நேற்றோடு – 2014 மே மாதம் 24-ம் தேதி – என்னைப்போன்ற வயதான இந்தியர்களின் பிரயாண வாழ்க்கையின் முக்கிய அங்கமாயிருந்த Amby என்று செல்லமாக அழைக்கப்பட்ட Ambassador கார் உற்பத்தி நின்றுபோனது. இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் விதவிதமான மேனாமினுக்கி கார்களுக்கிடையே போட்டி போடமுடியாமல் அம்பாசிடர் வீரன் தோற்றுப்போனான்! எங்கள் காலத்தில், ‘அம்பாசிடருக்கு நாலு வீல் மட்டும் இருந்தாப்போதும்…… பெட்ரோலே தேவையில்லை!’ என்கிற அளவுக்கு எங்களை ஆட்கொண்டிருந்தது இந்த நண்பன் தான்!
நம் எல்லோர் வாழ்விலும் குறைந்தபட்சம் ஒரு டாக்சியாகவாவது அம்பாசிடர் கார் இடம்பிடித்திருக்கிறது. அந்தக்காலத்தில் அம்பாசிடர் வைத்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் பத்மினி வைத்திருந்த பண்ணையார் போல ஆயிரம் கதைகளிருக்கும்! அறுபதுகளில் அம்பாலாவில் ஆசுபத்திரிக்கு போகும் வழியில் அம்பாசிடர் காரிலேயே பிரசவமாகி, அம்பாசிடர் பாட்டியா என்று காரணப்பெயரையும் தாங்கிக்கொண்டு ஒருவர் இருக்கிறார்!
நான் அறுபதுகளில் பிர்லாவில் வேலை பார்த்தது ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் செயர்மனாக இருந்த B.M. Birla (Brij Mohan Birla)வின் செயலராக. தற்போதைய செயர்மன் சந்திரகாந்த் பிர்லா (C.K. Birla)வின் தாத்தா! பிர்லா ஹெளசில் மாலை நேரங்களில் உத்தர்பாராவிலிருக்கும் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் ஜெனரல் மானேஜர்D.C. Lahoty-யிடம் என்னென்ன கேள்விகள் கேட்கவேண்டுமென்று தாத்தா பேரனுக்கு சொல்லிக்கொடுப்பது வயதான புலி தன் குட்டிக்கு வேட்டை அனுபவங்களை கற்றுக்கொடுப்பது போலிருக்கும். பதின்மவயது சந்திரகாந்த் பிர்லா தினமும் தாத்தாவுக்குத்தெரியாமல் என்னிடம் கெஞ்சி ஸ்கூட்டர் சாவியை வாங்கி, ஓரிரு ரவுண்டு ஓட்டிவிட்டு வருவார்! இதனால் எனக்கு லாபம் என்னவென்றால் போகும்போது காலியாகவே இருக்கும் என் ஸ்கூட்டர் டாங்க் வரும்போது ஒரு கேலன் பெட்ரோலால் நிரப்பப்பட்டிருக்கும். ஆமாம். அப்போது லிட்டரெல்லாம் வரவில்லை. ஒரு Gallon Petrol — சுமார் நான்கு லிட்டர் பெட்ரோல் விலை வெறும் பன்னிரெண்டு ரூபாய் அறுபது நயாபைசா மட்டுமே!
சமீபத்தில் சந்தித்தபோது சந்திரகாந்த் பிர்லா இதையெல்லாம் ஞாபகம் வைத்து நினைவுகூர்ந்தது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது!
இப்போதைப்போல தேவையான பணத்தோடு அல்லது செக்கோடு ஷோரூம் போய் நமக்குத்தேவையான கார், நிறம் போன்றவைகளை ஓட்டிப்பார்த்து சாவியுடன் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப்போகமுடியாது. இன்று அம்பாசிடர் காருக்காக ரூ. 15,000 கட்டி புக் செய்தால், கார் கைக்கு வர ஐந்து வருடங்கள் கூட ஆகலாம். அதற்கு மேலும் ஆகலாம்! அலாட்மெண்டுக்கான டெலிவரி ஆர்டர் வந்தபிறகும் நாம் விரும்பிய கருப்புக்கலருக்கு பதிலாக பச்சைக்கலரில் ஒன்று காத்திருக்கும். அதை விட்டால் இன்னும் ஆறு மாதமாகலாம்…..அப்போதும் வெள்ளைக்கலர் தான் இருக்கிறது. வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள்! என்பது தான் பதிலாக இருக்கும்! அது தான் பெர்மிட் கோட்டா ராஜ்!
நானிருந்த பத்து வருடங்களில் அம்பாசிடர் காருக்கான சாங்ஷன், பெர்மிஷனுக்காக எத்தனை தடவை Directorate General of Technical Development ஆபீசுக்கு ஏறி இறங்கியிருப்பேனென்பது தில்லி உத்யோக் பவன் படிகளுக்கும் என் கால்களுக்கும் தான் தெரியும்!
இந்தியாவின் பெர்மிட் கோட்டா காலங்களில் அம்பாசிடரையும் ப்ரீமியர் பத்மினியையும் தான் இந்திய ரோடுகளில் பார்க்கமுடியும். ஆனியில் ஒன்று…ஆடியில் ஒன்று என்று எப்போதாவது கண்ணில் தென்படும் இம்போர்ட்டெட் காரின் பிருஷ்ட பகுதியில் Caution — Left Hand Drive — No Signal என்று எழுதியிருக்கும். ஐரோப்பாவில் தயாரான எல்லா காருக்கும் இடது பக்கம் தான் ஸ்டீரிங் வீல்! தலைநகரிலிருக்கும் பன்னாட்டு தூதரகங்கள் அவர்களுக்கு தேவையான கார்களை இறக்குமதி செய்து, மூன்று வருடங்கள் உபயோகித்தபின் அவைகளை State Trading Corporation of India-வுக்கு மட்டுமே விற்கமுடியும். STC அவைகளை ஏலமிடும்! சிவாஜி கணேசனுக்கு இந்த ஏலமுறையில் ஓரிரு வண்டிகளை மலிவாக வாங்கிக்கொடுத்திருக்கிறேன்! வெளிநாடுகளில் அம்பாசிடர் காரை டாக்கா நகரில் தான் பார்த்தேன். இந்திய தூதரத்தில் கே.பி.எஸ். மேனன் அம்பாசிடராக இருந்தபோது அம்பாசிடர் காரை உபயோகித்து வந்தார்!
எழுபதுகளில் அமெரிக்க ஜெனரல் மோட்டர்ஸ் கூட்டுறவில் — மாருதிக்கெல்லாம் முன்பு — ஒரு புதிய கார் தயாரிக்க திரு. பி.எம். பிர்லா ஒரு விண்ணப்பம் தயாரித்து தொழில்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் அனுப்பினார். அதில் ‘கடந்த 30 வருடங்களாக அம்பாசிடரில் எந்த மாற்றமுமில்லாமல் க்ரில்லை மட்டும் மாற்றி, மார்க் ஒன், மார்க் டூ என்று விற்றுக்கொண்டிருக்கிறோம். இப்போது தயாரிக்கப்போகும் கார் தொழிற்சாலைக்கு ஒரு பைசா கூட அன்னியச்செலாவணியோ, தொழிற்சாலை சீர்திருத்தமோ தேவையில்லை. ஆனால் உலகத்தரமான ஊர்தி தயாரிக்கமுடியும்’ என்று உறுதியளித்திருந்தார். அப்போது சஞ்சய் காந்தியின் ‘மாருதி 5000 ரூபாய் மக்கள் கார்” திட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியதால், இந்த திட்டத்தை குப்பைத்தொட்டியில் போட்டார் பிரதமர்!
அம்பாசிடர் தன் அந்திமக்காலங்களில் கொல்கத்தாவில் டாக்ஸிகளாகவும், தலைநகர்களில் அமைச்சர்களுக்காக வெள்ளைக்கலரிலும் உலவி வந்தன. அதையும் இப்போதைய SUV-க்களும் BMW-7-களும் ஆக்கிரமித்துக்கொண்டு ஆண்டுக்கு ஆறாயிரம் வண்டிகள் கூட விலைபோகாத நிலைக்கு வந்துவிட்டது. R.I.P. Dear Ambassador!
0 comments:
Post a Comment