Saturday, January 30, 2016

நண்பர் திரு நாஞ்சில் நாடன் அவர்கள்தான் முதன்முதலில் திரு பாரதி மணி அவர்களைப் பற்றி என்னிடம் சொன்னார். "மிகவும் பெரிய மனிதர், சுவாரஸ்யமானவர், பழகுவதற்கு இனிய பண்பாளர், அவரை அவசியம் சென்று பார்க்க வேண்டும். ஒரு நாள் போகலாம்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். நேரில் சந்தித்த முதல்நாளிலேயே நாஞ்சில் சார் சொன்னது அவ்வளவும் உண்மை என்று தெரிந்தது. அவர் முன் நாம் சௌகர்யமாக இருக்கலாம். தோன்றும் எதைப் பற்றியும் பேசலாம். கவனமாகக் கேட்கும் செவிகளை உடையவர்.  தான் பேச பிறர் கேட்க வேண்டும் என்கிற சில பெரிய மனிதர்களிடம், பிரபலஸ்தர்களிடம் இருக்கும் குணம் இவரிடம் இல்லை. இந்நூலில் இருப்பதைப் போல் நூறு மடங்கு நேரடி அனுபவங்களும், தொடர்புகளும் உடையவர். நூறு மடங்கு நகைச்சுவையும் தவறாது இருக்கும். தில்லி போகும் தமிழ் நடிக நடிகையர்களுக்கு -- சிவாஜி, எம்.ஜி.ஆர். உட்பட - வேண்டிய உதவிகளைச் செய்து வந்தவர். இவரது சினிமா பற்றிய  Adult Only ‘Quiz' ஒன்றின் பதில் தெரியாமல் பல இரவு பகல்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்ட வருங்கால மாபெரும் இயக்குனர்களையும், ஒளிப்பதிவாளர்களையும், உதவி இயக்குனர்களையும் நானறிவேன்!

இவரிடம் நான் கவனித்த சில குணாதிசயங்கள்:- தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பதில்லை. எந்த எதிர்பார்ப்பும், சார்பும் (dependenceஇல்லாமல் அன்புடன் பழகும் பற்றற்ற நட்பு. மிகவும் sophisticated ஆன, நாகரிகமான பிறரை சிறிதும் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ளும் விதம். அவரது விருந்துபசாரத்திலும், கைகளைப் பற்றுவதிலும், தங்கிச்செல்லும் நண்பர்களை தற்காலிகமாகப் பிரியும் தருணங்களிலும் வெளிப்படுத்தாமலே தென்படும் அவரது வாத்ஸல்யம். தன் எழுத்தின் மேல் மிக அதிகமான அபிப்பிராயம் இல்லாமல் 'கத்துக் குட்டி' என்றே தன்னை அழைத்துக் கொள்வது. எழுத்தை விட நாடகத்தின் மேல் அவருக்கு இருக்கும் அபாரப் பற்று.

மிக நல்ல பண்பாளரை அறிமுகம் செய்து என் நண்பர்கள் வட்டத்தை செழுமைப்படுத்திய திரு நாஞ்சில் அவர்களுக்கு நன்றி..........
எழுத்தாளர் . ஸ்ரீநிவாசன்.

0 comments:

Post a Comment