Friday, January 22, 2016

நாடக மேடையிலோ, இசை இலக்கிய மேடைகளிலோ ஆழ்ந்த அறிவும், முதிர்ந்த கலைத்திறமையுமுள்ளவர்களை சந்திக்கும்போது, அவர்கள் காலைத்தொட்டு வணங்கத்தோன்றும். அப்போது என் வயது குறுக்கே நிற்கும். அப்படியான மனச்சிக்கல் இல்லாமல், அதுவரை நான் பார்த்திராத இரு மாமனிதர்களை ஒரே நாளில் சந்தித்து அவர்கள் காலைத்தொட்டு வணங்கி ஆசி பெற்றது மனதுக்கு நிறைவாக இருந்தது.
என்னைப்பிடித்த, என் எழுத்தையும் அதைவிடப்பிடித்த பெரியவர் தி.க.சி. அவர்களை நான் சந்திக்கவேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை. நாகர்கோவில் போய்விட்டு அங்கிருந்தே ரயிலேறி சென்னை வரும்போது, அந்த ரயில் திருநெல்வேலி ஜங்ஷனில் நிற்கும்போது ‘ஐயாவைப் பார்க்காமல் போகிறோமே!’ என்ற குற்றவுணர்வு மேலிடும்.  ஒரு படப்பிடிப்புக்காக இருதடவை திருச்செந்தூரையடுத்த மணப்பாடு போய்விட்டு திரும்பும்போதும், திருச்செந்தூரில் ரயிலேறி, அதே குற்றவுணர்ச்சியோடு சென்னை திரும்பினேன். மூன்றாவது முறை போயிருந்தபோது, எப்படியும் தி.க.சி அவர்களை சந்தித்துவிடவேண்டுமென்று பிலிம் யூனிட்டிடம் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு டிக்கெட் எடுக்கச்சொன்னேன்.
ஓவியர் வள்ளிநாயகம், நண்பர் பொன்னையனோடு அந்த நல்ல மனிதரை சந்திக்கச்சென்றேன். அங்கே நாறும்பூநாதன், கிருஷி போன்ற ஆளுமைகளும் கூட இருந்தார்கள். எங்கள் முதல் சந்திப்பு பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பைப்போன்றது என்றெல்லாம் சொல்லி வரலாற்றில் இடம் பிடிக்கமாட்டேன். ஆனால் அவர்களும் இப்படித்தான் மகிழ்ச்சியின் உச்சிக்குப் போயிருப்பார்களென்று மனதார உணரமுடிந்தது. பெரியவரின் சந்தோஷத்தை படங்களைப்பார்த்தே தெரிந்துகொள்ளமுடியும். அவரோடிருந்த ஐந்துமணி நேரமும் என்னைப்பேச விட்டு மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். என் வாழ்நாளிலே மிகவும் சந்தோஷமான நாள்!
சென்னைக்கு ரயிலேற திருநெல்வேலி ஜங்ஷனுக்கு போனபோது, இன்னொரு ஆச்சரியம்.  ஸ்டேஷனில் அதே ரயிலுக்காக நான் மிகவும் மதிக்கும் தோழர் நல்லகண்ணுவும் காத்திருந்தார். ரயில் முக்கால் மணிநேரம் லேட். எனக்கு கோபமே வரவில்லை. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, என்னை தெரியுமென்றும், சிறந்த இயக்குநர் விருது பெற்ற எடிட்டர் லெனின் இயக்கிய (நானும் நடித்த) ஊருக்கு நூறுபேர் படத்தை இரண்டுதடவை பார்த்ததாகவும் சொன்னார்.  தோழரோடு தற்போதைய அரசியல், இப்போது காணாமல் போய்விட்ட நான் சந்தித்த நேர்மையான அரசியல்வாதிகள் என்று பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தேன்.
ரயில் வந்ததும், அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, முன்னாலிருந்த எனது பெட்டியில் ஏற நான் போனேன். அப்போது தான் கவனித்தேன்……தோழர் சாதாரண ஸ்லீப்பரில் பிரயாணம் செய்கிறார். நமக்கு மட்டும் ஏ.சி. குளிர் பெட்டி கேட்கிறதே என்று குற்றவுணர்ச்சியுடன் ஏறி உட்கார்ந்தேன். என்னால் இரவு தூங்கமுடியவில்லை! பெரியவர்கள் பெரியவர்கள் தான்!

0 comments:

Post a Comment