Sunday, June 3, 2018

மாற்று நாடகவிழா முடிந்து நேற்று பெங்களூர் திரும்பினேன். திருப்பத்தூர் நண்பர் Tpg Balaji கொடுத்துவிட்ட இரண்டு பலாக்காய்களில் ஒன்று பலாக்காய் பொரியல் (இடிச்சக்கை துவரன்) ஆகிவிட்டது!
ஆக்கம்:: பாரதி மணி.


செய்முறை::
சின்ன பலாக்காய் ஒன்றை தோல் சீவி, பிசின் வரும் நடுத்தண்டையும் களைக. சின்ன சதுரத்துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள்பொடி, கொஞ்ஞ்சம் சர்க்கரை போட்டு வேகவைக்கவும். ஆறியபின் வடித்தெடுத்து லேசாக கீரைமத்தால் நசுக்கி வைக்கவும்.
அரை மூடித்தேங்காயை திருவி, 1 டீஸ்பூன் சீரகம், 3 காய்ந்தமிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் இரு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் சூடானதும் 3 காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, 1 டே.ஸ்பூன் உ.பருப்பு, கடுகு போட்டு வெடிக்கும்போது, 2 இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து, மசித்த பலாக்காயைப்போட்டு கிண்டவும். அரைத்துவைத்த தேங்காய்த்துருவலையும் அதன் தலையில் 'அரோஹரா!' என்று சொல்லிக்கொண்டே தூவவும். "திருச்சிற்றம்பலம்!" என்று சொன்னாலும் ருசியாகத்தான் இருக்கும்!
இருமுறை கிளறி, குளறுபடியில்லாமல் அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது உங்கள் முன்னால் இடிச்சக்கை துவரன் ரெடி!









Wednesday, May 23, 2018

சந்திரா ஸ்வாமி!
இருக்கும் ஸ்வாமிகளில் ஒரு ஸ்வாமி நேற்று போய்விட்டார்.....சந்திரா ஸ்வாமி! ஊடகங்களால் Cunning Conman என்று அறியப்பட்டவர். அவர் காட்டில் மழைபெய்த நாட்களில் பிரதமர்களும், முதல்வர்களும் அவர் காலில் விழுந்தார்கள்! அவரால் வளர்த்துவிடப்பட்ட பூதங்கள் அனேகம்.


நம்மில் பலர் சந்திரசேகர், நரசிம்மராவோடு இவரும் போய்விட்டார் என்றே நினைத்திருந்தார்கள். நேற்றைய செய்தி “ஓ! இப்போ தான் போனாரா?’ என்று பலரைக்கேட்கவைத்தது. தன்னுடைய செல்வாக்கு காலாவதியாய்விட்டதென்று தெரிந்துகொண்டு இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகாமல் ஊடகங்களிலிருந்தும் சுத்தமாக விலகிவிட்டார்.

                படத்தில் ரோஷன் ஸேட், மேக்கப்மென் ஜான்ஸன், லீலா நாயுடுவுடன் நான். படப்பிடிப்பின்போது.


தொண்ணூறுகளில் அவர் புகழ் உச்சத்திலிருந்தபோது அவரை ’தரிசிக்கும்’ வாய்ப்பு எனக்கும் கிட்டியது. அருந்ததி ராயின் "The Electric Moon" என்ற ஆங்கிலப்படத்தில் என்னோடு சேர்ந்து நடித்த லீலா நாயுடுவுடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது, ‘மணி! கொஞ்சம் காரை கிரேட்டர் கைலாஷுக்கு திருப்பு. ஸ்வாமிஜியைப்பார்க்கணும்!’ என்றார். போனதும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திரா ஸ்வாமியின் ‘இன்ஸ்டண்ட் தரிசனம்’. ‘ஆயியே பெஹன் ஜி! உங்களைப்பார்த்து யுகங்களாகிறது!’ என்று கட்டிப்பிடித்து வரவேற்பு. இல்லையா பின்னே? ஆறு உலக அழகிகளில்ஊ ஒருவராக கருதப்பட்டவர். Householder படத்தில் சசி கபூருடன் ஜோடி...எழுத்தாளர் டாம் மோரியஸின் மனைவி! அவர் என்னை அறிமுகப்படுத்தியவுடன் ஸ்வாமிஜி என்னை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தார்... ....ஏதோ நாய் கொண்டுவந்து போட்டதை பார்ப்பது போலிருந்தது! முதல் பார்வையிலேயே அவரை நானும், என்னை அவரும் வெறுத்தோம்.
அவர் இருந்த அறை பூரா மாலைகளும், தட்டுத்தட்டாக கும்பாரமாக எலுமிச்சம்பழங்களும் இருந்தன. வர்த்தகமுறையில் “மாம்பலம் மாமீஸ்’ ஊறுகாய் போடுமளவுக்கு கண்ணைப்பறிக்கும் எலுமிச்சங்காய்கள்! 
தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல “அய்யர்வாள்! இந்தாங்கோ!” என்று ஒரு பழத்தை எடுத்து நீட்டுவாரென்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை! ஆமாம்! இந்த ஒரு சாக்கு எலுமிச்சம்பழங்களைக்கொண்டு என்ன செய்வார்? தினமும் நான்குவேளை தலைக்கு தேய்த்துக்கொள்வாரோ? கேட்க தைரியமில்லை!
அரைமணிநேர தற்புகழ்ச்சி உரையாடலுக்குப்பிறகு -- எல்லாமே “நான் தான் அவனுக்கு (நரசிம்ம) ராவ்ஜியிடம் சொல்லி கேஸ் வராமெ முடிச்சேன். இன்னிக்கு நன்றியில்லாமெ இருக்கான்!......நேத்து இதே நேரம் வந்திருந்தா (ஒரு பிரபலம்) இவர பாத்திருக்கலாம். ஒருமணிநேரம் இருந்தார். எங்கிட்டே வந்தவங்களுக்கு நல்லதே பண்ணியிருக்கேன்”....இப்படி.....விடைபெறும்போது நான் எழுந்து வெளியே வந்துவிட்டேன். அவரும் என்னை கண்டுகொள்ளவில்லை!

நான் காரில் ஏறி அமர்ந்தபோது,  அவர் “ட்ரைவர்! Gadi காடி லாவோ!” என்று சொன்னமாதிரி எனக்குப்பட்டது!

இப்படி என் ‘ஸ்வாமி தரிசனம்’ இனிதே நடந்தேறியது!

--00ooo00--

Monday, January 8, 2018

மணி சார்!.... அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-----இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்...



-----------------------------------------------------இரா.குமரகுருபரன்--------------------------

எவ்வளவு அருமையான நாள் ஜனவரி ஏழு !...பாரதி மணி சாரை விட, அவரது ரசிகர்களுக்கும்........எனக்கும் !  
அவசர அவசரமாக, அலுவலகத்தில் பணியை முடிக்காமலேயே,மவுண்ட் ரோட்டில் வேலை இருப்பதாகச் சொல்லி, அனுமதியுடன் ஏழு மணிக்குக் கிளம்பினேன். பேருந்து 'ஜாமில்' வழுக்கி வந்து புக்-பாயிண்ட் சேர நேரமாகி விட்டது. உள்ளே நுழைந்து புத்தகத்தை காசுகொடுத்து வாங்கிவிட்டு அரங்கில் நுழையும்போது,லெனின் அவர்கள் "புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினீ ர்களா?" என்று மைக்கில் அவையோரை 'மிரட்டிக்' கொண்டிருந்தார்!...புத்தகத்துடன் நுழைந்த என்னைப்பலரும் கவுரவமாகப் பார்த்ததாக தோன்றிற்று!
"பாரதிக்கு அப்பா" என்று தேவி தியேட்டர் உள்ளரங்கில் பாரதி மணி சார் அவர்களை திரு லெனின் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய "பாரதி" திரைப்பட 'ப்ரிவியு' நிகழ்வு நேற்று நடந்தது போல இருக்கிறது!...அதற்குள் 14 ஆண்டுகள் ஓடிவிட்டதா! இயக்குநர் ஞான ராஜசேகரன் அவர்கள் இயக்கிய "பாரதி" திரைப்படத்தில் இளையராஜா அவர்களின் பின்னணி இசை அமைதி காத்து நடிகர் சாரங்கபாணி போன்ற வசனத்தைத் தெளிவாக உச்சரித்த சப்தம்!...மராட்டி ஷாயாஜி ஷிந்தேயைப் போன்றே, யார் இந்த மணி என்று எண்ண வைத்துவிட்டது! தேசிய நாடகப் பள்ளி ஆளு(மை) என்று அவர் பற்றி ஒரு 'பிட்'டுப் போட்டுவிட்ட பிறகு என்ன கேள்வி!..ஹபீப் தன்வீர் போன்ற நாடகாசிரியர்கள் நினைவுக்கு வந்தார்கள் அப்போது!
என்ன ஆளுமை! நான் அன்றிலிருந்து அவரை சென்னையின் ஒவ்வொரு கூட்டத்தில் பார்க்கும்போதும் அலட்டலில்லாமல் அரங்கில் எங்கேயோ அமர்ந்திருப்பார்!... பல பிரபலங்கள் அவர் அமர்ந்த இடம் தேடிவந்து பேசிச் செல்வார்கள்!
பேஸ்புக்கில் அவரது நட்புக் கிடைத்தபின்தான் அவரது ஆளுமையின் முழு விஸ்தீரணமும் தெரிந்தது. ரயில்தடம் பதிக்காத அந்தக்காலத்து  நாகர்கோவில்-தில்லிப்பயணம் பற்றிய அவரது கட்டுரை ஒன்று போதும்... 
மெட்றிக் ( சின்ன டைவர்ஷன் : நாகர்கோவில்காரர்கள் கூகிளில் அதிகம் இருப்பார்கள் போல...மெட்ரிக் என்று அடித்தால் மெற்றிக் என்று வருகிறது!) வருவதற்கு முன்னர் ரூபா-.அணா -பைசா என்ற நாணயக் கணக்கு இருந்த காலம்.நல்லவேளையாக நான் 'மூணாப்பு' போகும்போதே ஒழித்துக் கட்டினார்கள்...மாகாணி(1/16), அரைக்கால்(1/8) வாய்ப்பாடு சரியாக ஒப்பிக்காத என் சகவயது மாணவனை வயிற்றைஜவ்வு மிட்டாயாகப் பிடித்து இழுத்து துவைத்து விளாசிய கழுகுமலை பாபநாச வாத்தியார் நினைவுக்கு வருகிறார்.... அதிருக்கட்டும்.
* * *
அடுத்து சாஹித்திய அகாதெமியின் க.நா.சு. அவர்களின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில்அவரது ஹாஸ்ய உணர்வு வெளிப்பட கட்டுரை வாசித்தார். தோழர் ச.தமிழ்செல்வனும் இதில் கலந்துகொண்டு க.நா.சு. பற்றிப் பாராட்டிப் பதிவு செய்தார். ("க.நா.சு.வும் எங்களுக்குத் தாத்தாதான்...எல்லாத் தமிழ்த் தாத்தா 'சட்டே'ல இருந்தும் பேரப்பிள்ளைங்க நாங்க உரிமையோட சில்லரைய எடுத்துச் செலவழிப்போம்ல!...")
க.நா.சு. அவர்களின் மருமகன்தான் பாரதி மணி! ...
* * *
அவர் மனதில் தில்லியிலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சஞ்சலம் மனதினுள் இருந்துகொண்டே இருப்பதை நான் உணர்ந்து கொண்டே இருந்தேன். இவரை சென்னை பண்பாட்டுத் தளம் சரியாகப் பயன்படுத்தவில்லையே என்கிற ஆதங்கம் எனக்குள் உண்டு. எழும்பூர் ம்யூசியம் தியேட்டரில் அவர் இயக்கி நடித்த சுஜாதாவின் "கடவுள் வந்தார்" நாடக அரங்கேற்றத்தின்போது நானும் இயக்குனர் சுகா அவர்களும் அருகருகே அமர்ந்து ரசித்து கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம். 'பாட்டையா பாட்டையா' என்று அடிக்கடி பகடி பேசும் சுகா உள்ளுக்குள் நெகிழ்வதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான முகத்துடன் "அவரு தன்னோட சொந்தக்காசைச் செலவழிச்சு நாடகம் போடறாரு...அதுக்கேத்த ரெஸ்பான்ஸ் கெடைய்க்குமான்னு தெரீல" ன்னு சொன்னபோது மனசு உருகித்தான் போனது.(இவ்வளவு பாசத்தை மனசுக்குள் அடக்கிக் கொண்டு வெளியில் அவரை வம்புக்கு இழுக்கும் சுகா பற்றி பிரமிப்பு ஏற்பட்டது!)
சரி. நிகழ்ச்சி பற்றி ...

லெனின் சார் மைக் பிடித்த இடத்தையே தாளமாக்கி கலக்கிக் கொண்டிருந்தார்...கவிஞர் ரவி சுப்பிரமணியன் மாதிரி இவரும் இசைஇடை வைத்த உரை நிகழ்த்தத் தொடங்கியிருப்பது  வித்தியாசமாகத்தான் இருக்கிறது! அவரது தனி ஸ்டைலில் அந்தக்காலம்... பாரதி மணி என்று 'அப்ளாஸ்' தட்டிக்கொண்டு அசத்தினார். புத்தகம் ஒசீக்கு வாங்கிப்படித்தல் பற்றி அவர் சொன்ன போது கோவில்பட்டி சரஸ்வதி தியேட்டர் அருகிலுள்ள மைதானத்தில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் "இரத்தக் கண்ணீர்" நாடகம் பார்க்க கழுகுமலையிலிருந்து வந்தது நினைவுக்கு வந்தது. முன்னாலே உட்கார்ந்த பல நபர்கள் ஓசி டிக்கட்டாக இருப்பதாக உணர்வு வந்து நடிகவேள் சகட்டுமேனிக்குத் திட்டியது ஞாபகம் வந்தது.
திரைப்பட இயக்குநர் சுகா வராது போனதால் அவர் வாழ்த்துச் செய்தியை வம்சி-பவா வாசித்தார்.

கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தனக்கும் மணி சாருக்குமான நட்பை குணாம்சங்களை பாஸ்வல்-டாக்டர் சாமுவல் ஜான்சன் உறவைப்போன்றது என்று சிலாகித்தார். முனைவர் என்பதால் அவரது கட்டுரைகளில் பல ஆழமாக இவரால் அலசப்பட்டது. நிகழ்வுக்கான தேதியில் தமிழச்சி இருக்கவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திய மணி சாரை வம்சி-ஷைலஜா முதலிலேயே குறிப்பிட்டிருந்தார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தான் அவரைக்கண்ட நாள் முதலான தொடர்பு, திரைப்படத்தில் அவரது பாத்திரப்படைப்பு, மணி அவர்களின் பண்பு நலன்கள் குறித்து விவரணையாகப் பேசினார்.மிக நுட்பமாக கட்டுரைகள் பற்றியும், அதன் வரலாற்றுச் சிறப்பையும் பதிவு செய்தார்.
(மணி சார் எல்லாவற்றையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு பரபரப்பு தென்பட்டதை உணர்ந்தேன்...எல்லாம் என்னவாக இருக்கப் போகிறது- "பாட்டையா பாட்டையா" ன்னு அடிக்கடி கூப்புட்டு என்ன பிரயோஜனம், இந்தப் 'பாவிமக்கா' (சுகா: "பேதீல போவான்" ன்னு நெல்லை பாஷைல திட்டலாமே பாட்டையா ?
மணி: பேராண்டி ஒன்ன அப்படித் திட்டுவானே'டே ..
சுகா: அதானே பாத்தேன்.
மணி: அதவிட மோசமா யோசிச்சிட்டு இருக்கேன்'டே )
வந்து தொலைச்சிருக்கலாமுல்லா ..பெருசா வாழ்த்துச் செய்தி அனுப்பித் தொலைச்சிட்டாருன்னு வீம்பு தென்பட்டது.

"ப்ரண்ட்லைன்" ஆங்கில இதழ் ஆசிரியர் விஜயஷங்கர், -ராஜீவ் மேனோனுக்குப் பதிலாக வரவழைக்கப்பட்டு,நூலைப் பெற்றுக் கொண்டார். தூரத்தில் இருந்து பார்த்த மணி அவர்களின் நட்பு சமீபத்தில்தான் கிடைத்ததில் உண்டான குற்ற உணர்வு அவர் பேச்சில் பிரதிபலித்தது. (நண்பர் விஜயஷங்கர் கேரளா பூர்விகமாயினும், அவரது அத்தான்-சகோதரியின் கணவர் -மதுரை சந்திரசேகரனுக்கு மாமாதான் நெல்லைச்சீமை புதுமைப்பித்தன் என்பதை மணி சாரிடம் பிறகு சொல்ல வேண்டும். ஆனந்தப்படுவார் )

சேலத்தில் வேறொரு துக்க வீட்டுக்குச் சென்று விட்டு நேராக சென்னைக்கு அரங்கத்துக்கே வந்த இலக்கியப் புரவலர் கல்லூரித் தாளாளர் எஸ்கேபி. கருணா மணி அவர்களின் ஆழ்ந்த நாடக ஈடுபாடு குறித்த தமது நேரடி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக மணி சார் ஏற்புரையில், " என் மக ஷைலஜா"ன்னு வாஞ்சையாக த்தொடங்க ஷைலஜாவோ 'இப்படித்தான் பாலு மகேந்திரா சாரும் சொல்லீட்டுப் 'போயிட்டாரு'ன்னு' மனசுக்குள் கலங்கியதும் எனக்குத் தெரிந்தது...
" எல்லாரும் பொய் சொன்னாங்க...எல்லாம் உயர்வு நவிற்சி" என்று 'ஒரேபோடாகப்' போட்டு விட்டு இந்திரா காந்தி போன்ற பிரமுகர்களோடு பகிர்ந்து கொண்ட தனது கையெழுத்துக் 'கோல்மால்'களை விலாவாரியாக சுவாரஸ்யத்துடன் விவரித்தார்.

"எனக்கு இப்ப வயசு 77 ஆறது...சோர்வு எனக்கில்லை...இது மாதிரி சப்போர்ட் இருந்தா -மேடை ஸ்டேண்டை தொட்டுக் காட்டியபடி (அது கூட உருவகம்தான் )-மணிக்கணக்கில் பேசுவேன். நடிப்பேன்...வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் அனுபவிச்சாச்சு...மூணு மணி நேரப் பரீக்ஷையை இரண்டு மணிக்குள்ள எழுதி முடிச்சாச்சு. பாஸாயிடுவேன்...ஆனாலும் பேப்பரை ஹால் சூபர்வைசரிடம் கொடுக்க ஒரு மணி நேரம் காத்துக் கெடக்கணுமாம்!..." என்று கம்பீரமாக காலனுக்கு சவால்விட்ட மார்க்கண்டேயராக மேடையை விட்டிறங்கினார்!
-அதுதான் பாரதி மணி !.......'காலனை காலால் எட்டி உதைக்க' அழைத்த 'பாரதியின் தந்தை' ஆயிற்றே!  அவர் பேசப்பேச எனக்குள் ஷேக்ஸ்பியர் "ஹேம்லட்" நாடகத்தில் Grave-digger கதாபாத்திரம் வாழ்க்கை-பிறப்பு-இறப்பு பற்றி தத்துவம் பேசும் காட்சி நினைவுக்கு வந்தது. அந்தப்பாத்திரத்தில் இவர் நடித்தால் எப்படி இருக்கும், என்பதை நினைத்தும் பார்த்தேன் !
* * *
இந்த மனிதருக்குள் புதைந்து கிடக்கும் அனுபவங்களை வெளி உலகுக்கு யாராவது உணர்த்தினால் நல்லது என்று சில காலம் முன்பு நினைத்தேன்.
அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்து விட்டது வம்சி!... .
(இன்னும் வீடியோப்பதிவைப்பார்க்கவில்லை...சீனு ராமசாமி அவர்கள் பேச்சைக் கேட்க விடுபட்டது.)

பாரதி மணி அவர்களின் நூல் வெளியீட்டு விழா தமிழ் இலக்கிய வரலாற்றுப்பாதையில் எழுத்தாளர்கள்-வாசகர்களின் சுமைதாங்கிக் கல்... அந்த மனுஷரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள்!...கூர்மையான அவதானிப்பு, அன்பு, நேசம், பாசம், நக்கல், எளிமை...எல்லாவற்றுக்கும் மேலாக, உடல் வானளாவப் பறந்துகொண்டிருந்தாலும், கால்கள் தரையில் பாவி நிற்பதுதான் !...

மணி சார் அடுத்த தொகுதியையும் எழுதவேண்டும்-இன்னும் பத்து ஆண்டுகளுக்குப்பின்.......

//2015 ஜனவர் 7-ம் தேதி நடந்த ”புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” புத்தக வெளியீட்டுவிழா பற்றி...//
இரா. குமரகுருபரன்.