Sunday, February 14, 2016


நாடகமே உலகம் 
நாடி, நரம்பு, நடிப்பு 
மனிதனை மகிழ்வித்த, ஆசுவாசப்படுத்திய, சிந்திக்கத் தூண்டிய தாய்க்கலையான நாடகக்கலையின் ஆளுமைகளைச் சந்திக்கும் மேடைதான் இந்த நாடகமே உலகம் !

‘உங்களுக்கு, ஜெயகாந்தன் மாதிரி இன்டலெக்ச்சுவல் அரொகன்ஸ் கொஞ்சம் இருக்கு’ என்று நண்பர் ஒருமுறை சொல்ல, ‘கொஞ்சம் இல்லீங்க, நிறையவே இருக்கு. அப்புறம் இன்டலெக்ச்சுவல் எல்லாம் இல்லை, வெறும் அரொகன்ஸ் மட்டும்தான் இருக்கு!’ என்றவர் ஷி.ரி.ஷி. மணி. தற்போது ‘பாரதி’ மணி. நாடக உலகத்தாரும், சினிமா உலகத்தாரும் கலைத் தந்தையாகப் பார்க்கும் இவரை, இன்றைய தலைமுறையினருக்கு, ‘பாரதி’ திரைப்படத்தில் பாரதியாருக்குத் தந்தையாக நடித்தவர் என்று சொன்னால் தெரியும். ஏழு வயதில் நாடக நடிகராக அரிதாரம் பூசியவருக்கு, இப்போது 78 வயது. 

71 வருட நடிப்பு அனுபவம். தமிழகத்தின் மூத்த நாடக எழுத்தாளர்கள் அனைவரின் கதைகளையும் நாடகமாக அரங்கேற்றியவர். நவீன நாடகத்தை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவர். ஆயிரக்கணக்கான மேடைகளில் மைக் தவிர்த்து நடித்தவர். ‘ஐயா உங்களுக்குக் குரல் நல்லா இருக்கு, நீங்க மைக் இல்லாம நடிச்சுருவீங்க. மத்தவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க?’ எனக்கேட்டபோது, ‘மைக் இல்லாமப் பேசுறதுக்குக் குரல் எழும்பாதவனை வீட்டுக்குப் போகச் சொல்லு!’ என்று கர்ஜித்தவர். 

‘நாடகமே உலகம்’ தொடரை இந்த ஆதிப்புள்ளியில் இருந்து துவங்குவதுதான் ஆகச்சரி என்று, ‘பாரதி’ மணியைச் சந்திக்கச் சென்றோம். "வாங்க, வாங்க!" - 80 வயதை எட்டயிருப்பவரின் குரலில் இருந்த திடம், அன்று இவர் மைக் வேண்டாமென்று சொன்னது ஆச்சர்யமில்லை என நினைக்கவைத்தது. தன் புகை ஊதுகுழலை எடுத்து, "புகைபிடிக்கும்போது பக்கத்துல இருக்குறது உங்களுக்கு ஒண்ணும் சங்கடமா இருக்காதே?" என்றார். "இல்லை" என்றோம். "ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன். நீங்க சங்கடமா இருக்கும்னு சொன்னாலும், மத்தாயிக்கு ம__ரா போச்சுன்னு, குடிக்க ஆரம்பிச்சுடுவேன்" என்றார். இதுதான் இன்டலக்ச்சுவல் அரொகன்ஸ்போல என்று நாம் யோசிக்க, "மத்தாயிக்கு ம__ரா போச்சுன்னா என்னன்னு தெரியுமா?" என்று கேட்டு, ஒரு மலையாள கிருத்தவ பக்தனின் கதையைச் சொல்லிச் சிரிக்கிறார். 

‘சுத்தமா நடிக்கத் தெரியாது, உங்ககிட்ட வந்தா கொஞ்சம் ஒழுக்கம் கத்துக்குவான்’னு எங்கப்பா ஏழு வயசில் என்னை நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையோட அனுப்பிவெச்சார். பள்ளிப்படிப்பு முடியும்வரை, எல்லா கோடை விடுமுறைகளிலும் அவரோட நாடகங்கள்ல நடிச்சுட்டு வந்தேன். எஸ்எஸ்எல்சி முடிச்சுட்டு நாகர்கோயில், இந்துக் கல்லூரியில அப்ளிக்கேஷன் போட்டுட்டு, ரெண்டு மாசம் சும்மா இருக்கணுமேனு டெல்லியில இருந்த எங்க அக்கா வீட்டுக்குப் போனேன். ஏற்கனவே கத்துக்கிட்ட டைப்ரைட்டிங் அங்க எனக்கு ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’-ல வேலை வாங்கிக்கொடுத்தது.

வேலை, மாலைநேரக் கல்லூரினு வாழ்க்கை போயிட்டிருந்தப்போ, உள்ளூர இருந்த நாடக ஆசையால 1956ல ‘தக்ஷிண பாரத நாடக சபா (DBNS)’  ஆரம்பிச்சேன். முதல் நாடகமா, பம்மல் சம்பந்தம் அவர்களோட ‘சபாபதி’ நாடகத்தை தயாரிச்சு இயக்குனேன். தொடர்ந்து நாடகம் போட்டுட்டு இருக்கும்போதே, 1962ல நேரு ஆரம்பிச்ச ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து ரெண்டு வருஷம் படிச்சேன். அங்கதான் நாடகங்களை அறிவியல்ரீதியா எப்படி அணுகணும்னு கத்துக்கிட்டேன். உலக நாடகங்கள், இந்திய நாடகங்கள் அங்கதான் அறிமுகமாச்சு. மேடையில பேசிட்டிருக்கும்போது கையை எப்படி வெச்சுக்கணும், எப்படி நிக்கணும்னு ஆரம்பிச்சு அங்க கத்துக்கிட்டதுதான், நவீன நாடகங்களை உருவாக்கக் காரணமா இருந்துச்சு. அந்த நேரத்துலதான் டெல்லி கணேஷ், பாலச்சந்தர், கோமதி சுவாமிநாதன் போன்றோரின் அறிமுகங்களும், அவங்களோட நாடகங்களை டெல்லியில போடுறதுக்கு வாய்ப்பும் கிடைச்சது. பரிதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பாம்பே, சென்னைனு இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான மேடைகளில் நாடகம்போட்டிருப்போம்" என்ற தன் நெடிய வரலாறைச் சுருக்கமாகச் சொன்ன ‘பாரதி’ மணி, தனக்கும், நடிகர் நாகேஸுக்கும் உள்ள ஆழமான நட்பைச் சொல்லி கண் கலங்குகிறார். பின் தானே தொடர்கிறார்.

"நடிகர் நாசர், சத்யராஜ் ரெண்டு பேரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘மணி சார்... நாம ஒரு நாடகம் போடணும்’னு சொல்றது வழக்கம். ‘உங்களைவிட ரொம்ப பிஸியான நஸ்ருதின் ஷா, ஓம்பூரி மாதிரி நடிகர்கள் எல்லாம் சினிமாவுல நடிச்சிட்டு இருக்கும்போதே, கிடைக்குற கூலியைப்பத்திக் கவலைப்படாம நாடகங்கள்லயும் நடிக்குறாங்க. நாடகத்துல நடிக்குறதுக்குப் பெரிய மெனக்கெடல் வேணும், அர்ப்பணிப்பு வேணும். நீங்க என்னை ரெண்டு வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் இதேதான் சொல்லுவீங்க. அதனால வாயிலேயே பாயாசம் வைக்குறது வேண்டாம்’னு அவங்களுக்கு நேராவே சொல்லிடுவேன்!" - இந்த இடைவெளியில் நாடகத்தின் மீதான நஸ்ருதின் ஷாவின் அர்ப்பணிப்பைப் பற்றி வியந்து பேசுகிறார். 
 
இப்போது ஏன் நாடகங்களில் நடிப்பதில்லை?
"50 வருஷம் டெல்லியில இருந்தேன். அங்க நிறைய நண்பர்கள் இருந்தாங்க. அவங்ககிட்ட அதிகாரப்பிச்சை எடுக்குறது வழக்கம். காசு கொடுக்கலைன்னா, நீ உயிரோட இருக்க மாட்டேனு சொல்லி உரிமையோட மிரட்டி, 40 ஆயிரம் ரூபாய்வரைக்கும் கலெக்ட் பண்ணி, அந்தக் காசு தீர்றவரைக்கும் நாடகம் போடுவோம். இங்க யார்கிட்டயும்போயி யாசகம் கேட்க முடியாது. யாரையும் எனக்குத் தெரியாது. ஸ்பான்ஸர்ஷிப் கேட்டுப்போனா, ரெண்டு நாள் கழிச்சு வரச் சொல்லுவான். அவன் பின்னாடியேபோயி கைகட்டி நிக்க நம்மளால முடியாது. நாடகம் போடணும்னு எங்கிட்ட வந்து பேசுறவங்ககிட்ட நான் சொல்றது, ‘கைக்காசைப் போட்டு நாடகம் போடாத, அப்புறம் கஷ்டப்படுவ. நீ நாடகம் போடலைன்னா கலைத்தாய் தூக்குமாட்டிக்கப் போறதில்லை! " - அடுத்த கேள்விக்கு நாம் தயாரான நொடிகளில்,

"இப்படிக் கால்மேல கால்போட்டு நான் சொல்ல முடியும் (கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கிறார்)... நாடகத்துல இருந்து அஞ்சு பைசா நான் என் வீட்டுக்குக் கொண்டுபோனதில்லை!" ‘நவீன நாடகத்துக்கான விதை டெல்லியில் ஷி.ரி.ஷி. மணியால் போடப்பட்டது’ என்று ஒருமுறை கலை விமர்சகர் வெங்கட் சுவாமிநாதன் இவரைப்பற்றி எழுதியதை அவருக்கு நினைவுபடுத்திக் கேட்டோம். "எல்லாமே ‘நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா’ கொடுத்த உத்வேகம்தான். ‘மழை’, ‘மஹா நிர்வாணம்’, ‘போர்வை போர்த்திய உடல்கள்’ போன்ற மிக வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றியதுனால கிடைச்ச பெருமை அது. இந்திரா பார்த்தசாரதியை துரத்தித் துரத்தி எழுதவெச்சு அதை நாடகமா அரங்கேற்றியிருக்கோம். அதுமாதிரியான நாடகங்களை இன்றைய தலைமுறையினர் நிச்சயமாப் பார்க்கணும்."

நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சமூகம் சினிமாவை நோக்கித் திரும்பியது. அந்தச் சமூகம் மீண்டும் நாடகத்தை நோக்கித் திரும்ப வாய்ப்பிருக்கிறதா?
"நாகர்கோயில்ல நான் இருக்கும்போது, ரெண்டு அணாவுக்கு ஒரு மசால் தோசை, ஒரு ரசவடை, ஒரு டிகிரி காபி கிடைக்கும். அந்த நாட்கள் திரும்பிவருமான்னு இப்பவும் நான் கேட்டுட்டிருக்கேன். அது எப்படி வராதோ அதே மாதிரி, முன்பு நாடகத்துக்கும், நாடக நடிகர்களுக்கும் இருந்த மரியாதையும் திரும்ப வராது; இந்தச் சமூகமும் மீண்டும் நாடகத்தை நோக்கித் திரும்ப சாத்தியமே கிடையாது. இதுதான் யதார்த்தம்!"- புகை ஊதுகுழல் பணி முடித்திருந்தது.

- விஷன்.வி
--இன்று தொடங்கிய மனம் இணைய இதழில் வெளிவந்த நேர்காணல்

2 comments:

  1. You are right sir... Those days will never come again...

    ReplyDelete
  2. உண்மையிலேயே புகைப்படம்!

    ReplyDelete