Sunday, February 14, 2016


நாடகமே உலகம் 
நாடி, நரம்பு, நடிப்பு 
மனிதனை மகிழ்வித்த, ஆசுவாசப்படுத்திய, சிந்திக்கத் தூண்டிய தாய்க்கலையான நாடகக்கலையின் ஆளுமைகளைச் சந்திக்கும் மேடைதான் இந்த நாடகமே உலகம் !

‘உங்களுக்கு, ஜெயகாந்தன் மாதிரி இன்டலெக்ச்சுவல் அரொகன்ஸ் கொஞ்சம் இருக்கு’ என்று நண்பர் ஒருமுறை சொல்ல, ‘கொஞ்சம் இல்லீங்க, நிறையவே இருக்கு. அப்புறம் இன்டலெக்ச்சுவல் எல்லாம் இல்லை, வெறும் அரொகன்ஸ் மட்டும்தான் இருக்கு!’ என்றவர் ஷி.ரி.ஷி. மணி. தற்போது ‘பாரதி’ மணி. நாடக உலகத்தாரும், சினிமா உலகத்தாரும் கலைத் தந்தையாகப் பார்க்கும் இவரை, இன்றைய தலைமுறையினருக்கு, ‘பாரதி’ திரைப்படத்தில் பாரதியாருக்குத் தந்தையாக நடித்தவர் என்று சொன்னால் தெரியும். ஏழு வயதில் நாடக நடிகராக அரிதாரம் பூசியவருக்கு, இப்போது 78 வயது. 

71 வருட நடிப்பு அனுபவம். தமிழகத்தின் மூத்த நாடக எழுத்தாளர்கள் அனைவரின் கதைகளையும் நாடகமாக அரங்கேற்றியவர். நவீன நாடகத்தை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். ஆயிரக்கணக்கான மேடைகளில் மைக் தவிர்த்து நடித்தவர். ‘ஐயா உங்களுக்குக் குரல் நல்லா இருக்கு, நீங்க மைக் இல்லாம நடிச்சுருவீங்க. மத்தவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?’ எனக்கேட்டபோது, ‘மைக் இல்லாமப் பேசுறதுக்குக் குரல் எழும்பாதவனை வீட்டுக்குப் போகச் சொல்லு!’ என்று கர்ஜித்தவர். 

‘நாடகமே உலகம்’ தொடரை இந்த ஆதிப்புள்ளியில் இருந்து துவங்குவதுதான் ஆகச்சரி என்று, ‘பாரதி’ மணியைச் சந்திக்கச் சென்றோம். "வாங்க, வாங்க!" - 80 வயதை எட்டயிருப்பவரின் குரலில் இருந்த திடம், அன்று இவர் மைக் வேண்டாமென்று சொன்னது ஆச்சர்யமில்லை என நினைக்கவைத்தது. தன் புகை ஊதுகுழலை எடுத்து, "புகைபிடிக்கும்போது பக்கத்துல இருக்குறது உங்களுக்கு ஒண்ணும் சங்கடமா இருக்காதே?" என்றார். "இல்லை" என்றோம். "ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன். நீங்க சங்கடமா இருக்கும்னு சொன்னாலும், மத்தாயிக்கு ம__ரா போச்சுன்னு, குடிக்க ஆரம்பிச்சுடுவேன்" என்றார். இதுதான் இன்டலக்ச்சுவல் அரொகன்ஸ்போல என்று நாம் யோசிக்க, "மத்தாயிக்கு ம__ரா போச்சுன்னா என்னன்னு தெரியுமா?" என்று கேட்டு, ஒரு மலையாள கிருத்தவ பக்தனின் கதையைச் சொல்லிச் சிரிக்கிறார். 

‘சுத்தமா நடிக்கத் தெரியாது, உங்ககிட்ட வந்தா கொஞ்சம் ஒழுக்கம் கத்துக்குவான்’னு எங்கப்பா ஏழு வயசில் என்னை நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையோட அனுப்பிவெச்சார். பள்ளிப்படிப்பு முடியும்வரை, எல்லா கோடை விடுமுறைகளிலும் அவரோட நாடகங்கள்ல நடிச்சுட்டு வந்தேன். எஸ்எஸ்எல்சி முடிச்சுட்டு நாகர்கோயில், இந்துக் கல்லூரியில அப்ளிக்கேஷன் போட்டுட்டு, ரெண்டு மாசம் சும்மா இருக்கணுமேனு டெல்லியில இருந்த எங்க அக்கா வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே கத்துக்கிட்ட டைப்ரைட்டிங் அங்க எனக்கு ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’-ல வேலை வாங்கிக்கொடுத்தது.

வேலை, மாலைநேரக் கல்லூரினு வாழ்க்கை போயிட்டிருந்தப்போ, உள்ளூர இருந்த நாடக ஆசையால 1956ல ‘தக்ஷிண பாரத நாடக சபா (DBNS)’  ஆரம்பிச்சேன். முதல் நாடகமா, பம்மல் சம்பந்தம் அவர்களோட ‘சபாபதி’ நாடகத்தை தயாரிச்சு இயக்குனேன். தொடர்ந்து நாடகம் போட்டுட்டு இருக்கும்போதே, 1962ல நேரு ஆரம்பிச்ச ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து ரெண்டு வருஷம் படிச்சேன். அங்கதான் நாடகங்களை அறிவியல்ரீதியா எப்படி அணுகணும்னு கத்துக்கிட்டேன். உலக நாடகங்கள், இந்திய நாடகங்கள் அங்கதான் அறிமுகமாச்சு. மேடையில பேசிட்டிருக்கும்போது கையை எப்படி வெச்சுக்கணும், எப்படி நிக்கணும்னு ஆரம்பிச்சு அங்க கத்துக்கிட்டதுதான், நவீன நாடகங்களை உருவாக்கக் காரணமா இருந்துச்சு. அந்த நேரத்துலதான் டெல்லி கணேஷ், பாலச்சந்தர், கோமதி சுவாமிநாதன் போன்றோரின் அறிமுகங்களும், அவங்களோட நாடகங்களை டெல்லியில போடுறதுக்கு வாய்ப்பும் கிடைச்சது. பரிதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பாம்பே, சென்னைனு இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான மேடைகளில் நாடகம்போட்டிருப்போம்" என்ற தன் நெடிய வரலாறைச் சுருக்கமாகச் சொன்ன ‘பாரதி’ மணி, தனக்கும், நடிகர் நாகேஸுக்கும் உள்ள ஆழமான நட்பைச் சொல்லி கண் கலங்குகிறார். பின் தானே தொடர்கிறார்.

"நடிகர் நாசர், சத்யராஜ் ரெண்டு பேரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘மணி சார்... நாம ஒரு நாடகம் போடணும்’னு சொல்றது வழக்கம். ‘உங்களைவிட ரொம்ப பிஸியான நஸ்ருதின் ஷா, ஓம்பூரி மாதிரி நடிகர்கள் எல்லாம் சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும்போதே, கிடைக்குற கூலியைப்பத்திக் கவலைப்படாம நாடகங்கள்லயும் நடிக்குறாங்க. நாடகத்துல நடிக்குறதுக்குப் பெரிய மெனக்கெடல் வேணும், அர்ப்பணிப்பு வேணும். நீங்க என்னை ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் இதேதான் சொல்லுவீங்க. அதனால வாயிலேயே பாயாசம் வைக்குறது வேண்டாம்’னு அவங்களுக்கு நேராவே சொல்லிடுவேன்!" - இந்த இடைவெளியில் நாடகத்தின் மீதான நஸ்ருதின் ஷாவின் அர்ப்பணிப்பைப் பற்றி வியந்து பேசுகிறார். 
 
இப்போது ஏன் நாடகங்களில் நடிப்பதில்லை?
"50 வருஷம் டெல்லியில இருந்தேன். அங்க நிறைய நண்பர்கள் இருந்தாங்க. அவங்ககிட்ட அதிகாரப்பிச்சை எடுக்குறது வழக்கம். காசு கொடுக்கலைன்னா, நீ உயிரோட இருக்க மாட்டேனு சொல்லி உரிமையோட மிரட்டி, 40 ஆயிரம் ரூபாய்வரைக்கும் கலெக்ட் பண்ணி, அந்தக் காசு தீர்றவரைக்கும் நாடகம் போடுவோம். இங்க யார்கிட்டயும்போயி யாசகம் கேட்க முடியாது. யாரையும் எனக்குத் தெரியாது. ஸ்பான்ஸர்ஷிப் கேட்டுப்போனா, ரெண்டு நாள் கழிச்சு வரச் சொல்லுவான். அவன் பின்னாடியேபோயி கைகட்டி நிக்க நம்மளால முடியாது. நாடகம் போடணும்னு எங்கிட்ட வந்து பேசுறவங்ககிட்ட நான் சொல்றது, ‘கைக்காசைப் போட்டு நாடகம் போடாத, அப்புறம் கஷ்டப்படுவ. நீ நாடகம் போடலைன்னா கலைத்தாய் தூக்குமாட்டிக்கப் போறதில்லை! " - அடுத்த கேள்விக்கு நாம் தயாரான நொடிகளில்,

"இப்படிக் கால்மேல கால்போட்டு நான் சொல்ல முடியும் (கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார்)... நாடகத்துல இருந்து அஞ்சு பைசா நான் என் வீட்டுக்குக் கொண்டுபோனதில்லை!" ‘நவீன நாடகத்துக்கான விதை டெல்லியில் ஷி.ரி.ஷி. மணியால் போடப்பட்டது’ என்று ஒருமுறை கலை விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் இவரைப்பற்றி எழுதியதை அவருக்கு நினைவுபடுத்திக் கேட்டோம். "எல்லாமே ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ கொடுத்த உத்வேகம்தான். ‘மழை’, ‘மஹா நிர்வாணம்’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’ போன்ற மிக வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றியதுனால கிடைச்ச பெருமை அது. இந்திரா பார்த்தசாரதியை துரத்தித் துரத்தி எழுதவெச்சு அதை நாடகமா அரங்கேற்றியிருக்கோம். அதுமாதிரியான நாடகங்களை இன்றைய தலைமுறையினர் நிச்சயமாப் பார்க்கணும்."

நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சமூகம் சினிமாவை நோக்கித் திரும்பியது. அந்தச் சமூகம் மீண்டும் நாடகத்தை நோக்கித் திரும்ப வாய்ப்பிருக்கிறதா?
"நாகர்கோயில்ல நான் இருக்கும்போது, ரெண்டு அணாவுக்கு ஒரு மசால் தோசை, ஒரு ரசவடை, ஒரு டிகிரி காபி கிடைக்கும். அந்த நாட்கள் திரும்பிவருமான்னு இப்பவும் நான் கேட்டுட்டிருக்கேன். அது எப்படி வராதோ அதே மாதிரி, முன்பு நாடகத்துக்கும், நாடக நடிகர்களுக்கும் இருந்த மரியாதையும் திரும்ப வராது; இந்தச் சமூகமும் மீண்டும் நாடகத்தை நோக்கித் திரும்ப சாத்தியமே கிடையாது. இதுதான் யதார்த்தம்!"- புகை ஊதுகுழல் பணி முடித்திருந்தது.

- விஷன்.வி
--இன்று தொடங்கிய மனம் இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்

Monday, February 1, 2016


அப்ப்ப்பா! ரொம்ப குளிருதே! ஏக ஐஸ் மழை! ஆமாம், இந்த நல்ல நண்பர்களெல்லாம் யாரைப்பற்றி சொல்கிறார்கள்? சத்த்தியமா, அது நான் இல்லை!

எனக்கு தில்லிக்குளிரும் பிடிக்கும். புகழுரைகளும் அதை விட பிடிக்கும். ஆண்டவனே ஸ்தோத்திரத்துக்கும் முகஸ்துதிக்கும் அடிமையாவானாம்... நான் எம்மாத்திரம்? I am really humbled.

இந்த நிறைந்த உள்ளங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்னால் நன்றி சொல்லத்தான் முடியும். நன்றி.....நன்றி!

                                                                                             பாரதி மணி


சமர்ப்பணம்

தில்லியில் தாயும் தமக்கையுமாக
இருந்து, நான் வளரக்காரணமாயிருந்த

என் அக்கா பகவதிக்கும் அத்தான் கணபதிக்கும்.

We cannot change our memories, but we can change their meaning and the power they have over us" - David Seamands

சிலரின் அறிமுகங்கள் முதல் சந்திப்பிலே நெருக்கம் கொண்டுவிடுகின்றன. அப்படி அறிமுகமானவர் தான் டெல்லி மணி. அப்போது அவர் பாரதி மணியாக அவதாரம் எடுக்கவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக சுபமங்களா  நாடகவிழாவின் போது க.நா.சு.வின் மருமகன் என்று கோமல் சுவாமிநாதன் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

வெளிப்படையான பேச்சும், எப்போதும் முகத்தில் ததும்பி நிற்கும் சிரிப்பும், பைப் பிடிக்கும் கம்பீரமும் மனத்தடைகள் அற்ற உரிமை கொள்ளலும் அவரிடம் நெருக்கம் கொள்ள வைத்தன. நவீன நாடகம், இந்திரா பார்த்தசாரதி, அல்காஸி என்று அன்றையப் பேச்சு நீண்டது. பாரதி மணியின் சிறப்பு நாமாக கேட்காமல் எதைப்பற்றியும் அவர் ஒரு போதும் பேசுவதில்லை. ஆனால் அவர் பேசத்துவங்கினால் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உருவம் நம் கண்முன்னே வளரத்துவங்கி விஸ்வ ரூபம் கொண்டுவிடும். நவீன நாடகம், அரசியல், சினிமா. இசை, இலக்கியம், பயணம் என்று எவ்வளவு அனுபவம், எத்தனை மனிதர்களை அறிந்திருக்கிறார். எப்படி இந்த மனிதன் இத்தனை அமைதியாக இருக்கிறார் என்று வியக்க வைக்கும்.

தன்னை பகடி செய்து கொள்வதும், தனது அனுபவங்களை தன்னிலிருந்து பிரித்து விமர்சனம் செய்வதும் உயர்ந்த கலைஞர்களுக்கே சாத்தியமானது. அது பாரதி மணியிடமிருக்கிறது. சிரிப்பும், கேலியும், பகிர்ந்து கொள்ளப்படாத உள்ளார்ந்த துக்கமும், நினைவுகளை துல்லியமாக வெளிப்படுத்தும் நுட்பமும் அவரிடம் எப்போதுமிருப்பவை. மிகத் தாமதமாக அவர் எழுத்தாளராகியிருக்கிறார். இதையும் ஒரு விபத்து என்று சொல்லியே அவர் சிரிக்கிறார். உண்மையில் அவரது மனதில் உள்ளதில் ஒரு கைப்பிடியளவு கூட அவர் இன்னும் எழுதவில்லை.

பெரும்பான்மையினருக்கு அனுபவம் நேர்கிறது. சிலர் மட்டுமே அனுபவத்தை உருவாக்குபவர்கள். அதை தேடி அலைபவர்கள், நேர்கொண்டு அதன் சுகதுக்கங்களோடு தன்னை கரைத்து கொள்கின்றவர்கள். பாரதி மணி அப்படி ஒருபக்கம் டெல்லி சுடுகாட்டு மனிதராக வாழ்ந்திருக்கிறார் இன்னொரு பக்கம் டெல்லி சுல்தான் போல லண்டனில் பிரதமர் மொரார்ஜிக்கு பக்கத்து அறைவாசியாகவும் இருந்திருக்கிறார்.

டெல்லி நினைவுகளால் பீடிக்கபட்ட நகரம். அந்த நகரின் ஏதோவொரு வீதியின் பனிபடர்ந்த பின்னிரவில் நீங்கள் ஷாஜகானையோ, ஔரங்கசீப்பையோ கூட வீதியோரம் குளிர்காய்ந்தபடி காண முடியும். காரணம் அடங்க மறுத்த நினைவுகள் அந்த நகரில் பகலிரவாக அலைந்து கொண்டிருக்கின்றன. அந்த ஊரில் வசித்தும் ஒரு மனிதன் எழுத்தாளன் ஆகவில்லை என்றால் அவனது புலன்கள் பழுதடைந்து விட்டிருக்கிறது என்றே அர்த்தம்.

பாரதிமணி வாழ்க்கையை ரசிக்கத் தெரிந்தவர். நல்ல இசை, புத்தகம், சூடான காபி, நண்பர்கள், உலக சினிமா, நீண்ட தனிமை என்று அவரது வாழும் முறை அவர் விரும்பி உருவாக்கி கொண்டது. எல்லா அனுபவங்களையும் போலவே அவருக்கு தான் ஒரு எழுத்தாளர் ஆனதும் ஒரு அனுபவமே. ஆனால் வாசகர்களுக்கு அவை வெறும் அனுபவம் மட்டுமில்லை. வாழ்க்கையை அருகில் சென்று தோழமையுடன் கைகுலுக்கவும், அதன் விசித்திரங்களை கண்டு நகைக்கவும், வலிகள், வேதனைகளை எதிர்கொண்டு முன்செல்லவும் கற்றுத்தரும் பாடங்கள்.

தன்னை பெரிது படுத்திக் கொள்ளாமல் இருப்பதையே இயற்கை தன் ஒவ்வொரு துளியிலும் கற்றுத் தருகிறது. மலைகள் ஒரு போதும் சப்தமிடுவதில்லை. நம் குரலைத் தான் எதிரொலிக்கின்றன. தன்னை அறிந்த மனிதர்களும் ஒருவகையில் அப்படியே. பாரதிமணி அவர்களில் ஒருவர். இப்படி எவராவது தன்னைப் பாராட்டுவதை கூட அவர் பரிகாசமே செய்யக்கூடும். அது தான் அவரை இத்தனை அழகாக எழுத வைக்கிறது...........

--எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.


.                           ****              *****                              ****
க.நா.சு. தமிழின் இலக்கிய வரலாற்றில் பிரும்மரிஷி பிரதிஷ்டை பெற்றவர். அவரது புதல்வியை மணந்தவர், திருவனந்தபுரத்துக் காரர் எனும் அறிமுகத்துடன் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இங்கே எனது சாலை வட்டார வியாபாரஸ்தலத்தில் வந்து படியேறினார் இப்போதைய பாரதி மணி. எங்கள் பேச்சு அப்போது அவர் படித்து முடித்திருந்த எனது நாவல் கிருஷ்ணப்பருந்து பற்றியே இருந்ததாக ஞாபகம். அதன்பிறகு திருவனந்தபுரம் வரும்போதெல்லாம், நான் கடையில் இல்லாத சமயமாகப் பார்க்க வருவார்.

சமீபத்தில் பாரதி மணி உயிர்மை, தீராநதி போன்ற இதழ்களில் எழுதி வெளிவந்த கட்டுரைகளைப் படிக்க வாய்ப்புக்கிடைத்தது. ராஜீவ் காந்தி, அன்னை தெரசா, சங்கீத விமர்சகர் சுப்புடு, ரோஜாவின் ராஜாவான நேரு, அருந்ததி ராய் இவர்களைப் பற்றியெல்லாம் நகல் தரிசனம் போல கட்டுரைமணிகளுக்குப்புறம்பாக, நாதஸ்வரம் பற்றி, பங்களாதேஷ் தமிழர்கள் பற்றியெல்லாம் விரிவாக, ஆழமாக, அர்த்தஞானமுடன் எழுத்துமணிகள்......நிறைவில் நெகிழ்ந்துபோனதற்கு இன்னும் முக்கிய காரணமொன்றுண்டு......அது:

இங்கே திருவனந்தபுரத்தில் நான் வாழ்ந்து முட்டையிட்ட தமிழ் உலகின் திருவிதாங்கூர் ராஜவம்ச ஆட்சியின் மகத்வ வித்தாரங்கள், பத்மநாபர் ஆலய முறைஜப, லக்ஷ தீபோத்ஸவம் பற்றியெல்லாம் -- ஏதோ நானே எழுதியது போல இந்த பாரதி மணி, ‘நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம் எனும் தலைப்பில் கட்டுரைச்சித்திரம் தீட்டியதைப் பார்த்தபோது, அறுபதிற்கும் மேல் ஆண்டுகள் நகர்ந்துவிட்ட சுந்தர சொப்பனங்கள் எல்லாம் அலை வீசி குளிர் நினைவுகளாக மனதில் புளகம் கொண்டன. அவரது சிறுவயது திருவனந்தபுரம் நினைவுகளை எப்படி அசை போட்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.

புத்தகங்கள் படித்த அறிவின் பிரதிபலிப்புகளாக கட்டுரை தீட்டிவிடலாம். ஆனால் பட்டறிவின் இழைகளை நேர்த்திச்சித்திரங்களாக எழுத்தில் அடுக்குவது நிபுணத்துவ ஞானத்தால் மட்டுமே சாத்தியமானது. பாரதி மணி இந்த நினைவுக்கட்டுரைகளை அழகிய இலக்கிய மணிமாலைகளாக கோர்த்துத்தந்துள்ளார். பாரதி மணி ஒரு பூ மரம். அவரது இந்த இலக்கியப்பணி இன்னும் இன்னும் பூத்துக்குலுங்க என் வாழ்த்துக்கள்........... 

--எழுத்தாளர் ஆ. மாதவன்.


                        ****                   *****                             ****


அருந்ததி ராய் எழுதி ப்ரதீப் கிருஷன் இயக்கிய The Electric Moon என்ற ஆங்கிலப்படத்தை பதினைந்து ஆண்டுகளுக்குமுன் பெங்களூர் திரைப்பட விழாவில் பார்த்தபோது, மனதில் நின்ற பாத்திரங்களில் சில நிமிடங்களே வரும் ஒரு தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் ஒன்று. பாரதி மணி நடித்திருந்தார். படம் முடிந்தவுடன், கிரெடிட்ஸில் S.K.S. Mani என்று குறிப்பிடப்பட்டிருந்த்தைக் கவனித்தேன். பல வருடங்கள் கழித்து, ‘பாரதிபட்த்தில் தோன்றி அவர் புகழடைந்தபின், அவரை சந்தித்தபோது தான் அதைப்பற்றி தெரிந்துகொண்டேன். அதன் பின்னர் ஜெயபாரதி இயக்கிய நண்பா…….நண்பா!படத்தில் கிறிஸ்தவ பாதிரியார் வேடம் தாங்கி, அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். கல்லறைத்தோட்டத்தில் ஒரு காட்சி. தன் உயிர்த்தோழன் லாரன்ஸின் அடக்கம் முடிந்தபின், வந்தவர்களெல்லாம் போனபிறகு, கதாநாயகன் ஜோஸப்பும் பாதிரியாரும் மட்டும் இருக்கிறார்கள். வாழ்தல் சாதல் பற்றிய ஒரு அடிப்படைக்கேள்வியை எழுப்புகிறார் கதாநாயகன். ‘நேற்று இருந்தான், இன்று போய்விட்டான், இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ஃபாதர்………?என்று அழுதுகொண்டே கேட்கிறார். நாம் எல்லோரும் கேட்கும் கேள்வியும் அது தானே! பாதிரிக்கும் விடை தெரியாதே! பதில் சொல்லமுடியாத கேள்வியை எதிர்கொள்ளும் வேதனையில் அருட்தந்தையும் கண்ணீர் சிந்துகின்றார். இந்த உச்சக்கட்டக்காட்சியில், பாரதி மணியின் நடிப்பு நம் மனதைப்பிழிகின்றது. ‘விடை தெரியாத புதிர் இதுஎன்பதை தம் முகபாவத்தின் மூலம் காட்டுகின்றார். தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய, மோடித்தனமான (stylized) நடிப்பைத்தவிர்த்து, தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒரு தனித்தன்மையைக் கொடுக்கின்றார். தனது ஆளுமையை விட்டுவிலகி, பாத்திரத்தின் ஆளுமையை வெளிப்படுத்துவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார். இது துல்லியமாக வெளிப்படுவது அம்ஷன் குமார் இயக்கிய ஒருத்தியில் தென் தமிழ்நாட்டுக்கிராமமொன்றில் வாழும் ஓர் இதயமுள்ள ஊர்ப்பெரியவராக கீதாரியாக பாரதி மணி தோன்றுகிறார். கரிசல் காட்டுத்தமிழை அழுத்தமாக உச்சரித்து, அதற்கு உயிரூட்டுகிறார்.

இவரது நடிப்பு வளர்ந்த்து நாடகமேடையில் என்றாலும், இந்த இரு ஊடகங்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை நன்கு உணர்ந்த களைஞன் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கின்றார் மணி. அமெரிக்க சினிமாவில் உப பாத்திரங்களில் நடித்தே திரைவரலாற்றில் இடம் பிடித்தவர்கள் சிலர் உண்டு. எட்வர்டு ஜி. ராபின்ஸன் (நினைவிருக்கிறதா Mackenna’s Gold? ),  மார்ட்டின் பால்சாம் ( Psycho-வில் துப்பறிபவராக) போன்றவர்கள், பாரதி மணியைத் திரையில் காணும்போதெல்லாம், இந்த இருவர் ஞாபகம் எனக்கு தவறாமல் வருவதுண்டு!........................

--சு. தியடோர் பாஸ்கரன்.


                         ******                                                 ******                                                                                                                                                                                ******
பாருக்குள்ளே எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில் பாரதி மணியும் ஒருவர். க.நா.சு.வின் மாப்பிள்ளை என்று தொடங்கிய அவரது அறிமுகம் விரிந்து விரிந்து நின்றது. அவர் ஒரு நாடகக் கலைஞர், நடிகர், கர்நாடக இசை மற்றும் இலக்கிய ரசிகர் என தனது தனித்துவம் மிக்க தகுதிகளின் விரிவாக்கமாக அந்த அறிமுகம் நீடித்தது. ஆங்கிலத்தில் அவர் தமது பெயரைப் பாரதி மணி என்று எழுதும் போது Bharati Mani என்றுதான் எழுதுகிறார். அப்படித்தான் எழுத வேண்டும் என்கிறார். காரணம் பாரதி அப்படித்தான் எழுதினார் என்கிறார். சொல்லின் வன்மையை நன்கு புரிந்தவன் பாரதி. அதன் தொனியை அறிந்தவன். ஆகவே அந்தத் தொனியோடுதான் தனது கணினி அடையாளம் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது என்று கூறும் பாரதி மணியிடம் தொனி பற்றிய பார்வையின் ஆழத்தைக் காண முடிகின்றது.
                                                                            
அவர் நடித்த நாடகங்களில் அவரது சொல்லோசை கவனிக்கத் தக்கதாகும். பாரதி மணியிடம் மேடையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி ஒரு இயல்புத் தன்மை பிரதிபலித்து நிற்பதைக் காணலாம். பாரதி படத்தில் சின்னசாமி ஐயராக வந்த பாரதி மணியிடம், பாரதி பேரில் அவருக்குள்ள தனிப்பட்ட உன்னத மரியாதையை, தந்தை மகன் பாசத்திற்குள் கரைத்துக் கொண்டு நின்றதைக் காணலாம். பாரதியின் எதிர்காலத்தை உள்ளுணர்வால் உணர்ந்த தந்தையின் அக்கறை கலந்த பாசம் இயல்பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
                                                                            
பாரதி மணியின் தனித்தன்மை இந்த இயல்பு நிலையின் சரளமான புலப்பாடுகள் தான். குறையைச் சுட்டிக்காட்டினாலும் சுட்டித்தனமாக சிரிப்பில் சமாளித்துக் கொள்ளும் குழந்தையின் மனநிலைப் பிரதிபலிப்பை அவரிடம் காணலாம். உள்ளத்திற்கும், முகத்திற்கும், உதட்டிற்கும் இடையே இடைவெளி இல்லாத ஒரு ஒட்டுறவைக் கொண்டவர். சரளமான உயிர்த்துடிப்புள்ள உரையாடல்களில் சில சமயம் குமறல்களைப் பொரிந்து தள்ளும் போதும் அந்த ஒட்டுறவைக் காணலாம். வலிந்து கட்டுதல், போலித்தனம் போன்ற செயற்கை இயல்புகள் அவரது வாழ்க்கையிலும், கலைவெளியீட்டிலும் இல்லை. இத்தகைய இயல்பு நிலை, நடிகனைப் பொருத்தவரை ஒரு பேறு ஆகும். அந்த இயல்பு நிலையின் புலப்பாடுகள் வாழ்க்கையின் உண்மையான சந்த லயங்களைக் காட்டி நிற்பதாகும். உதட்டிற்கும், உள்ளத்திற்கும் உள்ள ஒட்டுறவை அதே இயல்போடு எழுத்தில் கொண்டு வருவது எளிதல்ல. ஏனெனில் எழுத்து என்பது பிரகஞையின் கூர்மையான செயல்.

உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்ற அக்கறை கொண்ட சிற்றிதழ்களில் அவரது எழுத்துகளைப் படித்தவன். உயிர்மையில் என்று நினைத்து உறுதி செய்து கொண்டேன். ராஜீவ்காந்தி சர்வதேச விமானப் பயணமொன்றில் மணி என்ற இந்தியனைப் பார்த்து, குசலம் விசாரித்ததும், மணிக்கணக்கில் கஸ்டம் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, புன்னகையுடன் பொறுமை காத்ததுவும், இரண்டுவரிச் செய்திகளை ஒடுக்கியிருக்கலாம். இதை அரசியல்வாதிகள் அடைமொழிகளின் பேரிகை முழக்கிப் பலம் தேடலாம்.

பாரதி மணியின் நினைவு அலைகளில் குமறும் உணர்வுகளில் குத்தல்கள் தான் கஸ்டம் அதிகாரிகளிடத்தும், அரசிடத்தும் பாயும் தொனியுடன் பாட்டி சொல்லும் பாணியில் அமைந்த ஒரு பயணச் சிறுகதைப் பாங்கை காணமுடிகிறது.

பாரதி மணியிடம் பேசிப் பழகியவர்கள் அந்த எழுத்துக்களைப் படிக்கும் போது அவரது குரலின் ஒசைகள் தொனி லயங்களோடு காதில் விழுந்து கொண்டிருக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். அரசியலுக்கப்பால் தனிமனிதரைப் பற்றிய அந்த கணிப்பு வித்தியாசமான உண்மைக்காட்சிக்கு, தான் மட்டுமல்ல மற்றவரையும் சாட்சியாக்கும் ஒரு பகிர்தல் அனுபவம். நடிப்பில் மட்டுமல்ல எழுத்திலும் தனது இயல்பு நிலை இழையோடும் என்பதற்கான எடுத்துக்காட்டு!............

--நாடக ஆய்வாளர் இயக்குநர் ப்ரொபஸர். எஸ். ராமானுஜம்                  


                            *****                ******                           *****
வாழ்க்கைப்பயணத்தில் யந்திரகதியில் என்ன தான் படித்து பட்டம் பெற்று வேலையேற்று வாழ்ந்து முடித்துக்கொண்டிருந்தாலும், சற்றும் எதிர்பாராத இடத்தில், நேரத்தில், பள்ளியில் நம் கூடப்படித்த ஒரு இளம் நண்பனைச்சந்திக்க நேர்ந்தால் நாம் அடையும் மகிழ்ச்சியும் உள்ளக்கிளர்ச்சியும் அலாதியானது. அத்தகைய ஒரு மானசீக அதிர்வுக்கு நான் ஆளான தருணம், மணியை இந்தியத்தலைநகரில் Gandhi Peace Foundation-ல் வைத்து பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த நேரம்.

கரடுமுரடான என் இலக்கியப்பாதையில் என்னால் மறக்கமுடியாத ஒரு சிலரில் முக்கியமானவர் க.நா.சு. எழுதியவர் யார் என்று தெரியாமல், எழுத்தைச் சுவைப்பதில் ஈடுபட்டிருந்த என் இளமைக்கால வாசிப்பு அனுபவத்தில் முத்திரை பதித்த படைப்பு அசுர கணம். பிறகு இந்நாவலைப்படைத்த க.நா.சு.வுடன் நெருங்கிப் பழக நேர்ந்தது பற்றியெல்லாம் முன்பெங்கோ நான் குறிப்பிட்டுவிட்டதாக ஞாபகம். எனவே அவையெல்லாம் இங்கே வேண்டாம். அறுபதுகளில், ஆலுவாயில் வைத்து நடந்த அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டின் போது நகுலன் கூட போயிருந்தபோது, அங்கே சந்தித்த மெளனி, சி.சு.செல்லப்பா இவர்களுடன் க.நா.சு.வையும் கண்டேன். க.நா.சு.வின் கூட வந்திருந்த அவர் ஒரே மகள் ஜமுனாவையும் பார்க்கவும் பழகவும் முடிந்தது. அப்போது அவளுக்கு திருமணமாகவில்லை. பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு, Authors’ Guild of India கூட்டத்திற்காக நான் தில்லிக்கு தொடர்ந்து போக நேர்ந்தது. ஜனவரி-பெப்ருவரியிலும் குளிரின் ஆதிக்கம் விலகாத தில்லியில் நடக்கும் இந்தக்கூட்டத்தை விட க.நா.சு. அங்கே இருக்கிறார் என்பது தான் தமிழ் எழுத்தாளர்கள் எங்கள் பலரை கவர்ந்த அம்சம்.

அப்படி, இந்தக்கூட்டத்தில் பங்கெடுக்க தில்லி போயிருந்தபோது, Gandhi Peace Foundation-ல் வந்து என்னைச் சந்தித்தார் மணி. என் பள்ளித்தோழன் தான் க.நா.சு.வின் மாப்பிள்ளை மகள் ஜமுனாவின் கணவன் --என்பதை அறிந்ததும் என் மகிழ்ச்சி பல மடங்கானது. அவர் காரிலேயே வீட்டுக்கு கூட்டிச்சென்றார். மணியின் திருமணத்திற்குப்பிறகு, க.நா.சு. தம்பதியர் இவர் வீட்டிலேயே இருந்தார்கள். க.நா.சு.வுடன் இலக்கிய விவாதம் செய்வதோடு, மணிக்கும் எனக்கும் நாங்கள் படித்த சாலை அரசாங்க உயர்நிலைப்பள்ளி, அது அமைந்திருந்த பசுமையான கிள்ளியாற்றங்கரை, அந்த ஆற்றங்கரையிலேயே இருக்கும் தற்போது வலிய சாலை என அறியப்படும் பழம்பெருமை வாய்ந்த காந்தளூர் சாலை, அன்றைய எங்கள் சக மாணவர்கள் நீலகண்டன், பாபு, மீனாட்சிசுந்தரம், ராம்ராஜ், வீணை வெங்கட்ராமன் இப்படி எத்தனை பேசினாலும் தீராத பல விஷயங்கள் இருந்தன. பிறகு நான் தில்லி போகும்போதெல்லாம் இந்த முடியாத பேச்சு தொடர்ந்தது. பலதடவை அவர் மனைவி மகளுடன் திருவனந்தபுரத்தில் என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

தில்லியில் தமிழ் நாடகங்களில் அவர் பங்களிப்பு முக்கியம் வாய்ந்ததாக பலர் சொல்லி அறிந்திருக்கிறேனே தவிர பார்த்து மகிழும் வாய்ப்பு கிட்டவில்லை. ஆனால் பாரதியின் அப்பாவாக அவர் தத்ரூபமாக நடித்த பாரதி படத்தையும், வேறு சில படங்களையும் பார்த்து அவர் திறமையை தெரிந்துகொண்டேன்.

பள்ளிப்பருவத்தில் அரும்பிய எங்கள் களங்கமற்ற சிநேகம் எழுபதைத்தாண்டிவிட்ட இன்றும் அப்படியே நீடிக்கிறது என்பது தான் விசேஷம். தமிழ்நாட்டின் தலைநகருக்கு அடிக்கடி வருபவனல்ல நான். அப்படியும் நான் வந்து பங்கெடுக்கும் கூட்டங்களுக்கு தவறாது வந்து, சந்தித்துப்பேசியும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டும் எங்கள் அறுபது வருட நட்பை அணையாமல் காத்து வருகிறார் என் இனிய நண்பர் பாரதி மணி...............

--எழுத்தாளர் நீல. பத்மநாபன்.

                       ****                            *****                           **** 
எந்த எதிர்பார்ப்பையும் உத்தேசிக்காமலேயே சிலரின் பேச்சு, பழக்க வழக்கங்கள் நமக்குப் பிடித்துப்போய்விடுகின்றன. அப்படி பிடித்துப்போனவர்களில் ஒருவர் பாரதி மணி என்பதை என்னால் எந்த இடத்தில் நின்றும் உரத்துக்கூறமுடியும். எண்பதுகளில் நான் டெல்லி சென்றிருந்த ஒரு தருணத்தில், அங்கு நடைபெற்ற கணையாழி வாசகர் வட்டக் கூட்டத்தில், இந்தப் பெரியவரையும் நான் பார்த்திருந்தது நினைவில் வந்துபோகிறது. அவ்வளவே! ஆயின், 1992 முற்பகுதியில், நிஜ நாடக இயக்கத்தின் 14-ம் ஆண்டு நாடகவிழாவின்போது, சி.சு. செல்லப்பாவின் முறைப்பெண் நாடகம் நிகழ்த்த டெல்லியிலிருந்து மதுரை வந்திருந்த ‘யதார்த்தா’ நாடகக்குழுவின் இளைஞர்களில் ஒருவராகத்தான் நாடகக்கலைஞராகத்தான் க.நா.சு. மருமகனான இந்த முதியவரை முதலில் சந்தித்துப் பேசியது நினைவில் தங்கிப்போயிருக்கிறது.

சி.சு. செல்லப்பா முரண்டு பிடித்தவர்; அவர் நாடகமாயிருந்தால் கூட, நாடகத்திற்கு அழைத்தாலும் நிச்சயம் வரமாட்டார் என்கிற பிரும்ம சொப்பனத்தை உடைத்தெறிந்துவிட்டு, அவரை முறைப்பெண்  நாடகம் பார்க்க நான் அழைத்துவந்தது கண்டு அதிசயப்பட்டவர்களில் இவரும் ஒருவர்! சி.சு. செல்லப்பா என்கிற இலக்கிய ஆளுமை நாடகத்தைப்பார்த்துவிட்டு நாடகத்தில் நடித்த மூவரையும் இவரையும், இவர் மனைவி மகளையும் மனந்திறந்து பாராட்டினார்.

இவரிடம் எனக்கென்ன பிடித்திருக்கிறது? உயிர்மை பத்திரிகையில் இவரெழுதிய சில கட்டுரைகளைப்படித்திருக்கிறேன். இவர் முகங்காட்டிய சில படங்களைப்பார்த்திருக்கிறேன். அதையும் தாண்டி, இவரை ‘பழகுவதற்கு இனியவர்’ பட்டியலில் என் மனதுக்குள் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இளைஞர்களுடன் இடைவெளியில்லாது தன் வயதொத்தவர்களாய்க் கலந்து பழகும் இவரின் அதீதம், நாஞ்சில் குசும்பாய் வந்து விழும் வார்த்தைகள் பவனிவரும் அழகு, விகற்பம் பாராட்டாத அன்பு, மனதில் பட்டதை மனம் நோகாமல் பட்டென்று கொட்டிவிடுகிற ஆற்றல் இவையெல்லாம் இவர் பற்றிய சித்திரங்களாய் என்னிடம் பதிந்து போயிருப்பவை! வாழ்க்கையில் நம்மையறியாமலேயே வாரிச்சுருட்டிக் கொள்ளத்துடிக்கும் எளிமைக்கும், எள்ளல் சுவைக்கும், மனம் புண்படாத நகைச்சுவைக்கும் தளகர்த்தர் இவர் என்பதை இவரிடம் பேசிப்பழகும் சில வினாடிகள் இலகுவில் காட்டிக்கொடுத்துவிடும். பாரதி மணி நல்லவர் பழகுவதற்கு இனியவர். இதை விடவும் இவரை உண்மையாகப்பாராட்ட எளிய பதங்கள் இல்லை!..............

--மதுரை நிஜ நாடக இயக்கம் மு. இராமசுவாமி.


                          ****                               *****                       ****

My friend,  SKS Mani  – A legend , icon and lode star – in the firmament of Indian Arts especially Tamil theatre in Delhi and its ramifications !

It is rather difficult for me to write about him in a few lines. I have known him since the 1960s. First time I met Mani in Delhi when I performed with my Guruji  Padmabhushan  Late Chembai Vaidyanatha Bhagavathar at the  Delhi Karnataka Sangeetha Sabha. At that time I was overwhelmed  by the aura and positive energy which surrounded him wherever he was.  Whenever we met time stood still. He was always there for all help and assistance at Delhi. He was friendly and cordial with all Musicians of Chennai. Sri Mani is a bundle of pleasant contradictions. – very  chaste in his tastes and perceptions , he could dress in a totally flamboyant outfits and look naturally too ! The all encompassing smile of his is infectious! He is always there on the dot as a friend in need – as I have known first hand. I do not have to say much about his acting prowess and other creative abilities as the entire  pinnacle of our culture extole his virtues wherever I turn !

He literally lives and breathes whatever role he is assigned – created many plays, players and concepts in the realm of modern Indian cultural scene. Whenever I read about  any internationally  well known cultural icon, I think  of  S.K.S.Mani. I am ecstatic that I know somebody who is all that and some more. Mani’s rasanai – is quite unique -- he could rave about the best in classical arts and extend that rave to the most avant-garde and unconventional artistic freak provided he or she had something to say or do! Now, he has ventured into a new arena as Bharati Mani and I am really happy to know that his first Book Pala Nerangalil Pala Manidhargal  is being published by the Uyirmmai Padhippagam.

In my early days in Chennai in the 1950s , I had the opportunity to  interact with the literary luminaries and artists like Jayakanthan ,  Na. Muthuswamy of Koothupatrai and other greats like Ka.Naa.  Subramanyam, Indira Parthsarathy  and later the present-day super stars like   ,Sri.M.S.Viswanathan , Sri. M.B.Sreenivos,  my disciple Sri Ilaiyaraja, Sri. Panju  Arunacahalam , Sri.Vaali,  Sri. Kamal Hassan, Sri. Rajnikanth, Sri.B.Lenin  and many others who have influenced the world of Fine Arts especially  the audio visual media through their writings, speeches and creative contributions – Sri.S.K.S Mani is one of those  super  person  but too modest to admit!

My best  wishes are always there !

Musicologist Guruji.Dr.T.V.Gopalakrishnan.




மணி அவர்களை நான் இரண்டு வகையில் அறிவேன். ஒன்று நடிகராகவும் இன்னொன்று க.நா.சு.வின் மாப்பிள்ளையாகவும். முதலில் அவரை நடிகராகத்தான் அறிந்தேன். டில்லியின் நாடகக்காரர்களில் ஒருவராகவும் நாடகக்காரரான பென்னேஸ்வரரோடு சம்பந்தப்பட்டவராகவும் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களில் பெரும்பங்கு கொண்டவராகவும் அதில் நடித்தவராகவும் அறிவேன்.

அதற்கு முன்னதாகவே க.நா.சு.வின் மகளை சென்னையிலேயே அறிவேன். நான் மட்டுமல்ல, கவிஞர் சி.மணியும் நானும் அவர் சிறு பெண்ணாக நல்லதம்பி தெருவின் இரண்டாம் இலக்கமிட்ட வீட்டில் பாவாடை சட்டை அணிந்து சித்திரப்பாவையாக வாயில் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்பதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். அப்போது க.நா.சு எனக்கு பெரிய பழக்கமில்லை. அவ்வளவு சிறிய வயதில் அடையாளம் தெரிந்துகொண்ட 'பாப்பா' என்ற  செல்லப் பெயரைக் கொண்ட தன் மகளோடு க.நா.சு டில்லி போய்விட்டார். அதற்கு முன்பு அவர்கள் 30 வாலாஜா சாலைக்கு குடி வந்திருந்தார்கள். அங்கிருந்துதான் க.நா.சு டில்லிக்கு குடி பெயர்ந்துவிட்டார். அந்த காலகட்டத்தில் அவர் மகளை நான் கண்டதில்லை. பிறகு நாங்கள் க.நா.சுவின் 30, வாலாஜா சாலை வீட்டுக்கு குடிவந்தபோது க.நா.சுவின் குடும்பத்தோடு எங்களுக்கு மிக நன்றாக உறவுண்டாகிவிட்டது. அந்த உறவில் எனக்கு நன்கு அறிமுகமான க.நா.சுவின் பெண்ணும் டில்லி மணியும் நாடகத்தில் நடிப்பதால் உண்டான உறவில் காதலில் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. கட்டிடங்களில் உட்புறங்களை (Interior Designer) வடிவமைப்பில் வல்லவராக இருந்த க.நா.சுவின் மகள் நாடகங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் என்பது எனக்கும் என் மனைவிக்கும் என் மனைவியின் பாட்டிக்கும் தெரியும். எங்கள் மகன்களும் அறிவார்கள். எனவே, எஸ்.கே.எஸ் மணியோடு உண்டான உறவில் ஓர் அன்னியத்தன்மை இல்லாமல் போய்விட்டது.

அவரை நடிகராக அறிந்ததின் தன்மை ஒரு தகவல் அளவிலேயே இருந்தது. டில்லியில் அவர் நடித்துக்கொண்டிருந்ததை நான் கண்டதில்லை. 1973-ல் முதல் முறையாக அவருடைய நாடகம் சென்னைக்கு வந்தபோது அதைப்போய்க் காணும் நலத்தில் நான் இல்லை. நான் வேலை செய்து கொண்டிருந்த டாஃபேயில் என்னைப் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடகத்துக்கு அழைத்தார்கள். இந்திரா பார்த்தசாரதியும் அழைத்தார். நான் வரமுடியாத நிலையில் இருப்பதாகச் சொன்னேன். அப்படி என்னய்யா அது வரமுடியாத நிலை என்றுகூட கிண்டல் செய்தார்கள். அப்போது நான் அவர் நடித்ததைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவரை முதல் முறையாக நடிகராக மேடையில் கண்டது அவர் சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண் நாடகத்தை சிற்றரங்கத்தில் மேடையேற்றியபோதுதான். அது அப்போது மிகவும் பிரபலமான நாடகமாக விமர்சனத்தைப் பெற்றிருந்தது. அவர் சிற்றரங்கத்தின் மேடையில் தோன்றியது இன்னமும் நினைவில் இருக்கிறது.

நான் டில்லிக்குப் போயிருந்தபோதெல்லாம் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில். அவருடைய காரில் அவர் நாங்கள் கூடும் இடத்துக்கு வருவார். எப்போதும் அவருடைய காரில் 'சோடா மேக்கர்' இருக்கும். கையில் பாட்டிலுடன் வருவார். நாங்கள் நல்ல போதையில் இருப்போம். அவருடைய அளவு காரை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பும் நிதானமுள்ள அளவு.  அப்படிப்பட்டவர் இன்று மதுவின் வாசனை கூட அருகில் போகாதவராக மாறிவிட்டார்.

டில்லியில் நல்ல உத்யோகத்தில் இருந்தவர். நன்றாகச் சம்பாதித்தவர். டில்லியில் இரண்டு மூன்று வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர். அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இன்று சென்னைக்குத் திரும்பிவிட்டார். அவருடைய இரண்டு பெண்களும் மிகவும் உயரிய நிலையில் இருக்கிறார்கள். அவரோ நடிப்பின்மேல் அபரிமிதமான காதல் கொண்டவராக சென்னையில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தோன்றும் சினிமாக்களை நான் எப்படியாவது பார்த்துவிடுகிறேன். ஒழுங்காக தியேட்டருக்குப்போய் சினிமா பார்க்கும் பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே விட்டுவிட்ட நான் அவருடைய காட்சிகளை எப்படியாவது பார்த்துவிடுகிறேன். மிகவும் அற்புதமான குணசித்திர நடிகரான அவரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த என் மருமகள் கேட்டாள் எஸ்.கே.எஸ் மணியுடன் தொடர்பு இருக்கிறதா என்று. அப்போது அவர் நடித்த ஒரு விளம்பரக் காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அவருடைய தோற்றம் அந்த காட்சியில் எவ்வளவு அழுத்தமாகப் பதிந்துள்ளது. நான் என் மருமகளுக்குச் சொன்னேன். இப்போதுகூட அவர் தொலைபேசியில் பேசினார் என்று. என்னுடைய ஆளுமையில் உள்ள பலவீனம் என் நினைவில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் ஒருவரிடம் அதை அப்படிப் புலப்படுத்தாததுதான். நட்போடு கூடிய அற்புதமான இயல்புகள் கொண்ட மணி அவர்கள் பெரிய குணச்சித்திரப் பாத்திரங்களில் பெரிய அளவில் வெளியில் தெரிய வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.


அவர் நிறைவோடு பூரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வலுவான மனிதர் என்பது என் மனதில் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது............

--கூத்துப்பட்டறை ந. முத்துசாமி.