Monday, February 1, 2016


என் முதல் புத்தகத்துக்கு என் நண்பர்களெல்லாம் என்னைப்பற்றி எழுதறா, நீங்களும் எழுதுங்கோ, அங்கங்கே தேவைப்படும்போது, கொஞ்சம் பொய்யும் எழுதலாம்’  என்று என் நண்பரும், என் படங்களில் நடிக்கும் என் ஆஸ்தான நடிகருமான திரு. பாரதி மணி சொன்னார். இதைக்கேட்டால், பக்கத்திலிருக்கும் எட்டயபுரத்து ஒரிஜினல் (சுப்பிரமணிய) பாரதி, தன்னிடமுள்ள கம்பால் இந்த டூப்ளிகேட் பாரதி மணியை அடித்தே விடுவார். அதனால் டெல்லி மணி சார் வேண்டாம், டெல்லி மணியென்று உரிமையுடன் அழைப்பதோடு உண்மையை மட்டுமே எழுதுகிறேன்.   

ஒருவகையில் இவர் எனக்கு ’பைய்யா’ (Bhaiyaa) . ஹிந்தியில் பைய்யா என்றால் சகோதரர் என்று பொருள். ஆனால் பையன்களைப்போல் தான் சிரிப்பார், அழுவார், சந்தோஷப்படுவார். அவர் கண்களில் எப்போதும் மகிழ்ச்சியிருக்கும். முறையாக சங்கீதம் பயிலாத இந்த மனிதருக்கு இத்தனை சங்கீத ஞானம் எங்கிருந்து வந்ததோ? தில்லியில் எவ்வளவு பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருந்தவர், இங்கே இந்த தமிழ் சினிமாவிலா வந்து மாட்டிக்கொள்வார்? யார் கூப்பிட்டாலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளைப்போல, ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம், ஷார்ட் பிலிம், டாகுமெண்டரி, டி.வி. சீரியல்கள், விளம்பரப்படம், F.M. ரேடியோ என்று தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்வார். கூப்பிடுபவர்களும், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல இவருக்கு கடுக்காய் கொடுத்து விடுவார்கள். கடுக்காயைச் சாப்பிட்டாலும், கசப்பு என்பது இவரது முகத்தில் தெரியாத அளவுக்கு குழந்தையைப்போல் ஒரு கள்ளம் கபடமற்ற சிரிப்பையே உதிர்ப்பார். வருடம் தோறும் வீட்டில் என் அம்மா போடும் ஊறுகாய்களில் ஒரு பங்கு இவருக்குப் போய் விடும். அது தீர்ந்து போனால், கேட்டு வாங்குவார்! சமையல் பிரியரான இவருக்கு நார்த்தங்காய் இல்லாமல் ஒரு கவளம் தயிர் சாதம் உள்ளே இறங்காது! இவர் வீட்டுக்குப்போனால், அப்போது காபிக்கொட்டை அரைத்துபோட்ட வாய் மணக்கும் டிகிரி பில்டர் காப்பி கிடைக்கும்!

என்னிடம் தனிமையில் பகிர்ந்துகொண்ட பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த பல நேரங்களில் பல மனிதர்கள்  புத்தகத்தில் இருக்கின்றன. சொல்லாத விஷயங்கள் இவரிடம் எவ்வளவோ இருக்கின்றன!

‘ரெளத்ரம் பழகு’ என்று சொன்ன பாரதியின் கோபத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் பாரதி மணி கோபத்திலும் ஒரு குழந்தையைப்போல் தான் இருப்பார்.

Bharati Mani is a Warrior, who will fight till the end  …. For me he is …..A Friend, Philosopher and Guide. Sir, I salute you!........

--இயக்குநர்/எடிட்டர் B. லெனின்.


                        ****                            *****                           ****

0 comments:

Post a Comment