Showing posts with label அறுசுவை அரசர். Show all posts
Showing posts with label அறுசுவை அரசர். Show all posts

Sunday, June 3, 2018

மாற்று நாடகவிழா முடிந்து நேற்று பெங்களூர் திரும்பினேன். திருப்பத்தூர் நண்பர் Tpg Balaji கொடுத்துவிட்ட இரண்டு பலாக்காய்களில் ஒன்று பலாக்காய் பொரியல் (இடிச்சக்கை துவரன்) ஆகிவிட்டது!
ஆக்கம்:: பாரதி மணி.


செய்முறை::
சின்ன பலாக்காய் ஒன்றை தோல் சீவி, பிசின் வரும் நடுத்தண்டையும் களைக. சின்ன சதுரத்துண்டுகளாக்கி உப்பு, மஞ்சள்பொடி, கொஞ்ஞ்சம் சர்க்கரை போட்டு வேகவைக்கவும். ஆறியபின் வடித்தெடுத்து லேசாக கீரைமத்தால் நசுக்கி வைக்கவும்.
அரை மூடித்தேங்காயை திருவி, 1 டீஸ்பூன் சீரகம், 3 காய்ந்தமிளகாய் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் இரு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் சூடானதும் 3 காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, 1 டே.ஸ்பூன் உ.பருப்பு, கடுகு போட்டு வெடிக்கும்போது, 2 இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து, மசித்த பலாக்காயைப்போட்டு கிண்டவும். அரைத்துவைத்த தேங்காய்த்துருவலையும் அதன் தலையில் 'அரோஹரா!' என்று சொல்லிக்கொண்டே தூவவும். "திருச்சிற்றம்பலம்!" என்று சொன்னாலும் ருசியாகத்தான் இருக்கும்!
இருமுறை கிளறி, குளறுபடியில்லாமல் அடுப்பை அணைத்துவிடவும்.
இப்போது உங்கள் முன்னால் இடிச்சக்கை துவரன் ரெடி!









Wednesday, November 1, 2017




 புகழ்பெற்றிருக்கும் பாரதி மணி மிகச்சிறந்த சமையல்கலைஞரும் கூட. வாழ்வில் எனக்கு எல்லாமும் கிடைத்துவிட்டது என்று பெரும்நிம்மதியுடன் வாழும் இந்த 77 வயது இளைஞரை அந்திமழை இதழுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். அவரே செய்த பூசணிக்காய் அல்வாவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னவர், தன் சமையல், சாப்பாட்டு நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தார்:

 சமைப்பதற்கு முன்னால் நானொரு நல்ல சாப்பாட்டுராமன். அடையோ தோசையோ எதுவா இருந்தாலும் ஆறேழு சாப்பிடுவேன். என் அம்மா, ‘டேய் சாப்பிட்டது போதுண்டா கை வலிக்குதுடா’ என்று விளையாட்டுக்குக் கூறுவார்கள். சின்ன வயதில் இருந்து மசால்வடை எனக்கு மிகவும் பிடிக்கும். வாரமொருமுறையாவது பண்ணித்தரச்சொல்லி தொந்தரவு செய்வேன். ‘நீ சுண்டெலியா பொறந்திருக்கவேண்டியவண்டா!’ என்று அலுத்துக்கொண்டே எண்ணெய்ச்சட்டி ஏற்றுவாள். அதைச் செய்வதிலும் நான் திறமை வாய்ந்தவன். திரையுலகிலும் அதற்கு மவுசு உண்டு. எடிட்டர் லெனின் போல என்னைப் பார்க்க வரும் சிலர் மசால்வடை செய்திருக்கிறீர்களா என்று கேட்டு சாப்பிடுவார்கள்.


 அம்மா சமைக்கும் போது அவர்களுக்கு உதவி செய்துதான் என் சமையல் கலை வளர்ந்தது. அப்போதெல்லாம் அரைத்துவிட்ட சாம்பார்தான். எனக்கு எதை எப்படி அரைப்பது எவ்வளவு அரைப்பது என்று எல்லாம் அனுபவத்தில் வந்துவிட்டது. என் அம்மாவுக்கு நாக்கு எட்டு முழம். அதே போல் எனக்கும் வளர்த்து விட்டிருக்காங்க. அவங்க யார் ரொம்ப நல்லா சமைச்சாலும் பெரிசா பாராட்ட மாட்டாங்க. அவங்க கிட்ட நல்லா இருக்குன்னு பேர் வாங்கறது கஷ்டம். ஆனா நான் சமைச்சா, எதுவும் கமெண்ட் வராது. நாம தூண்டிக்கேட்டா, ‘ம்ம்ம்ம்., இருக்கு!’ என்று தான் வாயிலிருந்து வரும்! அதுதான் பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன்.

 சென்னையில் எந்த ஹோட்டலில் சாப்பிட்டாலும் எனக்கு திருப்தி இருக்கிறதில்லை. அதனாலே நானே சமைச்சுகிறேன். எங்க அம்மா செய்யாத சமையலைக் கூட பரிசோதனை செய்திருக்கேன். என் குழந்தைகள் அப்பா கூட்டு, அப்பா பொரியல் என்று பேர் சொல்லும் அளவுக்கு அது ரொம்ப நல்லா வளர்ந்திருக்கு. 1955-ல் நான் டெல்லிக்கு என் அக்கா வீட்டில் போய் தங்கினேன். அங்கேயும் என் சமையல் தொடர்ந்தது. இது சமையலோட முடியலை. நான் சாப்பிடும் ஊறுகாய் எல்லாம் நானே போடறது. பொதுவா ஒருத்தர் சமைக்கிறது சாயந்தரமே ஊசிப்போயிடும்; ருசி இழந்திடும். ஆனால் நான் செய்றது எல்லாத்துக்குமே ஷெல்ப் லைப் அதிகம். அது கைவாக்கு என்று சொல்வார்களே அதுவாக இருக்கலாம். மத்தவங்க புளி இஞ்சி செஞ்சா ஒரு வாரம் வெச்சுக்கலாம். ஆனா நான் செஞ்சா அது இரண்டு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. சுவை மாறாது.

 இப்ப சாதாரணமா இருக்கிற விஷயங்கள் அந்தக் காலத்தில் பெரிய விஷயங்களாக இருந்தன. உதாரணத்துக்கு சேவை அதாவது இடியாப்பம். சாதாரணமா எல்லா இடங்களிலும் தேங்காய்ப் போட்டு அல்லது எலுமிச்சை போட்டு செய்வாங்க. எங்க ஊர்ல அதாவது நாஞ்சில் நாட்டில் சேவை செய்தால் மூணுவேளையும் அதுதான். இப்ப பச்சை மாவை பிழிந்து வேக வெச்சிடறாங்க. அப்பல்லாம் சேவை நாழியில் பொருந்தறமாதிரி மாவை கொழுக்கட்டை மாதிரி பிடிச்சு ஏராளமா வேகவெச்சு, அப்புறம் அதை நாழியில் திணித்து சேவை செய்வாங்க. 50களில் சின்னப்பிள்ளையாக இருக்கும்போது எனக்கு அது ஒரு வேடிக்கை. ஒரு உலக்கையை, இதற்காகவே செஞ்சு வெச்சிருக்கற ஓட்டையில் செருகி எதிர்முனையில் உட்காரச் சொல்வாங்க. அப்போ மாவு அழுந்தி சேவையா வரும். சேவை, மோர்க்குழம்பு, அப்பள வடாம்தான் காம்பினேஷன். அப்பல்லாம் சேவை பண்றதுன்னா பெரிய நிகழ்வு. போறவ வர்றவங்கல்லாம், உங்க வீட்ல சேவையான்னு கேட்பாங்க.

 அதேபோல் அடுப்புகளும் ஞாபகம் வருது. கொடி அடுப்பு, மரத்தூள் அடுப்பு, டெல்லியில் பயன்படுத்துன இரும்பு வாளியில செஞ்ச நிலக்கரி அடுப்பு... இப்பல்லாம் பொத்தானைத் திருகினா கேஸ் எரியுது... ஆனா அப்ப டெல்லியில் நிலக்கரி அடுப்பு பயன்படுத்துன காலத்தில் நாங்க குடியிருந்த பகுதிகளில் காலையிலயும் மாலையிலையும் அந்த பகுதியே பெரும் புகைமூட்டமா இருக்கும். ஒவ்வொரு வீட்டுலயும் அடுப்பு எரியும். அப்பல்லாம் கடுகு என்றால் பெரிய கடுகுதான். இப்ப தமிழ்நாட்டில் எந்த வீட்டில் போனாலும் பயன்படுத்துற சின்ன கடுகு அந்தக் காலத்தில் ஆவக்காய் ஊறுகாயில்தான் போடுவாங்க. நான் இப்பவும் பெரிய கடுகுதான் வாங்கி சமையலுக்குப் பயன்படுத்தறேன். பெரிய கடுகுன்னு கேட்டாதான் தருவான். அதுக்குன்னு ஒரு தனி ருசி, மணம் உண்டு. நல்லா ஊறினத ஒவ்வொண்ணா எடுத்து சாப்பிடறது தனி ருசி.

 எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இங்கே என் வீட்டில் வந்து தங்குவார். எனக்கு அவரைப் பிடிக்கும். அதைவிட என்னை அவருக்குப் பிடிக்கும். அவர்கிட்ட பேசுன ஒரு சமாச்சாரம் அப்பக்கொடி. மேற்குத் தொடர்ச்சி மலையில் வருசத்துக்கு இரண்டுமாசம்தான் இது விளையும். அதை பெரிய பாரவண்டியில ஏத்திக்கிட்டு வருவாங்க. இந்தக் கொடியை பிராமண அக்ரஹாரங்களில் பயன்படுத்துவாங்க. அதை ஓட்டிக்கிட்டு அக்ரஹாரத் தெருவுக்கு உள்ளே வந்தா, அரை மணி நேரத்தில் முழு வண்டி சரக்கும் வித்துப்போயிடும். காலி வண்டிதான் திரும்பிப் போகும். வண்டிக்காரன் கை நிறைய பணத்தை எண்ணிக்கிட்டே திரும்பிப்போவான். அந்த கொடியின் இலையை சின்னதா வெட்டி, வேட்டிகளில் போட்டு, நிழலில் உலர்த்தணும். ரெண்டாவது நாளில் இருந்து ஒரு கெட்ட நாற்றம் வீச ஆரம்பிக்கும். தெருவில் நடமாட முடியாது. இந்த கொடி கெட்ட நாற்றம் அடிக்கிறதுக்கு காரணமா ஒரு வேடிக்கை கதை உண்டு. ராவணன் காட்டில் சீதையை தேடிப்போனப்ப இந்த செடி மேல குசு விட்டுட்டானாம். அதனால் இந்த செடிக்கு கெட்ட நாற்றம் பிடிச்சுகிட்டுதாம். ஆனால் அந்த பேருக்கு எந்த குறையும் வைக்காம அப்படி ஒரு நாற்றம்... அதனால் இந்த கொடிக்கு இன்னொரு பேரு ராவணன் குசு! அது நல்ல உலர்ந்தபிறகு அளவில் மிகவும் குறைந்துவிடும். அந்தப் பொடியை எடுத்து பாட்டில்களில் வெச்சிக்கிட்டு, தாளிக்கப் பயன்படுத்துவாங்க. தேங்காய் அரைச்ச குழம்புல, மோர்க்குழம்புல தாளித்தால் ஆஹா... அதன் மணம் எப்படி இருக்கும் தெரியுமா? ராவணன் குசுவா நாறினது, என்ன மாயமோ தெரியாது..... சமையலில் பெரும் மணம் தரக்கூடியதா மாறிடும். இந்த அப்பக்கொடி எங்க நாஞ்சில் நாட்டுப் பகுதியில் மட்டும்தான் உண்டு. ஆனா இப்ப அது வழக்கொழிஞ்சு போச்சு. நான் எதுக்கு இதைச் சொல்றேன்னா அந்த காலத்தில் எல்லா சீசன்லயும் வீட்டுல இருந்த ஒரு பொருள் இப்ப எப்படி இல்லாமல் போயிடுச்சுன்னு குறிப்பிடறதுக்காகத்தான்.

மணிரத்னத்தின் ‘கடல்’  படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் போனப்ப, இந்த அப்பக்கொடியை அந்த கோயிலில் இருக்கவங்க -- நாங்க முக்காணியர் என்று சொல்லுவோம் -- உபயோகப்படுத்துவாங்கன்னு கேள்விப்பட்டு, நான் அங்கே இருந்தவங்க எல்லார்கிட்டேயும் கேட்டேன். கடைசில ஒரு பையன் கொண்டுவந்து கொடுத்தான். அவன் சின்ன பையில் கொண்டு வந்திருந்தான். அவன் அப்ப என் சொத்துல பாதியைக் கேட்டாலும் எழுதிக் கொடுத்திருப்பேன். அந்த சின்னப்பையன் காலில் விழலாமா என்று தோன்றுகிற மாதிரி அது ஒரு அபூர்வம் எனக்கு. பின்ன அத தங்க பஸ்பம் பயன்படுத்தற மாதிரி ஆறுமாசம் வெச்சிருந்து பயன்படுத்தினேன். ஏன்னா அதன் ருசி என் நாக்குல அப்படியே இருக்கு. எனக்கு அப்பக்கொடி மட்டும் ரெகுலரா யாராவது சப்ளை பண்ணா.. தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் சுரண்டினது போக மீதி இருக்கிறத எழுதி வெக்க நான் தயாரா இருக்கேன்.

 தென்னிந்திய உணவு வகைகள் சமைக்கும்போது பூண்டு, பட்டை போன்றவற்றை பயன்படுத்தமாட்டேன். எப்பவாவது பூண்டு ரசம் வெச்சால் மட்டும் பூண்டுக்கு சமையலறையில் அனுமதி உண்டு. என் சமையலில் பெருங்காயம் தூக்கலா பயன்படுத்துவேன்.

 எங்க ஊர்ல நான் சின்ன வயசுல இருக்கும்போது வடசேரில குண்டுப்போத்தி ஓட்டல் உண்டு. எங்க அம்மா 2 ரூபாய் கொடுப்பாங்க. ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகள் வாங்கிட்டு, மீதி இரண்டணாவில் அந்த ஓட்டலில் ரசவடையும் மசால்தோசையும் காப்பியும் சாப்பிடுவேன். ரசவடைன்னா தமிழ்நாட்டில் எல்லா பவன்களிலும் நேற்று பண்ணி மிஞ்சிப்போன வடையை ரசத்தில் ஊறவைத்துத் தர்றான். ரசவடை என்கிற பெயருக்கே இது அவமானம்! மாவு அப்பவே அரைச்சு செய்யணும்! ரசவடைன்னா பெரிசா ஊறி இருக்கும். அதை ஒரு விரலால் குத்தினா பூ விரியறா மாதிரி விரியும். அந்த இடைவெளியிலே சட்னியை விட்டுட்டே போவான். அந்த சட்னியை குடு குடுன்னு உள்வாங்கிடும் அந்த வடை. சொர்க்கத்துக்கெல்லாம் போகவே வேண்டாம்! அதுல ஒரு துண்ட விண்டு சாப்பிட்டா போதும்! நான் சமையலை ஆராதிக்கிறவன்.

நாஞ்சில் நாட்டு அவியலுக்கும் மற்ற ஊர் சமையலுக்கும் என்ன வித்தியாசம்னா, தயிர் சேர்ப்பாங்க. அதனால இந்த அவியலை இலையில் வைக்கும்போது ஒரு நீரோட்டம் உருவாகி அது சோறை நோக்கி ஓடிவரும். ஆனா எங்க ஊர் அவியலோ, என்னை எடுத்து சாப்பிடுன்னு சொல்லி கம்பீரமா இலையில் உட்கார்ந்திருக்கும்! இப்பவும் நான் டெல்லியில் இருக்கிற என் பொண்ணு வீட்டுக்குப் போனா, வேலைக்கார அம்மாவுக்கு லீவு கொடுத்துட்டு நானே தான் சமைப்பேன்! இன்னொருமுறை இவரது பூசணிக்காய் அல்வாவை சாப்பிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடைபெற்றோம்.

 நாஞ்சில்நாட்டு அவியல்: எங்க ஊர் அவியலில் தயிர் சேராது. புதுப்புளி சின்ன உருண்டை, போதுமான உப்பு, மஞ்சள் தூள், கொஞ்சம் சீனி. நாட்டுக்கறிகாய்கள் (சேனை, புடலை, வாழைக்காய், முருங்கை, சீனி அவரைக்காய், நாட்டுக் கத்தரிக்காய், வெள்ளைப் பூசணி, வெள்ளரிக்காய்) பயன்படுத்தலாம். பச்சைப்பட்டாணி, காலிபிளவர் என்று போட்டு இப்போது கொடுமை செய்கிறார்கள். காரட் பயன்படுத்தலாம். அதன் சிவப்பு வண்ணத்துக்காய் போனால் போகிறதென்று அதற்கு மட்டும் அனுமதி. இந்த நாட்டுக்கறிகாய்களை ஒண்ணே கால் இஞ்ச் கனத்தில் நீளமாக வெட்டிக்கொள்ளுங்கள். முருங்கைக்காய் இரண்டு இஞ்ச் நீளத்துக்கு வெட்டவும். ஒருமூடித்தேங்காய், 4,5 பச்சை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம். தேங்காய் விழுதை ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவேண்டும். காய்கறிகளை திக்கான புளிக்கரைசலுடன் கலந்து, போதுமான தண்ணீர் வைத்து, காய்கறிகளை அவற்றிற்கு ஏற்ப வேக வைக்கணும். கடைசியில் இறக்கி வைக்கும்போது 3,4 கரண்டி தேங்காய் எண்ணையை அதன் தலையில் யோசிக்காமல் ஊற்றணும். கறிவேப்பிலை எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம்!

 (சந்திப்பு: செல்வன் )

 (அந்திமழை மார்ச் 2015 இதழில் வெளியான நேர்காணல்)

Thursday, October 5, 2017



நானே சொல்கிறேன்…..இது ஒரு மொண்ணையான கட்டுரை. நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும், வெண்ணையைக்கூட நாலைந்து தடவை மேலும் கீழும் அழுத்தி வெட்டினாலும் வெட்டாத மொண்ணைக்கத்தி மற்றும் Peeler பீலரைப்பற்றியது. நான் எழுதிய மொக்கைக்கட்டுரைகளில் இதற்கு முதலிடம் கிடைக்கும்!


டி.எம்.எஸ்ஸோ யாரோ பாடிய பாட்டு ரேடியோவில் வரும்: நல்ல மனைவி அமைவதெல்லாம்.....இறைவன் கொடுத்த வரம்!’....அவன் தயவில்லாமலே நல்ல மனைவி கூட அமைந்துவிடலாம். ஆனால் மார்க்கெட்டில் நீடித்து உழைக்கும் ஒரு நல்ல கத்தி அல்லது பீலர் கிடைப்பது அதைவிட துர்லபம்.


பார்வதிபுரம் கிராமத்தில், என் செறுப்பக் காலத்தில் சமையலுக்கு கத்திபீலர் எல்லாம் கிடையாது. என் முப்பாட்டிகள், பாட்டிகள், அம்மா காலத்தில் காய்கறிகளை தோலுரித்து, செப்பனிட்டு அடுப்பிலேற்ற சமையலறையில் கோலோச்சி இருந்தது அருவாமணை -- அரிவாள்மணை -- என்ற சாதனம் தான். எந்தக்காயாக இருந்தாலும், பிளக்க, வெட்ட, தோலுரிக்க, நறுக்க, சுரண்ட, பொடிதாக அரிய, அருவாமணையை விட்டால் வேறு இல்லை. ஒரு பலாப்பழத்தைக்கூட ஒரே போடில் இரண்டாகப்பிளந்துவிடலாம். (பலாப்பிசின் ஒட்டிக்கொண்டால் ஒருநிமிடம் அடுப்பில் காண்பித்து துணியால் துடைத்தால் போயே போயிந்தி!) கொல்லைப்புறத்திலிருந்து வாழையிலை அறுக்கவும் என் அம்மாவுக்கு அரிவாள்மணையே துணை! அருவாமணையில் தெரிந்தவர்கள் அறக்கீரை அரிந்தால், கீரை மத்துக்கு வேலையே இருக்காது! என் வீட்டில் இருந்த அரிவாள்மணை என் அம்மா கொண்டு வந்ததா ... இல்லை புக்ககத்திலேயே இருந்ததா என்பது தெரியாது. எத்தனை வருடங்களாக அது உபயோகத்தில் இருக்கிறதென்பதும் தெரியாது. சற்றே ஆராய்ந்தால் கீழடிக் கலாசாரத்துக்கே போகலாம்! கொஞ்சம் அசந்தால் கைவிரல்களை பதம் பார்த்துவிடும். என் சிறுவயதிலேயே பாந்தமாக அருவாமணையில் நறுக்குவது எனக்கு கைவந்துவிட்டது. 

எதைச்செய்தாலும் ஓரளவு பாந்தமாக செய்யவேண்டுமென்று நினைப்பவன் நான். காலையில் வரும் ஆங்கில தினசரியில் சிலநாட்கள் விளம்பரத்தோடு ஒருபக்கம் மட்டும் நாக்கைத்துருத்திக்கொண்டு வெளியே தலையை நீட்டும். அதை அழகாக மடித்து உள்ளே தள்ளியபிறகு தான் பேப்பரை திறப்பேன்.


நான் தில்லி போகும்போது மணைஅரிவாள்மணை - என்னோடு துணை வரவில்லை. அங்கே எல்லாமே கத்தி தான்! அறுபதுகளில் தில்லியில் நான் போட்ட ஒரு நாடகத்தில் (காவ்யராமாயணம்கே.எஸ். ஸ்ரீநிவாசன் எழுதிய சந்திஎன்ற நாடகம்) ஒரு முழு சீனும் நான் அரிவாள்மணையில் காய்கறி நறுக்கிக்கொண்டே பேசுவதாக காட்சி தொடரும். அந்த நாடகத்துக்கு விமர்சனம் எழுதிய வெங்கட் சாமிநாதன் ஒரு வாலிபன் இத்தனை பாந்தமாக அரிவாள்மணையை கையாள்வது பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்! (ஒரு டிஸ்கி:: அப்போது எங்களிருவருக்கும் பரிச்சயமில்லை!) இன்னொரு காரணமும் இருக்கலாம். நான் ஒரு பீச்சாங்கையன் Left Hander. ராகுல் த்ராவிட் விளாசும் கவர் ட்ரைவை விட கங்கூலியின் ஸ்ட்ரோக் இன்னும் அழகல்லவா?


தமிழ்நாட்டிலும் மேடைச்சமையல் வந்ததிலிருந்து அரிவாள்மணைக்கு வேலையில்லாமல் போனது துரதிஷ்டம்! பழந்தமிழ்வாதிகள் தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் ஆயுதமான அரிவாள்மணையை மறுபடியும் புழக்கத்துக்கு கொண்டுவரவேண்டுமென்று ஏன் இன்னும் போராட்டம் தொடங்கவில்லை? புலியை முறத்தால் விரட்டியடித்த தமிழச்சி வீட்டில் அப்போதே அரிவாள்மணையும் இருந்ததென்று சரித்திர ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. அரிவாள்மணையின் இடத்தை கத்தி பிடிக்க விடலாமா? தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அரிவாள்மணையையும் தேர்தல் சின்னமாக விரைவில் அறிவிக்கவேண்டும். ......தொப்பி என்ன தொப்பி?


மாம்பழக்காலங்களில், அப்பா இருபது மாம்பழங்களை நன்றாக கழுவித்துடைத்து ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு உட்காருவார்...... அவரைச்சுற்றி நாங்களும். மடியிலிருந்து அவர் மனைவியைவிட அதிகமாக நேசித்த அவரது  Pen Knife பேனாக்கத்தியை எடுத்து விரித்து முதலில் காம்புப்பக்கத்தை சீவுவார். (இன்றைய தலைமுறைக்கு தெரியாத பேனாக்கத்திக்கு ஏன் இந்த பெயர் வந்தது? Fountain Pens காலத்துக்கு முந்தியிருந்த Squills இறகுப்பேனாவை கூர் செய்வதற்கு இந்தக்கத்தி பயன்பட்டது) பிறகு மாம்பழத்தின் மேல் ஒரே சீராக மேலிருந்து கீழ் சுற்றிச்சுற்றி அவரது கத்தி வழுக்கிக்கொண்டே போகும். கத்தி விடுபடும்போது அவர் கையில் மஞ்சள் நிறத்தில் அம்மணமான மாம்பழமும் கீழே குடை ஸ்ப்ரிங் மாதிரி நாங்கள் கையில் தூக்கித்தூக்கி விளையாடும் தோலும் விழும். மாம்பழத்தை உடனே நறுக்கமாட்டார். இருபது மாம்பழங்களுக்கும் ஒரே மாதிரி துச்சாதனன் பாணியில் வஸ்த்ராபகரணம் செய்வார். மாம்பழங்களும் ஹே....க்ருஷ்ணா!என்று அலறாது. அவனும் வரமாட்டான்! அப்பாவின் பேனாக்கத்திக்கு பயந்தோ என்னவோ! அவரது பேனாக்கத்தி  கடையில் வாங்கியது அல்ல...ஸ்பெஷலாக சொல்லிச்செய்தது. வெற்றிலைபாக்கு போடும் நண்பர்கள் பச்சைப்பாக்கு சீவ கேட்டாலும் கொடுக்கமாட்டார்.  அவர் அடிக்கடி சொல்வது:: “Like wife, pen and knife are not to be shared! துண்டாக நறுக்கிமுடிந்ததும் கொட்டையெல்லாம் எங்களுக்கு. கதுப்புக்களை வெட்டி, ஒவ்வொரு கிண்ணமாக இது பாட்டிக்கு, இது மாமாவுக்கு, இது அடுத்தாத்து அத்தைப்பாட்டிக்குஎன்று போகும். தாம்பாளத்தில் மீதமிருக்கும் துண்டுகளும் கொட்டைகளும் எங்களுக்கு சரிவிகிதத்தில் பிரிக்கப்பட்டாலும் அவனுக்கு நெறய குடுத்தே!பராதியை தவிர்க்கமுடியாது!


எங்கள் பார்வதிபுரம் கிராமக்கோவிலில் வருடத்திற்கு 14 நாட்கள் (பங்குனி உத்திரம், புரட்டாசி சனிக்கிழமை, அட்சய திருதியை, கிருஷ்ணஜெயந்தி போன்ற நாட்களில்) ஆயிரம்பேருக்கு மேல் அன்னதானம் ஸத்யைநடக்கும். தக்கலை, புலியூர்க்குறிச்சி, கணியாகுளம், கிருஷ்ணன்கோவில், வடசேரி, வடிவீஸ்வரம், ஒழுகிணசேரி, வேம்பனூர், சுசீந்திரம், மஹாதானபுரம், பூதப்பாண்டி, போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். அதற்கு முன்தினம் இரவு நடக்கும் காய்கறி வெட்டுபூஜையுடன் தொடங்கும். அதற்கு கிராமத்து மக்களை கலந்துகொள்ள வீடுதோறும் வந்து அழைப்பார்கள். வீட்டுப்பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் மிகக்கூர்மையான கத்தியோடு அதில் கலந்துகொள்வார்கள். அப்போது ஹெட் குக் கோம்பை மணியன்என்னை தனியாக அழைத்து, ‘கிச்சாமணி, இவாள்ளாம் யானைத்தண்டிக்கு பெரிசு பெரிசா நறுக்குவா.  மத்த கூட்டு கறிக்கு பரவாயில்லை. அவியலுக்கு நறுக்கறவாளெ கொஞ்சம் கவனிச்சுக்கோ. கசாம்புசான்னு பெரிசும் சின்னதுமா வெட்டி வெச்சுரப்போறான்!என்று எச்சரிப்பார். அவியலுக்கு சேரும் காய்கறிகள் சதுரமாக இல்லாமல் ஒன்றரை இஞ்ச் அளவில் சீராக இருந்தால் தான் அவியல் பார்க்க அழகாக இருக்கும். அதனால் தான்”  வெட்டத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவியல் காய்கறி நறுக்க  அனுமதி உண்டு! அதற்கு நான் மேற்பார்வையாளன்!


அரிவாள்மணை பற்றி தெரியாத இந்த இளைய சமூகத்துக்கு பழைய படம் இருந்தால் போடலாமேயென்று கூகிளாண்டவரை அணுகினேன். அதில்அருகாமனைஎன்று வருகிறது! முட்டாளே! கத்தியும் பீலரும் அருகாமனைகளில் அந்தக்காலத்தில் அரிவாள்மணை தான் கோலோச்சியது. எனக்கு அடுத்த தலைமுறைகளில் அரிவாள்மணையுடன் தேங்காய்த்துருவியையும் இணைத்து Two-in-One அர்த்தநாரீசுவரராக ஒரு அவதாரம் இருந்தது. என் வீட்டில் மாதொருபாகனாக இல்லாமல் இரண்டும் தனித்தனியாகவே இயங்கின.


எழுபதுகளில் தான் முதன்முறையாக Anjali Brand பீலர் மார்க்கெட்டுக்கு வந்தது. அதில் சிலது மழுங்காது நீடித்து உழைக்கும். அது தான் நான் மேலே சொன்ன இறைவன் கொடுத்த வரம்’.  இன்னும் சிலது முதல்முறையே தோலோடு சதையையும் கவ்விக்கொண்டுவரும். சரி....பீலர் என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன? கவிஞர் மகுடேசுவரனிடம் கேட்டால் தோலுருச்சிஎன்பார். எதற்கு வம்பு? பீலர் என்றே இருந்துவிட்டுப்போகட்டுமே! ஆனால் டிவி தொகுப்பாளினிகள் தான் அதை Beeler, Feeler, Bheeler என்றெல்லாம் உச்சரிக்கும் அபாயம் உண்டு!


அடிப்படையில் நான் நாடகநடிகனோ எழுத்தாளனோ அல்ல…… ஒரு சமையல் கலைஞன். நளன், பீமன் பரம்பரையில் வந்தவன். நன்றாக சமைக்கவும் பிடிக்கும்....சம்பிரமமாக சாப்பிடவும் பிடிக்கும். எனக்கு மொண்ணைக் கத்திகளைப் பார்த்தால் ஆத்திரம் பற்றிக்கொண்டுவரும். எனக்கென்று தனியாக வைத்திருக்கும் கத்திகள் மிகக்கூர்மையாக இருக்கும். என் மாமியார் ராஜி (திருமதி க.நா.சு.) ஐயோ...இது மணி கத்தி.....வேண்டாம்... தொட்டாலே வெட்டிரும்!என்பார்!  கொத்தவரங்காயோ பீன்ஸோ....நான் பேசிக்கொண்டே சக்..சக்சக்கென்று வேகமாக நறுக்குவதைப்பார்த்து என் மகள் அப்பா! ஜாக்ரதை!என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.  எனக்கொரு சந்தேகம் எப்போதுமுண்டு. ஏன் என்னைத்தவிர மற்றவர்கள் வீட்டில் மொண்ணைக்கத்திகளாகவே வைத்திருக்கிறார்கள்? நாலு பீன்சை வைத்து மொண்ணைக்கத்தியால் ஏழுதடவை மேலும் கீழும் இழுத்து பீன்ஸை துவம்சம் செய்பவர்களை பளார்என்று அறையவேண்டுமென்ற தணியாத ஆவல் எழும்! I am a born Chef!


பல ஆண்டுகளுக்குமுன்னால் மும்பை பம்பாயாக இருந்தபோது அங்கு என் நண்பன்வீட்டில் இரண்டுநாள் தங்கியிருந்தேன். எங்கே போனாலும் அன்றைய காய்கறி நறுக்கும் வேலையை கேட்டு வாங்கிவிடுவேன். நான் போகுமிடமெல்லாம் என்னோடு ஒரு கூர்மையான கத்தியும் பீலரும் உடனிருக்கும். நறுக்க பீன்ஸ் கொண்டுவைத்தார்கள். பச்சைப்பசேலென்று பிஞ்சு பீன்ஸ் கண்ணைப்பறித்தது. நறுக்கிவைத்தவுடன் எடுத்துப்போக நண்பன் மகள் வந்தாள். திடீரென்று அப்பா!....அம்மா!என்று கத்திக்கொண்டே பாத்திரத்துடன் உள்ளே ஓடினாள். என்னவென்று பார்த்தால்  பீன்ஸ் ஒரே சீராக நறுக்கியிருந்தது Emarald பச்சை மரகதப்பரல் போல் இருந்ததாம்!


நண்பர்கள் வீட்டுக்கு பார்க்கப்போகும்போது பழங்களுக்கு பதிலாக காய்கறிகள் வாங்கிக்கொண்டு போவேன். But it received mixed reaction! நான் போனபிறகு அந்தப்பையை பிரித்துப்பார்க்கும் சிலருக்கு காய்கறிகள் ஏமாற்றமாகவே இருந்தது.


வேலையில்லாமல் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பவனை, ‘நீ என்ன செய்கிறாய்!என்று கேட்டால் “I am peeling potatoes!" என்று பதில் சொல்வான். இந்த ஜோக் தமிழ்நாட்டில் அதிகமாக விலை போகவில்லை. நெருங்கிய நண்பர்கள் போனில் என்ன சார் பண்றீங்க?’ என்று கேட்பதற்கு பதிலாக 'I am peeling potatoes!' என்று சொன்னால் ஸார், இன்னிக்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட்டா சார்!என்ற பதில் கேள்வி! எங்கே போய் முட்டிக்க?


எழுபதுகளில் வேலை விஷயமாக அடிக்கடி ஐரோப்பிய மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த கிழக்கு ஐரோப்பிய தலைநகர்கள் புடாபெஸ்ட், புக்காரெஸ்ட், வார்ஸா, கிழக்கு பெர்லின் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி போகவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எங்கே போனாலும் ஒருநாள் அந்த நகரத்தின் கறிகாய் மார்க்கெட்டுக்கு ஒரு விஸிட் நிச்சயம். இங்கே அப்போது பரிசயமில்லாத பல காய்கறிகளை அங்கே பார்த்து மகிழ்ந்ததுண்டு! வழக்கமான வெள்ளைநிற காலிப்ளவருடன் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு, ஊதா கலரிலும் அது அடுக்கிவைத்திருப்பதை பார்ப்பதே ஒரு ஆனந்தம். ஆனால் இப்போது அவையெல்லாமே நம்மூர் சமையலறைக்குள் புகுந்துவிட்டன! 

ஃப்ராங்க்ஃபர்ட்டில் DM 2/-க்கு ஒருடஜன் நல்ல கத்திகள் கிடைக்கும். மொத்தமாக வாங்கிவந்து, வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கெல்லாம் --- தில்லானா மோகனாம்பாள் வைத்தி பார்த்தவருக்கெல்லாம் ஒரு எலுமிச்சம்பழம் கொடுப்பதுபோல் --- ஆளுக்கொரு கத்தி கொடுப்பேன். அதில் ஓரிருவர் மணி! ஆயுதம் யாருக்கும் இலவசமாக கொடுக்கக்கூடாது. இந்தா...இதை வெச்சுக்கோஎன்று பதிலுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்து அழுத்துவார்கள். National Automatic Rice Cooker இந்தியாவில் வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே நான் ஒன்று வாங்கிவந்தேன். ஹை! சாதம் வடிக்கவேண்டாமா?..... அதுவாவே Off ஆயிடறதுஎன்று அதிசயமாக அதைப்பார்க்கவந்த நண்பர் மனைவிமாரும் உண்டு!


அதிகவிலை கொடுத்து வெளிநாட்டில் வாங்கிய கத்தி தான் நீடித்து உழைக்கும் என்கிற தியரி முற்றிலும் பொய். Robert Welch, Le Creuset, Lakeland போன்ற கத்திகளையும் வாங்கி உபயோகித்திருக்கிறேன். அதிலொன்று வாங்கின மூன்றாம்நாளே டைனிங் டேபிள் கீழே விழுந்து பிடி வேறு, கத்தி வேறு என்றாகிவிட்டது. இந்த அழகில் ஆயுசுக்கும் சாணை தீட்டவேண்டாம் என்கிற கேரன்ட்டி வேறு. மாறாக Geep Batteries வாங்கும்போது இலவசமாகக்கிடைத்த சிவப்புப்பிடி போட்ட கத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக -- அதை தவறுதலாக காய்கறிக்குப்பையோடு வெளியே போடும்வரை -- உழைத்தது. அரசினர்பள்ளி மாணவி மாநிலத்தில் இரண்டாவதாக வரவில்லையா...அதைப்போல!


என் தில்லி நண்பர் (தில்லி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்)  H.K. SWAMY கிருஷ்ணஸ்வாமியை  (எங்களுக்கு கிச்சாமி) நீங்களும் திரையில் பார்த்திருக்கலாம். பாரதிபடத்தில் எனக்கு (சின்னசாமி அய்யருக்கு) நண்பராக வருவார். மனுஷன் சமையல்கலையில் ஒரு நளன். அவர் சமையலுக்கு காய்கறி வெட்டிவிட்டு மீதிக்குப்பையை Cutting Plate-ல் ஒரு Modern Art ஆக வடிவமைப்பார். காம்புகளை வைத்து குடுமி, வெண்டைக்காய்க்காம்பு கண்கள், வெள்ளரித்தோலால் புடவை இப்படி! அவரைப்பார்த்து நானும் கற்றுக்கொண்டேன்.  என் கறிகாய்க்குப்பையும் மாடர்ன் ஆர்ட்டாகத்தான் வெளியே போகும்! வெளிநாட்டில் சமையல் உபகரணங்கள் எது வாங்கினாலும், அவருக்கும் ஒன்று சேர்த்து வாங்குவேன்.  மாதமொருமுறை மணி, வர ஞாயித்துக்கிழமை சாப்பிட வரேன். சின்னவெங்காய சாம்பார், அவியல் பண்ணிடுஎன்பார். வரும்போது அவருடன் அவர் தயாரித்த தேங்காய்சாதம், லெமன் ரைஸ், புளியோதரை ஒருவண்டி வடாம் வற்றலும் வரும்! I am missing them all!


மாம்பழக்காலமாதலால், பெங்களூர் வந்தவுடனேயே ஒரு புது பீலர் வாங்கினேன். அது தோலோடு ஒருகொத்து சதையையும் சேர்த்துக்கொண்டுவந்தது. இரண்டுநாளில் இன்னொரு பீலர். அது மேலேயிருந்து கீழே வர மறுத்தது. இன்று மூன்றாவது. இது அதற்கு பிடித்த இடங்களில் மட்டும் திருப்பதி மொட்டைபோல தோலைச்சீவுகிறது. நான் என்ன செய்ய? சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட் விட்ட இந்தியாவில் ஒரு நல்ல பீலர் கிடைக்கவில்லையென்றால் நமது so called பொருளாதார முன்னேற்றம் எங்கே போகிறது?


தமிழ்நாட்டில் மட்டும் மோடி என்றும் பிற மாநிலங்களில் மோதிஎன்றும் அழைக்கப்படும் பிரதமர் அடுத்தமாத ‘Mann Ki Baat’ நிகழ்ச்சியில் என்னை சந்தித்தால், அவரிடம் நான் வைக்கும் ஒரே விண்ணப்பம் இது தான்:
உடனேயே DRDO (Defence Research & Development Organisation), ISRO, IIT, Kharagpur இவற்றிலிருந்து ஐந்து அங்கத்தினர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து, இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கேற்றவாறு குறைந்தபட்சம் இருவருடங்கள் நன்றாக உழைக்கும் கத்தி/பீலரின் Prototype ஒன்று தயார் செய்யவேண்டும். E-Tender மூலம் குறைந்தவிலைக்கு தயாரிக்க முற்படும் டெண்டர்தாரருக்கு இந்தியாவிலிருக்கும் ஒரு Defence Ordnance Factory-யில் பீலர்/கத்தி தயாரிப்பை ஆறு மாதத்துக்குள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்திடவேண்டும். அந்த விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதை தூர்தர்ஷன் தில்லி நேரலையில் ஒளிபரப்பும்.


அடுத்த நிதியாண்டுக்குள் இந்தியா முழுதும் ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஆளுக்கொரு கத்தி/பீலர் இலவசமாக.....சாரி……. விலையில்லாப் பொருட்களாக ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படவேண்டும். ஒன்றுக்குமேல் வேண்டுமென்றால் எல்லாக்கடைகளிலும் கத்தி/பீலர் ரூ. ஒன்றுக்கு மான்யவிலையில் கிடைக்கும். ஆனால் இதற்கும் ஆதார் கார்டு அவசியம்.  ஜூலை முதல் அமுலுக்குவந்த GST-யிலிருந்து பீலருக்கும் கத்திக்கும் 0% வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்.

Swach Bharat திட்டத்தைப்போல இந்த திட்டத்தையும் எல்லா மத்திய அமைச்சரவைகளும் விளம்பரம் செய்து முன்னெடுத்துச்செல்லும். வரும் நிதியாண்டில் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கவேண்டும்.
‘A GOOD PEELER SHAPES INDIA’………..MODI CUTTING INDIA TO SIZE!....... MAKE GOOD PEELER IN INDIA!........இது தான் நமது அடுத்த தாரகமந்திரம்!
என்ன சார் அநியாயம்?.....நாட்டிலே -– அஜீத் படம் ஊத்திக்கிட்டது, எடப்பாடி-தினகரன் மோதல், நீட் தேர்வு, ஓவியா பிக் பாஸிலிருந்து வெளியேற்றம்,  தலைநகரில் பச்சைக்கோவணத்தோடு விவசாயிகள் போராட்டம் --  போன்ற எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் மக்களை வாட்டும்போது நீங்க கத்தி கபடாவுக்காக இம்மாம் பெரிய கட்டுரை எழுதறீங்களே?....உங்களுக்கே நல்லாப்படுதா?’ என்று கேட்பவர்களுக்கு::


அனுபவிச்சவனுக்குத்தான் அந்த வலி தெரியும்....சார்!

Thursday, January 21, 2016

எனக்கு ஒரு விஷயம் இன்னும் புரியவில்லை. எல்லா அம்மா உணவகங்களும் more or less ஈயோட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனாலேயே அங்கே ராஜமரியாதை. ஒரு தொழிலாளி கூட ஐந்து ரூபாய் பொங்கலை விட்டுவிட்டு ‘பவன்’களில் ஐம்பது ரூபாய் பொங்கலையே விரும்புகிறார்! Is it a case of status complex? I really do not know!!
நான் முதல் நாள் இரவு போன போது சுமார் 300 ரொட்டிகள் விற்காமல் மிச்சம் என்றார் கல்லாவில் இருந்த அம்மா!
இனி அம்மா உணவகத்து வெளியே, பாரதி மணி ஸ்பெஷல் “PONGAL TASTE ENHANCER” (மிளகு ஜீரகப்பொடி, சின்ன நெய் பாட்டில்) விற்பனை ஆரம்பம்.
கடவுள் இந்த வயதிலும் எந்த மருந்து மாத்திரை சாப்பிட நேராத….ஆரோக்யமான உடம்பையும் மனசையும் கொடுத்திருக்கிறான். தினமும் மூன்று வேளை அவனுக்கு நன்றி சொல்கிறேன். இது வரை டயட்டிங், அது கூடாது…இது சேராது என்று எதையும் ஒதுக்கியதில்லை. வாரமிருமுறை வாழைத்தண்டும், கீரையும், பாவக்காயும் இருக்கவேண்டும். நான் சாப்பிடும் உணவே எனக்கு மருந்து. நான் சாப்பிடும் ஒரே மாத்திரை கால்ஷியம் டாப்லெட் மட்டுமே!
பிடித்திருந்தால் அரைக்கிலோ காஜு கத்லியும், மைசூர்பாவும் உள்ளே போய்விடும்!…எனக்கு ஒன்றும் நேராது! நல்ல மழையில் இருமணி நேரம் சந்தோஷமாக விளையாடியிருக்கிறேன். ஜலதோஷம்?…………மூச்!
சாப்பாட்டுப்பண்டங்களில் வஞ்சகமே கூடாது! கடவுளுக்கு அது பிடிக்காது!
என் வயசுக்கு மருந்தொன்றும் சாப்பிடாமல், ஆரோக்யமாகவே இருக்கிறேன்! ஒரு தொந்தரவுமில்லை!
முந்தைய பதிவில் அம்மா உணவகத்தின் உணவு பற்றியும் சுத்தம் பற்றியும் எழுதியிருந்தேன். எனக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருந்தது. ஏழைகளுக்கு சென்று சேருவதை நாம் அபகரித்துக் கொள்கிறோமா?‘ என்ற கேள்வி இருந்தது. ‘நானும் அரசுக்கு டாஸ்மாக் மூலமாக இல்லாவிட்டாலும் மற்ற வகைகளில் தினசரி வரி செலுத்துகிறேன். அதனால் அரசு தரும் சலுகைகளில் எனக்கும் பங்குண்டு!’ என்று மனதைத்தேற்றிக்கொண்டு, சென்றவாரம் இரண்டு மூன்று முறை பொங்கல், இட்லி, சாத வகைகளை வரவழைத்து வீட்டில் சாப்பிட்டுப்பார்த்தேன்.

‘பார்சல் கிடையாதே!…எப்படி என்கிறீர்களா? ஒருமுறை வீட்டுக்குப்பக்கத்திலிருக்கும் அம்மா உணவகத்து மேலாளரை சந்தித்து, ‘அம்மா! உங்கள் உணவு வகைகளை எல்லோரும் சிலாகித்துப்பேசுகிறார்கள். நான் வயதானவன். தினமும் இங்கே வந்து சாப்பிட முடியாது. ஆளை அனுப்பினால் எனக்கு மட்டும் தேவையானதை கொடுத்தனுப்ப முடியுமா?’ என்று கேட்டதற்கு, ‘ஐயா! வயதானவர்களுக்கு எடுத்துப்போக அனுமதிக்கிறோம். யாராவது 20 இட்லி, 15 பொங்கல் கேட்டால் மட்டுமே அனுமதியில்லை! தட்டில் போட்டுக்கொடுத்துவிடுவோம். அதை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம்!’ என்றார்.
முதல் நாள் ஒரு பொங்கலும், 2 இட்லியும் வரவழைத்தேன். மொத்தம் ஏழே ரூபாய் தான்! சாம்பார் மட்டும் அதை நம்பவில்லை! வீட்டிலேயே என் நாக்குக்கு வக்கணையாக நானே பண்ணிவிட்டேன். பொங்கல் நன்றாகவே இருந்தது. இன்னும் சுவையாக இருக்க என்ன செய்யலாமென்ற யோசனை வந்தது.
நேற்று வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நல்லமிளகு, மூன்று மேசைக்கரண்டி ஜீரகம், ஒரு கையளவு முந்திரிப்பருப்பு இவைகளை நெய்யில் பொன் போல வறுத்தெடுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாக கரகரப்பாக அரைத்து வைத்து அதோடு இன்னொரு கைப்பிடி முந்திரிப்பருப்பை வறுத்து, அரைக்காமல் சேர்த்துக்கொண்டேன்.
இன்று காலையில் வாங்கி வந்த பொங்கலுடன் இரண்டு தேக்கரண்டி மிளகு ஜீரகப்பொடி, இரு கரண்டி நல்ல நெய் இவைகளை கலக்கும்போதே வாசனை சாப்பிடு…..சாப்பிடு என்றது! சாம்பார் சட்னி எதுவுமில்லாமலே பரம திருப்தியோடு சாப்பிட்டு முடித்தேன். இட்லி சாப்பிட வயிறில்லை. மத்தியானம் தான் அதை முடிக்கவேண்டும்!
தினமும் காலையில் அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களுக்கு ஒரு டிப்ஸ் (ஒரு டிப்ஸ் என்பது தவறு!)
பேச்சிலராக இருந்தாலும் வீட்டில் நான் மேலே சொன்ன மிளகு ஜீரகப்பொடி, சின்ன நெய் பாட்டிலை உங்கள் பையில் எடுத்துச்செல்லுங்கள். சாப்பிடுமுன் இவைகளை கலந்து சாப்பிட்டுப்பாருங்கள்! வேறு எந்த “பவன்”களிலும் சுவைத்திராத பொங்கல் சாப்பிட்ட மணமான ஏப்பம் வரும்!…..

அதற்கு நான் கேரண்டீ!
இதில் அரசியல் கிஞ்சித்தும் இல்லை!
அம்மா உணவகம் தொடங்கியதிலிருந்து ஒருநாளாவது போய் சாப்பிட்டு ருசி பார்க்க வேண்டுமென்று நினைத்ததுண்டு! அதே சமயம் மிகவும் தேவையானவர்களுக்கு போய்ச்சேரவேண்டியதை நாம் அபகரித்துக்கொள்ளக்கூடாதென்ற எண்ணமும் இருந்தது. அதனால் தான் நான் இதுவரை சென்னையில் ஒரு ரேஷன் கார்டு எடுப்பதையே தவிர்த்து வந்திருக்கிறேன்.
இன்று நிஷா பாலாவின் நாடகம் பார்த்துவிட்டு திரும்பும்போது காலியாக இருந்த, அப்போது தான் துடைத்துவிட்டது போன்று தென்பட்ட ஒரு அம்மா உணவத்தில் முதல் தடவையாக நுழைந்து என்ன இருக்கிறதென்று கேட்டேன். ரொட்டியும் தாலும் மட்டுமே இருந்தது. ரூ. ஐந்துக்கு 3 ரொட்டியும் தாலும் தட்டில் போட்டுக்கொடுத்தார்கள். ரொட்டி அப்போது செய்தது. ஏதோ வீட்டில் சாப்பிடுவது போல் மிகவும் நன்றாகவே இருந்தது. எனக்கு நாக்கு கொஞ்சம் நீளம். சுகா நாலுமுழமென்று சொல்லுவான். என்னால் எந்த நொட்டு நொசுக்கு சொல்லாமல் சாப்பிடமுடிந்தது. எல்லா ”பவன்”களையும் விட நன்றாகவே இருந்தது.
Baba Movie Still
அங்கே சுத்தமாக இருந்த எல்லா துப்புரவு அம்மாக்களும் பாபா படம் பார்த்திருந்ததால் எனக்கு ராஜ உபசாரம். சாப்பிட்டு முடித்தபின் Visitors Book-ல் எழுதச்சொன்னார்கள். மனது நிறைவாக இருந்ததால், உயர்வுநவிற்சியிலேயே எழுதி, கடைசியில் Long Live Amma! என்று எழுதாமல், கவனமாக Long Live Amma Canteen! என்று எழுதி கையெழுத்துப்போட்டேன்!
எனக்குப் பிடிச்சுருக்கு!
நான் 1955-ல் தில்லிக்கு வந்தபோது சொந்தஊர் நாகர்கோவிலைப் போல இங்கேயும் கோல்டன் லாட்ஜும், ரகு விலாஸ், ஸ்ரீகிருஷ்ணபவன் [பிராமணாள் காபி & சாப்பாடு] ஹோட்டலும், அவைகளில் ரசவடை, இட்லி தோசை, தேங்காய்ச் சட்னியுடன் கிடைக்குமென்று நினைத்து ஏமாந்தேன். அப்போது ஈ.வே.ரா. பெரியார் பெயர்ப்பலகைகளில் ‘பிராமணாளை‘ தாரால் அழிக்க ஆரம்பிக்கவில்லை! அது சரியா தவறா என்ற சர்ச்சைக்குள்  நான் புக விரும்பவில்லை. தில்லியிலேயே ஐம்பது வருடங்கள் இருந்ததால், இது போன்ற பிரச்னைகளில் என் பார்வை    சற்று வித்தியாசமானது. நான் இதை ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்து பார்க்கவில்லை. நாக்கின் ருசி சார்ந்த    விஷயமாகவே எனக்குப்படுகிறது. It is not a question of any particular caste but of an individual taste. செட்டிநாடு ஹோட்டல், முனியாண்டி விலாஸ் மிலிட்டரி, திருநெல்வேலி சைவாள், சைனீஸ், பஞ்சாபி டாபா,    காரத்துக்கு ஆந்திரா இதெல்லாம் இருக்கமுடியுமென்றால், பிராமணாள் ஹோட்டலையும் அழிக்காமல்  விட்டிருக்கலாம். என்னைப்போன்ற நாக்கு நாலுமுழமிருக்கும் சைவர்களுக்கு, சோம்பு இல்லாத மசால் வடையும், ப்ரூவுக்குப்பதிலாக நல்ல பில்டர் காபியும் கிடைத்திருக்கும்.  ஆரியபவனில் சாப்பிட்டால் ரசத்தில் பூண்டு இருக்காதென்று நம்பலாம். ‘திராவிடநாடு திராவிடருக்கே‘ என்பதுபோல் ஆரியபவன் ஆரியருக்கே என்ற கோஷம் இருந்ததில்லை.  (இருந்திருந்தால் அவர்களை வெட்டிப்போட்டிருப்பேன்).  சொல்லப்போனால், பல ‘பிராமணாள்‘ ஹோட்டல்களை வசதி படைத்த ‘மற்றவர்கள்‘ தான் நிர்வகித்துவந்தார்கள்.  அந்தக்காலத்தில் எங்களூர் ஹோட்டல்களில் ‘தொத்து வியாதிஸ்தர்களுக்கு அனுமதியில்லை‘ என்ற பெயின்ட் போன ஒரு போர்டு சாய்வாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அவர்களும் ஒரு  மூலையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். காரணம் இது வியாபாரம் சார்ந்த நாக்கின் ருசி சம்பந்தப்பட்ட விஷயம். இப்போதும் ருசியளவில் ஆரியபவனை ஆதர்சமாகக் கொண்டு இயங்கும் உணவுவிடுதிகளில் தான் கூட்டம் அலை மோதுகிறது. சிக்கன்-65க்கு இருக்கவே இருக்கிறது செட்டிநாடும் முனியாண்டிவிலாசும்.  இதை அரசியலாக்கியது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். வடசேரி குண்டுப்போத்தி ஹோட்டலில் நடுவிரலால்  மெதுவாக அழுத்தினால் தாமரைப்பூ போல விரியும் ரசவடையை    சாப்பிட்டு வளர்ந்த நான்  தில்லி போனதும் எதிர்கொண்டதோ  சமோஸாவும், பூரிச்சோலேயும் தான். அவைகளில் இருந்த கரம் மசாலா என் நாக்குக்குப்பிடிக்கவில்லை. அவைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு, எனக்கு ஐந்து வருடங்கள் தேவைப்பட்டது. வேறு வழியில்லாமல் என் நாக்கு அவைகளை ஒத்துக்கொண்டது.
அப்போதெல்லாம் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹாண்டில் லோயரோ ஹையரோ தேறிவிட்டுUPSC அப்பாயின்ட்மென்ட் லெட்டரில் ரூ.160-10-330-EB-410 கிரேடில் தட்டச்சராக பணிநியமனத்துடன், சென்னையிலிருந்து அப்போது புதிதாகக்கட்டப்பட்ட புதுதில்லி ஸ்டேஷனில் வந்திறங்கும் பிரும்மச்சாரித் தமிழன் ‘பட்பட்டி‘யில் விலாசம் தேடிப்போகுமிடம் கரோல்பாகாகத்தானிருக்கும். அங்கே இவரைப்போன்றவர்களை பெற்ற தாயைப்போல அணைத்துக் கொள்வது கரோல்பாகிலிருக்கும் ராமானுஜம் மெஸ், வைத்யநாதய்யர் மெஸ், மஹாதேவன் மெஸ் போன்றவைகள் தான். முப்பதுநாள் இருவேளை சாப்பாட்டுக்கு ரூ.40 டோக்கன், மாடியில் பத்துக்கு எட்டு  ‘பெரிய‘ அறையில் இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள மாதவாடகை ரூ. 50. சனிஞாயிறு விடுமுறைகளில் காலை மாலை டிபன்  காபி எக்ஸ்ட்ரா. அன்று மதிய உணவில் அவியல் பாயசம் கொசுறு! அப்போது அளவுச்சாப்பாடு புழக்கத்துக்கு வரவில்லை! அதே போல் அப்போது, தில்லி டாபாக்களில் சப்ஜிகளுக்குத்தான் காசு; தாலும் (Dal) நெய் தடவிய தந்தூர் ரொட்டியும் சுடச்சுட எத்தனை சாப்பிட்டாலும் இலவசம்!
இந்த விஷயத்தில் நான் ரொம்ப கொடுத்துவைத்தவன். என் அக்காவும் அத்தானும் தில்லியில் இருந்தார்கள். அத்தான் நாற்பதுகளிலேயே தில்லிக்கு வந்தவர். [அவர் 60 வருடங்களுக்கும் மேலாக தில்லியில் இருந்தும் இன்றுவரை தில்லி செங்கோட்டையோ, குதுப் மினாரோ, ஆக்ரா தாஜ்மஹாலோ போய்ப்பார்த்ததில்லை!] நான் இன்று இருக்கும் நிலைக்கு அவர்கள் தான் முக்கிய காரணம். நான் முதல்தடவை  தில்லிக்கு வந்தநாளிலிருந்து எனக்கு வீட்டுச்சாப்பாடு தான். பள்ளிக்கூட லீவில் அக்கா குழந்தைகள் நாகர்கோவிலுக்குப்போனால் இரு மாதங்கள் மட்டும் வினே நகர் செட்டியார்  தான் என் அன்னதாதா!
C.P.W.D. தயவில் அப்போது Central Secretariat பாபுக்களுக்காக முதலில், கோல் மார்க்கெட், பிறகு லோதிரோடு, East Vinay Nagar [லக்ஷ்மிபாய்  நகர்], Vinay Nagar[சரோஜினிநகர்], West Vinay Nagar [நேதாஜிநகர்] என ஒவ்வொரு காலனியாக வர ஆரம்பித்தது.   கோல் மார்க்கெட்டில் ஸ்ரீதரன் [மலையாளி] மெஸ், லோதிரோடில்,  சிதம்பரம் மெஸ், கிருஷ்ணன்நாயர் மெஸ், கனாட்பிளேசில், South India Boarding House, மதராஸ் ஹோட்டல், ஜந்தர்மந்தரிலிருந்த South India Club-ல் ராம்சிங் மெஸ், செவிட்டு அய்யர் மெஸ் [குடுமி வைத்திருந்த அவர் பெயர் ஒருவருக்கும் தெரியாது!], வினே நகரில் செட்டியார் மெஸ் என பலரும்  தமிழ் பிரும்மச்சாரிகளை வரவேற்று உண்டியளித்து உபசரித்தனர். எல்லோரிடமும் மனித  நேயம் மிகுந்திருந்தது. மெஸ்ஸில் சாப்பிடும் ஒருவர் நோய்வாய்ப்பட்டு, சப்தர்ஜங் மருத்துவ மனையில் இருந்தால், டாக்டர் சொல்லும் கஞ்சியும்,  ஹார்லிக்ஸும் வேளாவேளைக்கு போய் சேர்ந்ததா என்பதை சிதம்பரம் ஒரு தந்தையைப்போல கவனித்துக் கொள்வார். கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் நடத்திவந்த ராவுஜி திடீரென்று வேலைபோன ஒருவருக்கு மறுவேலை கிடைக்கும்வரை மூன்று மாதங்களுக்கு இலவசமாக உணவளித்ததும் எனக்குத்தெரியும்! இந்த E F Type காலனிகளில் பலவருடக் காத்திருத்தலுக்குப்பிறகு அலாட் ஆகும் ஈரறை வீடுகளில், மாதாமாதம் ஊருக்குப் பணம் அனுப்பும்   நிர்ப்பந்தமிருந்ததால், ஒரு அறையை  தன்கீழ் வேலை செய்யும் ஒரு பிரும்மச்சாரிக்கு ரூ.80க்கு Sub-let செய்வார் வீட்டுக்காரர். எஸ்டேட் ஆபீசிலிருந்து வந்து விசாரித்தால் அவருக்கு தம்பி என்று சொல்வார்.ஓரிரு வருடங்களில், அந்த பிரும்மச்சாரித் ‘தம்பி‘, அவர் கூட இருக்கும் மச்சினியை ‘டாவடித்து‘ அவருக்கே ‘சகலை‘யான கதைகளும் உண்டு! அதனால்தானோ என்னவோ அவரும் குடிவைக்கும் பிரும்மச்சாரியின் குலம் கோத்திரம் முதலியவைகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு விடுவார்!
எனக்கு தில்லி வந்தபிறகு தான் சட்னியில் தேங்காயுடன் பொட்டுக்கடலை சேர்க்கலாம் என்பது தெரியும்.  ஆனால் கனாட்பிளேஸ் மதராஸ் ஹோட்டல் சட்னி வெறும் பொட்டுக்கடலையாலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்.  சிறுவயதில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, தலைக்குத்தேய்த்த கடலைமாவு  வாயில் வழிந்தால் என்ன ருசியோ அதே ருசிதான் மதராஸ் ஹோட்டல் சட்னி!
நான் தில்லிக்கு வந்தசமயம் பிற்காலத்தில் ஆசியாவிலேயே பெரிய குடியிருப்பாகக்கருதப்பட்ட ராமகிருஷ்ணபுரம் எனப்படும் ஆர்.கே.புரம்  மோதி  பாக் எல்லாம் இரவுநேரங்களில் நரிகள் ஊளையிடும் காடாகவிருந்தது. அந்த  நரிகளெல்லாம் இப்போது எங்கே போயின?  நரியாகி பரியாகி நம்மில்  சிலரது உள்ளங்களில் தேடினால் பதுங்கி இருக்கலாம்! அப்போது தில்லித் தமிழ்ச்சங்கம் கனாட்பிளேசில் தற்போது பாலிகா பஜாராக பரிணமித்திருக்கும் Theatre Communication Building-ல் மாபெரும் விஞ்ஞானியான டாக்டர் K.S. கிருஷ்ணன் தலைமையில் மூன்றே  அறைகளில் இயங்கி வந்தது.
அறுபதுகளின் மத்தியில் [பின்னர் UNI Canteen என்று அறியப்படும்] கையேந்திபவனின் தொடக்கம் பார்லிமென்ட் வீதியில் PTI பலமாடிக் கட்டடம் வருவதற்கு முன்னால் இருந்த இடத்தில்தான். பல உயர் அதிகாரிகளிடம் சமையல்காரராக வேலைபார்த்து அனுபவம் வாய்ந்த சூரி எனும் சூரியநாராயணனும், அவர் தம்பி மணியும் சேர்ந்து தொடங்கினார்கள். முதல்நாளன்று நானும் அப்போது தரங்கதராவில் வேலை பார்த்த [ரிலையன்ஸ்] பாலுவும் அடுப்படியில் நின்றுகொண்டே அலுமினியத்தட்டில் சுடச்சுட தோசை சாப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. [இங்கே தில்லிப்பிரமுகர் என் நெடுநாளைய நண்பர் ரிலையன்ஸ் பாலுவைப்பற்றி ஒரு செய்தி சொல்லவேண்டும். பாலு அப்போது தரங்கதரா கெமிக்கல்ஸில் சந்தானம் என்பவரின் கீழ் வேலை பார்த்துவந்தார். ஒரு தமிழனின் கீழ் இன்னொரு தமிழன் வேலை  பார்ப்பதைப்போல் கொடுமை இல்லவேயில்லை. சந்தானத்துக்கு ‘நான் தான் Boss‘ என்பதை தூங்கும்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அவரது  டார்ச்சர் தாளாமல் அப்போது பெயரே கேள்விப்பட்டிராத, உலகத்துக்கு ‘குரு‘வாக அறிமுகமாகாத ஒரு தீருபாய் அம்பானி நடத்தும் Reliance Industries [P] Ltd.என்ற ஒரு ‘சிறு‘ கம்பெனியில் வேலைக்குச்சேர்ந்தார். As they say, the rest is history!இப்போது அவர் R.I.L. President. முகேஷ் அம்பானியின் வலதுகை. நான் பாலுவிடம் அவரது புது வீட்டு கிரகப்  பிரவேசத்தின்போது சொன்னேன்: ‘பாலு! உனக்கு சந்தானம் கடவுள் மாதிரி. அவர் மட்டும் நல்லவராக இருந்திருந்தால்……? அவருக்கு நீ ஒரு கோவில் கட்டித்தான் தீரவேண்டும்!]
பழைய கட்டடத்தை இடிக்கப்போவதாக PTI நோட்டீஸ் கொடுத்ததும், என் நண்பரும் என் நாடகங்களைத்தவறாமல் பார்க்கும் என் விசிறியுமான UNI General Managerராஜகோபாலனிடம் சூரியை அழைத்துச்சென்று கட்டடத்தின் பின்புறத்தில் ஒரு கான்டீன் தொடங்க அனுமதி வாங்கிக்கொடுத்தேன். ஒரே கண்டிஷன்: UNI ஊழியர்களுக்கு மதியஉணவு சலுகைவிலையில் கொடுக்கவேண்டும்.  அங்கும் நானும் பாலுவும் தான் ‘போணி‘ பண்ணினோம். இப்படி சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட UNI Canteen அறுபது எழுபதுகளில் எல்லா தலைநகரத் தமிழர்களுக்கும் மதியவேளையில் ஒரு கூடும் இடமாக திகழ்ந்தது. சென்னையில் சமீபத்தில் மூடப்பட்ட Woodlands Drive-inஹோட்டல் போல தில்லி UNI Canteen-க்கும் ஒரு சரித்திரம் உண்டு.
அப்போது தான்  ரிலையன்ஸில் சேர்ந்த பாலு அவர் தலைவர் தீருபாய் அம்பானியையும், சிறுவர்களாக முகேஷ், அனில் இருவரையும் சில தடவைகள் அங்கே அழைத்து வந்திருக்கிறார்! அவர்கள் அலுமினியத்தட்டில்  தோசையோடு சேர்த்து ஊற்றிய  சாம்பார் சட்னியில் முழுகப்பார்க்கும் ஜாங்கிரியை ஒரு  கையால் பிடித்துக் கொண்டே வளைந்த அலுமினியக்கரண்டியால் சட்டையில் சாம்பார் விழாமல் சாப்பிடுவதை தசாவதானமாகச் செய்வார்கள்! எல்லா தலைநகர்ப் பிரமுகர்களையும் அங்கே மதியஉணவு வேளைகளில் பார்க்கலாம். தி. ஜானகிராமனும் வருவார்.ஆதவனையும் பார்க்கலாம். சுப்புடு, பாலு, அடியேன், கிருஷ்ணமூர்த்தி, அகத்தியன் எனப்படும் PSR,  டாடா வைத்யநாதன் போன்றோர் தினமும் ஆஜர். நான் அப்போது பார்லிமென்ட்வீதி பிர்லாவில் வேலை பார்த்துவந்தேன். வீட்டிலிருந்து வரும் மதியஉணவை முடித்துவிட்டு, நண்பர்களைப் பார்ப்பதற்காகவே அங்கே   போவேன். எங்கள் ஆலோசனைப்படி, சூரி வருடாவருடம் தீபாவளிக்கு பக்ஷணங்களும் தயாரிக்க ஆரம்பித்தார். அதற்கு ஏக கிராக்கி! சூரி தில்லியில்  நிகழ்ந்த முதல் பஸ் வெடிகுண்டு விபத்தில் தப்பிப்பிழைத்தவர். UNI  கான்டீன் இப்பொது எப்படி நடக்கிறது?
தில்லியில் அப்போதிருந்த இன்னொரு கையேந்திபவனைப்பற்றியும் சொல்லவேண்டும். அறுபதுகளின் இறுதியில், India Coffee House-ல் காபி சிற்றுண்டிகளின் விலைகளை அதிகரித்தபோது, அதற்கெதிராக பெரிய போராட்டமே வெடித்தது. அங்கேயே ‘குடியிருந்த’ தில்லி ஜோல்னாப்பை ‘அறிவுஜீவிகள்‘ இந்த விலையதிகரிப்பை எதிர்த்து  கொடி பிடித்து தர்ணா, உண்ணாவிரதமிருந்தார்கள். கடைசியில் India Coffee House-ஐ பகிஷ்கரித்து, Price Rise Resistance Movement சார்பில் கூட்டுறவு முறையில், இப்போது பாலிகா பஜார் இருக்குமிடத்தில் ஒரு Coffee Houseஆரம்பித்து அது ஓகோவென்று ஓடியது. ஒரே சமயத்தில் 500 பேர் காபி சாப்பிடுவார்கள். ஆரம்பத்தில்   காபியும் சுடச்சுட மெதுவடையும் மட்டுமே. தக்காளியே இல்லாமல் வெள்ளைப்பூசணிக்காயில் புளியுடன் கூடிய ஒருவித Sauce அங்கே விசேஷம்!   பிறகு அதற்குக்கிடைத்த ஜனரஞ்சக வரவேற்பைக் கருத்தில்கொண்டு இந்தCoffee House-ஐ தில்லி சர்க்காரே தத்து எடுத்து இர்வின் ரோடு ஹனுமான் மந்திர் எதிரே பெரிய அளவில் ஆரம்பித்தது. ஆரம்பநாட்களில் அங்கே தில்லி முதலமைச்சரே பரிமாறினார்! நானும் அவர் கையால் சாப்பிட்டிருக்கிறேன். இப்போதும் இருக்கிறதென்று நினைக்கிறேன்!
எழுபதுகளில் உயர்மட்ட மத்திய வர்க்கத்துக்கு A.C. வசதியுடன் கூடிய ஒரு ஹோட்டலை தலைநகரில் ஆரம்பிக்கும் திட்டத்துடன் சென்னை Woodlands அதிபர் திரு. கிருஷ்ணராவ் தில்லி வந்தார். அதைப்பற்றிய கருத்துக்களைக் கேட்க தில்லிப்பிரமுகர்களில் சிலரை அழைத்தார். நானும் போயிருந்தேன். என்ன விலை நிர்ணயிக்கலாமென்று ஆலோசனைக் கேட்டபோது, மற்ற ஹோட்டல்களில் 2 வடை ஒரு ரூபாய், நீங்கள் 2 ரூபாய் வைக்கலாமென்று அபிப்ராயம் சொன்னோம். நாங்கள் சொன்னதையெல்லாம் பொறுமையாகக்கேட்டுக்கொண்ட அந்த புத்திசாலித் தொழிலதிபர் லோதி ஹோட்டலில் ஆரம்பித்த Delhi Woodlands Restaurant-ல் ஒரு காபிரூ.5, வடை ரூ.5, தோசை ரூ. 10 என்று மெனு கார்டு போட்டார். இது எங்கே ஓடப் போகிறதென்று நினைத்த நாங்கள், பிறகு மாலைவேளைகளில் அங்கே சாப்பிடப்போகும்போது, நமது பெயரைப்பதிவு செய்து இடத்துக்காக குறைந்தது அரைமணிநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை! After all, he was a shrewd businessman!
இதையடுத்து சென்னை தாஸப்பிரகாஷ் ஹோட்டலும், தங்கள் கிளையை சுஜான்சிங் பார்க்கில் ஆரம்பித்தார்கள். தில்லி சர்தார்ஜிகளும், மற்ற பஞ்சாபிகளும் மதராஸி சாம்பாருக்காக நாக்கைத்தொங்கப்போட்டபடி காத்திருக்க ஆரம்பித்தார்கள்! ஒரு பிளேட் இட்லிக்கு ஆறு கிண்ணம் சாம்பார் கேட்பார்கள். இவர்களுக்காகவே, Extra Sambaar….Re. 1.00 per Katori என்று எழுதிய போர்டும் தொங்க ஆரம்பித்தது.
இவையெல்லாம் தவிர கர்ஸன் ரோடு [கஸ்தூர்பா காந்தி மார்க்] அருகிலிருக்கும் எலக்டிரிக் லேனில் ஒரு மலையாளியின் மெஸ் இருந்தது. அங்கே பலதடவைகள் சென்னையிலிருந்துவந்த எழுத்தாள நண்பர்களுடன் சாப்பிட வரும் க.நா.சு.வை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தான் எனக்கு மாமனாராக வருவார் என்று எனக்கும் தெரியாது, அவருக்கும் அந்த தீர்க்கதரிசனம் இருந்ததில்லை!
அதேபோல தில்லியில் அசைவ உணவுக்கு அந்தக்காலத்தில் பெயர்பெற்றது தர்யாகஞ்சில் இருந்த மோத்தி   மகால். இரவு பதினோரு மணிக்குப்போனாலும், அரைமணி நேரம் காத்திருந்தால்தான் இடம் கிடைக்கும். அங்கே பல தடவை அசைவ நண்பர்கள் சர்தார்ஜிகளோடு, செமையான ‘தண்ணி‘ பார்ட்டிக்குப்பிறகு, ‘இன்று எப்படியும் தந்தூரி  சிக்கன் சாப்பிட்டுவிடவேண்டும்’ என்ற உறுதியோடு போய் உட்கார்ந்து ஆர்டர் செய்வேன். முதல் கவளமே உள்ளே போகாமல் ரப்பர் போல வாயில் சுற்றிக்கொண்டிருக்கும். துப்பிவிட்டு ஒரு நவரத்ன குருமாவுக்கு செட்டிலாகி   விடுவேன். கனாட்பிளேஸிலிருந்த Kaake-da-Hotelலிலும் இதே கதைதான். இன்றுவரை பலதடவை நான் ஒரு அசைவனாக முயற்சியெடுத்தும், தோற்றுத்தான் போயிருக்கிறேன்.
ஒரு காலத்தில் என்னை ஒரு Dr. Samuel Johnson ஆக நினைத்துக்கொண்டு, லண்டனுக்குப்பதிலாக தில்லியை, ‘A day out of Delhi is a day out of my life!‘ என்று சொல்லிக்கொண்டிருந்தேன். தில்லி என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியிருந்தது. நான் இருந்த ஐம்பது வருடங்களில், தில்லி எனக்கு என் தகுதிக்கு மீறியே எல்லா செல்வங்களையும் கொடுத்திருக்கிறது. 1955-ல் ஒரு விலாசமில்லாமல் தில்லிக்கு வந்த எனக்கு சுமாரான படிப்பறிவு, உவப்பான குடும்பவாழ்க்கை, ஐம்பது வருட நீண்ட நாடக அனுபவம், மிகப்பெரிய நண்பர்கள் வட்டம், தேவைக்கு அதிகமான வாழ்க்கைவசதிகள், நிறைவான மனம் இவைகளை இந்த மாநகரம் எனக்குத் தந்திருக்கிறது.  ஐம்பது வருடங்களில் தான் மாறியது போல, என்னையும் மாற்றியிருக்கிறது.
நான் வளர்ந்த, என்னை வளர்த்த தில்லியைப்பற்றிச்சொல்ல எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் ‘உயிர்மை‘ வாசகர்களுக்கு இவை சுவாரஸ்யமாக இருக்குமாவென்று தெரியவில்லை. மனுஷ்ய புத்திரன் மே மாதத்துக்கான கட்டுரைக்கு அவசரப்படுத்தியதும்,  இதை அனுப்பிவிட்டேன்.
தில்லியில் என்னைப்போல அரைச்சதம் அடித்தவர்கள் [Old Foxes] புலவர் விசுவநாதன், ஏ.ஆர். ராஜாமணி,  கிருஷ்ணமூர்த்தி, ரிலையன்ஸ் பாலு போன்ற சிலரே இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் சென்னைக்கு வந்து ஓய்வுக்குப்பிறகு கிடைத்த மொத்த ஊதியத்தையும் அதிகவட்டிக்கு ஆசைப்பட்டு ராயப்பேட்டை பெனிஃபிட் பண்டில் போட்டு இன்று முதலுக்கே மோசமானதால், கையில் மஞ்சள்பையுடன் பூட்டிய கேட்டுக்கு வெளியே நிற்கிறார்கள்! எஞ்சியவர்களைப்பார்க்க,  நான் மேலே போகவேண்டும்!
நூறு வருடங்களுக்கு முந்தி காபி க்ளப் இருந்ததாவென்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்:
காபி க்ளப் கலாச்சாரம் நூறு வருடங்களுக்கும் முற்பட்டது. எனக்குத்தெரிந்த வகையில், வேறு வாழ்வாதாரம் இல்லாத, நன்றாக சமைக்கத்தெரிந்த ஏழை பிராமணக்குடும்பத்தினர் இதை ஒரு தொழிலாக தன் சிறிய வீட்டில் திண்ணைக்கு வெளியில் இரண்டு பெஞ்ச்களைப்போட்டு வருபவர்களுக்கு சுடச்சுட இட்லியும் தேங்காய்ச்சட்னியும் சுவையோடு கொடுத்தார்கள்.வியாபாரம் பச்சைபிடித்ததும், இன்னும் ரெண்டு பென்ச் உள்ளுத்திண்ணையில்! எனக்குத்தெரிந்து ஒரு திருவிதாங்கூர் சக்கரத்துக்கு (ரஃப்லி அரையணா) பத்து இட்லிகள். எதிர்பாராத விருந்தினர்கள் மற்றும் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு, ‘டேய்…நேத்திக்கு மாவரைக்கலைடா…கிச்சாவாத்துக்குப் போய் ஒரணாவுக்கு இட்லி வாங்கிண்டுவா!’ என்பதில் தொடங்கியிருக்கவேண்டும்.
அடுத்து மாதவிலக்கான கிராமத்துப்பெண்கள் இவரது முக்கிய கஸ்டமர்கள். மாதம் 27 நாட்கள் பூராக்குடும்பத்தின் வயிறு வாடாமல் மூன்று வேளையும் பொங்கிப்போட்ட ‘மகராசி’ அந்த 3 நாட்கள் நாதியில்லாது கொட்டிலில் முடங்கிக்கிடப்பாள். (அந்தக்காலத்தில் கிராமத்துப்பெண்களை ’அந்த மூன்று நாட்களில் என்னென்ன பாடு படுத்தியிருக்கிறோம்? யாருக்கும் தேவையில்லாத ஜென்மம்!) ‘பார்ரா….விசாலத்தாத்துக்குப்போய் ஒரணாவுக்கு வாங்கிண்டு வா…..அஞ்சு இட்லி வெக்கச்சொல்லு… நெறைய சட்னியும்!’ சிறுவனாக அந்த ஐந்தாவது இட்லியை சட்னியுடன் ரசித்துச்சாப்பிட்ட ருசி இன்னும் என் நாக்கில் இருக்கிறது! இட்லிக்கு சாம்பாரெல்லாம் ரொம்ப பின்னால் வந்த நாகரீகம்!
ஹோட்டல் பிசினஸில் முட்டாளுக்குக்கூட நஷ்டம் வராது என்பார்கள். நூற்றுக்கு நூறு லாபம். ஒரணாவுக்கு நாலு இட்லி விற்றே அந்தக்குடும்பத்தின் நான்கு உயிர்கள் பிழைத்துவிடும்.அதனால் மக்கள் அதிகமாகப்புழங்கும் கடைவீதிகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் வயிற்றுப்பிழைப்புக்காக – வண்டி ஓடினால் போதும் என்ற நிலையில் அனேக காபி க்ளப்கள் முளைத்தன!
***
பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஓர் உளுந்துவடை 40 பைசா……ஒரு கைபேசி அழைப்பு ரூ. 5!
இன்று உளுந்துவடை ரூ.5 …..கைபேசி அழைப்பு 40 பைசா! 
விஞ்ஞானம் தோற்றது…..உளுந்துவடை ஜெயித்தது!
இது வீட்டில் ஃப்ரிஜ் வருவதற்குமுன் பிறந்தவர்களுக்கு மட்டும்!……சரி….சரி! ‘பழங்குழம்பு’ / சுண்டக்கறி வாசனையும் ருசியும் பிடித்தவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்!
என்னை இரண்டாவது கனிஷ்ட குமாரனாகப்பெற்ற என் அம்மா ஸ்ரீமதி சிவகாமி அம்மாள் பார்வதிபுரம் மற்றும் சுத்துப்பட்டு பதினெட்டு கிராமப்புகழ் வாய்ந்த சமையல் வல்லுநரென்பதும், எனக்கு நாக்கை நாலு முழம் வளர்த்துவிட்டவரென்பதும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்க! கூட்டுக்குடும்பமான எங்கள் பெரிய குடும்பத்தில் விசேஷங்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னரே வந்துவிடும் முப்பதுக்கு மேற்பட்ட இலைகளுக்கு ’பொங்கிப்போட’, சோமு இருக்கா…..கவலையில்லை என்று என் பெரியமாமா சொல்லிவிடுவார்!
விசேஷ தினங்களுக்கு சமைக்கவரும் ஆஸ்தான சமையல்காரர் சமவயது ‘கோம்பை’ மணியனிடம், ‘மணியா! சாம்பாரும், அவியலும் கொஞ்சம் கூடவே வெச்சுடு. பழங்கறிக்கு வேணும்!” என்று எக்ஸ்ட்ரா இரண்டு போணிகள் நிறைய சாம்பாரும், அவியலும் தனியாக எடுத்து வைத்து விடுவார்! அடுத்தநாள் பெரிய உருளியில் இரண்டையும் ஒருசேரக்கிளறி சுண்டவைத்து, கண்ணை மூடிக்கொண்டு நிறைய தேங்காயெண்ணெயும் ஊற்றி கலந்து வைப்பார். இதில் தெருவில் வரும் கோஸாயி சாப்பிடுவது போல் மீந்து போன துவரன், பொரியல், மோர்க்குழம்பெல்லாம் சேரக்கூடாது. போனால் போகிறதென்று மீந்துபோன ரசவண்டி வேண்டுமானால் சேரலாம்!
அன்று எல்லோருக்கும் அது தான் விருந்து…..’பத்துப்பசை’ மடி பார்க்கும் பெரியவர்கள் ஏங்கி பார்த்துக்கொண்டிருக்க, சாக்கில் சுருட்டி வைத்திருக்கும் மீதமான துண்டு இலைகளை ஆளுக்கொன்றாக போட்டு, தண்ணீர் தெளித்து, சுடச்சுட சம்பா அரிசிச் சாதத்தை பரிமாறி, அதன்மேல் சூடான பழங்கறியை தளரத்தளர விட்டு மேலுக்கு இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெயையும் சேர்த்து பிசைந்து கொண்டு, தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம் உத்தமம். நேற்றுப்பொரிந்த அப்பளம் மத்யமம். கரியடுப்பில் அப்பளம் சுடுவதும் ஒரு கலை! ரொம்ப பக்கத்தில் காட்டினால் கருகிவிடும். பாந்தமாக எல்லா பக்கமும் சீராக சுடப்பட்டு, கருகாமல் இருக்கவேண்டும்!
இப்படி மூன்றுமுறை சாப்பிட்டும் திருப்தியடையாமல், நாலாவது முறை magnanimousஆக, சாதத்துக்கு தயிர் போதும் என்று விட்டுக்கொடுத்து, தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள அதே பழங்குழம்பு! ஊறுகாயெல்லாம் பக்கத்தில் வரக்கூடாது!
சாப்பிட்டு கையலம்பியவுடன் வலதுகையை அரைமணி நேரமாவது மோந்து பார்க்க வேண்டும்! அந்த வாசனைக்கு எதுவுமே ஈடாகாது! சாயுஜ்ய பதவி கிடைத்தாற்போல் தான்!
இன்றைக்கு என் வீட்டில் பழங்குழம்பும் சுட்ட அப்பளமும் தான்! நானே செய்தது! சிவகாமி அம்மாளும் மேலிருந்து வந்து, சாப்பிட்டுவிட்டு, ‘நன்னா இருக்குடா! ஆசாரமெல்லாம் ஒருநாளைக்கு இல்லாமெப்போனா ஒண்ணும் தப்பில்லே!’ என்று சொல்லிவிட்டு அலம்பின கையை மோந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்!
என்னது?….நார்த்தங்காயில் வற்றல்குழம்பா என்று சிலர் கேட்கலாம். ஆமாம்……இது பச்சை நார்த்தங்காயில்! இது என் அம்மா ரெசிப்பி இல்லை….. சென்னை வந்தபிறகு நானே செய்துபார்க்கலாமே என்று ஒருநாள் முயன்றுபார்த்து, ஓஹோவென்று என்னை பாராட்டிக்கொண்டது. இன்று கசப்பை விரும்பும் என் நாக்குக்கு ரொம்பவே ருசியாக இருந்தது. மேலேயிருந்து சிவகாமி அம்மாள் வந்து, சாப்பிட்டுப்பார்த்து சப்புக்கொட்டிக்கொண்டே போனது தான் எனக்கு சர்ட்டிபிகேட்!

முன்பெல்லாம் நார்த்தங்காய் வாங்குவதற்கென்றே மயிலாப்பூர் குளம் பக்கம் 12-Cயில் போய்வருவேன். இதில் பச்சைக்கிச்சிலிக்காயை நார்த்தங்காய் என்று தள்ளிவிடும் அபாயம் உண்டு! நார்த்தாங்காயின் வெளித்தோல் ‘’ பட விக்ரம் மேக்கப் மாதிரி கரடுமுரடாக இருக்கவேண்டும்!

என் முகநூல் நண்பன் கண்ணன் ஜெகந்நாதன் என் புத்தகம் ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ படித்துவிட்டு, ‘சார்! இனிமெ உங்க நார்த்தங்காய் பிரச்னையை எங்கிட்டெ விட்டுடுங்கோ! என்னுடைய சின்னத்தோட்டத்தில் ஆர்கானிக்காக வளர்க்கிறேன். இன்னும் பெரிசாகலே!’ என்றவர் நேற்று ஆறு பிஞ்சு நார்த்தங்காயுடன் வந்து நிற்கிறார்! எனக்கு ஒளவைக்குக்கிடைத்த நெல்லிக்கனியை விட இனிப்பாக இருந்தது.
ரெசிப்பி எல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. தான் இரண்டு நார்த்தங்காய் இருப்பதால் புளியின் அளவை பாதியாகக்குறைத்துவிடவும். உப்பும், வெல்லமும், பெருங்காயமும் கொஞ்சம் தூக்கலாக இருக்கலாம்!

செய்து பாருங்கள்…..கொஞ்சம் நீளநாக்குள்ளவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும்!

Wednesday, January 20, 2016

து பழவகையைச் சேர்ந்தது. நாமெல்லாம் ஜூஸாகவும், ஜாம் ஆகவும் சாப்பிட்டிருக்கிறோம். அதுவல்ல இது! இன்று மாலை இதுவரை நான் செய்யாத, என் கன்னி முயற்சி!

என் அம்மா சிவகாமி அம்மாள் மேலிருந்து வந்து சாப்பிட்டுப்பார்த்து, நூற்றுக்கு நூற்றியொரு மார்க் கொடுத்து, போகும்போது, ‘நான் கொண்டு போறேண்டா!’ என்று எனக்கு மிச்சம் வைக்காமல், கையோடு எடுத்துச்சென்ற பண்டம்!
300 கிராம் திராட்சைக்கு நிறைய….. 12 பச்சைமிளகாய், சிறிது புளி (to round off the pulippu in Grapes), நிறைய வெல்லம், கண்ணைமூடிக்கொண்டு போட்ட கறிவேப்பிலை, கொத்தமல்லி, நிறைய இஞ்சி, வறுத்த வெந்தயத்தூள், பெருங்காயப்பொடி (இதுவும் கண்ணைமூடிக்கொண்டு) நாலு ஸ்பூன் உப்பு இவைகளை மிக்சியில் அரைத்தெடுத்து,200 கிராம் நல்லெண்ணெய் கொதித்ததும், கடுகு, மஞ்சள்பொடி போட்டு, கடுகு நன்றாக வெடித்ததும், அரைத்தெடுத்த கலவையை சுற்றென்று கலந்து, கைவிடாமல் 20 நிமிடம் கிளறினால் நீங்கள் போட்டோவில் பார்த்த பதம் வரும்!
’ஆமா!….தயிர்வடையிலெ பெரிசா என்ன இருக்கு? தயிர்லெ தாளிச்சுக்கொட்டி வடையை போட்டா ஆச்சு!’ என்று சொல்பவர்களும் மேலே படிக்கலாம்! சென்னையில் எல்லா ஹோட்டல்களிலும் அப்படித்தான் தயிர்வடை கிடைக்கிறது. இது கொஞ்சம் வித்தியாசமானது.
இதற்காக மெதுவடை செய்ய சோம்பற்படுபவர்களும், அதில் ஓட்டை எப்படி போடுவது என்பது தெரியாதவர்களும் நல்ல ஹோட்டலில் தேவையான வடைகளை வாங்கிக் கொள்ளலாம்! ஒரு விஷயம்…. மெதுவடையில் வெங்காயம் கிஞ்சித்தும் இருக்கக்கூடாது.!

தயிர் புளிக்காத கெட்டித்தயிராக இருக்கவேண்டும். நாலரைப்பால் எல்லாம் உதவாதுFull Cream Milk-ல் உறைகுத்திய புளிக்காத தயிர் தான் வேண்டும். தயிரில் கஞ்சத்தனம் கூடாது! கால்மூடி தேங்காயை ஒரு சின்ன பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் ‘வழுமூண’ அரைத்து அந்த விழுதை தேவையான உப்போடு தயிரில் கலக்கவும். (இதை சென்னையில் யாரும் செய்வதில்லை!) அதிகமாக கைபட்டு தயிரை மோராக்கி விடக்கூடாது!
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் …. என் கை தேங்காயெண்ணெய் தான் எடுக்கும் — விட்டு, காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை, ஒரு மெல்லிசு பச்சைமிளகாய், இஞ்சி பொடியாக அரிந்தது, இவைகளை இதே வரிசையில் போட்டு இதையும் தயிருடன் மெதுவாக கலக்கவும்.
வடைகளை கைபொறுக்கும் வெந்நீரில் அரைநிமிடம் ஊறவைத்து அவை உடையாமல் மெதுவாகப்பிழிந்து தயிர் கலவையில் ஒவ்வொன்றாக சேர்க்கவும். ஒரு ஸ்பூனால் தயிரை எடுத்து, வடைகள் முழுகும்படி ஸ்நானம் செய்விக்கவும். ஃப்ரிஜில் அரைமணி நேரத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும்.
இதற்குமேல் உங்கள் கற்பனைப்படி, கேரட் துருவல், கொத்துமல்லி, காராபூந்தி சேர்த்து விருந்தினருக்கு கொடுத்தால், தேவாம்ருதம் தான்! இன்று எனக்கு மிச்சமிருந்தது….. ஒன்றே ஒன்று தான்! அதுவும் நண்பர் “ஸார்! இது உங்களுக்கு இருக்கட்டும்!” என்று விட்டுக்கொடுத்தது!
படத்தைப்பார்த்தால் கறிவேப்பிலை அதிகமாகத்தெரியும். விரும்பிச்சாப்பிடுவேன். கறிவேப்பிலைக்கு — சாம்பாரில், அவியலில், அடையில் பாதி வெந்தும் பாதி கல்லில் பொரிந்து, காராபூந்தியில் மொறுமொறுவென்று பொரித்தது — இப்படி தனித்தனி சுவையாக இருக்கும். இப்படி அதிகமாக கறிவேப்பிலை சாப்பிட்டதால் தான் எனக்கு ஆரோக்யமான தலைமுடி என்று என் தாயார் நம்பினார்!
ஐயோ!….போதும்யா சமையல் குறிப்பு!…….சரி…..சரி! இந்த அவியலின் ஹைலைட்டு மட்டும் சொல்லிட்டுப்போயிடறேன்!…..ப்ளீஸ்!

1. இதில் தயிர் சேர்க்காமல், தேவையான அளவு புளி — புதுப்புளி உத்தமம் — சேர்க்கவேண்டும்!
2. சமைத்து, கீழறிக்கி வைத்த அவியலில் இரண்டு மூன்று டேபிள்ஸ்பூன் பச்சைத்தேங்காயெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
3. தயிர் சேராததால் பார்க்க அழகாக, மஞ்சளாக இருக்கும். இலையில் (சிரட்டைத்தவி – கொட்டாங்கச்சி அகப்பையால்) பரிமாறும்போது, ‘சொத்’தென்று போட்ட இடத்தில் கம்பீரமாக இருக்கும்.
4. சூடான அவியலில் தயிர் சேர்க்கும்போது, சூட்டில் தயிர் மோராகி, இலையில் போட்டவுடன், தானே அன்னத்தை நோக்கி ஓடையாக ஓடிவரும் வாய்ப்பு அதிகம்!
5. கறிவேப்பிலையை ஒதுக்கிவைக்காமல் விரும்பிச்சாப்பிடுபவர்கள் ஒரு கொத்து கறிவேப்பிலையை கூடச்சேர்க்கலாம். சாப்பிட்டு முடிந்தபின், தேங்காய்க் கலவையில், பச்சைத் தேங்காயெண்ணெயில் கலந்திருக்கும் கறிவேப்பிலையை தனியாகச் சாப்பிட, ’தனி’ ருசி! சாப்பிட்டவர்களுக்குத் தெரியும்!
பி.கு: 2000-த்தின் தொடக்கத்தில் சங்கீத சீசனுக்கு மியூசிக் அகாடெமியில் கேன்ட்டீன் நடத்திய அறுசுவை நடராஜன் செய்த மலையாள அவியலில் ‘குற்றம் குற்றமே!’ என்று சொன்ன இந்த நக்கீரனை “உங்களால் செய்துகாட்டமுடியுமா?” என்று கேட்ட சவாலை ஏற்று, அடுத்தநாள் அதிகாலை அங்கே Lecture-Demonstration தொடங்குமுன்பே போய் அவர்கள் சமையலறையிலேயே செய்துகாட்டி, ‘ஓய்!….நீர் மன்னன்யா!” என்று சர்ட்டிபிகேட்டும் வாங்கியவன்!

Tuesday, January 19, 2016



மேசான் காடுகளிலிருந்தோ ஆல்ப்ஸ் மலைத்தொடர்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட அரிய மூலிகைகளிலிருந்து தயாராகாமல்….
அஞ்சு தேங்காயை மட்டும் வெச்சு ஆத்துலேயே செஞ்சது…
–ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (தாளிக்கும் ஓசை)
Now over to our பாரதி மணி Sir…
ன் சிறுவயதில் கிராமத்தில் குழந்தைகளுக்கு உடம்பில் தேய்க்கும் தேங்காயெண்ணெய் இப்படி தயாரிக்கப்பட்டது தான். கொப்பரையிலிருந்து செக்கில் எடுத்த எண்ணெயைவிட இது மஞ்சளாக இருக்கக்காரணம் அதை காய்ச்சுவதால் தான்! பிறந்த குழந்தைகளுக்கு நடு உச்சிப்பக்கம் எலும்பு இல்லாமல் குழிவாக, மிருதுவாக இருக்கும். குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை அந்தப்பகுதியில் ஒருநாளைக்கு ஐந்து தடவையாவது இந்த தேங்காயெண்ணையைத்தடவ வேண்டும். அதற்கு ”உச்சி வைப்பது” அல்லது “தலைக்கு வைப்பது” என்பது சொலவடை.
இரண்டு பெரிய முற்றின யாழ்ப்பாணம் தேங்காயிலிருந்து படத்தில் வருமளவு எண்ணெய் கிடைக்கும். திருவின தேங்காயை ஒன்றிரண்டாக அரைத்து அதிலிருந்து முதல்/இரண்டாம் பால் எடுத்து இரண்டாம் பாலை முதலாவதாக வாணலியில் விட்டு கிளற வேண்டும். பின் முதல் பாலையும் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். வெள்ளையாக இருக்கும் தேங்காய்க்கசண்டுகள் பொன்னிறமாக மாறத்துவங்கும்.
அந்த கசண்டை அப்படியே சாப்பிட்டால் தித்திப்புடன் நன்றாக இருக்கும். ஆனால் வயிற்றுக்குக்கோளாறு!…..தலை சுற்றும்!! என் பாட்டி கொஞ்சம் வெல்லப்பாகு காய்ச்சி அதில் இதைக்கலந்து தேங்காய்த்திரட்டுப்பாலாக உருண்டை பிடித்துத்தருவாள்! அதை இதுவரை சாப்பிட்டிராதவர்களுக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைப்பது உறுதியில்லை!
என் குழந்தைகள் வரை இந்தத் தேங்காயெண்ணெய் — ‘உருக்கின எண்ணெய்’ — தான் “உச்சிக்கு வைத்திருக்கிறேன்” பிறகு அந்த இடத்தை Johnson & Johnson Baby Oilபிடித்துக்கொண்டது!