திரு. பாரதி மணி என் நண்பர். தில்லியில் அவர் வெறும் எஸ்.கே.எஸ்.மணியாக இருந்த காலம் முதலேயே அவரும் நானும் நண்பர்கள்.
அவர் நடிகர். நாடகப் பித்தர். ஊருக்கு உழைப்பவர். நல்ல மனிதர். (பண உதவி கேட்டால், கொடுத்து உதவக் கூடியவர் என்பதால், அவரை நல்ல 'மணி'தர் என்றும் சொல்லலாம்!) டில்லி தட்சிண பாரத நாடக சபையின் தூண். ககலவென்று பேசக்கூடியவர். நகைச்சுவையாளர்.
அப்படிப்பட்ட மணி அவர்கள், பாரதி திரைப்படத்தில் நடித்து பாரதி மணி ஆனார். இது எதிர்பார்த்த பரிணாமம்தான். நடிப்பதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருக்கக் கூடாதா? உயிர்மையிலும் மற்ற இதழ்களிலும் எழுதவும் ஆரம்பித்து விட்டார். சுவையாகவும், விவரமாகவும், அனுபவ பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வருகிறார். சங்கடம் என்ன என்றால் எல்லாவற்றையும் நன்றாகவும் எழுதி விடுகிறார். இந்த எழுபது வயதில் இவருக்கு ஏன் இந்த ஆசை ?
நகைச்சுவை எழுத்தாளன் என்று எனக்கு நானே பட்டம் சூட்டிக் கொண்டு வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறேன் நான். எதற்காக இவர் என் ஃபீல்டில் நுழைய வேண்டும் ? நான் என்ன நடிப்பில் அவருக்குப் போட்டியாக வந்தேனா ?
உம். போகட்டும். இப்போது அவர் கட்டுரைகள் புத்தகமாக வருகிறது. நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டுமானால், இதோ நாலு வார்த்தைகள்: மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி...!
0 comments:
Post a Comment