பாருக்குள்ளே எனக்குக் கிடைத்த நல்ல நண்பர்களில்
பாரதி மணியும் ஒருவர். க.நா.சு.வின்
மாப்பிள்ளை என்று தொடங்கிய அவரது அறிமுகம் விரிந்து விரிந்து நின்றது. அவர் ஒரு நாடகக் கலைஞர், நடிகர், கர்நாடக இசை
மற்றும் இலக்கிய ரசிகர் என தனது தனித்துவம்
மிக்க தகுதிகளின் விரிவாக்கமாக அந்த அறிமுகம் நீடித்தது. ஆங்கிலத்தில் அவர் தமது பெயரைப் பாரதி மணி என்று எழுதும் போது Bharati Mani என்றுதான் எழுதுகிறார். அப்படித்தான் எழுத வேண்டும் என்கிறார். காரணம் பாரதி அப்படித்தான் எழுதினார் என்கிறார். சொல்லின் வன்மையை
நன்கு புரிந்தவன் பாரதி. அதன் தொனியை அறிந்தவன். ஆகவே அந்தத் தொனியோடுதான் தனது
கணினி அடையாளம் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது என்று கூறும் பாரதி மணியிடம் தொனி
பற்றிய பார்வையின் ஆழத்தைக் காண முடிகின்றது.
அவர் நடித்த
நாடகங்களில் அவரது சொல்லோசை கவனிக்கத் தக்கதாகும். பாரதி மணியிடம் மேடையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி ஒரு இயல்புத் தன்மை பிரதிபலித்து நிற்பதைக் காணலாம்.
பாரதி படத்தில் சின்னசாமி ஐயராக வந்த பாரதி மணியிடம், பாரதி பேரில் அவருக்குள்ள தனிப்பட்ட உன்னத மரியாதையை, தந்தை மகன் பாசத்திற்குள் கரைத்துக் கொண்டு நின்றதைக்
காணலாம். பாரதியின் எதிர்காலத்தை உள்ளுணர்வால் உணர்ந்த தந்தையின் அக்கறை கலந்த
பாசம் இயல்பாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதி மணியின் தனித்தன்மை இந்த இயல்பு
நிலையின் சரளமான புலப்பாடுகள் தான். குறையைச் சுட்டிக்காட்டினாலும் சுட்டித்தனமாக
சிரிப்பில் சமாளித்துக் கொள்ளும் குழந்தையின் மனநிலைப் பிரதிபலிப்பை அவரிடம்
காணலாம். உள்ளத்திற்கும், முகத்திற்கும், உதட்டிற்கும் இடையே இடைவெளி இல்லாத ஒரு ஒட்டுறவைக்
கொண்டவர். சரளமான உயிர்த்துடிப்புள்ள
உரையாடல்களில் சில சமயம் குமறல்களைப் பொரிந்து தள்ளும் போதும் அந்த ஒட்டுறவைக்
காணலாம். வலிந்து கட்டுதல், போலித்தனம் போன்ற
செயற்கை இயல்புகள் அவரது வாழ்க்கையிலும், கலைவெளியீட்டிலும்
இல்லை. இத்தகைய இயல்பு நிலை, நடிகனைப்
பொருத்தவரை ஒரு பேறு ஆகும். அந்த இயல்பு நிலையின் புலப்பாடுகள் வாழ்க்கையின்
உண்மையான சந்த லயங்களைக் காட்டி நிற்பதாகும். உதட்டிற்கும், உள்ளத்திற்கும் உள்ள ஒட்டுறவை அதே இயல்போடு எழுத்தில்
கொண்டு வருவது எளிதல்ல. ஏனெனில் எழுத்து என்பது பிரகஞையின் கூர்மையான செயல்.
உயிர்மை, காலச்சுவடு, தீராநதி போன்ற அக்கறை கொண்ட சிற்றிதழ்களில் அவரது
எழுத்துகளைப் படித்தவன். உயிர்மையில் என்று நினைத்து உறுதி செய்து கொண்டேன்.
ராஜீவ்காந்தி சர்வதேச விமானப் பயணமொன்றில் மணி என்ற இந்தியனைப் பார்த்து, குசலம் விசாரித்ததும், மணிக்கணக்கில் கஸ்டம் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, புன்னகையுடன் பொறுமை காத்ததுவும், இரண்டுவரிச் செய்திகளை ஒடுக்கியிருக்கலாம். இதை
அரசியல்வாதிகள் அடைமொழிகளின் பேரிகை முழக்கிப் பலம் தேடலாம்.
பாரதி மணியின் நினைவு அலைகளில் குமறும் உணர்வுகளில்
குத்தல்கள் தான் கஸ்டம் அதிகாரிகளிடத்தும், அரசிடத்தும்
பாயும் தொனியுடன் பாட்டி சொல்லும் பாணியில் அமைந்த ஒரு பயணச் சிறுகதைப் பாங்கை
காணமுடிகிறது.
பாரதி மணியிடம் பேசிப் பழகியவர்கள் அந்த
எழுத்துக்களைப் படிக்கும் போது அவரது குரலின் ஒசைகள் தொனி லயங்களோடு காதில்
விழுந்து கொண்டிருக்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். அரசியலுக்கப்பால் தனிமனிதரைப்
பற்றிய அந்த கணிப்பு வித்தியாசமான உண்மைக்காட்சிக்கு, தான் மட்டுமல்ல மற்றவரையும் சாட்சியாக்கும் ஒரு பகிர்தல்
அனுபவம். நடிப்பில் மட்டுமல்ல எழுத்திலும் தனது இயல்பு நிலை இழையோடும் என்பதற்கான
எடுத்துக்காட்டு!............
--நாடக ஆய்வாளர்
இயக்குநர் ப்ரொபஸர். எஸ். ராமானுஜம்
***** ****** *****
0 comments:
Post a Comment