Friday, January 22, 2016


நேற்றுக்காலை தில்லி தூர்தர்ஷனில், இந்திரா காந்தி கொலையுண்ட பிறகு 1984 அக்டோபர் -நவம்பர் மாதம் தில்லியில் சீக்கியர்களுக்கெதிராகக்  கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கொடுமைகளைப் பற்றியும், அதில் பாதிக்கப்பட்ட சில சீக்கியக் குடும்பங்களைப் பற்றியும் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். குடும்பத்தலைவர்களையும் குழந்தைகளையும் பறிகொடுத்த பெண்கள்,இருபத்திநான்கு வருடங்களுக்குப்பிறகும், அந்தக் காயம் ஆறாமல் அரற்றியது மனதை என்னவோ செய்தது.
உயிர்மையில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘எங்க சர்தார்ஜிகளுக்கு ஒரே ஒரு கல்ச்சர்தான் உண்டு. அதுதான் அக்ரிகல்ச்சர்’ என்று என் சர்தார் நண்பன் சொன்னதாக எழுதியிருந்தேன். அந்த நகைச்சுவையைப் பாராட்டி, பல வாசகர்கள் என்னிடம் சொன்னார்கள். ஒவ்வொரு சர்தார்ஜியும் அந்த நகைச்சுவைக்குப் பின்னால் குறைந்தபட்சம் ஒரு சோகத்தைச் சுமந்துகொண்டு வாழ்நாளைக் கழிக்கிறார்கள். என் வயதையொத்த சீக்கியர்கள் பலர், 1947-ல் நடந்த நம் நாட்டின் பிரிவினைக்குப்பிறகு, லாகூரிலிருந்தும் ராவல்பிண்டியிலிருந்தும் அங்கிருந்த தன் சொத்து சுகங்களை விட்டுவிட்டு, தன் பத்து வயதிலேயே வரும்வழியில் தன் கண்ணெதிரே தாயும் சகோதரிகளும் கற்பழிக்கப்படுவதைப் பார்க்கும் கொடுமைக்காளாகி, மிருதுளா சாரா பாய் தலைமையில் தில்லியில் இயங்கிவந்த அகதிகள் முகாமில் சரணடைந்தார்கள். லாகூரில் அரண்மனை போன்ற பங்களாவில் பத்து வேலைக்காரர்களுடன் வாழ்ந்தவர், இங்கு ஒரு வாளித் தண்ணீருக்காக அரைமணி நேரம் வரிசையில் காத்திருந்தார். சூன்யத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கிய பஞ்சாபிகள், சில வருடங்களில் தங்கள் கடின உழைப்பால் முன்னேறி, தில்லியையே ஒரு பஞ்சாபி சுபாவாக மாற்றிவிட்டார்கள். அவர்கள் வாழ்வில்      நிகழ்ந்த மற்றொரு பேரிடி 1984-ல்கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை. இதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படாத சீக்கியக் குடும்பங்களே இல்லையெனலாம். இன்று நினைத்துப் பார்க்கும்போது, இதற்கெல்லாம் காரணம்  இந்திரா காந்தியே  என்று தோன்றுகிறது.1984-ம் வருட ஆரம்பத்திலேயே அவரது சீக்கியப் பாதுகாப்புப்படையினரால் அவர் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று உளவுத்துறை அவரை எச்சரித்தது. அவர் மட்டும் இதற்குச் செவிசாய்த்திருந்தால், அவரும் இறந்திருக்கமாட்டார்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்களும் பலியாகியிருக்கமாட்டார்கள். அதன்பிறகு என் கண் முன்னால் நிகழ்ந்த திட்டமிட்ட கொடுமை. அதைப்பற்றி இன்னொரு கட்டுரையில்.
சென்ற நூற்றாண்டுகளில் சீக்கியம் இந்து மதத்தின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. குடும்பத்தின் தலைமகனை வீரமகனாக நாட்டுக்குத் தந்தார்கள். ஒரே குடும்பத்தில் சீக்கியர்களும் இந்துக்களும் பேதமின்றி வாழ்ந்தார்கள். அவர்களுக்குள் திருமணம் நடந்தது. அவர்களது குரு கிரந்த் ஸாஹிப் கீதையையும், ராமனையும், கிருஷ்ணனையுமே முன்வைக்கிறது. பின்னால் இந்து மதத்தலைவர்களும், மைனாரிட்டி அரசியலும், மாஸ்டர் தாரா சிங் போன்றவர்களுமே அவர்களை இந்து மதத்திலிருந்து வேறுபடுத்தினார்கள். இப்போது  சீக்கியர்களும் இந்துக்கள்தான் என்று சொன்னால் அடிக்க வருவார்கள்.
ஒரு அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் சினிமாக்களில் வரும் பன்ச்டயலாக் போல, ‘எல்லா சர்தார்ஜிகளும் பஞ்சாபிகள். ஆனால் எல்லா பஞ்சாபிகளும் சர்தார்ஜிகள் அல்லர்’ என்பதுதான் நிஜம். இன்னொரு உண்மை: எல்லா சர்தார்ஜிகளும் சிங்தான். ஆனால் எல்லா சிங்குகளும் சர்தார்ஜிகள் அல்லர். உதாரணத்துக்கு அமர் சிங், வி.பி.சிங், கரண் சிங் போன்றோர். தாடி மீசை  இல்லாத பஞ்சாபிகளை ‘மோனா’ என்பார்கள். நமது  தமிழ்ப்படங்களில் சர்தார்ஜி ஒரு கேலிச்சித்திரமாகவே வந்துபோவார்,மணி ரத்னத்தின் படங்கள் உட்பட. பத்துமுழ பக்டிக்குப்பதில் ஒரு தொப்பியும் ஒட்டுதாடியுமிருந்தால், சினிமா சர்தார் தயார். தப்பு தப்பாக ஹிந்தியோ பஞ்சாபியோ பேசுவது கூடுதல் தகுதி. தமிழ் நாட்டிலிருக்கும் சர்தார்ஜிகளுக்கு உண்மையிலேயே சகிப்புத்தன்மை அதிகம்தான். இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்கிறார்களே. தில்லியில் ஒருதடவை மறைந்த ஹிந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத்தைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர் ‘மதராஸி’யாக நடிக்கும் படங்களில் ஏன் அளவுக்கதிகமான ‘ஐயோ  ஐய்யய்யோ’ இடம் பெறுகிறது. நான் உங்களிடம் பேசும்போது எத்தனை தடவை  ஐய்யய்யோ சொன்னேன் என்று சண்டை போட்டிருக்கிறேன்.(பேச்சோடு பேச்சாக, தமிழில் நாகேஷ் நடித்து ஹிந்தியில் அதே பாத்திரத்தில் அவர் நடித்த சர்வர் சுந்தரம் (மைன் ஸுந்தர் ஹூன்),தில் ஏக் மந்திர் போன்ற படங்களில், நடிப்பில் நாகேஷ் பக்கத்திலேயே அவர் வரமுடியாது என்பதையும் சொல்லிவிட்டேன். அவரது பெரிய மனது என்னை அடிக்கவராமல், பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அப்போது அவர் என் வீட்டிலிருந்தார் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்). தசாவதாரத்தில் வரும் அவ்தார் சிங் வலதுகையில் கடா இல்லையென்று நெட்டில் ஒருவர் எழுதியிருந்தார். அது தவறு, கையில் வளையம் இருந்தது. உங்களில் பலருக்கும் தெரிந்த உண்மை சர்தார்ஜிகளுக்கு ஐந்து Ks மிகமுக்கியம் என்பது. Kesh (தலைமுடி),Kanga (சீப்பு), Kada (கையில் வளையம்), Kachcha (உள்ளாடை) மற்றும்Kirpan (சிறுகத்தி அல்லது வாள்). இவ்வைந்தும் இல்லாதவன் சீக்கியனாகக் கருதப்படமாட்டான். தலைமுடியை மறைக்க Turban(பக்டி). இந்த நாகரிக உலகத்தில் கத்தியையும் சீப்பையும் மிகச்சிறியதாக மாற்றி தங்கள் பக்டிக்குள் மறைத்துவிடுவார்கள். மதச்சின்னமான ஒரு பெரிய வாளை நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்ல முயன்ற சிம்ரஞ்சித் சிங்மான், எம்.பி.  தடுக்கப்பட்டு, அவர் தன் பதவியையே ராஜிநாமா செய்தது தெரிந்திருக்கும். நிஹாங் சீக்கியர்கள் உடல் வலிமையில் வல்லவர்கள். தனது தாடியில் ஒரு பாறாங்கல்லைக்கட்டி தூக்கும் வலுவுள்ளவர்கள். சேணம் கட்டாத இருகுதிரைகளின் மேல் இருகால்களை வைத்து நின்றுகொண்டே சவாரி செய்வார்கள். தனது நீண்டகூந்தலில் ஒரு டிராக்டரைக் கட்டி இழுக்கத் துணிவார்கள். ஆனால் அதிகம் சிந்திக்கத் தெரியாதவர்கள். இதையொட்டித்தான் சர்தாரை  ‘பன்னிரண்டு மணி – Baarah Baje‘யென்றும் புத்தி மழுங்கியவர்களென்றும்  வழங்கலாயிற்று. ஆயிரக்கணக்கில்  சர்தார்ஜி ஜோக்ஸ் புழக்கத்துக்கு வந்தன. க.நா.சு.வைப் பார்க்க வரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எனக்கு ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு நிறைய ‘புத்திசாலித்தனமான’ சர்தார்ஜி ஜோக்குகள் சொல்லியிருக்கிறார். சிறுவயதில் நான் கேட்டிருந்த நம்ம ஊர் ‘நம்பூதிரி ஜோக்கு’களை தாடி – தலைப்பாகை வைத்து சர்தார்ஜி ஜோக்குகளாக மாற்றி நான் சொல்லுவேன். நாம்தாரி சீக்கியர்கள் வெள்ளையுடையும் வெள்ளை பக்டியுமே அணிவார்கள். அக்ரிகல்ச்சர் மட்டுமே தெரியும் என்று சொல்லும் சர்தார்களுக்கிடையே இவர்கள்தான் கலாச்சாரக் காவலர்கள். ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் குரு வாணி பாடுவதிலும் வல்லவர்கள்.
தில்லியில் பஞ்சாபிகளின் ஆதிக்கம் சுதந்திரத்துக்குப் பிறகுதான் வந்தது என்று பூர்வகுடிகளான மாத்தூர்களும் குப்தாக்களும் பராதி சொல்வார்கள். தில்லிக்கான தனி அடையாளத்தையும் நற்பண்புகளையும், பஞ்சாபிகள் வந்தபிறகு இழந்துவிட்டோம் என்பது அவர்கள் வாதம். பிரிவினைக்குப்பிறகு அகதிகளாக ஓடிவந்து அரசு வழங்கியரூ. 5,000 கொண்டு, லாஜ்பத் நகர், மாளவியா நகர், படேல் நகர், ஷாதரா போன்ற இடங்களில் கிடைத்த கையகல நிலத்தில் இரு அறைகள் கொண்ட வீட்டைக் கட்டிக்கொண்டு – பழம்பெருமை பேசி முடங்கி உட்காராமல் – பாகிஸ்தானில் செய்து வந்த தொழிலையே உற்சாகத்துடன் தொடர்ந்தார்கள். They started from the scratch. பிச்சையெடுக்கும் சர்தார்ஜியை நான் இதுவரை பார்த்ததில்லை. கை கால் இல்லாதவர்கூட தில்லிக்கோடையின்போது, ஒரு மரத்தடியில் பெரிய மண்பானையில் குளிர்ந்த தண்ணீரும், குடிக்க பெரிய குவளையும் வைத்திருப்பார். முன்னால் விரித்த கைக்குட்டையில் சில அரையணா, ஓரணா நாணயங்கள். வேண்டிய மட்டும் தண்ணீர் குடித்துவிட்டு, பிரியமிருந்தால் உங்களால் முடிந்ததைக் கைக்குட்டையில் போடலாம். ஆனால் கை நீட்டிப் பிச்சையெடுக்க மாட்டார்கள். பார்ஸிகளுக்கு அடுத்தபடியாக சீக்கியர்களுக்குத்தான்    அவர்களது சமூகம் பாதுகாப்பளிக்கிறது. தில்லியில் இருந்த ரான்பாக்ஸி, அப்போல்லோ போன்ற கம்பெனிகளில் சர்தார்ஜிகளுக்கு முன்னுரிமை அளித்தார்கள். பாகுபாடின்றி எவருக்கும் குருத்வாராவில் தினமும் லங்கர் இலவசம். படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்தவர்களுக்கு உதவியாக, திருமதி மிருதுளா சாராபாய் வேலைசெய்துகொண்டே படிக்கத்தோதாக, Camp College எனும் மாலைநேரக் கல்லூரிகளைத் திறந்தார். (நேருவின் உதவியாளர் எம்.ஓ. மத்தாய், மிருதுளாவுக்கு நேருஜி மேல் crush இருந்ததாக நேரு இறந்த பிறகு பல கிசுகிசுக்கள் எழுதி புத்தகமாகப்போட்டு நிறைய பணம் பார்த்தார். இவர் நாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாயின் சகோதரி. She was an arrogant and no-non-sense woman. அதனாலேயே நேருவுக்கு இவரிடம் ஈர்ப்பு இருந்திருக்கலாம். அகதிகள் முகாமிலேயே தங்கி அவர்கள் நலன்களை நன்கு கவனித்துக்கொண்ட மிருதுளாவின் வாய்மொழி உத்தரவுகளை தில்லி போலீசும் அரசு அதிகாரிகளும் பிரதமர் நேருவின் ஆணையாகவே நினைத்துச் செயல்பட்டனர்). இவரைப்பற்றி மிக உயர்வாக என் நண்பர்களின் வயதான பெற்றோர்கள்  சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பஞ்சாபிகளின் புத்திசாலித்தனத்துக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பலன்தான் இன்று பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்த வெற்றியின் ரகசியம்  பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சேலத்து மாம்பழம்  போல் பாஸ்மதி அரிசிக்கு  தேராதூன்தான் – நமக்கு டேராடூன் – பிரசித்தி பெற்றிருந்தது. ஆனால் நம் இந்திய அரிசிக்கு பாகிஸ்தானி பாஸ்மதியைப்போல நீளமும் வாசனையும் கிடையாது. அறுபது எழுபதுகளில் எண்ணெய் பலத்தால் தங்கள் பணபலத்தைப் பெருக்கிக்கொண்ட அரபுநாடுகள் பாகிஸ்தானி பாஸ்மதியையே விரும்பி இறக்குமதி செய்தார்கள். நமது சரக்கை சீந்துவரில்லை. இது பஞ்சாபிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களையும், ஆயிரக்கணக்கில் ஏக்கர் பயிரிட்டு வந்த பெரிய விவசாயிகளையும் சிந்திக்கவைத்தது. ‘நம் இரு நாடுகளுக்கிடையே 1947-ல் மனிதன் போட்ட எல்லைக்கோடுகளையும் மீறி இயற்கையும் வானமும் ஒரே மாதிரியான பூமிவளத்தையும் தட்பவெப்ப நிலையையும் நீர்நிலைகளையும்தானே தந்திருக்கிறது.  லாகூரில் மழையென்றால் வாகா பார்டர் தாண்டி இங்கேயும் கொட்டுகிறது. மனிதனுக்கிடையே இருக்கும் துவேஷம் இன்னும் பயிரினங்களுக்குத் தொற்றிக்கொள்ளவில்லையே. அங்கு விளைவது இங்கு விளையாதா?’ என்று யோசிக்கலானார்கள். இவர்களிடம் இல்லாதது பாகிஸ்தான் பாஸ்மதியின் நெல் விதைகள். போட்டி காரணமாக அவைகளை நேர்வழியில் பெறமுடியாது. அரசாங்கத்தை நம்பிப்பயனில்லை. இந்திய எல்லையையொட்டியிருக்கும் எல்லா பஞ்சாபி விவசாயிகளும் ஒன்றுசேர்ந்து இரகசியமாக நீண்டகாலத் திட்டமொன்று தீட்டி எதிர்க்குரலே இல்லாமல் அதற்கு வேண்டிய பணத்தையும் திரட்டி முழுமுனைப்போடு ஐந்துவருடங்கள் பாடுபட்டார்கள். நாட்டில் அமைச்சர் சி. சுப்பிரமணியம் கொண்டுவந்த ‘பச்சைப்புரட்சி’ நடந்துகொண்டிருந்த காலம். ஓரிரு ஆரம்பத் தோல்விகளுக்குப்பிறகு, குறிப்பிட்ட ஒரு இரவில் இவர்கள் ஆவலோடு காத்திருந்த பாகிஸ்தானி பாஸ்மதி நெல்விதைகள் நாற்பது லாரிகளில் இந்திய எல்லைக்குள் வந்திறங்கின. Pakistani Rangers-க்கும் நமது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் அவர்கள் ‘கண்களை மூடிக்கொள்ள’ கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். மூன்றுவருடங்களுக்கு இந்த விதைகளை விற்காமல், இந்திய எல்லையோரத்தில் மறுபயிரிட்டு வீரியமுள்ள விதைகளாகப் பல்கிப்பெருக்கினார்கள். As they say, the rest is history! இப்போது இந்தியா உலகத்திலேயே முதன்மையான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நாடு. இதன் பின்னே இருக்கும் பஞ்சாபிகளின் சாமர்த்தியமும் உழைப்பும் சிலருக்கே தெரியும். அரசின் உதவியை நாடாமல், தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டார்கள்.
எண்பதுகளில் பாஸ்மதி ஏற்று மதியில் முதலிடத்தைப் பிடித்திருந்த என் நண்பனுடன் குருதாஸ்பூரில் அவனது கிராமத்து Farm House-ஐப் பார்க்கப் போயிருந்தேன். நான் சிறுதாவூர் போனதில்லையென்றாலும், நான் பார்த்த அந்த பங்களா இதைவிடப் பெரிதாகவே இருந்திருக்கும். ஒன்றரை லிட்டர் பிடிக்கும் பெரிய லோட்டாவில் குடிக்கமுடியாமல் குடித்த – வெட்டியெடுத்த பாலாடை மிதக்கும்  (மலாய் பாக்கே) – லஸ்ஸியின் ருசி இன்னும் நாவில் இருக்கிறது. அவர்கள் வயலுக்குள் நின்று கொண்டிருந்த நான், சட்டென்று வரப்பின் மீதேறி ‘இன்னும் கொஞ்சநேரம் நின்றால் என் காலில் வேர் பிடித்துவிடும்’ என்று சொன்னது அவனுக்குப் பிடித்திருந்தது. இரவு  டின்னருக்குப்பிறகு அவன் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் மேலே சொன்ன கதையை அவர் சொல்லக்கேட்டேன். நீங்கள் செய்தது தவறில்லையா என்ற என் கேள்விக்கு அவரது பதில்: ‘மணி பேட்டா! நாங்கள் திருடவில்லை, பிச்சையெடுக்கவில்லை. இதில் எங்கள் உயர்வோடு, நாட்டின் முன்னேற்றத்தையும் நாங்கள் பார்த்தோம். நேரான விரலில் வராத நெய்யை, விரலை வளைத்தெடுப்பதில் எந்தத் தவறுமில்லை.’ அவரது விளக்கம் எனக்குச் சரியாகப்பட்டது. பஞ்சாபிகளை அடையாளப்படுத்தியது.
இந்திய மொழிகளிலேயே பஞ்சாபியைப்போல் ஒரு வாக்கியத்துக்கு இரு அர்த்தங்கள் உள்ள மொழியே வேறு இல்லையென்று சொல்வார்கள். ஒன்று நேராக இருக்கும். மற்றது விஷமத்தனமானது. தில்லி பல்கலைக்கழக பஞ்சாபித்துறை வகுப்பில் முனைவர் ஒருவர், ‘பஞ்சாபியில் எதைச் சொன்னாலும் அதில் டபிள் மீனிங் இருக்கும்’ என்றாராம். கேட்டுக்கொண்டிருந்த ஒரு மாணவி எழுந்து,Khadkevikhaavo – அதாவது விளக்கிச்சொல்லுங்கள் என்று பொருள்படும்படி கேட்டார். முனைவர் உடனே, ‘உட்காரு, உட்காரு. இதற்கும் இன்னொரு மீனிங் உண்டு’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம். ஆம், அதற்கு ‘திறந்து காட்டு’ என்றும் பொருள் கொள்ளலாம்!
இன்னொரு சாம்பிள்:
ஒரு பஞ்சாப் கிராமத்தில், வெளியே போயிருக்கும் தன் தந்தைக்குப் பதிலாக, கடையை கவனித்துக் கொண்டிருந்த ஓர் இளம் பெண்ணிடம்,  ‘Lipton-u di chcha Hai?‘ என்று ஓர் இளைஞன் கேட்டானாம்.  அதற்கு அவள், ‘Raatnu Aaavi‘ என்று பதிலளித்தாளாம்.  இதன் நேரான பொருள்:  ‘லிப்டன் தேயிலை இருக்கிறதா ?‘  — ‘ராத்திரி வரும்‘.  இடக்கான அர்த்தம்:  ‘(என்னை) அணைத்துக் கொள்ள ஆசையா ?‘  பதில்: ‘இரவில் வாருங்கள்‘.  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பஞ்சாபி மொழியின் இந்த வீச்சை சிலர் தவறாகப் பயன்படுத்த முற்பட்டார்கள். எழுபது – எண்பதுகளில் பஞ்சாபி நாடகங்கள் – டபிள் மீனிங் கொண்ட cheap நாடகங்கள் – தில்லி ஸப்ரு ஹௌஸில் அரங்கேறத் துவங்கின. சனி ஞாயிறுகளில் மூன்று காட்சிகள். நாடகங்களின் பெயரே அவைகளின் தரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும். Chchadi Jawaani Budhdhe Nu (கிழவனுக்குத் திரும்பிய வாலிபம்), Saali Aadi Gharwali (மச்சினியும் பாதிப் பொண்டாட்டிதான்)Budhdha Ghar pe hai? (கிழவன் வீட்டிலே இருக்கானா?) பாரக்கம்பாரோடில் தியேட்டர் முன்னால் பஞ்சாபிகள் பழியாகக் கிடப்பார்கள். இப்போது ஜஸ்பால் பட்டியின் நகைச்சுவை நாடகங்களுக்குத் தவமிருக்கிறார்கள். அவர்களை யாரும் மாற்றமுடியாது.
தில்லியில் நம்முடன் பஞ்சாபி நண்பர்கள் இருக்கும்போது, மனைவியிடம்கூட ஹிந்தி/ஆங்கிலத்தில் தான் பேசவேண்டுமென்பது எழுதப்படாத விதி. மறந்து தமிழில் பேச ஆரம்பித்தால், உடனே ‘க்யா யார், இங்கடா பிங்கடா சுரு கர் தியா?’ என்று நம்மைத் திருத்துவார்கள். இருந்தாலும் நாங்கள் அவ்வப்போது சங்கேத மொழியில் பேசிக்கொள்வோம். முக்கியமாக வார்த்தைகளுக்குரிய அழுத்தம், ஏற்ற இறக்கம் இல்லாமல் பேசக்கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பஞ்சாபிலிருந்து வருகிறார்கள், கேசம் வைத்திருக்கிறார்கள். அதனால் சர்தார்களுக்கு ‘பஞ்சாபகேசன்’ என்பது பெயர். குண்டாக இருப்பவர் ‘பக்கோடா காதர்.’ இப்படி தில்லித் தமிழர்களிடம் ஒரு தனி அகராதியே உண்டு. சிலசமயம் இப்படிப்பேசி அசடுவழிந்து மாட்டிக் கொண்ட சம்பவங்களும் உண்டு. 1957-ம் வருடம். நான் பதவியுயர்வில் B.E.L நிறுவனத்திலிருந்து மற்றொரு அரசு கம்பெனியான Trading Corporation of India Ltd.-ல் சேர்ந்த புதுசு.இருபது வயதுகூட ஆகாத பச்சிளம் பாலகன் நான். அப்போது STCசொந்தக் கட்டடம் இல்லாமல் Golf Links பகுதியில் வாடகைக்கு எடுத்த பல பங்களாக்களில் இருந்து இயங்கிவந்தது. நான் நிதி-கணக்குப்பிரிவில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். ஒருநாள் காலை என் ஆபீசில் ஆஜானுபாகுவான சர்தார் ஒருவர் சில சிப்பந்திகளை உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தார். அவரை அதுவரை நான் பார்த்ததில்லை. நான் என் நண்பனிடம், ‘யாருடா இந்தப் பன்னெண்டு மணி? ரொம்ப நேரமா கத்தறானே . . . பஞ்சாபகேசனுக்கு வேற வேலையில்லையா?’ என்று கேட்டேன். என்னைத் திரும்பிப் பார்த்த அவர் மீண்டும் அவர்களுடன் சண்டையைத் தொடர்ந்தார். போகும்போது என்னைப் பார்த்து,Gentlemen, Come with me என்று சொல்லி முன்னே நடந்தார். ‘நாம் தமிழில்தானே கேட்டோம்’ என்று சந்தேகத்துடன் அவர் பின்னால் போனேன். என் பாஸ் ஆன F.A.&C.A.O. ரூமுக்குள் போய் காலியாகவிருந்த அவரது ஆசனத்தில் அமர்ந்தார் இந்த சர்தார்ஜி. என்னை நேராகப் பார்த்து சுத்தத் தமிழில், ‘தம்பி, இது பன்னெண்டு மணியில்லே, ஆறு மணி. புதுசா சேர்ந்திருக்கியா . . . என்ன பேரு . . .? என்ன சொன்னே . . . பஞ்சாபகேசனா?’ என்று சரளமாகக் கேட்டதும், எனக்கு  உண்மையிலேயே வாய் அடைத்திருந்தது. ஒரு  சர்தார் வாயிலிருந்து  நல்ல தமிழ் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது அவர் மதராஸில் பிறந்து, படித்து வளர்ந்த சர்தார் ஹர்பன்ஸ் சிங் –  A Madras Cadre I.A.S.Officer deputed to STC as Secretary – போன்ற விவரங்கள். அதன்பிறகு அவர் ஆபீசுக்கு எப்போது போனாலும் என்னிடம் தமிழில்தான் பேசுவார். அதேபோல சென்னையிலிருந்து ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் விளையாட தில்லி பிரோஸ்ஷா கோட்லா மைதானம் வரும் A.G. கிருபால் சிங், மில்காசிங் வாயிலிருந்து தமிழ்வசவுகள் கேட்பது சுகமான அனுபவம்! அவர்கள் பேசும் தப்பான பஞ்சாபியைத் திருத்தியிருக்கிறேன்.
சிங் இஸ் கிங்’ என்று முழக்கமிட்ட அபினவ் பிந்த்ராவின் தந்தை ஏ.எஸ். பிந்த்ரா ஒரு நேர்காணலின்போது, எல்லோரையும்போல, முதல்வருக்கும், மந்திரிகளுக்கும், மத்திய அரசுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கவில்லை. தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்த தன் மகன் வெற்றிக்கு தானே காரணம் என்று ஆணவம் தொனிக்கக் கூறினார். ‘அவன் மெடல் வாங்கினப்புறம் இந்தக்கூட்டம்  போடறீங்களே, நேத்தெல்லாம் எங்கடா  போயிருந்தீங்க?’ என்பதைச் சொல்லாமல் சொன்னார். எனக்கு எட்டாவதில் படித்த சாமுவேல் ஜான்ஸனின் ‘All this accolade…. had it been earlier, had been kind‘ என்ற வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. இந்த ஆணவம் தான்  ‘அஸ்லி பஞ்சாபியத்’ என்று பொருள்படும். அதிகார வர்க்கத்தின் காலில்  விழும் கலாச்சாரம் அவர்களுக்குத் தெரியாது. அதே சமயத்தில் குசேலனாக இருக்கும் நண்பனைப் பார்க்கப்போகும்போது, அவனது ஏழைத்தந்தை காலில், ‘பெஹ்ரி பென்னா ஜீ’ என்று விழுந்து வணங்கவும் தவறமாட்டார்கள். ஆரம்பகாலத்தில், ஏன் இப்போதும்கூட அவர்களுக்கு மதராஸி என்றால் சற்று இளப்பம்தான். தில்லி போனபோது நான் முதலில் கற்றுக்கொண்டது பஞ்சாபி வசவுகளை எப்படிக் குரல் ஏற்ற இறக்கத்துடன் உச்சரிப்பது என்பதே. ஒரு சர்தார் பேச ஆரம்பித்தால், ஒரு வார்த்தைக்குள் இரு வசவுகளாவது நிச்சயம் இருக்கும். Most of them are unprintable!. குல்தீப் சிங் எனக்கு அடிக்கடி கொடுத்த சர்ட்டிபிகேட் இது: ‘ஸாலே! பத்துப் பஞ்சாபியைக் கொன்னுட்டு நீ ஒரு மதராசி பிறந்திருக்கே. பஞ்சாபி தா பாப் ஹோ, ஸ்ஸாலா!
பஞ்சாப் தா புத்தர்’ (பஞ்சாபின் மைந்தர்கள்) பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு மூவரும் வாராவாரம் தமிழ்ச்சானல்களில் நடத்தப்படும் அரட்டை அரங்கம் மேடைகளில், ஏதாவது ஒரு சிறுமி வாயில் புகுந்து புறப்படுகிறார்கள். நேருவின் அமைச்சரவையில் சர்தார் பல்தேவ் சிங் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இவரைப்பற்றி நிறைய சர்தார் ஜோக்குகள் உண்டு. ராஜ்குமாரி அம்ரித் கௌர் சுகாதார அமைச்சராகப் பத்து வருடங்கள் நீடித்தார். இவர் கபூர்த்தலா மகாராஜா ஹர்னாம் சிங்கின் மகள்.  ஹுக்கும் சிங்/ஜி.எஸ். தில்லன் (டில்லோன்) இந்தியாவின் பாராளுமன்றத்தில் சபாநாயகராக இருந்தார்கள். பிறகு ஸ்வரண் சிங், பூட்டா சிங், குடியரசுத்தலைவராக ‘இந்திரா காந்தி சொன்னால் உடனே துடைப்பத்தைக் கையிலெடுத்துப் பெருக்குவேன்’ என்று சொன்ன ஜெயில் சிங், தற்போதைய  ‘இரண்டுங்கெட்டான்’  பிரதமர் மன்மோகன் சிங், Marshal of the Air Force அர்ஜன் சிங், வங்கதேச வெற்றியைத் தேடித்தந்த Lt.Gen.J.S.Aurora, பிளானிங் கமிஷன் மோன்டேக் சிங் ஆலுவாலியா, விளையாட்டுத்துறையில் பிஷன்சிங் பேதி, சித்து, மில்கா சிங் – Are you relaxing? No, no. I am Milka Singh-சமீபத்தில் மறைந்த காம்ரேட் சுர்ஜீத் சிங் என்று தேசீய    அரங்கில் பல தலைவர்களைக் கொடுத்த பஞ்சாப், பஞ்சாபி சுபா கேட்ட மாஸ்டர் தாரா சிங், ஜெர்னெயில் சிங் பிந்த்ரான்வாலே போன்றவர்களையும் தந்தது.
புகையிலையையும் புகைபிடிப்பதையும் அறவே வெறுத்து நீக்கிய சீக்கிய மதம் ‘குடிமகன்’களை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. நான் பார்த்து வியந்த பல Sober Social Drinkers பஞ்சாபிகளாக இருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ‘வயிற்றில் போனது வயிற்றிலேயே இருக்க வேண்டும்.’ They know how to hold a Glass.தமிழ்நாட்டில் தான் ஒரு குவார்ட்டரில் பாதி உள்ளே போனால் இரவு முழுவதும் (கெட்ட) வார்த்தைகளாகவும் வாந்தியாகவும் வெளியே வருகிறது. நீங்கள் Patiala Peg கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், இதைத் தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன். சாதாரணமாக ஒரு லார்ஜ் பெக் என்பது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு. Two fingers. உலகம் பூராவும் இதே அளவு தான். ஆனால் பஞ்சாபிகளுக்கு பாட்டியாலா பெக் என்பார்கள். பாபாவில் ரஜினி ஒரு முத்திரை காண்பிப்பாரே – ஆள்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நீட்டி மற்றவிரல்களை மடித்து – அந்த முத்திரையைக் குறுக்கே வைத்தால் உள்ள அளவுதான் பாட்டியாலா பெக். இதுவும் இரண்டுவிரல் தானே. எனக்கு இதில் முன்னோடியாக இருந்தவர் ‘We have so many donkeys as PMs‘ என்று சொன்ன எழுத்தாளர் குஷ்வந்த் சிங். என் வீட்டுக்கு வந்தால் அவருக்குப்பிடித்த ஷிவாஸ்ரீகலை பேகம் அக்தர் இசையுடன் பருகுவார். மூன்றுக்குமேல் என்றுமே கிடையாது. என் முன்னாலேயே ஒருநாள் என் மனைவியைப் பார்த்து, ‘Jamuna, You are very beautiful. One day, I am going to elope with you!‘ என்று சொன்ன 94 வயதாகும் Lovable கிழட்டு ராட்சசன்! Sex, Scotch and Scholarship என்ற அவர் எழுதிய புத்தகத்தில் வரும் ஒரு வரி: I started drinking at the age of 25. I have never been drunk even once in the sixty years if drinking.
சீக்கியர்கள் வாழ்க்கையின் தாரக மந்திரமே Khaao. வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள். ஒரு வரியில் சொல்வதானால் ‘வயிற்றில் பல் இல்லாதவர்கள்.’ நன்கு பழகிவிட்டால் நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். இது உயர்வுநவிர்ச்சியல்ல. என்னை நீங்கள் நம்பலாம். என் தில்லி வாழ்க்கையில் பலமுறை கண்டு அனுபவித்திருக்கிறேன். அறுபதுகளில் பணத்தேவை இருந்து நமது தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து வந்த நண்பனிடம் ரூ. 5000 உடனடியாகத் தேவைப்படுகிறதென்று கேட்டால் – அப்போது ரூ. 5000க்கு மதிப்பு அதிகம் – ஏன் இத்தனை பணம் தேவை, ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாயா,  கெட்ட சகவாசமா, என்ன காரணத்துக்காகத் தேவைப்படுகிறது, யாருக்காவது உடம்பு சரியில்லையா, தப்பான வழியில் போகிறாயா என்று பத்துக் கேள்விகள் கேட்டுவிட்டு இப்போது பணமில்லையேயென்று போனை வைத்துவிடுவான். உடனே குல்தீப் சிங்கிற்கு போன் பண்ணிக் கேட்டால், ‘காசாக வேண்டுமா இல்லை செக் போதுமா? செக் என்றால் ஐந்து நிமிடத்தில் கொடுத்தனுப்பி விடுவேன். காசு என்றால் பத்துமணிக்கு பாங்க் போய் எடுத்துத்தருகிறேன்’  இதுதான்  பதிலாக  இருக்கும். முதலில் பணமில்லையென்று  சொல்லி போனை  வைத்த ‘நம்ம’  ராமச்சந்திரன் சும்மாயிராமல் கர்ம சிரத்தையோடு இன்னும் ஐந்து நண்பர்களுக்கு, ‘மணி இன்னிக்கு ஐயாயிரம் ரூபாய்  கடனாக் கேட்டான். எதுக்குன்னு தெரியல்லே. Is he alright?’ என்று போட்டுக்கொடுத்து அன்று ராத்திரிக்குள் அந்த ஐந்து பேரும் நம்மிடம் ‘துக்கம்’ மட்டும் விசாரிப்பார்கள். இவ்வளவுக்கும் இந்த ஐந்து ‘நண்பர்களும்’ குல்தீப் சிங்கைவிட ‘வசதி’யாகவே இருப்பவர்கள். இதற்கு ‘பொத்திப்பொத்தி’ வளர்க்கப்பட்ட நம் அடிப்படை மனநிலைதான் காரணம். நம்மைப் பொறுத்தவரையில் ‘தனக்குப் போகத்தான் தானம்.
இந்த ‘அஸ்லி பஞ்சாபியத்‘ தை அழகாக வெளிப்படுத்துகிறது India Bulls நிதி நிறுவனத்துக்கான ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்.  Khao Piyo Aash Karo என்பதன் உதாரணத்துக்கு உருண்டு திரண்ட ஒரு சர்தார், தன் பழைய நிலையை மறக்காமல், ஒரு தெருவோர டாபாவில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது, தன் பழைய நண்பனைச் சந்திக்கிறான்.  கரடியைப் போல் கட்டிக் கொள்ளும் சர்தார், பக்கத்திலிருக்கும் தன் தொழிற்சாலைக்கு நண்பனை அழைக்கிறான்.  நண்பன் என் புது ஸ்கூட்டர், அதில் போகலாமென்றதும், தன் டிரைவருக்கு பின்னால் வரும்படி கண்களாலேயே சொல்லிவிட்டு நண்பனின் ஸ்கூட்டரில் ஏறிக்கொண்டு Turn Over Investment என்று பேசிக்கொண்டே வளர்ந்து வரும் தன் பெரிய தொழிற்சாலையை நண்பனுக்கு சுற்றிக் காண்பிக்கிறான்.  கூடிய விரைவில் தன் பெயரிலேயே ஒரு புது ஸ்கூட்டர் தயாரிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு கபடமில்லாத ஒரு சிரிப்போடு விளம்பரம் முடியும்.  இதில் கவனிக்க வேண்டியது நிறைய உண்டு.  என்னிடம் கார் இருக்கிறது,  அதில் போகலாமென்று அவன் நண்பனிடம் சொல்லவில்லை.  ஸ்கூட்டரில் போவது தன் அந்தஸ்துக்கு இழுக்கென நினைக்கவில்லை.  பார்த்தாயா,  நான் உன்னைவிட எவ்வளவு பெரியவன் என்ற கர்வமில்லை.  நண்பனை சிறுமைப்படுத்தாத நட்பு, வெகுளியான சிரிப்பு.  இவைகள்தான் அஸ்லி பஞ்சாபியின் குணங்கள்.
1984-ல் சீக்கியர்களுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின்போது, தில்லியே ஒரு பிணக்காடாக இருந்த வேளையில், உயிருக்கு பயந்து லாஜ்பத்நகரிலிருந்த தன் வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவி, இருகுழந்தைகளோடு, கண்களில் பயத்துடன் நடுஇரவில் என்னை நம்பி என் வீட்டில் சரணடைந்தானே என் நண்பன் பக்வான்சிங், அவன் இந்த ‘மதராஸி’யிடம் வைத்திருந்த நம்பிக்கையை என்னவென்று சொல்ல? இவையெல்லாம் கடவுள் எனக்குத்தந்த கொடுப்பினைகள்! பாரதி படப்பிடிப்பின்போது என் குழந்தைகளிடம் சொன்னேன்: ‘பாரதிக்குப் பதினான்கு பேர்தான் வந்திருந்தார்களாம். நான் தில்லியில் இறந்தால் ஆயிரம் பேராவது வருவார்கள். ஐம்பது வருடங்களில் நல்ல நண்பர்கள்தான் என் சேமிப்பு.’ இப்போது சென்னையிலும் சேகரித்து வருகிறேன்!
*
உயிர்மை வாசகர்களுக்கு: உங்கள் இதழில் எழுத ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகிறது. கத்துக்குட்டியான என்னை எழுத ஊக்குவித்து, நான் எழுதியதில் ஒரு காற்புள்ளி, ஆச்சரியக்குறிகூட மாற்றாமல் தொடர்ந்து பிரசுரித்த நண்பர் மனுஷ்ய புத்திரனுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? நான் ஒரு மோசமான நடிகன் என்று மட்டுமே நினைத்திருந்தேன். எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, நான் ஒரு மோசமான எழுத்தாளனும்கூட என்பது. கடந்த ஒரு வருடமாக நான் எழுதியதைப் படித்துப் பாராட்டிய வாசகர்களுக்கும், பார்க்குமிடத்தில் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எழுதியதை மாதாமாதம் தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமும் பாராட்டி உற்சாகமளித்த அத்தனை முன்னணி எழுத்தாளர்களுக்கும் மறைந்த சுஜாதா அவர்களுக்கும் என் நன்றி. மாதாமாதம் தொடர்ந்து எழுதுவது அயற்சியாக இருக்கிறது. நாடகத்தில் உள்ள ஆர்வம் இதில் இல்லை. விகடனில் தொடர்ந்து எழுத ஒப்புக்கொண்ட நண்பர் நாஞ்சில் நாடனிடம் கேட்டேன்: ‘வாராவாரம் பத்திரிகைக்கெடுவுக்கு உட்பட்டுத் தொடர்ந்து எழுதுவது உங்களுக்கு எப்படி முடிகிறது?’ பதிலையும் நானே சொன்னேன் ‘நீங்கள் எழுத்தாளர். உங்களால் முடியும்.’ நீங்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டாலும், நான் அவ்வப்போது உயிர்மையில் என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். எனக்கு ஒரு எழுத்தாளனுக்குரிய மரியாதையைத் தந்த உயிர்மை ஆசிரியக் குழுவுக்கும், நண்பர் மனுஷ்ய புத்திரனுக்கும் என் உளமார்ந்த நன்றி. மீண்டும் சந்திப்போம்.

1 comment:

  1. உங்கள் சீடர் சகா வின் பிளாக்கில் உங்கள் பல நேரங்களில் பல மனிதர்கள் பற்றி அவர் எழுதி இருந்த்து வாசித்து சமீபத்தில் அதனை வாசித்தேன், மிக அருமை, பின்னர் உங்கள் தொடர்ந்து வசித்து வருகிறேன், அடியேன் இலஙகை கண்டியை சேர்ந்தவன், பூர்விகம் , சிவகங்கை மாவட்டம் . 140 ஆண்டுகளுக்கு முன்னர் முத்தையா தேவர் கண்டிக்கு குடி பெயர்ந்ததால் , நான் அங்கே , இப்போ இருப்பது நோர்வேயில், என்னை போனறவர்களுக்கு , தமிழகத்துடனான தொடர்பு உங்கள் எழுத்துக்கள் தான்

    ReplyDelete