Thursday, January 21, 2016

டெல்லியில் தட்சிண பாரத நாடக சபாவைத் தோற்றுவித்த 
முன்னோடிகளுள் முதன்மையானவர் பாரதி மணி.

நாடக,திரைப்படநடிகர்,எழுத்தாளர்,இசை,இலக்கிய ஆர்வலர் 
என்று பலவும் சொல்லலாம்.

'லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் குரல்-பயிற்சியில் 
பட்டயம் படித்தவர். 

இந்திரா காந்தி,சஞ்சய் காந்தி, ஷேக்ஹசீனா,மொரார்ஜி தேசாய், 
காந்திபாய்தேசாய் முதல் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். எனத் 
தமிழக அரசியல்வாதிகள் வரை பலருடன் நெருங்கிப் பழகியவர்.

வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களை டில்லியில் 
கழித்தவர்.

திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமாவில் விருதுக்குரிய 
படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பணியாற்றியவர்.
எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சுப்ரமண்யத்தின் 
மாப்பிள்ளை.
இவருடைய 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற நூல் 
எழுத்தாளர்கள்,திரை, நாடக, இசைக் கலைஞர்கள் 
வட்டங்களில் பாராட்டுப் பெற்றது. அவரைச் சந்தித்து 
உரையாடியதில்.....

கே: பார்வதிபுரம் மணி பாரதி மணி ஆனது எப்படி?
ப: பார்வதிபுரம் என்னுடைய சொந்த ஊர். நாகர்கோவில் 
அருகே உள்ளது. செப்டம்பர் 24, 1937-ல் நான் பிறந்தேன். 
என் அப்பா, தாத்தா எல்லோரும் திருவிதாங்கூர் 
சமஸ்தானத்தில் பணியாற்றியவர்கள். திருவனந்தபுரத்தின் 
பள்ளியில் படித்தாலும் தமிழ்தான் பாட மொழி. ஐந்தாம் 
வகுப்பில் நீல. பத்மநாபன் என் வகுப்புத் தோழர். 
உயர்கல்வி நாகர்கோவிலில். 1955-ல் டெல்லிக்குச் 
சென்றேன். என் அக்கா, அத்தான் அங்கே வசித்தார்கள். 
எனக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸில் வேலை கிடைத்தது. 
வேலை பார்த்துக் கொண்டே டெல்லி யுனிவர்சிடியில் 
பி.காம்., எம்.காம்., எம்.பி.ஏ. எல்லாம் முடித்தேன். 
டெல்லியில் கச்சேரி, நாடகம், இலக்கியக் கருத்தரங்கு, 
சினிமா விழா எல்லாம் நடக்கும். இப்படித்தான் எனக்குப் 
பல்கலை ஆர்வம் வளர்ந்தது. நான் 'பாரதி மணி' ஆனேன்.

கே: நாடக ஆர்வம் முளைவிட்டது எப்படி?
ப: நான் திருவனந்தபுரத்தில் இருந்தபோது, நவாப் ராஜமாணிக்கம் 
பிள்ளை அவர்களின் 'Sri மதுரை தேவி பால வினோத சங்கீத 
சபா' நாடகக்கொட்டகை எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஃபர்லாங் 
தூரத்தில் இருந்தது. அவர் ஒரு காந்தி பக்தர். எங்கள் வீட்டுக்கு 
வருவார். ஒருமுறை பள்ளி விடுமுறையில் அவர் நாடகத்தில் 
சேர்ந்து நடிக்கும்படி என் தந்தை சொன்னார். அந்த இரண்டு 
மாதத்தில் கோயம்புத்தூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் என 
எல்லா இடங்களுக்கும் சென்று நாடகங்களில் நடித்தேன். 
அவர் சபாவில் நடித்ததில் நடிப்பு வந்ததோ இல்லையோ 
டிசிப்ளின் வந்தது. என்னுடைய வேலைகளை நானே பார்ப்பது, 
என்னுடைய துணிகளை நானே துவைத்துக் கொள்வது 
எனப் பல ஒழுங்குகளைக் கற்க முடிந்தது. 
வாஷிங் மெஷின் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் 
என் உள்ளாடைகளை நானேதான் துவைக்கிறேன். 
நாற்பது ஆசனங்கள் வரை அங்கு இருக்கும்போது 
கற்றுக் கொண்டேன். நான் திருவனந்தபுரத்தில் வசித்த 
காலத்தில் இளைஞர்கள் சிலர் நாடகம் போட்டனர். 
அதில் நடித்திருக்கிறேன். எனக்குப் பத்து வயதாக 
இருக்கும்போது சி.பி. ராமசாமி ஐயர் காலத்திலேயே நடத்தி 
வந்த (Trivandrum Broadcasting Corporation) திருவனந்தபுரம் 
ஒலிபரப்புக் கழகத்தில் ஞாயிறு காலை நடக்கும் 'வானவில்' 
சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்பேன்.

கே: டெல்லி நாடக வாழ்க்கை அனுபவங்கள் குறித்துச் 
சொல்லுங்கள்...
ப: நான் டெல்லி வருவதற்கு முன்னாலேயே 
ஒய்.ஜி. பார்த்தசாரதி, சுப்புடு, பூர்ணம் விஸ்வநாதன் எனப் 
பலர் டெல்லி தமிழ்ச் சங்கத்திலோ, சவுத் இந்தியா 
கிளப்பிலோ வருடத்துக்கு ஒருமுறை நாடகம் போடுவார்கள். 
ஆனால் தமிழுக்கு என்று ஓர் நாடக அமைப்பு இல்லை. 
அதனால் நான், ராமநாதன், ராமதாஸ், வைத்தி ஆகியோர் 
இணைந்து 1956-ல் தட்சிண பாரத நாடகசபாவை (DBNS) 
ஆரம்பித்தோம். எங்களுடைய முதல் நாடகம் பம்மல் 
சம்பந்த முதலியாரின் 'சபாபதி'. அதில் வேலைக்காரனாக - 
அதாவது படத்தில் காளி என். ரத்னம் செய்த வேடத்தில் - 
நடித்தேன். அதில் ஆரம்பித்து இன்றுவரை மும்பை, கல்கத்தா, 
சென்னை, லக்னோ, சண்டிகர் எனப் பல இடங்களிலும் சுமார் 
2000 நாடகங்களுக்கு மேல் போட்டிருக்கிறோம். நாடகத் 
துறையின் மிகப் பெரிய ஐந்து நபர்களில் ஒருவரான இப்ராகிம் 
அல்காசி அப்போது தேசிய நாடகப் பள்ளியின் 
(National School of Drama) பொறுப்பில் இருந்தார். 
1964-71 வரை அவர் இருந்த அக்காலம் நாடகத் துறையின் 
பொற்காலம். அவர் நாடக நடிகர்களுக்குப் பயிற்சி 
அளிப்பதற்காக ஒரு கோர்ஸ் ஆரம்பித்தார். நான் அதில் 
சேர்ந்தேன். அங்கேதான் எனக்கு நவீன நாடகங்களின் அறிமுகம் 
ஏற்பட்டது. லண்டனிலிருந்து ஓல்ட் விக் தியேட்டர்ஸ் 
(Old Vic Theatres, London) வந்து 'மேக்பெத்' 
போன்ற நாடகங்கள் போட்டனர். சம்பு மித்ரா, திருப்தி மித்ரா 
தம்பதி, விஜய் டெண்டுல்கர், சத்திய தேவ் தூபேராமானந்த 
ஜலான் போன்றோரது நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். 
நாங்கள் எங்கள் சபா மூலமாக சோவின் 'சம்பவாமி யுகே யுகே', 
பாலசந்தரின் 'விநோத ஒப்பந்தம்', 'நீர்க்குமிழி'
போன்றவற்றைப் போட்டிருக்கிறோம். 
வித்தியாசமான கதையம்சம் கொண்ட 'மழை'யும் அரங்கேறியது.
கே: அதைப் பற்றிச் சொல்லுங்கள்...
ப: கணையாழி ‘காவ்ய ராமாயணம்’ கே.எஸ். ஸ்ரீனிவாசன் 
எங்களுக்காக 'சந்தி' என்ற நாடகத்தை எழுதினார்.. ஒரு தமிழ் 
நாடகம், ஹிந்தி மொழியினரின் கவனத்தைப் பெற்று, ராஜேந்திர 
பால் போன்றவர்கள் நல்ல ரிவியூ செய்திருந்தார்கள் என்றால் 
அது அந்த நாடகம்தான். இந்திராபார்த்தசாரதி எங்களுக்காக 
எழுதிய நாடகம் 'மழை'. அதன் வசனங்கள் குறிப்பிடத்தக்கவை.
அதில் ஜமுனா என்பவர் நடித்தார். அவருடைய தந்தையார் பிரபல 
விமர்சகர் க.நா.சு. நாடகத்தில் துணையாக நடித்தவர் பின்னர் 
என் வாழ்க்கைத் துணையாகவும் ஆனார்.
தமிழின் முதல் நவீன நாடகம் என்று மழையைச் சொல்லலாம். 
நவீன நாடக இயக்கம் தமிழகத்தில் பின்னால்தான் வருகிறது. 
1980-களுக்குப் பிறகு யதார்த்தா பென்னேஸ்வரன் டெல்லிக்கு 
வந்தார். அவர் நாற்காலிக்காரர்கள், ந. முத்துசாமி நாடகங்கள் 
எல்லாம் போட்டார். நாங்கள் 1970-லேயே மழை நாடகத்தை 
அரங்கேற்றி விட்டோம். கிட்டத்தட்ட 40 தடவை அந்த நாடகத்தை 
அரங்கேற்றியிருக்கிறோம். 'மழை' அகில இந்திய அளவில் 
பிறமொழிப் பகுதியில் தேர்வு பெற்றது. ஒரு தமிழ் நாடகத்திற்கு 
முதன்முதலாகச் சிறந்த தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றுக்குப் 
பரிசு கிடைத்தது அதற்குத்தான்.தொடர்ந்து 'போர்வை போர்த்திய 
உடல்கள்', 'ஔரங்கசீப்', 'நந்தன்' என பல நாடகங்களை 
எங்களுக்காக எழுதினார் இந்திரா பார்த்தசாரதி. 

சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்', 'அடிமைகள்', 
'டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு' போன்ற 
நாடகங்களையும் போட்டிருக்கிறோம். சென்னை நாடகங்களைவிட 
டெல்லியில் நாங்கள் நடத்தியவை சிறப்பான தொழில்நுணுக்கம் 
கொண்டிருந்தன என சுஜாதா பலரிடம் கூறியதுண்டு. 
இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதற்குக் காரணம் 
NSD-யில் பயின்றதும், பல மொழி நவீன நாடகங்களைப் பார்த்த 
அனுபவமும் தான். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு 
விஷயம், நான் மைக் இல்லாமலும் நாடகம் நடத்த முடியும், 
அதற்கு வரவேற்பு இருக்கும் என்று சொல்லி உணர வைத்தேன்.
கே: மறக்க முடியாத நாடக அனுபவம்... 
ப: சி.சு.செல்லப்பா, 'முறைப்பெண்' என்று ஒரு நாடகம் 
எழுதியிருக்கிறேன், நீங்கள் போடுவீர்களா என்று கேட்டார். 
போடலாமே என்றேன். உடன் புறப்பட்டுச் சென்ற அவர், அந்த 
வேகாத வெயிலில், தள்ளாத வயதில் திரும்பவும் திருவல்லிக்கேணி 
போய் 20 புத்தகங்களையும் சைக்கிளில் வைத்துக் கட்டிக் கொண்டு
வந்து கொடுத்தார். நாங்கள் டெல்லிக்குச் சென்ற உடனேயே அந்த 
நாடகத்தைப் போட இயலவில்லை. பின்னால் போடலாம் என்று 
வைத்து விட்டோம். 

இருபதாண்டுகள் கழித்துயதார்த்தா’ பென்னேஸ்வரன் இயக்கத்தில், 
1992-ல் நிஜ நாடக இயக்கம் மு. ராமசாமி மூலம் மதுரையில் 
அரங்கேறியது.. அதில் நான், என் மனைவி, மூத்த மகள் 
மூவருமே நடித்தோம். எனக்கு அதில் வெள்ளையத் 
தேவன் என்று ஒரு பாத்திரம். அது மதுரையில் அரங்கேறியபோது 
சி.சு. செல்லப்பாவை நாடகம் பார்க்க அழைத்திருந்தோம். 
முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தார். நாடகம் முடிந்ததும் என் 
நடிப்பை மிகவும் ரசித்துப் பாராட்டினார். வெள்ளையத் தேவனின் 
வாரிசுகளும் என்னைச் சந்தித்துப் பாராட்டினர். அவர்கள் அப்படியே 
என்னைத் தூக்கி விட்டனர். “சார். உங்களுக்கு இது நடிப்பு. 
நாளைக்கே நீங்கள் இதை மறந்து போய் விடலாம். ஆனால் நாங்க 
எங்க தாத்தாவை இந்த நாடகத்தில் பார்த்தோம். இது எங்க 
வாழ்க்கை சார்" என்றனர். இந்த இரண்டு பாராட்டுகளையும் 
என்னால் மறக்க முடியாது.
கே: திரைப்பட நடிகர் ஆனது எப்படி? 
ப: தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலம் அது. அவர்கள் சீரியல்கள் 
சிலவற்றில் நான் நடித்தேன். என்னுடைய 'கடவுள் வந்திருந்தார்' 
நாடகத்தைப் பார்த்த ஒரு தயாரிப்பாளர் என்னைச் சந்தித்தார். 
அவர் பிற்காலத்தில் 'பேண்டிட் க்வீன்', 'மங்கள் பாண்டே' 
போன்ற படங்களைத் தயாரித்த பாபி பேதி. அவர் என்னிடம் 
பிபிசி சேனல் ஃபோருக்காக ஒரு ஆங்கிலப் படம் எடுக்கப் போகிறோம். 
அதில் நடிக்க வேண்டும் என்றார். அந்தப் படத்தில் கிளாப் பாயிலிருந்து 
சௌண்ட் என்ஜினியர் வரை எல்லோருமே பிரிட்டிஷார்கள். 
டைரக்டர் மட்டும் இந்தியரான பிரதீப் கிஷன். இவர் அருந்ததிராயின் 
கணவர். கதை எழுதியது அருந்ததி ராய். ஒரு தென்னிந்திய 
இயக்குநர் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். அதுதான் என் முதல் 
சினிமா. 1992ல் அது வெளியானது. படத்தின் பெயர் 
The Electric Moon. அதற்கு Best English Feature Film made 
in India என்ற பிரிவில் விருது கிடைத்தது.
கே: தமிழ் திரைப்படங்களில் நடித்த அனுபவங்கள் குறித்து... 
ப: எம்.ஜி.ஆர்., சிவாஜியில் ஆரம்பித்து திரைப்படத் துறையைச் 
சேர்ந்த பலர் என் நண்பர்கள். ஆனால் சினிமாவில் நடிக்க விருப்பம் 
இருந்ததில்லை. 

2000த்தில் ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா எனக்கு போன் செய்து, 
"நான் இப்போது மீடியா ட்ரீம்ஸில் இருக்கிறேன். 
'பாரதி' என்றொரு படம் தயாரிக்கிறோம். அதற்கு நீங்கள் கூட 
இருந்து உதவ வேண்டும்" என்று சொன்னார். அதன் இயக்குநர் 
ஞான ராஜசேகரனின் 'வயிறு' நாடகத்தை நாங்கள் 
அரங்கேற்றியிருக்கிறோம். பாரதியாரின் தந்தையாக நடிப்பதற்கு 
அதுவரை திரையில் அதிகம் பார்க்காத முகமாக இருந்தால் நல்லது; 
அந்த வேடத்தில் நான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனப் 
பலர் ஞான ராஜசேகரனிடம் கூறினர். படத்தில் சிறிது நேரமே 
வந்தாலும் நான் பாரதியின் தந்தையாக நடிப்பதை விரும்பி ஏற்றுக் 
கொண்டேன். அதில் நான் நடித்தேன் என்பதைவிட, சாயாஜி 
ஷிண்டேவை பாரதியாக நடிக்கத் தயார் செய்ததைப் பெருமையாகக் 
கருதுகிறேன். ஷிண்டே ஒரு நாடக நடிகர். வில்லன் 
பாத்திரத்திலெல்லாம் நடித்தவர். தமிழ் தெரியாது. அவருக்கு 
பாரதி பற்றிய ஹிந்தி நூல்களைப் படிக்கக் கொடுத்து, 
பாரதி வாழ்ந்த இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டி, 
பாரதி கவிதைகள் பற்றி விளக்கி விடிய விடியச் சொல்லிக் 
கொடுத்து தயார் செய்தேன். ஷிண்டேவும் மிகவும் ஈடுபாட்டோடு 
நடித்திருந்தார்.
கே: ரஜினியின் 'பாபா' படத்தில் நடித்தது பற்றிச் சொல்லுங்கள்... 
ப: பல படங்களில் நடித்திருந்தாலும் மக்களிடம் பரவலாக 
என்னைக் கொண்டு சேர்த்த படம் பாபாதான். 
ஊருக்கு நூறு பேரில் ஒரு அப்பா பாத்திரம். அதற்கான 
பிரிவியூவைப் பார்த்த எம்.ஈ. சொர்ணவேல் - இவர் புனேயில் 
டைரக்‌ஷன் கோர்ஸ் படித்தவர். குறும்படங்கள் நிறைய எடுத்தவர் 
-தான் 'கால் முளைத்த ஆசை' என்று ஒரு சீரியலை 
மின்பிம்பங்களுக்காக எடுத்தார். அதற்கு வசனம் எஸ்.ராமகிருஷ்ணன். 
2003ல் வந்தது. மொத்தமே அது 11 வாரம்தான். அதில் வைரவன் 
செட்டியார் என்ற கதாபாத்திரம் எனக்கு.இந்தச் சீரியலை ரஜினி 
விரும்பிப் பார்த்திருக்கிறார். ஒருநாள் அதைப் பார்க்கும்போது 
ரஜினியுடன் இருந்த ஓம் பூரி அவரிடம், “ஏ தோ மணீ சாப் ஹே" 
என்று சொல்லி என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 
பாபா படம் தயாரிப்பது என்று வந்தபோது 'கந்தன்' பாத்திரத்திற்கு 
நான்தான் பொருத்தம் என்று முடிவு செய்திருக்கிறார் ரஜினி. 
பலபேரிடம் விசாரித்து என்னைக் கண்டுபிடித்து அழைத்தார்.
கே: கக்கன் பாத்திரத்தில் நடித்த அனுபவம் குறித்து.. 
ப: கக்கன் நூற்றாண்டு விழா 2008-2009ல் நடந்தது. 
கக்கன் வாழ்ந்த இல்லம், அவர் மறைந்து தகனம் செய்யப்பட்ட 
கிருஷ்ணாம்பேட்டை இடுகாடு என எல்லாவற்றிலும் படம் 
பிடித்தார்கள். நடித்து மூன்று வருடம் ஆகி விட்டது. 
ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. காரணம் 
தெரியவில்லை. அதன் ப்ரிவியூ பார்த்தவர்கள் மிகவும் 
நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.
கே: இப்போது எந்தப் படத்தில் நடித்து வருகிறீர்கள்? 
ப: சமீபத்தில் இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' என்ற படத்தில் 
நடிக்கிறேன். ஜெயமோகன் வசனம். படத்தில் நாகர்கோவில்பாஷை 
பேசி நடிக்கும் ஒரே ஆள் நான்தான். தற்போது ஷங்கரின் '' 
படத்துக்காக எமி ஜாக்ஸனைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
அதில் நடிக்கவுமிருக்கிறேன்.
கே: பல அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் 
அல்லவா? 
ப: ஆமாம். என்னுடைய 'பல நேரங்களில் பல மனிதர்கள்' 
நூலில் அதுபற்றி எழுதியிருக்கிறேன். இலக்கியவாதிகள், நடிகர்கள், 
கலைஞர்கள் இவர்களோடு டில்லி அரசியல்வாதிகளோடும் எனக்கு 
நல்ல நட்பு இருந்தது. குறிப்பாக ஆர்.கே. தவன். அவர் இந்திரா 
அமைச்சரவையில் சேருவதற்கு முன்பும், பின்பும் கூட எனக்கு 
நல்ல நண்பர். இந்திரா காந்திக்கும் என்னை நன்கு தெரியும். 
தமிழகத்திலிருந்து முக்கியமானவர்கள் யார் வந்தாலும் என் 
மூலமாகவே இந்திராகாந்தி அவர்களைச் சந்திப்பார்கள். இதற்குக் 
காரணம் என்னவென்றால் என்.கே. சேஷன் அவர்கள். அவர் 
நேருவிடம் இருந்தவர். இந்திராவிடம் பி.ஏ.வாக இருந்தார். 
சஞ்சய் காந்தியும் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். அப்போது 
எமர்ஜென்சி உச்சத்தில் இருந்த நேரம்.
ஒருமுறை நேரு, இந்திரா, சஞ்சய் காந்தி மூவரின் படம் போட்ட 
காலண்டரைப் பார்த்த சஞ்சய் காந்தி, உடனடியாக அது நான்கு 
லட்சம் காப்பி வேண்டும் என்று சொல்லி என்னை விமானத்தில் 
சிவகாசிக்கு அனுப்பி வைத்தார். நானும் அலைந்து திரிந்து பார்த்தும் 
பலனில்லை. 5000 காபிகூடத் தேறவில்லை. அப்புறம் நான் ஒரு 
வாரம் அங்கேயே இருந்து லட்சக் கணக்கில் அச்சிட்டுஅனுப்பிய 
பின்னர் டெல்லிக்குப் புறப்பட்டேன். இது மாதிரிப் பல அனுபவங்கள்! 

கே: அறிஞர் அண்ணா உங்களுக்கு மிகவும் நெருக்கம் 
இல்லையா? 
ப: ஆம். அண்ணா என்னை 'மணித்தம்பி' என்று கூப்பிடுவார். 
அது அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு முந்தைய 
காலம். அவருடன் பல சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். 
அவருடைய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பலமுறை 
சண்டை போட்டிருக்கிறேன். சிரித்துக் கொண்டு மௌனமாக 
அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் அவருடைய உதவியாளரிடம், 
“சிங்காரம், தம்பி என்ன சொல்லுது பாரு!" என்பார். 
1969ல் காலமான அண்ணா இன்னும் ஒரு பத்தாண்டுகள் 
மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதியே 
மாறியிருக்கும். தமிழகம் எங்கேயோ போயிருக்கும். இப்போது 
இருப்பதைவிடப் பல மடங்கு மிக நன்றாக வந்திருக்கும். 
ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் புரிந்து வைத்திருந்தார். 
அவர் பேசினால்மிகவும் சீனியரான எச்.வி. காமத் எழுந்து வந்து 
கை கொடுப்பார். பாராட்டுவார். வடக்கு வாழ்கிறது; தெற்கு 
தேய்கிறது என்றெல்லாம் சொன்னவருக்கு, வடக்கில் நிகழ்ந்த 
அனுபவங்கள் வித்தியாசமானவை. பின்னால் அண்ணா 
முதலமைச்சர் ஆனார். ஆனால் அதன் பிறகு அவரை நான் 
சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை.
அதுபோல எம்ஜிஆருடனும் நெருங்கிப் பழகியிருக்கிறேன். 
அவர் மிகுந்த மனிதநேயம் கொண்டவர். எல்லோரிடமும் 
அன்பாக, மிக மரியாதையாக நடந்து கொள்வார். தனக்காகப் 
பிறர் செலவழிப்பதை விரும்ப மாட்டார். அவர்கூடவே நாயர் 
என்று ஒருவர் வருவார். நாம் ஏதாவது செலவழித்தால் 
எல்லாவற்றையும் குறித்துக் கொள்வார். எம்ஜிஆர் விடைபெற்று 
ஏர்போர்ட் செல்லக் காரில் காத்திருப்பார். நாயர் வந்து, நாம் 
வேண்டாம் என்று சொன்னாலும், “அவர் கோபித்துக் கொள்வார்" 
என்று சொல்லிப் பணத்தை நம் பாக்கெட்டில் திணித்து விடுவார். 
திணித்த பணம், நாம் செலவழித்ததைவிட இரண்டு மடங்கு 
அதிகம் இருக்கும். அதுதான் எம்ஜிஆர். இதற்கு நேர்மாறான 
குணங்கள் கொண்ட மனிதர்களோடும், நடிகர்களோடும் நெருங்கிப் 
பழகியிருக்கிறேன். 

கே: இப்போதைய நாடகங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? 

ப: நல்ல முயற்சிகள் செய்யப்பட்டுதான் வருகின்றன. 
நாடகங்களில் நேரம் தவறாமை மிக முக்கியம். அது 
கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
கே: பல இலக்கியவாதிகளோடு நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். 
உங்களுக்குப் பிடித்தவர் யார்? 
ப: ஜானகிராமன், மௌனி, சி.சு. செல்லப்பா, இந்திரா பார்த்தசாரதி, 
சுஜாதா தொடங்கி பலரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். பலரும் 
எனக்குப் பிடித்தமானவர்கள்தான். இதில் மிகவும் 
ஆத்மார்த்தமானவர் என்று சொன்னால் அது 
நாஞ்சில்நாடன் தான். அவர் எனக்குத் தம்பியைப் போன்றவர்.
கே: பல இசைக் கலைஞர்களின் நட்பும் உங்களுக்கு உண்டல்லவா? 
ப: லால்குடி ஜெயராமன், மகராஜபுரம் சந்தானம் என்று 
பலரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். பலரை என் ஸ்கூட்டரில் 
பின்னால் வைத்துச் சுற்றியிருக்கிறேன். கீரன், அண்ணாதுரை, 
லால்குடி ஜெயராமன் என என் ஸ்கூட்டரில் ஏறாதவர்களே 
கிடையாது.
கச்சேரி ஏதும் இல்லை என்றால் பலரும் என் 
வீட்டுக்குக் “கச்சேரிக்கு" வந்து விடுவார்கள். ஒருமுறை 
டெல்லியில் சந்தானம் கச்சேரி. பக்கவாத்தியம் வேலூர் 
ராமபத்ரனும், லால்குடி ஜெயராமனும். தொண்டை 
சரியில்லையோ என்னவோஅன்று சந்தானம் அவ்வளவாக 
சோபிக்கவில்லை. கச்சேரி முடிந்து இரவு சாப்பிடும்போது, 
"ரெண்டு பேரும் சேர்ந்து இன்னிக்குக் காவு வச்சுட்டேள்" 
என்றார் சந்தானம். “என்ன சொல்றேள்?" என்று கேட்டார் 
ராமபத்ரன். “ரெண்டு பக்கமும் சப்போர்ட்டே இல்லையே, 
பின்ன நான் எங்கே...?" என்றார் சந்தானம். “இன்னிக்கு 
என்னவோ உங்களுக்கு அமையலை" என்றார் அவர். 
“இல்லை.. இல்லை.. நீங்க ரெண்டு பேரும் வேணும்னே 
செய்திருக்கேள்" என்றார் அவர் குரலை உயர்த்தி. பின்னர் 
அது பெரிய வாக்குவாதமாகி விட்டது. சந்தானம் “எனக்கு 
ஒரு ரெண்டரை அணா ஃபிடிலும், ரெண்டரை அணா 
மிருதங்கமும் போதும். இது மாதிரி பெரிய இதெல்லாம் 
இனிமே கூட்டிண்டு வரமாட்டேன் டெல்லிக்கு" என்றார். 
“ஆகா... அப்படியே ஆகட்டும். இனிமே கச்சேரிக்கு என்னைச் 
சொல்லாதீங்கோ. நான் வர மாட்டேன்" என்றார் லால்குடி. 
பின்னர் அவரை சமாதானப்படுத்தி என் வீட்டுக்குக் கூட்டிப் போனேன். 
இது நடந்து சில வாரங்கள் போயிருக்கும். நான் ஆஃபீஸ் 
வேலையாகச் சென்னை வந்தேன். பேப்பரில் ஒரு கச்சேரி 
விளம்பரம் வந்திருந்தது. மஹாராஜபுரம் சந்தானம் கச்சேரி. 
பக்கவாத்தியம் லால்குடி ஜெயராமன், வேலூர் ராமபத்ரன்! 
என்னடா இது அன்றைக்கு அப்படி சண்டை போட்டுக் 
கொண்டவர்கள், எப்படி இங்கு ஒன்றாகக் கச்சேரி 
செய்கிறார்கள் என்று வியப்பு. வேலையை முடித்து விட்டு 
கிருஷ்ணகான சபாவுக்குப் போனேன். பிரமாதமான 
கச்சேரி. முடிந்தவுடன் நேரில் அவர்களைச் சென்று 
பார்த்தேன். யாரிடமுமே அன்று அப்படி சண்டைபோட்டுக் 
கொண்டதற்கான சுவடே தெரியவில்லை. அவ்வளவு 
அன்யோன்யமாக, நட்பாக, அன்பாக இருந்தனர். இதுதான் 
இசைக்கலைஞர்களின் குணம் போலும் என்று அன்று தெரிந்து 
கொண்டேன்.வயதின் தளர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் 
கம்பீரமான குரலில் சரளமாகப் பேசுகிறார் பாரதி மணி.
அவ்வப்போது பைப்பைப் பற்றவைத்துப் புகை பிடிக்கிறார். 
"இது நான் ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருக்கும்போது ஒரு நண்பர் எனக்குப் 
பரிசாகக் கொடுத்தது. அதற்கான தகுதி வரவில்லை என்று 
வெகுகாலம் இதை உபயோகிக்காமலே இருந்தேன். 
இப்போது அது இல்லாமல் நானில்லை என்ற அளவுக்கு 
30 ஆண்டுகளுக்கு மேலாக நெருக்கமாக இருக்கிறோம்" 
என்று சொல்லிச் சிரிக்கிறார். உங்கள் அனுபவங்களை மீண்டும் 
ஒரு நூலாக எழுத வேண்டும் என்ற அன்புக் கோரிக்கையை 
வைத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றோம். 

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன் 
சுஜாதா 
சுஜாதாவை மறக்கவே முடியாது. டெல்லியில் அவர் என் 
ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்துகொண்டு NSD நாடங்களுக்கும் 
பிரேம் சந்தின் நாடகங்களுக்கும் வருவார். அவரது நகைச்சுவையை 
ரசித்தது, தொடையில் தட்டி நான் சிரித்தது என்று அந்த இனிய 
நாட்கள் மறக்க இயலாதவை. டெல்லியில், பெங்களூரில் வாழ்ந்த 
சுஜாதாவை, அவர் சென்னை வாசியானதும் எங்கேயோஎப்போதோ, 
எப்படியோ நான் இழந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். 
I completely lost him. இதுபற்றி நான் என் நூலில் எழுதியிருக்கிறேன். 
அவர் மறைவு என் மனதுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. 

--பாரதி மணி
Click Here Enlarge
க.நா.சு.
க.நா.சு.வைப் போல் ஓர் எளிமையான மனிதரைப் பார்க்க முடியாது. அவரைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள். அவருக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அவர் இறந்த பிறகுகூட அவருக்கு மதரீதியான சடங்கு எதுவும் செய்யவில்லை. அவர் எழுதிய புத்தகங்களின் பிரதி ஒவ்வொன்றை அவர் தலையணைக்குக் கீழே வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, தகனம் செய்தோம். இரண்டு பேர் அவரைப் பற்றிப் பேசினார்கள். அவ்வளவுதான். க.நா.சு.வுக்கோ, எனக்கோ மதரீதியான சடங்குகளில் நம்பிக்கை கிடையாது. அது மட்டுமல்ல, அவர் எம்.பி. ஸ்ரீகாந்த் வர்மா மூலம் தனக்கு வர இருந்த இலக்கிய ரீதியான நிதி உதவிகளைக்கூட வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்தவர். பழைய பேப்பரைக் கடையில் போட்டு, வரும் பணத்தை வைத்துக் கொண்டு வெளியே செல்வார். அதுவும் இல்லாவிட்டால் வீட்டிலேயே அமர்ந்திருப்பார்.
அமெரிக்காவிலிருந்து பணம் வந்தால் அவர் ஏன் கஷ்டப்பட வேண்டும்? இவை அபத்தமான குற்றச்சாட்டுக்கள். ரொம்பக் கொடுமை.
ரஜினி
ரஜினி உண்மையில் மிக அற்புதமான மனிதர். நான் முதல் நாள் 
ஷூட்டிங் போனது முதல் என்னிடம் கையைக் கட்டிக் கொண்டு, 
ஐயா, ஐயா என்று மரியாதையாக இருப்பார். அவர் ஐயா என்று 
கூப்பிட்டதால் நான் எல்லோருக்கும் ஐயா ஆனேன். நான் 
சாதாரணமான ஆள் சார். என்னிடம் இந்தப் பணிவு எல்லாம் 
வேண்டாம் என்றால் கேட்கவே மாட்டார். சுற்றிலும் 
ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் அவருடன் கைகுலுக்க, 
பேசக் காத்துக் கொண்டிருக்கும் போதும் அப்படித்தான் பணிவாக 
நடந்து கொள்வார். மைசூரில், முதல் இரண்டு நாள் ஷூட்டிங். 
பின் மூன்று நாள் கழித்துதான் ஷூட்டிங். நான் நிறையப் 
புத்தகங்களைக் கொண்டு போய்ப் படித்துக் கொண்டிருந்தேன். 
இரவு 11.00 மணி இருக்கும். அறை மணி அடித்தது. 
யார் என்று திறந்து பார்த்தால் ரஜினி! பின்னால் அவரது 
புரொடக்‌ஷன் உதவியாளர்கள். "ஐயா.. எல்லாம் 
வசதியாக இருக்கிறதா?" என்கிறார் தனக்கே உரிய 
புன்சிரிப்புடன். 
“இதைக் கேட்க நீங்களே வரவேண்டுமா? அதான் ஆட்கள் 
இருக்கிறார்களே!" என்றேன்.
“அதில்லைங்க ஐயா. உங்களுக்கு மூணு நாள் ஷூட்டிங் 
இல்லை. வெள்ளிக்கிழமைதான் ஷூட்டிங். க்ளைமாக்ஸ் 
எடுக்கிறோம். 5000 ஜூனியர் ஆர்டிஸ்டும் நடிக்கிறாங்க. 
அதான் அதை நேர்ல உங்களுக்குச் சொல்லிட்டுப் 
போகலாம்னு வந்தேன். ஒண்ணும் வசதிக் குறைச்சல் 
இல்லையே!" என்றார். “ஐயோ. ஒண்ணும் இல்லை. எல்லாம் 
நல்லா கவனிச்சிக்கிறாங்க. ஒரு பிரச்சனையும் இல்லை" 
என்றேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், ரஜினி, 
அப்படி அந்த நேரத்தில் வந்து என்னிடம் கேட்க வேண்டிய 
தேவையே இல்லை. ஆனால் கேட்கிறார். இதை என்னவென்று 
சொல்வது? அவருடைய பெருந்தன்மையா, பணிவா, அக்கறையா? 
என் மீதான மதிப்பா?  
இந்தியன் பனோரமா 
'செம்மீன்' காலத்திலிருந்து எல்லா அவார்டுக்கு வந்த படங்களையும் 
டெல்லியில் இருந்தபோது பார்த்திருக்கிறேன். சமீபத்தில் 2010ல் 
திரைப்பட விழா இயக்ககத்தில் இருந்து என்னை ஒரு ஜூரியாக 
இந்தியாவின் 216 படங்கள் பார்த்துத் தேர்ந்தெடுக்க 
நியமித்திருந்தார்கள். அதில் சிங்கம்,யோகி போன்ற “நல்ல" 
படங்கள் எல்லாம் வந்திருந்தன. இறுதியில் 'அங்காடித் தெரு' 
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றொரு முக்கியப் படம் 
'ராவணன்.' அது ஹிந்தியிலும் வந்திருந்தது. ஆனால் அது 
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஜூரி என்ற முறையில் 
நான் கேட்டுக் கொண்டதால் ஹிந்தியில் வந்திருந்த 'ராவண்' 
படத்தைப் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் எல்லோரும் தமிழிலும் 
பார்த்தார்கள். அதில் நான் ஒருவன்தான் தமிழன். மற்றொருவர் 
சந்தோஷ் சிவனின் அப்பா. மற்றபடி எல்லோரும் பிற 
மொழிக்காரர்கள்தான். அப்படிப் பார்த்தவர்கள் பிரமித்துப் போய் 
வியந்து பாராட்டினார்கள். “யார் இவர், இவ்வளவு சிறப்பாக 
நடித்திருக்கிறாரே, மணி சாப், நீங்கள் ரெகமண்ட் 
செய்யாவிட்டால் ஒரு நல்ல நடிப்பை மிஸ் செய்திருப்போம்" 
என்றார்கள். அந்த அளவுக்கு அதில் மிகச் சிறப்பாக 
நடித்திருந்தவர் - விக்ரம்.

--நன்றி தென்றல் மாத இதழ்  

0 comments:

Post a Comment