இந்தப்படத்தை உற்றுப்பாருங்கள். எழுபதுகளில் எடுத்தது. நான் ஒருவருக்கு முகச்சவரம் செய்து விடுகிறேன்!
எழுபதுகளில் தில்லியிலிருந்து நான்கு நாடகம் போடுவதற்காக பம்பாய் போயிருந்தோம். காலையில் நான் ஷேவ் செய்துகொண்டிருந்ததைப் பார்த்த சகநடிகன் பாலு, ‘மணி! எனக்கும் ஷேவ் செய்துவிடுவியா? சோம்பலா இருக்கு!’ என்றான். நானும் சீரியஸாக,’நிச்சயமாக. ஆனால் எங்கிட்டே ரேட் கொஞ்சம் அதிகம். நூறு ரூபா ஆகும். ஆனால் தொழில் சுத்தமா இருக்கும்! வசதி எப்படி?’ என்றேன். அப்போதெல்லாம், சலூனில் ஒரு ரூபாய்க்கும் குறைவான ரேட்.
சம்மதித்து எதிரில் உட்கார்ந்தவனுக்கு, கழுவிய பிரஷ்ஷில் புதிதாக சோப் எடுத்து அழகாக முகத்தில் தடவ ஆரம்பித்தேன். சுற்றி நண்பர்கள் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். நான் பாலுவிடம், ‘ஒரு வெட்டு, ரத்தம் இருக்காது. என்னிடம் தொழில் சுத்தம்!’ என்று ரேஸரால் வழிக்கவும், பாலுவுக்கு ‘இவன் ஜகா வாங்கமாட்டான். நமக்கு பணம் பழுத்துவிடுமே’யென்ற பயம். பின் வாங்கியவனை மற்றவர்கள் உட்காரவைத்தனர். இரண்டாவது தடவையும், சோப் தடவி, அவன் முகத்தை வழுவழுவென்று ஆக்கினேன். அழுதுகொண்டே நூறு ரூபாயைத் தந்தான்.
இந்தத்தொழிலில், என் முதல் கூலி மற்றவர்களைவிட நூறு மடங்கு அதிகம்! ஒரு வேலை கைவசமுண்டு!
இவையெல்லாம் என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள்!
0 comments:
Post a Comment