கதைகேட்பது என்பது அனைவருக்கும் அலாதியானதுதான். அதுவும் பாரதி மணி போன்ற அனுபவமுள்ள மனிதர்கள் கதை சொல்லும் போது நம்மையும் மறந்துவிடுவோம்.இன்றைய தலைமுறையினருக்கு கதை கேட்டு வளரும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.காரணம் இன்றைய அவசர உலகத்தில் பொருள் தேடி அலைந்து தன் குழந்தைகளைக்கூட கவனிக்க நேரம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளும் சுட்டி டிவி போன்ற இருபத்தி நான்கு மணிநேர கார்டூன் சேனல்களிடம் தன்னை புதைத்துக் கொண்டுவிட்டனர். இப்படியான ஒருகாலக்கட்டத்தில் கதைசொல்லும் தாத்தா,பாட்டிகளும் குறைவு. சிறுவயதில் என் அம்மாவிடம் கதை சொல்ல சொல்லி நச்சரித்ததுண்டு.என் அம்மாவுக்கும் இரண்டு கதைகளுக்கு மேல் தெரியாது.இருந்தாலும் இரண்டு கதையையே மீண்டும் மீண்டும் சொல்லச்சொல்லி கேட்டதுண்டு.கதை கேட்டு வளராத இன்றைய குழந்தைகளையும்,கதை சொல்லாத இன்றைய பெற்றோர்களையும் நினைக்கும் பொழுது தமிழிழலனின் இந்த கவிதை என் மனதில் ஏனோ வந்து போகின்றன.
*கடைசியாக யாருக்குக்
கதை சொன்னீர்கள்
எங்கே?எப்பொழுது?
கதை சொன்னீர்கள்
எங்கே?எப்பொழுது?
*கதை கேட்காமல்
வலித்துக் கிடக்கின்றன
மழலைச் செவிகள்
உங்கள் தலையணைக்கருகில்
வலித்துக் கிடக்கின்றன
மழலைச் செவிகள்
உங்கள் தலையணைக்கருகில்
*பொம்மைகள் வைத்து
கதை சொன்னால்
உண்மைகள் விளங்கும்
மழலை உள்ளங்களுக்கு.
கதை சொன்னால்
உண்மைகள் விளங்கும்
மழலை உள்ளங்களுக்கு.
வடபழனியிலிருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஒரு நண்பருடன் இணைந்து கொண்டு பயணமானேன்.பொதுவாகவே சென்னையில் எத்தனைமுறை பேருந்தில் பயணம் செய்திருந்தாலும் வேடிக்கைப் பார்க்க இன்னும் இருக்கவே செய்கின்றன.
மதியம் 12.30 மணிக்கு அவர் வீட்டை அடைந்ததும் அழைப்பு மணி அழுத்தி அவரை அழைத்தோம்.ஒரே உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார். அன்று அவர் ஒரு குழந்தைக்கு உண்டான மனநிலையிலேயே இருந்தார்.மதிய வேளை என்பதால் எங்களிடம் கொஞ்சம் சோர்வு தட்டுப்பட்டது.அவரைப்பார்த்ததும் எங்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. அவருடைய அறைக்கு அழைத்துச்சென்று நம்மை உட்காரவைத்துவிட்டு குளிர்ந்த நீரை குடிக்கச் சொல்லிக் கொடுத்தார்.உங்களுக்கு சிரமம் வேண்டாம் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என்றதும் எனக்கு ஒரு சிரமமும் இல்லையென்றுச் சொல்லி எங்களை அவருடைய சொந்த விருந்தினரைப் போலவே நடத்தினார்.
போன சிறிது நேரத்திற்குள்ளேயே கதைசொல்ல ஆரம்பித்து விடலாமா என்று சொல்லிக்கொண்டே தயாரானார்.அவர் பெரும்பாலும் குளிர்சாதனம்(ஏ.சி)இல்லாமல் இருக்கமாட்டார் என்பது நமக்குத் தெரியும்.இருந்தாலும் கதை பதிவு செய்யும்போது மட்டும் மின் விசிறி,குளிர்சாதனம் பயன்படுத்த வேண்டாம் என்று தயங்கிய படியே கூறினேன்.ஓ!எஸ், என்று சொல்லிக்கொண்டு உடனே அணைத்து விட்டார்.ஒரு கதை முடிந்து அடுத்த கதைக்கு சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன்.எனக்கு ஒன்றும் சிரமமில்லை என்றார்.நமக்குத்தான் ஒரு கதைக்கேட்டு அடுத்த கதைகேட்க ஓய்வு தேவைப் பட்டது.அந்தளவிற்கு ஒவ்வொருகதையிலும் மூழ்கி விட்டோம்.இடையிடையே சிறிது நேரம் உரையாடிக் கொண்டேதான் பதிவு செய்தோம்.இடையிடையே பழுப்பு(புகையிலை)ஊதிக்கொண்டே இருந்தார்.இவர் பழுப்பு பிடிக்கும் ஸ்டைலே தனிதான்.அவரிடம் உங்களின் குரல் நல்ல கணீரென்று இருக்கிறது என்றேன்,அதற்கு அந்த காலத்தில் London School of Drama வில்Voice culture certficate course முடித்த ஒரே ஆள் நான் தான் என்றார்.
அவருடைய மாமனாரான க.நா.சு வைப்பற்றி யாரும் அறிந்திடாத பல தகவல்களை கட்டுரையாக வாசித்தார்.
கதை சொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவரையும் அறியாமல் அவர் தன் இளமை காலத்திற்கே சென்று விட்டதை என்னால் உணர முடிந்தது.முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.நம்மையும் அறியாமல் அவர் கதையில் நாமும் பயணமானோம்.
அடுத்த கதையாக சுஜாதா அவர்களின் ’நகரம்’ என்ற கதையை சொல்ல ஆரம்பித்தார். இக் கதையில் வரும் பாத்திரங்கள் பேசுவதை இவர் பேசும் போது இக்கதைக்கு இன்னும் அழகு கூடின.அதட்டலும் கெஞ்சலும் கோபமும் அழுகையுமாக இக் கதையை சொல்லி முடித்தார்.இக் கதையை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் கதை முடியும் போது என் மனதில் ஒரு கணம் ஏற்பட்ட உணர்வு.
வாசகர்களால் பெரிதும் வாசிக்கப்பட்ட நாஞ்சில் நாடனின் ’இடலக்குடி ராசா’ கதையை சொன்னார்.எத்தனை முறை வாசிக்கும் பொழுதும் நம் மனம் கனக்கவே செய்கின்றன.பாரதி மணி அவர்கள் சொல்லும் பொழுது நம் கண்களில் நீர் வழிந்தன.
இப்படியாக ஒவ்வொரு கதையிலும் நாம் கரைந்து போனோம்.
இவரிடம் பேச நிறையவே இருக்கின்றன.டெல்லியில்50 வருட பணி அனுபவம், இலக்கியம், நாடகம், திரைப்படம், ரஜினி, சத்யராஜ்,இந்திய அரசியல்,உலக அரசியல்,இப்பொழுது நடிக்கும் மணிரத்தினத்தின் கடல் வரை அனைத்தையும் பேசினோம்.
உயிர்மையில் வந்த அவருடைய கட்டுரைகள் குறித்தும்,அதன் தொகுப்பாக வந்துள்ள ’பல நேரங்களில் பல மனிதர்கள்’ புத்தகம் குறித்தும் பேசினேன்.இதே போல் தொடர்ந்து எழுதுங்கள் என்றதும் அனைவரும் இதைத்தான் கூறுகிறார்கள் ஆனால் எழுதுவது என் தொழில் அல்ல, நான் எழுத்தாளனும் அல்ல என்றும் நான் எழுதியதற்கான நோக்கம் நிறைவேறி விட்டது என்றும் கூறினார்.
முன்னாள் பிரதமர்களான நேரு மற்றும் இந்திராகாந்தி இவர்களிடம் ஏற்பட்ட பழக்கத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
பாரதி படத்தில் நடித்ததால் பாரதி மணி என்ற பெயர் வந்ததா என்றேன்.1982 ஆம் ஆண்டு பாரதி நூற்றாண்டு முடிந்து 2000 ஆம் நூற்றாண்டின் தொடக்க விழா ஒன்று டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தேன்.அந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.சங்கர் தயாள் சர்மாவை(முன்னாள் குடியரசுத்தலைவர்,ஆனால் அப்பொழுது அவர் குடியரசுத்தலைவராக இல்லை) அழைத்திருந்தேன்.அதற்காக அவர் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன் அப்பொழுது அவருடைய P.A மணி வந்திருக்கிறார் என்பார்.எந்த மணி அந்த பாரதி மணியா என்பார்.ஆகையால் எனக்கு அப்பொழுதே பாரதி மணி என்னும் பெயர் வந்துவிட்டது என்ற சுவாரசியமான தகவலை கூறினார்.
அன்னை தெராசா அவர்களுடனான எதிர்பாராத பயணம்,ஆங் சான் சூ கி யைச் சந்தித்தது என அவருடைய அனுபவங்கள் நீண்டது.
இவரிடமுள்ள ஒரு முக்கியமான பழக்கத்தை நாம் சொல்லியே ஆக வேண்டும்.இவரிடம் ஒரு முறை பழகிவிட்டாலே போதும் இவருக்கு நாம் நண்பனாகிவிடுவோம்.நம்மை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ளவே மாட்டார்.நம்முடைய பின்புலம் எதுவும் இவருக்குத் தேவையில்லை. இவருக்குத் தேவையானது நம்முடைய நட்பு மட்டுமே.
இவருடைய ஒரு மகள் ஜெனிவாவில் உள்ள U.N அலுவலகத்தில் தூதராக வேலை செய்கிறார்.இன்னொரு மகள் டெல்லியில் பணிபுரிகிறார்.ஏன் நீங்கள் ஜெனிவாவில் உள்ள உங்கள் மகள் வீட்டிற்கு செல்லவில்லை என்றதற்கு அங்கு சென்றாலும் இதே போல ஒரு அறையில் இருக்கப் போகிறேன்.அது மட்டுமல்ல நான் சுற்றாத நாடுகள் கிடையாது.பல நாடுகளின் தெருப்பெயர் முதற் கொண்டு எனக்குத் தெரியும் என்றும் அதைவிட முக்கியம் சென்னையில் வசிப்பதுதான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.
புத்தகங்கள் படிப்பது,தொலைக்காட்சி பார்ப்பது பொழுதுபோக்கு என்றார்.ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எதையும் இவர் அதிகம் பார்ப்பதில்லை. மது,புகை உயிருக்கு கேடு என்பது போல் தமிழ் சேனல் பார்ப்பது வாழ்க்கைக்கு கேடு என்று ஒரே வரியில் கூறிவிட்டார். எங்களுக்காக தேனீர் வைத்துக் கொடுத்தார்.தனியாக இருந்தாலும் தனிமை தன்னை தின்றுவிடாதபடி பார்த்துக்கொள்கிறார்.
சந்திப்பு : ச.சு.அருள். உதவி: சிலம்பரசன்
0 comments:
Post a Comment