவலகமும் ஆட்டம் காட்டிக் கொண்டே தான் உள்ளது என்பதை அந்தக் காலத்து இளைஞரான பாரதி மணிக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
–
‘தில்லியின் நிகம்போத் காட் (சுடுகாடு)‘ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரைப் பற்றி, “அவரது (பாரதி மணி) மனிதநேயம் தெரிந்துகொள்ள ‘தில்லியில் நிகபோத் காட் சுடுகாடு‘ ஒன்று போதும்” என சிலாகிக்கிறார் நாஞ்சில் நாடன். அந்த முன்னுரைக்கு நாஞ்சில் நாடன் அளித்த தலைப்பு ‘அன்பெனும் பிடியினுள் அகப்படும் மலையே!’ என்பதாகும். இந்தக் கட்டுரையில் அவரது மாமனார் க.நா.சு.வின் மரணத்தை நினைவு கூர்கிறார் பாரதி மணி. காலில் அடிபட்டு பிளாஸ்டர் போட்டிருந்த வெங்கட் சாமிநாதன் ஒவ்வொரு படியாக ஏற முடியாமல் ஏறிவந்து, தூரத்தில் நின்று படுத்திருந்த க.நா.சு.வை அரைமணி நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார். க.நா.சு. பற்றிய வெங்கட் சாமிநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதின க.நா.சு.வும் நானும் என்ற கட்டுரையைப் படித்தால் அந்த வரியை இன்னும் அழகாக விளங்கிக் கொள்ள இயலும். பாரதி மணியின் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய வெங்கட் சுவாமிநாதன் பல பிரபலங்களின் பெயரை சொல்கிறார். ஆனால் ரஜினியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “ரஜினி சார்” என எழுதியுள்ளார். ரஜினி மட்டும் எப்படி சார் ஆனார் என இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
“Are you relaxing?”
“No, no. I am Milka Singh”.
‘சிங் இஸ் கிங்!‘. இந்தக் கட்டுரை இந்திரா காந்தி கொலையுண்ட பொழுது சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை நினைவு கூர்வதில் இருந்து தொடங்குகிறது. பாரதி மணியின் அனைத்துக் கட்டுரைகளுமே ஆவணம் போல பல விஷயங்களைப் பதிகிறது. ‘ஆளுமையின் தனித்துவம்‘ என்ற தலைப்பில் பாரதி மணியின் கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, “ஒவ்வொரு கட்டுரையிலும் தெற்கில் இருக்கும் தமிழர்கள் அறியாத ஒரு விஷயம் நிச்சயம் இருக்கும்” என்கிறார் வாஸந்தி. தரமான பாஸ்மதி அரிசியை இந்தியாவில் விளைவிக்க பஞ்சாபிகள் மேற்கொண்ட சாகசம் அவ்ளோ அருமை. படிக்கும் பழக்கமுள்ளவர்கள்இந்தக் கட்டுரையை மட்டுமாவது படித்து விடுங்கள் (இணையத்தில் தேடினால் கூட கிடைக்கும்). Patiala Peg, பஞ்சாபி மொழியின் சிலேடை, பஞ்சாபியர்களின் உதவும் தன்மை, lovable கிழட்டு ராட்சஸனான குஷ்வந்த் சிங் பற்றி, சீக்கியர்களின் தாரக மந்திரம், அவர்களின் மலிவான நாடக ரசனை என ஒன்பதரை பக்கங்களில் அட்டகாசமான கட்டுரை.
பங்களாதேஷில் தனக்கிருந்த ‘சின்ன வீடு‘ பற்றி, “பங்களாதேஷ் நினைவுகள்” என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். வாழ்வை அணு அணுவாக ரசித்த மகானுபவர் பாரதி மணி. அறியாமலே’சிங் இஸ் கிங்’ என்ற கட்டுரையை யார் வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால் பங்களாதேஷ் நினைவுகள் பற்றிய கட்டுரையை இவர் மட்டுமே எழுத கூடியது. பங்களாதேஷில் வாழும் தமிழ் பேசும் தமிழ்க் குடும்பங்கள் பற்றி எழுதியுள்ளார். அவர்களுக்காக விகடன், குமுதம், கல்கி போன்ற புத்தகங்களை எடுத்து சென்று படித்துக் காட்டியுள்ளார். பங்களாதேஷ் மேல்மட்ட மக்களுக்கு பாகிஸ்தான் மீது வெறுப்புணர்ச்சியும், கீழ்மட்ட மக்களுக்கு இந்தியா மீது காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். பங்களாதேஷின் மொத்த சரக்கு வாகன்களில் கால்வாசி இந்தியாவிலிருந்து போனவை என்று குறிப்பிட்டு விட்டு ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார். பக்கத்து வீட்டிலிருந்து அடிக்கடி கடன் கேட்டு வரும் மாமியைக் குறித்து, “இல்லாமை தானே காரணம்” என சொல்கிறார் பாரதி மணியின் அம்மா. ‘இரு வீடுகளுக்குப் பொருந்துவது இரு நாடுகளுக்குப் பொருந்தாதா என்ன?’ என கேள்வி கேட்கிறார். எந்த வெளிநாட்டுக்குப் போனாலும், அந்த ஊர் சந்தையில் பச்சைக்காய்கறிகள் குவியலாக அடுக்கி வைத்திருப்பதை வேடிக்கை பார்க்கும் பழக்கமுள்ளவராம். க.நா.சு.வின் போய்த்தேவு நாவலில் வரும் சிறுவன் சோமுவின் சிறுவயது இப்படித் தான் கழியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி மணி பற்றி பிரபல எழுத்தாளர்கள் சொல்வதை எல்லாம் பொறுமையாக படித்து விட்டு, புத்தகத்தின் இரண்டாவது கட்டுரையான ‘ராஜீவ்காந்தியின் பொறுமை‘யிலிருந்து புத்தகம் விஸ்வரூபம் எடுக்கிறது. இறுதியாக பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி ஒரு நினைவுக் கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு டெல்லி வரை பேசும். அதே போல் அவர் டெல்லியில் பேசிப் போராடி, முதல் முறையாக தென்னிந்தியப் படமொன்றான “செம்மீன்” என்பதற்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்துள்ளார். அப்பொழுது அவர் 27 வயது பொடிப்பயல். அவர் அப்பவே அப்படி!! கலைச்சேவைக்கு சிறு சான்று. இசை பிரியரான அவரது ‘நாதஸ்வரம் – என்னை மயக்கும் மகுடி!‘ மிக அற்புதமான கட்டுரை. அவரது பெரும்பாலான கட்டுரைகளின் களம் டெல்லி. அந்தக் குறையை ‘நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்‘ என்ற கட்டுரையில் தீர்த்து விட்டார். பால்யத்தை அசை போடும் பொழுது அனைவரின் கண்களும் மின்னவே செய்கின்றன.
–
“என்னிடம் யாராவது ‘உனக்கு நடிக்கத் தெரியவில்லை.. எழுதத் தெரியவில்லை’ என்று சொன்னால் மகிழ்ச்சியுடன் ஆமோதிப்பேன். அது உண்மை! ஆனால் சமைக்க தெரியாது என சொன்னா மட்டும் ஒத்துக்க மாட்டேன்” என்பார் பாரதி மணி. பாட்டையா நாக்கின் நீளம் நாற்பது முழம் என்கிறார் சுகா. நாஞ்சில் நாடன் அவரின் சமையலை சிலாகிக்கிறார். வயதான பங்களாதேஷ் சமையற்காரர் ஹபீப் தான் பாரதி மணியின் சின்ன வீடு. ஹபீப்பிற்கு தமிழ்நாடு சமையலை கற்றுக் கொடுக்கிறார். அதே போல பிராங்க்பர்ர்டில் இருந்த பஞ்சாபியான வந்தனா அஹூஜாவிற்கும் சொல்லிக் கொடுக்கிறார். அவர் சொல்வாராம்: ‘பச்சைக் கொத்தமல்லியில்லாத ரசம் ஒரு கற்பிழந்த பெண்ணைப்போல!!”. தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறுக என்ற அவரின் உயரிய எண்ணம் புலப்படுகிறது. ஆனால் பாவம் சைவ உணவினராக இருப்பதால் பங்களாதேஷின் அமிர்தமான ‘ஹீல்ஸா‘ மீனின் ருசியை வாய்ப்பிருந்தும் அவரால் அனுபவிக்க இயலவில்லை.
–
“ரெண்டு தோசை சாப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா ஆறு தோசை சாப்பிட்டேன் செம டேஸ்ட்” என தேள் படத்து நாயகி வைஷாலி பாரதி மணியின் சமையல் பற்றிக் குறிப்பிடுகிறார். “பிரமாதமா சமைப்பார். பலமுறை சாப்பிட்டிருக்கேன்” என சொல்கிறார் கிருஷ்ணன் வெங்கடாசலம் (எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி). பாரதி மணியின் தாயார் செய்யும் கரையும் இட்லியைப் பற்றி க.நா.சு. பெருமையாக சொல்வாராம். பாரதி மணியின் சமையற் கலை அவரது தாயார் சிவகாமியிடம் இருந்து பெற்றுள்ளார். சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்‘ நாடகத்தில் வருவது போல் கால இயந்திரம் ஏதாவது கிடைத்தால், நள மகாராஜாவை சந்தித்து அவரது சமையல் குறித்து ‘சிவகாமி பாகம்’ சமையல் உங்களுக்கு என பட்டம் கொடுத்து விடுவேன். எத்தனை நாளைக்கு தான் நளனை மட்டுமே சமையல் அப்பாடக்கராகக் கொண்டாடுவது!? சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்‘ நாடகத்தை டெல்லியில் பாரதி மணி மேடையேற்றிய பொழுது.. ‘60 Laughters a Minute‘ என விமர்சனம் எழுதியுள்ளார் சுப்புடு. ‘பல நேரங்களில் பல மனிதர்கள்‘ தான் எழுதிய முதல் மற்றும் கடைசிப் புத்தகமெனக் குறிப்பிடுகிறார் பாரதி மணி. அவர் இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் அவர் இப்பவும் நாடகத்தில் நடிப்பதையே பெரிதும் விரும்புகிறார். அவருக்கு தன்னை நாடகப்பைத்தியம் என அழைத்துக் கொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
–
இந்தக் கட்டுரையை அவர் படித்ததும் ,”என்னடா இவ்ளோ பெருசா எழுதியிருக்க? படிச்சு முடிக்கிறதுக்குள்ள ரிகர்சலுக்கு டிலே ஆகிடும் போல!!” எனக் கேட்பார்.
–
“நானென்ன உயிர்மைக்காக கட்டுரை எழுதுறேன்? பதிவின் நீளத்தைக் குறித்து விசனங்கொள்ள!?”
பி.கு.: ஏப்ரல் 23, 24 சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்‘ நாடகத்தை எக்மோர் ம்யூசியம் தியேட்டரில் மேடையேற்றுகிறார் பாரதி மணி. அந்நாடகத்தில் அவர் என் காதலியின் தந்தையாக நடிக்கிறார்.
0 comments:
Post a Comment